Wednesday, 10 March 2021

QATAR - GULF OF PERSIAN

 



QATAR - GULF OF PERSIAN



*கத்தார்: பாரசீக வளைகுடாவில் ஒரு இந்திய மாநிலம். நாடுகளின் கதை!*

ஆச்சர்யமாக இருக்கே!

ஆமாம்! ஒரு நாடு; அந்த நாட்டின் மக்களில் நால்வரில் ஒருவர் இந்தியர்.

அந்த நாடுதான் உலகின் முதலிடம் வகிக்கும் பணக்கார நாடு. கடந்த 20 ஆண்டுகளாக இந்த முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் நாடும் இதுதான்.

அப்படியானால் அங்குள்ள இந்தியர்கள் கொடுத்து வைத்தவர்கள் எனச்சொல்லலாமா?!

அங்குள்ள இந்தியர்கள் மட்டுமா? அந்த நாட்டில் வாழும் மக்களில் 90 சதவீதம் வெளிநாட்டவர்கள் தான்...



அப்படியானால் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள்தானே இல்லையா?

ஆமாம்! அந்த நாடு... அதுதான் '#கத்தார்' (#Qatar)

 Qatar இந்தியாவின் 28 மாநிலங்களில் 27வது இடத்தில் இருக்கும் திரிபுராவை விட கொஞ்சம் பெரியது.

11 ஆயிரத்து 586 சதுர கிலோமீட்டர் பரப்புதான்.திரிபுரா அளவே!

மக்கள் தொகை நம்ம இந்தியாவின் மணிப்பூர் மாநில மக்கள் தொகைதான். 27 லட்சம். அதில் 7 லட்சம் இந்தியர்கள். 27 லட்சத்தில் 3 லட்சத்து 13 ஆயிரம் பேர் மட்டுமே கத்தார் பிரஜைகள். மற்ற அனைவருமே வெளிநாட்டவர்கள்.

அது மட்டும் ஜனநாயக நாடாக இருந்திருந்தால், அமெரிக்கக் கட்சி, பிரிட்டன் கட்சி, பிரான்ஸ் கட்சி என ஒவ்வொரு நாட்டவர்களும் ஒரு கட்சியைத் தொடங்க, 7 லட்சம் இந்தியர்களும் நம்மூர் வழக்கப்படி 70 கட்சிகளை ஆரம்பிக்கத் தேர்தலில் அந்த நாடே அல்லோல கல்லோலப்பட்டிருக்கும்.



மன்னராட்சி என்பதால் 'அன்பார்ந்த வாக்காளப் பெருங்குடி மக்களே' என்ற பரப்புரைக்கெல்லாம் அங்கு வேலை இல்லை. பாகிஸ்தான் கட்சி, இந்தியக் கட்சி என மோதலுக்கும் வழி இல்லை.

உலகின் எந்தப் பகுதியையும் விட்டு வைக்காத பிரிட்டன் கத்தாரையும் விட்டுவைக்கவில்லை. 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் கத்தாரின் பெரும்பகுதி பிரிட்டன் வசமே இருந்தது. அதனை ஆட்சி செய்ய 1868ல் முகம்மது அல்தானி என்பவரைத் தேர்வு செய்தது.பிரிட்டன் ஆளுகையின் கீழ்!

கத்தார் அரசின் நிறுவனராகப் போற்றப்படுபவர் ஷேக் ஜஸீம் முகம்மது அல்தானி. இப்போதைய மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானி. ஆக, கத்தாரை ஆளுவது அல்தானி குடும்பமே! அந்த நாட்டிற்குப் பிரிட்டன் 1971ல் சுதந்திரம் வழங்கியது.

இன்று வளம் கொழிக்கும் வளைகுடா நாடுகள் 60, 70 ஆண்டுகளுக்கு முன் ஏழ்மையின் பிடியில் சிக்கித் தவித்தது. 1950-களில் கத்தாரும் பசியால் வாடிய நாடுதான்.

 #Qatar

கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் கத்தாரில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டதும் அந்த நாடு எங்கேயோ போய்விட்டது. உலகின் மூன்றாவது இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளமிக்க நாடான கத்தார் உலகில் எண்ணெய் உற்பத்தியில் 14வது இடத்தில் உள்ளது. ஒரு நாளைக்கு 15 லட்சத்து 20 ஆயிரம் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு லாபம் மட்டுமே 30 பில்லியன் டாலர். அப்படியானால் எவ்வளவு எனக் கேட்கிறீர்களா? 1 பில்லியன் என்பது 100 கோடி 1 டாலரின் மதிப்பு 73 ரூபாய். இப்போது பெருக்கிப் பார்த்துக் கொள்ளுங்கள். 'அடேயப்பா...' என மூர்ச்சையாகி விடாதீர்கள்.

சின்னஞ்சிறிய நாடான கத்தார் உலகின் முதல் பத்து பணக்கார நாடுகளில் முதலிடம் வகிக்கிறது. ஒரு நாட்டின் பொருளாதார நிலை மொத்த உற்பத்தி தனிநபர் பொருள் வாங்கும் திறன் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டே பணக்கார நாடுகள் பட்டியலிடப்படுகின்றன.செளதி அரேபியா Vs கத்தார்

இந்த வரிசையில் 10வது இடத்தில் உள்ள சவூதி அரேபியாவின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனிநபர் பொருள் வாங்கும் திறன் 51924 டாலர் என்றால் கத்தாரின் திறன் 140649 டாலர் அதாவது மூன்று மடங்கு அதிகம்.

இந்த நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பு எவ்வளவு தெரியுமா? 17 பில்லியன் டாலர்! செளதி அரேபியா Vs கத்தார்செல்வவளம் கொழிக்கும் கத்தார் உலகின் மிக மிகப் பெரிய நிறுவனங்களில் பங்குதாரராக உள்ளது. பல நாடுகளில் குறிப்பாகப் பிரிட்டனில் எண்ணற்ற முதலீடுகளைச் செய்துள்ளது. உலகின் முக்கிய விமான நிறுவனமாக

 #கத்தார் #ஏர்வேஸை

 உருவாக்கியிருக்கிறது.'அடேயப்பா' எனச் சொல்ல வைக்கிறதா?உலகிலேயே மிக அதிக தனிநபர் வருமானம் கொண்ட நாடு கத்தார். அதனால்தான் அத்தனை வெளிநாட்டவர்களும் அங்குக் குவிகிறார்களோ?! Qatar Football Stadium

உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்து முதலாவது அரபு நாடு கத்தார்தான்! அடுத்த ஆண்டு நடைபெறும் இப்போட்டிக்கான முன்னேற்பாடுகள், கட்டுமானப் பணிகள் இங்கு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டி சர்வதேச கவனத்தை ஈர்க்கும் என அந்நாடு எதிர்பார்த்துக் காத்துள்ளது.

 #அல்ஜஸீரா

அரபுலகில் மட்டுமின்றி அனைத்துலகிலும் கத்தாரின் அல்ஜஸீரா தொலைக்காட்சி ஒரு மகத்தான சக்தியாகக் கருதப்படுகிறது. இதனைப் பார்ப்பவர்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளனர். இந்தத் தொலைக்காட்சி அரபுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதத்தை வளர்ப்பதாக அதற்கு எதிராக எழுந்தஎதிர்ப்புக்களை முனை மழுங்கச் செய்தது கத்தார்.

பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் கொண்ட ஒரு சுண்டைக்காய் நாடு இவ்வளவு பெரிய வளர்ச்சியை அடைவதா? அரசியல் ரீதியான ஆளுமை மிக்க சக்தியாகத் திகழ்வதா? கண்ணை உறுத்தியது சவூதி அரேபியாவுக்கு... கத்தாருடனான உறவைத் துண்டித்துக் கொள்வதாக அறிவித்தது.

அவ்வளவுதான்! அரேபியத் தீபகற்பத்தின் நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் எனப் பல நாடுகளும் சவூதியை வழி மொழிந்தன. உறவு துண்டிப்பு என்பதோடு மட்டும் நிற்கவில்லை சவூதி அறிவிப்பு! தரை, கடல், வான் எல்லைகளையும், பாதைகளையும் கத்தார் பயன்படுத்தத் தடை செய்தன. தங்கள் நாடுகளில் உள்ள கத்தார் குடிமக்கள் இரண்டு வாரங்களில் வெளியேறிவிட வேண்டும் என உத்தரவிட்டன.

வீழ்வேன் என்று நினைத்தாயோ?

தனிமைப்படுத்தப்பட்ட கத்தார் நிலைகுலைந்து போகும்; உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்றுதான் எதிர்பார்த்தனர். ஆனால், அப்படி எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

சின்னஞ்சிறிய கத்தார், தனது ஆளுமையைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தது. பெரிய நாடுகள் செய்யத்தயங்கிய காரியங்களைச் செய்தது. பாலஸ்தீனுக்கு ஆதரவு, இஸ்ரேலுக்கு எதிர்ப்பு என்ற தனது நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்தது.

 Qatar

எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் (OPEC)-ல் 1961-ம் ஆண்டிலிருந்து அங்கம் வகித்து வரும் கத்தார், தனது நாட்டின் நலன்களுக்கு எதிராக இந்த அமைப்பு பயன்படுத்தப்படுவதாகக் கூறி அதிலிருந்து வெளியேறப்போவதாக அறிவித்தது.

வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பான ஜி.சி.சி-ல் (GCC) இருந்தும் வெளியேற முடிவு செய்தது. துணிச்சலான கத்தாரின் இந்த முடிவால், சவூதி அரேபியாவும் அமீரகமும் ஆடிப்போயின.

அமெரிக்க ஆயுதங்களை மிகப்பெரிய அளவில் வாங்கும் நாடு சவூதி என்ற அடிப்படையில், கத்தார் மீதான தங்கள் நடவடிக்கைகளுக்கு மிக நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்றே நம்பின! ஆனால், சவூதியின் அந்த எண்ணம் நிறைவேறவில்லை. கத்தாரில் பிரமாண்டமான ராணுவ தளத்தை அமெரிக்கா அமைத்தது. அத்துடன் சவூதி அரேபியாவில் இருந்த தனது ராணுவ தளத்தை கத்தாருக்கு மாற்றியது. இந்த ராணுவ தளம்தான் மற்ற நாடுகளில் அமெரிக்கா அமைத்திருக்கும் ராணுவ தளங்களில் மிகமிகப் பெரியது.

 கத்தார் ராணுவ தளம்

வியப்பாக இருக்கிறதல்லவா?

ஆக, கத்தார் என்ற ஒரு சின்னஞ்சிறிய நாடு அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகளின் மிகுந்த முக்கியத்துவத்திற்குரிய தவிர்க்க இயலா நாடாகிவிட்டது ஒருபுறமென்றால்... சவூதி, அமீரகம் போன்ற நாடுகள் ஆச்சர்யப்படும் நாடாகியும் விட்டது.

எவ்வளவு சிறிய நாடாக இருந்தாலும் இயற்கை வளமும், ஆளுமைத் திறனும் இருந்தால் உச்சத்திற்குச் செல்லலாம் என்பதற்கு கத்தார் நம் கண்முன் உள்ள உதாரணம்.

ஏழு லட்சம் இந்தியர்கள் எந்தப் பிரச்னையுமின்றி கை நிறைய சம்பாதித்து மனநிறைவோடு வாழும் ஒரு சிறிய நாடு உலக வரைபடத்தில் உள்ளது என்றால் அதைத் தேடிப்பார்த்து ஆனந்தமடையலாமே!

அப்படியே அல்தானி ஷேக்குக்கு ஒரு சலாம் சொல்லலாமே?!

No comments:

Post a Comment