Monday, 11 April 2022

WOODS -SEMMARAM

 


 WOODS -SEMMARAM


அப்படியென்ன இருக்கிறது செம்மரத்தில்?
ஆந்திர மாநிலத்திலிருந்து செம்மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. ஆந்திராவைச் சேர்ந்த மர மாஃபியாக்கள் நடத்தும் இந்தக் கடத்தலுக்கு, கூலியாட்களாக செல்லும் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதும் தொடர்கிறது.
சரி, ஏன் இந்த மரத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
"சந்தன மரங்கள் மதிப்பு மிக்கவை. இதற்கு அடுத்த இடத்தில் இருப்பவை செஞ்சந்தனம் என்று அழைக்கப்படும் செம்மரங்களே. இவை, 7லிருந்து 8 மீட்டர் உயரம் வளரக்கூடியது. இது வளர்வதற்கு 30லிருந்து 40 ஆண்டுகள் ஆகும். தமிழ்நாட்டில் ஜவ்வாது மலை உள்ளிட்ட பகுதியிலும், கர்நாடகாவில் மைசூர் பகுதியிலும் சந்தன மரங்கள் நிறைய இருந்தன. ஆனால், அவையெல்லாம் வெட்டி கடத்தப்பட்டு விட்டன. வெட்டிய மரங்கள் தற்போது வளர்ந்து வருகின்றன. அவை முழுமை பெற இன்னும் 10, 20 ஆண்டுகள் ஆகும். அதனால்தான் செம்மரங்களுக்கு கிராக்கி அதிகமாகி விட்டது.
ஆந்திராவில் உள்ள சித்தூர், கர்னூல், கடப்பா மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் தரமான வைரம் பாய்ந்த செம்மரங்கள் இருக்கின்றன. செம்மரம் வளர்வதற்கு மண்ணும், அதற்கான வறட்சி சார்ந்த சூழலும் அவசியம். இவையெல்லாம் ஆந்திர மலைப்பகுதிகளில் இருக்கின்றன. இந்த மலைகளில் கிடைக்கும் மரங்கள் 90-95% தரமான சேகு உள்ள மரங்களாக இருக்கின்றன. மரத்தின் பட்டையை நீக்கினாலே வைரம் பாய்ந்த தரமான மரம் கிடைத்துவிடும். மரத்தை வெட்டி பார்த்தால் லேசான சிவப்பு நிறத்தில் திட்டுகளாக மரத்தின் அடிப்பகுதி இருக்கும். நாம் தண்ணீர் ஊற்றி வளர்க்கும் மரங்களில் இந்த தரம் கிடைக்காது. மரத்தின் மேற்பகுதிகளிலே கோடு போட்டது போன்று வரிவரியாக இருக்கும். இதெல்லாம் மரத்தின் முதிர்ச்சியையும், தரத்தையும் காட்டுபவை. ஆந்திர மலைப்பகுதிகளில் தரமான செம்மரங்களை தேடி அலைய வேண்டியதில்லை. கண்ணில் படும் எல்லா மரங்களும் தரமானவைதான். அதனால்தான் கடத்தலுக்கு ஆந்திர மலைப்பகுதிகளை தேர்ந்தெடுக்கிறார்கள்.
பொதுவாக செம்மரங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி உண்டு. ஜப்பான் நாட்டில் திருமணமான பெண் புகுந்த வீட்டுக்கு போகும்போது, ஒருவித இசைக்கருவியை எடுத்துச் செல்வது வழக்கம். இந்த இசைக்கருவியை தயார் செய்ய செம்மரம் பயன்படுத்தப்படுகிறது. இதேமாதிரி ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்படும் ஒயின்களில் செம்மரத் தூள் பயன்படுத்தப்படுகிறது. இது ஒயின்களில் நிறத்தைக் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. ஜப்பானில் இந்த மரத்தால் உருவாக்கப்படும் வீடுகள் யுரேனியம் கதிர்வீச்சை தடுப்பதாக பயன்படுத்தப்படுகிறது என்று சொல்கிறார்கள். ஆனால், அறிவியல் ரீதியாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
பொதுவாக செம்மரம் மருத்துவ குணங்கள் கொண்டது. தமிழகத்தில் 40 வருடங்களுக்கு முன்பு மரப்பாச்சி பொம்மைகள் செம்மரங்களில் செய்து விற்கப்பட்டன. குழந்தைகள் இதை தொட்டு, நுகர்ந்து விளையாடும்போது அதன் மருத்துவ பலன்கள் கிடைக்கும்.
இந்தியாவுக்குள் இந்த மரங்களை கொண்டு செல்வதில் எந்த தடையும் இல்லை. ஆனால் வெளிநாடுகளுக்கு அரசின் அனுமதி இல்லாமல் அனுப்ப முடியாது. அரசாங்கமே ஆண்டுக்கு இவ்வளவுதான் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற அளவை நிர்ணயித்துள்ளது. அப்படியில்லாமல் சட்டத்திற்கு புறம்பாக இந்தியாவிலிருந்து செம்மரங்கள் கடத்தப்படுகின்றன.
அதேபோன்று தனியார் நிலங்களிலும் இந்த மரங்களை வளர்க்க தடை இல்லை. 1956-ம் ஆண்டிலிருந்து தனியார் நிலங்களில் செம்மரங்களை வளர்க்க அரசு கன்றுகளை கொடுத்து ஊக்குவித்து வருகிறது. திருவள்ளூர், வேலூர், தர்மபுரி மாவட்டங்களில் இந்த மரங்கள் நன்றாக வளர்கின்றன. இது ஏ, பி, சி என்று மூன்று வகையாக தரம் பிரிக்கப்படுகிறது. ஏ, பி என்ற முதல் தரமான மரங்கள் ஆந்திர மலைப்பகுதிகளில் தான் கிடைக்கிறது. இதன் விலை 1 கிலோ ஆயிரம் ரூபாய். 1 டன் 10 லட்சம் ரூபாய் (அரசு விலை). மிக மோசமான மரம் கூட 1 டன் 6 லட்சத்துக்கு கீழ் குறையாது. இன்று இருக்கும் மரங்களிலேயே செம்மரம் அதிக விலையுடையதாகவும் மதிப்புடையதாகவும் இருக்கிறது
See Translation
No photo description available.
1

No comments:

Post a Comment