Wednesday, 5 December 2018

NELSON MANDELA ,FREEDOM FIGHTER 1918 JULY 18-DECEMBER 5,2013



NELSON MANDELA ,FREEDOM FIGHTER 
1918 JULY 18-DECEMBER 5,2013



நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 சூலை 1918 – 5 திசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.

மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது. சூன் 2008ல் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இளமை

நெல்சன் மண்டேலா 1918 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தியதி தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி இன மக்கள் தலைவர் ஆவார்[1]. இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவர் தான் மண்டேலா. இவரின் முழுப்பெயர் 'நெல்சன் ரோபிசலா மண்டேலா'. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். இவரின் சிறுவயதில் குத்துச் சண்டை வீரராகவே அறியப் பெற்றார்.


1937ஆம் ஆண்டளவில் மண்டேலா[2]

அந்தக் குடும்பத்திலிருந்து முதன் முதலில் பள்ளி சென்ற மண்டேலா, இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். போர் புரியும் கலைகளையும் பயின்றார். இவரின் பெயரின் முன்னால் உள்ள "நெல்சன்" இவர் கல்வி கற்ற முதல் பள்ளியின் ஆசிரியரினால் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட மண்டேலா, லண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார். 1941 ஆம் ஆண்டு ஜோகானஸ்பேர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றி வந்தார்.

அப்போது 'நோமதாம் சங்கர்' என்ற செவிலியரைத் திருமணம் செய்து கொண்டார். மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் தென்னாப்பிரிக்க அரசு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியைத் தடை செய்தது. மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது. ஐந்தாண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது 1958 ஆம் ஆண்டு வின்னி மடிகி லேனா என்பவரை மணந்தார். வின்னி தனது கணவரின் கொள்கைகளுக்காகப் போராடி வந்தார். மண்டேலாவுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகளும் 2 வது மனைவி மூலம் 2 குழந்தைகளும் உள்ளனர்.

அரசியல்
அறப் போராட்டங்கள்

தென்னாப்பிரிக்க நாட்டில் கறுப்பர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அங்கு வெள்ளையர்கள் சிறுபான்மையினர். ஆனாலும் ஆட்சி அதிகாரம் வெள்ளையர்களிடமே இருந்தது. 1939 ஆம் ஆண்டில் தனது 21 ஆவது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்து, ‘கறுப்பின மக்கள் அடக்கப்படுகின்றனர். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகின்றது. அவர்கள் பிரயாணம் செய்வதற்கு அவர்களுடைய நாட்டினுள்ளேயே அனுமதி பெற வேண்டியுள்ளது. நிலவுடமையாளர்களாக கறுப்பின மக்கள் இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இவை சுதேச மக்களுக்கு எதிரானவை. நீதியற்றவை. இவற்றிற்கு எதிராக நாம் போராட வேண்டும்” என அறை கூவி கறுப்பின மக்களை விழிப்படையச் செய்வதில் வெற்றிக் கண்டார்.[3] 1943 ஆம் ஆண்டு ஆப்ரிக்க தேசிய காங்கிரஸில் சேர்ந்தார்.[4] 1948 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஆட்சிப் பொறுப்பேற்ற அரசு, கறுப்பின மக்களுக்கெதிராக முறையற்ற நடவடிக்கைகளை எடுத்தது. மண்டேலாவும் அவரின் பல்கலைக்கழகத் தோழனாகிய ஒலிவர் ரம்போவும் இணைந்து இன ஒதுக்கலுக்குள்ளாகிய கறுப்பின மக்களுக்காக சட்ட ஆலோசனைகளை வழங்கினர்.

இனவாதமும் ஒடுக்குமுறையும் அரசின் ஆதரவுடன் அரங்கேறுவதை அறிந்து கொண்ட மண்டேலா சீற்றம் கொண்டவராக அரசியலுக்குள் குதித்தார். கறுப்பர்களின் நலனை பாதுகாப்பதற்காக உருவான "ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்" என்ற கட்சியின் முதன்மை பொருப்புக்கு வந்தார். அதன் தலைவரான நெல்சன் மண்டேலா, இனவெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போராடினார். இவரின் தலைமையில் அரசின் இனவாதக் கொள்கைகளுக்கு எதிராக அறப் போராட்டங்கள் முளையெடுக்க ஆரம்பித்தன. இவரது வன்முறையற்ற போராட்டம் வளர்ச்சியடைவதைக் கண்ட வெள்ளையர் அரசு 1956 இல், அரசுக்கு எதிராக புரட்சி செய்தார் என கைது செய்தது. ஆனால் நான்காண்டு விசாரணைக்குப் பிறகு குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன.[4] சிறையில் இருந்து வெளிவந்த மண்டேலா தீவிரமாகச் செயற்பட்டார். இதன் காரணமாக 1960 களில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வேகமாக வளர்ச்சியடைந்தது. 1960 இல் ஆபிரிக்கர்களுக்கு விசேட கடவுச்சீட்டு வழங்குவதற்கு எதிராக ஊர்வலம் ஒன்றை சார்ப்பிவில் நகரில் நடத்தினார். பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 69 பேர் கொல்லப்பட்டனர். 1956 ஆம் ஆண்டு திசம்பர் 5ல் தேசத்துரோகக் குற்றம் சாட்டுகளுக்காக மண்டேலாவும் அவரின் 150 வரையான தோழர்களும் கைது செய்யப்பட்டனர். நெடிய சட்ட போராட்டத்திற்கு பிறகு 1961இல் அனைவரும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

ஆயுதப் போராட்டங்கள்
முதன்மைக் கட்டுரை: உம்கொன்ரோ வெய் சிசுவே
இதனையடுத்து அறப்போர் மூலம் போராடி உரிமைகளைப் பெற முடியாது என உணர்ந்த மண்டேலா ஆயுத வழிமுறையை நாடினார். இதனையடுத்து அவரைக் கைது செய்ய வெள்ளையாட்சியினர் முடிவு செய்தனர்.

1961 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப்படைத் தலைவனாக மண்டேலா உருவெடுத்தார். இதை உருவாக்கியதிலும் இவருக்கு பங்குண்டு. வெளிநாட்டு நட்பு சக்திகளிடமிருந்து பணம் மற்றும் இராணுவ உதவிகளைப் பெற்று, அரசு மற்றும் இராணுவ கேந்திர நிலையங்கள் மீது கெரில்லா பாணியிலான தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடத்தினார்.

1961, திசம்பர் 16 ஆம் நாள் இனவெறிக்கு எதிரான முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் நடத்தப்பட்டது. அரசாங்கம் கடுமையாக கெடுபிடி செய்ததால் 1961 ம் ஆண்டில் மண்டேலா தலைமறைவானார். அவரை பிடிக்க வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், பின்னாளில் இவர் தலைமை வகித்த அமைப்பினரின் நடவடிக்கைகளால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். இனவெறிக்கு எதிரான இவரது போர் நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனைக் காரணம் காட்டி அமெரிக்காவும் இவர் மீது பயங்கரவாத முத்திரைக் குத்தியது. மண்டேலா அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான தடை சூலை, 2008 வரை நடைமுறையில் இருந்தது.

1962, ஆகத்து 05 ஆம் நாள் இவர் தங்கியிருந்த பகுதிக்குள் மாறு வேடமணிந்து புகுந்த காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைதாகினார். திட்டமிட்டபடி மண்டேலா உட்பட 10 முக்கிய ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ் (African National Congress) தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைந்தது வெள்ளை அரசு. அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தமை, அமைதியைக் குலைத்தமை, கலகத்தை உருவாக்கியமை என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வழக்கு 1963 இல் ரிவோனியா செயற்பாடு (process Rivonia) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மண்டேலாவுக்கு 1964 ஆம் ஆண்டு சூன் 12ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது. அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாகத் தொடர்ந்தது.

சிறை
மண்டேலா 1962இல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது.

பல ஆண்டுகள் அவரைத் தனிமைச்சிறையில் அடைத்து கொடுமை செய்தது தென்னாப்பிரிக்க அரசாங்கம். மனைவியைச் சந்திப்பதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்றார். அதனால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.

மண்டேலாவின் விடுதலைக்கான போராட்டங்கள்
மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால் தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார். மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி மண்டேலாவின் மனைவி தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன.

"மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்" என்று தென்னாப்பிரிக்கா அரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். தென்னாப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக டெக்ளார்க் பதவிக்கு வந்தார். அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார். இதனால் மண்டேலாவின் விடுதலை நாளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது.

பேச்சு வார்த்தைகள்
மண்டேலா தனது கோரிக்கைகள் தொடர்பாக டெக்ளார்க் அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, அவர்களிடம் இருந்து தனது பல கோரிக்கைகளைப் பெற்றுக் கொண்டார். தென்னாப்பிரிக்கா ஒரு மக்களாட்சி நாடாகப் பின்னர் மலர்வதற்கு இந்தப் பேச்சுவார்த்தைகள் முக்கிய பங்கு வகித்தன.

விடுதலை
அப்போதைய தென்னாப்பிரிக்கா அரசுத் தலைவரான பிரடெரிக் வில்லியம் டி கிளர்க் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கி, மண்டேலா பெப்ரவரி 11, 1990 அன்று விடுதலைச் செய்யப்படுவார் என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.[5]. 1990ல் மண்டேலா சிறையிலிருந்து விடுதலை பெற்றார்..விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 71. இந்நிகழ்வு உலகம் முழுவதும் நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது[6].

தென்னாப்பிரிக்கா அரசு அறிவித்தபடியே பெப்ரவரி 11, 1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலைச் செய்யப்பட்டார். மண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. இந்தியா சார்பாக பிரதமர் வி. பி. சிங் தலைமையில் வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. மண்டேலாவுடன் அவர் மனைவி வின்னி கை கோர்த்தபடி சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலையின் வாசலில் ஆப்பிரிக்கா நாட்டுத் தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர்.

பின்னர் மண்டேலாவை காவலர் பாதுகாப்பாக கேப்டவுன் நகருக்கு அழைத்துச் சென்றனர். சிறைச்சாலையின் வாசலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொலைக்காட்சி மற்றும் புகைப்பட நிபுணர்கள் அவரை படம் எடுத்தனர். மண்டேலா விடுதலையான நிகழ்ச்சி தென்னாப்பிரிக்கா முழுவதும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மண்டேலா விடுதலை செய்யப்பட்டதை உலக தலைவர்கள் பலர் வரவேற்றார்கள். கேப்டவுன் நகருக்கு திரும்பிய மண்டேலா அங்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:-

இனவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வதேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது. நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம்.

மக்களாட்சி, தேர்தல், தென்னாப்பிரிக்காவின் அதிபராதல்
1994, மே 10 ஆம் தியதி அவர் தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார். அதிபர் ஆனப்பின், 1998 ம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்கப் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடுச் செய்தார்.[7] நோபல் பரிசுபெற்ற நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு பதவி வகித்ததன் பின் 1999 இல் பதவியை விட்டு விலகினார். இவர் 2வது முறை அதிபர் பதவிக்கு போட்டியிட மறுத்துவிட்டார்.

உண்மைக்கும் நல்லிணக்கப்பாட்டுக்குமான செயற்பாடுகள்
நீண்ட போராட்டத்தின் பின், அடக்குமுறையாளர்களுக்கும், அடக்கப்பட்டவர்களுக்கும் இடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் பல்வேறு செயற்பாடுகளில் மண்டேலா ஈடுபட்டார். அவற்றில் முக்கியமானது உண்மையும் நல்லிணக்கப்பாட்டுக்குமான ஆணைக் குழுவை (Truth and Reconciliation Commission) அமைத்து பழிவாங்கலைத் தவிர்த்து உண்மையையும் நியாயத்தையும் பெறுவதற்கான ஒரு முறைமையை அதனூடாக ஏற்படுத்தியது ஆகும். உலக வரலாற்றுக்கே, ஆண்டைகள், அடிமைகள் உண்மைகளை அறிந்து மன்னித்து இணக்கமாக வாழ்வதற்கான ஒரு சிறந்த முன்மாதிரியாக இந்த முறைமை கருதப்படுகிறது.

உடல்நலம்
உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 2013 சூன் மாதம் 8 ஆம் தியதி மண்டேலா பிரிட்டோரியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளது என தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமாவின் அலுவலகம் 2013 சூன் 23 ஆம் தியதி அறிவித்தது.[8]

மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்ததால், 2013 சூன் 27 ஆம் தியதி ஜனாதிபதி யாக்கோபு சூமா தனது மொசாம்பிக் பயணத்தை இரத்து செய்தார். நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய உறவினர்கள் அனைவரும் பூர்வீக வீட்டிற்கு அவசரமாக வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மண்டேலா நலமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை நடத்தி வந்தனர்.[9]

மறைவு
5 டிசம்பர் 2013 அன்று தனது 95வது அகவையில் காலமானார்.

விருதுகள்
MandelaStatue.jpg
நேரு சமாதான விருது
உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு "நேரு சமாதான விருது" வழங்கியது. கணவர் சார்பில் வின்னி டெல்லிக்கு வந்து அந்த விருதைப் பெற்றார்.

பாரத ரத்னா விருது
1990-ல் இந்தியாவின் 'பாரத ரத்னா' விருதும் வழங்கப்பட்டது. நெல்சன் மண்டேலா ஒருவருக்கு மட்டுமே இந்தியர் அல்லாத ஒருவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.[10]

நோபல் பரிசு‍
1993 இல் உலக அமைதிக்கான நோபல் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.[11]

சர்வதேச நெல்சன் மண்டேலா தினம்
தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான சூலை 18ம் தியதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா அறிவித்துள்ளது.[12]

இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கத்தில் திருவுருவச்சிலை
ரசிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பிரபலங்கள் முன்னிலையில், சர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ஆபிரகாம் லிங்கன் அருகில் உரிய நெல்சன் மண்டேலாவின் ஒரு வெண்கல சிற்பம் 30 ஆகத்து 2007 இல் இங்கிலாந்து பாராளுமன்ற சதுக்கத்தில் வைக்கப்பட்டது. அது குறித்த ஒரு உரையில், நெல்சன் மண்டேலா பாராளுமன்ற சதுக்கத்தில் கருப்பு மனிதன் ஒருவனின் சிலை இருக்கும் என்று 1962 இல் கண்ட கனவு நிறைவேறியது என்று கூறினார்.[13]

நிறவெறி கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்துக்கு தனது வாழ்நாளையே அர்ப்பணித்த நெல்சன் மண்டேலாவை உலக நாடுகள் பலவும் உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்தது. அந்த வகையில் சுமார் 250க்கும் மேற்பட்ட விருதுகளை மண்டேலா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க

No comments:

Post a Comment