Monday, 10 December 2018

Buckingham river development -`கூவம் மேம்பாட்டுத் திட்டம்’





Buckingham river development -`கூவம் மேம்பாட்டுத் திட்டம்’




பக்கிங்ஹாம் கதை என்ன? கூவம்தான். இல்லை என்றால் சென்னையே கூவமாகியிருக்கும்

அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதிகளும் முடிவுகளும்
`கூவம் மேம்பாட்டுத் திட்டம்’ என்ற பெயரில் 1967-72-ம் ஆண்டுக்கான ஐந்தாண்டு திட்ட வடிவை அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணா கொண்டுவந்தார். அது கூவத்தில் விழுந்த கல்லாக, குறுகிய காலத்திலேயே அமுங்கிப் போனது.

2001-ம் ஆண்டில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவால், 1,200 கோடி ரூபாயில் மத்திய அரசின் நிதியுதவியோடு, ‘சென்னை நதி நீர் பாதுகாப்புத் திட்டம்’ என்ற பெயரில் மீண்டும் கூவம் சீரமைப்புப் பணி தொடங்கப்பட்டது. இது கூவத்தில் போடப்பட்ட இரண்டாவது கல்.
2008-ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் ‘சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை’ அமைக்கப்பட்டது. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஓடுகின்ற ‘சான்-அன்டோரியோ’ நதியின் பராமரிப்பை, சீர்மிகு பயன்பாட்டை நேரில் கண்டு அதன்படி கூவத்தை மேம்படுத்த ஒருமுறையும், பின்னர் 2009-ம் ஆண்டில் கூவம் சீரமைப்பு எப்படி சாத்தியம் என ஆய்ந்தறிய சிங்கப்பூருக்கு ஒரு முறையும் துணை முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் போய் வந்தார். இது கூவத்தில் போடப்பட்ட மூன்றாவது கல்.
2012-ம் ஆண்டில் ஜெயலலிதா, ‘சென்னை நதி நீர் பாதுகாப்புத் திட்டம்’ கைவிடப்படுவதாக அறிவித்து, கையில் இருந்த நான்காவது கல்லை கூவத்தில் போடாமல் நிறுத்திக்கொண்டார். ஆனால், அந்த முடிவை 2013-ம் ஆண்டில் அவரே மாற்றிக்கொண்டார்.

`கூவம் ஓடுகிற பாதையில் 105 இடங்கள், பக்கிங்ஹாம் கால்வாய் ஓடுகிற பாதையில் 183 இடங்கள், அடையாற்றில் 49 இடங்கள் என மொத்தம் 337 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிக்கப் பட்டு தெளிவான நீரோட்டத்துடன் பயணிக்க 300 கோடி ரூபாயில் திட்டம் நிறைவேற்றப்படும்’ என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். `முதற்கட்டமாக 150 கோடி ரூபாய் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்துக்கு ஒதுக்கப்படும். பின்னர், 163 கோடி ரூபாய் முதலீட்டில் 158 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்புக்கு செயல்படுத்தப்படும்’ என்றும் அறிவித்தார் ஜெயலலிதா.
2014-15 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் கூவத்தைச் சுத்தப்படுத்துதல், சேத்துப்பட்டு ஏரி புனரமைப்பு பணிகள், கூவம் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு நிவாரணம், மீள் குடியமர்வு, சாலைகள் உள்ளிட்ட இதர ஏழு பணிகளுக்காக 3,800 கோடி ரூபாயை ஒதுக்குவதாகவும், அதற்கென 2,000 கோடி ரூபாயை கடன் பெறுவது என்றும் முடிவெடுத்துள்ளதாக ஜெயலலிதா தெரிவித்தார். ` ‘சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை’ இந்தத் திட்டத்தை ஒருங்கிணைப்பு செய்யும்’ என்றும் தெரிவித்த ஜெயலலிதா, இந்த நிதியாண்டிலேயே அதற்காக 500 கோடி ரூபாயை ஒதுக்குவதாக அறிவித்திருக்கிறார்.

இது மாறி மாறி ஆண்டுகொண்டிருக்கும் தமிழ்நாடு அரசுகளின் கையில் இருந்த ஐந்தாவது கல்லை மீண்டும் போடவைத்திருக்கிறது.
2004-ம் ஆண்டில் தமிழ்நாட்டை உலுக்கிய சுனாமியின்போது, பொங்கியெழுந்த கடலின் நீர்த்தாரையை ஒரு வடிகாலாக வெளியில் இருந்து உள்வாங்கிக் கொண்டது கூவம்தான். இல்லை என்றால் சென்னையே கூவமாகியிருக்கும்.
பக்கிங்ஹாம் கதை என்ன?
உலகின் சொர்க்கபூமியான சிங்கப்பூரைப்போல செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான் ‘பக்கிங்ஹாம் கர்நாட்டிக் கால்வாய்.’ 1806-ம் ஆண்டில் சென்னை எண்ணூர் டு பழவேற்காடு (கடல் முகத்துவாரம்) வரையில் கடல் வழி வணிகத்தை தொலைநோக்குப் பார்வையுடன் கொண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் தோண்டப்பட்டதே இந்த பக்கிங்ஹாம் கால்வாய். பழவேற்காட்டில் இருந்து மெள்ள நகர்த்தப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாய் பள்ளம், ஆந்திராவின் விஜயவாடா வரை நகர்ந்து, கிருஷ்ணா நதியின் பாதை வரை கொண்டு செல்லப்பட்டு இணைக்கப் பட்டது.
1886-ம் ஆண்டில் அன்றைய மதராசப்பட்டினத்தில் கடும் பஞ்சம் தலைவிரித்தாடியது. ஒருபுறம் வேலையின்மையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். மக்களுக்கும் கூலி, வேலைக்கும் உத்தரவாதம் என்ற அடிப்படையில் பக்கிங்ஹாம் கால்வாயை இன்னும் நீளப்படுத்தும் வேலை இதன் மூலம் மக்களுக்குக் கொடுக்கப் பட்டது. தமிழ்நாட்டின் விழுப்புரம் டு விசாகப்பட்டினம் வரையில் பக்கிங்ஹாம் கால்வாயை மதராஸிகள் தோண்டிக்கொண்டே போனார்கள் (800 கி.மீ்).
கூவம் ஊருக்கு நடுவே உருண்டு திரண்டு வந்தாலும் முடிவில் இயல்பாக கடலை அடைந்தது எப்படியோ, அப்படி இல்லாமல் கடலை ஒட்டியதுபோல இயல்பாக கரையையொட்டி பக்கிங்ஹாமை அமைத்துக் கட்டினர் பிரிட்டிஷார். அதற்கு முதல் காரணம், கடலின் உவர் நீரை கால்வாயில் எளிதில் நிறைத்துக்கொள்ளலாம். இரண்டாவதாக ஊர் நடுவே எளிதில் ஊர்ந்து தரைமுகமாக துறைமுகங்களை நிலை நிறுத்திக்கொள்ளலாம்.
வடக்காக பக்கிங்ஹாம் 17 கி.மீ தூரம், மத்திய சென்னை வாட்டத்தில் 7 கி.மீ தூரம், தெற்கு மார்க்கமாக 24 கி.மீ தூரம் என 48 கி.மீ தூரத்துக்கு சென்னையில் மட்டுமே பக்கிங்ஹாம் கால்வாயின் இயக்கம் இருக்கிறது.
2011-ம் ஆண்டில் சென்னை டு முட்டுக்காடு வரையில் 100 மீட்டர் அகலம், 10 மீட்டர் ஆழத்துக்கு பக்கிங்ஹாம் கால்வாயைத் தோண்டிச் சீரமைக்க முடிவானது. இதைச் செய்தாலே ஆந்திரா டு தமிழ்நாட்டின் வட மாவட்டம் வரையில் கடல் வழி வர்த்தகம்போல கால்வாய் வழியிலான வர்த்தகம் சாத்தியப்படும். சரக்குக் கப்பல்கள் பயணத்தை எளிதாக்க முடியும். சென்னை முதல் குமரி வரையில் பக்கிங்ஹாம் ரூட்டிலேயே டூரிஸத்தை வளப்படுத்தி, அதன் மூலம் அரசுக்கு வருமானத்தை ஈட்ட முடியும் என்பதோடு, நீர்வழி வர்த்தகத்தையும் பக்கிங்ஹாம் கால்வாய் மூலம் செயல்படுத்தலாம் என்பதே இந்த கால்வாயின் சிறப்பம்சம். அதேபோன்று உள்ளூர் வணிகத்துக்கும் இந்த கால்வாய் வழிப் பயணம் பெருத்த லாபத்தை ஈட்டித் தருவதோடு, தொழில் வணிக முதலீட்டாளர்களுக்கும் உற்சாகத்தைக் கொடுத்து உள்ளே வரவழைக்கும்.
ஆந்திராவின் வாசிராபாத், பொல்லாவரம், காக்கிநாடா, விஜயவாடா, மசூலிப்பட்டினம், ஓங்கோல், நெல்லூர் வழியாக நகர்ந்து பழவேற்காடு ரூட் பிடித்து திருவான்மியூர், திருப்போரூர், மாமல்லபுரம் தொட்டு விழுப்புரத்தின் மரக்காணம் வரையில் சரக்குக் கப்பல்களை சாதாரணமாகக் கொண்டுபோய்ச் சேர்க்கும் மிகப் பெரிய உள்ளூர் வணிகத்தின் உயிரோட்டத்துக்கு பக்கிங்ஹாம் கால்வாயை விட்டால் வேறு மார்க்கம் உருவாக இன்னும் ஒரு நூற்றாண்டு பிடிக்கலாம்.
கூவத்தால் சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளையே எதிர்கொள்ள முடியும். பக்கிங்ஹாம் கால்வாயால் வர்த்தகத்தை வளர்த்தெடுத்து, தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற முடியும். ஆனால் கூவமும் பக்கிங்ஹாமும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலும், கழிவுகளின் மடியிலும் கிடக்கும் வரை மனிதன் தப்பித்து வாழவோ, வருமான வளம் பெறவோ வாய்ப்புகள் இல்லை.
`மக்களால் நாங்கள், மக்களுக்காக நாங்கள்...’ என்று மாறி மாறிச் சொல்லும் ஆட்சியாளர்கள் கூவத்தையும், பக்கிங்ஹாம் கால்வாயையும் மீட்டெடுக்க இதுதான் சரியான நேரம். ஆனால் அதேதான்...
செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?
ஓடுறதுக்கு வேற ஊரு கிடையாது!

No comments:

Post a Comment