Monday, 15 October 2018

CRAZY MOHAN , A LEGEND BORN 1952 OCTOBER 16






CRAZY MOHAN ,
A LEGEND BORN 1952 OCTOBER 16



உங்கள் ஹனிமூன் அனுபவத்தைப் பற்றி சொல்ல முடியுமா?

இப்பல்லாம் பசங்க ஹனிமூனுக்கு சுவிட்சர்லாந்து, பாலித் தீவு, ஆஸ்திரேலியான்னு சினிமா ஷூட்டிங் மாதிரி போறாங்க. 33 வருசத்துக்கு முன்னால் ஹனிமூன் என்றால் பெங்களூர்தான். எங்க தாத்தா சொன்னார் ‘ஹனிமூனுக்கு தனியா போனாலும் பரவால்ல. இவன் பொண்டாட்டியை அழைச்சுண்டு போறேங்கறான். காலம் கெட்டுக் கிடக்கு. துணைக்கு நாலு பேரைக்கூட அனுப்புடா ராஜாமணி’ (எங்க அப்பா). தாத்தா நாலு அடி பாஞ்சா எங்கப்பா நானூறு அடி பாய்வார்.

ரயில்ல என்கூட ஒரு பெரிய கும்பலே வந்தது. ஏ-1 கோச்சில் நான். ஏ-3 கோச்சில் என் மனைவி. மத்தியில் ஏ-2 கோச்சில் Z-செக்யூரிடி மாதிரி துணைக்கு வந்த உறவுப் பட்டாளம். ‘உன் பொண்டாட்டிக்கிட்ட ஏதாச்சும் பேசணும்னா கூச்சப்படாம என்கிட்டே சொல்லு. நான் அவள்கிட்ட சொல்லிடறேன்’ என்பார் பெரியப்பா. நான் கடுப்பாக ‘ஐ லவ் யூ’ என்று சொல்ல, ‘நீ என்கிட்ட சொன்னதை உன் பொண்டாட்டிகிட்டே அப்படியே சொல்றேன்’ என்றார் பெரியப்பா.

பெங்களூர் ஹோட்டல் உட்லண்ட்ஸில் என் அறைக்கு அடுத்த அறை எங்க பெரியப்பா அறை. புது மனைவியோடு பேசலாம் என்று பார்த்தால் கதவைத் திறந்து கொண்டு பெரியப்பா வந்துவிடுவார். இட்லி, வடை, சாம்பார், காரா பாத், கேசரி பாத் என்று எல்லோரும் சேர்ந்து என் அறையில் சாப்பிட்டார்கள். பிறகு எல்லோரும் நாகையா நடித்த ‘சக்ரதாரி’ என்ற கன்னட சினிமா பார்க்கச் சென்றோம். ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் காமேஸ்வரன் - திரிபுரசுந்தரியின் முதல் இரவில் நாகேஷ் நுழைந்துவிடுவார். அப்போ கமல் ‘எனக்குத் தெரிஞ்சு ஃபர்ஸ்ட் நைட்ல மூணு பேரை நான் பாத்ததே இல்லையாக்கோம்’ என்பார். காமேஸ்வரனுக்காவது மூணு. என்னைச் சுத்தி 30 பேர். நான் போனது ஹனிமூன் இல்ல. கும்பலா போன ‘Many Moon’.







நாகேஷைப் பற்றி நச்சென்று நாலு வரிகள் சொல்ல முடியுமா?

நகைச்சுவையாக நாம் பேசும் எல்லா வரிகளுமே நாகேஷ் பேசிய வரிகள்தான். நகைச்சுவைக்கு காமெடி, ஹாஸ்யம், ஜோக், துணுக்கு, ஹ்யூமர், விட் என்று பல பேர்கள் இருந்தாலும் எங்க வீட்டுல வெச்ச பேர் ‘நாகேஷ்’.

‘‘சார்... சீஸர்னு பேர் வெச்சு ஒரு நாய் வளர்த்தேன், செத்துடுச்சு சார்’ என்று ஒருவர் ஏதோ ஒரு படத்தில் இன்னொருவரிடம் சொல்லுபோது, புயலாக உள்ளே நுழையும் நாகேஷ் ‘‘ஏன்யா... நாய்க்கு பேரு வெச்சியே, சோறு வெச்சியோ?’’ என்று கேட்டுவிட்டு, பதில் எதிர்பாராமல் வீட்டுக்குள் நுழைவார். இவரது டயலாக் டெலிவரி எப்போதுமே சுகப்பிரவசம்தான்.

ஆயகலைகள் அறுபத்து நாலுக்குச் சொந்தக்காரியான சரஸ்வதிதேவியின் ‘மோனோலிஸா’சிரிப்புக்கே காரணம்… நாகேஷ் அடித்த ஜோக்காகத்தான் இருக்கும். நான் வேடிக்கை பார்த்து வியந்த நாகேஷுக்கு வசனம் எழுதும் பாக்கியம் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் தொடங்கி, ‘மைக்கேல் மதன காமராஜன்’ வழியாக ‘பஞ்ச தந்திரம்’, ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ வரை தொடர்ந்தது.

‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் டம்மி புலி இல்லாமல் நிஜ புலியை ஜிம்மி போலவே பாவித்து, அதனுடன் சேர்ந்து நடித்தார். நாங்கள் எல்லாம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். குறிப்பாக ஸ்டண்ட் மாஸ்டர் அமரர் விக்ரம் தர்மா தடுத்தபோது ‘‘பேச்சாளன் மேடையில சாகணும். ஃபுட் பால் பிளேயர் கோல் போஸ்ட்ல சாகணும். நடிகன் ஷூட்டிங் ஸ்பாட்ல சாகணும். அதான் வீர மரணம்’’ என்றார்.

‘மகளிர் மட்டும்’ படத்தில் பிணமாக நடிக்கும் போது, என்னிடம் தொடர்ந்து ‘கிரேசி எனக்கு ஒரு வசனம் கூட கிடையாதா?’ என்று தொண தொணவென்று கேட்டுக்கொண்டே இருந்தார். கடைசியில் அவருடைய நகைச்சுவை ‘குறும்பு’ புரிந்து படக்குழுவே வாய்விட்டுச் சிரித்தது.

அதே படத்தில் விறைத்த பிணம் படால் என்று கீழே விழும் காட்சிக்காக, விக்ரம் தர்மா ஒரு பிணத்தைப் போன்ற டம்மி செய்து வைத்தார். ஆனால், அந்த டம்மியை டம்மியாக்கி ஷூட்டிங் வேடிக்கை பார்க்க வைத்துவிட்டு, தானே சரளைக் கல் நிரம்பிய தரையில் சாஷ்டாங்கமாக… அதுவும் பின் பக்கமாக விழுந்து தத்ரூபமாக நடித்தார் நாகேஷ். இப்போது நினைத்தால் கண்ணில் நீர் முட்ட வைக்கிறது. இவரைப் போல் டைமிங் டெலிவரி வரவேண்டும் என்ற நப்பாசையில்தான் எனது நாடக ஹீரோ பாலாஜிக்கு, ‘எதிர் நீச்சல்’ திரைப்பட கதாநாயகன் பெயரான ‘மாது’ பெயரை வைத்தேன்.


எனது நாடகத்துக்கு வந்து சைடிங்கில் நின்ற படி ‘டயலாக் எப்படி’ சொல்ல வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறார் அந்த மேதை. நாலு வரி என்ன… நாலாயிரம் வரிகள் சொல்ல வேண்டிய ‘திவ்யப் பிரபந்த நகைச்சுவை நாராயணன்’ நாகேஷ்!

No comments:

Post a Comment