Monday, 13 August 2018

RWANDA GENOCIDES - ENGLAND TOOK MAJOR PART FOR KILLINGS



RWANDA GENOCIDES - 
ENGLAND TOOK MAJOR PART FOR KILLINGS 







கறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள்

ருவான்டா, 1994 ம் ஆண்டு, நவீன உலகை உலுக்கிய இன அழிப்பு நடவடிக்கை, ஒரு வானொலி அறிவிப்புடன் ஆரம்பமாகியது: "ஹூட்டு சகோதரர்களே! எம்மை இதுவரை காலமும் அடிமைகளாக அடக்கி ஆண்டு வந்த துட்சி கரப்பான் பூச்சிகளை அழிக்கும் காலம் வந்துவிட்டது." இனவாத வெறுப்பை கக்கும் அந்த அறிவிப்பை செய்த "மில் கொலின்ஸ் சுதந்திர வானொலி" ஹூட்டு பாஸிச சக்திகளால் நடத்தப்பட்ட தனியார் வானொலி என நம்பப்படுகின்றது. ருவான்டாவில் நீண்ட காலமாகவே ஹூட்டு இனவெறி அரசியல் நடத்தி வந்த, பாஸிச "குடியரசு பாதுகாப்புக் கூட்டணி" (CDR) கட்சியுடன், ஆளும்கட்சி தலைமையிலான Interahamwe என்ற துணைப்படையும் சேர்ந்து கொண்டு சிறுபான்மை துட்சி இன மக்களை நரபலி வேட்டையாடிக் கொன்று குவித்தனர். ருவான்டாவின் தேசிய இராணுவம் பெரும்பான்மை ஹூட்டு இனத்தவரின் ஆதிக்கத்தில் இருந்ததால், இனப்படுகொலையில் இராணுவத்தின் நேரடி பங்களிப்பை மறுக்கமுடியாது.


ருவான்டாவின் பெரும்பான்மை இனமான ஹூட்டுக்களுக்கும், சிறுபான்மை இனமான துட்சிகளுக்கும் இடையிலான பகைமை, கசப்புணர்வு நீண்ட காலமாக நீறு பூத்த நெருப்பாக அடங்கிக் கிடந்தது. ருவான்டா பெல்ஜியத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து, துட்சி சிறுபான்மையினருக்கு எதிரான இனக்கலவரங்களையும், துட்சி கிளர்ச்சியாளர்களின் அரசுக்கு எதிரான ஆயுதமேந்திய போராட்டத்தையும் சந்தித்துள்ளது. 1994 ல் பதவியில் இருந்த ஜனாதிபதி "ஹபியாரிமனா" வெளிநாட்டு அழுத்தம் காரணமாக, அமைதிப் பேச்சுவார்த்தைக்கும், அதிகாரப் பரவலாக்கத்திற்கும் சம்மதித்திருந்தார். இதனால் ஹபியாரிமனா
ஒரு ஹூட்டு இன மிதவாதியாக, இன்னும் சொன்னால் "ஹூட்டு இனத் துரோகியாக", பாஸிச சக்திகளால் கணிக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு. இருப்பினும் 1994 ம் ஆண்டு, ஏப்ரல் 6 ம் திகதி, தான்சானியாவில் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு நாடு திரும்பிக் கொண்டிருந்த ஜனாதிபதியின் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஏவுகணையை ஏவியது யார் என்ற மர்மம் இன்று வரை துலங்கவில்லை. ஹூட்டு பாசிஸ்டுகள் சுட்டு வீழ்த்தி இருக்கலாம் என்று அப்போது நம்பப்பட்டாலும், இன்றைய ருவான்டா அதிபர் "போல் ககாமே" யின் துட்சி கெரிலாக்களினது வேலை என்று பிரான்ஸ் குற்றஞ் சாட்டியது. (விமானி ஒரு பிரெஞ்சுக் காரர் என்பதால் பிரெஞ்சு நீதிமன்றம் விசாரணை நடத்தியது.)

எது எப்படி இருந்த போதிலும், ஜனாதிபதி ஹபியாரிமனாவின் மரணத்திற்குப் பின்னர் நாட்டில் அராஜகம் தலைவிரித்தாடியது. "துட்சி கிளர்ச்சியாளர்கள் எமது ஜனாதிபதியை படுகொலை செய்துவிட்டார்கள்." என்ற செய்தி ஹூட்டு மக்கள் மத்தியில் காட்டுத்தீ போல பரவியது. விரைவில் அதுவே முழு துட்சி இனத்தவருக்கும் எதிரான துவேஷமாக உருவெடுத்தது. நாடு முழுவதும் வீதித்தடைகள் போடப்பட்டன. ஹூட்டு ஆயுததாரிகளின் வீதித்தடைச் சோதனையின் போது மறிக்கப்பட்ட வாகனங்களில் இருந்து துட்சி இனத்தை சேர்ந்தவர்களை தனியாக பிரித்தெடுத்தனர். அடையாள அட்டையில், "இனம்: துட்சி" என்று குறிப்பிட்டிருப்பதே அவர்களை காட்டிக் கொடுக்க போதுமானதாக இருந்தது. (அடையாள அட்டையில் இனத்தை குறிப்பிடும் வழக்கம் பெல்ஜிய காலனிய ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.) பெண்கள், குழந்தைகள் என்று வேறுபடுத்தாது துட்சி என்ற காரணத்திற்காகவே கொலை செய்யப்பட்டனர். துப்பாக்கிச் சன்னங்களை வீணாக்குவது செலவு என்று, அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
குடியிருப்புகளுக்கு சென்று துட்சிகளை கொலை செய்த படையினர், சுடப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளுக்கான செலவை அவர்களே பொறுப்பெடுக்க வேண்டும் என்று மரணத்திலும் கணக்குப் பார்த்தனர். சாதாரண மக்களும் கொலை வெறியாட்டத்தில் பங்குபற்றுமாறு ஊக்குவிக்கப்பட்டனர். ஒரு கொலையை செய்தவனுக்கு, இன்னும் இன்னும் கொலை செய்ய வேண்டும் என்ற வெறி ஏறியது. கொலை செய்யப்பட்டவர்கள் துட்சி இனத்தவர்கள் மட்டுமல்ல. இன நல்லிணக்கத்தை விரும்பிய, மிதவாத ஹூட்டுகளும் கொல்லப்பட்டனர். உலகம் மறுபக்கம் பார்த்துக் கொண்டிருக்கையில், சில மாதங்களுக்குள் எட்டு லட்சம் முதல் ஒரு மில்லியன் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

"இரண்டாம் உலகப்போரில் நடந்த யூத இன அழிப்பிற்குப் பின்னர், இன்று உலகம் ஆப்பிரிக்காவின் மாபெரும் இனப்படுகொலையை பார்த்தக் கொண்டிருக்கிறது." என்று நெஞ்சை நெகிழ வைக்கும் உருக்கமான காட்சிகளை விபரித்துக் கொண்டிருந்த சர்வதேச தொலைக்காட்சிகளால் உலகின் மனச்சாட்சியை உலுக்க முடியவில்லை. சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்குப் பின்னர் உலகின் ஒரேயொரு வல்லரசாக திகழ்ந்த அமெரிக்கா, தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கையை விரித்தது. "குழந்தை வல்லரசான" ஐரோப்பிய ஒன்றியம் வாய்ச்சொல்லில் மட்டுமே தான் கெட்டிக்காரன் என்று காட்டிக் கொண்டிருந்தது. இவ்வாறு இனப்படுகொலையை தொடராது தடுக்க வழி இருந்த போதும், சந்தர்ப்பத்தை தவற விட்ட காரணம் என்ன? அரசியலில் நண்பர்கள் கிடையாது. நிரந்தர நலன்கள் மட்டுமே உள்ளன. பிரான்ஸ் அன்று ருவான்டாவை ஆட்சி செய்த ஹூட்டு இராணுவத்திற்கு பயிற்சி அளித்து, ஆயுதங்கள் கொடுத்து வந்தது. அதே போல துட்சி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வந்தது. அவரவருக்கு தமது ஆட்கள் வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பே மேலோங்கி இருந்தது.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், அமெரிக்காவின் கவனம் ஐரோப்பிய வல்லரசுகளின் மீது திரும்பியது. ஆப்பிரிக்காவில் நவ-காலனிய அரசியலில் மும்முரமாக ஈடுபட்டிருந்த பிரான்ஸ் அதன் கண்ணில் துருத்திக் கொண்டிருந்தது. ருவான்டாவில் துட்சிகளின் கிளர்ச்சி, பிரான்சின் ஆதிக்கத்தை துடைத்தெறியும் பதிலிப் போராக அமெரிக்காவால் கருதப்பட்டது. துட்சிகளின் கெரில்லா இராணுவமான "ருவான்டா தேசாபிமான முன்னணி" (RPF) அயல் நாடான (ஆங்கிலம் பேசும்) உகண்டாவில் தளம் அமைத்திருந்ததும், RPF படைத் தளபதி (இன்றைய ஜனாதிபதி) போல் ககாமே உட்பட பல தலைவர்கள் உகண்டாவில் ஆங்கில மொழி வழிக் கல்வி கற்றிருந்தும், அமெரிக்கா இலகுவாக ஊடுருவ வாய்ப்பாக அமைந்தது. உகண்டாவின் இன்றைய ஜனாதிபதி முசவேனி, ஆட்சியைக் கைப்பற்ற நடத்திய ஆயுதப் போராட்டத்தில், RPF போராளிகள் பங்குபற்றி இருந்தனர். முசவேனி, ககாமே ஆகியோரை "ஆப்பிரிக்காவின் நம்பிக்கை தரும் இளம் தலைமுறையை சேர்ந்த தலைவர்கள், மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவார்கள்" என்று அமெரிக்க ஊடகங்கள் புகழ் பாடிக் கொண்டிருந்தன. ஒருவேளை ருவாண்டாவில் ககாமே ஆட்சிக்கு வந்த பின்னர், அரச கரும மொழியாகவும், கல்வியிலும் பிரெஞ்சை ஒதுக்கி விட்டு ஆங்கிலத்தை நடைமுறைக்கு கொண்டு வந்ததை சாதனையாக கூறலாம்.


ருவாண்டாவில் இருப்பது இனப்பிரச்சினையா? ருவாண்டா மக்கள், காலங்காலமாக ஹூட்டு, துட்சி என்ற இன அடிப்படையில் பிரிந்து வாழ்ந்து வந்தனரா? இது ஆயிரம் வருடக்கால இனப்பகையா? நாம் முதலாளிய ஊடகங்கள் சொல்வதை நம்பினால், மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு "ஆம்" என்று பதில் வரும். ஆனால் இந்தக் கருத்தியல் எவ்வளவு தூரம் சரி என்று, எந்த சமூக விஞ்ஞானியும் ஆராயவில்லை, அல்லது அவர்களது முடிவுகள் பாரபட்சமின்றி இருப்பின் பிரசுரிக்கப்படுவதில்லை. முதலில் "இனம்" (Ethnicity, Race எதுவாக இருந்தாலும்) என்ற சொல்லே ஒரு ஐரோப்பியக் கண்டுபிடிப்பாகும். ருவான்டாவின் இனப்பிரச்சினை, ஆச்சரியப்படத்தக்க வகையில் இலங்கை இனப்பிரச்சினையுடன் பெரும்பாலும் ஒத்திருப்பதை, நீங்கள் இந்தக் கட்டுரையை வாசிக்கும் போது புரிந்து கொள்வீர்கள். இது ஒன்றும் தற்செயல் அல்ல. காலனிய எஜமானர்களின் பிரித்தாளும் கொள்கை, எங்கேயும் ஒரே மாதிரித் தான் நடைமுறைப் படுத்தப்பட்டது. ஆங்கிலேயர்கள் எவ்வாறு இலங்கையில் வாழ்ந்த சிங்கள, தமிழ் மொழி பேசும் மக்களுக்கிடையில் இனப் பகையை தோற்றுவித்து, இனவாதப் படுகொலைகளுக்கு வழிவகுத்தார்களோ, அதே வேலையை பெல்ஜியர்கள் ருவான்டாவில் செய்தனர்.

19 ம் நூற்றாண்டின் இறுதியில், உலகின் மிக நீண்ட நதியான நைலின் நதிமூலத்தை தேடிச் சென்ற ஐரோப்பியர் சிலர் ருவான்டாவை "கண்டுபிடித்தனர்". அவர்களைத் தொடர்ந்து கிறிஸ்தவ மதம் பரப்புவோரும் அந்தப் பிரதேச மக்களை கத்தோலிக்கர்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் எல்லோருக்கும் ருவான்டாவில் எதிர்பாராத ஆச்சரியங்கள் காத்திருந்தன. இன்றைய ருவான்டா, புரூண்டி, மற்றும் உகண்டாவின் தென் பகுதி, கொங்கோவின் கிழக்குப்பகுதி என்பனவற்றை உள்ளடக்கிய, ஒரே அதிகார மையத்தைக் கொண்ட மன்னரின் ஆட்சிப்பிரதேசமாக இருந்தது. மன்னரின் கீழ் நூற்றுக்கணக்கான சிற்றரசர்கள் மாகாணங்களை நிர்வகித்து வந்தனர். சுருக்கமாக சொன்னால், ஐரோப்பாவில் இருந்த அதே நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு முறை ருவான்டாவிலும் காணப்பட்டது. ஆயிரம் வருடங்களாக மக்கள் விவசாயம் செய்யும் அறிவைப் பெற்றிருந்தனர். அழகிய மலைநாடான ருவான்டாவில், ஒவ்வொரு குன்றும் ஒரு குடும்பத்திற்கு சொந்தமான விவசாய நிலமாக இருந்தது.

ருவான்டாவில் துவா (அல்லது பிக்மீ) என்றழைக்கப்படும் பழங்குடியினரும் வாழ்ந்து வருகின்றனர். பிற ஆப்பிரிக்க மக்களிடமிருந்து வேறுபடுத்தி அறியக்கூடிய தோற்ற அமைப்பைக் கொண்ட (குள்ளமானவர்கள், பழுப்பு நிறத்தவர்கள்) துவா மக்கள் இன்றும் கூட புராதன வேடுவர் சமூகமாகத் தான் வாழ்கின்றனர். யாருக்கும் தீங்கு செய்யாத, தானுண்டு, தனது வேலையுண்டு என வாழ்ந்து வரும் துவா மக்களை, ருவான்டா அரசர்கள் அடிமைகளாக வைத்திருந்தனர். அரசன் மட்டுமல்ல, நிலப்பிரபுக்களும் துட்சி இனத்தை சேர்ந்தவர்களாக அதிகாரம் செலுத்தினர். அதற்கு மாறாக பெரும்பான்மை ஹூட்டு இன மக்கள் நாட்டுப்புறங்களில் பண்ணையடிமைகளாக, குத்தகை விவசாயிகளாக இருந்தனர். இந்த உண்மையே ஹூட்டு-துட்சி இனப் பிரிவினையை நிரூபிக்க போதுமானதல்ல. ஏனெனில் "நாகரிக காலத்தை" சேர்ந்த நாம் இனம் பற்றி புரிந்து வைத்திருப்பதற்கும், அன்றைய மக்களின் சிந்தனைக்கும் இடையில் நிறைய வேறுபாடு இருக்கின்றது. தனது சொந்த விவசாய நிலங்களில் அதிக விளைச்சலைப் பெறக்கூடியதாக பயிரிட்டு, தனது செல்வத்தை பெருக்கிக் கொள்ளும் ஹூட்டு ஒருவர் நிலப்பிரபுவாக வர முடிந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் அதிகாரத்தில் இருப்பது யாராக இருந்தாலும் துட்சி என அழைக்கப்படலாயினர்.

துட்சிகளின் மூதாதையர் எத்தியோப்பியாவில் இருந்து வந்தவர்கள் என்ற கருத்து நிலவுகின்றது. இரு பக்க இனவாதிகள் மத்தியிலும், ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் மத்தியிலும் இது போன்ற கருத்துகள் பிரபலமானவை. ("துட்சிகளை எத்தியோப்பியாவிற்கு திருப்பி அனுப்புவோம்." என்பது ஹூட்டு இனவாதிகளின் முழக்கங்களில் ஒன்று.) எத்தியோப்பியர், அல்லது சோமாலியர்கள் போல (இவர்களை பிற ஆப்பிரிக்கர்களிடம் இருந்து இலகுவில் பிரித்தறிய முடியும்) பெரும்பாலான துட்சிகள் தோன்றுவதை மறுப்பதற்கில்லை. துட்சிகள் என்றால் உயரமானவர்கள், ஒடுங்கிய முகம், மெல்லிய உடல்வாகு கொண்டவர்கள்; ஹூட்டுகள் பருமனானவர்கள், வட்டமான முகம் கொண்டவர்கள், என்றெல்லாம் பிரித்துப் பார்ப்பது எல்லோருக்கும் பொருந்தாது. இருப்பினும் இனப்படுகொலை செய்யும் இனவாதிகளுக்கு அந்த வெளித் தோற்றமே போதுமானதாக இருந்தது.

ருவான்டாவின் எழுதப்படாத செவிவழி வரலாற்றின் படி, கி.பி. 700 ம் ஆண்டளவில் வருகை தந்த ஹூட்டுகள், மரங்களை வெட்டி, நிலங்களை பண்படுத்தி விவசாயம் செய்து வந்துள்ளனர். பல்வேறு வகையான பழ மரங்களை நட்டு, உணவுப்பயிர்களை பயிரிட்டு, அதன் பலனை அனுபவித்து வந்தனர். இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த துவா வேடர்களைப் போலன்றி, குடிசைகளை கட்டி, கிராமங்களில் வாழ்ந்தனர். சமுதாயம் வளர்ச்சி அடைந்த போது "முவாமி" என அழைக்கப்படும் மன்னனின் அதிகார மையமாக பரிணமித்தது. ஆயிரம் வருடங்களுக்கு முன்பே மத்திய ஆப்பிரிக்க இராச்சியமான, ருவான்டா முழுவதும், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் நிலவியது.

ஹூட்டு நாகரீகம் தொடங்கி முன்னூறு வருடங்களுக்குப் பின்னர், வடக்கே இருந்து மாடுகளை மேய்த்துக் கொண்டு வந்தனர், துட்சிகள் என்ற வந்தேறுகுடிகள். இது இந்தியாவில் ஆரியரின் வருகையுடன் ஒப்பு நோக்கத்தக்கது. துட்சிகள் சமுதாயத்தில் மாடுகள் வைத்திருப்பது செல்வச் செழிப்பின் அடையாளம். ஒருவர் எத்தனைமாடுகள் வைத்திருக்கிறார் என்பதை வைத்துதான், அவர் பணக்காரரா இல்லையா என்பது தீர்மானிக்கப்பட்டது. இந்த கலாச்சாரம் இன்றும் கூட (துட்சி இனக்குடும்பத்தை சேர்ந்த) கென்யாவின் மாசாய் இன மக்கள் மத்தியில் நிலவுகின்றது. தமது மாடுகளுக்கு மேய்ச்சல் நிலம் தேடியே துட்சிகள், ருவான்டாவிற்கு வந்தனர். அதனால் அங்கே விவசாயம் செய்து வந்த ஹூட்டுகளுடன் நிலத்திற்கான போட்டி, பொருளாதார முரண்பாடுகளை (கவனிக்கவும்: இன முரண்பாடுகள் அல்ல) தோற்றுவித்தது.

வேறுபாடான பொருளாதார நலன்கள் இருந்த போதிலும், காலப்போக்கில் துட்சிகள், தம்மை விட நாகரீகத்தில் மேலோங்கியிருந்த ஹூட்டுகளின் மொழியையும், மதத்தையும் மட்டுமல்ல கலாச்சாரத்தையும் தமதாக்கிக் கொண்டனர். முரண்நகையாக அதுவே துட்சி இன மேலாதிக்கத்திற்கு ஆதாரமாக அமைந்தது.
அதிகார வெறி கொண்ட துட்சிகள் விரைவில் ருவான்டாவின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினர். ஹூட்டுகள் விவசாயத்தையே பெரிதாக மதித்ததால், அவர்களை தமது ஆட்சிக்கு கீழ்ப்படிய வைப்பது, புதிய ஆட்சியாளருக்கு இலகுவாக அமைந்தது. ஹூட்டுகள் உழைக்கும் வர்க்கமாகவும், துட்சிகள் ஆளும் வர்க்கமாகவும் மாறியது அப்போது தான். தேச நிர்வாகத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. துட்சிகள் ஆரம்பத்திலேயே மேலிருந்து கீழே வரும் அதிகாரப் படிநிலைச் சமூகமாக வாழ்ந்தவர்கள். அதனால் தான் 20 ம் நூற்றாண்டிலும், அதிகார வர்க்கம் முழுவதும் துட்சிகளை கொண்டிருந்தது. தேசப் பாதுகாப்பும் அவர்கள் வசமே இருந்தது. விவசாயம் சார்ந்த உற்பத்தி உறவுகளில்
பண்ணையடிமை முறையை புகுத்தினர். துட்சி பண்ணையார்களின் மாடுகளுக்கு மேய்ச்சல் நிலம் தேவைப்பட்ட போது, ஹூட்டு விவசாயிகளிடம் நிலங்களை பெற்றுக் கொண்டு, பண்டமாற்றாக சில மாடுகளைக் கொடுத்தனர். ஹூட்டு விவசாயிகள் மாடுகளை பராமரித்தாலும், பிறக்கும் கன்றுக்குட்டிகளை மட்டும் துட்சி உரிமையாளருக்கு கொடுத்து விட வேண்டும். நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் உற்பத்தியின் பலன்களை அனுபவிப்பது நிலப்பிரபுவாகத் தானே இருக்க முடியும்?

19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய வல்லரசுகள் ஆப்பிரிக்காவை பங்கு போட்ட போது, ஜெர்மனிக்கு கிடைத்த துண்டுகளில் ருவான்டாவும் ஒன்று. ஏற்கனவே இராச்சியத்தின் பகுதிகள் பிரிட்டனுக்கும் (உகண்டா), பெல்ஜியத்திற்கும் (கொங்கோ) தாரை வார்க்கப்பட்டது பற்றியோ, தன் நாடு தற்போது ஜெர்மன் ஏகாதிபத்தியத்திற்குள் அடங்குகின்றது என்பதையோ ருவான்டா மன்னன் அறிந்திருக்கவில்லை.
இருப்பினும் தான்சானியாவில் இருந்து ருவான்டா விவகாரங்களை கவனித்துக் கொண்ட ஜெர்மன் ஆளுநர், அரசாட்சியில் தலையிடவில்லை. முதலாம் உலக யுத்தத்தில் ஜெர்மனியை தோற்கடித்த பெல்ஜியம், ருவான்டாவை தனது காலனியாக்கியது. "பெல்ஜியத்தால் பாதுகாக்கப்படும் பிரதேசம்" என்று ஐ.நா. மன்றத்தின் முன்னோடியான உலக மக்கள் பேரவை தீர்மானித்தது. காலனிக்கும், பாதுகாப்புப் பிரதேசத்திற்கும் இடையில் அதிக வித்தியாசம் இருக்கவில்லை. பெல்ஜியம் தனது முப்பது வருட காலனிய ஆட்சிக்காலத்தில் ஐரோப்பியமயப்பட்ட கல்வியையும், நிர்வாகத்தையும் அறிமுகப்படுத்தியது. அப்போது தான் இனவாதக் கருத்துகள் துட்சி, ஹூட்டு இன மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டன.

துட்சி நிலப்பிரபுக்களின் அதிகாரம் செலுத்தும் திறமையை கண்டு வியந்த ஐரோப்பியர்கள், துட்சிகள் "சாதாரண ஆப்பிரிக்கர்களாக" இருக்க முடியாது என முடிவுசெய்தனர். அந்த எண்ணத்தில் உதித்தது தான் இன்றைய இனவாத கோட்பாடுகள். பாப்பரசரின் பிரதிநிதியான வணக்கத்திற்குரிய "லெயோன் கிளாஸ்", மிஷனரி பாடசாலைகள் மூலம் இனவாதக் கருத்துகளையும் போதித்து வந்தார். ஆரம்ப காலங்களில் துட்சி இனப் பிள்ளைகளுக்கு மட்டுமே ஐரோப்பிய பாணி கல்வி போதிக்கப்பட்டது. "துட்சிகள் ஆளப்பிறந்தவர்கள்", "இனரீதியாக ஹூட்டுக்களை விட சிறந்தவர்கள்", போன்ற இனவாதக் கருத்துகள், பாடசாலை சென்ற பிஞ்சுமனங்களில் விதைக்கப்பட்டன. புதிய மத்தியதர வர்க்கமாக உருவாகிய, கல்வி கற்ற துட்சிகளை அரச கருமங்களை முன்னெடுக்கவும், மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட புதிய நிர்வாக அலகுகளில் அதிகாரிகளாகவும் நாடு முழுவதும் நியமிக்கப்பட்டனர். அதே நேரம், இன்னொரு பக்கத்தில் பெல்ஜியர்கள் சிறிய அளவு ஹூட்டு நடுத்தர வர்க்கத்தையும் உருவாக்கத்தவறவில்லை. இருப்பினும் ருவான்டா சுதந்திரம் பெற்ற நேரம், பெரும்பாலான அரச பதவிகளில் துட்சிகளே வீற்றிருந்தனர்.

1958 ல் எடுத்த கணக்கெடுப்பின் படி, மொத்த சனத்தொகையில் 14 வீதமான துட்சிகள், பல்கலைக்கழகங்களில் மூன்றில் இரண்டு பங்கு மாணவர்களாக இருந்தனர். சுதந்திரத்திற்குப் பின்னர் நடந்த பொதுத் தேர்தலில், பெரும்பான்மை ஹூட்டு மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற அரசாங்கம் தரப்படுத்தலை கொண்டு வந்து, இனப்பிரச்சினைக்கு வழி சமைத்தது. மெல்ல மெல்ல அதிகாரம் துட்சிகளின் கைகளில் இருந்து பறிக்கப்பட்டது. பேரினவாத அரசாங்கம், ஹூட்டுகளுக்கு அதிக சலுகைகள் வழங்கி, பெரும்பான்மை வாக்குவங்கியை தக்க வைத்துக் கொண்டது. துட்சியினத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள், இனப்பிரச்சினையை தீர்க்குமாறு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதும், ஹூட்டு இனவாத சக்திகளின் எதிர்ப்புக் காரணமாக ஒப்பந்தங்களை முறிப்பதும் நடந்தேறின. ஒவ்வொரு தடவையும் துட்சிகள் அஹிம்சா வழியில் எதிர்ப்புக் காட்டிய போதெல்லாம், இனக்கலவரங்கள் தூண்டி விடப்பட்டன. இதனால் பெருமளவு துட்சி மக்கள் அகதிகளாக அயல் நாடுகளில் புகலிடம் கோரினர். துட்சிகள் ஆயுதமேந்திய போராட்டத்தின் மூலமே தமது உரிமைகளைப் பெற முடியும் என இளைஞர்கள் நம்பினார். ஹூட்டு பேரினவாத அரசிற்கெதிராக ஆரம்பிக்கப்பட்ட துட்சி விடுதலை இயக்கம் (RPF) கெரில்லாத் தாக்குதல்களை நடத்தியது. இதையெல்லாம் எங்கேயோ கேட்ட மாதிரி இல்லையா? ஆமாம், ருவான்டா-இலங்கை, துட்சிகள்-தமிழர்கள், ஹூட்டுகள்-சிங்களவர்கள், பெல்ஜியம்-பிரிட்டன், இந்தச் சொற்களை மாற்றிப் போட்டுப் பாருங்கள். வரலாறு ஒரே மாதிரித் தோன்றும்.

1994 ம் ஆண்டு, துட்சியின மக்கள் வகைதொகையின்றி கொன்று குவிக்கப்பட்டாலும், துட்சிகளின் விடுதலைப்படையான RPF கெரில்லாக்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. தலைநகர் கிகாலியை கிளர்ச்சிப்படை கைப்பற்றியதும், ஹூட்டு மக்களும் அரச படையினரும் கொங்கோவிற்குள் புகலிடம் கோரினர். இதனால் யுத்தம் அயல்நாடான கொங்கோவிற்கும் பரவியது. RPF இயக்கத்தில் துட்சி இன மேலாண்மைக் கருத்துகளை கொண்ட போல் ககாமே போன்ற தலைவர்களின் ஆதிக்கம் நிலவுகின்றது. அதுவே புதிய அரசின் கொள்கையை தீர்மானிக்கின்றது. இன அழிப்புக் குற்றத்தில் ஈடுபட்ட மாஜி இராணுவ வீரர்களை தேடுவதாக காரணம் காட்டி, இரண்டு தடவை ருவான்டாவின் புதிய (துட்சி) இராணுவம் கொங்கோவிற்குள் படையெடுத்தது. அது சர்வதேச கண்டனங்களையும் தோற்றுவித்தது. இருப்பினும் பலமான அமெரிக்க வல்லரசின் ஆதரவு காரணமாக, கொங்கோவில் நிலை கொண்டிருந்த ஐ.நா.சமாதானப் படை சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. (ஐ.நா. படை அதிகாரிகள் துட்சி இராணுவத்துடன் ஒத்துழைத்தாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.)

"பெரும்பான்மை ஹூட்டு இன மக்கள் கொங்கோ அகதி முகாம்களில் வசித்துக் கொண்டிருக்கையில், ருவான்டாவில் தங்கி விட்ட சிறுபான்மை துட்சிகளை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்தும் RPF அரசாங்கம் நீதி நெறிமுறைக்கு உட்பட்டதா?" என்ற கேள்வி சர்வதேச அரங்கில் முன் வைக்கப்பட்டது. ஆனால் சிறுபான்மையினரின் அரசாங்கம் கடந்த பத்தாண்டுகளாக நிலைத்து நிற்பதுடன், சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. சில வருடங்களுக்குப் பின்னர், கணிசமான அளவு ஹூட்டுகள் தயக்கத்துடன் தாயகம் திரும்பினர். RPF ம் இன அழிப்பில் ஈடுபட்டது என்பதும், துட்சி ஆயுததாரிகள் ஹூட்டு மக்களை கொன்றுள்ளனர் என்ற குற்றச்சாட்டும், மறுக்க முடியாத உண்மைகள். ருவான்டாவில் துட்சியின ஆதிக்கம் நிலைநாட்டப்பட்ட பின்னர், RPF அரசிற்கு ஹூட்டுகளை வேட்டையாட வேண்டிய தேவை இருக்கவில்லை. ஜனாதிபதி போல் ககாமேயின் கவனம் பின்னர் தனது இனத்திற்குள் இருக்கும் எதிரிகளை நோக்கி திரும்பியது. "இன அழிப்பில் ஈடுபட்ட கொலைகாரர்கள்" என்பது தான் தீர்த்துக் கட்டப்படும் அனைத்து எதிரிகள் மீதும் வைக்கப்படும் குற்றச்சாட்டு. கொங்கோவை தளமாகக் கொண்ட, ஹூட்டுகளின் புதிய கெரில்லா இயக்கம் ஒன்று அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவதாக அண்மைக்காலமாக கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நவீன ருவான்டாவின் வரலாற்றில் ஏகாதிபத்திய தலையீடு பல்வேறு நோக்கங்களுக்காக வெளிப்பட்டுள்ளது. இதற்காக ஏகாதிபத்தியம் தனது பிரசைகளின் உயிரையும், தேசத்தின் நன்மதிப்பையும் கூட விலையாக கொடுத்துள்ளது. காலனிய ஆதிக்கம் காலாவதியாகி, நவ-காலனிய காலகட்டம் ஆரம்பித்த நேரம், பெல்ஜியம் ருவான்டாவை பிரான்சிற்கு தத்துக் கொடுத்து விட்டிருந்தது. அந்நியக் கடன் வழங்குவதில் முதன்மையான நாடான பிரான்சின் வற்புறுத்தலுக்கு இணங்கித் தான், ருவாண்டாவின் ஹூட்டு அரசும், RPF இயக்கமும் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டன. சமாதானத்தை நிலைநாட்ட ஐ.நா.சமாதானப்படை (MINUAR) வந்தது. ஒப்பந்தம் மீறப்பட்டு, மீண்டும் யுத்தம் மூண்ட பின்னர், ஜனாதிபதி ஹபியாரிமனா கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் முகமாக, ஐ.நா.சமாதானப்படையில் பணியாற்றிய பத்து பெல்ஜிய வீரர்கள் ஹூட்டு தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு ஐ.நா. படைகள் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டன.
இனப்படுகொலைக்கு தலைமை தாங்கிய, ஹூட்டு துணைப்படையான Interahamwe க்கு பிரான்ஸ் இராணுவப் பயிற்சி வழங்கி வந்தது. இதனால் "பிரான்சிற்கும் இன அழிப்பில் பங்குண்டு" என்ற குற்றச்சாட்டை இன்றைய ருவான்டா (துட்சி) அரசு பன்னாட்டு ஊடகவியலாளரின் முன்னால் (டிசம்பர் 2008) சமர்ப்பித்தது.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, காலஞ்சென்ற பிரெஞ்சு ஜனாதிபதி மித்தரோன் உட்பட பல பெரிய தலைகள் இன அழிப்பு குற்றத்திற்காக சர்வதேச நீதிமன்றத்திற்கு முன்னால் நிறுத்தப்படுவது சாத்தியமானதல்ல. இருப்பினும் இஸ்ரேலைப் போல, ருவான்டாவும் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாகி வருவதை இது எடுத்துக் காட்டுகின்றது. மத்திய ஆப்பிரிக்காவில் இன்னொரு இஸ்ரேலை உருவாக்குவது தான் அமெரிக்காவின் நோக்கமும். இஸ்ரேல் "யூத இனப்படுகொலையை தேசிய அரசியல் சித்தாந்தமாக" கடைப்பிடிப்பதைப் போல, இன்றைய ருவான்டாவில் துட்சி இனப்படுகொலை பற்றிய நினைவுகூரல் தவிர்க்கவியலாத அம்சமாகி விட்டது. இனப்படுகொலைக்கு பலியானவர்களின் ஞாபகச் சின்னங்கள் பற்றி ஒவ்வொரு பிரசையும் அறிந்திருக்க வேண்டும். ருவான்டாவும் இஸ்ரேலைப் போலவே சர்வதேச கண்டனங்களைப் பொருட்படுத்தாது அயல்நாடுகள் மீது படையெடுக்க முடிகிறது. கொங்கோவில் கபிலாவின் தேசியவாத அரசு, சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை போட்ட கையோடு, கிழக்கெல்லையில் படையெடுத்த ருவான்டா இராணுவத்துடன் நீண்ட போருக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பேரழிவை ஏற்படுத்திய யுத்தம் கொங்கோவை அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வைத்தது. அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள் ருவான்டா இராணுவத்தை, ஆப்பிரிக்காவின் தலைசிறந்த நவீன இராணுவமாக்க பாடுபடுகின்றனர். வருங்காலத்தில் ஒரு குட்டி நாடான ருவான்டா, தன்னை சுற்றியிருக்கும் பலவீனமான பெரிய நாடுகளை பயமுறுத்தப் போகின்றது.

2004 AUGUST 13
156 கொங்கோ துட்சி அகதிகள் புருண்டியில் படுகொலை செய்யப்பட்டனர்

No comments:

Post a Comment