Monday, 30 April 2018

LEONARD WOOLF , ENGLISH MAN OF HUMANITY IN CEYLON 1880 NOVEMBER 25- 1969 AUGUST 14





LEONARD WOOLF , ENGLISH MAN OF HUMANITY
IN CEYLON 1880 NOVEMBER 25- 1969 AUGUST 14

இலங்கை போற்றும் சிவில் அதிகாரி 
'லெனார்ட் வுல்ப்' - 
என்.சரவணன்

லெனார்ட் வுல்ஃப் (Leonard Woolf – (25.11.1880 – 14.08.1969)) யாழ்ப்பாணம் (1905-1907), கண்டி (1907-1908), அம்பாந்தோட்டை (1908-1911) மாவட்டங்களில் ஆங்கிலேய சிவில் அதிகாரியாக சிவில் 1904-1912 வரையான காலப்பகுதியில் பணியாற்றியவர்.


சிவில் சேவையில் அவர் 1904 இல் இணைந்து முதல் பணியின் நிமித்தம் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். இலங்கையில் முதலில் கொழும்பு காலனித்துவ செயலகத்தில் பணியைத் தொடங்கினார். பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாண கச்சேரியில் மேலதிக திறை அரவீட்டாளராக 1905 மேயிலிருந்து பணியாற்றத் தொடங்கினார். பின்னர் 1906இல் இருந்து பொலிஸ் நீதவானாகவும் அதன் வடக்கு மாகாணத்துக்கும், மன்னார், புத்தளம் பகுதிகளுக்கும் பின் உதவி அரசாங்க அதிபராகவும் ஆணையாளராகவும் நியமிக்கப்பட்டார். 1907ஆம் ஆண்டு அவர் கண்டியில் மத்திய மாகாணத்துக்கான உதவி அரசாங்க அதிபராக மாற்றலானார். ஓகஸ்ட் 1908இலிருந்து 1911 இங்கிலாந்துக்கு திரும்பும் வரை அவர் அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கான உதவி அரசாங்க அதிபராகவும், மாவட்ட நீதவானாகவும் நியமிக்கப்பட்டார். 

அவர் மாற்றலாகிப் 1200 சதுர பரப்புள்ள ஹம்பாந்தோட்டைக்கு அரசாங்க அதிபராக மாற்றலாகிப் போன போது அந்த மாவட்டத்தின் அரைவாசி பகுதி காடுகளால் ஆனதாகவும் அதே வேளை இலங்கையிலேயே அதிக வரட்சியுடைய மாவட்டமாகவும் அது இருந்தது. மிகவும் நலிந்து போயிருந்த விவசாயத்தை தூக்கி நிறுத்துவதில் அவரது பங்களிப்பையும் நிறையவே இன்றும் பிரஸ்தாபிக்கிறார்கள். அவர் இலங்கையர்களைப் பற்றி போதுமான அறிவைப் பெறுவதற்காக யாழ்ப்பாணத்தில் தமிழையும், கண்டியில் சிங்களத்தையும் ஆர்வமுடம் கற்றார். இதே காலத்தில் தான் இலங்கையில் பௌத்த மறுமலர்ச்சிப் பணிகளும் பிரம்மஞான சங்கத்தின் நடவடிக்கைகளும் பரவலாகின. லெனார்ட் பிறப்பால் கத்தோலிக்கராக இருந்தபோதும் தன்னை ஒரு நாத்திகராகவே வளர்த்துகொண்டார். ஆனால் இலங்கையில் அவர் பௌத்தத்தின் பால் கவரப்பட்டார். அதே காலத்தில் அனகாரிக்க தர்மபாலாவின் தீவிர பௌத்த போக்கு அவரை பௌத்தமத போக்கிலிருந்து தள்ளிநிற்கவே செய்தது. அவர் முதலாளித்துவம், தேசியவாதம், வகுப்புவாதம் என்பவற்றிலிருந்து தள்ளியே நின்றார் என்கிறார் அனுபமா மோகன். 

காட்டிலொரு கிராமம் “பெத்தேகம” திரைப்படமானது


இலங்கையில் தமிழ், சிங்கள இரு சமூகங்களிலும் நிலவிய சாதி அமைப்புமுறை லெனார்டை ஆச்சரியப்படுத்தியது. இலங்கைப் பற்றிய அவரது பல எழுத்துக்களில் சாதியத்தை அவர் குறிப்பிடாமல் இருந்ததில்லை. 1913 ஆம் ஆண்டு லெனார்ட் எழுதிய “The Village in the Jungle” (காட்டிலொரு கிராமம்) என்கிற நூல் மிகவும் பிரசித்தி பெற்றது. அவர் எழுதிய முதல் நூலும் அது தான். ஆங்கிலேயர் ஒருவரால் இலங்கையின் வாழ்க்கை முறையையும், அங்கு நிலவிய சாதிய சிக்கல்களையும் பற்றி விபரிக்கும் முக்கிய நூலாக கொள்ளப்படுகிறது. உலகில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

சிங்களத்திலும் ஏ.பீ.குணரத்ன என்பவரால் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பின்னர் லெஸ்டஸ் ஜேம்ஸ் பீரிஸ் இந்த நாவலால் கவரப்பட்டு “பெத்தேகம” (Beddegama)என்கிற பெயரில் எடுத்த திரைப்படம் 1981இல் வெளியானது. லெனார்ட்டின் நாவலில் வரும் பிரதான கிராமத்தின் பெயரே “பெத்தேகம”.  தென்னிலங்கை சிங்கள குக்கிராமமொன்றில் நிலவிய சாதியச் சூழலை அடிப்படையாக வைத்து சிலிந்து என்கிற பாத்திரத்தைச் சுற்றிக் கட்டப்பட்ட கதைக் கரு மையமாகக் கொண்டு பின்னப்பட்ட அற்புதமான நாவல் அது. இனத்துவம், சாதியம், நிலப்பிரபுத்துவம், காலனித்துவம், போன்ற விடயங்களும் அழகாக உள்ளபடி கையாளப்பட்டிருக்கும் இந்த கதையில்..  முன்னாள் ஜனாதிபதி கணவரும் பிரபல நடிகருமான விஜய குமாரணதுங்க, ஜோ அபேவிக்கிரம, மாலினி பொன்சேகா போன்றோர் பிரதான பாத்திரமற்று நடித்த திரைப்படம் அது. பிரபல அறிவியல் கண்டுபிடிப்பாளரும், புதின எழுத்தாளருமான சேர் ஆர்தர் சி.கிளார்க்  இந்த திரைப்படத்தில் லெனார்ட் வுல்பின் பாத்திரத்தில் நடித்திருந்தது கவனிக்கத்தகது. லெனார்ட் நீதிபதியாக கடமையாற்றிய அதே அம்பாந்தோட்டை நீதிமன்ற அறையில் வைத்துத் தான் படத்தில் ஆர்தர் சீ கிளார்க்கின் சில காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தன. பல சர்வதேச விருதுகளையும் குவித்தது அந்த திரைப்படம். இலங்கையின் சிங்கள புனைகதை நாவல் இலக்கியமாக பிரதான இரண்டைக் குறிப்பிடுவதாயின் மார்ட்டின் விக்கிரமசிங்க எழுதிய “கம்பெரலிய”வையும் லெனார்ட்டின் இந்த “காட்டிலொரு கிராமம்” என்கிற நாவலையும் தான் குறிப்பிட முடியும்.

இலங்கையில் சிங்களத்தை அரச கரும மொழியாக ஆக்கவேண்டும் என்று 25.04.1944 அன்று ஜே.ஆர்.ஜெயவர்தன உரையாற்றிய வேளை லெனார்ட்டின் “காட்டிலொரு கிராமம்” நாவலில் வரும் ஒரு காட்சியைப் பற்றியும் அரச சபையில் பேசினார்.


ஒரு கிராமத்தவன் குற்றம் சுமத்தப்பட்டு நீதவானின் முன்னால் நிறுத்தப்படுகிறான். விசாரணை முடிவில் 6 மாதகால சிறைத்தண்டனையும் விதிக்கபடுகிறது. குற்றம் சுமத்தப்பட்டவனுக்கோ விசாரணையும் புரியவில்லை, தீர்ப்பும் புரியவில்லை. அவனுக்கு புரியாத மொழியிலேயே (ஆங்கிலத்தில்) அத்தனையும் நிகழ்ந்து முடிகிறது. சிறையில் இருக்கும் போது தான் எதற்காக சிறையில் தள்ளப்பட்டிருக்கிறேன் என்பதைக் கூட புரியாமல் முழிக்கிறான்.”

ஜே.ஆரின் இந்த உதாரணத்தை அப்படியே திருப்பி தமிழுக்கும் இந்த கதி தானே என்று தனது நூலில் விமசிக்கிறார் ஹன்டி பேரின்பநாயகம். 



லெனார்ட் இலங்கை மக்களின் வாழ்க்கை முறை பற்றி 1921 இல் வெளியான இன்னொரு நூல் “கிழக்கிலிருந்து கதைகள்” (Stories of the East). இந்த நூலில் வெளியான மூன்று சிறு கதைகள் “நிலவொளி சொன்ன கதை” (A Tale Told by Moonlight), “முத்துக்களும் பன்றியும்” (Pearls and Swine), “இரு பிராமணர்கள்” (The Two Brahmans) இலங்கையைக் கதைக்களங்களாகக் கொண்ட கதைகள். இதில் “இரு பிராமணர்கள்” என்கிற சிறுகதை யாழ்ப்பாண சமூகத்து சாதியத்தையும், சீதனத்தையும் சாடும் சிறுகதை. அதில் பிராமணர், முக்குவர், அம்பட்டர், கரையார் போன்ற சாதியினர் குறிப்பிடப்படுகின்றனர். “நிலவொளி சொன்ன கதை” ஒரு ஆங்கிலேய எழுத்தாளருக்கும் சிங்கள பாலியல் தொழிலாளிக்கும் இடையில் நிகழும் உறவு பற்றிய கதை. “முத்துக்களும் பன்றியும்” என்கிற கதையானது ஏகாதிபத்தியத்தை விளக்குகின்ற கதையாக அமைகிறது.

இந்த மூன்று சிறுகதைகளையும் 1962 இல் வெளியான “இலங்கை நாட்குறிப்பு” (Diaries in Ceylon 1908-1911) என்கிற நூலின் இறுதியில் மீள இடம்பெறச் செய்திருந்தார். அவர் ஹம்பாந்தோட்டையில் நீதிபதியாக பணியாற்றிய காலத்தில் அவர் எழுதி வைத்த குறிப்புகளையும், தீர்ப்புகளையும் ஆதாரமாகக் கொண்டு  பிரபாத் டி சில்வா எழுதிய “இலங்கையில் நீதிபதியாக லெனார்ட் வுல்ஃப்”  (“Leonord woolf as a judge in Ceylon” M. C. W. Prabhath de Silva) என்கிற நூலும் ஏராளமான தகவல்களைக் கொண்டது.


லெனார்ட் 1960 இல் அவரது பிறப்பிலிருந்து 1904 வரையான இங்கிலாந்து வாழ்க்கையைப் பற்றிய சுயசரிதை நூலை எழுதினார் அதற்கு “Sowing” (விதைத்தல்) என்று பெயரிட்டார்.  அதன் பின்னர் 1961இல் “Growing” (வளர்ச்சி) என்கிற பெயரில் சுயசரிதையானது இலங்கையில் அவர் வாழ்ந்த 1904-19011 காலத்தைப் பற்றி எழுதிய சுயசரிதை. இந்த நூலும் சிங்களம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. இலங்கை பற்றி ஆராயும் பலரும் இவரின் இந்த நூல்களைக் கையாண்டு வருகின்றனர். 1969 வரையான எஞ்சிய காலத்தைப் பற்றியும் இரு நூல்கள் அதன் பின்னர் வெளிவந்துள்ளன. அவரது ஐந்து சுயசரிதை நூலின் பக்கங்களும் சேர்த்து 1100 பக்கங்கள் ஆகிறது. இறுதியான இலங்கை வருகை பற்றிய விடயத்தையும் உள்ளடக்கிய அவரது ஐந்தாவது சுயசரிதை நூலை (The Journey not the arrival matters) முடித்துவிட்டு எழுத்துப் பிழை சரிபார்த்து முடியாத நிலையில் தான் லெனார்ட் வுல்பை மரணம் தழுவிக் கொண்டது. அவர் இறந்து இரண்டு மாதங்களின் பின் அது வெளிவந்தது. 20 முக்கிய நூல்களையும் 5 சுயசரிதை நூல்களையும் அவர் வெளியிட்டிருந்தார்.

28.08.1908 – 20.05.1911 வரையான காலப்பகுதியில் அவர் அம்பாந்தோட்டை அரசாங்க அதிபராக பணிபுரிந்த காலத்தில் சிங்கள சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் கிடைத்த தொடர்பும், அனுபவமும் அவருக்கு அச்சமூகம் பற்றிய ஆழமான அறிவைக் கொடுத்திருந்தது.

இலங்கையில் இருந்து நாடு திரும்பியதன் பின்னர் அவர் ஒரு சமூக, அரசியல் ஆய்வாளராகவும், சிந்தனையாளராகவும், பதிப்பாளராகவும் உலகளவில் பிரபல்யமானார். காலனித்துவத்துக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் எதிரான கருத்து நிலை இலங்கையில் இருக்கும் போது லெனார்ட்டுக்கு வளர்ந்து வளர்ந்திருந்தது. அப்போதே உலக காப்பரேட்டுக்களின் வளர்ச்சி எவ்வாறு நவ காலனித்துவ நிலையைத் தோற்றுவிக்கும் என்கிற ஆய்வை நூலாக வெளிக்கொணர்ந்தார்.

அரை நூற்றாண்டுக்குப் பின் செய்த விஜயம்

1960ஆம் ஆண்டு பெப்ரவரி 16 அன்று அவர் கிட்டத்தட்ட 50 மீண்டும் இலங்கையில் அவரது நினைவுகளை மீட்க வந்தார் வந்தார். அப்போது அவரது வயது 81ஐக் கடந்திருந்தது. அவரை அன்றைய பிரதமர் டபிள்யு தஹாநாயக்கவும், கவர்னர் ஜெனரல் சேர் ஒலிவர் குணதிலக்கவும் உத்தியோகபூர்வமாக வரவேற்பளித்தார்கள். உடல் சற்று தளர்ந்த நிலையில் ஒரு உதவியாளரையும் கூடவே அழைத்து வந்திருந்தார்.  தான் பணியாற்றிய இடங்களுக்கும், தான் சுற்றித் திறந்த இடங்களுக்கும் சென்று மாற்றங்களைக் கண்டார். அவர் விருப்பப்படி அவர் சுற்றித் திரிவதற்கு தேவையான வசதிகளுடன் சில அதிகாரிகளையும் அனுப்பியவர் அன்றைய அம்பாந்தோட்டை அரசாங்க ஆதிபராக இருந்த சங்கரபிள்ளை கதிர்காமநாதன் என்பவர்.  அவரது விஜயத்தின் போது அவர் கூடவே அவருடன் சுற்றித் திருந்து குறிப்புகளை எடுத்தவர் பிரபல சிங்கள பத்திரிகையாளர் விஜேசிங்க பெலிகல்ல என்பவர். லெனார்ட்டுடன் பயணித்த அவருடன் பகிர்ந்தவற்றை அன்றைய லேக் ஹவுஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட “ஜனதா” என்கிற பத்திரிகையில் தொடராக எழதி வெளியிட்டார். பின்னர் 30 வருடங்களின் பின்னர் 1992இல் அந்த கட்டுரைத் தொகுப்பாக அவருக்கு விருது வழங்கப்பட்டது.  1995ஆம் ஆண்டு அந்த தொகுப்பு “லெனார்ட் வுல்புடனான பயணம்” என்கிற தலைப்பில் நூலாக வெளிவந்தது. அதன் பின்னர் 2005இல்  “லெனார்ட் வுல்பின் கண்டி வகிபாகம்” (ලෙනාර්ඩ් වුල්ෆ්ගේ මහනුවර භූමිකාව) என்கிற பெயரில் இன்னொரு நூலையும் அவர் வெளியிட்டார். அந்த நூலில் உள்ள சில சுவாரஷ்யமான சில தகவல்களைத் தருகிறேன்.

“50 வருடங்கள் என்பது அரை நூற்றாண்டு. இந்த அரை நூற்றாண்டில் அம்பாந்தோட்டையில் எந்த முன்னேற்றத்தையும் காண முடியவில்லை. 800 ஏக்கரைக் கொண்ட  புந்தல பகுதி சிறந்த உப்பளமாக ஆக்கியிருக்கலாமே ஏன் இன்னமும் அப்படியே இருக்கிறது ஏன்  என்று அவர் கேட்ட போது அருகில் இருந்த சிவில் அதிகாரி “புந்தல, நெதிங்வில பிரதேசங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் வாழும் இடமாகத் தானே அழைக்கப்படுகிறது ஐயா, அரச சபையில் இருக்கும் நிலப்பிரபுத்துவ தலைவர்கள் இவற்றைச் செய்ய தயாரில்லை”

“புத்தர் சாதியத்துக்கு எதிராக உபதேசம் செய்தவர். ஆனால் பௌத்த இலங்கை சாதியத்தால் பிளவுற்றிருக்கிறது. வடக்கிலும் மோசமான சாதிய ஒடுக்குமுறை நிலவுகிறது. கோவிலுக்குள் நுழைய கூட தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதியில்லை. நான் யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய போது பெரும் சர்ச்சைகளே உருவாகியிருந்தது.

இது போன்ற நிலப்பிரபுக்களால் தான் ரொபர்ட் பிரவுன்றிக் கண்டியை கைப்பற்றினார். பிலிமத்தலாவ, மடுகல்லே, எஹெலபொல போன்ற பிரபுக்கள் தான் கண்டி ராஜ்ஜியத்தைக் காட்டிக் கொடுத்தார்கள்.

நான் கண்டியில் பணியாற்றிய காலத்தில் கண்டிய நிலப்பிரபுக்களிடம் அடிமைபோல சேவகம் புரிந்த பலர் குனிந்து கும்பிடு போட்டுக்கொண்டே உள்ளே வருவதைக் கண்டிருக்கிறேன். வடக்கிலும் முதலி, முகாந்திரம் மார்களின் போக்கையும் நான் அறிவேன். நான் சிவில் பணியில் இருந்து ஓய்வு பெற்றதே இது போன்ற விடயங்களை சுதந்திரமாக உலகத்துக்கு வெளியிடுவதர்காகத்தான். இந்த 50 வருடங்களாக தைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்.” என்று கூறியவர் இன்னொரு சந்தர்ப்பத்தில் “1956இல் சிங்களத்தை அரச கரும மொழியாக ஆக்கிவிட்டார்கள் அல்லவா” என்று கேட்டிருக்கிறார்.  தொடர்ந்தும் அவர் பேசிக்கொண்டிருந்த போது,

அது பற்றி இங்கிலாந்தில் வெளியான சில பத்திரிகைகள் “இலங்கையால் இனி மீள முடியாது”, “சிங்களத்தை 24 மணி நேரத்தில் அரச மொழியாக ஆக்குவதை விட இன்னொரு அரசியல் தற்கொலை இருக்க முடியாது”. “பதவியைக் கைப்பற்ற சிறந்த ஏணி”, “மொழி ஏணி வசதியாக இருந்தாலும் ஏற முடியாது”, மொழியையும், மதத்தையும் பிரயோகித்து அதிகாரத்துக்கு வரத் துடிக்கும் மகா முதலியின் ஒக்ஸ்போர்ட் புத்திரன்” என்று எழுதின.”

“நான் இலங்கையின் மீது மிகுந்த அக்கறையானவன். இலங்கை பற்றிய செய்திகளை ஆரம்பத்திலிருந்தே சேகரித்து வந்தேன். நான் எழுதியவற்றுக்கு அவற்றைப் பயன்படுத்தியிருக்கிறேன். இலங்கையோடு தொடர்புற்ற பல பிரமுகர்களுடன் நான் தொடர்பிலிருந்தேன். கடிதப் பரிமாற்றங்களையும் செய்து வந்தேன்.

“பொன்னம்பலம் சகோதர்களை இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருந்த காலத்திலிருந்தே நான் அறிவேன். பொன்னம்பலம் அருணாச்சலம், ராமநாதன் போன்ற இலங்கைத் தமிழ் கல்விமான்களால் தான் நான் யாழ்ப்பாணத்தில் சேவையாற்ற ஆர்வம் கொண்டேன். அவர்கள் சிறந்த மனிதர்கள் என்று கூற முடியும். அது போல ஆனந்த குமாரசுவாமியும் எனது நட்புக்குரியவர். இலங்கையின் வடபகுதி தமிழ் குடும்பங்களிலிருந்து உலகின் சிறந்த கல்விமான்கள் உருவாகியிருக்கிறார்கள். பொன்னம்பலம் சகோதரர்களின் மாமனார் சேர் முத்துகுமாரசுவாமி லண்டனிலும், பாரிசிலும் மிகவும் அறியப்பட்ட பிரமுகராக அறியப்பட்டிருந்தார். ஆனந்த குமார சுவாமி என்னைப் போன்றே பின்னர் தன்னை பல எழுத்துப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டார்.. என் காலத்தைச் சேர்ந்த இவர்களில் பலரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். அவர்கள் இனவாத ரீதியில் நடந்துகொண்டதில்லை. சிறந்த இலங்கையர்களாக இருந்திருக்கிறார்கள். அரசியல், கலை, இலக்கியம் போன்றவற்றை அவர்கள் இலங்கையர்களாக போது லட்சியத்துடன் வெளியுலகுக்கு எடுத்துச் சென்றார்கள். நான் இதனைக் கூறுவது ஏனென்றால் 1956இல் இலங்கையில் அரச மொழியாக சிங்களத்தை சட்டமாகியதன் மூலம் இலங்கையின் சுதந்திரத்துக்காக போராடிய சிரேஷ்ட இனமொன்றுக்கு தெரிந்தே செய்த அநியாயம் என்பதை சுட்டிக் காட்டத்தான்.” என்றார்.

“எனது 8 வருடகால சேவையின் போது அதிர்ஷ்டவசமாக வடக்கிலும், மத்திய பகுதியிலும், தெற்கிலும் கடமையாடியிருக்கிறேன். என்னால் முழு இலங்கையையும் காண முடிந்தது."

இப்போதெல்லாம் அம்பாந்தோட்டை துறைமுகம் பற்றி நிறையவே பேசப்படுகிறது. சிங்களக் கட்டுரைகள் பலவற்றில் லெனார்ட் வுல்ஃப் பற்றியும் பிரஸ்தாபிக்கிறார்கள். மேற்படி நூலில் அம்பாந்தோட்டை துறைமுகம் பற்றி லெனார்ட் வுல்ஃப் கூறியது.

அம்பாந்தோட்டையில் பணியாற்றிய சக அதிகாரிகளுடன் லெனார்ட் வுல்ப்

“1910 இல் அம்பாந்தோட்டையில் ஒரு துறைமுகத்தின் அவசியத்தைப் பற்றி பரிந்துரைத்தேன். எங்கள் காலத்தில் கொலும்பில் இருந்து வரும் பொருட்கள் கப்பலின் மூலம் தான் வந்து சேர்ந்தன. அது மலிவும், இலகுவும்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை முழுமையாக கட்டியமைப்பதற்கான வாய்ப்புகளையும், தேவையையும், அதற்கான திட்டத்தையும் ஒரு அறிக்கையாக அனுப்பியது பற்றிய விபரமாக அவர் விளக்கியதையும் அந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

அவரை அழைத்துச் சென்ற வருவாய் அதிகாரி விதானாச்சியிடம் சதா குறிப்புகளை எடுத்துக் கொண்டிருக்கும் இந்த இளைஞன் யார் என்று அந்த நூலின் ஆசிரியர் விஜேசிங்க பெலிகல்லவைப் பார்த்து கேட்ட போது இவர் எனக்கு உதவியாக இருக்கும் நண்பர் எனது பிரதேசமான தங்கல்ல பகுதியின் நிருபராக இருக்கிறார் என்றது, விஜேசிங்கவைப் பார்த்து லெனார்ட் “ஹா... ஹா... அப்படியா? சரி அப்படியென்றால் நான் சில ஆலோசனைகளைச் சொல்கிறேன்” என்று கூறி,

“எழுத கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் முதலில் பத்திரிகை ஒன்றுடன் தொடர்புற வேண்டும். பத்திரிகையின் மூலம் தான் திறமையானவர்கள் உருவாகிறார்கள். நானும் ஒரு பத்திரிகையாளனாக தொடங்கியிருக்க வேண்டும். இலகையில் இருந்து சென்றதும் நான் எழுத ஆரம்பித்து விட்டேன். ஆனால் அது உடனடி வெற்றியைத் தரவில்லை. முதலில் “விலேஜ் இன் த ஜங்கிள்” நூலை எழுதி வெளியிட்டேன். ஆனால் இங்கிலாந்தில் எனது நூலை கண்டுகொள்ளவில்லை. எழுதுபவர்கள் முதலில் ஒரு பத்திரியுடன் தொடர்புகொண்டிருக்க வேண்டியதன் மிகவும் அவசியம். வாசகர்களிடம் செல்வதற்கான சரியான குறுக்கு வழி அது தான். மக்கள் புதுமையை விரும்புபவர்கள். எழுத்தாளனாக வேண்டுமெனில் முதலில் சிறந்த பத்திரிகையாளனாக வேண்டும் என்பதை எனக்கு ஹியு கிளிப்பர்ட் தான் முதலில் அறிவுறுத்தினார்...."

நான் இலங்கையை விட்டுச் சென்றதே எனது வாழ்நாள் காலம் முழுவதும் எழுத வேண்டும் எனும் குறிக்கோளுடன் தான். ”

என்று கூறுகிறார் அவர்.. விஜேசிங்க பெலிகல்லவின் நூலில் லெனார்ட் கூறிய ஒரு விடயம் இது.

“அம்பாந்தோட்டையில் இருந்த தாழ்த்தப்பட்ட பெண்கள் தமது மார்பை மறைக்க மேலாடை அணிய வழிவிடும்படி என்னிடம் கேட்டார்கள். சிகப்பு ஓரத்தைக் கொண்ட மார்புக் கச்சையை அணியும்படி நான் ஆணையிட்டபோது உயர் சாதியினர் அதற்கும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அது தான் நிலைமை. மேலாடை இன்றி அரைகுறையுடன் ஒரு சமூகத்தை வைத்திருப்பது அநாகரிகமானது. கண்டிப் பகுதியிலும், கரையோரப் பகுதிகளிலும் தாழ்த்தப்பட்ட ஆண்கள் ஒரு பனியனைக் கூட அணிவது மறுக்கப்பட்டிப்பது வேதனைக்குரியது”
இந்த நிகழ்ச்சி பற்றி சற்று விரிவாக அவரது அம்பாந்தோட்டை நாட்குறிப்பில் 07.09.1909 அன்று நிகழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார்.

ஹம்பாந்தோட்டையில் பணியாற்றிய காலத்தில் கச்சேரிக்கோ, நீதிமன்றத்துக்கோ வருபவர்களை அவர்கள் எந்த பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர்களின் உருவ அமைப்பில் இருந்து அடையாளம் காணும் அளவுக்கு நான் ஆற்றலையும் அனுபவத்தையும் பெற்றிருந்தேன் என்கிறார் தனது "Growing" நூலில்.

யாழ் சாதியத்தால் துரத்தப்பட்ட லெனார்ட்
யாழ்ப்பாணத்தில் அவர் இரண்டரை வருடங்கள் பணிபுரிந்த காலத்தில் யாழ் மக்கள் அவரை வெறுத்தார்கள். சாதித் திமிர் அதிகமாக வேர் கொண்டிருந்த யாழ்ப்பாணத்தில் லெனார்ட் வுல்ஃப் (Leonard Woolf) யாழ்ப்பாணத்தில் அரசாங்க அதிபராகப் பணியாற்றிய போதும் அவர் அங்கிருந்த யாழ் வெள்ளாள எதிர்ப்பின் காரணமாகத் தான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற வேண்டி நேரிட்டது. லெனார்ட் நேர்மையானவர் மட்டுமல்ல தொழிலில் கண்டிப்பானவரும். அதற்கான சான்றுகள் பலவற்றை அவரது நாட்குறிப்புகளில் காணலாம்.

யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்த காலத்தில்
யாழ்ப்பாண தமிழ் சங்கம் தமது உறுப்பினர் ஒருவரை அறைந்ததாக பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி அவரை துரத்த முயற்சித்தது.

ஒரு நாள் யாழ்ப்பாணக் கச்சேரியில் பிராமண சாதியைச் சேர்ந்த கிளாக்கர் ஒருவர் ஏற்கெனவே எச்சில் துப்ப வேண்டாம் என்று அறிவித்தல் பலகை போடப்பட்டிருந்தும் உதாசீனம் செய்தபடி வரவேற்பறைத் தரையில் எச்சில் துப்பி அசுத்தப்படுத்திவிட்டதைப் பார்த்த லெனார்ட் அவரையே தரையைச் சுத்தப்படுத்துமாறு கண்டிப்புடன் பணித்துவிட்டார். அங்கு தாழ்த்தப்பட்டவர்கள் மத்தியில் அவரே தரையைச் சுத்தப்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டதையிட்டு தனக்கு பெரிய அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாகக் கருதினார். இந்த விவகாரம் அன்றைய ஆளுநர் வரை கொண்டு செல்லப்பட்டது. ஆளுநர் முன் அவர் தன்னினை விளக்கமளிக்க நேரிட்டது. அதுபோல சிலர் தமது பணியில் ஒழுக்கமின்மை காரணமாக பணி நீக்கத்தையும் செய்திருக்கிறார். வுல்பின் இத்தகைய கண்டிப்பான நடவடிக்கைகளால் அவர் யாழ்ப்பாணத்தில் நிலைக்க முடியவில்லை. அவர் யாழ்ப்பாணத்தவர்களைப் பற்றி சிறப்பாக தனது குறிப்புக்களில் எழுதவுமில்லை

ஆனால் தான் தன்னை ஒரு ஏகாதிபத்தியவாதி என்பதை யாழ்ப்பாணத்தில் தான் அடையாளம் கண்டதையும் சுயவிமர்சனம் செய்துகொள்கிறார் லெனார்ட் தனது நாட்குறிப்பில்.
“முதலில் ஒரு அரசியல் அப்பாவியாக இருந்தேன். பின்னர் நான் என்னை அடையாளம் கண்டுகொண்டேன். எனது நிலையானது ஒரு சாம்ராஜ்ஜிய உருவாக்கத்தை மேற்கொள்பவனாகவும் ஏகாதிபத்தியவாதியாகவும் இருக்கிறேன் என்பதை உணர்ந்துகொண்டேன். ஆரம்பத்தில் அதை நான் விரும்பியேற்றிருந்தேன். ஆனால் பின்னர் நான் காலனித்துவத்தையும், ஏகாதிபத்தியத்தையும் எதிர்ப்பவனாக ஆனேன்.” என்கிறார்.
மன்னாரில் ஆழ்கடல் முத்துக்குளிப்புக்கான அனுமதியை 15.02.1906 அன்று லெனார்ட் வழங்கிய போது முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிய நாட்டவர்கள் வந்தார்கள் என்றும் 4000 அரேபியர்களும் 4000 தென் இந்தியர்க்களுமாக 473 படகுகள் வந்ததாக குறிப்பிடுகிறார்.

இலங்கைக்கு “சமஷ்டி” சிபாரிசு
1915 கண்டியில் நிகழ்ந்த சிங்கள – முஸ்லிம் கலவரத்தைத் தொடர்ந்து அது பற்றிய விசாரணைகளை நடத்தும்படி கோரி 1916இல் லண்டன் வந்த தூதுக்குழுவினர் லெனார்டையும் சந்தித்தார்கள். அவர் ஆங்கிலேயர்கள் அங்கு நடத்திய அடக்குமுறையை எதிர்த்து கண்டித்ததுடன் அந்த இலங்கைத் தூதுக்குழுவுக்கும் உதவிகளை செய்தார். முதலாவது உலக யுத்த காலத்தில் தொழிற் கட்சியின் சர்வதேச மற்றும் குடியேறவாத விடயங்கள் சம்பந்தமாக ஆலோசனைக் குழுக்களின் செயலாளராகவும் இருந்துள்ளார்  தொழிற் கட்சி அதற்கான பாராளுமன்ற ஆலோசனைக் கொமிட்டி ஒன்றை உருவாக்கி இருந்தது. ஏறத்தாள 25 வருடங்கள் அந்த கொமிட்டிக்கு தலைமை தாங்கினார் லெனார்ட். பிரிட்டிஷ் இடதுசாரிகள் இது தொடர்பில் தமது மூலோபாய நிலைப்பாடுகளை எடுப்பதில் லெனார்ட் முக்கிய பாத்திரமற்றினார். தொழிற்கட்சியின் இலங்கைக்கான நிபுணராக அவர் இயங்கினார். இலங்கை மட்டுமல்ல இந்தியா தொடர்பிலும் அந்த கொமிட்டியின் மூலம் பல அரசியல் அழுத்தங்களை தொழிற்கட்சிக்கு ஊடாக அவர் பிரயோகித்தார். 1926ஆம் ஆண்டு இலங்கையர் கோரும் சுயாட்சியை வழங்க வேண்டும் என்று ஆலோசனைக் கொமிட்டிக்கு ஊடாக பரிந்துரைத்தார்.


1938இல் அவர் இலங்கைத்தீவுக்கு சுவிஸ் பாணியிலான சமஷ்டித் தீர்வே பொருத்தமானது என்றும் இரு பிரதான இனங்களுக்கும் இடையிலான சிக்கலை  சரிசெய்ய அதுவே சிறந்த வழிமுறை என்றும் இங்கிலாந்தில் தொழிற்கட்சிக்கு விரிவாக பரிந்துரைத்தார். தொழிற்கட்சியின் கொள்கைவகுப்பு விடயத்தில் தலையாய பாத்திரத்தை வகித்த லெனார்ட்டால் முன் வைக்கப்பட்ட சமஷ்டித் தீர்வு யோசனை ஏன் இறுதியில் கிடப்பில் போடப்பட்டது என்று வினவுகிறார் இலங்கைக்கான முன்னாள் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையகத்தின் இலங்கைக்கான பிரதிநிதி வில்லியம் கிளாரன்ஸ் தனது கட்டுரையொன்றில்.

பிரித்தானியாவில் தொழிற்கட்சி 1945இல் பதவியேற்றிருந்த காலத்தில் தான் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது என்பதும் கவனிக்கத்தக்கது. 

மனைவி வேர்ஜினியாவின் தற்கொலை


லெனார்ட் 1912ஆம் ஆண்டு பிரபல எழுத்தாளரான வேர்ஜினியாவை (Adeline Virginia Woolf (25.01.1882 – 28.03.1941) மணமுடித்தார். இருவரும் சேர்ந்து ஹோகார்த் (Hogarth Press) என்கிற பதிப்பகத்தை 1917 ஆம் ஆண்டு உருவாக்கி அதன் மூலம் பல நூல்களை வெளிக்கொணர்ந்தார்கள். வேர்ஜினியாவும் லெனார்டும் கையால் இயக்கப்படும் ஒரு சிறிய அச்சியந்திரம் ஒன்றை வாங்கி அந்த அச்சகத்தை நிறுவினர். 1917-1946 காலப்பகுதிக்குள் மாத்திரம் 527 தலைப்புகளில் நூல்களை வெளியிட்டது அந்த பதிப்பகம் வேர்ஜினியா 20ம் நூற்றாண்டின் நவீனத்துவ எழுத்தாளர்களுள் மிக முக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார். பல கட்டுரைகளையும் நாவல்களையும், சிறுகதைத் தொகுப்புகளையும், பலரது சுயசரிதைகளையும் எழுதியவர் வேர்ஜினியா. வேர்ஜினியா கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த வேளை தனது நேரத்தில் பெரும்பகுதியை அவருக்காகவே செலவு செய்தார்.





வேர்ஜினியா அதிக மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தத்தில் இருந்து தன்னால் மீள முடியவில்லை என்றும் கணவர் லெனார்ட்டுக்கு உருக்கமான கடிதத்தை எழுதி வைத்து விட்டு 18.04.1941 அன்று வீட்டுக்கருகாமையில் உள்ள ஆற்றில் தான் அணிந்திருந்த மேற்கோர்ட்டில் ஏராளமான கற்களை செருகிக்கொண்டு சென்று விழுந்து அமிழ்ந்து தற்கொலை செய்து கொண்டார். 29  வருட கால வேர்ஜினியா – லெனார்ட் இல்லற வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அதற்கு முன்னர் பல தடவைகள் வேர்ஜினியா தற்கொலைக்கு முயன்றவர். அவரது தற்கொலை பற்றியே பல நூல்களும், பல கோணங்களில் ஆராயப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் ஏராளமாக வெளிவந்துள்ளன. வேர்ஜினியா தனது தாயின் இரண்டாவது கணவரின் புதல்வர்கள் இருவரால் (அரைச் சகோதரர்களால்) சிறுவயதில் (6-7 வயதிருக்கும் போதே)  பல வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியிருந்தது பற்றி வேர்ஜினியா வெளியிட்டிருந்த கருத்துக்களையும் இத்தகைய ஆய்வுகளுக்கு பயன்படுத்தினர்.  வேர்ஜினியா வுல்ஃப்பின் கதையை வைத்து 2002 ஆண்டு வெளியான “மணித்தியாலங்கள்” (The Hours) என்கிற திரைப்படம் 9 ஒஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு வேர்ஜினியாவாக நடித்த நிகோல் கிட்மன் சிறந்த நடிகையாக ஒஸ்கார் விருது பெற்றார்.


லெனார்ட் வுல்ஃப்பும் 1908 பெப்ரவரி மாதம் இலங்கையில் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார் என்று அவர் ஸ்ட்ராச்சி (G.F.Strachey) என்கிற நண்பருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் என்பது இன்னொரு உப குறிப்பு. 


வேர்ஜினியா 1927 இல் எழுதிய நாவல்களில் “To the lighthouse” (கலங்கரை விளக்கத்துக்கு”) என்கிற நாவல் 20ஆம் நூற்றாண்டின் தரம்வாய்ந்த 100 நாவல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 1926இல் அவர் புத்தகம் வாசிப்பது எப்படி? (How Should One Read a Book?) என்கிற தலைப்பில் எழுதிய சுவாரஸ்யமான கட்டுரை இன்றும் பலரால் கொண்டாடப்படும் கட்டுரைகளில் ஒன்று.

இத்தனைக்கும் உலகப் புகழ் பெற்ற நவீன மனநல மருத்துவத்தின் தந்தை என்று கொண்டாடப்படும் சிக்மண்ட் பிராய்டின் நேரடி நட்பில் இருந்தவர் வேர்ஜினியா.  அந்த நேரத்தில் பிராய்டின் பல உளவியல் நூல்களை வெளியிட்டதே லெனார்ட் – வேர்ஜினியா ஆகியோர் நடத்திய ஹோகார்த் பதிப்பகம் தான். ஜேர்மன் நாசிகளால் பிராய்டின் நூல்கள்  தேடித்தேடி எரிக்கப்பட்ட வேளையில் ஹோகார்த் பதிப்பகம் தொடர்ச்சியாக பிராய்டின் நூல்களையும் உளவியல் திறனாய்வு (Psycho-Analysis) என்கிற சஞ்சிகையையும் தொடர்ச்சியாக வெளியிட்டது. லெனார்ட் கூட உளவியல் பற்றிய கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியிருக்கிறார்.


லெனார்ட் வுல்பும் வேர்ஜினியாவும்
வேர்ஜினியாவின் இறப்பின் பின்னர் லெனார்ட் தனது நண்பனின் சகோதரியும் புலமையாளருமான ட்ரெக்கியுடன்  (Trekkie) நீண்ட கால காதல் உறவுடன் வாழ்ந்து வந்தார்கள். அவரது கணவரும் ஒரு கட்டத்தில் அந்த உறவை ஏற்றுக்கொண்டிருந்தார். அவர்களுக்கு இடையில் பாலியலுறவு இருக்கவில்லை. ஆனால் இருவருடனும் ட்ரெக்கி வாழ்ந்து வந்தார். இது பற்றிய விபரங்களை “வேர்ஜினியாவுக்குப் பின்னரான லெனார்ட் வுல்பின் வாழ்க்கை” (Leonard Woolf: Life After Virginia Rebecca Beatrice Brooks)  என்கிற கட்டுரை அலசுகிறது.



லெனார்ட் வுல்பை 1907இல் காண வந்த அவரது தங்கை பெல்லா சிட்னி இலங்கையில் அப்போது பேராதனை பூங்காவின் பிரதி இயக்குனராக இருந்த ரொபர்ட் ஹீத் லொக் (Robert Heath Lock) என்பவரை 1910இல் திருமணம் செய்து கொண்ட போதும் அவர் ரொபர்ட் 1915இல் மரணமானார். அதன் பின்னர் இலங்கையில் விவசாய திணைக்களத்தில் அதிகாரியாக பணியாற்றியிருந்த தொம் சௌதொர்ன் (Tom Southorn) என்பவரை 1924இல் திருமணம் செய்துகொண்டார். (அவர் பின்னர் ஹொங்கொங்குக்கான காலனித்துவ செயலாளராக பதவி வகித்தவர்) அவரும் இலங்கைப் பற்றி சில நூல்களை எழுதியிருக்கிறார். அப்படி எழுதியவற்றும் “இலங்கையைக் காண்பது எப்படி” (How to see Ceylon) என்கிற நூல் பிரசித்தமானது.


இலங்கையின் அரசியல், நிர்வாக, இலக்கிய விடயங்களில் லெனார்ட் வுல்ஃப்பின் வகிபாகம் பெரிதாக கருதப்படுகிறது. உலக அளவில் அவரது எழுத்துக்கள் பல்லாண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல மொழிகளில் அவை கிடைகின்ற போதும் தமிழில் அவற்றில் எதுவும் கிடைக்காதது துரதிர்ஷ்டமே.

14.08.1969 தனது 88 வது வயதில் பக்கவாதத்தினால் துன்புற்று இருந்த போது இறந்தார். அவரது அஸ்தியும் அவரது மனைவி வேர்ஜினியாவின் அஸ்தி புதைக்கப்பட்ட வீட்டின் பின்னால் உள்ள அதே மரத்தின் கீழ் புதைக்கப்பட்டது. 

நன்றி - வீரகேசரி - "சங்கமம்"

No comments:

Post a Comment