Saturday, 24 September 2016

இசை மேதை எஸ் ஜி கிட்டப்பா


இசை மேதை எஸ் ஜி கிட்டப்பா 






செங்கோட்டையை சேர்ந்த அந்த சிறுவன், தமிழ் நாடக மேடையை தனது பிரத்யேக சங்கீத பிரயோகத்தினால் தனது சொந்த சாம்ராஜ்யமாகவே மாற்றியிருந்தான். எட்டுக்கட்டை சுருதியில் இளைப்பில்லாத சங்கீத மழை பொழியும்  ஆற்றல் அவனுக்கு இயல்பாகவே வாய்த்திருந்தது. 


10 வயது கூட நிரம்பாத அந்த பாலகனின் சங்கீத கச்சேரியை கேட்க, பிரபல சங்கீத வித்வான்கள் அவன் நிகழ்ச்சி நடக்கும் சபாக்களை நோக்கி வண்டுபோல் மொய்த்தனர். 

எஸ்.ஜி.கிட்டப்பா

'தாய்மொழித் தமிழில் சுவையுடன் பாடினால் பாமரனும் ரசித்துக்கேட்பான்' என்ற சூத்திரத்தை புரிந்துகொண்ட முதல் கலைஞன் அவன்தான். அதுதான் பின்னாளில் இசை உலகில் அந்த சிறுவன் வெற்றிபெறவும், நாடக உலகம் அவரை கொண்டாடவும் காரணமானது. நாடக மேடையில் கொடிகட்டிப் பறந்த எஸ்.ஜி கிட்டப்பாதான் அந்த சிறுவன். 


செங்கோட்டையில் பிறந்த கிட்டப்பாவின் இயற்பெயர் ராமகிருஷ்ணன். அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த செங்கோட்டையில் 1906-ம் ஆண்டு பிறந்தார். தந்தை கங்காதர அய்யர். தாயார் மீனாட்சி. இவருடன் பிறந்தோர் சுப்புலட்சுமி, சிவகாமி, அப்பாத்துரை, சுப்பையா, செல்லப்பா, சங்கரன், காசி, பிச்சம்மாள், நாராயணன் ஆகியோர். வீட்டில் ராமகிருஷ்ணனின் செல்லப்பெயர் கிட்டன். அதுவே பின்னாளில் கிட்டப்பா என்றானது. நெருங்கிய நண்பர்கள் அவரை 'பொங்கப்பா' என அழைப்பர்.

5 வயதில் நாடக பிரவேசம்

1911 -ம் ஆண்டு கொட்டம்பட்டியில் நல்லதங்காள் நாடகம் நடைபெற்றது. அதில் கிட்டப்பாவின் சகோரரான செல்லப்பா பெண்வேடமிட்டு நல்லதங்காளாக நடித்தார். கிட்டப்பா, நல்லதங்காளின் குழந்தைகளில் ஒருவராக நடித்தார். அதுதான் நாடக உலகில் கிட்டப்பாவின் முதல் பிரவேசம். அடுத்தவருடம் மதுரை டவுன்ஹாலில் இருந்த ஸ்ரீமீனாட்சிசுந்தரா சென்டரில்  நடந்த ஒரு நாடகத்தில்,  5 வயது சிறுவனான கிட்டப்பா வெறும் நடிப்பின்றி, பாடல்களையும் பாடி நடித்தார். 


அதே டவுன் ஹாலில், மற்றொரு நாடகத்தில் பாதுஷாவின் மகனாக நடித்தார். அந்த நாடகத்திற்கு வந்திருந்த நாடக உலகின் தந்தை எனப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள், சிறுவன் கிட்டப்பாவின் அபார இசைஞானத்தை கண்டு அதிசயித்தார். சங்கரதாஸ் சுவாமிகளின் நட்பு, சிறுவன் கிட்டப்பா தன்னை மேலும் மெருகேற்றிக்கொள்ள உதவியது.

ஏழை, எளிய மக்களின் இசை ரசனையை புரிந்துகொண்டு, அதற்கேற்ப மேடைகளில் பாடி புகழ்பெற்ற கிட்டப்பா, வறுமையினால் முறையான கல்வி பயிலாதவர் என்பது ஆச்சர்யம். ஆனால் சங்கரதாஸ் சுவாமிகள் ஆதரவால் இசையிலும், நாடகக்கலையிலும் நல்ல தேர்ச்சி பெறமுடிந்தது. 5 வயதில் மேடைப்பிரவேசம் செய்த கிட்டப்பா, தனது 6-வது வயதில் சிங்கப்பூர் சென்று சில நாடகங்களில் நடித்தார். 

மிக சிறுவயதிலேயே கடல் கடந்து சென்று அரிதாரம் பூசி நடிக்கும் வாய்ப்பு பெற்ற கிட்டப்பாவின் சிலோன் பயணத்தின்போது,  அங்கிருந்த இந்திய வர்த்தக அமைப்பு அவரது கலைஞானத்தை பாராட்டி, தங்கப் பதக்கமும் சான்றிதழும் வழங்கிப் பெருமைப்படுத்தியது. 

தனது 12-வது வயதில்,  சென்னையில் முகாமிட்டு நாடகங்களை நடத்திக்கொண்டிருந்த பிரபல கன்னையா நாடக கம்பெனியில் சேர்ந்தார் கிட்டப்பா. கம்பெனி நாடகங்களில் கிட்டப்பாவுக்கு நாரதர் வேடம். ஒருமுறை அவரது நாடகத்தை பார்க்க வந்த நீதியரசர் அப்துல் ரஹீம், கிட்டப்பாவை பாராட்டி மகிழ்ந்தார். 

திருமணம்

1924 ல் கிட்டப்பா, சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த கிட்டம்மாளை திருமணம் செய்துகொண்டார். தண்டையார்பேட்டை பரமானந்ததாஸ்- சோட்டாதாஸ் பங்களாவில் நடந்த இவர்களது திருமணத்திற்கு பிரபல சங்கீத வித்வான்கள் செம்மங்குடி சீனிவாச அய்யர், மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் உள்ளிட்ட பிரபலங்கள் வந்தனர்.


கிட்டதட்ட 7 வருடங்கள் கன்னையா நாடக கம்பெனியில் பணியாற்றிய பின், 1926 -ல் விலகி ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்கத் துவங்கினார். அப்போது இலங்கையில் கிட்டப்பா நாடகங்கள் தொடர்ந்து நடந்தன. அவருடன் அவரின் ஹார்மோனிய கலைஞரான சகோதரர் காசியும் சென்றார். நாடகத்தில் நடிப்பதற்காக, சிங்கம் அய்யர் என்பவரின் அழைப்பின்பேரில் இலங்கை சென்ற கிட்டப்பாவின் வாழ்க்கையில் அந்த பயணம் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திவிட்டது.

KITTAPPA SECOND MARRIAGE
WITH SUNDARAMBAL 1926





















அப்போது தமிழ் நாடகமேடையில், தன் இனிய சாரீரத்தாலும் நடிப்பாலும், நாடக உலகில் தனி சாம்ராஜ்யம் நடத்திவந்த பெண்மணி ஒருவரும் அப்போது இலங்கையில் நாடகம் நடத்திக்கொண்டிருந்தார். கிட்டப்பா விற்கு ஈடான புகழ்கொண்ட அவர், நாடகமேடை ராணி என நாடக ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டார்.

இலங்கையில் நிகழ்ந்த அதிசயம்

2 வருட காண்டராக்டில் இலங்கை வந்திருந்தார் அவர். தமிழகத்தில் நாடக ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு அரங்கேற்றிய சாரங்கதாரா, ஆண்டாள், நந்தனார், பவளக்கொடி போன்ற நாடகங்களால் கிடைத்த புகழ்தான்  அந்த நாடகமேடை ராணியை இலங்கை வரை விஜயம் செய்ய வைத்தது. அப்போது அவருக்கு வயது 18.


இலங்கையில் இந்த பெண்மணி நாடகங்களை நடத்தி வருவது அறிந்து கிட்டப்பாவின் நண்பர்கள், “ இது சரியான நேரம் இல்லை. அவரது நாடகங்கள் முன் உன் நாடகங்கள் நிற்குமா. வீணே சிக்கிக்கொள்ள வேண்டாம். பயணத்தை தள்ளிப்போடு” என்றெல்லாம் எச்சரித்தனர்.

அதே சமயம்  அந்த பிரபல பெண்மணியிடமும் அவரது நலம் விரும்பிகள், “ கிட்டப்பா வருகிறாராம். அவரது குரலுக்கு முன் நீ பாடல் பாடி வெற்றி பெறமுடியாது. காண்ட்ராக்டை முடித்துக் கொண்டு கிளம்பிவிடுவது உத்தமம்” என்று எச்சரித்தனர். 

கிட்டப்பா தனது நண்பர்களின் அச்சத்தை ஒதுக்கிவிட்டு இலங்கை புறப்பட்டார். 







No comments:

Post a Comment