வாடகைத் தாய் சட்ட வரைவு மசோதாவுக்கு
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிறர் கருமுட்டையை சுமக்கத் தயாராய் இருப்பவர்கள் |
வாடகைத் தாய் சட்ட வரைவு மசோதா
வாடகைத் தாய் சட்ட வரைவு மசோதா 2016-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.கிராமப்புறங்களில் இருக்கும் பெண்களும், பழங்குடியின பகுதிகளில் இருக்கும் பெண்களும் வெளிநாட்டவரால் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க இச்சட்ட மசோதா வழி செய்கிறது.
கடந்த ஏப்ரல் மாதமே நாடாளுமன்றத்தில் இந்த புதிய சட்ட வரைவு மசோதாவை தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டது. ஆனால், மசோதா இறுதி வடிவம் பெறாததால் கைவிடப்பட்டது.
உயர்மட்டக் குழு
இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுரையின் பேரில் ஓர் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.இந்தக் குழுவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, வணிகவரித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ராட் கவுர் பாதல் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
அவர்கள் "வாடகைத் தாய் சட்ட மசோதா- 2016"-க்கு இறுதி வடிவம் கொடுத்தனர்.தற்போது, இந்த வரைவு மசோவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்துள்ளது.
வாடகைத் தாய் முறை என்றால் என்ன?
குழந்தைப் பேறு இல்லாதவர்கள் குழந்தையைப் பெற மருத்துவரீதியாகவே பல வழிகள் ஏற்பட்டுவிட்டன. அவற்றுள் ஒன்று, வாடகைத் தாய் முறை. குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு, தனது கருப்பையில் குழந்தை வளர்வதற்கு அனுமதித்து, குழந்தை பெற்றுத்தருபவரே வாடகைத் தாய்.
இனி கருத்தரிக்கவே முடியாது அல்லது கருவை வளர்த்து மகப்பேறை எட்டவே முடியாது என்ற மருத்துவக் காரணங்களுக்காக இப்படி வாடகைத் தாயை அணுகுகின்றனர்.
வெளிநாட்டவர்க்கு தடை:
ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு அனுமதியில்லை. அத்தகைய நாடுகளைச் சேர்ந்த தம்பதிகள் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர்.
இந்த வரைவு மசோதா சட்ட வடிவம் பெற்றால் வெளிநாட்டவர் சுற்றுலா விசாவில் வந்து இந்தியப் பெண்களை வாடகைத் தாயாக பயன்படுத்தி குழந்தை பெற்றுக் கொள்வது தடுக்கப்படும். மேலும், வாடகைத் தாய் மூலமாக நடைபெறும் குழந்தைப் பேறுகள் சட்டபூர்வமாக, வெளிப்படைத் தன்மை உடையதாக மாற்றப்படும்.
No comments:
Post a Comment