Friday, 8 October 2021

PAAVA MANNIPPU CENSOR PROBLEMS

 


PAAVA MANNIPPU CENSOR PROBLEMS



இப்போதெல்லாம் சென்சார் போர்டு என்று ஒன்று இருக்கிறதா இல்லையா என்பதே தெரியவில்லை.
ஆனால் கண்ணதாசன் காலத்தில் மிக மிக கண்டிப்போடு இருந்தது சென்சார் போர்டு.
"பாவ மன்னிப்பு" படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். அதற்கான பாடல்களை எழுதிக் கொடுத்திருந்தார் கண்ணதாசன்.
படத்தை சென்சாருக்கு அனுப்பினார்கள் படக்குழுவினர்.
அப்போதுதான் பிரச்சினை எழுந்தது.
கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளை கேட்டு, கோபத்தில் கொந்தளித்தார்கள் சென்சார் அதிகாரிகள் !
"இல்லை . இந்த பாடல் வரியை அனுமதிக்க முடியாது."
"ஏன் ?"
"கண்ணதாசன் எழுதிய அந்த வரி தவறு !"
"எப்படி ?"
"அது என்ன
மதங்களை படைத்தான்
என்று எழுதி இருக்கிறார் ? அதை மாற்றி எழுதித் தர சொல்லுங்கள். இல்லாவிட்டால் இந்தப் பாடலை அனுமதிக்க முடியாது."
படக் குழுவினர்
கண்ணதாசனிடம் போய் சொன்னார்கள்.
சென்சார் கண்டித்து அனுப்பிய தன் பாடலை கண்ணதாசன் வாசித்துப் பார்த்தார்.

"பறவையை கண்டான்
விமானம் படைத்தான்
பாயும் மீன்களில்
படகினை கண்டான்
எதிரொலி கேட்டான்
வானொலி படைத்தான்
எதனைக் கண்டான்
மதம்தனைப் படைத்தான்."
கண்ணதாசன் சொன்னார்: "நான் சரியாகத்தானே எழுதி இருக்கிறேன். சென்சாரிடம் போய் சொல்லுங்கள்."
சென்ஸார் மறுத்தது : "இல்லை. மதங்களை கடவுள் உருவாக்கினார். மனிதன் அல்ல."
கண்ணதாசன் சிரித்தார் :
"இது என்ன வேடிக்கை ? சிவனோ விஷ்ணுவோ வந்து இந்து மதத்தை உண்டாக்கினார்களா ? அல்லது அல்லாஹ் வந்து இஸ்லாமிய மதத்தை உருவாக்கினாரா ?
இல்லையென்றால் பரமபிதா வந்து கிறிஸ்தவ மதத்தை படைத்தாரா ?
கடவுள்கள் பெயரை சொல்லி , மனிதர்கள் உருவாக்கியதுதானே அத்தனை மதங்களும் ? அதைத்தானே நான் எழுதி இருக்கிறேன் ?"
சென்ஸார் திகைத்தது.
ஆனாலும் ஈகோ தடுத்தது.
"இல்லை இல்லை.
ஏற்றுக் கொள்ள முடியாது. மாற்றத்தான் வேண்டும்."
கண்ணதாசன் தலையில் அடித்துக் கொண்டு, இப்படி மாற்றி எழுதிக் கொடுத்தார்:
"எதனைக் கண்டான்
பணம்தனைப் படைத்தான்."
Accepted.
படத்தில்தான் சிவாஜி இப்படிப் பாடுவார்.
ஆனால் ஒரிஜினல் இசைத் தட்டில் 'மதம்தனை படைத்தான்'என்ற வார்த்தைதான் இருக்கிறது.
அதே படத்தின் இன்னொரு பாடல்...
"பாலிருக்கும் பழமிருக்கும்
பசியிருக்காது
பஞ்சணையில் காற்று வரும்
தூக்கம் வராது."
ஆனால் இங்கும் பிரச்சினை வந்தது.
சென்ஸார் சீறியது.
"அய்யய்யோ அபச்சாரம். என்ன இது கண்ணதாசன் இப்படி எல்லாம் எழுத ஆரம்பித்து விட்டார் ?"
அப்படி என்ன எழுதி இருந்தார் கண்ணதாசன் ?
"காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே
கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே
வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே
அது வேதம் செய்த குருவை கூட விடுவதில்லையே."
இந்த கடைசி வரியை கட் செய்யச் சொன்னார்கள் சென்ஸார் அதிகாரிகள்.
இப்போது பதிலுக்கு சீறினார் கண்ணதாசன் : "என்னய்யா இது ? மந்திரங்களில் சிறந்தது காயத்ரி மந்திரம். அதை எழுதிய விஸ்வாமித்திரரையே காதல் விடவில்லையே ? அதைத்தானே நான் எழுதி இருக்கிறேன்?
என்ன ஆனாலும் சரி .
எவர் சொன்னாலும் சரி .
இதை நான் மாற்ற மாட்டேன்."
இப்போது படக் குழுவினர் கெஞ்சினார்கள்: "நீங்கள் சொல்வது சரிதான் கவிஞரே , ஆனால் படம் வெளி வர வேண்டுமே ?"
வேறு வழியின்றி வேத வரிகள் மாறின, படத்திற்காக மட்டும்.
"வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே
அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே."
பாவ மன்னிப்பு வந்தது.
பாடல்களும் ஹிட் ஆனது.
அதன் பின்னரும்
அவ்வப்போது அங்கங்கே ஏதாவது ஒரு சில பிரச்சினைகள்..
அதனால்தானோ என்னவோ , ஒருமுறை இப்படி எழுதி இருந்தார் அவர் :
"நான் இறந்த பிற்பாடு
என்னையே நான் விமர்சனம் செய்துகொண்டால்
இப்படித்தான் சொல்வேன்:
முட்டாள்களிடையே
வாழ்ந்துகொண்டிருந்த கெட்டிக்காரனொருவன்
கெட்டிக்காரர்களோடு பழகத்தொடங்கி
முட்டாளாக செத்துப் போனேன்.”
-கண்ணதாசன்

No comments:

Post a Comment