Saturday, 29 May 2021

WORLD COUPLES DAY MAY 29

 

WORLD COUPLES DAY MAY 29

தம்பதியர் தின வாழ்த்துகள்.வாழ்க நலமுடன்.வாழ்கவளமுடன்.




மனித வாழ்வில் மறக்க முடியாத மிக முக்கியமான நிகழ்வாக திருமணத்தை குறிப்பிடலாம். அப்படித்தானே எல்லோருக்கும். சரிதானே.. இல்லைன்னு சொல்லி யார் திட்டு வாங்குறது என்கிறீர்களா? 


இந்திய திருமணங்களை எடுத்துக் கொள்ளுங்களேன். அது அலங்காநல்லூர் கிராமத்துல நடக்கிற கல்யாணமாய் இருந்தாலும் சரி.. அம்பானி வீட்டு கல்யாணமாக இருந்தாலும் சரி... ஊராரை அழைத்து, விருந்து படைத்து, மணமக்களை ஆசி பெற வைத்து உற்சாகமாக நடத்துவதில் இந்தியர்களுக்கு நிகராக யாரையாவது கூற முடியுமா?


அதே நேரம் வெளிநாடுகளில் திருமணத்தை விட பரபரப்பாக பேசப்படுவது, அவர்களின் விவாகரத்து தான். இந்த நிலை மாற வேண்டும். தாம்பத்ய வாழ்க்கையின் ஒற்றுமையை வெளியுலகுக்கு உணர்த்த உருவாக்கப்பட்டதே உலக தம்பதியர் தினம்.



அதுதான் இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.


பண்டிகைகளும், விரதம், சடங்குகள், இப்படியான தினங்கள் கொண்டாடுவதே, உறவுகளுடன் நேரம் செலவழிக்கவும், உறவை பலபடுத்திக் கொள்ளவும் தானே! மகளிர் தினம், அம்மா, அப்பா, குழந்தைகள், குடும்பம் என, சிறப்பு தினங்கள் கொண்டாடுவது போல, இந்த தம்பதியர் தினத்தையும் கொண்டாடுவதில் தவறொன்றுமில்லை


கடந்த கால நினைவுகளை, மலரும் நினைவுகளாய் அசை போட இது உதவும். இடையில் இருவருக்கும் மட்டுமல்ல; இரு குடும்பங்களுக்கும் இடையில் இருக்கும் மன கசப்புகள் கூட மறையலாம்.உறவுகளுக்குள் ஏற்படலாம் என்கிற மாதிரியான சின்ன சின்ன மனக் கசப்பைக் கண்டுபிடித்து சரி செய்து கொள்ள, இப்படியான தினங்களை கொண்டாடுவதில் தயக்கம் ஒன்றுமில்லை. மகிழ்ச்சியான விஷயம் தான்.


நாட்டில் ஆயிரம் அரசியல் மாற்றங்கள், ஆட்சி மாற்றங்கள், தட்ப வெப்பநிலை மாற்றங்கள் என, எது நடந்தாலும், அதையெல்லாம் எதிர் கொள்ளவும், சமாளிக்கவும் நாம் நம்மை முதலில் திடமும், தெளிவும் குடும்ப அளவில் ஏற்படுத்திக் கொள்ள இது மாதிரியான தினங்கள் மிக அவசியமாகவே இருக்கின்றன


கடந்த 2017 வரையிலான நிலவரப்படி, இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 7 லட்சத்து 13 ஆயிரத்து 511 விவாகரத்து வழக்குகள் நிலுவையில் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 21,672 விவாகரத்து வழக்குகளுடன் தமிழகம் 12வது இடத்தில் இருக்கிறது. மேலும் தமிழகத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 1,200 விவாகரத்து வழக்குகள் புதிதாக பதிவாகி வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விவாகரத்துக்கு பல்லாயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா?


வெளிநாடுகளில் கொண்டாடி வந்த சிறப்பு தினங்களை, நாமும் ஏன் கொண்டாடி தீர்க்கிறோம் என்பது இப்போதாவது புரிகிறதா? புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை குறைந்து வருவதே இதற்கு முக்கிய காரணம். முன்பெல்லாம் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தோம். அங்கு முடிவுகள் கலந்து எடுக்கப்படும். பிரச்னைகளையும் எளிதில் சரி செய்யலாம். பணிகளும் பகிரப்படும். இப்போது தனித்து வாழும் தம்பதி தங்களுக்குள் ஒரு பிரச்னை வந்தால், அடுத்த சில நிமிடங்களிலேயே பிரிந்து வாழ்வோம் என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர்.


நீதிமன்றங்கள் சேர்த்து வைக்க முயன்றாலும், பிடிவாதமாக பிரிவதே தீர்வு என திருமண பந்தத்தை முறித்துக் கொள்கின்றனர். மனம் ஒத்து வாழ்ந்தால் எந்த பிரச்னைகளையும் எளிதில் சமாளிக்கலாம். அதைத்தான் இந்த தம்பதியர் தினமும் உணர்த்துகிறது.


விட்டு கொடுத்தால்  கெட்டு போவதில்லை


அன்புடன் மோகனா செல்வராஜ்

No comments:

Post a Comment