Wednesday, 2 December 2020

"தமிழகத்தில் எய்ட்ஸ் நோய் குறித்த மேற்பார்வை " " surveillance of AIDS in Tamilnadu"

 

"தமிழகத்தில் எய்ட்ஸ் நோய் குறித்த மேற்பார்வை "

" surveillance of AIDS in Tamilnadu" 





எனக்கு ஒரு பலமான இன்ஸ்பிரேசனாக  இருப்பவர்கள் 

இந்த படத்தில் உள்ள மூன்று பேரும்...

Dr. நிர்மலா 

Prof. Dr. சுனிதி சாலமன் 

திரு.வீரப்பன் ராமமூர்த்தி 

சரி இவர்கள் மூவரும் அப்படி என்ன சாதித்தார்கள் ? 

அதற்கு நாம் 1986ஆம் வருடத்திற்குச் செல்ல வேண்டும். 

அப்போது 32 வயதான  Dr.நிர்மலா அவர்கள்   மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியில்  நுண்ணியிரியியல் (micro biology) மேல்படிப்பு படிக்கும் மருத்துவர்.

Dr.சுனிதி சாலமன் இவரது துறை பேராசிரியர். 

பட்ட மேற்படிப்பு மாணவர்கள் கட்டாயம் ஒரு ஆராய்ச்சி செய்து சமர்ப்பிக்க வேண்டும் இதை thesis / dissertation என்பார்கள். 

Dr.சுனிதி தனது மாணவிக்கு கொடுத்த தலைப்பு



"தமிழகத்தில் எய்ட்ஸ் நோய் குறித்த மேற்பார்வை "

" surveillance of AIDS in Tamilnadu" 

இந்த டாபிக்  கொடுக்கப்பட்ட போது இந்தியாவில் அதுவரை அதிகாரப்பூர்வமாக  ஒரு எய்ட்ஸ் நோயாளி கூட கிடையாது. 

நம்ப முடிகிறதா? 

அதாவது சுமார்  80 கோடி பேர் மக்கள் தொகை கொண்டிருந்த  நாட்டில் ஒரு எய்ட்ஸ் நோயாளி கூட அப்போது கண்டறியப்பட்டிருக்கவில்லை. 

காரணம் 

அப்போது பொது மக்கள் , சட்டம் இயற்றுவோர் இடையே பலமான ஒரு மூட நம்பிக்கை இருந்தது. 

அதாவது இந்தியா ஒழுக்கமான தேசம். 

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை மதித்து வாழும் தேசம். எனவே இங்கெல்லாம் ஒழுக்கக்கேடானவர்களுக்கு வரும் எய்ட்ஸ் நோய் வராது என்றே நினைத்தனர். நம்பினர். 

எய்ட்ஸ் என்பது மேற்குலக நோய் என்றும் 

அது தன்பாலின சேர்க்கையாளர்கள் போன்ற இயற்க்கைக்கு எதிரான உறவுமுறைகளைக்  கொண்ட மேற்குலகுக்கு மட்டும் வரும் நோய்.



இந்தியா அது குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை  என்று அனைவரும் எந்த கவலையும் இன்றி இருந்தனர் 

இதற்கு முன் மும்பை, டில்லி, கொல்கட்டா  போன்ற பெருநகரில் செய்த ஆராய்ச்சியிலும் கூட எய்ட்ஸ் நோயாளிகள் கண்டறியப்படவில்லை. 

அவையெல்லாம் விட சென்னையை ஒழுக்கமான நகரமாக அப்போது பார்க்கப்பட்டது. 

காரணம் 

மேற்சொன்ன நகரங்களில் எல்லாம் ரெட் லைட் ஏரியா என்ற பெயரில் விலைமாதர்கள்  தொழிலாகவே  சட்டத்துக்கு உட்பட்டு தொழிலாகவே செய்து வந்த இடங்கள் இருந்தன. 

மும்பையில் சோனாபூர் 

டில்லியில் ஜி.பி.ரோட் 

கல்கத்தாவில் சோனா காச்சி  என்று இதற்கென தனியிடம் ஒதுக்கி இருக்கும் அங்கேயே எய்ட்ஸ் இல்லை எனும் போது தமிழகத்தில் எப்படி இருக்கும்??? 

இந்த சூழ்நிலையில் தான் இந்த தலைப்பை Dr.சுனிதி அவர்கள் தன் மாணவிக்கு தருகிறார். 

ஆனாலும் Dr.நிர்மலா கூறுகிறார் 

" மேடம் எப்படியும் நெகடிவ் என்று தான் வரப்போகிறது. "

அதற்கு பேராசிரியர்  கூறுகிறார்.

" எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. இருப்பினும் ஒரு முயற்சி செய்து பார்." என்கிறார்.

உடனே அந்த ஆராய்ச்சியை கையில் எடுக்க ஒப்புக்கொள்கிறார் Dr.நிர்மலா.  

அப்போது அவருக்கு எய்ட்ஸ் என்றால் என்ன? 

அது எப்படி பரவும் ? 

என்றெல்லாம் தெரியாது.

சரி.. எப்படி இந்த ஆராய்ச்சியை நடத்துவது ? 

எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்ற நிலையில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களிடம் ரத்த மாதிரிகளை  எடுக்க வேண்டும். 

இவர்கள் High Risk Population என்று அழைக்கப்படுவார்கள்

1. விலைமாதர்கள் 

2.  தன் பாலின  உடலுறவு  புரிபவர்கள் 

3. ஆப்பிரிக்க மாணவர்கள் 

இது போன்ற  200 பேரிடம் ரத்த மாதிரிகள்  சேகரிக்க வேண்டும். 

அப்போது சென்னையில் தனியான ரெட் லைட் ஏரியா கிடையாது

அதனால் நிர்மலா அவர்கள் நேராக சென்னை  மருத்துவக்கல்லூரியில் உள்ள பால்வினை  நோய்கள் பிரிவில் சிகிச்சை  எடுக்க வரும் விலைமாதர்களில் இருவரை நண்பர்களாக்கிக் கொண்டார். 

அவர்கள் மூலம் மற்ற விலை மாதர்களின் வீட்டு முகவரியை பெற்றார். 

அப்போது விலைமாதர்கள் கைது செய்யப்பட்டால்  அவர்கள் விஜிலண்ஸ்  ஹோம் எனும் இடங்களில் தங்க  வைக்கப்பட்டிருந்தனர். 

அவர்களின் கேஸ் சீட்டுக்கு மேல் "V" home என்று எழுதியிருக்கும். இதை ரிமாண்ட்  ப்ரிசன்  என்றும் கூறுவார்கள் 

கிராமத்தில் வெளியில் எங்கும் செல்லாமல் வளர்க்கப்பட்ட Dr.நிர்மலா அவர்களுக்கு இந்த ரிமாண்ட்  ப்ரிசனுக்கு சென்று அங்குள்ள  அதிகாரிகளிடம் பேசி உள்ளே சென்று விலைமாதர்களிடம் ரத்த மாதிரி  எடுப்பது பெரிய சவாலாக இருந்தது. 

அப்போது அவருக்கு உந்து சக்தியாக இருந்தவர் கணவர். வீரப்பன் ராமமூர்த்தி.

காலையில் பணிக்கு செல்லும் முன் தன் மனைவியை ஸ்கூட்டரில்  ஏற்றிக்கொண்டு ரிமாண்ட்  ஹவுஸிற்கு சென்று விடுவார். அங்கு நிர்மலா  ரத்த மாதிரிகளை சேகரிப்பார்.  

இப்படியாக 80 ரத்த சாம்பிள்களை சேகரித்து விட்டார். 

ரத்தம் சேகரிக்கும் போது க்ளவுஸ் (கையுறை) போடவில்லை.   

பாதுகாப்பு உபகரணங்கள் கிடையாது.  

Dr.நிர்மலா கூறுகிறார் 

"விலைமாதர்களிடம் எதற்காக ரத்த பரிசோதனை எடுக்கப்படுகிறது  என்று நான் கூற வில்லை. கூறினாலும்  அவர்களுக்கு புரிந்திருக்காது. காரணம் அப்போது எய்ட்ஸ் என்ற நோயை பற்றி மருத்துவர்களுக்கே தெரியாது"

என்கிறார். 

எடுக்கப்பட்ட  ரத்த மாதிரிகளில் இருந்து serum மட்டும் தனியாக பிரிக்கப்பட்டது.  இதற்காக Dr.சுனிதி சாலமன் அவர்கள் தனியாக ஒரு சின்ன லேப் ஒன்று தயார் செய்திருந்தார். அதற்கு உதவியது அவரது கணவர் 

இப்படியாக தயார் செய்யப்பட்ட சீரம்  சாம்பிள்களை கெட்டுப்போகாமல்  ஸ்டோர் செய்யும் வசதிஇல்லை 

அதனால் Dr.நிர்மலா அவர்கள் தங்கள் வீட்டில் உள்ள குளிர்சாதனப்பெட்டியில் (fridge) வைத்திருந்தார் 

அந்த காலத்தில் சென்னையில் எச்.ஐ.வி கிருமியை கண்டறியும் ELIZA(Enzyme linked immuno sorbent assay)  பரிசோதனை செய்யும் வசதி இல்லை. 

இதற்காக Dr.சுனிதி  , வேலூரில் இயங்கி வரும் கிறிஸ்துவ  மருத்துவ கல்லூரியில் ஏற்பாடு செய்தார். 

Dr.நிர்மலாவும்  அவரது கணவரும்  இந்த ரத்த மாதிரிகளை ஒரு ஐஸ் பாக்ஸில் போட்டுக்கொண்டு வேலூர்

காட்பாடிக்கு செல்லும் இரவு ரயில் வண்டியில் ஏறினர்.  

காட்பாடியில் இருந்து CMC மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்று இறங்கினர். 

அங்கு வைராலஜி துறைத்தலைவர் Dr.ஜேகப்  T ஜான்  அவர்கள் இவர்களுக்கு ஜார்ஜ் பாபு , எரிக்  சிமோஸ் என்ற  இரண்டு ஜீனியர்களை  துணைக்கு வேலை செய்ய கொடுத்தார்.

காலை 8.30 மணிக்கு ரத்த மாதிரிகளை ஆராயும் பணியை

Dr.நிர்மலா ,

Dr .ஜார்ஜ் பாபு , 

Dr.எரிக் சிமோஸ் தொடங்கினர்.

வேலை நடந்துகொண்டிருக்கும் போது மதியம் கரண்ட்  போய் விட.. சரி ஒரு டீ சாப்பிட்டு வரலாம் என்று மூவரும் சென்று கரண்ட் வந்ததும் நிர்மலா மற்றும் ஜார்ஜ் இருவரும்  வந்து திறந்து பார்த்தால் ஆறு சாம்பிள்கள் மஞ்சள் நிறத்தில் மாறியிருந்தன.  

பின்னால் வந்த எரிக் சிமோசும் இதை ஆமோதித்தார். 

அவர்கள் யாராலும் அந்த முடிவுகளை நம்ப முடியவில்லை. 

இருப்பினும் பாசிடிவ் என்று வந்த அந்த தகவலை யாரிடமும் சொல்லிவிடாதீர்கள் என்று வைராலஜி தலைவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க நேரே சென்னை சென்று விட்டனர் கணவனும் மனைவியும். 

கூடவே ஜார்ஜ் மற்றும் சிமோசும் சென்றனர். 

நேராக துறைத்தலைவர் சுனிதி சாலமனிடம் விசயம் கூறப்பட்டது 

அடுத்த நாள் காலை 

சுனிதி அவர்கள் நேராக ரிமாண்ட்  ஹோமிற்கு சென்று அந்த ஆறு பாசிடிவ் ரிசல்ட் வந்த ரத்த மாதிரிகளை கொண்ட விலைமாதர்களிடம் இருந்து மீண்டும் ரத்த எடுத்தார்.. 

அந்த மாதிரிகளைக் கையில் எடுத்துக்கொண்டு சிமோஸ் அவர்கள் உடனே அமெரிக்காவுக்கு பறந்தார். 

அங்கு தான் எச்.ஐ.விக்கான  கன்பர்மேசன் டெஸ்ட்டான  western blot அப்போது இருந்தது. 

அங்கு செய்யப்பட்ட வெஸ்டர்ண்  ப்ளாட்  டெஸ்ட் இந்தியாவுக்குள்  எய்ட்ஸ் நோய் நுழைந்து விட்டதை உறுதி செய்தது.

இந்த செய்தி உடனே ICMR (Indian council for medical research)க்கு தெரிவிக்கப்பட 

அங்கிருந்து செய்தி பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது .

பிறகு தமிழக சுகாதார அமைச்சர் ஹண்டேவுக்கு தெரிவிக்கப்பட்டது. 

மே மாதம் நடந்த

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தில் இந்த கெட்ட செய்தியை ஹண்டே மக்களுக்கு கூறினார்.

அப்போது Dr.சுனிதியும்  Dr.நிர்மலாவும் சட்டமன்றத்தின்  பார்வையாளர் கூடத்தில் அமர்ந்திருந்தனர்.

இந்த செய்தி வெளியிடப்பட்டதும் மக்கள் கொந்தளித்தனர் 

"என்னது தமிழ்நாட்டுல எய்ட்ஸா?"

" ஒழுக்க பூமியான  தமிழ்நாட்டுல எய்ட்ஸ் வாய்ப்பே இல்லை. இந்த டாக்டருங்க எடுத்த டெஸ்ட்ல தான் தப்பு இருக்கும்"

" சுனிதி சாலமன் மஹாராஷ்ட்ரா காரவுங்க..தமிழ்நாட்டு மேல வீணா  பொய் புரளி கிளப்புறாங்க " என்றெல்லாம் பேச ஆரம்பித்தனர் 

இதுபோன்ற அத்தனை பேச்சுகளையும் தாண்டி 

தனது ஆராய்ச்சிக்கு தேவையான 200 சாம்பிள்களை எடுத்து முடித்து கட்டுரையை சமர்ப்பித்தார். 

1987 இல் ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்தார். மேற்படிப்பை முடித்தார். 

2010 ஆம் ஆண்டு கிண்டி கிங்க்ஸ்  தடுப்பூசி இண்ஸ்டிட்யூட்டில்  வேலை செய்து ஒய்வு பெற்றார்.

இவர் கண்டுபிடித்த அந்த முதல் நோயாளிகளுக்கு பிறகு இந்தியா எய்ட்ஸ் மீது கொண்ட பார்வை மாறியது. 

2006 கணக்குப்படி 20 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் கொண்டு உலகில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் வசிக்கும் நாடாக நாம் இருக்கிறோம். 

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இலவசமாக anti retro viral therapy கொடுக்கிறோம் 

இவை எல்லாவற்றுக்கும் விதை போட்டது Dr. நிர்மலா , Dr .சுனிதி சாலமன் ஆகிய இரு பெண்மணிகள். 

இத்தனை செயற்கரிய சாதனை புரிந்த Dr.நிர்மலா அவர்களை கவுவரிக்கும்  பெரிய விருதுகளோ  பரிசுகளோ அவருக்கு கிடைக்கவில்லை 

இதுகுறித்து  அவரிடம் கேட்கப்பட்ட போது அவர்கூறினார் 

நான் கிராமத்தில் வளர்க்கப்பட்டவள். 

அங்கே யாரும் தாங்கள் செய்த விஷயங்களுக்காக துள்ளி குதிக்கவும் மாட்டார்கள் / சோர்ந்து போகவும் மாட்டார்கள். 

எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு  மகிழ்ச்சி.  இதன் மூலம் சமுதாயத்துக்கு நல்லது  செய்ய முடிந்ததே போதும் "

என்று முடிக்கிறார் Dr.நிர்மலா..

இந்த கட்டுரை வழி 

நமக்கு இன்ஸ்பிரேசன்களாக  

பலர் இருக்கின்றனர்.

டாக்டர் நிர்மலா 

ஆசியரின் பேச்சை தட்டாமல்  ஆராய்ச்சியை முன்னெடுத்த  அவரின் முயற்சி / தைரியம் / உழைப்பு . சமூகம் தனக்கான அங்கீகாரத்தை  வழங்காவிட்டாலும்  அதற்காக நான் என்னால் முடிந்ததை செய்வேன் என்ற  அவரின் எண்ணம்.

டாக்டர் சுனிதி சாலமன்

அதுதான் இந்தியாவின் பிற மாநிலங்களில் எய்ட்ஸ் இல்லை என்று வந்து விட்டதே என்று   விடாமல் தனது மாணவியை  அது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட வைத்தது. அத்தோடு ஒதுங்கிக்கொள்ளாமல்

மாணவியோடு கடைசி வரை நின்று உதவி செய்த அவரின் ஊக்கம் 

திரு. வீரப்பன் ராமமூர்த்தி

மனைவி செய்யும் அலுவல்களுக்கு துணையாக கணவன் நிற்க வேண்டும். இவர் ஒருபடி மேலே போய் விலைமாதர்களின் வீடு தேடி மனைவிக்காக வண்டி ஓட்டியுள்ளார்.இவரிடம் கணவனாக நான் கற்றுக்கொண்டது அதிகம்

இத்தகைய பெரியோரை  எய்ட்ஸ் விழிப்புணர்வு தினமான இன்று நினைவில் கொள்வோம் 

Dr.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை


No comments:

Post a Comment