Thursday, 1 November 2018

கங்குப் பாட்டி



கங்குப் பாட்டி 




இந்த முறை கங்குப் பாட்டி யாரையும் ஏமாற்றாமல் செத்துதான் போவாள் என்று தோன்றியது. ஆனால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. எப்போதும்போல், அன்றும் நள்ளிரவுக்கு மேல் மூன்றாம் ஜாமத்தில்தான் கங்குப் பாட்டிக்கு மூச்சு முட்டியது. வழக்கம்போல், கால்களை நீட்டி, பின்னந்தலையைச் சுவரில் அழுந்தப் பதித்து, விட்டத்தைப் பார்த்தபடி வாயைப் பிளந்து மிகுந்த சிரமத்துடன் சத்தமாக மூச்சுவிட்டாள் பாட்டி.

பாட்டியின் எதிரே, எதிர் வீட்டு சாரதா பெஹ்னும் அடுத்த வீட்டு புஷ்பா பெஹ்னும் உட்கார்ந்திருந்தார்கள். உயிர் பிரிந்ததும் பாட்டி நேரே சொர்க்கத்துக்குப் போகும் வகைக்கு, ஒரு மூலையில் நாத்தி பெஹ்ன் வியாசப் பலகையில் டோங்கரே மஹ்ராஜ்ஜின் பாகவதத்தை விரித்து வைத்துப் படிக்கத் துவங்கியிருந்தாள். பாட்டி யின் மருமகள் சுரேகா பாட்டியின் முதுகைத் தடவிக்கொடுத்தபடி இருந்தாள். 

வாசல் பக்கம் தாழ்வாரத்தில் பாட்டியின் மருமகன் கோபால் பாயுடன் நான் நின்றுகொண்டிருந்தேன். அண்டை வீட்டுக்காரர்களான த்ரம்பக் பாய், பாபு பாய், ப்ரான் ஜீவன்லால், மற்றும் ஓரிரு இளைஞர்கள் தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒட்டடை சூழத் தொங்கிக்கொண்டிருந்த பழுப்பேறிய 25 வாட்ஸ் பல்பு அழுதுவடிந்தது.

வழக்கம்போல் தரம்பக் பாய் என்னைப் பார்த்து ”டேய் நிலைமை ஒன்றும் சரியில்லை. எதற்கும் 31லிருந்து ரஜ்னியை அழைத்துவந்துவிடு”, என்றார். நான் தயங்கி நெளிந்தபடி மாடிப்படிப் பக்கம் நகர்ந்தேன். 

ஏகாம்பரேஸ்வரர் அக்ரகாரத்தில், 25ஆம் எண் கட்டடத்தில் இரண்டாவது மாடியில் 22ஆம் எண்வீட்டு முன்னறையிலும் தாழ்வாரத்திலும் பல முறை அரங்கேறிய காட்சிதான் இது. சாகக் கிடப்பவர்கள் செத்துதான் போக வேண்டும் என்று நியதி கிடையாது. ஆனாலும் கங்குப் பாட்டி சாகக் கிடப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கண்ணியத்தைப் பல முறை மீறிவிட்டிருந்தாள். ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல, 27 முறை அந்தக் கட்டடத்தில் வாழ்ந்த 24 குஜராத்திக் குடித்தனக்காரர்கள் எல்லோரையும் இப்படி அர்த்த ராத்திரியில் எழுப்பி, சாகாமலேயே கலவரப்படுத்தியிருக்கிறாள். அக்ரகாரத்தில் இறங்கி, “கங்குப் பாட்டிக்கு சீரியஸ்” என்று யாரிடமாவது சொல்லிப் பாருங்கள். உடனே உங்கள் கன்னத்தில், செல்லமாகத்தான் என்றாலும், “சப்பென்று அறைந்துவிடுவார்கள். உன் மூச்சுத்திணறத் துவங்குவதற்கு முன்பான சில கணங்களில், ஒவ்வொரு முறையும் பாட்டி, கண்களை அகல விரித்து அந்த முன்னறையின் வெறுமைக்குள் வெறித்தபடி, “மகனே கோபால், இன்று எனக்கு ஜீவன் தவிக்கிறது. நான் கோலோகம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டதடா! சீக்கிரம் கங்கா ஜலம் கொண்டுவா” என்று உருக்கமாகக் கூறுவாள். 

கொண்டித்தோப்பிலிருந்த மார்வாடி ஆஸ்பத்திரியின் தலைமை வைத்தியரான 80 வயது கன்னடக்காரர் ராமச்சந்திர சர்மாவை ஸ்கூட்டரில் உட்கார்த்தி அழைத்துவந்ததும், அவர் பாட்டியின் நாடியைப் பிடித்துப் பார்ப்பார். ”மாஜிக்கு இதயம் வீக்தான். ஆனால் பயப்படும்படி ஒன்றுமில்லை. ராத்திரி ஏதும் எண்ணெயில் பொரித்த பதார்த்தத்தைச் சாப்பிட்டிருப்பார்” என்பார் அலட்சியமாக (பாட்டி நாத்தி பெஹ்ன் வீட்டு போண்டாக்களையோ, கீழ்வீட்டு மதூரியின் சமோசாக்களையோ ஒருகை பார்த்திருப்பாள்). தொப்பியைக் கழற்றித் தன் வழுக்கைத் தலையைத் தடவியபடி ஒரு கணம் யோசிப்பார். பிறகு, தன் கோட்டுப் பைக்குள் கை விட்டுச் சிறுசிறு சூரணப் பொட்டலங்களைக் கொத்தாக எடுப்பார். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, பிரித்து, பாட்டியின் திறந்த வாய்க்குள் கொட்டுவார். மேலும் சில பொட்டலங்களை சுரேகாவிடம் கொடுத்து, “வேளைக்கு ஒன்று, மூன்று நாளைக்கு. சாப்பாடு கூடாது. பார்லி வாட்டரும் உப்பில்லாத அரிசிக் கஞ்சியும்தான். எல்லாம் சரியாகிவிடும்,” என்று கூறுவார். 15 ரூபாய் ஃபீஸ் வாங்கிக்கொண்டு, “நமஸ்தே” சொல்லிவிட்டுக் கிளம்புவார். பரீட்சித்து மஹராஜன், “சர்ப்பம் தீண்ட” சாபத்திற்கு ஆளாவதற்குள், பாட்டி ஆ, ஊ என்று ஆர்ப்பரித்து பெரிய பெரிய ஏப்பங்களையும், டர்ர், புர்ர் என்று ஏகப்பட்ட குசுக்களையும் விடத் துவங்குவாள். நாலைந்து நிமிடம்தான். பின்பு எல்லாம் சரியாகிவிடும். பாட்டி ஒரு மிடக்குத் தண்ணீரைக் குடித்துவிட்டுக் குழந்தையைப் போல் தூங்கிவிடுவாள். கிழவியைக் கன்னாபின்னாவென்று திட்டிவிட்டுக் கட்டடம் மறுபடியும் கோழித்தூக்கம் போடும்.

தெருவில் கால் வைத்ததும், நிலவொளியில் அக்ரகாரம் வெறிச் சென்றிருந்தது. ஏகாம்பரேஸ்வரர் கோயில் கோபுர உச்சியில் ஒரு சிறிய மின்விளக்கு மினுங்கியது. குளிர்ந்த காற்று ரகசியம் போல் மேலெல்லாம் படர்ந்தது. 31ஆம் நம்பர் கட்டடத்தை நெருங்க நெருங்க ரஜினிகாந்த் மாமாவின் முகம் மனதுக்குள் தோன்றியது.

குஜராத்தி முறைப்படி பாடை கட்டுவதில் படு வல்லவரான ரஜினிகாந்த் மாமாவுக்கு ப்ராட்வேயில் ஒரு மொத்த சைக்கிள் கடையில் விற்பனைப் பிரதிநிதி வேலை. பெரும்பாலான நாட்களில், சைக்கிள் உதிரி பாகங்கள், டயர் ட்யூப்களுக்கு ஆர்டர் சேகரிக்க சென்னையைச் சுற்றியுள்ள ஊர்களுக்கு அதிகாலையிலேயே கிளம்பிப் போய்விடுவார். அவரும் அவர் மனைவி மட்டும்தான். குழந்தை குட்டி கிடையாது. அன்பும் சிறிது ரெளடித்தனமும் மிக்கவர்.


பித்ருக்களான பிறகு பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்ய வாரிசில்லாதவர்கள் பேயாய் அலைவார்கள் என்று ரஜினிகாந்த் மாமா விடம் யாரோ சொல்லியிருந்தார்கள். கூடவே, அந்த விதிக்கேட்டுக்குப் பரிகாரமாக 108 சாவுக்குப் பாடை கட்டினால் நல்ல கதி கிடைக்கும் என்றும் கூறியிருந்தார்கள். அதற்குப் பிறகுதான் ரஜினி காந்த் மாமா பாடை கட்டுவதில் முழுமூச்சாக இறங்கினார். அதை ஒரு கலையாகவே கற்றுத் தெளிந்திருந்தார். அவர் கட்டிய பாடையில் கடோத்கஜனைக்கூடப் படுக்க வைத்துத் தூக்கிச் செல்லலாம் என்பார்கள். சவுக்கார்பேட்டை சுற்றுவட்டாரத்தில் எங்கே குஜராத்திகள் செத்துப்போனாலும் ரஜினிகாந்த் மாமாவுக்குத்தான் முதல் தாக்கல்! தன் 45 வயதில் இதுவரை 102 பாடைகளைக் கட்டியிருக்கிறார். அவரைப் பொறுத்தவரை ஒரு பாடை என்பது மோட்சத்தை நெருங்குவதற்கான ஒரு படி.

31ஆம் எண் கட்டடத்தின் பின்கட்டில் வசித்த ரஜ்னி மாமாவை எழுப்ப, கோயில் கதவு போன்றிருந்த அந்தப் புராதன முன்கதவின் இரும்பு நாதாங்கியைப் பிடித்து, சத்தமாக அவரை அழைத்தபடி நான் தட்டியபோது, தெருவோரம் படுத்திருந்த மூன்று நாய்கள், இரண்டு பெருச்சாளிகள் மற்றும் கட்டடத்திற்குள் இருந்த மிட்டு மாமா, லக்கு மாமா, சூரி சித்தப்பா எல்லோரும்கூட குடும்ப சகிதம் எழுந்துவிட் டார்கள். ரஜ்னி மாமாவிடம் விஷயத்தைக் கூறியதும் அவர் அந்த அரைத் தூக்கத்திலும்கூடச் சற்று ஆவேசமாகத்தான் பேசினார்: “அடேய் பைத்தியக்காரா, அந்தக் கிழவியாவது சாவதாவது! கொள்ளை வந்து ஊரே பாடை ஏறினாலும் அவள் சாக மாட்டாள்; எழுதி வைத்துக்கொள்… சரி, சரி… யார் உன்னை இங்கே அனுப்பியது? அந்தத் த்ரம்பக் பயல்தானே? இன்றைக்கு மட்டும் கிழவி சாகாமல் இருக்கட்டும்… பேசிக்கொள்கிறேன் அந்த படவாவை.”

ரஜ்னி மாமாவுடன் நான் 25ஆம் நம்பருக்குத் திரும்பியபோது, முற்றம் வெறிச்சோடிக் காணப்பட்டது. கோபால் மாமாவைத் தவிர யாரும் இல்லை. வைத்தியர் வந்துபோயிருந்தார். வாயு பிரிந்து, பாட்டி அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தாள். ரஜ்னி மாமா, “நான் சொன்னேன் அல்லவா! கிழவி மறுபடியும் எமனுக்குக் கொக்காணி காட்டி விட்டாள்” என்றார் லேசாகச் சிரித்தபடி.

2

கங்குப் பாட்டியும், பாட்டியாவதற்குமுன் ஒரு காலத்தில், பேதையாக, சிறுமியாக, பெதும்பையாக, மங்கையாக, மடந்தையாக, அரிவையாக, எல்லாமாக இருந்திருந்தாள் என்பது இப்போது யாருக்கும் ஞாபகம் இல்லை. பாட்டியின் சமகாலத்தவர்கள் எல்லோரும் பெரும்பாலும் செத்துவிட்டார்கள். இப்போது உயிரோடிருக்கும் கிழவிகளும், கிழவர்களும்கூட அவளைவிட எட்டு பத்து வயது குறைந்தவர்கள்தான். கங்குப் பாட்டிக்குக் கல்யாணமானபோது அவளுக்கு வயது 13. 15 வயதில் புஷ்பவதியாகி, 22 வயதுக்குள் 6 குழந்தைகளைப் பெற்று, அந்த 6 குழந்தைகளையும் வரிசையாகப் பறிகொடுத்து 27 வயதில் விதவையும் ஆகிவிட்டாள். கங்குப் பாட்டி, கோபால் மாமாவின் ஒன்றுவிட்ட அத்தையின் பெண். அவளைப் பெற்றவர்களும், அவள் கூடப்பிறந்தவர்களும் அவளது கண் முன்னாலேயே ஒருவர் பாக்கியில்லாமல் செத்துப்போயிருந்தார்கள். விதவையான பின் கோபால் மாமாவின் தந்தைதான் அவளைத் தன் குடும்பத்தோடு சேர்த்துக்கொண்டார். கங்குப்பாட்டியின் சோகம் அத்தோடு முடிந்து விடவில்லை. கோபால் மாமாவின் தந்தை, மறு வருடம், ரேணி குண்டாவில் வேலை காரணமாகச் சில மாதங்கள் தங்கும்படி நேர்ந்தது. அப்பொழுது, அவர்கள் வசித்துவந்த இடத்துக்கு எதிரில் ஒரு மிலிட்டரி ‘பாரக்ஸ்’ இருந்தது. உள்ளூர் மற்றும் ஆங்கிலோஇந்திய சோல்ஜர்கள் லாரிகளிலும் ட்ரக்குகளிலும் வருவதும் போவதுமாக இருப்பார்கள். ஒரு நாள் இரவு திடீரென்று கங்குப் பாட்டியைக் காணவில்லை. மிலிட்டரிக்காரர்கள்தான் அவளைத் தூக்கிக்கொண்டு
சென்றுவிட்டதாகச் சொல்வார்கள். அதன்பின் கங்குப் பாட்டியை 4, 5 வருடங்கள் காணவில்லை. என்ன ஆனாள், எப்படி எங்கே இருந்தாள் என்பது இன்றுவரை புதிர்தான். கங்குப் பாட்டி திரும்பக் கிடைத்தபோது, அவள் பம்பாயில், பூலேஷ்வரில் ஒரு தெருவோரத்தில் கர்ப்பமாக, இடது கால் மூட்டுப் பிசகி, சித்தம் கலங்கித் திரிந்து கொண்டிருந்தாள். அக்ரகாரத்துக்காரர்கள் யாரோ பம்பாய்க்குச் சென்றவர்கள் தகவல் சொல்ல, கோபால் மாமாவின் தந்தை போய் அவளை மீட்டு வந்தார். பம்பாயிலேயே கருக்கலைக்கப்பட்டு, காலுக்கும் ஓரளவு சிகிச்சை அளிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டாள். அந்த நாட்களில் கங்குப் பாட்டி திக்பிரமை பிடித்தவள்போல் உத்திரத்தையே வெறித்துக்கொண்டு கிடப்பாள்; அல்லது முகத்தைக் கைகளால் மறைத்தபடி விசும்பிவிசும்பி அழுதுகொண்டிருப்பாள். மார்வாடி வைத்தியசாலையில் 11 வருட சிகிச்சைக்குப்பின் அவளது மனநிலையில் சிறிது தெளிவு ஏற்பட்டது. அப்படியும் கங்கு பெஹ்ன் பழைய கங்கு பெஹ்ன் அல்ல என்றுதான் சொல்வார்கள். ஆனால் இப்படிச் சொல்பவர்களுக்கு அந்தப் பழைய கங்கு பெஹ்னைப் பற்றி யும் அதிகம் தெரிந்திருக்கவில்லைதான்.

இளவயதில் கங்கு பெஹ்ன் பார்க்க மிக அழகாக இருப்பாள். மூக்கைத் தவிர அவள் முழுக்க முழுக்க “நர்கீஸ்’ ஜாடைதான். செக்கச் சிவந்த மேனி, விம்மித் ததும்பும் மார்பகம், அழகிய கண்கள், சிறிய கனமான அதரங்கள், ‘பஃப்’ வைத்த ஜாக்கெட் அணிந்து முத்துக்கள் பதித்த ‘பட்வா’வைத் தோளில் மாட்டிக்கொண்டு, பக்கவாட்டில் ஒயிலாக நிற்கும் அவளது அந்தக் காலத்து கலர் ஃபோட்டோவை இப்போது பார்த்தாலும் மனம் பதறாமல் இருக்காது. உலகத்தையே பரிகசித்தபடி மமதை கொண்டு மினுங்கியது அவளது இளமை! காயமே இது பொய்யடா என்று கூறியவன் முகத்தில் காறி உமிழ்ந்து விட்டு, பின் அதே கையோடு அவனைக் கட்டித் தழுவிக்கொள்ளவும் தோன்றும். 

சிகிச்சைக்குப் பின், சிறிது உற்சாகமாகக் காணப்பட்டாலும், வதங்கிய மனத்தின் ஆற்றாமையும் குரூரமும் முகத்தில் லேசாக எப்போதும் படர்ந்திருக்கும். தன் வயதையொத்தவர்களிடம் அதிகம் பேச மாட்டாள். குழந்தைகளிடமும், இளம் வயதினரிடமும் மட்டும்தான் ஏதோ பேசினாள். மாலையில் சிறுசிறு வீட்டு வேலைகள் செய்வாள். அக்கம்பக்கத்துக் குழந்தைகளுக்குப் பாட்டு சொல்லித்தருவாள். ரேடியோவில் சுரையாவின் பாட்டு போட்டால் கேட்பாள்-கூடவே அவளும் பாடுவாள் (சுரையா பாடிய ‘சோச்சா த்ஹா கியா, கியா ஹோ கயா…’, ‘ஓதூர் ஜானேவாலே… இந்த இரண்டு பாடல்களும் அவளுக்கு மிகவும் பிடிக்கும்).

அக்ரகாரத்து மற்ற விதவைகளைப் போல், சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைப்பது, காய் நறுக்கித் தருவது, பாத்திரம் தேய்ப்பது, ஹவேலிக்குச் சென்று பூத்தொடுப்பது என்றில்லாமல், ஒரு சமயம், பாட்டி ஆவேசம் வந்தவள் போல் புத்தகம் படிப்பதில் இறங்கினாள். சிறு வயதில் அவள் குஜராத்தியில் 5 புத்தகங்களும், இங்கிலீஷில் 2 புத்தகங்களும் படித்திருந்தாள். ‘குஜராத்தி மண்டல்’ லைப்ரரியிலிருந்து கோபால் பாய் மூலம் புத்தகங்களை எடுத்துவரச் சொல்லிப் படிக்க ஆரம்பித்தாள். நாட்டுப் பாடல்கள், கட்டுரைகள், நாவல்கள், சமய நூல்கள், சிறுகதைகள், சமையல் கலை என்று ஏராளமான புத்தகங்கள். தன் காரியங்களை முடித்துவிட்டு, மதியத்திலிருந்து இரவுவரை படித்துக்கொண்டேயிருப்பாள். தடிதடியான புத்தகங்களை, ஓயாமல், வருடக்கணக்கில் படித்தாள். அப்புறம் திடீரென்று ஒரு நாள் அதையும் நிறுத்திவிட்டாள். பிறகு முன்னறையில் ஒரு ஓரமாகச் சுவரில் தலையைச் சாய்த்துக்கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருப்பாள். பாட்டி அந்த நாட்களில் என்ன நினைத்தாளோ, என்ன யோசித்தாளோ! 

இப்படியாக, பாட்டிக்கு வருடங்கள் ஸ்தம்பித்து நின்றன என்றாலும், கோபால் மாமா காலேஜ் முடித்து, வேலைக்குப் போய், கல்யாணம் செய்துகொண்டு ஒரு குழந்தையையும் பெற்றுக்கொண்டார். கோபால் மாமாவின் பெற்றோர்களும் கோலோகம் போய்ச்சேர்ந்தார்கள். தன் எழுபதாவது வயதுக்குப் பிறகு, பாட்டிக்குத் திடீரென்று ஒரு நாள் மனம் திரும்பியது. கட்டடத்திலிருந்த எல்லோரிடமும் வலியச் சென்று கலகலப்பாகப் பேசத் தொடங்கினாள் பாட்டி. ஒரு நாள் காலை, குளித்து முடித்து, வெள்ளைவெளேரென்ற புடவையைக் கட்டிக்கொண்டு, கைத்தடியை ஊன்றி ஊன்றி, கட்டடத்தில் இருந்த ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அவர்களது க்ஷேமலாபங்களை விசாரித்தாள். தூங்கிவழிந்த, குளிக்காத குழந்தைகளின் தலைகளை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தாள். சில குழந்தைகளுக்கு முத்தம்கூடத் தந்தாள். முற்றத்தில் இருந்தபடி , கதவருகே நின்ற குடும்பத் தலைவிகளிடம் பொதுவாகவும், தனியாகக் குறிப்பிட்டும், பீடிகையோடு, உருக்கமாகப் பேசினாள் பாட்டி: “மகளே! பல காலமாக நான் உன்னோடெல்லாம் பேசிப் பழகாமல் இருந்து விட்டேன். என் நிலைமை அப்படி. வாஸ்தவம்தான். நான் உங்களை யெல்லாம்விட மூத்தவள்தான். ஆனால் மூத்தவர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்பதில்லையே… என்ன, நான் சொல்வது உண்மையா, பொய்யா? நீயே சொல். மனத்தைச் சின்னது பண்ணிக்கொள்ளாதே. பெரிய நாள் சிறிய நாள் வந்தால் மறந்துவிடாதீர்கள் இந்தக் கிழவியை. உன் அத்தையும் நானும் சிறு வயதில் ஒன்றாக விளையாடியவர்கள், தெரிந்துகொள். உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேள்; சங்கோஜப்படாதே. என்னாலானதை அவசியம் செய்வேன். எதையும் மனதில் வைத்துக்கொள்ளாதேடியம்மா! கடைசியில் மனிதர்களுக்கு என்னதான் வேண்டும் சொல், அன்பைத் தவிர. உலகில் உண்மையான அன்புதான் எல்லாவற்றையும்விடப் பெரிது. எனக்கு என்ன இருக்கிறது இனி, சொல். நான் போக வேண்டியவள். நீங்கள் எல்லோரும்தான் இருக்க வேண்டியவர்கள். சந்தோஷமாக இருங்கள். நான் பட்ட பாடுதான் தெரியுமே உங்களுக்கு! நூறுநூறு மனித நாய்கள் குதறிக் கிழித்த உடம்பு இது. இந்தச் சீரழிந்த உடம்பைச் சாய்த்துவிட இன்னும் மனம் வரவில்லை அந்தக் குருட்டு பகவானுக்கு. நான் உயிரோடு இருக்கும்வரை, உங்களுக்கெல்லாம் பெரியவள் நான் ஒருத்தி இங்கே உட்கார்ந்திருக்கிறேன் என்பதை நினைவில் வைத்திருங்கள். நீங்கள் எல்லோரும் என் குழந்தைகள். என் பாழும் வயிற்றில் பிறக்காத அதிர்ஷ்டசாலிக் குழந்தைகள். நன்றாக இருங்கள். சரி. சமையல்கட்டை ஒழித்துவிட்டு மதியத்திற்குப் பின் மாடிக்கு வா. பேசிக்கொண்டிருக்கலாம்.”

இவ்வாறு அன்று தன் நல்லெண்ண விஜயத்தை நான்கு கட்ட டங்களில் முடித்துக்கொண்டு திரும்பினாள் பாட்டி. பாட்டியின் பேச்சைக் கேட்டு 25ஆம் எண் கட்டடத்து 24 குடித்தனக்காரர்களும் – அதிசயித்து நின்றார்கள். பாட்டியுடைய பேச்சின் ‘மெய்ப்பொருள் காணும் அறிவு’ பலருக்கு இருந்தாலும், சிலருக்குப் பாட்டிக்குச் சுத்த மாக மரைகழன்றுவிட்டது என்று தோன்றாமலும் இல்லை.

பாட்டி விடுத்த வேண்டுகோளைக் கட்டடத்தில் இருந்த பெண்கள் மெல்ல மெல்ல ஏற்றுக்கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மதியத்திற்குப் பின் கோபால் மாமா வீட்டு முற்றத்தில் படிக்கட்டை ஒட்டிப் பெண்கள் கூடி அமர ஆரம்பித்தார்கள். பெரும்பாலும் குமரிப் பெண்கள், இளம் பெண்கள், நடுத்தர வயதுப் பெண் கள்தான். (த்ரம்பக் பாயின் மகள், மாதுரி மட்டும்தான் எல்லோரையும் விடச் சிறியவள். சனிக்கிழமைகளில் மட்டும் வருவாள். அவளுக்கு வயது 13. கொழுகொழுவென்று இருப்பாள்.) கிழவிகள் யாரும் வரவில்லை. நீண்ட மூக்கில் கண்ணாடி சரிந்திருக்க, கங்குப் பாட்டி சுவரில் சாய்ந்து நடுநாயகமாக வீற்றிருப்பாள். பல வருடங்களாகப் பேசாமலிருந்த பாட்டி இப்போது பேசுபேசு என்று பேசினாள். தான் படித்த புத்தகங்களிலிருந்து கதை சொன்னாள், பாட்டு பாடினாள், விடுகதை போட்டாள். மருதாணி இட்டு விட்டாள். ஜடை பின்னி விட்டாள். விதவிதமாகக் கொண்டை போட்டு விட்டாள். எம்பிராய்டரி போட, ஸ்வெட்டர் பின்ன, ரங்கோலி போட, கண்ணாடியில் மயில் படம் வரைய, ஊறுகாய்கள் போட, பிஸ்கட், கேக் செய்ய என்று பலவற்றையும் கற்றுத்தந்தாள். பாட்டிக்குத் தெரியாத விஷயமே இல்லை என்று எல்லோருமே நினைத்தார்கள். பாட்டியும் புதுப்பெண்ணின் உற்சாகத்துடன் அக்ரகாரத்துப் பெண்கள் எல்லோரையும் ஒரே வாரத்தில் அரவணைத்துக்கொண்டாள். பாட்டி படித்தவள் என்பதால் எதைப்பற்றியும் பேசினாள். ஆசாரகுஜராத்திப் பெண்கள், குறிப்பாக விதவைகள், பேசக் கூசும் விஷயங்களை அவள் தயக்கமோ விகற்பமோ இல்லாமல் பேசினாள். பாலியல் உறுப்புகள், உணர்வுகள், உறவுகள் பற்றியெல்லாம் கூட அவள் கூச்சமில்லாமலும் துடுக்காகவும் பேசினாள். பாட்டியின் இந்தப் பக்கத்தைக் கண்டு, கட்டடத்துப் பெண்கள் முதலில் திடுக்கிட்டுத்தான் போனார்கள். ஆனால் பாட்டியின் குழந்தை மனமும் கூர்மையான நகைச்சுவை உணர்வும் புரியப் புரிய அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. கேட்பவர்கள் நாணி நெளிந்தாலும், உள்ளூர ரசித்துக் குதூகலிக்கும்படி இருந்தது அவள் பேச்சு. இன்னும், தாங்கள் பேச முடியாததைப் பாட்டி பேசுகிறாள் என்று பலருக்கு மகிழ்ச்சியாகக்கூட இருந்தது.

அந்த பாட்டிக்கு அக்ரகாரத்து ஆண்கள் மேல் அவ்வளவு மதிப்பு கிடையாது. எல்லோரையும் ‘டா’ போட்டுதான் பேசுவாள். முதுகுக்குப் பின்னால் மட்டுமரியாதை இல்லாமல் ‘ராண்ட்நா ‘ என்றும் அழைப்பாள். குஜராத்தியில் ‘ராண்ட் நா’ என்பதைத் தமிழில் தோராயமாக “தேவடியா மகனே’ அல்லது ‘அவிசாரி மகனே’ என்று மொழி பெயர்க்கலாம். பாடைகட்டும் ரஜ்னி மாமாவைப் பாட்டிக்கு மிகவும் பிடிக்கும். அதனால், அவரை முகத்துக்கு நேராகவே ‘ராண்ட்நா’ என்று அழைப்பாள். தேனொழுகும் வாத்சல்யத்துடன் அவள் அந்தச் சொல்லை உச்சரிக்கும்போது தொல்காப்பியம் வரையறுக்கும் பொருள் – மயக்கம் ஏற்பட்டுவிடும். இதேபோல் பாட்டி ஏராளமான குஜராத்தி வசைச் சொற்களை அச்சுவெல்லம்போல் அழகாகப் பயன்படுத்துவாள். “உன் ஆசன வாயில் தீயை வைக்க” என்று அவள் சொல்லும்போது நம் நெஞ்சைத் தென்றல்தான் வருடியதோ என்று இருக்கும். (சபைக்கு வந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் பாட்டி ஒரு பட்டப் பெயர் சூட்டினாள். “சின்ன டேக்ஸா’, ‘பெரிய டேக்ஸா’, ‘வெள்ளைப் பன்னி’, ‘குண்டு ராணி’, ‘ஒட்டடைக் கொம்பு’, ‘தவளை’, ‘யாட்லி’, ‘டபுள் ரொட்டி’, ‘ஸ்டைல் மாமி’, ‘லலிதாஜி’, ‘சந்திரபாபு’ என்று ஒவ்வொருத்திக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. பாட்டி தனக்கும் ஒரு பெயரைச் சூட்டிக்கொண்டாள்-‘விடியாமூஞ்சி.’ இது தவிர, பாலியல் உறுப்புகளுக்கும்கூடப் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன. ஆண்குறியை “வஸ்து’ என்றும், பெண்குறியை ‘கபிலவஸ்து’ என்றும், புட்டத்தை ‘டேக்ஸா’ என்றும் அழைத்தார்கள். முதலில் கூச்சப்பட்டவர்கள்கூட நாளடைவில் இந்தச் சங்கேத வார்த்தைகளின் நுண்பயன் கருதி அவற்றை ஏற்றுக்கொண்டார்கள். ஒவ்வொரு நாளும், “இன்று உன் வீட்டில் என்ன சமையல்” என்றுதான் ஆரம்பிப்பார்கள். பிறகு பேச்சு ரேஷன் கார்டு, பால் கார்டு, பஞ்சாப் கோதுமை, பூஜை, மாமியார், நாத்தனார், வெய்யில் கொடுமை, சல்மான்கானின் வெற்று மேலுடம்பு, தண்ணீர்ப் பிரச்சினை, உடைகள், என்று எங்கெல்லாமோ போகும். எப்படியும், ஒவ்வொரு நாளும் வஸ்துவையும் கபிலவஸ்துவையும் பற்றிச் சொல்லி யாரையாவது சீண்டிக்கொண்டிருப்பாள் பாட்டி. பாட்டியிடம் அகப்படுபவர்கள் முதலில் சங் கோஜப்பட்டாலும் பிறகு, அவர்களாகவே முன்வந்து அதைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். குறிப்பாக, இளம் பெண்கள் லஜ்ஜை குறைந்து உற்சாகமாகக் கலந்துகொண்டார்கள். பாட்டியும் தனக்கு மெத்தப் படித்த மேதாவி என்ற பிம்பம் இருந்ததால் தாறுமாறாகப் பேசி எல்லோரையும் துணுக்குறச் செய்தாள். (சபை நடவடிக்கைகள் சிறுசிறு அனுபந்தங்களாகக் கீழே தரப்பட்டுள்ளன.) வெடுக் வெடுக்கென்று பாட்டி பேசுவது பார்க்கவும் கேட்கவும் மிக அழகாக இருக்கும். அக்ரகாரத்துப் பெண்கள் பாட்டியின் உண்மையான அன்பிலும் பச்சைபச்சையான பேச்சிலும் நெகிழ்ந்து கிளுகிளுத்துப்போனார்கள்.

அக்ரகாரத்துப் பெண்கள் மற்றும் பாட்டியின் இந்தப் பரிபாடிகளில் இன்றுவரை மாற்றம் இல்லை. என்ன, கடந்த சில மாதங்களாகப் பாட்டியின் உடல்நிலைதான் கொஞ்சம் படுத்துகிறது. 

*** 

“ஏண்டி லலிதாஜி, கல்யாணமாகி ஆறு மாதமாகிறது, இன்னும் கட்டுக் குலையாமல் அப்படியே இருக்கிறாய். வஸ்து கபிலவஸ்துவுக்கு வருவதில்லையா? அல்லது நீதான் கபிலவஸ்துவின் கதவுகளை மூடி வைத்துவிட்டாயா?”

“எனக்குதான் இஷ்டமில்லை பாட்டி, வஸ்துவைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது.”

“ஆறு மாதமாகிறது. இன்னும் என்னடி பயம்? தைரியமாக இரு. தேவையானால் டாக்டரிடம் போ. பயம் பயம் என்று கோட்டை விட்டுவிடாதே. (குஜராத்தி) ஆண்களுக்கு இரண்டு விஷயம்தான் முக்கியம். ஒன்று சப்பாத்திகள், மற்றது கபிலவஸ்து. ஞாபகம் வைத்துக் கொண்டு சமர்த்தாய் இரு.” 

*** 

“பாட்டி, நீங்கள் விரதப் புத்தகமெல்லாம் படித்திருக்கிறீர்களா?”

“ஓ! படித்திருக்கிறேனே சந்திரபாபு! என்ன வேண்டும் சொல்.”

“ஏதாவது ஒரு நல்ல விரதமாகச் சொல்லுங்கள்.”

“ஏன்”

“வீட்டில் ஒரே பிரச்சினை.”

“என்ன, வஸ்துவால் நிற்க முடியவில்லையா?”

“தூ… எந்த நேரத்தில் என்ன பேசுகிறீர்கள்!”

”இல்லைடி, அதற்கெல்லாம் கூட விரதம் இருக்கிறது தெரியுமோ?”

இடையில், வெள்ளைப் பன்னி “’நிஜமாகவா பாட்டி! எனக்குச் சொல்லுங்கள், எனக்குச் சொல்லுங்கள்” என்றாள். பாட்டி “ச்சீ நாயே! இன்னும் கல்யாணம்கூட ஆகவில்லை, அதற்குள் அதெல்லாம் எதற்கு உனக்கு?” என்று அவள் முதுகில் அறைந்தாள். “எனக்குச் சொல்லு பாட்டி, எனக்குதான் கல்யாணமாகிவிட்டதே என்று காதை நீட்டினாள் தவளை. பாட்டி தவளையின் காதில் ஏதோ கிசு கிசுத்தாள். உடனே, “ஐய்யெ… ச்சீ, இதெல்லாம்கூட ஒரு விரதமா” என்று அலறினாள் தவளை. “இல்லையா பின்னே” என்ற பாட்டி சந்திரபாபுவிடம் திரும்பி “உன் வீட்டில் என்ன பிரச்சினை” என்று கேட்டாள்.

”எவ்வளவு பணம் வந்தாலும் பத்த மாட்டேனென்கிறது. வீட்டில் ‘பர்கத்’தே இல்லை .

“அடியே, இதற்கெல்லாம் விரதம் கிடையாது. அப்படியே இருந்தாலும் நீ அந்த விரதம் இருப்பதைவிட *சிதம்பரத்தையே” இருக்கச் சொல்லிவிடலாம். உன் பிரச்சினைதான் இந்த நாட்டுக்கும்.” 

(*ப. சிதம்பரம், பலமுறை இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்தவர்).

சந்திரபாபு பேசாமல் இருந்துவிட்டாள். ஆனால், சபை கலையத் தொடங்கியபோது, பாட்டி சந்திரபாபுவுக்கு இரண்டு மூன்று விரதங்களைப் பற்றிக் கூறினாள். கூடவே, இதையும் சொன்னாள். “இதோ பார், விரதங்களால் பெண்களுக்குத்தான் பாதிப்பு. உலகில் உள்ள எல்லா விரதங்களையும் பெண்கள்தான் செய்ய வேண்டியிருக்கிறது. ஆண்களுக்கு ஒரு விரதமும் கிடையாது. நாய்கள் தின்றுவிட்டு ஊர்சுற்றத்தான் லாயக்கு. எனவே யோசித்துச் செய்…”

***

“என் மாமியார் உன்னைக் கண்டபடி திட்டுகிறாள். உனக்கும் அவளுக்கும் என்ன பிரச்சினை பாட்டி?”

“என்ன சொன்னாள்?”

“வண்டைவண்டையாகப் பேசும் துக்கிரி முண்டை , அவள் உடம்பும் அழுக்கு, மனசும் அழுக்கு என்கிறாள்.”

“அவள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். என் உடம்பு அழுக்கு படிந்த உடம்புதான். இந்தியாவிலிருக்கும் எல்லா ஜாதி நாய்களும் என்னை துவம்சம் செய்திருக்கிறார்கள். ஏன், வெள்ளைக்காரன்கூட என் மேல் படுத்திருக்கிறான். இதைத்தான் சொல்கிறாள். மற்றபடி என் மனசைப் பற்றி அவளுக்கு என்ன தெரியும்? இதைச் சொல்வதற்காக அதையும் சேர்த்துச் சொல்கிறாள்… நாள் கணக்கில் அம்மணக் குண்டியாகவே படுக்க வைத்து என் உறுப்பிலும் ஆசன வாயிலும் மாறிமாறிக் குறிகள் நுழைந்து கொண்டேயிருக்கும்… மடி, ஆசாரம் பார்த்த இந்த வைஷ்ணவ முண்டையின் வாயில் கதறக்கதற ”ரம்”மும் பிரியாணியும் திணித்துத் திணித்து… இந்தக் கஷ்டமெல்லாம், அக்ரகாரத்தில் பாதுகாப்பாக உடம்பெல்லாம் புடவையைச் சுற்றிக்கொண்டு புருஷனுக்குக்கூட அளவாய்த் திறந்து காட்டிய உன் மாமியாருக்கு எங்கேடி புரியும் சொல். அவள் கிடக்கிறாள், விடு.”

“அழாதே பாட்டி.”

”நான் எங்கேடி அழுகிறேன். அழ வேண்டியதெல்லாம் எப் போதோ அழுது முடித்துவிட்டேன்.”

***

“பாட்டி ஆத்மா அழியாது என்கிறார்களே, ஆத்மா என்றால் என்ன ?”

“யார் சொன்னது குண்டு ராணிக்கு இதைப் பற்றியெல்லாம்?”

”நேற்று பாகவதம் சொன்ன பெரியவர் சொன்னார்.”

“என்ன சொன்னார்?”

“உடல் அழிந்தாலும் ஆத்மா அழியாது என்றார்.”

“அப்படியா சொன்னார்? உன்னைப் பார்த்தா சொன்னார்?”

“இல்லை, பொதுவாகச் சொன்னார்.”

“ஓ, அதுதான் நீ தவறாகப் புரிந்துகொண்டுவிட்டாய். பெண்களுக்கு ஆத்மா கிடையாது, தெரியுமா உனக்கு?”

“என்ன பாட்டி இப்படிச் சொல்கிறாய்! எனக்கு ஆத்மா இல்லையா?” 

“வருத்தப்படாதே. எனக்கும்தான் ஆத்மா இல்லை. இங்கேயிருக்கும் யாருக்கும் ஆத்மா இல்லை. பெண்களுக்கே ஆத்மா கிடையாது.”

“பின்னே அவர் சொன்னாரே, “நம் எல்லோருடைய உடல்களும் அழிந்துவிடும், ஆனால் ஆத்மாக்கள் மட்டும் அழியவே அழியாது’ என்று ?”

“அவர் ஆண்களுக்காகத்தான் சொல்லியிருப்பார். நமக்காக அல்ல. ஆத்மா இருப்பவர்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும், அது அழிகிறதா இல்லையா என்று. நாம் கவலைப்பட வேண்டியதில்லை. நமக்குதான் ஆத்மாவே இல்லையே!” 

“அப்படியானால், ஆத்மா இல்லாமல் நாமெல்லாம் எப்படி மறுபிறவி எடுக்க முடியும்?”

“இது யார் சொன்னது?”

“அவரேதான்.”

“நீ மறுபிறவி எடுக்க விரும்புகிறாயா?” 

“ஆமாம்… ஆனால் எனக்குதான் ஆத்மா இல்லை என்று சொல்லிவிட்டாயே!”

“ஒரு வகையில் அதுவும் நல்லதுதான். ஒருவேளை உனக்கு ஆத்மா இருந்து, நீ மறுபிறவி எடுக்கும் வாய்ப்பிருந்தாலும்கூட, என் அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன், நீ அதிகம் போனால் ஹரியானாவில் கறவைப் பசுவாகத்தான் மறுபிறவி எடுக்க முடியும். உனக்கு இந்தப் பிறவியே போதும். பார், எவ்வளவு அழகாக இருக்கிறாய் ஜம்மென்று! ஆத்மா கீத்மா என்று கவலைப்படாதே. வாழ்வதற்கு நல்ல உடம்பு ஒன்று போதும். சரி, விடு. இந்தப் பிறவியில் நீ என்ன ஆகப்போகிறாய்?”

“டாக்டராக, ஆனால் எனக்கு சயின்ஸே வரவில்லை .”

“எல்லாம் வரும், கவனமாகப் படி. மனதுவைத்தால் எதையும் சாதிக்கலாம்.”

“மனதுவைத்தால் ஆத்மாவைப் பெற முடியுமா?” 

“அடியே, உனக்கென்ன பைத்தியமா பிடித்துவிட்டது! மனது வைத்தால் சாகக்கூடசாகலாம். ஆனால் ஆத்மாவை மட்டும் அடைய முடியாது. கடவுள் பெண்களுக்கு ஆத்மா தேவையில்லை என்று எப்பவோ முடிவுசெய்துவிட்டார். ஆத்மா இல்லாவிட்டால் ஒன்றும் பாதகம் இல்லை. சந்தோஷமாக இரு.”

பாட்டி சொன்னதை நம்பியும் நம்பாமலும் நிராசையுடன் போனாள் குண்டு ராணி. டபுள் ரொட்டி, பாட்டியிடம் “என்ன ஒரே போடாய்ப் போட்டுவிட்டாய் பாட்டி?” என்றாள். “பின்னே என்ன, எல்லாச் சாமியார்ப் பயல்களும் காலங்காலமாக “உடல் அழியக் கூடியது உடல் அழியக்கூடியது’ என்று சொல்லிச் சொல்லியே உடலைக் கேவலப்படுத்திவிட்டார்கள். இப்படிச் செய்தால் உடம்பை சந்தோஷமாகவும் சௌக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று எவளுக்காவது தோன்றுமா? உடம்பு சந்தோஷமாக இருந்தால் தானேடி மனம் சந்தோஷமாக இருக்கும், தன்னம்பிக்கை வரும். உடம்பைச் சிறுமைப்படுத்துவதால் ஒரு முன்னேற்றமும் ஏற்படாது – லௌகீகத்திலும் சரி, ஆன்மீகத்திலும் சரி. சோம்பேறித்தடியர்கள்தான் உருவாவார்கள். 13 வயதுக்குழந்தை உடல் அழியும், ஆத்மா வேண்டும், மறுபிறவி வேண்டும் என்று பினாத்துகிறாள். என்ன கேடுகாலம் இது!” என்றாள் பாட்டி.

***

“பாட்டி உலர்ந்த-மாங்காய் ஊறுகாய் போடுவதற்கு மிளகாய் எவ்வளவு பாகம்?”

“அது உன் டேக்ஸாவின் எரி-எதிர்ப்புத்திறனைப் பொறுத்தது.”

(இப்படிக் கூறினாலும் பாட்டி சபை முடிவில் மிளகாயின் சரியான அளவைச் சரியானபடி கூறிவிடுவாள்.) 

*** 

“கபிலவஸ்துவில் சந்தோஷமும் இல்லை, திருப்தியும் இல்லை. பின் இந்தக் கபிலவஸ்துவால் பெண்களுக்கு என்ன லாபம்?”

“இது மிக நல்ல கேள்வி” என்று டி.வி.யில் பேட்டி காணப்படுபவர் சொல்வதுபோல் அமரிக்கையாக ஆரம்பிப்பாள் பாட்டி. “ஒட்டடைக் கொம்பே, கபிலவஸ்துவில் சந்தோஷம் விளையாததற்கு முக்கியக் காரணம் வஸ்துதாரிகளின் அறியாமைதான். கபிலவஸ்துவின் நுட்பங்கள் தெரியாமல் ‘போன மச்சான் திரும்பி வந்தான்’ என்கிற மாதிரி இருந்தால் என்ன பயன்? உலகில் உள்ள பெரும்பான்மையான கபிலவஸ்து சாஸ்திர நிபுணர்களின் கருத்துப்படி, பொதுவாக, கபிலவஸ்துவில் பிரச்சினைகள் இருக்க நியாயமே இல்லை. எங்கோ லட்சத்தில் ஒரு கேஸ், இரண்டு கேஸ்களில் இயற்கையான நீர் வறட்சி இருக்கலாம். அதற்கும் சிகிச்சை உண்டு. மற்றபடி பெரும்பாலான கபிலவஸ்துகளில் இதமும் பதமும் குறைவதற்கு வஸ்துதாரிகளின் அவசரப் புத்திதான் காரணம். கபிலவஸ்துவின் அந்தப்புரத்துக்குள் வருவதற்கான சரியான பத்ததிகளை நீதான் உன் புருஷனுக்குச் சொல்லித்தர வேண்டும்.”

“கடவுளே, இதையெல்லாமா பேச முடியும்?”

“பேசித்தான் தீர வேண்டும். உங்கள் காலம் எவ்வளவோ பரவாயில்லைடி. எங்கள் காலத்தில் வஸ்துவையே கண்ணால் பார்க்க முடியாது. ஆனால் குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொண்டே இருப்போம்.”

***

“என் அத்தையின் தொல்லை தாங்கலை பாட்டி”

”சரியான பஜாரியாச்சே அவள், என்ன செய்தாள்?”

“சிடுசிடு என்று எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கிறாள். வேலைமேல் வேலை கொடுத்துக்கொண்டே இருக்கிறாள். நேற்று 12 கிலோ கோதுமையைக் கொடுத்து சாயங்காலத்திற்குள் பொறுக்கி வைக்கச் சொல்லிவிட்டாள். இடுப்பு உடைந்துவிட்டது.” 

“கல்யாணமாகி வந்த புதிதிலிருந்தே எனக்கு அவளைப் பற்றிப் தெரியும்டி. அவள் சிரித்து யாருமே பார்த்ததில்லை. அப்படியே எப்போதாவது அவள் சிரித்தால் சிவகாசி காலண்டர் பூனை சிரிப்பு போல் இருக்கும்.

“பூனை சிரிக்குமா பாட்டி?” *

“அசடே, பூனை எங்கேயாவது சிரிக்குமா? அப்படி வரைந்திருப்பார்கள். சரி, இதற்கு உன் புருஷன் என்ன சொல்கிறான்? சரியான உப்பில்லாத மடையனாச்சே அவன்!”

“அவருக்கு ஒன்றுமே தெரியாது. இவளால் எங்களுக்குள்ளும் பிணக்கு. அவர் தினமும் வேண்டும் என்கிறார். ஆனால் என்னால் முடியவில்லை பாட்டி.” 

”அடப் பாவமே. சின்னஞ்சிறுசுகள். இப்போது இல்லாமல் எப்போது சந்தோஷமாக இருப்பது?”

“என் மார் ரொம்பக் குலுங்குகிறதாம், தேவடியாள் மாதிரி. அதனால் மேக்ஸி போடக் கூடாது என்று சொல்லிவிட்டாள்.”

“அதெல்லாம் ஒன்றும் இல்லேடி, உன் மாருக்கென்ன… செப்புக் குடமாட்டம் அளவாகத்தானே இருக்கிறது. நீ அழாதே. உன் மாமியாருக்குப் பொறாமை, அதான். அவளுக்கு எந்தக் காலத்திலும் மாரே இருந்ததில்லை. சப்பாத்திக் கல் மாதிரிதட்டையாகத்தான் இருக்கும். நான் சொல்வதைக் கேள். மூன்று நாளைக்கு டீயில் பேதி மருந்தைக் கலந்து கொடுத்துவிடு. 40, 50 தடவை கொல்லைக்குப் போய்ச் சுருண்டு படுத்தால்தான் அவள் கொட்டம் அடங்கும்.”

“ஆனால் அது பாவமில்லையா?”

“பாவம் புண்ணியமெல்லாம் பார்த்தால் உன் காரியம் நடக்குமா? என்னைக் கேட்டால் உன் மாமியாரை விஷம் வைத்துக்கூடக் கொன்றுவிடலாம். நீ அழாதே போ. உன்னை மாதிரி சமர்த்து மருமகள் கிடைக்கக் கொடுத்துவைத்திருக்க வேண்டுமே அந்த முண்டைக்கு.” 

***

“வாடி, காலேஜ் டூரெல்லாம் எப்படியிருந்தது?”

“ஃபர்ஸ்ட் க்ளாஸ் பாட்டி. ஒரு வாரம் பயங்கர சந்தோஷமாக இருந்தது.”

“‘ஊட்டியெல்லாம் நன்றாகச் சுற்றிப்பார்த்தாயா?”

“ஊட்டி என்ன, உலகத்தையே பார்த்துவிட்டு வந்திருக்கிறேன் பாட்டி.”

“என்னடி சொல்கிறாய்?” –

“பெண்களுக்கு இனி வஸ்துவே தேவையில்லை என்று நிரூபித்துக் காட்டிவிட்டாள் அவள்.”

“யாரவள்?”

“அகிலாண்டேஸ்வரி. என்கூடப் படிக்கிறவள்.”

“என்னடி செய்தீர்கள்?”

“எல்லாமே… அதையெல்லாம் வாயால் சொல்ல முடியாது. அனுபவித்துப் பார்க்க வேண்டும்.”

“அடியே, சுத்தபத்தமாக இருந்துகொள்ளுங்களடி.”

“எனக்கு ஒரு பயமும் கிடையாது. யார் தயவும் வேண்டாம் இனி எனக்கு. அகிலா ஒருத்தி போதும்.”

“உன் அம்மாக்காரி சும்மா விடுவாளாக்கும். நிலத்துக்கேத்த உழவனைக் கூட்டிவந்துவிட மாட்டாளா?”

“அதெல்லாம் என்னிடம் நடக்காது. பார்த்துக்கொண்டே இரு. அது சரி பாட்டி, இதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”

“அடி நாசமாய்ப் போனவளே, நானே ஒரு ஆத்திர அவசரத்துக்கு என் டேக்ஸாவைச் சொரிந்து விடக் கையைக்கூட மடக்க முடியாமல் கிடக்கிறேன். என்னிடமா வந்து கேட்கிறாய்? நான் சொன்னால் உடனே சட்டம் போட்டுவிடுவார்களாக்கும்… சனியனே!”

“அகிலாகூட உன்னைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள் பாட்டி.” 

“கிண்டலா செய்கிறாய்! அடியே! உன் டேக்ஸாவில் ஒரு உதை விட்டேனென்றால்… தெரியும் சங்கதி.”

***

”கங்குப் பாட்டி, உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா ?”

“சில சமயம் நம்புவேன்; சில சமயம் மாட்டேன்.”

“தீர்மானமாக இல்லையாக்கும்.”

”உலகில் எதுவும் தீர்மானமானதில்லைடி. பயம் ஏற்படும்போதோ என்னை நானே சகித்துக்கொள்ள முடியாதபோதோ கடவுளை நம்புவேன். மற்றபடி நம்ப மாட்டேன்.”

“ஏன் அப்படி?”

“அது அப்படிதான். நீ மேலே சொல்லு.”

”நம்ம புஷ்டி மார்க்கத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.”

“புஷ்டி மார்க்கம் காலாவதியாகிவிட்டது.”

“என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? நேற்றுக்கூட அந்த பாகவதர் சொன்னாரே… புஷ்டி மார்க்கம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறதென்று…”

“மகளே, உடுப்பி ஓட்டல் சரக்கு மாஸ்டர்கள்போல் தொந்தியும் தொப்பையுமாக இருக்கிற இந்த பாகவதர்களுக்கு ஒரு இழவும் தெரியாது. அவர்கள் ஒவ்வொரு ஊரிலும் பணக்காரர்கள் வீட்டு கார்களில் ஏறி மிதந்து கொண்டே இருப்பார்கள். உனக்கும் எனக்கும்தான் தெரியும். இந்த அக்ரகாரத்தைத் தாண்டிப் போனால் புஷ்டி மார்க்கம் இல்லை, சென்ட்ரல் ஸ்டேஷன்தான் இருக்கிறது என்று.”

“இவ்வளவு வயதான நீங்களே இப்படி அபசாரமாகப் பேசலாமா?”

“அபசாரம் ஒன்றும் இல்லையடி; வாஸ்தவத்தைத்தான் சொல்கிறேன். வல்லபாச்சாரியார் முக்தியடைந்த காலத்திலிருந்தே புஷ்டி மார்க்கத்தைப் பற்றி ஏகப்பட்ட ‘கம்ப்ளையிண்டுகள் உண்டு.”

“அப்படியானால் நம் போன்ற வைஷ்ணவர்களின் கதி? நாம் வேறு எந்த மார்க்கத்தைத்தான் பின்பற்ற முடியும்?”.

“இந்து மதத்தில் இரண்டு முக்கிய தாரைகள் உண்டு. ஒன்று நீயே கடவுள் என்று சொல்வது; மற்றது கடவுள் வேறு, நீ வேறு என்று சொல்வது. இரண்டாவதில் சில உட்பிரிவுகளும் உண்டு. கடவுளைத் தேடி நீ போ என்று, கடவுள் உன்னைத் தேடி வருவார் என்று, நீ பாதி வழியில் போய் நின்றுகொள், மீதிப் பாதி வழியைக் கடவுள் கடந்து வந்து உன்னை ஆட்கொள்வார் என்று. நீ இந்த வம்பிலெல்லாம் மாட்டிக்கொள்ளாதே. நீ நல்லவளாக இருப்பதற்கு இதெல்லாம் அவசியமில்லை. கடவுள் இல்லாமலேயே நாம் நல்லவர்களாகவும் இருக்க முடியும், துஷ்டர்களாகவும் இருக்க முடியும்.”

“நீங்கள் எந்தக் கடவுளை நினைத்துக்கொள்வீர்கள் – அதாவது நம்புகிற சில சமயங்களில்?”

“நானா, நான் பாலகிருஷ்ணனைத்தான் நினைத்துக்கொள்வேன். ஆனால் அது பழக்கதோஷம்டி, அதைப் பெரிதுபடுத்தாதே. பொதுவாகக் கடவுளை நம்பாமல் இருப்பதில்தான் அனுகூலங்கள் அதிகம்.”

”இப்படி விவஸ்தை கெட்டத்தனமாகப் பேசுவதற்காகவா அவ்வளவு புத்தகங்களையும் படித்தீர்கள்?”

“புஸ்தகம் படித்தவர்கள் எல்லாம் விவஸ்தை உள்ளவர்கள் என்று யார் உனக்குச் சொன்னது?” 

“விளையாடாதீர்கள் கங்குப் பாட்டி. நான் தூய எண்ணத்தோடு கேட்கிறேன். அவ்வப்போது என்றில்லாமல் எப்போதுமே நான் கடவுளை நம்ப விரும்புகிறேன்.”

“நீ அழுக்கான எண்ணத்தோடு கேட்டாலும் தப்பில்லை. உனக்கு என்ன பிரச்சினை இப்போது… கும்பிடுவதற்குக் கடவுள் வேண்டுமா அல்லது பின்பற்றுவதற்கு மார்க்கம் வேண்டுமா?”

“இரண்டும்தான் வேண்டும்.”

“அதற்கு நீ ஏதாவது ஒரு மடத்தில்தான் போய்ச் சேர வேண்டும். உண்மையைச் சொல்கிறேன் தாயே, மார்க்கங்களின் காலம் முடிந்து விட்டது. கூட்டத்தோடு கோவிந்தா போடுவதுதான் முடியும் இப்போது. இளம் பெண் நீ, மார்க்கம் கீர்க்கம் என்று ஏன் அலட்டிக் கொள்கிறாய்? உனக்கு இஷ்டப்பட்ட எல்லாக் கடவுள்களையம் கும்பிடு அல்லது அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கும்பிடு. உன்னை மாதிரி இருப்பவர்களுக்காகத்தான் இந்து மதத்தை ஒரு சூப்பர் மார்க்கெட் மாதிரி அமைத்திருக்கிறார்கள். உனக்குப் பிடித்த அயிட்டத்தை நீ எடுத்துக்கொள்ளலாம்.”

“இப்படி எல்லாம் பேச உங்களுக்கு பயமாயில்லையா பாட்டி?”

“மனத்தில் பட்டதைச் சொல்வதற்குப் பயப்படுவானேன்?”

***

“பாட்டி, வஸ்துவை டேக்ஸாவில் போட வேண்டுமாம்.”

“உன் புருஷன்தானே, அந்த அக்கிரமி செய்தாலும் செய்வான். சரி, விடு. அப்படியும்தான் ஒரு நாள் இருக்கட்டுமே.”

“பாட்டி, என்ன நீ சுத்த கூறுகெட்டவளாக இருப்பாய் போலிருக்கிறதே!”

“அடியே, வீணாகப் பதறாதே. உலகத்தில் எதுவுமே புனிதமானது இல்லை. நிச்சயமாக உன் டேக்ஸா புனிதமானதே இல்லை. இந்து மதம் என்ன சொல்கிறது-உடல் தூய்மையற்றது; அழியக்கூடியது என்று. அழியக்கூடிய உடலிலிருந்து இப்படி ஒரு சந்தோஷம் கிடைக்கிறது என்றால் கிடைக்கட்டுமே.”

“நீ சரியான வக்கிரம் பிடித்தவள். உன்னிடம் வந்தேன் பார்!”

“வெளிப்படுத்திவிடுகிற வக்கிரத்தைவிட, தேக்கி வைத்திருக்கிற வக்கிரம்தான் அபாயமானது. தவிர, வக்கிரம் எதில்தான் இல்லை? பார்க்கப்போனால் எல்லாமே வக்கிரம்தான். என் பேச்சைக் கேள். உனக்கு நிச்சயமாக விருப்பம் இல்லையென்றால் தீர்மானமாக மறுத்துவிடு. ஆனால், நீ அரைமனத்துடன் இருந்தால் பரீட்சித்துப்பார். அதனால் உனக்குச் சில அனுகூலங்களும் ஏற்படலாம்.”

“கிழவி, நீ நாசமாய்த்தான் போவாய்.” 

***

“நான் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்.”

“பெரிய டேக்ஸாவுக்கு அப்படி என்ன சோகம்?”

“ஒன்றும் சரியில்லை. மனம்விட்டுப்போய்விட்டது. யாரையும் பிடிக்கவில்லை. எல்லோரையும் போட்டு மொத்த வேண்டும்போல் இருக்கிறது.”

“உன் வயது என்னடி?”

“47”

“இந்த வயதில் அப்படித்தான் இருக்கும். உன் உடம்புக்குள் மாறுதல் நடக்கிறது.”

“என்ன மாறுதலோ போ பாட்டி, நான் சாகத்தான் போகிறேன்.”

“அப்படிச் சொல்லாதேடி. அது எளிதில்லை. தற்கொலை செய்து கொள்வதற்கு நிறைய கோழைத்தனம் வேண்டும். நீதான் தைரியசாலியாயிற்றே. நீ சாகமாட்டாய். பேரன் பேத்தி எடுத்தபின் எமன் வந்து வெற்றிலை, பாக்கு வைத்து உன்னை அழைத்துப் போவான். தவிர தற்கொலை செய்துகொள்வதென்றால் 30 வயதுக்குள் செய்து கொண்டுவிட வேண்டும். அதற்குப் பின் செய்து பயன் இல்லை. ஒரே குழப்பம் ஆகிவிடும்.”

***

“முன்பு மாதிரி வஸ்துவுக்குக் கபிலவஸ்துவுக்குள் நுழைய முடியவில்லை பாட்டி .”

“ஏன், என்ன ஆச்சு?”

“ஒரு நிமிடத்துக்குள் வழுக்கிவிடுகிறது.”

“அடப் பாவமே, பழைய ஜபர்தஸ்து போய்விட்டதாக்கும்… நாப்பத்தைந்து வயதுக்குள்ளாகவா… உன் புருஷன் பாஸ்கட் பால் ப்ளேயராட்டம் நெடுநெடுவென்று லட்சணமாக இருப்பானே. அவனுக்கா இப்படி? சரி சரி, அதற்காக வேறு வஸ்துவைத் தேடி நீ போய்விடாதே. உன் புருஷன் அப்பாவி.”

“ஆமாம் பாட்டி, பர்மாபஜாரில் வஸ்து மாதிரி மிஷினெல்லாம் கூடக் கிடைக்கிறதாமே!”

“பர்மா பஜாரில் நிஜ வஸ்துவே கிடைக்கும். நான் சொல்வதைக் கேள். மிஷின் கிஷின் எல்லாம் சரிப்பட்டுவராது. விலையும் ஜாஸ்தி. அப்புறம் உன் மாமியாருக்குத் தெரிந்தால் உன் டேக்ஸாவைக் கிழித்து விடுவாள். உசிதமானது- மாதத்திற்கு ஒரு முறை கபிலவஸ்துவுக்குள் வஸ்து வரட்டும். மற்ற சமயத்தில் கைப்பக்குவமாக ஏதாவது செய்து கொள்ளுங்கள்.”

“பாட்டி, உனக்கு அபார மூளை.”

“ஏண்டியம்மா திடீரென்று என் மூளையைப் பாராட்டுகிறாய்?”

”நான் நினைத்ததை நீ அப்படியே சொல்லிவிட்டாய்.”

”அப்படியா! எவ்வளவு சமத்துடி நீ! ச்சீ நாயே, உன் டேக்ஸாவில் தீயை வைக்க… இவள் நினைத்தாளாம், நான் சொல்லி விட்டேனாம்!”

***

“உனக்கு உன் சின்ன வயது ஞாபகம் இருக்கிறதா பாட்டி?”

“இப்போது அதைப் பற்றி என்ன?”

“நீ சின்ன வயதில் ரொம்ப அழகாக இருப்பாயாமே?”

“அப்படியா! யாரடீ சொன்னது? சின்ன வயதில் ஒட்டகம்கூடத்தான் அழகாக இருக்கும்?” 

“இப்போது திடீரென்று நீ சின்னப் பெண்ணாக மாறிவிட்டால் எப்படி இருக்கும்?”

“நான் சின்னப் பெண்ணாக மாறவேண்டும் என்றால், நீ உன் அம்மா வயிற்றுக்குள்ளும், உன் அம்மா உன் பாட்டி வயிற்றுக்குள்ளும் போயாக வேண்டும். பைத்தியம் போல் உளறாதே.”

“உன் கடந்த காலத்தை நீ நினைத்துக்கொள்ளவே மாட்டாயா?”

“கடந்த காலம் கடந்துவிட்டது. நானோ நீயோ அதை நினைத்து என்ன ஆகப்போகிறது?” 

”உன் இளமைக் காலத்தை நீ நேசிக்கவே இல்லையா? வருத்தமோ சந்தோஷமோ எதுவுமே இல்லையா உனக்கு?”

“மனிதர்கள் எந்தக் காலத்தையும் நேசிக்கக் கூடாதடீ. சொல்லப் போனால், காலம் என்ற ஒன்று கிடையவே கிடையாது தெரியுமா? கடவுளைப்போல் காலமும் மனிதனின் கற்பனைதான்.”

“காலம் கற்பனை என்றால், நேற்று, இன்று, நாளை எல்லாம் ஒன்றுமில்லையா?”

”வெறுமைக்குள் குடைந்த குகைபோல்தான் இந்தக் கணக்கெல்லாம். நீ விரும்பினால் குகையையும் பார்க்கலாம். குகையின் கூரையையும் பார்க்கலாம். விரும்பாவிட்டால் எதுவுமே இல்லை.”

3

மறுநாள் காலை, ரஜ்னி மாமா, பாட்டியைப் பார்க்கக் கிளம்பினார். பாட்டி முன்னறையில் உட்கார்ந்து டீயை சாஸரிலிருந்து சத்தத்துடன் உறிஞ்சிக் குடித்துக்கொண்டிருந்தாள். ரஜ்னி மாமா செருப்பைக் கழட்டிக்கொண்டே, “பாட்டீமா, நேற்றும் டிக்கெட்டைக் கான்சல் செய்துவிட்டாயா? உனக்கு முன் நான் டிக்கெட் வாங்கி விடுவேன் போலிருக்கிறது,” என்றார்.

உள்ளே வந்து ரஜ்னியை தலைநிமிர்த்திப் பார்த்த பாட்டி, “அடேய் ராண்ட்நா , காலங்காலையில் வந்து என்ன அமலங்கப் பேச்சு பேசுகிறாய். கிழவி நான் இருக்கும்போது நீங்கள் எல்லாம் ஏனடா சாக வேண்டும்? விவஸ்தைகெட்ட நாய்.”

பாட்டியை நெருங்கியதும், ரஜினி மாமா, தலைகுனிந்து வணங்கி அப்படியே அவள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். “பாட்டிமா ஞாபகம் வைத்துக்கொள். உனக்குப் பாடை என் கையால்தான்.”

“சந்தோஷமாக மகனே, நீ கட்டிய பாடையில்தான் நான் ஏறுவேன். இந்தக் கிழவியின் மனம் அப்போதுதான் குளிரும்.”

ரஜ்னி மாமா, சட்டென்று குரலில் கரிசனம் தோய, “என்ன ஆயிற்று பாட்டிமா? நாங்கள் எல்லாம் ரொம்பவும் பயந்துவிட்டோம்” என்று கூறியபடி, பாட்டியின் தலையை வருடினார்.

“எனக்கு என்னடா… ஒன்றுமில்லை. “கேஸ் டிரபிள்தான். நேற்று கீழ் வீட்டு மந்தாகினி சொன்னாள், “பாட்டி, உளுந்து வடை செய்திருக்கிறேன். அப்படியே ‘ரத்னா கேப்’ வடையாட்டம் இருக்கிறது. நீங்கள் இரண்டு சாப்பிட்டுப் பாருங்கள்’, என்று. இந்தக் கிழட்டு முண்டையும் ஆசையில் தின்றுவிட்டேன்.”

“என்ன! இரண்டு… இரண்டு வடையா? மூளை கீளை பிசகி விட்டதாஉனக்கு? குடல் என்ன இரும்பில் செய்திருக்கிறதா? பொறித்த உளுந்து வடை இரண்டைக் குதிரையால்கூட ஜீரணிக்க முடியாது. நாக்கை கன்ட்ரோல் செய் முதலில். அது உனக்கும் நல்லது; மற்றவர்களுக்கும் நல்லது.”

“செய்கிறேன்; செய்கிறேன். கிடக்கட்டும். உன் பெட்டைக் கழுதை என்ன செய்கிறாள்?”

“வேறு என்ன செய்வாள், சமையல்தான்.”

‘உங்களுக்கு என்னப்பா, எஜமானன் எஜமானி இரண்டே பேர்; வக்கணையாய்ச் சமைத்துச்சமைத்துச் சாப்பிடலாம். ஜாலிதான் போ ”

“என்…ன்…ன ஜாலி” என்று ரஜ்னி மாமா ஆரம்பித்தபோது, கோபால் மாமா பேப்பரும் கையுமாக உள்ளே நுழைந்தார். ரஜ்னியைப் பார்த்ததும் “என்னடா, நீ எப்பொழுது வந்தாய்?” என்றார்.

“இப்பொழுதுதான். பாட்டிக்குத் தேவலை போலிருக்கிறது. நான் இன்று ஆந்திரா டூர் போகிறேன். வரப் பத்து நாட்களாகும்.”

கோபால் மாமா, நாற்காலியில் உட்கார்ந்துகொண்டே குரல் கொடுத்தார். “சுரேகா, ரஜினிக்கு டீ கீ கொடுத்தாயா?”

“என்னடா உன் முதலாளி காந்தி ஜெயந்திக்கு ஒரு லட்சம் செலவு செய்து அன்னதானம் செய்கிறானாமே!” 

”இரண்டாம் நம்பர் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வார்? திங்கவும் முடியாது; கழியவும் முடியாது. இப்படித்தான் தீர்த்தாக வேண்டும்.” என்றார் ரஜ்னி மாமா.

டீ குடித்துவிட்டு, பாட்டியின் கையை ஆதரவாகப் பற்றிச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, பிறகு, “பாட்டி, நான் போய்வருகிறேன். உடம்பைப் பார்த்துக்கொள்” என்று கூறி மீண்டும் தலைகுனிந்து பாட்டியை வணங்கினார். பாட்டி “நல்லா இரு அப்பனே” என்று ஆசீர்வாதம் செய்தாள்.

பாட்டி, வைத்தியர் கொடுத்த சூர்ணத்தைப் போட்டுக் கொண்டு, ஒன்றும் சாப்பிடாமல் மதியம் வரை படுத்திருந்தாள். பிற் பகலில் சபை கூடவில்லை. இதற்கு முன்பு 27 தடவை பாட்டிக்கு சீரியசானபோதும் இப்படித்தான். மறுநாள் ஓய்வு. மாலை நான்கு மணிக்குப் பள்ளிக்கூடம் விட்டு வந்த குண்டு ராணி என்ற மாதுரி வந்து எழுப்பினாள். எழுந்து உட்கார்ந்த பாட்டி அவளை அணைத்துக் கொண்டாள்.

“பாட்டி, உனக்கு நேற்று ரொம்ப சீரியசாகிவிட்டதாமே?”

“அதெல்லாம் இல்லேடி. நான் நன்றாகத்தானே இருக்கிறேன். பார்.”

“இந்தத்தடவை நீ பிழைக்க மாட்டாய் என்று சொன்னார்கள்.”

“ஆமாம். நான் செத்துப்போயிருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும்.” 

“நீ நிஜமாகவே சொல்கிறாயா பாட்டி? சாவதற்குப் பயமாயில்லையா உனக்கு?”

“எனக்கு என்னடி பயம்? நான் எவ்வளவோ சாவுகளைப்பார்த்தவள். நீ சின்னப் பிள்ளை ; உனக்கு ஒன்றும் தெரியாது.”

“பயமில்லையென்றால், உனக்குச்சாவதற்கு மனமில்லை என்று தான் அர்த்தம்.”

“சாவதற்கு மனம் மட்டும் இருந்தால் போதுமா? சாவும் வர வேண்டும்.” 

“மனம்வைத்தால் நாம் சாகக்கூடச் சாகலாம் என்று நீதானே பாட்டி ஒரு முறை சொன்னாய்!”

“நானா… நானா சொன்னேன்? எப்போது சொன்னேன்?”,

“இல்லை நீ சொல்லியிருக்கிறாய். எனக்கென்னமோ நீ பயப்படுகிறாய் என்றுதான் தோன்றுகிறது.”

“இல்லைடீ கண்ணே. எனக்கு பயமே இல்லை. சாவது நம் கையில் இல்லை .”

”நீ மனதுவைத்தால் சாக முடியாதா? உனக்கு இன்னும் கொஞ்ச நாள் இருக்க வேண்டும் என்ற ஆசைதான்.”

பாட்டி திடீரென்று மௌனமானாள். ஓரிரு கணங்கள் கழிந்த பின் பதில் பேசினாள்.

“நான் இருந்து என்ன பண்ணப்போகிறேன் சொல். சாவு வராதா, வராதா என்று சதா என் ஆத்மா துடித்துக்கொண்டேயிருக்கிறது.”

“உனக்கு ஆத்மா இருக்கிறதா? பெண்களுக்கு ஆத்மா கிடையாது என்று நீதானே சொன்னாய்.”

“நான் எங்கே சொன்னேன்?”

“நீ சொன்னாய்.”

“அப்படியா சொன்னேன்?”

“ஆமாம்”

பாட்டி மீண்டும் சிறிது நேரம் மௌனமாக இருந்தாள். பின் மீண்டும் பேசினாள். “நான் செத்தால் உனக்கு வருத்தமாக இருக்குமா?”

“எனக்கு யார் செத்தாலும் வருத்தமாக இருக்கும்.”

“நான் செத்தால் நீ எப்படி அழுவாய்?”

“முதலில் நீ செத்துக் காண்பி.”

“நான் செத்துப்போன பின் நீ அழுவதை எப்படிப் பார்க்க முடியும்?”

இப்போது மாதுரி மௌனமாகிவிட்டாள். சிறிது கழித்து பாட்டியே மீண்டும் பேசினாள்.

“நான் செத்தால் நீ கத்தித்தான் அழ வேண்டும். விசும்பிவிசும்பி அழக்கூடாது.”

“ஏன் அப்படி?”

“அது அப்படித்தான். குழந்தைகள் விசும்பி அழக் கூடாது. கத்தித் தான் அழ வேண்டும்.”

“பாட்டி, நான் சொன்னதைத் தப்பாக எடுத்துக்கொண்டு விட்டாயா? நீ சாகக் கூடாது. பாட்டி, நீ இன்னும் கொஞ்ச நாள் இரு.”

“ச்சீ என்ன பேச்சடி, இது. நீ சொல்வதை நான் ஏன் தப்பாக எடுத்துக்கொள்ளப்போகிறேன்? எவ்வளவு சமர்த்தாகப் பேசுகிறாய்? சரி, சரி, போய் உடை மாற்றிக்கொண்டு டீ கீ குடித்துவிட்டுப் படி, நாளைக்கு மறுபடி வா” என்றாள் பாட்டி.

அன்று இரவு பாட்டிக்குத் தூக்கம் வரவில்லை. பல முறை புரண்டு புரண்டு படுத்தாள். வெகு நேரம் விழித்திருந்தாள். காலை 5 மணி ஆனதும் வழக்கம்போல் எழுந்து பாயைச் சுருட்டி எடுத்து வைத்துவிட்டு, குளித்துவிட்டு வந்து சுவரோரமாக உட்கார்ந்து வடக்கில் தலை வைத்துக் கீழே சாய்ந்தாள். கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் அப்படியே கிடந்தாள். திடீரென்று விக்கல் போல் ஒரு சத்தம் வெளிப்பட்டு, அதோடு பாட்டியின் உயிரும் நீங்கிற்று.

கங்குப் பாட்டி இறந்துபோன செய்தி கேட்டு அக்ரகாரமே திரண்டது. ஒரு அமர்க்களமில்லை, ஒரு ஆர்ப்பாட்டமில்லை. கிழவி, ரிக்ஷாவிலேறி பீச்சுக்குப் போவது போல் சட்டென்று சாய்ந்து செத்துப் போய்விட்டாளே என்று வியந்துபோனார்கள் எல்லோரும். ரஜினிகாந்த் மாமா ஊரில் இல்லாததால், பாட்டியின் பாடையை வேறு யாரோ தான் கட்டினார்கள். 25ஆம் எண் கட்டடத்திலிருந்து பாட்டியின் உடல் வெளியே கொண்டுவரப்பட்டபோது பெண்கள் அடங்கிய குரலில் தேம்பிக்கொண்டு நின்றார்கள். சலசலப்பு கலந்த அமைதியோடு பாட்டியின் சவ ஊர்வலம் கிளம்பியது. 

ஊரிலிருந்து திரும்பிவந்த ரஜ்னி மாமா நேரே கோபால் மாமா வீட்டுக்கு ஓடினார். முன்னறையில் இருந்த பாட்டியின் படத்தைப் பார்த்துவிட்டுத் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். “கடைசியில் கிழவி நீ என்னை ஏமாற்றிவிட்டாய். இனி நான் யாரை இஷ்டப்படித் திட்ட முடியும்; இல்லை என்னையும்தான் இனி யார் உன்னைப் போல பாசத்துடன் “ராண்ட்நா” என்று அழைக்கப்போகிறார்கள்?” என்று புலம்பினார். ஒரு மூலையில் கோபால் மாமாவின் மனைவி சுரேகா முக்காட்டால் முகத்தை மூடிக்கொண்டு குலுங்கிக்கொண்டிருந்தாள், அவள் சிரிக்கிறாளா, அழுகிறாளா என்பது தெரியவில்லை.

நன்றி: க்ரியா Cre-A.




No comments:

Post a Comment