S.V.SUBBAIAH ,TAMIL ACTOR
DIED 1980 JANUARY 29
குணச்சித்திர நடிகர் எஸ்.வி. சுப்பையா தயாரித்த படம்~காவல் தெய்வம்'
தமிழ்த் திரை உலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான எஸ். வி. சுப்பையா, சிவாஜி கணேசன் நடித்த ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் பாரதியாராக மிகச் சிறப்பாக நடித்தார்.
எஸ். வி. சுப்பையாவின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் செங்கோட்டை ஆகும். கலை துறையில் ஆர்வம் கொண்ட எஸ். வி. சுப்பையா முதலில் டி. கே. எஸ். நாடக சபா, பிறகு சக்தி நாடக சபா ஆகியவற்றில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார்.
இதன் பலனாக சினிமா சான்ஸ் பெற்றார். 1952ல் சினிமாவில் சிறு சிறு வேடம் ஏற்று நடிக்கத் தொடங்கினார். எஸ். பாலசந்தர் - பானுமதி நடித்த ‘ராணி’ படத்திலும், டி. ஆர். மகாலிங்கம் நடித்த ‘வேலைக்காரன்’ படத்திலும் குறிப்பிடத்தக்க வேடத்தில் நடித்தார்.
தெலுங்கில் மிக வெற்றிகரமாக ஓடிய ‘ரோஜலு மாராயி’ என்ற படம், ‘காலம் மாறிப்போச்சு’ என்ற பெயரில் தமிழில் தயாரிக்கப்பட்டது. ஜெமினி கணேசன் - அஞ்சலி தேவி ஜோடியாக நடித்த இப்படத்தில் முக்கியமான குணச்சித்திர வேடத்தில் எஸ். வி. சுப்பையா நடித்தார். சுப்பையா வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய படம் இதுதான். அவருடைய நடிப்பு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
அவர் நடித்த படங்கள் சுமார் 100 சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன் ஆகியோருடன் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக, சிவாஜி கணேசனுடன் எஸ். வி. சுப்பையா அதிக படங்களில் நடித்தார். ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘பாவமன்னிப்பு’, ‘இரும்புத் திரை’ போன்றவை பிரபலமான படங்கள்.
குறிப்பாக ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் சிவாஜி கணேசன் வ. உ. சிதம்பரனாராக நடிக்க, எஸ். வி. சுப்பையா மகாகவி பாரதியாராக நடித்தார். என்பதைவிட பாரதியாரையே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார் என்று கூறுவதே பொருந்தும் ஜெமினி கணேசனுடன் செளபாக்கியவதி ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’, ‘வஞ்சிக் கோட்டை வாலிபன்’ ஆகிய படங்களிலும் ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்ற படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரனுடனும் நடித்தார்.
பழம் பெரும் நடிக்கர்கள் கே. ஆர். ராமசாமி, எம். கே. ராதா ஆகியோருடனும் சேர்ந்து நடித்திருக்கிறார். 1955ல் வெளிவந்த ‘வள்ளியின் செல்வன்’ என்ற படத்தில் எஸ். வி. சுப்பையா முக்கிய வேடத்தில் நடித்தார். அவருடன் சகஸ்ரநாமம், டி. எஸ். துரைராஜ், ஜெமினி கணேசன் ஆகியோர் நடித்தனர். எம். ஜி. ஆர். நடித்த இதயக்கனி படத்திலும், ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற’ என்றசூப்பர் ஹீட் பாடல் காட்சியில் தோன்றினார்.
எஸ். வி. சுப்பையா சொந்தமாகத் தயாரித்த படம் ‘காவல் தெய்வம்’ எஸ். வி. சுப்பையா செளகார் ஜானகி, சிவகுமார், லட்சுமி ஆகியோர் நடித்த இப்படத்தில் சாமுண்டி கிராமணி என்ற கதாபாத்திரத்தில் கெளரவ வேடத்தில் சிவாஜி கணேசன் நடித்தார். இதன் கதை வசனத்தை ஜெயகாந்தன் எழுதினார்.
வெற்றிகரமான ஓடிய படம். இது தமிழ்த் திரை உலகில் மறக்க இயலாத சிறந்த குணச்சித்திர நடிகராக விளங்கிய எஸ். வி. சுப்பையா 29.01.1980 அன்று மரணம் அடைந்தார். காலமான போது அவருக்கு வயது 57 எஸ். வி. சுப்பையாவின் மனைவி பெயர் கோமதி அம்மாள். இவர்களுக்கு 5 மகள்கள் ஒரு மகன்.
No comments:
Post a Comment