Tuesday, 22 February 2022

YUAN SUANG CHINESE TRAVELLER BIOGRAPHY

 

YUAN SUANG CHINESE TRAVELLER BIOGRAPHY




யுவான் சுவாங்கின் பயணம் தொடர்ந்தது.

தென்மேற்கு திசையில்  தொடர்ந்து தாஷ்கெண்ட் வழியாக சாமர்கண்ட் வந்தான். பிறகு தெற்கு திசையில்  பாமீர் பீடபூமி வழியாக குண்டூஸ் நகர் வந்தான். அங்கு பல புத்த மடாலயங்களைக் கண்டு, புத்த இலக்கியங்களை வாங்கினான்.

‘படித்ததை கொடுத்தான். பிடித்ததை எடுத்தான்’.

சந்தித்த சமய இலக்கிய விற்பன்னர்களுடன் ’அளவளாவல்’ செய்தான்.

பயணம் கிழக்கு திசையில் தொடர்ந்தது.




ஷிபர் கணவாய் 3000 மீட்டர் உயரத்தில் இருந்தது. அதன் வழியாக ‘கபிசி’ (இன்றைய காபூல்) வந்தடைந்தான். காந்தாரம் மற்றும் அதன் தலைநகர் புருஷபுரம் – பழைய காலத்து செல்வாக்கெல்லாம் போய் இடிபாடுகளுடன் காணப்பட்டது. அங்கும் வாது செய்து புத்தமதத்தில் தனக்கிருந்த ஆளுமையைக் காட்டினான். புருஷபுரம் அருகே பல புத்த ஸ்தூபிகளைப் பார்த்தான். முக்கியமாக கனிஷ்கர் ஸ்தூபி. (வருடம் 1908: டி.பி. ஸ்பூனர் எண்ற தொல்பொருள் ஆய்வாளர் – யுவான் சுவாங்கின் எழுத்தைத் துணையாகக் கொண்டு – இந்த ஸ்தூபியைக் கண்டு  பிடித்தார்).

Related imageபல நாடுகள், நகரங்கள், சிகரங்கள் தாண்டி – சிந்து நதியைக் கடந்து – தக்ஷசீலம் வந்தான். அந்நகரம் பாழடைந்து கிடந்ததைக் கண்டான்.

அப்பாடா! ஒரு வழியாக இந்தியா வந்தடைந்தான்!

ஜலந்தர், மதுரா , யமுனை, கங்கை  ஆறுகள் தாண்டி…கன்னோசி வந்து சேர்ந்தான்.

கன்னோசி ஹர்ஷனின் தலைநகரம்.



தொடக்கத்தில் சிறந்த சிவபக்தராக இருந்த ஹர்ஷன். பின்னர் சகோதரி ராஜ்யஸ்ரீயின் அறிவுரையால் ஹீனயான புத்த சமயத்தை பின்பற்றத் தொடங்கினார். யுவான் சுவாங் அவனை மகாயான புத்த சமயத்திற்கு மாற்றினான்.  

யுவான் அங்கிருந்த நூற்றுக்கணக்கான புத்த மடாலயங்களையும், ஆயிரக்கணக்கான புத்த மதக்குருமார்களையும் கண்டு அளவளாவினான். பின்னர் அயோத்யா, கெளசாம்பி வழியாக கபிலவஸ்து அடைந்தான். அங்கு புத்தர் பிறந்த லும்பினி சென்றடைந்தான். அந்நாளில் பாஹியான் அங்கு வந்ததை நினைவு கூர்ந்தான். கண்கள் பனித்தன.

(தன்ஹுஆங் குகை)

கி பி 637:புத்தர் பிறந்த லும்பினி நகரிலிருந்து புத்தர் மறைந்த குஷிநகரம் வந்தான். அங்கிருந்து காசி, வைசாலி, பாடலிபுத்திரம், சாரநாத், புத்த கயா சென்று கடைசியில் நாலந்தா பல்கலைக் கழகம் வந்தான். அறிவாளிகளுக்கும, அறிவைத் தேடுபவர்களுக்கும்  பல்கலைக்கழகம் ஒரு வரப்பிரசாதம்.

யுவான் சுவாங்..

தேன் குடித்த நரியானான்.

வான் பார்த்த மயிலானான்.

பேன் பார்த்த குரங்கானான்.

(எதுகை-மோனை என்ற பெயரில் நமது கற்பனை என்ன என்ன எழுதுகிறது. ஹி.. ஹி..)

இரண்டு வருடம் அங்கேயே தங்கி விட்டான்.

கற்றது: தர்க்க சாஸ்திரம், இலக்கணம், சமஸ்கிருதம். புத்த பள்ளி ‘யோகசாரம்’. அங்கும் யுவான் பாடம் கற்றான்.

நாலந்தாவில்..

நீல மலர்கள் நிறைந்திருந்தது.

சிவந்த கனகப் புஷ்பங்கள் பரந்திருந்தது.

மாமரங்களில் மாம்பழங்கள் குலுங்கிப் பழுத்திருந்தது.

அது ஒரு கல்விக் களஞ்சியம்.

ஹார்வர்ட்,ஸ்டான்போர்ட், ஐ ஐ டி- எல்லாத்தையும் போல உலகப்பிரசித்தி பெற்றிருந்த கல்விக்கழகம். அங்கு மகாபெரிய மடாலயத்தின் தலைவர் ‘சிலபத்ரா’!

மிகச் சிறந்த ஆசான்!

மருத்துவத் திலகம்!

மகாயானக் கொள்கைகளின் தந்தை எனப் போற்றப்பட்டவர்.

யுவான் சுவாங் அவரது மாணவனானான்!

சிலபத்ரா ஒரு சீன அறிஞர் வருவது குறித்து ஏற்கனவே கனவு கண்டிருந்தார்.

யுவான் சுவாங் சிலபத்ராவிடம் கற்றுக்கொண்டது ஏராளம்.

இந்நாளின் பாங்களாதேஷ் முழுதும் சுற்றிப் பயணம் செய்து பிறகு யுவான் தென் திசை திரும்பினான்..

ஆந்திரதேசம் …

அமராவதியில் புத்த விஹாரங்கள் இருந்தன ..ஆனால் அவை ஆட்கள் யாருமில்லாது காலியாகத் தூர்ந்து கிடந்தன..அங்கும் அவனுக்குக் கற்க வேண்டியது கிடைத்தது..

அங்கிருந்து பல்லவர் தலை நகரம் காஞ்சி சென்றடைந்தான்.

புத்த சமயம் அங்கு எவ்வளவு ஆழமாக இருந்தது என்று கண்டான்.

காஞ்சிபுரத்தில் இருந்த பௌத்தப் பல்கலைக் கழகத்திற்கு வந்தான்.

இந்நாளில் இந்தியப் பிரதமர் மோடியும் சீன அதிபரும் மாமல்லபுரத்தில் சந்தித்தனர்.அதுபோல் ..அந்நாளில் நரசிம்மவர்ம பல்லவனும் யுவான் சுவாங்கை மாமல்லபுரத்திற்கு அழைத்துச் சென்றான்.

இன்றும் மாமல்லபுரத்தின் கற்சிற்பங்களில் யுவான் சுவாங் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அங்கிருந்துப் புறப்பட்டு நாசிக், அஜந்தா, மாளவம் என்று பல இடங்களைக் கண்டு மீண்டும் நாலந்தா வந்தான்.

காந்தம் கவர்ந்தது போலும்!

காமரூபத்தின் (இந்நாளில் அஸ்ஸாம்) மன்னன் பாஸ்கர வர்மன் இந்து அரசன். இருப்பினும் யுவான் சுவாங்கின் புகழ் அறிந்து அவனை தனது  நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தான். யுவான் சுவாங்கும் அந்த அழைப்பை ஏற்று காமரூபத்தின் பிராகியோதிஷ்புரத்தை வந்தடைந்தான். மூன்று மாதங்கள் அங்கிருந்தான். அதே நேரம் கன்னோசியில் ஹர்ஷவர்த்தனனுக்கு – யுவான் சுவாங்கை வரவழைத்து விழா எடுக்கவேண்டும்  என்ற ஆசை விரிந்தது.

ஹர்ஷன் பாஸ்கரனுக்கு மடல் விடுத்தான்:

“நண்பா! யுவான் சுவாங்கை உடனே இங்கே அனுப்பு. நீயும் உடனே வா. ஒரு முக்கியமான சமாசாரம்”

இருவரும் நண்பர்கள்.

பாஸ்கரனுக்கு யுவான் சுவாங்கை விட மனமில்லை!

பதில் மடல் விடுத்தான்:

“யுவான் சுவாங்கை அனுப்புவதற்கில்லை… அதற்கு பதிலாக என் தலையைக் கேள். அனுப்புகிறேன்”

ஹர்ஷன் பதில் கடிதம் :

“சரி! உடனே தலையை அனுப்பவும். அதையும்  யுவான் சுவாங்கிடமே கொடுத்தனுப்பவும்”

பாஸ்கரன் விழுந்து விழுந்து சிரித்தான்- ஹர்ஷனின் ‘காமெடி’ கண்டு!

பாஸ்கரன் யுவான் சுவாங்கை தனது ரதத்திலேயே கன்னோசிக்கு அழைத்துச் சென்றான். ஹர்ஷனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! நண்பனுடன் யுவான் சுவாங் – இருவரது வருகை உவகை தந்தது!

ஹர்ஷன் கன்னோசியில் ஒரு மாபெரும் புத்த மாநாடு நடத்தவிருந்தான். சீனப் பயணி யுவான் சுவாங்கை கௌரவிப்பது அதன் முக்கிய நிகழ்வாகத் திட்டமிட்டிருந்தான். அதற்குத்தான் அவன் பாஸ்கரனையும், யுவான் சுவாங்கையும் அழைத்திருந்தான். அதற்கு அனைத்து சமயப் பிரிவுகளின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்தான். புத்த மாநாட்டில் இரு மன்னர்கள் தவிர அண்டை நாட்டு மன்னர்கள், ஏராளமான புத்த பிக்ஷுக்கள், பிராமணர்கள் மற்றும் சமணர்கள் அனைவரும் கூடியிருந்து கொண்டாடினர்.

இங்கு ஒரு சிறு கதை சினிமா திரைக்கதை போல் விரிகிறது:

ஹர்ஷன் இந்த மாநாட்டு அலங்காரம் அமைப்பு எல்லாம் வெகு பிரம்மாண்டமாக செய்திருந்தான். கோபுரம் ஒன்று  கட்டி அதில் மிகப்பெரிய புத்தர் சிலையை நிர்மாணித்திருந்தான். பாஸ்கரன், யுவான் சுவாங் அமர உயரத்தில் சிம்மாசனம் அமைத்திருந்தான். இருபது அரசர்களும், நாளந்தா பல்கலைக்கழகத்திலிருந்து ஆயிரம் அறிஞர்களும், மூன்றாயிரம் ஹீனயான, மகாயான பிரிவினரும், மூன்றாயிரம் சமண மற்றும் பிராமண சமயத்தவரும் பேரவைக்கு வந்திருந்தனர். தொடர்ந்து இருபத்திமூன்று நாட்கள் பேரவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மகாயான கோட்பாட்டின் மதிப்புகளையும், மற்ற கோட்பாடுகளைவிட அது உயர்ந்தது என்பதையும் யுவான்சுவாங் விளக்கி விரிவுரை ஆற்றினான்.

மதம் என்ற வார்த்தை தமிழில் பொருத்தமான டபுள் மீனிங் உள்ள வார்த்தை! யானை மதம் கொள்வது போல் மனிதனும் சமயம் என்ற மதம் கொள்கிறான்! அன்பை போதிக்கும் சமயங்கள் மதமாகி மனிதர்களுக்குள் சமயப்பூசலை ஏற்படுத்தி- கொலைவெறியாகவும் மாறுகிறது! ஹர்ஷனுடைய புத்த ஆட்சியை  – பிராமணர்கள்  வெறுத்தனர். சசாங்கன் போதி மரத்தை வெட்டி வீழ்த்தி தனது மதவெறியைக் காட்டினான். வன்முறைகளும் பந்தலுக்கு தீவைத்த நிகழ்ச்சிகளும் பேரவை நடவடிக்கைகளை மாசுபடுத்தின. அந்த மாபெரும் மாநாட்டில் புத்தர் சிலை இருந்த இடம் திடீரென நெருப்புப்பிடித்து எரியத்தொடங்கியது. அது புத்தமத ஆதிக்கத்தைத் தாளாத கூட்டத்தின் செயல். ஹர்ஷன் அந்த நெருப்பை அணைக்க நேரடியாக ஓடினான். ஹர்ஷனது உயிருக்கே கூட ஆபத்து ஏற்பட்டது. ஆனால், விரைவில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். பேரவையின் இறுதி நாளன்று யுவான் சுவாங்கிற்கு விலை மதிப்புமிக்க பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

பின்னர் ஹர்ஷன் பிரயாகையில் கங்கை-யமுனை-சரஸ்வதி சங்கமிக்குமிடத்தில்- கும்பமேளாவுக்கு யுவான் சுவாங்கை அழைத்துச் சிறப்பித்தான். கும்பமேளாவை முதன் முறையாக பெரிய அளவில் ஹர்ஷன் தான் கொண்டு வந்தான். ‘அனைத்து சமயப் பிரிவினரைச் சேர்ந்தவர்களுக்கும் ஹர்ஷர் தனது ஏராளமான செல்வத்தை ஹர்ஷர் வாரி வழங்கினார். கருவூலம் காலியான நிலையில் தனது உடைகள், அணிகலன்கள் அனைத்தையும்கூட ஹர்ஷர் தானமாக வழங்கினார்’ என்று யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளான். பிரயாகையிலிருந்து கன்னோசி திரும்பிய யுவான் சுவாங் தாயகம் திரும்ப எண்ணம் கொண்டான். ஹர்ஷன் கனத்த இதயத்துடன் அவனுக்கு ஒரு மிகப்பிரம்மாண்டமான வழியனுப்பு விழா நடத்தினான்.

கி பி 645:

பதினாறு ஆண்டுகள் கழித்து, கைபர் கணவாய் வழியாக, யுவானின் சீனா திரும்பிய பயணம் சாகசம் நிறைந்திருந்தது. கள்வர்கள் யுவான் குழுவை தாக்கி பணம் பறித்தனர். அவர்களது உடமைகளைச் சுமந்து வந்த யானை நீரில் மூழ்கியது. அந்த உடமைகளைச் சுமந்து செல்ல போக்குவரவுக்காகத் திண்டாடினர். நூற்றுக்கணக்கான சமஸ்கிருத புத்த இலக்கியங்கள் மற்றும் புத்த சிலைகள்- அவை அனைத்தையும் தாயகம் கொண்டு செல்லவேண்டுமே! !

Image result for yuan chwang + harsha

சீனாவில் யுவான் சுவாங்கிற்கு பெரும் வரவேற்பு காத்திருந்தது. சீனாவில் இது வரை எந்த புத்தமதகுருவுக்கும் இது போல் வரவேற்பு கிடைத்ததில்லையாம். மன்னர்- அரசு ஊழியர், வியாபாரிகள் மற்றும் அனைத்து மக்களும் விடுமுறை எடுத்து கொண்டாடினர். வீதியில் எங்கும் மக்கள் வெள்ளம். யுவான் சுவாங்கிற்கு ‘கட் அவுட்’,  விழாக்கால இசை என்று தடபுடல் செய்தனர். யுவான் சுவாங்குடைய சொத்துக்களை (வேறு ஒன்றுமில்லை.. புத்தகங்கள் தான்) சுமப்பதற்கு 20 குதிரைகள் தேவைப்பட்டதாம்!  தங்கம், வெள்ளி, சந்தனமரம் – இவைகளாலான நூற்றுக்கணக்கான புத்தர் சிலைகளை அவன் கொண்டு வந்திருந்தான். இயற்கையும் – மெல்லிய தென்றலை வீசி அவனை வரவேற்றது. யுவான் சுவாங் சீனாவிலிருந்து புறப்பட்ட போது அவன் வளர்த்த பைன் மரத்தைத் தழுவி விடை பெற்றிருந்தான் . அம்மரம் அவன் மேற்கு திசை பயணம் துவங்கிய பொழுது அத்திசை நோக்கி வளைந்து இருந்தது. யுவான் சுவாங் இப்பொழுது திரும்ப வரும் போது – அம்மரம் திரும்பி அவன் திசையை நோக்கி வளைந்ததாம். (இது என்ன கப்ஸா? என்று வாசகர்களுக்கு  என்னைத் திட்டத் தோன்றுகிறதல்லவா? நான் படித்ததைதான் எழுதினேன்) சக்கரவர்த்தி தைசாங் –  தனது அனுமதி இல்லாமல் யுவான் சுவாங் நாட்டை விட்டு சென்றதை (மறக்கவில்லை பாருங்களேன்) – மன்னித்து அவனது நண்பனான். அரண்மனையில் தனது அந்தரங்க அறையில் வரவேற்று – அவனது கதைகளைக் கேட்டறிந்தான். அவனுக்கு அரசுப் பதவிகளை அளித்தான். அதை மறுதலித்த யுவான் சுவாங் மடாலயத்தில் சேர்ந்தான்.  அவன் காலமாகும் வரை அவன் காலம் புத்த இலக்கியங்களை மொழிபெயர்ப்பதிலேயே கழிந்தது. இன்றும் சில புத்தர் ஆலயங்களில் யுவான் சுவாங்கின் படம் வரையப்பட்டுள்ளது- அதற்கு வழிபாடும் நடக்கிறதாம்..

மனிதன் என்பவன் … தெய்வமாகலாம்…!

அவன் எழுதியது சரித்திரம்.. அவன் ஒரு சரித்திரம்!

சரித்திரம் மெல்ல நகர்கிறது…

No comments:

Post a Comment