Saturday, 13 November 2021

DEVAYANI -KATHAL KOTTAI

 DEVAYANI -KATHAL KOTTAI




அந்த இளம்பெண் அழகாக இருந்தாள்.

ஆனால் நாங்கள் இருந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் அமர்ந்திருந்தாள்.

அது உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டல். 1996 ம் ஆண்டு.

அவள்  அமர்ந்திருந்த டேபிளுக்கு நாலைந்து மேஜைகள் தள்ளி, 

நாங்கள் நால்வரும்...

நான், ஆர்ட் டைரக்டர் மோகன மகேந்திரன், இயக்குனர் அகத்தியன், ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான் - 

இன்னொரு டேபிளில் அமர்ந்திருந்தோம்.

எங்களுக்கு சற்று தொலைவில் அமர்ந்திருந்த அந்த 'பளிச்' பெண்ணை முதலில் கவனித்தவர் அகத்தியன்தான்.

அகத்தியன் அப்படி உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை தற்செயலாக கவனித்து விட்டார் தங்கர் பச்சான்.

அவரும் திரும்பி பார்த்தார்.

மாடர்ன் டிரஸ்சில் இருந்தாள். நாகரீகமாக இருந்தாள் ; நன்றாகவும் இருந்தாள்.

அவள் கூடவே இரண்டு இளைஞர்கள், அவளுக்கு எதிரே உள்ள நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தார்கள்.

அகத்தியன் அந்தப் பெண் மேல் வைத்த கண்ணை எடுக்கவே இல்லை.

தங்கர் கேட்டார்: "என்ன அந்தப் பெண்ணையே விடாம பாக்கறீங்க?"




அகத்தியன் பார்வையை அகற்றாமலே பதில் சொன்னார்: "இல்ல, அந்தப் பொண்ணு சம்மதிச்சா, நம்ம அடுத்த படத்துக்கு ஹீரோயினா போடலாம்னு..."

அகத்தியன் சொல்லி முடிக்கும் முன் தங்கர் எழுந்தார்: "இவ்வளவுதானே, இதை அந்தப் பொண்ணுகிட்டேயே போய்  கேட்டுட வேண்டியதுதானே?"

(அது 'காதல் கோட்டை' கதை விவாதம் நடந்து கொண்டிருந்த நேரம்)

அறிமுகம் இல்லாத ஒரு பெண்ணிடம் போய் சினிமாவில் நடிக்கிறாயா என எப்படி கேட்பது என்று நாங்கள் தயக்கத்துடன்  தங்கரை தடுக்க நினைக்கும்போதே ...

தங்கர் அந்தப் பெண்ணை நெருங்கி விட்டார்; கேட்டும் விட்டார்.

நாங்கள் 'பக் பக்' என பார்த்துக் கொண்டிருந்தோம்.

"தங்கர் செமையா வாங்கி கட்டிக்கிட்டு  வரப் போறாரு..."

அந்தப் பெண்ணும், கூட இருந்த இளைஞர்களும் சீரியஸாக ஏதோ கேட்க, தங்கர் எங்கள் டேபிள் பக்கம் கை காட்டினார்.

மோகன மகேந்திரன் பதறினார்: "மாட்டி விட்டுட்டார்யா மனுஷன்."

திரும்பி வந்தார் தங்கர்.

நாங்கள் ஏகோபித்த குரலில் கேட்டோம்: "என்ன ஆச்சு ?"

"டைரக்டரோட விசிட்டிங் கார்ட் கேக்கறாங்க. யோசிச்சு சொல்வாங்களாம்."

தங்கர் பச்சான் விசிட்டிங் கார்ட் கேட்டு, அகத்தியனிடம் கை நீட்ட, 

அகத்தியன் சொன்னார்: "இல்லை, விசிட்டிங் கார்ட் இன்னமும் போடலே."

தங்கர் தயங்கவில்லை. 

சுற்றும் முற்றும் தேடிப் பார்த்துவிட்டு, கையில் கிடைத்த ஏதோ ஒரு காகிதத்தில் அகத்தியனின் ஃபோன் நம்பரை எழுதி, மீண்டும் அந்தப் பெண்ணிடம் கொண்டு போய் கொடுத்து விட்டு வந்தார்.

சற்று நேரத்தில் அந்தப் பெண்ணும் உடன் இருந்தவர்களும் எழுந்து போய் விட, நாங்கள் இயல்பு நிலைக்கு திரும்பினோம்.

மோகன மகேந்திரன் கேட்டார்: "ஏன் சார், இத்தனை படம் பண்ணிட்டீங்க. இன்னமும் ஏன் விசிட்டிங் கார்ட் போடலை ?"

அகத்தியன் அமைதியாக சொன்னார்: "போடலை. என்னைக்கு  டைரக்டர் அகத்தியன்னு பேரை சொன்னா, தமிழ்நாடு முழுக்க தெரியுதோ, அன்னைக்குதான் விசிட்டிங் கார்ட் போடறதுன்னு உறுதியா இருக்கேன்."

நான் வேடிக்கையாக நினைத்துக் கொண்டேன்.

"தன்னிடம் விசிட்டிங் கார்ட் இல்லாததை எவ்வளவு சாமர்த்தியமாக சமாளிக்கிறார் அகத்தியன் !"

அப்போது நான் அறியவில்லை

அகத்தியனின் ஆழ்மனத்தின்  உறுதியை !

அந்த  ஆண்டே தமிழ்நாடு மட்டும் அல்ல ; இந்தியா முழுவதும் ஒலித்தது அகத்தியனின் பெயர்.

1996ல் அகத்தியனின் “காதல் கோட்டை”  

மூன்று தேசிய விருதுகளை வாங்கியது.

சிறந்த திரைப்படம் – “காதல் கோட்டை”

சிறந்த திரைக்கதை– “காதல் கோட்டை”.

சிறந்த இயக்குனர்– “அகத்தியன்”.

ஆழ்மனதின் சக்தி ஆயிரம் யானை பலம் கொண்டது.

ஆழ்மன ஆலோசகர் ஃபஜிலா ஆசாத் அடிக்கடி சொல்வது என் நினைவுக்கு வருகிறது :

"ஒருவருடைய செய்கைகளில் 95%  அவருடைய ஆழ்மனத்தையே சார்ந்துள்ளது. ஆனால் அந்த ஆற்றல் வெளிப்படுவது, அவரது தன்னம்பிக்கையை சார்ந்தே இருக்கிறது.

உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் தெரியுமா ? 

எந்த ஒரு ஆசை அல்லது கனவு உங்களுக்குள் எழுந்தாலும் அதற்கான திறமை உங்களிடம் இருக்கிறது என்றுதான் அர்த்தம்.

உதாரணமாக ஒரு கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் எழுகிறது என்றால் அதற்கான தகுதியும் திறமையும் உங்களிடம் இருக்கிறது என்று அர்த்தம்."

இயக்குனர் அகத்தியனிடம் அந்த தன்னம்பிக்கை ஏராளமாக இருந்தது.

அதுதான் அத்தனை விருதுகளை அவருக்கு பெற்றுத் தந்தது.

அகத்தியனுக்கு மட்டும் அல்ல !

ஆசை இருக்கும் ஒவ்வொருவராலும் 

அதை சாதிக்கவும் முடியும்.

அதற்கு தன்னம்பிக்கை மிக மிக முக்கியம்.

இதை அனுபவத்தில் கற்றுத் தந்த அகத்தியன் அவர்களுக்கு

அன்பும் நன்றியும் !

(அகத்தியன் இயக்கிய 'கோகுலத்தில் சீதை' வெளிவந்து 25 ஆண்டுகள் ஆகிறதாம்.

அவரை பாராட்டும் விதமாகவே

இந்த மீள் பதிவு.)

No comments:

Post a Comment