Sunday, 12 September 2021

THE LAST DAYS OF BHARATHIYAR SEPTEMBER 11,1921

 

THE LAST DAYS OF  

BHARATHIYAR SEPTEMBER 11,1921


பாரதியாரின் கடைசி நாள்கள் எப்படியிருந்தன? புகைப்படங்களும் விவரங்களும்

முரளிதரன் காசிவிஸ்வநாதன்
மகாகவி சி. சுப்பிரமணிய பாரதி மறைந்து நூறாண்டுகளாகிவிட்டன. 39 வயது கூட நிரம்பாத நிலையில், சென்னையில் காலமானார் அவர். பாரதியின் கடைசி சில நாட்கள் எப்படியிருந்தன என்பதை விவரிக்கிறார் பாரதி ஆய்வாளர் ரா.அ.பத்மநாபன்.
பாரதி ஆய்வாளரான ரா.அ. பத்மநாபன், பாரதியின் அரிய புகைப்படங்கள், அவரைச் சார்ந்திருந்தோரின் புகைப்படங்கள் ஆகியவற்றோடு வேறு யாரும் அறிந்திராத பல தகவல்களையும் சேர்த்துத் தொகுத்து, சித்திர பாரதி என்ற நூலை வெளியிட்டார்.
1957ல் முதலில் வெளியான இந்த நூலில், பாரதியாரின் கடைசி சில தினங்கள் எப்படியிருந்தன என்ற தகவல்களை மிக நுணுக்கமாகத் தொகுத்திருக்கிறார் அவர். அதிலிருந்து சில பகுதிகள்:
1921ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஒரு பெரிய யானை இருந்தது. அதைக் கோவிலுக்கு வெளியே கட்டி வைத்திருப்பார்கள். பாரதி அந்த யானையை சகோதரனாக பாவிப்பார். கையில் எடுத்துச் செல்லும் பழம், தேங்காயை யானையிடம் தாமே நீட்டி, அது உண்பதைக் கண்டு மகிழ்வார்.
பாரதியின் வறுமை வாழ்க்கை எப்படி அமைந்திருந்தது?
மதுரை தமுக்கம் மைதானத்தின் விரிவான வரலாறும், அதன் எதிர்காலமும்
அந்த யானைக்கு ஜூன் மாதம் திடீரென மதம் பிடித்துவிட்டது. அதை சங்கிலியால் பிணைத்து கோவில் முன்பாகக் கட்டிப்போட்டிருந்தார்கள். வழக்கம்போல தேங்காய், பழத்துடன் யானையைத் தேடிக்கொண்டு வந்தார் பாரதி. "சகோதரா இந்தா பழம், தேங்காய்" என்று அன்புடன் நெருங்கி கையை நீட்டினார். யானை அதை வாங்கத்தான் வந்ததோ, மதத் திமிரில் தட்டிவிடத்தான் செய்ததோ தெரியவில்லை. தும்பிக் கையை வீசியது. அடுத்த கணம் பாரதி யானையின் காலடியில் மூர்ச்சித்துக் கிடந்தார்.
மக்கள் இன்னது செய்வதென்று தெரியாமல் தவித்தனர். 'யானை காலடியில் பாரதி கிடக்கிறார்' என்ற செய்தி திருவல்லிக்கேணி முழுவதும் தீப்போல பரவியது. எங்கோ இருந்த குவளைக் கண்ணன் காதிலும் விழுந்தது. ஓடோடி வந்த குவளைக் கண்ணன், யானை இருந்த இரும்புக் கிராதிக் கோட்டத்திற்குள் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தார். ரத்தப் பிரவாகத்தில் கிடந்த பாரதியை எடுத்து நிமிர்த்தி, தோளில் சார்த்திக்கொண்டு வெளியே கொண்டுவந்து சேர்த்தார்.
பாரதியை மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியார் மற்றும் சிலரும் ஒரு வண்டியில் வைத்து ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். பாரதிக்கு உடம்பெல்லாம் காயம். ஏற்கனவே பூஞ்சையான உடலில் மரண வேதனையை உண்டாக்கின. பாரதி சில நாட்கள் வலியால் அவதிப்பட்டார். ஆனால், விரைவில் குணமாகிவிட்டார்.
யானை சம்பவம் நடந்தது ஜூன் மாதத்தில். அதன் பின் பாரதி ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சுதேசமித்திரனில் வேலைக்குப் போய்வந்துள்ளார். திருவல்லிக்கேணியில் தேசிய வீதி பஜனை நடத்தியிருக்கிறார். பொதுக் கூட்டங்களுக்குப் போயிருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக ஆகஸ்ட் மாதத்தில் வெளியூர்ப் பயணமும் மேற்கொண்டுள்ளார். ஈரோடு கருங்கல்பாளையத்தில் பேசிவிட்டுத் திரும்பிவந்து, தமது ஈரோடு விஜயம் குறித்து 'மித்திரனு'க்கு தாமே எழுதித்தந்துள்ளார்.
ஆகவே, பாரதியார் யானை அடித்து மரணமடையவில்லை.
(பாரதியை அடித்த அந்த கோவில் யானையின் பெயர் அர்ஜுனன். வயது 40. இந்த சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1923 ஆகஸ்ட்டில் அந்த யானை இறந்துபோனது.)
1921 செப்டம்பர் முதல் தேதி பாரதிக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. விரைவில் அது ரத்தக் கடுப்பாக மாறியது. பாரதியின் உடல் நலமின்மை பல நண்பர்களுக்கு தாமதமாகவே தெரிந்தது.



தேசபக்தி நாளிதழில் வெளியான, தாம் எழுதாத தலையங்கத்திற்காக தண்டிக்கப்பட்டு சிறைக்குப் போய்க்கொண்டிருந்த வ.வே.சு. ஐயர், காவலர்கள் துணையுடன் செப்டம்பர் 11ஆம் தேதியன்று, பாரதியைப் பார்க்க வந்தார்.
பரிவுடன் சில நல்ல வார்த்தைகளைச் சொல்லிச் சென்றார். அதன் பின் பரலி சு. நெல்லையப்பர், நீலகண்ட பிரம்மச்சாரி, லக்ஷ்மண ஐயர் என்ற உறவினர் ஆகியோர் பாரதி வீட்டில் கவலையுடன் இருந்தனர். ஆந்திர கேசரி டி. பிரகாசத்தின் தம்பி ஒரு ஹோமியோபதி வைத்தியரை அழைத்துவந்தார்.
அப்போது நடந்ததை நீலகண்ட பிரம்மச்சாரி சொல்கிறார்: "மருத்துவர், பாரதியை நெருங்கி என்ன செய்கிறது என்று கேட்டார். பாரதிக்கு ஒரே கோபம் வந்துவிட்டது. "யாருக்கு உடம்பு சரியில்லை? எனக்கொன்றும் உடம்பு அசௌகரியம் இல்லை. உங்களை யார் இங்கே அழைத்தது? என்னைச் சும்மாவிட்டுப் போங்கள்" என்று இரைந்தார். வேறு வழியின்றி மருத்துவர் போய்விட்டார்."
பாரதியின் உடல்நிலையை முன்னிட்டு நீலகண்டன், நெல்லையப்பர், லக்ஷ்மண ஐயர் மூவரும் இரவை பாரதி வீட்டில் கழிப்பதென்று தீர்மானித்தார்கள்.
செப்டம்பர் 11ஆம் தேதி இரவில் அங்கிருந்த நீலகண்ட பிரம்மச்சாரி கூறுகிறார்: "அன்றிரவு பாரதி தமது நண்பர்களிடம் 'அமானுல்லா கானைப் பற்றி ஒரு வியாசம் எழுதி அலுவலகத்துக்கு எடுத்துக்கொண்டு போக வேண்டும்' என்று சொல்லிக்கொண்டிருந்தார். அமானுல்லா கான் அப்போது ஆப்கானிஸ்தானின் மன்னராக இருந்தவர்.
முன் இரவில் பெரும்பாகம் மயக்கத்திலிருந்த பாரதி இறப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்னால் சொன்ன இந்த வார்த்தைகளே அவர் பேசிய கடைசி வார்த்தைகளாகும்".
"எங்களுக்குத் தூக்கம் வரவில்லை. அடிக்கடி எழுந்து, எமனுடன் போராடிக்கொண்டிருந்த பாரதியாரைக் கவனித்துக் கொண்டிருந்தோம். பின்னிரவில் சுமார் இரண்டு மணிக்கு பாரதியாரின் மூச்சு அடங்கிவிட்டது" என்கிறார் நெல்லையப்பர்.
பாரதி காலமானது சரியாக இரவு 1.30 மணி. இதனை நீலகண்ட பிரம்மச்சாரி, பாரதியின் தூரத்து உறவினர் வி. ஹரிஹர சர்மா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
பாரதியின் மரணச் செய்தியை பொழுது விடிந்ததும் நண்பர்களுக்குச் சொல்லியனுப்பினார்கள். துரைசாமி ஐயர், வி. ஹரிஹர சர்மா, வி. சக்கரைச்செட்டி, கிறிஸ்தவப் பாதிரியாகப் புரசைவாக்கத்தில் ஒரு பங்களாவில் குடியிருந்த யதிராஜ் சுரேந்திரநாத் ஆர்யா, மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியார், எஸ். திருமலாச்சாரியார், குவளை கிருஷ்ணமாச்சாரியார் முதலானோர் வந்தனர்.
பாரதியார் குடும்பத்திற்கு எப்போதும் ஆதரவு புரிந்துவந்த துரைசாமி ஐயரே பாரதியின் கடைசி நாள் கிரியைகளுக்கும் உதவி புரிந்தார்.
"பாரதியாரின் உடலை காலை எட்டு மணிக்கு திருவல்லிக்கேணி மயானத்திற்கு கொண்டு சென்றோம். நானும் லக்ஷ்மண ஐயரும் குவளை கிருஷ்ணமாச்சாரியார், வி. ஹரிஹர சர்மா, ஆர்யா முதலியவர்களும் பாரதியார் பொன்னுடலை சுமந்துசெல்லும் பாக்கியம் பெற்றோம்.
பாரதியின் உடல் மிகச் சிறியது. அன்று தீக்கிரையான அவரது உடல் நிறை சுமார் 100 பவுண்டுக்கும் குறைவாகவே இருக்கும். இன்று உலகம் போற்றும் கவிச்சக்கரவர்த்தியுடன் அன்று அவரது கடைசி நாளில் திருவல்லிக்கேணி மயானத்திற்குச் சென்றவர்கள் சுமார் இருபது பேருக்கும் குறைவாகவே இருக்கலாம்.
பாரதியாரின் பொன்னுடலை அக்னிதேவரிடம் ஒப்புவிக்கு முன்னர் நண்பர் சுரந்திரநாத் ஆர்யா சிறியதோர் சொற்பொழிவு நிகழ்த்தினார்" என அந்த கடைசி நாளை நெல்லையப்பர் விவரித்திருக்கிறார்.
பாரதிக்கு ஆண் பிள்ளை இல்லாததால் யார் அவருக்கு கொள்ளியிடுவது என்ற பேச்சுவந்தபோது, யாரோ நீலகண்ட பிரம்மச்சாரி கொள்ளியிடலாமென்று சொன்னார்கள்.
உடனே அவர், "என்ன நானா? இந்தச் சடங்குகளில் எல்லாம் துளிகூட நம்பிக்கை இல்லாதவன் நான். என் தகப்பனாராக இருந்தாலும் நான் இந்தச் சடங்குகளைச் செய்ய மாட்டேன். அப்படியிருக்க பாரதிக்காக நான் செய்வேனென்று எப்படி நினைத்தீர்கள்?" என்று மறுத்துவிட்டார்.
முடிவில் பாரதியின் தூரத்து உறவினரான வி. ஹரிஹர சர்மா இறுதி காரியங்களைச் செய்தார்.
தென் தமிழ்நாட்டில் சித்திரபாநு கார்த்திகை 27ஆம் தேதி மூல நட்சத்திரத்தில் (1882 டிசம்பர் 11) தோன்றிய அந்த சித்த புருஷர், சென்னை திருவல்லிக்கேணியில் துன்மதி வருஷம் ஆவணி மாதம் 27ஆம் தேதி (1921 செப்டம்பர் 12) ஞாயிறன்று அதிகாலை 1.30 மணிக்கு புகழுடல் எய்தினார். அப்போது அவருக்கு வயது 39 கூட நிரம்பவில்லை. சரியாக 38 வயதும் 9 மாதங்களுமே ஆகியிருந்தன.
(இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், படங்கள் அனைத்தும் ரா.அ. பத்மநாபன் எழுதிய சித்திர பாரதி நூலில் இருந்து எடுக்கப்பட்டவை.)
4
1 Comment
2 Shares
Like
Comment
Share

No comments:

Post a Comment