Wednesday, 4 August 2021

நீ எங்கே என் நினைவுகள் அங்கே....

 



நீ எங்கே என் நினைவுகள் அங்கே....

மன்னிப்பு என்றொரு படம். ஜெய்சங்கர் லட்சுமி வெண்ணிற ஆடை நிர்மலா நடித்தது. இப்படத்தில் நீ எங்கே என் நினைவுகள் அங்கே ....நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில் என்றொரு பாடல் உண்டு. படத்தில் 3 முறை வரும் .முதல் முறை பி.சுசிலா மகிழ்ச்சியாக பாடியது. இரண்டாவது முறை பி.சுசிலா சோகமாக பாடியது. மூன்றாவது முறை டி.எம்.எஸ் மெலோடியாக மகிழ்ச்சியும் சோகமுமாக பாடியது.பாடலாசிரியர் வாலி. இசை எஸ்.எம். சுப்பையா நாயுடு

                                    S.M.SUBAIAH NAIDU -MUSICDIRECTOR 

இந்தப் பாடல் சிறுவயது முதலே என் மனதுக்குள் எப்போதும் எதிரொலிக்கும் ஒரு பாடல். வாழ்க்கையில் யாரையாவது பிரிய நேரிடும் போதும் யாரையாவது நினைக்க நேரிடும் போதும் இந்தப் பாடல் தவிர்க்க முடியாமல் ஆஜராகி விடும். காரணம் இதன் எளிமையான வரிகள்.
காதலின் பிரிவினையை இதை விட இனிமையாக கூற முடியுமா....

சமீபத்தில் காலா பாடல்களைக் கேட்டபோது கண்ணம்மா கண்ணம்மா என்ற சந்தோஷ் நாராயண் இசையில் ஒலிக்கும் பாடல் இத்தகைய காதல் சோகத்தை சுமப்பதாக இருந்தது. ஆறாத ஆறாத காயங்கள் ஏது....தொடுவானம் நெடுவானமாகி தொடுகின்ற நேரம் தொலைதூரம் போனதே என்ற நல்ல வரிகளும் இதில் இடம் பெற்றுள்ளன.பாடலாசிரியர் கு.உமாதேவி
கு.உமாதேவி

காதலியை நினைத்தும் காதலனை நினைத்தும் சோலோவாக பாடும் சோகமான பாடல்களை ஒரு முள் போல் மனதில் வாங்கிக் கொண்டு ரத்தம் சொட்ட கண்ணீர் சிந்தும் உள்ளங்கள் ஏராளம் உண்டு.
இழப்பின் வலியும் புறக்கணிப்பின் வலியும் காதலில் அதிகம். பழைய காதலை எண்ணி உருகும் போது உள்ளம் உடைந்து நொறுங்குகிறது. நிகழ்காலம் முழுவதுமே நொடிப்பொழுதில் கரைந்து காணாமல் போய் விடுகிறது. கடந்த காலத்தில் அலைந்து திரியும் மனம் மீண்டும் நிகழுக்கு வருவதற்குள் பலநூறு பிறவிகளைக் கடந்து வருகிறது.


காதலின் காயங்களுக்காக ஆசைப்படுங்கள் என்ற கலீல் கிப்ரானின் வரியும் அவ்வப்போது மனதுக்குள் மின்னலடிக்கிறது.
காதலிக்காதவர்கள் பாதிதான் வாழ்ந்தார்கள். காதலித்தவர்கள் பலர் வாழவே இல்லை. வாழவேண்டிய கட்டாயத்தில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பார்கள். சிலர் மறந்துவாழ்வார்கள். சிலர் மறக்கமுயல்வார்கள். சிலர் மறக்கமுடியாமல் அவதிப்படுவார்கள். 

நிகழ்கால வாழ்க்கையில் ஒரு வாழ்க்கைத்துணை. பிள்ளைச் செல்வங்கள்,சமூக கௌரவம், காலத்தின் தூரம், தூரத்தின் தூரம், மனதுகளின் தூரம் யாவும் இடைவெளியை அதிகப்படுத்திக் கொண்டே போகும்.
ஆனால் இந்த வலி மட்டும் மிச்சமிருக்கும் நிரந்தரமாக. அதனால்தான் நீ எங்கே என் நினைவுகள் அங்கே பாடல் முதல் கண்ணம்மா வரை மனதுக்குள்முள் தைக்கும் பாடல்கள் காற்றில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன போலும்.


No comments:

Post a Comment