Tuesday, 20 July 2021

ULAGAM SUTRUM VALIBAN - REVIEW 1973

 

ULAGAM SUTRUM VALIBAN - REVIEW 1973




'உலகம் சுற்றும் வாலிபன் படம் பார்த்திருக்கிறாயா?'...' எம்ஜிஆரைப் பார்த்திருக்கிறாயா?' என்பது தமிழர்களிடம் அன்றுமுதல் இன்றுவரை உலவும் வார்த்தைகள்.  இந்த கேள்வியை எம்ஜிஆர் ரசிகர்களிடம் கேட்டால் போதும்...'"யாரிடம்  இந்த கேள்வியைக் கேட்டாய்?' என அடிக்க வந்து விடுவார்கள். மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு வரும் வழியில் 65 வயது மதிக்கத்தக்க ஒரு எம்ஜிஆர் ரசிகரிடம் ' நீங்க  எம்ஜிஆரை முதன் முதலாக எங்கே எப்போது பார்த்தீர்கள்?' எனக் கேட்டேன். ' சத்தியமங்கலம் SRT கார்னர் மைதானத்தில நடந்த மீட்டிங்ல...என பேசத் தொடங்கினார். பல மணிநேரம் கடந்திருந்தது. ' கடைக்கு போய் எவ்வளவு நேரமாகிவிட்டது, இன்னும் என்ன பண்ணிட்டு நிற்கிறீங்க?னு வீட்டிலிருந்து போன் வந்த பின்புதான் நாங்க பேச்சை  தற்காலிகமாக நிறுத்தினோம். இதேபோல ' உலகம் சுற்றும் வாலிபன்' ரிலீசில் பார்த்தவர்களிடம் கேளுங்கள். இந்த உலகத்தை நடந்தே சுற்றி வரும்வரை செய்தி சொல்வார்கள். நான்  ( சாமுவேல் ) தலைவர் படங்களை  முதன்முதலாக பார்த்ததெல்லாம் 1980 களில்தான். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஷண்முகானந்தா தியேட்டரில்தான் உலகம் சுற்றும் வாலிபனைக் கண்டேன்.   ' தலைவர் இந்தப் படத்தை சினிமாஸ்கோப்ல எடுக்கவில்லை, ஏன் தெரியுமா?'...,' ஒவ்வொரு பாடலும் ரெடியானதும் பாடலைக் கேட்ட தலைவர்...எம்.எஸ். விஸ்வநாதனிடம் பாடல் பரவாயில்லை, அடுத்த பாடலை இதைவிட சிறப்பா ரெடி பண்ணுங்க என்றாராம். அதற்கு எம்எஸ்வி கோபிச்சுக்கிட்டாராம். தலைவர் ஏன் அப்படிச் சொன்னார் தெரியுமா?' என இப்ப தியேட்டர்ல படம் பார்க்கும்போது ரசிகர் ஒருவர்


கதைகூற...அவரைச்சுற்றி 10 பேர் நின்று கதைகேட்பது வழக்கம். ஆனால் 1980 களில் இதற்கெல்லாம் எனக்கு வாய்ப்பே இல்லை. ஞாயிறு மேட்னிகாட்சிக்கு ஜீப் போன்ற வாகனங்களில் திமுதிமுவென மீனவ பகுதி ரசிகர்கள் ஆண்களும் பெண்களுமாக ஆரவாரத்துடன் வந்து இறங்கும்போதே, 'நமக்கு படம்பார்க்க டிக்கெட் கிடைக்குமா?' என்ற ஐயம் ஏற்பட்டுவிடும். நீண்ட நேரமா வரிசையில் நின்றிருந்தாலும் லேட்டா வர்ற மீனவர்கள்தான் முதலில் முண்டியடித்து டிக்கெட் வாங்கி செல்வார்கள். போற போக்கில் நம்மை நசுக்கி பிழிந்துவிட்டு போவார்கள். குற்றுயிரும் குலை உயிருமாக வியர்வையில் குளித்து தியேட்டருக்குள்ளே போனால் இருக்ககூட...ஏன், நிற்கவே இடம் இருக்காது. படம் போட மணி அடித்தபோது ஏற்படும் விசில் சத்தம் படம் முடியும்வரை நம் காதை செவிடாக்கிவிடும். ' முருகன் ஒரு ம.....கா மேதை' என அசோகன் சொல்லும் போதெல்லாம் தலைவர் இல்லாத காட்சி அது என்றாலும் கைத்தட்டல், விசில் தூள் பறக்கும். அழகழகான கதாநாயகிகள் பலர் உலா வந்தாலும் தலைவரைச் சுற்றியே என் கண்கள் உலா வந்தன. ஆராய்ச்சிக் குறிப்பு பெட்டியை தலைவர் மூடும்போது,  'டக்' கென்ற சப்தத்தை தொடர்ந்து, ' வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்' வெண்கல குரலில் ஒலிக்க உடம்பெல்லாம் சிலிர்த்து வியர்வை விலகி சோர்வு நீங்கி ஜிலு ஜிலு காற்றில் மெய்சிலிர்த்து இந்த உலகையே மறந்து திரையை வைத்த கண் அகலாமல் வைத்தபடி நின்றிருந்தேன். ' உங்களுக்கு 10 கோடி டாலர் பெருசு, இந்த உலகத்தில் உள்ள தனி ஜீவன் ,எனக்கு அதைவிட பெருசு' என தலைவர் பேசும்போது படத்தின் வசனமாக மட்டும் அதை உணரவில்லை. நம் ஊனோடு உதிரத்தோடு கலந்துள்ளவரின் சத்திய வார்த்தைகள் அவை என இந்த உலகத்திற்கே சத்தமாக சொல்லலாம். ' அந்த நூற்றாண்டு சிற்பங்களும் உங்கள் பக்கத்திலே, வந்து நின்றாலும் ஈடில்லை என்று ஓடும் வெட்கத்திலே' இப்படி பல வர்ணனைகளால் 3 மணி நேரம் கைத்தட்டி விசிலடித்து அசராமல் படம் பார்த்ததென்றால் உலகிலேயே ஒரே படம் உலகம் சுற்றும் வாலிபனாகத்தான் இருக்கும். 'கடவுள்' விஞ்ஞானிக்கு என்னாச்சோ என பதறியபோது ரகசிய போலீஸ் தரிசனம் கண்டு முந்தைய காட்சியின் கவலை மறைந்தது. ' ஏம்பா...ஸ்டைல் தலைவருகிட்டயே தோல்வியுற்றது. அட சும்மா வந்து துப்பாக்கிய சாதாரணமாத்தானே எடுத்தாரு....'ஹே...ஹே' என பில்டப்

மியூசிக்கெல்லாம் கிடையாதே! சாதாரணமாகத்தானே நடந்து வந்தாரு....அதற்கே தியேட்டர் அதிருதுல்ல! அவர்தான்டா எம்ஜிஆரு! காட்சிக்கு காட்சி திருப்பம். சந்திரகலாவை ஜஸ்டின் துரத்தும்போது கண்ணாடி கதவு ' டப்' பென லாக் ஆகும் பாருங்க, கண் இமைக்கும் நேரத்தில் தலைவரை ஜஸ்டின் தாக்குவதும் அதை தடுத்து தலைவர்,' டிஷ்யூம்' என பளார் அடி கொடுப்பார் பாருங்க....என்ன சொல்றது...விவரிக்க வார்த்தையே இல்லீங்க! தான் மிகச் சிறந்த இயக்குநர், தொழில் நுட்பம் அறிந்த சகலகலா ஞான வல்லவர் என ஒவ்வொரு பிரேமிலும் பிரமிப்பூட்டிக் கொண்டிருப்பார். ' நம்பியாரு இந்த படத்துல நடிக்கிற ஐடியாவே முதலில் இல்லையாம், தலைவரிடம் சான்ஸ் கேட்டு ரெண்டு சீன்ல நடிச்சாராம்' என இடைவேளையில் ரசிகர்கள் பேசிக் கொண்டதை அறிந்தேன். ' நம்பியார் வரும் சீன் இருக்கே, அதை ஒன்ஸ்மோர் கேட்கலாம். ' அங்கே புத்தர் சிலை இருந்தது. அது புனிதமான இடம். நீ கொடுத்தே, நான் வாங்கிட்டேன். எனக்கும் ஒரு சான்ஸ் கொடேன்' இந்த டயலாக் இன்றும் மாஸ்! (மனோகர், ஜஸ்டின், நம்பியார் ஆகியோருடனான சண்டைக்காட்சிகளை காமிக்ஸ் படக்கதை

ஓவியங்களாக வரைய தீர்மானித்துள்ளேன். ) ' தமிழ்...கொஞ்சம் கொஞ்சம் பேச தெரியும்' னுட்டு ஒரு சிரிப்பு சிரிக்கும் பாருங்க...அந்த தாய்லாந்து நடிகை....4 கதாநாயகிகளில் பிடித்த நாயகி என இவருக்கே நான் அதிக மார்க் வழங்குவேன். பச்சைக்கிளி முத்துச்சரத்தில் நம்ம மனசை கொத்திட்டுப் போயிடுவார். உலகம் சுற்றும் வாலிபன் ....' ஜப்பானில் எம்ஜிஆர்' என்ற இன்னொரு டைட்டில் சொல்லி குறிப்பிடும் அளவுக்கு க்ளைமாக்சை நோக்கி பயணிக்கும். உலகம் சுற்றும் வாலிபன் பற்றி கதை கூற தொடங்கிய என்னால் ஒன்றிரண்டு விஷயங்களை மட்டுமே கூற முடிந்தது.......நிற்க!  உலகத்துல உள்ள இயற்கை செயற்கை அழகை எல்லாம் தூத்துக்குடி மாவட்ட ஓலை குடிசையில் வசிக்கும் ஏழை பாமரனின் கண்களுக்குள் தந்து வசீகரித்த இயற்கை சினிமா விஞ்ஞானி, 'சினிமா கடவுள்' உலகம் சுற்றிய வாலிபனுக்கு அழிவில்லை!( வணக்கத்துடன் சாமுவேல்)


No comments:

Post a Comment