Saturday, 19 June 2021

engal thanga raajaa 1973

 engal thanga raajaa 1973




அனைவருக்கும் வணக்கம். ஒரு சிவாஜி ரசிகனின் சினிமா டைரி தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம் - பார்ட் 56
அடுத்து Dr.ராஜா மற்றும் பட்டாக்கத்தி பைரவன் என்றதுமே அனைவருக்கும் ஒரு குதூகலம் ஏற்படுவதை உணர முடிகிறது. ஆம், ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் தயாரித்த எங்கள் தங்க ராஜாதான் அடுத்து திரைக்கு வந்த நடிகர் திலகத்தின் படம். பொன்னூஞ்சல் வெளியாகி 29 நாட்களுக்கு பிறகு 1973 ஜூலை 14 சனிக்கிழமையன்று வெளியானது. மதுரையில் நியூசினிமாவில் ரிலீஸ்.
எங்கள் தங்க ராஜா படத்தின் படப்பிடிப்பு விவரங்கள், அது எடுக்கப்பட்டது பற்றி, படத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றி தயாரிப்பாளர் இயக்குனர் வி பி ராஜேந்திர பிரசாத் பத்திரிக்கைகளில் கொடுத்த விவரங்களை பற்றி இந்த தொடரில் இரண்டு மூன்று முறை குறிப்பிட்டிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கும். தெலுங்கு படவுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ். வெகு காலமாக தெலுங்கில் படங்களை தயாரித்து வெளியிட்டுக் கொண்டிருந்த நிறுவனம். பாலாஜி நடிகர் திலகத்தை வைத்து எடுத்த இரண்டாவது படமான என் தம்பி படத்தின் ஒரிஜினல் தெலுங்கை தயாரித்த நிறுவனமும் இவர்கள்தான். இவர்கள் தெலுங்கில் சோபன்பாபு நடித்த மானவடு தானவடு படத்தைதான் தமிழில் எங்கள் தங்க ராஜாவாக எடுத்தார்கள்.வசந்த மாளிகைக்கு பிறகு ஏராளமான தெலுங்கு தயாரிப்பாளர்கள் நடிகர் திலகத்தை வைத்து தமிழில் படம் எடுக்க ஆர்வமாக முன்வந்தனர். அவர்களில் முந்திக் கொண்டவர் ராஜேந்திர பிரசாத், மிக குறுகிய காலத்திலேயே படத்தை எடுத்து முடித்து திரைக்கு கொண்டு வந்து விட்டார். மஞ்சுளா நடிகர் திலகத்திற்கு ஜோடியாக முதலில் ஒப்பந்தமான படம் மன்னவன் வந்தானடி என்றாலும் அதற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட இந்த படம்தான் அவருக்கு நடிகர் திலகத்துடன் அறிமுக படமாக அமைந்தது. அது போல் பின்னாட்களில் புகழ் பெற்ற இயக்குனராக வலம் வந்த எஸ் ஏ சந்திரசேகர் இந்த படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்தார் (டைட்டிலில் அஸோஸியேட் டைரக் ஷன் எஸ்.சி சேகர் என்று வரும்).



MR எனப்படும் மதுரை ராமநாதபுரம் ஏரியாவிற்கு RmS பிலிம்ஸ் என்ற நிறுவனம் விநியோக உரிமையை பெற்றிருந்தது. திண்டுக்கல் ரோட்டில் நியூசினிமா தியேட்டருக்கு அருகாமையில் அமைந்திருந்த, அன்றைய நாட்களில் பிரபலமாக இருந்த சுதாகரன் டைலர்ஸ் என்ற கடைக்கு மாடியில் அமைந்திருந்தது RmS அலுவலகம். ஜூலை 14 ரிலீஸ் என்று விளம்பரம் வந்தவுடனே அங்கே களை கட்ட ஆரம்பித்து விட்டது. அவர்களும் மிக சிறப்பாக செயல்பட்டார்கள். சாதாரணமாக MR ஏரியாவிற்கு அதிகபட்சமாக 5 பிரிண்ட்கள்தான் வெளியாகும் . இது எப்படி என்றால் விநியோகஸ்தர் ஒரு ஏரியாவிற்கு விலை பேசி வாங்கும்போதே எத்தனை பெட்டி அதாவது எத்தனை பிரிண்ட் என்பதும் ஒப்பந்ததிலேயே வந்து விடும். 5 பிரிண்ட் தருவதாக ஒப்பந்தம் என்றால் தயாரிப்பாளர் அந்த ஏரியாவிற்கு 5 பிரதிகள் எடுத்து கொடுத்து விடுவார். அதற்கு மேல் வேண்டும் என விநியோகஸ்தர் விரும்பினால் அதற்குண்டான அதாவது ஒன்றோ இரண்டோ பிரதிகள் கூடுதலாக தேவைப்பட்டால் அதற்குரிய பணத்தை விநியோகஸ்தர் தர வேண்டும். எங்கள் தங்க ராஜாவை பொறுத்தவரை RmS பிலிம்ஸ் மதுரை நகருக்கு ஒன்று, அதை தவிர 8 பிரதிகள் ஆக மொத்தம் ஒன்பது பிரதிகள் ரிலீஸ் செய்தனர். அதுவரை அந்தளவிற்கான எண்ணிக்கையில் பிரிண்ட்கள் போடப்பட்டதில்லை. மதுரை, திண்டுக்கல், பழனி, விருதுநகர், ராம்நாட், கம்பம், ராஜபாளையம், (இவை 6ம் உறுதி) மீதி இரண்டு தேனி, காரைக்குடி என்று நினைவு.(இது என் நினைவிலிருந்து எழுதுகிறேன். இதில் ஓரிரண்டு மாறியிருக்கலாம். பதிலாக சிவகாசி, பரமக்குடி போன்ற ஊர்களாகவும் இருந்திருக்கலாம். தவறு இருந்தால் அந்தந்த ஊர் ரசிகர்கள் சொல்லலாம்).ஆகிய ஊர்களில் வெளியானது. இதை பல ரசிகர்கள் பிரமிப்புடன் பேசியது இப்போதும் நினைவிலிருக்கிறது.
பல படங்களுக்கு பிறகு மீண்டும் இந்த முறை டிக்கெட் வாங்குவதற்கு முயற்சிகள் தொடங்கின. ஆம், நீதி தங்கம், பாரத விலாஸ் விநியோகஸ்தர் தெரிந்தவர், ராஜராஜ சோழன் விநியோகஸ்தர் ரிசர்வேஷன், பொன்னூஞ்சல் தேவைப்படவில்லை. ஆனால் இதற்கு அது போல் எளிய வழி அமையவில்லையே..நான்கு படங்களுக்கு பிறகு மீண்டும் மன்ற டோக்கன்தான் ஒரே வழி என புரிந்தது. அது எப்போது கொடுப்பார்கள் என விசாரித்துக் கொண்டே இருந்தோம். அதற்கு முன்பு வேறு ஒரு விஷயம் முடிவு செய்ய வேண்டியிருந்தது. படம் சனிக்கிழமை வெளியாகிறது. ஸ்கூல் இருக்குமா இல்லையா என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதிர்ஷ்டம் அடித்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை, அன்றைய தினம் அதாவது ஜூலை 14ந் தேதி ஸ்கூல் லீவு என்று உறுதிப்படுத்திக் கொண்டேன் (அது செகண்ட் சாட்டர்டே. ஆனால் எல்லா மாதங்களிலும் எங்களுக்கு அப்படி லீவு கிடைத்ததில்லை). படம் ரிலீசிற்கு முதல் வாரம் ஞாயிற்றுக்கிழமை டோக்கன் கொடுக்கப் போகிறார்கள் என்று தெரிந்தது. காலையில் போய் கேட்டால் மாலையில்தான் என்று சொல்லிவிட்டார்கள். அப்போது மன்றத்தின் தலைமை பொறுப்பை பார்த்துக் கொண்டிருந்தவர் எம்.ஆர் ராம்ராஜு என்பவர். என் கஸினுக்கு நன்கு தெரிந்தவர். வசந்த மாளிகை தொடர் ஹவுஸ்புல் காட்சிகளுக்கு பிரச்னை வரும் நேரத்திலெல்லாம் அவருடன் என் கஸினும் கூடவே இருந்து உதவி செய்ததால் நல்ல பழக்கம். ஈவினிங் வாங்க என்று சொல்லிவிட்டார்கள். ரசிகர்கள் கூடும் இடமும் அப்போது மாறி விட்டது. மீனாட்சி கோவில் பக்கத்தில் இருந்த மீனாட்சி பார்க்கிற்கு பதிலாக மதுரை திருமலை நாயக்கர் மகாலுக்கு எதிரே உள்ளே பார்க்கிற்கு வர சொல்லி விட்டார்கள்.
நாங்கள் அங்கே போனபோது ஒரு 7 மணி சுமார் இருக்கும். பெரிய கூட்டம் நிற்கிறது. ஒவ்வொருவரும் அந்த ஷோ இந்த ஷோ என்று டிக்கெட் கேட்க ஒரு குழப்பமான சூழல். என் கஸினை பார்த்து உங்களுக்கு எது வேணும் என்று கேட்க கஸின் மார்னிங் ஓபனிங் ஷோ என்று சொல்ல ஓபனிங் ஷோ இல்லை. முடிஞ்சிருச்சு என்று அவர் சொல்ல எனக்கு அப்படியே ஏமாற்றம் பிளஸ் வருத்தம். உன் பிரெண்டதானே உனக்கே இல்லை என்று சொல்றாப்பல என்று என் கஸினிடம் நான் கோபப்பட இருடா, கேட்போம் என்கிறார் என் கஸின் அவர் நண்பர்களும் அங்கே இருக்கிறார்கள். அந்த நேரத்தில் ஒரு 5,6 பேர் வந்தனர். வந்தவுடன் நாங்க ஏற்கனவே கேட்டிருந்தோம். இப்போ ஆபிஸிலே வந்து கேட்கிறாங்க. உடனே எங்களுக்கு டோக்கன் வேணும் என்று சத்தமாக பேச ஒன்றும் புரியவில்லை. பக்கத்தில் இருந்த நண்பரிடம் கஸின் விவரம் கேட்க, வந்தவர்கள் மதுரை அர்பன் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் என்பதும் அவர்களுக்கு டிக்கெட்டுக்கள் கணிசமான எண்ணிக்கையில் கொடுப்பதாக சொல்லப்பட்டிருந்தது என்றும் அது கிடைக்கவில்லை என்பதால் இப்போது வந்து கேட்கிறார்கள் என்பதையும் சொன்னார். அவர்கள் பார்க்க கேட்டார்களா அல்லது விற்க கேட்டார்களா என்பது தெரியவில்லை. விவாதம் லேசில் முடிவதாக தெரியவில்லை. நாமே இங்கே ஓபனிங் ஷோ டிக்கெட் இல்லை என்று கடுப்பாக நிற்கிறோம். இந்த பஞ்சாயத்து வேறயா என்று கோபம் வருகிறது. அவர்களுக்கு கடைசி வரை டோக்கன் கொடுக்கப்படவில்லை. அவர்கள் கத்திக் கொண்டே போகிறார்கள். ராம்ராஜுவை தனியாக அழைத்து போய் கசின் கண்டிப்பா ஓபனிங் ஷோ வேணும் என்று கேட்க, உங்களுக்கு தரேன்.என்ன பிரச்னைன்னா ஓபனிங் ஷோ டோக்கன் இங்கே கொஞ்சம் பேருக்குதான் கொடுத்தோம்.அப்புறம் யாருக்கும் கொடுக்கலை. இப்போ உங்களுக்கு கொடுத்தா எல்லாரும் சுத்திக்குவாங்க. அதனால நீங்க நாளைக்கு வாங்க. இரண்டு டிக்கெட்தானே.என்று சொல்ல அப்பாடா என்று கிளம்பினோம்.. அப்போதுதான் ஒரு விஷயத்தை கவனிக்கிறேன். நாங்கள் சைக்கிளில் டபுள்ஸ் போயிருக்கிறோம்.(இரவு நேரம் என்பதால் பிடிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை). அதில் டைனமோ லைட் கிடையாது. வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். ஒரு சதுர வடிவிலான சட்டகத்தில் உள்ளே ஒரு குமிழ் திரி இருக்கும்.அதில் எண்ணெய் விட்டு தீப்பெட்டியால் திரியை ஏற்றி அதை சைக்கிளின் முன்பக்கத்தில் வைத்து ஒட்டி போவார்கள். வண்டியை நிறுத்தி பூட்டும்போது அதை கையில் எடுத்து போவது வழக்கம். நான் அதை கையில் வைத்திருந்தேன். ஓப்பனிங் ஷோ டிக்கெட் இல்லை என்று சொன்னது, அந்த கட்சிக்காரர்கள் வந்து சத்தம் போட்டது இவை ஏற்படுத்திய டென்ஷனில் அதை சரியாக பிடிக்காமல் சரித்து பிடித்திருக்கிறேன்.இரண்டு கைகளிலும் எண்ணெய் வழிந்து சட்டையிலும் தெறித்திருக்கிறது. வீட்டுக்கு வந்து சோப்பு, சீகைக்காய் அரப்பு பொடி போட்டு தேய்த்தும் ஸ்மெல் போகவேயில்லை. சாப்பிட முடியவில்லை. என்ன ஆச்சு என்று வீட்டில் கேட்க ஒண்ணுமில்லையே என்று அவசர அவசரமாக விழுங்கி விட்டு எழுந்தேன். எங்கள் தங்க ராஜா கொடுத்த மறக்க முடியாத நினைவு அது.
மறுநாள் கஸின் டோக்கன் வாங்கி வந்து விட்டார். ஆனால் அடுத்த நான்கு நாட்கள் எப்போது முடியும்? எப்போ சனிக்கிழமை வரும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். அப்படி நினைக்க ஒரு காரணம் இருந்தது. பொன்னூஞ்சல் படத்திற்கு பாடல்கள் ஒரு வருடத்திற்கு முன்பாகவே வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிவிட்டது என்றால் எங்கள் தங்க ராஜாவிற்கு படம் வெளியாகும்வரை பாடல்களின் இசைத்தட்டு வெளியாகவேயில்லை. பாடல்கள் எப்படியிருக்குமோ என்று யோசனை. நடிகர் திலகத்திற்கு இரட்டை வேடம் என்றே அதுவரை வந்த செய்திகள் எல்லாம் சொன்னதினால் முதன்முறையாக கலர் படத்தில் இரு சிவாஜியும் சந்திக்கும் காட்சி இடம்பெற போகிறது என்ற ஆர்வம் வேறு (சரஸ்வதி சபதத்தில் இரட்டை வேடம் என்றாலும் இருவரும் சந்திக்கும் காட்சி கிடையாது).அதுவும் தவிர பட்டிக்காடா பட்டணமாவிற்கு பிறகு நான் ஓபனிங் ஷோ பார்க்க போகிறேன். அந்த பரவசம் வேறு. சனிக்கிழமை காலையில் சீக்கிரமே எழுந்து குளித்து ரெடியாகி எட்டரை மணிக்கு மேல் கிளம்பி விட்டோம். (டிபன் இல்லைனா பரவாயில்லை. பழைய சாதம் கூட போதும் என்று நல்ல பிள்ளைகளாக நாங்கள் சொல்ல) சினிமா போறதுன்னா இரண்டு பேரும் எவ்வளவு சீக்கிரம் கிளம்பறாங்க என்ற குற்றச்சாட்டெல்லாம் காதில் விழாத மாதிரி கிளம்புகிறோம் தியேட்டர் அருகாமையில்தான் என்பதனால் உடனே ஐந்து நிமிடத்தில் போய்விட்டோம். தியேட்டரில் அசாத்திய கூட்டம். வழக்கம் போல் நியூசினிமாவில் மன்ற டோக்கன் என்றால் பெண்கள் உள்ளே போகும் சைடு கேட் வழியாகத்தான் போக வேண்டும் என்று அங்கே நிற்க வைக்கப்பட, வழக்கம் போல் வரிசை சீராக நகராமல் அடிக்கடி நிலைகுலைவது எல்லாம் நடைபெறுகிறது. ஆனால் மாளிகைக்கு நடந்தது போல் பெரிய தள்ளு முள்ளு இல்லை. அதற்கு முதல் நாள் நவசக்தி பேப்பரில் ரோஜாவின் ராஜா படத்துக்காக ஒரு காட்சி படமாக்கப்பட்டதை எழுதியிருந்தார்கள். நடிகர் திலகம் காதல் தோல்வியால் மனமுடைந்து பித்து பிடித்தாற்போல் இருக்கும்போது அவரின் தாய் ருக்மணி இறந்து போவார். தாயின் இறப்பை பார்த்துவிட்டு தாயோடு பேசுவது அதை நடிகர் திலகம் வித்தியாசமாக செய்திருப்பார். அது படமாக்கப்படும்போது நடிகர் திலகம் அழவில்லை. ஆனால் செட்டில் இருந்த பலரும் கண்ணீர் சிந்தியிருக்கிறார்கள். அந்த செய்தியின் தலைப்பே அழாமலே அழ வைத்த சிவாஜி. என் கஸினிடம் அதை சொல்லியிருந்தேன். அவர் உள்ளே போவதற்காக வரிசையில் நிற்கும்போது அவர் நண்பர் ஓருவரிடம் சொல்ல சொல்ல அவரிடம் சொன்னேன். அவர் மற்றொரு நபருக்கு அந்த மற்றொருவர் வேறொரு நபருக்கு இதை சொல்லும்படி சொல்ல இந்த காட்சியை உள்ளே போவதற்குள் ஒரு 7,8 நபர்களுக்கு சொல்லியிருப்பேன். உள்ளே நுழைந்து டிக்கெட் மாற்றி அரங்கிற்கு உள்ளே போய் அமர்கிறோம். சனிக்கிழமை என்பதால் 10.30 மணிக்கு மேல் பெல் அடிக்கப்பட்டது. திரைசீலைகள் இழுத்து விடப்பட அரங்கத்தில் இருள் சூழ்ந்து திரையில் ஒளி வெள்ளம் பாய, சென்சார் சான்றிதழ் 14 ரீல்கள் என்று காட்டுகிறது.
வெகு நாட்களுக்கு பிறகு பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் அளிக்கும் என்று டைட்டிலில் வந்தது. டைட்டில் முடிந்து முதல் காட்சி சௌகார். வயதான உடலுக்கு முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கும் தாய், இரண்டு தம்பிகள், ஒருவன் முரடன் தனது சகோதரியை யாரேனும் தவறாக பேசிவிட்டால் அவர்களை அடித்துவிடும் அளவிற்கு முரடன். அதற்கு நேர் எதிர் குணம் கொண்ட தம்பி. குடும்ப நண்பர் காதராக மேஜர் என்று பாத்திரங்கள் அறிமுகம். கட்டிட வேலைக்கு போகும் சௌகார் அங்கே முதலாளி மனோகர், மேஸ்திரி ராமதாஸ். சௌகாரை அடைய திட்டம் போடும் மனோகர் அவரிடம் ஆசை காண்பிக்க சௌகார் அவரை எடுத்தெறிந்து பேசிவிட்டு போக மனோகரும் ராமதாஸும் கோபப்படுவார்கள். முதலில் தங்களது கையாளான காந்திமதியை அனுப்பி பேச வைக்க அவரது சுயரூபம் புரிந்து சௌகார் திட்ட, மூத்த தம்பி கவணில் கல் வைத்து அடித்து விரட்டுவான். இரவு நேரத்தில் மனோகர் ராமதாஸ் காந்திமதி வீட்டுக்குள் புகுந்து சௌகாரையும் மூத்த தம்பியையும் தூக்கி செல்ல அவர்களது தாய் அதை பார்த்து உயிரை விட அதன் பிறகு அங்கே வரும் மேஜர் அதை பார்த்துவிட்டு நடந்ததை கடைசி தம்பி ராஜா மூலமாக தெரிந்து கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் கொடுப்பார். பழி உணர்ச்சி ராஜாவிடம் இருப்பதை பார்த்து அதை கூடாது என்பார். அங்கே சௌகார் மனோகருக்கு இரையான பிறகு ஒரு இரவு விடுதியில் தங்க வைக்கப்பட்டு தப்பித்து போக நினைத்தால் தாங்கள் தூக்கி வந்திருக்கும் சௌகாரின் மூத்த தம்பியை கொலை செய்து விடுவோம் என மனோகர் மிரட்டி இருக்க வைப்பார்.
அடுத்த காட்சி சமையற்கட்டில் மேஜர், கல்லில் சப்பாத்தி சுட, க்ளோஸ் அப் போகும் கேமரா சப்பாத்தியின் அளவு சின்னதாக இருந்தது பெரியதாக மாறுவதை காண்பித்து மீண்டும் மேஜரிடம் வர அவர் வயதான தோற்றத்தில் காட்சியளிக்க அவரிடமிருந்து திரும்ப அங்கே முருகன் படத்திற்கு முன் ஒயிட் அண்ட் ஒயிட் பான்ட் ஷர்ட் அணிந்து நடிகர் திலகம் கண்மூடி கைகூப்பி நிற்கும் காட்சி தெரிய, அரங்கம் மொத்தம் கைத்தட்டல்களால் அதிர்கிறது. பேப்பர்மாரி பொழிகிறது. ராஜா என்று அழைத்து மேஜர் பார்த்து பத்திரமா போ என்று வழியனுப்ப மருத்துவ மாணவரான நடிகர் திலகம் சைக்கிள் எடுத்து வர, அந்த குப்பத்தில் இருக்கும் டீக்கடை நாயர் (நீ பெரிய டாக்டராக வரணும்ன்னு நான் அய்யப்பனை வேண்டுன்னு) ,ஆப்பம் விற்கும் ஆயா (ராஜா, முதல் ஆளா நீ போனி பண்ணிட்டேல்லே இனி வியாபாரத்திற்கு என்ன பஞ்சம்) சைக்கிள் ரிக் ஷா ஓட்டும் அந்தோணி (ISR குடிமகனே பாட, எனக்கு வேண்டாம் நீயே வச்சுக்கோ என்பார் நடிகர் திலகம்), இந்த சின்ன சின்ன பிட்ஸ் தியேட்டரில் பெரிய அலப்பறையை உருவாக்குகிறது. சைக்கிள் ஒட்டி செல்லும் நடிகர் திலகம், பின்னால் தோழிகளுடன் காரில் வரும் மஞ்சுளா காரை சைக்கிள் மீது இடிக்க கீழே விழும் நடிகர் திலகத்துடன் வேண்டுமென்றே வாக்குவாதம் செய்ய நடிகர் திலகம் அவர்களை சட்டை செய்ய மாட்டார். கீழே விழுந்த சைக்கிளை சரி செய்து கல்லூரிக்கு போக ஒரு டாக்டருக்கு நேரம் தவறாமை எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லிக் கொண்டிருக்கும் பிரின்சிபால் நடிகர் திலகம் தாமதமாக வருவதை சுட்டிக்காட்ட அனைவரும் சிரிக்க நாகேஷ் என்ட்ரி ஆகி அதை சமாளிப்பார்.
நடிகர் திலகத்தை ஒரு தலையாய் விரும்பும் மஞ்சுளா தோழிகள் உதவியுடன் அவர் தன் மேல் இடித்து விட்டதாக கூறி ரகளையில் ஈடுபடுவார். அதன் பின் எப்போதும் தனியாக அமர்ந்து சாப்பிடும் நடிகர் திலகத்தை கிண்டல் செய்து அவரின் டிபன் பாக்ஸை பிடுங்கி கிண்டல் செய்ய சாமியிலும் சாமியிது ஊமைச்சாமி பாடல் காட்சியாக விரிகிறது. இந்த படத்தின்ஆறு பாடல்களில் ஐந்து பாடல்கள் சுசீலாம்மா பாடியிருப்பார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். குறிப்பாக இந்த பாடலும் முத்தங்கள் நூறு பாடலும் சாதாரணமாக ஈஸ்வரியிடம் போயிருக்க வேண்டியது. ஆனால் மாமா துணிந்து சுசீலாம்மாவையே பாட வைத்திருப்பார். அவரும் பிரமாதப்படுத்தியிருப்பார். சரணத்தில் சம்போ சங்கர மகாதேவா சாம்ப சதாசிவ குருதேவா என்ற வரிகளை அலட்சியம், திமிர் தொனிக்க அவர் பாடியிருக்கும் விதத்திற்கு பாராட்டு. பாடல் முடிய, டிபன் பாக்ஸ் கீழே விழுந்து இருக்கும் ஒரு சப்பாத்தியும் மண்ணில் விழுந்துவிட எதுவும் பேசாமல் நடிகர் திலகம் டிபன் பாக்ஸை மட்டும் எடுத்து போக அதற்கு முன் டிபன் பாக்ஸை மாறி மாறி இழுக்கும் நேரத்தில் மஞ்சுளா நடிகர் திலகத்தின் மேல் சாய்வதை பார்த்துவிடும் பிரின்சிபால் வீரராகவன் என்ன என்று சக மாணவிகளை கேட்க அவர்கள் நடிகர் திலகத்தின் மீது பழி போட அடுத்த காட்சியில் வகுப்பில் அமர்ந்திருக்கும் நடிகர் திலகத்தை பிரின்சிபால் அழைப்பதாக செய்தி வரும்.
ராஜவை பிரின்சிபால் எதுக்கு கூப்பிடறார் என்று பக்கத்திலிருக்கும் மாணவன் கேட்க பிரின்சிபாலுக்கு பாடத்திலே ஏதாவது சந்தேகம் வந்திருக்கும். அதான் ராஜாவை கூப்பிட்டு கேட்கிறார் என்ற நாகேஷின் பஞ்சிற்கு செம கைதட்டல். அங்கே பிரின்சிபால் உன்மேலே புகார் வந்திருக்கு. நானே நேரில் பார்த்துட்டேன் இந்த வயசிலேதான் மனசை கட்டுப்பாடா வச்சிருக்கணும். உன் நடத்தையில் ஏற்பட்ட தவறினால இதுவரைக்கும் உனக்கு கிடைச்சிட்டிருந்த ஸ்காலர்ஷிப் இனிமே உனக்கு கிடைக்காது. நீதான் பணம் கட்டி பரீட்சை எழுதணும் என்று நடிகர் திலகத்தை பேச விடாமல் அனுப்பி விடுவார். வீட்டிற்கு வரும் மஞ்சுளா என்னாலேதானே உங்களுக்கு இந்த நிலைமை.நானே உங்களுக்காக பணம் கட்டறேன் என்று சொல்ல நடிகர் திலகம் மறுப்பார். உன்னை மாதிரி பணக்காரங்களுக்கு எங்களை மாதிரி ஏழைகளை சீண்டுவது அவர்களை அவமானப்படுத்துவதுதான் சந்தோஷம் என்பார். என்னை ஒரு நாள் புரிஞ்சுக்குவீங்க என்று மஞ்சுளா போக மேஜர் வர அவரிடம் பணம் கிடைத்ததா என்று கேட்க இல்லை என்பார். தாதா, குல்லாவுக்காக பொறந்தவன் கிரீடத்திற்கு ஆசைப்படக்கூடாதுன்னு நடிகர் திலகம் சொல்ல நீ கிரீடத்திற்காகவே பொறந்தவன் ராஜா என்று மேஜர் சொல்ல தியேட்டர் அதிர்கிறது.
அங்கே மனோகர் வீட்டில் ராமதாசும் வேறொரு நபரும் பணத்தையும் டைமண்ட்ஸ் பெட்டி என கொடுப்பார்கள். அங்கே மோகன்லால் சேட் என்ற பெயரில் மாலி வருவார். அவரிடம் ஓட்டல் கட்ட என்று ஏற்கனவே பணம் வாங்கியிருக்கும் மனோகர் வேலையை முடிக்க மேலும் பணம் வாங்க அங்கே குப்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் தங்களால் முடிந்த சிறு சிறு தொகையை கொண்டு நடிகர் திலகத்திடம் கொடுத்து பீஸ் கட்ட சொல்வார்கள். அடுத்த காட்சியில் நடிகர் திலகம் நடந்து வந்து கொண்டிருக்க காரில் வரும் மஞ்சுளா காரை நிறுத்தி நடிகர் திலகத்தை ஏற சொல்ல அவர் மறுக்க காரை அனுப்பி விட்டு நான் உங்களோடு நடந்து வருகிறேன் என்பார் மஞ்சுளா. நடிகர் திலகம் வேண்டாம் என்பார். என் பாதை கடினமானது.அதில் உன்னால் தொடர்ந்து வர முடியாது என்பார்.நீங்க என்னை விரும்பறீங்க என்று மஞ்சுளா சொல்ல உண்மையை சொல்லட்டுமா எனக்கு உன்னை பிடிக்கலை என்பார் நடிகர் திலகம். உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க என்று மஞ்சுளா சொல்ல என் மனசாட்சியை தொட்டு சொல்றேன். உன்னை எனக்கு பிடிக்கலை என்று சொல்லிவிட்டு சிலையாய் உறைந்து போகும் மஞ்சுளாவை விட்டு விலகி நடக்க ஆரம்பிப்பார். தியேட்டர் மொத்தம் எழுந்து விட்டது. பின்னணி இசை சட்டென்று வேகம் எடுத்து பின்னர் குறையும். ஒரு கோடு கிழித்தாற்போல் கேமரா பின்னாடியே வர அந்த நேர்கோட்டில் சற்றும் மாறாமல் நேராக நடிகர் திலகம் நடக்க அந்த காட்சியும் அதற்கு ஓபனிங் ஷோவில் கிடைத்த ஆர்ப்பாட்டமான அலப்பரையும் மறக்கவே முடியாது.
தேர்வு எழுதும் நடிகர் திலகம், பின்னாடி பெஞ்சில் இருந்து நாகேஷ் எட்டி எட்டி பார்த்து எழுத முயற்சிப்பார். அவரை பார்த்து பின்னால் இருப்பவர் எழுத பார்க்க என்னை பார்த்து காப்பி அடிக்காதே. நானே ஸ்ரீராமஜெயம்ன்னு எழுதியிருக்கேன் என்று நாகேஷ் சொல்ல, பின்னால் இருப்பவர் ஒழுங்கா பாரு ஸ்ரீ ராமானுஜம்ன்னு எழுதியிருக்கே என்று சொல்ல செம சிரிப்பு அரங்கத்தில். தேர்வு முடிவு வரும் போது நடிகர் திலகம் முதல் மாணவனாக வருவார். நாகேஷ் பாராட்ட அந்நேரம் மஞ்சுளா வருவார். மீண்டும் தனது காதலை சொல்ல நடிகர் திலகம் மீண்டும் மறுப்பார். என் வாழ்க்கையிலே முக்கியமான கட்டம் இனிமேதான் வரப்போகுது. அதிலே நான் இறந்து போகலாம். ஜெயிச்சாலும் தூக்கு மேடைக்கு போகலாம் என்று பேச எனக்கு ஒன்னும் புரியலையே எனும் மஞ்சுளாவிடம் என்னை மறந்துடுன்னு சொல்றேன் என்பார். நடிகர் திலகத்திற்கு மாலை போட்டு குப்பத்திற்கு ரிக் ஷாவில் அழைத்து வரப்பட குப்பத்து ஜனங்கள் அவரை எங்கள் தங்க ராஜா வாழ்க என்று கொண்டாடுவார்கள். நடிகர் திலகத்தை அமெரிக்காவிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டிருப்பதாக அரசாங்க மருத்துவதுறையை சேர்ந்தவர் நடிகர் திலகத்திடம் சொல்ல குப்பத்தில் அனைவரும் அவரை அமெரிக்கா செல்ல வற்புறுத்த நடிகர் திலகம் நான் அமெரிக்கா போக போவதில்லை. இங்கேயே இருந்து உங்களுக்குகெல்லாம் மருத்துவம் பார்க்க போகிறேன்.என்பார். அவர் இருக்கும் குப்பத்தில் காமராஜ் நகர் என்று பெயர் பலகை திறந்து(அந்த பெயரை பார்த்தவுடன் ஒரே அலப்பறை) சீதா மருத்துவமனை என்பதையும் திறப்பார்.
மருத்துவமனையில் டீக்கடை நாயரை செக் பண்ணிவிட்டு இனிமேல் பீடி குடிக்கக்கூடாது என்று சொல்லியவாறே சீட்டில் வந்து அமர பின்னால் பெருந்தலைவரின் பெரிய புகைப்படம். தியேட்டர் மீண்டும் அதிர்கிறது. ஆப்பக்கார அம்மா வர அவருடன் நடிகர் திலகம் பேச ஹாய் ராஜா என்று நாகேஷ் வர, யாருடா நீ எங்க ராஜாவை மரியாதை இல்லாம பேசறவன் என்று அந்த அம்மா எகிற என் நண்பன்தான் என்று நடிகர் திலகம் சமாதானம் செய்வார். ஏம்பா உங்க பேட்டையில் உன்னை பத்தி பேசினா பெண்ட் எடுத்துடுவாங்க போலிருக்கு என்று நாகேஷ் கேட்க, பேசித்தான் பாரேன் என்பார் நடிகர் திலகம். பேட்டையை வளைச்சுட்டே போலிருக்கு என்று நாகேஷ் சொல்ல முதலில பேட்டையை வளைப்போம் அப்புறம் என்று நடிகர் திலகம் இழுக்க புரியுது புரியுதுன்னு நாகேஷ் சொல்ல இங்கே புரிந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று ஆர்ப்பரிக்கிறார்கள். நீ இங்கே கம்பௌண்டராக இரு என்று நடிகர் திலகம் சொல்லுவார். நடிகர் திலகம் இல்லாத நேரத்தில் மஞ்சுளா அவரை தேடி ஆஸ்பத்திரி வர அங்கே அவசர கேஸாக அடிபட்டு வரும் ஒரு பையனுக்கு சிகிச்சை அளிப்பார். நடிகர் திலகம் வந்துவிட அவரிடம் மஞ்சுளா பேச மீண்டும் நடிகர் திலகம் மஞ்சுளாவை ஏற்றுக் கொள்ள மறுப்பார். இரும்பு பெட்டிக்கும் இதயத்திற்கும் சம்பந்தமேயில்லை என்பார். உங்க ஆஸ்பத்திரிக்கு நான் டெய்லி வரத்தான் போகிறேன் என்று சொல்லிவிட்டு போக ஏம்பா வசந்தி வரட்டுமே ஏன் தடுக்கிறே என்று நாகேஷ் கேட்க அவ ஒரு அன்பு தொல்லை என்று நடிகர் திலகம் சொல்ல அந்த நேரத்தில் ரிக் ஷா அந்தோணி மயக்கம் போட்டு கிடக்கிறார் என்று செய்தி வர நடிகர் திலகம் ஓடுவார். அவர் மேஜையில் வைத்திருக்கும் உண்டியலை நாகேஷ் எடுத்து குலுக்கி பார்க்க பணம் காசு இருப்பது தெரிய வர உண்டியலை தட்டி உடைக்க போக பெருந்தலைவரின் போட்டோ கண்ணில் பட உண்டியலை அப்படியே வைத்துவிட்டு நாகேஷ் கன்னத்தில் போட்டுக் கொள்ள தியேட்டரில் கைதட்டல் காதை கிழிக்கிறது.
ரிக் ஷா அந்தோணியிடம் இனி குடிக்கக்கூடாது. உங்க சாமி மேலே சத்தியம் பண்ணு என்று நடிகர் திலகம் சொல்ல என் சாமி நீதான் வாத்தியாரே. இனிமே உன்மேலே சத்தியமா குடிக்க மாட்டேன் என்று சொல்ல தியேட்டரில் அலையலையாய் கைதட்டல். அடுத்த காட்சியில் மழைக்கு ஒதுங்கி நிற்கும் நடிகர் திலகத்தை பார்த்துவிட்டு காரில் வரும் மஞ்சுளா இங்கே ஏன் நிக்கறீங்க உள்ளே வாங்க, இது எங்க வீடுதான் என்பார். முதலில் மறுக்கும் நடிகர் திலகம் மஞ்சுளா வற்புறுத்தவே உள்ளே போவார். நீங்க ஏதாவது சாப்பிட்டுத்தான் போகணும் என்று நடிகர் திலகத்தை உட்கார வைத்துவிட்டு மஞ்சுளா போக சுற்றும் முற்றும் பார்வையை ஓட விடும் நடிகர் திலகம் கண்ணில் சுவற்றில் மாட்டியிருக்கும் அந்த போட்டோ சிக்கும். அதுவரை சிரிப்பு தவழ்ந்த முகம் மெல்ல மாறி கண்கள் அப்படியே சிவந்து போக பொங்கி வரும் கோபத்தையும் ஆத்திரத்தையும் உதட்டில் பல்லை கடித்து அடக்கி நிறுத்த கையில் கோப்பையுடன் வரும் மஞ்சுளா அதிர்ந்து என்னாச்சு என்று கேட்க இந்த போட்டோவிலே இருக்கிறது யாரு என்று நடிகர் திலகம் பதில் கேள்வி எழுப்ப அவர்தான் எங்க அப்பா என்று மஞ்சுளா சொல்ல உங்கப்பாவா என்று கேட்கும்போதே மனோகர் படிகளில் இறங்கி வர அவரை பார்த்ததும் நடிகர் திலகத்தின் முகத்தில் மின்னி மறையும் அந்த உணர்வுகள். கைதட்டல்களை பற்றி சொல்லவும் வேண்டுமோ? மனோகரிடம் மஞ்சுளா நடிகர் திலகத்தை அறிமுகப்படுத்த ஓ! அந்த குப்பைமேட்டு டாக்டர் இவர்தானா என்று கேட்க உங்கப்பா ரொம்ப நல்லவர்ன்னு சொன்னியே என்று நடிகர் திலகம் வெளியேற மனோகருக்கும் மஞ்சுளாவிற்கும் வாக்குவாதம் தொடர இனி அங்கே போகக்கூடாது என்பார் மனோகர்
வீட்டிற்கு சென்று மேஜரிடம் உணர்ச்சி பிழம்பாய் நடிகர் திலகம் கொந்தளிப்பார். பழி வாங்கும் வெறி அவருக்குள் புகுந்து ஆட்டி வைப்பதை பார்த்து மேஜர் அந்த எண்ணமே உனக்கு வேண்டாம் ராஜா என்பார். நீ உயிரை காக்கற தொழில் செய்யறே. இந்த பழி வாங்கும் எண்ணத்தை விட்டுடு என சொல்ல மனசு வேண்டாம்ன்னு சொல்லுது. ஆனா என் மனசாட்சி என்னை குத்துது. ஆண்டவனே எனக்கு பொறுமையை கொடு. நிம்மதியை கொடு என்று பெருந்தலைவரின் போட்டோவிற்கு கீழே சாய்ந்து நின்று நடிகர் திலகம் பேச மீண்டும் இங்கே ஆரவாரம். மஞ்சுளா வீட்டில் படுத்திருக்க போன் வரும். அந்த பக்கம் நடிகர் திலகம் என்பது மஞ்சுளா பேசுவதிலிருந்தே புரியும். மாலை சந்திக்கலாம் என்றதும் மஞ்சுளா மகிழ்ச்சியாக எழுந்து அறையை சுற்றி ஆட பின்னணியில் மாமா ஒரு சித்தார் வாசிப்பை இழைத்திருப்பார். சட்டென்று வெஸ்டர்ன் இசைக்கு மாற அந்த சுவர் நீள வார்டரோபில் (Wardrobe) அத்தனை புடைவைகளிலிருந்து ஒரு ரெட் கலர் ஸாரியை எடுத்து காமெராவிற்கு முன்னால் வீச அடுத்த காட்சி கலையான ஆசை வந்த காரணத்தை சொல்லவா? பாடல்க திரையில் ஒளிர்கிறது. இருவரும் கையில் ஒரு நீளம் கூடிய கைக்குட்டையை வைத்து ஸ்டெப்ஸ் போட தனக்கே உரித்தான நடை கை அசைவு போன்றவற்றில் நடிகர் திலகம் தூள் கிளப்ப இந்த பாடலிலும் ஸ்வர பிரஸ்தானங்களிலும் சுசீலா ஸ்கோர் செய்திருப்பார். பாடல் முடியும்போது கையில் தூக்கி வைத்திருக்கும் மஞ்சுளாவை பொத்தென்று போட்டுவிட்டு போக அவர் பழிவாங்கவே காதலிப்பதாக நடிக்கிறார் என்று நமக்கு புரியும். ஆனால் மஞ்சுளாவுக்கு புரியாது. வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் விசாரிப்பார். அது முடிந்து வீட்டுக்குள் நுழையும் மஞ்சுளாவிடம் மனோகர் கோபப்படுவார். மறுநாள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கிடையில் கையில் காயம் பட்டுக் கொள்ளும் மஞ்சுளாவுக்கு மருந்து போடுவார் நடிகர் திலகம். அப்போதும் கல்யாணம் பற்றி மஞ்சுளா பேச இது சரியாக வராது என்பார் நடிகர் திலகம். மஞ்சுளா அந்த பக்கம் போக அய்யோ என்ற அலறலுடன் நாகேஷ் துள்ளி குதிக்க என்ன என்று கேட்கும் நடிகர் திலகத்திடம் நவசக்தி பேப்பர் கொடுப்பார். அதில் பட்டாக்கத்தி பைரவன் விடுதலை என்ற செய்தி இருக்க என்னவென்று நடிகர் திலகம் கேட்க எங்கப்பாதான் அவனை ஜெயிலுக்கு அனுப்பியது. அவன் வெளியே வந்து என்னை பழி வாங்க போகிறான் என்று நாகேஷ் சொல்ல போடா பைத்தியம் என்று நடிகர் திலகம் போக, போனால் போகட்டும் போடா என்று பாடும் நாகேஷ் அதை நிறுத்தி பைரவா என்று கத்த
மஞ்சள் கலர் பான்ட், அதே கலர் ஓவர்கோட், உள்ளே ரவுண்டு நெக் ப்ளூ கலர் T ஷர்ட் அணிந்து ஒரு மோட்டார் பைக்கை நடிகர் திலகம் ஒட்டி வர (முன்பொரு முறை சொன்ன அதே உவமை) வானம் இடிப்பட்டது பூமி பொடிப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அனைவரும் எழுந்து நின்று ஒரே குரலில் ஆர்ப்பரிக்க பல்வேறு திசைகளிலுமிருந்து கத்தை கத்தையாய் காகித துண்டுகள் வீசப்பட, திரையில் என்ன நடக்கிறது என்பதையே யாரும் சரியாக முழுமையாக பார்த்தார்களா என்பது கேள்விக்குறியே. போதாக்குறைக்கு உணர்ச்சி மிகுதியால் சிலர் அரங்கத்தின் நடுவே இருக்கும் தட்டிகளை ஓங்கி தட்ட சிலர் அமர்ந்திருந்த பெஞ்சையே தூக்கி போட முயற்சிக்க அது போல ஒரு அலப்பறையை அதற்கு முன்போ அல்லது பின்போ பார்த்ததில்லை என்றே சொல்லுவேன். அனைவரும் ஒரு வழியாக அமர்ந்தபோது பைரவன் நாகேஷையம் கூட்டி மனோகர் ஹோட்டலுக்கு போவது வந்துவிட்டது. அங்கே ராமதாஸ் முறைத்து தகராறு செய்ய முதல் சண்டைக்காட்சி. நல்ல வேகத்தில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சி, ஏற்கனவே கொதி நிலையில் இருக்கும் ரசிகர்கள் ஆர்ப்பரித்து அலறுகிறார்கள். சண்டை முடிந்து மனோகர் வர வீட்டிற்குள்ளே ஓடும் காரில் ஏற்றி உள்ளே கூட்டி போய் ஒரு பெட் ரூமில் விட, எனக்காக வேலை செய்கிறாயா என்று மனோகர் கேட்க நான் கேட்பதை கொடுக்க வேண்டும் என்று நடிகர் திலகம் டிமாண்ட் செய்வார். சரி என்று சொல்லி மனோகர் ஏ. சகுந்தலாவையும் கூட்டத்தையும் அழைக்க எங்கே ஆடு என்று நடிகர் திலகம் சொல்ல மும்மும்மா முத்தங்கள் நூறு பாடல். முன்பே சொன்னது போல் ஈஸ்வரி பாட வேண்டியது. ஆனால் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு சுசீலா பின்னயிருப்பார். ஆனால் சகுந்தலா பல்லவி பாடி முடித்ததும் சுற்றிலும் பெண்கள் கைகளில் ரிப்பன் போன்ற நீள துணிகளை பிடித்து நிற்க இரு கால் அகற்றி இரு கை பக்கவாட்டில் நீட்டி சற்றே உடமபை வளைத்து சாய்ந்து நின்று முமும்ம்மா முத்தங்கள் நூறு என்று நடிகர் திலகம் ஆரம்பிக்க இங்கே மீண்டும் அணை உடைந்தது. யாராலும் யாரையும் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஒவ்வொரு வரியும் ஐவரி என்று சொல்லுவது போல் ஒவ்வொரு வரிக்கும் அலப்பறை. ஆடை அளந்து அவர் ஆட்டம் அளந்து வரிகளுக்கும் சரி அதற்கு அவர் போடும் ஸ்டெப் ஆகட்டும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறது. நலலவரை அணைப்பேன் மதிப்பேன், வல்லவரை எதிர்ப்பேன் ஜெயிப்பேன் என்று கை மடக்குவதாகட்டும் காதே கிழிந்து விடும் போல சவுண்ட். அந்த ஸ்பீடான நடை ஓட்டம் கடைசியில் அப்படியே ஒரு ஜம்ப் பண்ணி கட்டிலில் தாவும்போது அரங்கத்தில் யாரும் நிதானமாகவே இல்லை. அதோடு இடைவேளை.
இடைவேளையில் வெளியே போன யாருக்கும் தரையில் கால் பாவவில்லை அப்படியே மிதப்பது போல் உணர்வு. இன்றைக்கு மாஸ் என்று சொல்லப்படுகின்ற அனைத்து அம்சங்களையும் படத்தில் கொண்டு வந்திருப்பார்கள். மெயின் கேட்டில் ஏறி வெளியே நிற்பவர்களிடம் உற்சாகத்தை பகிர அங்கே சரம் வெடிக்கிறது. கஸினின் நண்பர் ஒரு சில விஷயங்களை விட்டுட்டு பார்த்தா "அந்த பக்கம்" படம் மாதிரி மாதிரி இல்லே என்று கேட்டது இப்போதும் நினைவிருக்கிறது. மீண்டும் படம் தொடங்க சகுந்தலா என்னிடம் ஒரு விலையுயர்ந்த வைரம் இருக்கு. அதை வித்து கொடுத்தா பாதி உனக்கு என்று சொல்ல அதை நடிகர் திலகம் அவரிடமிருந்து கவர,மனோகர் வந்து ஒரு வைரம் காணாமல் போய்விட்டது என்று சொல்ல அவர் முகத்திலேயே துப்புவார் நடிகர் திலகம். இதுதானே அது? என்னை டெஸ்ட் பண்ண பார்க்கிறியா என்று எகிற,மனோகர் சமாதானம் செய்வார். சரி உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க கனகா வீடு என்று நடிகர் திலகம் சொல்ல மனோகர் அதிர்ச்சியாவார். முதலில் அப்படி கிடையாது என்பவர் நடிகர் திலகம் அவருடைய விஷயங்களை எல்லாம் பிட்டு பிட்டு வைக்க உனக்குதான் எல்லாமே தெரிந்த்திருக்கே என்பார் மனோகர். ஆமா ஊழல் எங்கே நடக்குது? உண்மை எங்கே இருக்குது எல்லாம் எனக்கு தெரியும் என்று சொல்ல இடைவேளைக்கு பிறகு புது எனர்ஜியுடன் மீண்டும் இங்கே கைதட்டுகிறார்கள். அடுத்து நடிகர் திலகம் அந்த வீட்டிற்கு போக அங்கே பல பெண்கள் காந்திமதி மேற்பார்வையில் தவறான வழியில் ஈடுபடுத்தப்படுவதை புரிந்து கொள்வார். அங்கே இருக்கும் சௌகார் இவரை பார்த்து சத்தம் போட அவரை இழுத்து ஒரு தனியறையில் தள்ளுவார். முதலில் இவரின் நோக்கத்தை தவறாக புரிந்து கொள்ளும் சௌகார் கோபப்பட நடிகர் திலகத்தின் கேள்விகள் அந்த எண்ணத்தை மாற்ற தனது தம்பியின் உயிருக்கு பயந்து இருப்பதாக சொல்லுவார். அந்த நேரம் ஆரம்பமாகும் கற்பாம் மானமாம் பாடல். பைரவன் பாத்திரத்தின் மனசாட்சி உடலிருந்து பிரிந்து சென்று பாடுவதாக காட்சிப்படுத்தப்படுகிறது. சமுதாயத்தில் நிலவும் பல கசப்பான உண்மைகளை கவியரசர் தார்மீக கோபத்தில் சாட, வார்த்தைகள் அமிலத்தில் தோய்த்து எடுத்தது போல் வந்து விழும். இதற்கு நடுவில் நாகேஷ் ரமாபிரபா சம்மந்தப்பட்ட இரண்டு காட்சிகள் வந்து போகும்.
இந்த நேரத்தில் சேட் மாலி மனோகரை பார்க்க வருவார். என் பணத்தை வாங்கிட்டு ஹோட்டலில் பார்ட்னர்ஷிப் தரேன் சொல்லி அதுவும் தரலே பணத்தையும் தரலே வட்டியையும் தரலே என்று புலம்ப ஹோட்டல் நஷ்டத்தில் ஓடுது என்று மனோகர் சொல்ல ஏன்யா பொய் சொல்றே? எனக்கு எதுவும் வேண்டாம். என் பணத்தை மட்டும் திருப்பி கொடுத்துடு என்று கேட்க கொடுக்கலைன்னா என்ன பண்ணுவே என்று மனோகர் திமிராக பதில் சொல்ல நீ பணம் வாங்கின எல்லா ஆதாரமும் என்கிட்டே இருக்கு. உன்கிட்டேயிருந்து என் பணத்தை வாங்கல நான் ராம்லால் கா பேட்டா மோகன்லால் இல்லே இன்றி சொல்லி போக ராம்லால் கா பேட்டா மோகன்லால் இல்லை என்று உறுமுவார் மனோகர். அடுத்து மனோகர் வீட்டிற்கு நடிகர் திலகம் பைரவனாக வருவார். அறையில் மஞ்சுளா உடை மாற்றி கொண்டிருக்க உள்ளே சென்று வம்பு பண்ணுவார் நடிகர் திலகம். அவர் பயந்து அலற ஓடி வரும் மனோகர் இவரை தடுத்து என் பொண்ணு என்று சொல்ல உனக்கு இப்படி ஒரு பொண்ணு இருக்கிறதா சொல்லவேயில்லயே என்று மேலும் மஞ்சுளாவை சீண்ட யாருப்பா இது என்று கேட்கும் மஞ்சுளாவிடம் என் பார்ட்னர் என்று சொல்லி அவரை வெளியே அனுப்ப மனோகரின் வயிற்றில் ஒரு குத்து குத்தி அப்படியே படுக்கையில் ஸ்டைலிஷாக விழுவார் இதெல்லாம் ஒரு ஜாலி. உனக்கு என்னய்யா தெரியும் என்று மனோகரை அமைதிப்படுத்த மோகன்லால் சேட் கதையை முடிக்க சொல்வார். இதோ அவன் அட்ரஸ் என்று கொடுக்க அந்த கார்டை கிழித்து அவனுக்கு இனி அட்ரஸ் இல்லை என்பார் நடிகர் திலகம்.
இரவில் சேட் வீட்டிற்கு போக அங்கே வேலையாட்களுடன் ஒரு சண்டை. அனைவரையும் அடித்து போட்டுவிட்டு சேட் ரூமிற்கு போக அங்கே திண்டில் அமர்ந்திருக்கும் சேட் இவரை பார்த்து பயப்பட அவரை அடித்து துவைப்பது போல் கேமரா அங்கும் இங்கும் உருள அடுத்த காட்சியில் மோகன்லால் சேட் கொலை என்று பத்திரிக்கை செய்தி, அங்கே மனோகர் நடிகர் திலகத்திடம் பிணத்தை என்ன பண்ணே என்று கேட்க நடிகர் திலகம் சொல்ல மாட்டார். உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க மீண்டும் கனகா வீடு என்று சொல்ல மனோகர் முதலில் மறுத்து பின் சரி என்பார். அந்த வீட்டில் ஊருக்கு போக விரும்பும் பெண்களுக்கு பணம் கொடுத்து அனுப்புவார். எங்களுக்கு போக இடமில்லை எங்கே போக முடியும் என்று சிலர் சொல்ல சரி இங்கேயே இருங்கள். உங்களுக்கு வழி செய்கிறேன் என்பார். சௌகாரிடம் கேட்க எங்கே போவது என்று தெரியவில்லை என்பார். அப்போது பைரவன் கூடவே இருக்கும் நாகேஷ் ஆஸ்பத்திரியை பற்றி சொல்லி அங்கே இருக்கும் என் நண்பனுக்கு லெட்டர் தருகிறேன் என்பார். அதை வாங்கி கொண்டு போகும் சௌகார் நடிகர் திலகத்தின் மருத்துவமனைக்கு வந்து நாகேஷை பார்க்க அவர் அங்கே வரும் Dr. ராஜா என்ற நடிகர் திலகத்திடம் இவருக்கு ஒரு வேலை கொடுக்க சொல்ல சௌகாரை பார்த்ததும் நடிகர் திலகம் கண்களில் பாசத்தை தேக்க அவருக்கும் அதே போன்ற உணர்வுகள் ஏற்படுவதை இயக்குனர் அழகாய் காண்பிப்பார். சரி என்று சொல்லி நடிகர் திலகம் போக அங்கே வரும் மேஜர் சௌகாரை அடையாளம் கண்டுகொள்ள அவரும் இவரை தெரிந்து கொள்ள தனது அம்மா மற்றும் தம்பிகள் பற்றி கேட்க அம்மா அன்றைய இரவே இறந்து விட்டதையும் மூத்த தம்பி இவரை பின்தொடர்ந்து போனதையும் அதன் பிறகு அவனை பற்றி எந்த விவரமும் தெரியவில்லை என்பார். ஆனால் உன் கடைசி தம்பி ராஜா இங்கேதான் இருக்கான். நீ இப்போ பாரதியே Dr ராஜா அது வேறு யாருமில்ல உன் தம்பிதான் என்று சொல்ல பூரித்து போவார் சௌகார்.என் தம்பி டாக்டரா என்றது கேட்க ஆமாம்மா, இந்த காமராஜ் நகருக்கே அவன் தவப்புதல்வன்ம்மா என்று மேஜர் சொல்லும்போது இங்கே செம அலப்பறை. நான்தான் அவன் அக்கா என்று அவனுக்கு நீங்க சொல்லக்கூடாதுன்னு சௌகார் சொல்ல சரி என்பார் மேஜர்.
ஆஸ்பத்திரியில் சௌகாரை சிஸ்டர் என்று நடிகர் திலகம் கூப்பிட வேண்டாம் என்று மறுப்பார். இந்த மருத்துவ தொழிலில் சேவை செய்பவர்களை அழைக்கும் சொல் என்று நடிகர் திலகம் கூற அப்போதும் வேண்டாம் என்பார். எனக்கு ஒரு தம்பி இருக்கிறான் என்று சௌகாரும் எனக்கு ஒரு அக்கா இருக்காங்க என்று நடிகர் திலகமும் பரஸ்பரம் சொல்லிக்கொள்ள அப்படியென்றால் உங்களை அக்கான்னு கூப்பிடட்டுமா என்று நடிகர் திலகம் கேட்க அதற்கும் ஒப்புக் கொள்ள மாட்டார் சௌகார். அங்கே மீட்கப்பட்ட பெண்களுக்கு ராட்டையில் நூல் நூற்கும் வேலை கொடுக்கப்பட்டிருக்கும். ராமதாஸ் போன்றவர்கள் சமையலுக்கு மாவரைக்க காந்திமதி சமையல் வேலையை புலம்பியபடியே செய்ய நாகேஷ் அவர்களை கடுப்பேத்துவார். ராமதாஸ் முகத்தில் மாவை பூசி அசிங்கப்படுத்த காந்திமதி ராமதாஸை கேவலமாக பேச அப்போது வரும் பைரவனிடம் ராமதாஸ் மோத மறுபடியும் ஒரு சண்டைக்காட்சி. கோபம் வெறியாக மாறி நடிகர் திலகம் ராமதாஸை புரட்டி எடுத்து காலால் ஆத்திரம் தீரும்வரை மிதிப்பார். அடுத்த காட்சியில் ராமதாஸை தூக்கிக் கொண்டு நடிகர் திலகத்தின் ஆஸ்பத்திரிக்கு வர Dr ராஜாவிற்கு ராமதாஸை பார்த்தவுடன் சின்ன வயது நினைவுகள் வர மஞ்சுளா வீட்டில் நடந்தது போல கண்கள் சிவந்து உணர்ச்சி பெருக்கில் உதட்டை கடித்து அடக்க முயற்சிக்க ரத்தம் வழிய என்னால இந்த ஆளுக்கு டிரீட்மென்ட் கொடுக்க முடியாது என்று மறுப்பார் மேஜர் அட்வைஸ் செய்ய முடியாது என்பார். அவன் யார் தெரியுமா என்று கேட்பார். உன் முகத்தை பார்த்தே அவன் யாரு என்பதை புரிஞ்சுக்கிட்டேன் என்பார் மேஜர். மேஜர் வற்புறுத்த அப்போதும் நடிகர் திலகம் மறுக்க சௌகார் வருவார். அவனுக்கு சிகிச்சையளிங்கள் என்பார். ஆவான் யார் தெரியுமா? எங்கக்காவை என் கண் முன்னே கொடுமைப்படுத்தினவன் என்று சொல்ல நான் உங்க அக்காவா இருந்திருந்தா அவனுக்கு டிரீட்மென்ட் கொடுன்னுதான் சொல்லியிருப்பேன் என்று சொல்ல அடுத்த நிமிஷம் நடிகர் திலகம் நர்ஸ் என்றழைக்க சிகிச்சை தொடங்கும்.
வீட்டிலிருந்து மஞ்சுளா வெளியே கிளம்ப எங்கே போறே என்று மனோகர் கேட்க எப்பவும் போற இடத்திற்குத்தான் என்பார் மஞ்சுளா.அந்த குப்பத்திற்கு நீ போக கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் என் பேச்சை மீறி போனேன்னா உனக்கும் எனக்கும் சம்பந்தமேயில்லை. என் சொத்தில உனக்கு ஒரு நயா பைசா கூட கிடைக்காது என மிரட்ட மஞ்சுளா நேரே ஆஸ்பத்திரிக்கு வந்துவிடுவார். அப்போதும் நடிகர் திலகம் ஏற்றுக் கொள்ள தயங்குவார். நீ செய்தது சரியில்லை என்பார். மஞ்சுளா அவருடன் வாதம் செய்ய உள்ளிருந்து வரும் சௌகார் மஞ்சுளாவிற்கு பரிந்து பேசுவார். எல்லாத்தையும் விட்டுட்டு உங்களை தேடி வந்திருக்கும் இந்த பொண்ணை ஏத்துக்குங்க என சொல்லி மஞ்சுளா நெற்றியில் குங்குமம் வைக்க மலைப்பிரதேசத்தில் ஒரு பிங்க் கலர் ஸாரீ உடுத்து மஞ்சுளாவும் ஒயிட் பான்ட் பிரவுன் கலர் ஹாப் ஷர்ட் அணிந்து நடிகர் திலகமும் ஓடிவர இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை என்று பாட ஆரம்பிக்க இங்கே மீண்டும் எழுந்து விட்டார்கள். பல்லவி சுசீலாம்மா பாடி முடித்து டிஎம்எஸ் ஆரம்பித்து உலகம் நமக்கினி ஆனந்த கோலம் என முடித்து இடது காலை சற்றே அகட்டி இரண்டு கைகளையும் விரித்து இருவர் என்பதே இல்லை என நடிகர் திலகம் வாயசைக்க முன்னாடி பின்னாடி இருந்தவர்கள் எல்லாம் எழுந்து கைதட்டுகிறார்கள். முதல் சரணம் முடிந்தவுடன் இருவரும் கைகோர்த்து கால் மாற்றி ஆடும் ஒரு ஸ்டெப் வரும். மறுபடியும் அலப்பறை .இரண்டாவது சரணத்தில் கவியரசர் புறநானூற்று(?) பாடலை அடிப்படையாக வைத்து ஆடை இதுவென்ன நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம் என்று வரிகளில் இலக்கியம் பேச சரணத்தின் முடிவில் லோ ஆங்கிள் ஷாட்டில் கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல் காணப்போவது மஞ்சம் என்ற வரிக்கு நிமிர்ந்து நின்று வலது கை ஆட்காட்டி விரலை மட்டும் சுட்டுவார். இங்கே அதகளம். பாடல் முடிந்தவுடன் மனோகர் பைரவனிடம் Dr ராஜா கதையை முடிக்க சொல்ல முதலில் அவனையா என்று கேட்கும் பைரவன் பிறகு சரி என்பார். நான் கேட்கறதை கொடுக்கணும் என கண்டிஷன் போடுவார்.
பைரவன் Dr ராஜா வீட்டிற்கு சென்று மோகன்லால் சேட்-ஐ என்ன செய்தாரோ அதே போல் டாக்டரையும் செய்ய சத்தம் கேட்டு மேஜர், சௌகார், மஞ்சுளா ஓடி வந்து பார்க்க படுக்கையில் ரத்தக்கறை மட்டும் இருக்க டாக்டர் இருக்க மாட்டார்.அவரை கொன்று விட்டார்கள் என அனைவரும் நம்புவார்கள். நடிகர் திலகத்திற்கு ஒரு மார்பளவு சிலை அமைத்து கோடியில் ஒருவன் பிறந்து வந்தான் பாடல் காட்சி. (இது ரசிகர்கள் ஒரு சிலருக்கு அன்றைய காலத்தில் உறுத்தலாக இருந்தது. பெருந்தலைவர் மறைந்தபோது இந்த பாடல் பல இடங்களிலும் ஒலிபரப்பப்பட்டது). பாடல் முடிந்து மனோகர் ஆஸ்பத்திரிக்கு வந்து மஞ்சுளாவை வருமாறு அழைக்க அவர் மறுப்பார். இவர்கள் பேசுவதை மறைந்திருந்து பார்க்கும் சௌகார் மனோகர் போனபிறகு மஞ்சுளாவிடம் வந்து யார் என்று கேட்டு தெரிந்துகொண்டு இவர்தான் நம்ம ராஜாவின் கொலைக்கு காரணம் என்று சொல்ல நாகேஷும் மேஜரிடம் போலீசில் சொல்ல வேண்டும் என்பார். பைரவனை சந்திக்கும் மனோகரிடம் எனக்கு உன் பொண்ணு வேணும் என்று சொல்ல மனோகர் ஆத்திரப்படுவார். போன் பண்ணுன்னு சொல்லிவிட்டு விசிலடித்துக் கொண்டு இரண்டு கைகளையும் இசைக்குழுவினர் செய்வது போல் குறுக்கும் நெடுக்குமாக செய்துவிட்டு போக கைதட்டல் பறக்கிறது. ஹோட்டலுக்கு செல்லும் நடிகர் திலகத்தை அடியாட்கள் தாக்க அனைவரையும் அடித்து போட்டுவிட்டு மனோகர் வீட்டிற்கே வந்துவிடுவார். அங்கே மஞ்சுளாவிடம் உங்க அப்பாதான் எல்லாத்துக்கும் காரணம் என்பார் (வில்லை வளைச்சது உங்க அப்பா. அம்பா மாறினது என் தப்பா) வாதம் முற்றி மனோகரை கொல்ல முயற்சிக்க போலீஸ் வந்துவிடும். சௌகார் நாகேஷ் அனைவரும் வந்துவிட நடிகர் திலகம்தான் இரண்டு கொலைகளையும் செய்தார் என ம்னோகர் சொல்ல மோகன்லால் சேட் என நடிகர் திலகம் சத்தம் போட மாலி காரிலிருந்து எழுந்து வருவார்.Dr ராஜா என சத்தமாக சொல்லி மீசையையும் தலை விக்கையும் கழட்ட Dr.ராஜாதான் பைரவனாக மாறி அனைத்தும் செய்தார் என்று தெரியவரும். அவரின் மூத்த சகோதரன் இறந்துவிட்டது .தெரியவரும். குப்பத்து பிள்ளையார் கோவிலில் வைத்து நடிகர் திலகம் மஞ்சுளா திருமணம் நடைபெற இரவுக்கும் பகலுக்கும் பின்னணியில் ஒலிக்க வணக்கம்.

No comments:

Post a Comment