Tuesday, 8 June 2021

CHEATING ,FRAUD, ENCHROACMENT - DMK

 



CHEATING ,FRAUD, ENCHROACMENT - DMK


கயமை… கயவாளித்தனம்… கபளீகரம்…

BY SAVUKKU · 04/04/2014



கடமை… கண்ணியம்… கட்டுப்பாடு…  இந்த வார்த்தைகளை திமுகவின் அனைத்துக் கூட்டங்களிலும் கேட்கலாம். அறிஞர் அண்ணா சொல்லிய இந்த வார்த்தைகளைத்தான் தி.மு.க. தனது கொள்கையாக பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.


10150666_764271523585055_686913784_n


“நம்மிடம் பணமில்லை கட்சி நடத்த. ஆனாலும் வழிவகை இருக்கிறது.   பணம் சம்பாதிக்க முடியும் என்று நம்பிக்கை தோன்றுகிறது. நான் திரைப்படங்களுக்கு வசனம் எழுதி நிறைய சம்பாதித்துவிட்டதாக சிலர் கூறுகின்றனர். நான் சம்பாதித்தது உண்மையோ பொய்யோ, அது பற்றிக் கவலையின்றி அதை அப்படியே ஏற்று அந்த வழியை கடைபிடித்தேனும் பணம் சம்பாதித்துக் கட்சி நடத்தலாம் என்ற தைரியம் பிறக்கிறது.   பணம் என்பது ஒரு சாதனமே.  அது சகல காரியங்களுக்கும் அத்தியாவசியமான ஒன்றல்ல. இருந்தே தீரவேண்டும் எல்லாக் காரியங்களுக்கும் என்ற நிர்பந்தம் இல்லை.   நமது உழைப்பின் மூலம் உறுதியின் மூலம் எவ்வளவோ பணத்தேவையை நிறுத்தலாம், குறைக்கலாம்.”


18.09.1949 அன்று திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட அன்று அறிஞர் அண்ணா ஆற்றிய உரை இது.   இதுதான் அன்றைய தி.மு.க.வின் நிலை.   பணமில்லாமல்தான் கட்சி தொடங்கப்பட்டது.   வீதிதோறும் நாடகங்கள், அறிஞர் அண்ணாவின் புத்தகங்கள், கருணாநிதியின் புத்தகங்களைத் தெருத்தெருவாக விற்று கட்சி நடத்தும் நிலையில்தான் தி.மு.க. அன்று இருந்தது.


MK_Anna_Airport_14_1474649g



இன்று தி.மு.க. அறக்கட்டளை மற்றும் முரசொலி அறக்கட்டளையில் உள்ள சொத்துக்களின் மதிப்பு மட்டும் ஆறாயிரம் கோடிகளைத் தாண்டும் என்று சொல்கின்றனர் அந்தக் கட்சியினர். அறிவாலயம், அன்பகம் என்று சென்னை அண்ணாசாலையில் உள்ள அசையா சொத்துக்கள் மட்டும் பல நூறு கோடிகளைத் தாண்டும்.  தி.மு.க.வில் உள்ள மற்றப் பதவிகளுக்கு யாரை கொண்டுவந்தாலும்  பொருளாளர் பதவிக்கு மட்டும் மிக மிக நம்பிக்கையைப் பெற்றவர்களிடம் மட்டுமே ஒப்படைக்கப்படும்.  திமுகவின் பொருளாளராக இருந்தவர் கருணாநிதி. அவருக்குப் பிறகு எம்.ஜி.ஆர் பொருளாளராக நியமிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். பொருளாளராக இருந்தபோதுதான் கட்சிப் பணத்தை கருணாநிதி கையாடல் செய்ததையும், கணக்கில் வராமல் பல கோடி ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுக் கண்டித்தார். பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆரே. கணக்குக் கேட்டதால், கருணாநிதி அவரை வெளியேற்றும் வேலைகளில் இறங்கி வெற்றி கண்டார்.  எம்.ஜி.ஆருக்குப் பிறகு, எஸ்.ஜே. சாதிக் பாட்சா பொருளாளராக நியமிக்கப்பட்டார்.  அவர் ஒரு வாயில்லா பூச்சி.  அதன் பிறகு நீண்ட நாட்கள் அந்தப் பொறுப்பில் இருந்தவர் ஆற்காடு வீராச்சாமி.  ஆற்காடு வீராச்சாமி, மின்சார வாரியத்தில் தற்காலிக தட்டச்சராக இருந்தவர். கூடுதல் வேலையாக, சென்னையில் இருந்த ஒரு காவல் நிலையத்திற்கும் டைப்பிஸ்டு வேலை பார்த்துக் கொடுத்து,  அவர்கள் வாங்கித் தரும் உணவை சாப்பிட்டு, அங்கேயே படுத்துக் கொள்வார். அப்படிப்பட்டவர்,    கருணாநிதியோடு நெருக்கமானதன் பின்னணி இங்கே எழுத முடியாத ரகம். அவரைத்தான் தி.மு.க.வில் நீண்ட நாட்களாக பொருளாளராக வைத்திருந்தார்கள். ஆற்காடு வீராச்சாமிக்குப் பிறகு பொருளாளரானவர் கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின்.


இந்தியாவிலேயே, கட்சியின் சொத்துக்களை நிர்வகிப்பதற்காக, சொத்துப் பாதுகாப்புக் குழு, சொத்துத் தணிக்கை குழு என்று வைத்திருக்கும் ஒரே கட்சி தி.மு.க.தான்.  தமிழகம் முழுக்க 20 மாவட்டங்களில் திமுக அறக்கட்டளையின் சார்பில் வாங்கிப் போடப்பட்ட ஏராளமான நிலங்களும், கட்டிடங்களும், வணிக வளாகங்களும் இருக்கின்றன.   இந்த அறக்கட்டளையை ஸ்டாலின் முழுமையாகக் கைப்பற்றி விட்டார்.  ஸ்டாலின் ஆதரவாளர்களான கல்யாண சுந்தரம் போன்றோர் அறக்கட்டளையை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்டாலினின் மகன் உதயநிதி தற்போது அறக்கட்டளையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார்.


மு.க.அழகிரிக்கும் ஸ்டாலினுக்குமான மோதல் அரசியல் கொள்கை கோட்பாடுகள் குறித்ததல்ல. அறக்கட்டளை சொத்துக்களை பங்கு போட்டுக் கொள்வது குறித்ததே.   தி.மு.க. நமது குடும்பச் சொத்து. நானும், கருணாநிதியின் மகன்தானே.  ஒரு பிள்ளைக்கு மட்டும் அந்த சொத்து போனால், என்னுடைய பங்கு எங்கே? என்பது மட்டும்தான் அழகிரியின் கோபத்துக்குக் காரணம்.   நிதியே இல்லாமல் வீதிகளில் கையேந்தி வளர்ந்த கட்சிக்கு இன்று ஆயிரக்கணக்கான கோடிகளில் சொத்துக்கள்.


1998ம் ஆண்டு முதல், தொடர்ந்து மத்திய அரசில் திமுக அங்கம் வகித்து வருகிறது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக, பிஜேபி மற்றும் காஙகிரஸ் கட்சிகள் சார்பில் மத்தியில் அமைந்த அமைச்சரவையில் தி.மு.க. அங்கம் வகித்துள்ளது.


கருணாநிதி 2014-ம் ஆண்டின் முதல் தேர்தல் பொதுக்கூட்டத்தில், கருணாநிதி இவ்வாறு பேசினார் “இன்றைக்கு மதச்சார்பற்ற ஒரு அரசு, மதவெறியில்லாத ஒரு இயக்கம் காண வேண்டும் என்ற துடிப்போடு நாங்கள் அவர் வழி நின்று நடத்தி வருகின்ற இந்த இயக்கத்திற்குப் பெயர்தான் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகும்”


திடீரென்று மதச்சார்பு என்ற அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறது தி.மு.க. பிஜேபியின் மீதும், மோடியின் மீதும் இன்றளவும் மறையாமல் இருக்கும் குற்றச்சாட்டு குஜராத் கலவரம்.  அந்தக் கலவரத்தின் போது, “அது அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை”  என்று கூசாமல் பேசியவர்தான் இந்தக் கருணாநிதி.


தன்னுடைய மற்றும் தன் குடும்பத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்காக, எந்த அரிதாரமும் பூசிக் கொள்ள சற்றும் தயங்காதவர்தான் இந்தக் கருணாநிதி. திடீரென்று பி.ஜே.பி. மதவாதக் கட்சியாகத் தோன்றுகிறது கருணாநிதிக்கு. 1998-ல் பி.ஜே.பி.யோடு கூட்டணி சேர்வதற்கு முன்பாக, பிஜேபி குறித்து கருத்துக் கூறிய கருணாநிதி, நாலு பண்டாரங்கள் சேர்ந்து தொடங்கிய கட்சி என்று பி.ஜே.பி.யை வர்ணித்தவர், அதே கட்சியின் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தபோது, அந்த அமைச்சரவையில் இணைந்து மத்திய அரசில் முக்கிய பதவிகளைப் பெற்றபோதுதான், அது அள்ளித்தரும் அட்சயப்பாத்திரம் என்பதை கருணாநிதி உணர்ந்தார்.



NARENDRA_MODI_CM_1772475f


2004-ல் தேர்தல் நெருங்கும் சமயத்தில் மதவாதம் என்ற அஸ்திரத்தைக் கையில் எடுத்தார் கருணாநிதி. கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல், அணி மாறி காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த கருணாநிதி, மத்திய அரசில் பசையுள்ள அமைச்சரவைகளைப் பெற்று, 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை கோடிகளை வாரிக் குவித்தார்.  2007-ம் ஆண்டில், கேடி சகோதரர்களோடு ஏற்பட்ட பிணக்குக்குப் பிறகு, ஆ.ராசாவை தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக ஆக்கினார்.


ஆ.ராசா, தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அலைக்கற்றை ஊழலுக்காக முதல் தவணையாக பெற்று வழங்கிய அந்த மிகப்பெரிய தொகையைப் பார்த்ததும் கருணாநிதிக்கு மாறன்களின் மீது மிகப்பெரிய கோபம் ஏற்பட்டது. இத்தனை தொகை அவனுக்கும் வந்திருக்குமே… மொத்தத்தையும் அவனே ஆட்டையைப் போட்டுவிட்டானே. ஆனால், இவன் நம்மிடம் வந்து ஒப்படைத்துவிட்டானே என்று நினைத்து ஆ.ராசாவை உச்சி முகர்ந்தார்.


அதற்குப் பிறகு நடந்த அலைக்கற்றை ஊழல் விவகாரம் வெளிவந்ததும், ஆ.ராசா மற்றும் கனிமொழியின் கைதுகளும் நாடறிந்தது. மீண்டும் அது குறித்து விளக்க வேண்டியதில்லை.    ஆ.ராசா செய்த ஊழல்கள் கருணாநிதிக்கு தெரியுமா? தெரியாதா? என்ற சந்தேகத்திற்கு விடையளித்தது ஜாபர் சேட்டின் டேப்புகள்.   ஒவ்வொரு உரையாடலிலும், ஜாபர் சேட் “தலைவரிடம் சொல்லி விடுங்கள், நான் தலைவரிடம் சொல்லி விட்டேன்” என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார். கருணாநிதியின் கண்ணசைவிலேயே ஒவ்வொரு ஊழலும் நடைபெற்றது என்பதை அந்த ஒலிநாடாக்கள் தெள்ளத்தெளிவாக நிரூபித்தன.


மத்திய அரசில் இத்தனை ஆண்டுகளாக அங்கம் வகித்தது எதற்காக என்பதற்கு, அந்த ஒலிநாடாக்கள் ஒரு சிறு உதாரணம்.  நீரா ராடியா உரையாடல்களில், அவர் குறிப்பாக ஒரு விஷயத்தைச் சொல்லுவார்.  2009-அமைச்சரவை நியமனத்தின் போது, பிரதமர் டி.ஆர்.பாலு மட்டும் வேண்டவே வேண்டாம் என்று கூறி விட்டார் என்று சொல்லுவார்.   பக்கத்தில் இடியே விழுந்தாலும் கவலையே படாமல், எருமை மாடு போலவே இருக்கும் மன்மோகன் சிங்கே டி.ஆர்.பாலு வேண்டவே வேண்டாம் என்று கூறுகிறார் என்றால் எப்படிப்பட்ட ஊழல் பேர்வழியாக டி.ஆர்.பாலு இருந்திருப்பார் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்.  சேதுக்கால்வாய் தொடக்கப் பணிகளின் போது, தோண்டும் வேலைகளில் மட்டும்  1500 கோடி ரூபாயை டி.ஆர்.பாலு அபகரித்தார் என்கின்றன தகவல்கள். இது தவிரவும், கப்பல் போக்குவரத்துத் துறை மற்றும் தரை வழிப்போக்குவரத்துத் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த டி.ஆர்.பாலு பல கோடிகளை சுருட்டியுள்ளார் என்பது மன்மோகனுக்குத் தெரியும்.  டி.ஆர்.பாலுவை மீண்டும் அமைச்சராக்க வேண்டும் என்று கருணாநிதியும் பிடிவாதம் பிடிக்காததற்கு காரணம், அடிக்கும் தொகையில் டி.ஆர்.பாலு கருணாநிதிக்கு பங்கு தரமாட்டார் என்பதே.  அனைத்தையும் அவரே வைத்துக் கொள்வார். இதனால்தான் 2009-ஆம் ஆண்டு டி.ஆர்.பாலு அமைச்சராவதில் கருணாநிதி பெரிய அளவில் முனைப்பு காட்டவில்லை.  ஆனால், ஆ.ராசா மீண்டும் அமைச்சராக வேண்டும் என்றும், பெட்ரோமாக்ஸ் லைட்டான தொலைத்தொடர்புத் துறையேதான் வேண்டும் என்றும் கேட்டுப் பெற்றதன் பின்னணியில், ஏற்கனவே திருடித் தின்றதன் சுவையே காரணம்.


ஆனால், மத்திய கணக்காயரின் அறிக்கை, ராசா மற்றும் கருணாநிதியின் கனவுகளை தகர்த்தது.  அதன் பிறகு ராசா கைது செய்யப்பட்டபோது, பார்ப்பன ஊடகங்களின் சதி என்றார் கருணாநிதி.  2ஜி ஊழலுக்கு சாதியப் பரிமாணத்தை அளித்தார்.  ராசா தலித் என்பதால் ஊடகங்கள் அவரை குறிவைத்துத் தாக்குகின்றன என்றார். என்.சீனிவாசன் என்ற பார்ப்பனரோடு தொழில் ஒப்பந்தம் செய்து கொண்டு, அவரிடம் 60 கோடி ரூபாயை வாங்கி, கலைஞர் டிவிக்காக வாங்கிய 200 கோடி ரூபாயை அடைத்த கருணாநிதி, மீண்டும் பார்ப்பன எதிர்ப்பு என்ற அஸ்திரத்தை கையில் எடுத்தார். பார்ப்பனர்கள் அனைவரும் சேர்ந்து, அப்பாவி ஆ.ராசாவை சிக்கவைக்க பெரும் சதிச்செயலில் ஈடுபடுகிறார்கள் என்ற பிம்பத்தைக் கட்ட முயன்றார்.   அதில் அவர் வெற்றி பெற்றாரோ இல்லையோ ஆனால் ராசா சிறை சென்றார்.


311951



விசாரணை ராசாவோடு முடியும் என்று மகிழ்ந்திருந்த கருணாநிதிக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது கலைஞர் டிவிக்கு லஞ்சமாக வாங்கிய 200 கோடியையும் சிபிஐ விசாரணை வளையத்தில் கொண்டு வந்தது. பதறிப்போனார் கருணாநிதி.   200 கோடி பணம் வாங்கிய விவகாரம் தொடர்பான கூட்டத்தில், பங்கெடுத்தது தயாளு அம்மாள்தான் என்பது நன்றாகத் தெரிந்தும், கைது செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் கனிமொழியை பெயர் கொடுக்கச் சொன்னார்.   ஆனால் கனிமொழி கைது செய்யப்பட்டபோது துடித்துப் போனார் கருணாநிதி.  கனிமொழி சிறையில் இருந்தவரை, டெல்லியை சுற்றிச் சுற்றி வந்தார்.  ஆனால் ஆறு மாதங்கள் வரை அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை.  கனிமொழியின் ஜாமீன் மனுவுக்காக வாதாடிய ராம் ஜெத்மலானி, 2ஜி ஊழலில் அனைத்துத் தவறுகளையும் செய்தது ஆ.ராசாதான். கனிமொழி எந்தத் தவறும் செய்யவில்லை என்று வாதாடியபோதுதான் கருணாநிதியின் அசல் முகம் தெரியவந்தது.  தன் மகளுக்காகவும், குடும்பத்தினருக்காகவும், எந்த நிலைப்பாட்டையும் எடுக்க கருணாநிதி தயங்க மாட்டார் என்பதை இந்த சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியது.


2009ம் ஆண்டு, நடந்த இறுதி ஈழ யுத்தத்தில் கருணாநிதியும், திமுகவும் இழைத்த துரோகங்களையும், உண்ணாவிரத நாடகங்களையும் பற்றி சவுக்கு தளத்தில் பக்கம் பக்கமாக எழுதியாயிற்று.   அதைப் பற்றி மீண்டும் குறிப்பிட விரும்பவில்லை.


திமுகவின் ஊழல்களை பட்டியலிட்டால், பக்கங்கள் போதாது. கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த காலம் முதலாக, இன்று வரை, அவரின் மறுபெயரே ஊழல்தான்.   இப்படி கூச்சநாச்சமில்லாமல் ஊழலில் திமுகவும் அதன் அமைச்சர்களும் ஊறிப்போனதன் காரணம், கருணாநிதி, தலைமைப் பொறுப்பேற்ற நாள் முதலாகவே, திமுகவை ரிலையன்ஸ் நிறுவனம் போலவே நடத்தினார்.  திருபாய் அம்பானி தொடங்கிய ரிலையன்ஸ் நிறுவனத்தை பங்கு போட்டுக் கொள்ள அனில் அம்பானியும், முகேஷ் அம்பானியும் சண்டை போட்டுக் கொண்டது போலத்தான் இன்று திமுகவில் அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் சண்டை நடந்து கொண்டிருக்கிறது.  கருணாநிதி திமுகவை ஒரு தனியார் நிறுவனத்தைப் போலவே நடத்திக் கொண்டிருக்கிறார்.  அதன் காரணமாகத்தான் திமுகவில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவரும், எப்படி சம்பாதிப்பது என்ற ஒற்றை நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


மாநாடுகள் நடத்துவதே நிதி வசூலுக்காக மட்டுமே என்பதை உருவாக்கியது திமுகதான்.   சமீபத்தில் நடந்த திருச்சி மாநாட்டில் கூட, கோடிக்கணக்கில் நிதி வசூல் செய்து கருணாநிதியிடம் வழங்கப்பட்டது.  இப்படி நிதிகள் கோடிக்கணக்கில் வசூல் செய்யப்பட்டாலும், தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கையில், 10 கோடி செலவு செய்ய முடியுமா என்பதை உறுதி செய்த பிறகே சீட் வழங்கப்படுகிறது.  வசூல் செய்து தரப்படும் தேர்தல் நிதி, எப்படி செலவு செய்யப்படுகிறது என்பது குறித்து எந்த விதமான தகவல்களும் வெளியிடப்படுவதில்லை. வசூல் செய்யப்படும் நிதிகள், திமுக அறக்கட்டளை மற்றும் முரசொலி அறக்கட்டளையில் முதலீடு செய்யப்பட்டு, அந்த அறக்கட்டளைகளின் மீது, கோழி அடைக்காப்பதைப் போல ஸ்டாலின் அமர்ந்து கொண்டுள்ளார்.


சரி. ஊழலை விடுங்கள்.   தமிழக உரிமைகளுக்காகாவது, திமுக கடந்த 15 ஆண்டுகளாக ஏதாவது செய்திருக்கிறதா என்று பார்த்தால், காவிரி நடுவர் ஆணையத்தின் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது முதல், கச்சத்தீவுக்காக வழக்கு தொடுப்பது வரை எல்லாவற்றையும் செய்தது ஜெயலலிதாதான்.   தமிழ்… தமிழ்… என்று பசப்பு வார்த்தைகளைப் பேசிய கருணாநிதி, தமிழர்களுக்கும் தமிழினத்துக்கும் இழைத்தது வெறும் துரோகமே தவிர வேறு அல்ல.


திமுக தொடக்க விழாவில் பேசிய அண்ணா, திமுகவின் நோக்கத்தை இவ்வாறு குறிப்பிட்டார் “திராவிடர் கழகமாகட்டும் – திராவிட முன்னேற்றக் கழகமாகட்டும். படை வரிசை வேறு என்றாலும் கொள்கை ஒன்றுதான். கோட்பாடு ஒன்றுதான்.  திட்டமும் வேறு அல்ல.  படைவரிசை இரண்டுபட்டு விட்டது என்று எக்காளமிடும் வைதீகபுரிக்கும், வடநாட்டு ஏகாதிபத்யத்துக்கும் சம்மட்டியாக விளங்க வேண்டும்.  இரு கழகங்களும் இரு திக்குகளிலுமிருந்து வடநாட்டு ஏகாதிபத்தியத்தை ஒழித்து, வைதீகக் காட்டை அழித்து சமதர்ம பூங்காவை திராவிடத்தை செழிக்கச்செய்தல் வேண்டும்.  அதிலே எந்த கழகம் பூங்காவை அமைத்தாலும் அதில் பூக்கும் பூக்கள், காய்கள், கனிகள், திராவிடத்தின் எழுச்சியை மலர்ச்சியைத் தான் குறிக்கும்.  இரு பூங்கக்களும் தேவை. ஒன்றோடொன்று பகைக்கத் தேவையில்லை.  அவசியமும் இல்லை.  எது புஷ்பித்தாலும் மாலையாகப் போவது திராவிடத்துக்குத்தான் என்ற எண்ணம் வேண்டும்.”


இந்தக் கொள்கைகளுடனா இன்றைய திமுக இருக்கிறது?


2006 முதல் 2011 வரை ஆட்சியில் இருந்த திமுகவின் முக்கிய பிரமுகர்கள் எத்தனை பேரின் நிலங்களை அபகரித்தார்கள் ?   எத்தனை கோடிகள் மதிப்பிலான நிலங்கள் அபகரிக்கப்பட்டன ? இவரின் அமைச்சரவை சகாக்கள் அடித்த கொள்ளைகளுக்கு அளவு இருந்ததா ?   ஆனால், அப்படி கொள்ளையடித்த அமைச்சர்களிடம் தானே கருணாநிதி கூச்சமில்லாமல் நிதி பெறுகிறார் ?


இன்று பத்திரிக்கை சுதந்திரம் பற்றிப் பேசும் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் பத்திரிகைகளை எப்படியெல்லாம் மிரட்டி வைத்திருந்தார்? விளம்பரங்கள் என்ற எலும்புத்துண்டுகளைப்போட்டு, பத்திரிக்கை முதலாளிகளை வளைக்கும் தந்திரத்தை, கருணாநிதிதான் ஜெயலலிதாவுக்கும் அறிமுகப்படுத்தியவர்?  அவர் பத்திரிகை சுதந்திரத்தைப் பற்றிப் பேசலாமா ?   அரசு நிர்வாகமும், அதிகாரிகளும், எப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்கள் கருணாநிதியின் ஆட்சியில்?


ஜெயலலிதாவின் நீண்ட சொத்துக்களை இன்று பட்டியலிடும் கருணாநிதி, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் ஆ.ராசாவையும், தயாநிதி மாறனையும் தேர்தலில் போட்டியிடாமல் நிறுத்தி வைத்தாரா என்ன? சிறை சென்று வெளி வந்த கனிமொழியைத்தானே எம்.பி., ஆக்கினார்?  கருணாநிதி இப்படியெல்லாம் நடந்து கொள்வதற்கான காரணம் என்னவாக இருக்க முடியும்?   இந்த மக்களை நான் அறுபது ஆண்டுகளாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இவர்கள் முட்டாள்கள். மீண்டும் மீண்டும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள் என்ற இறுமாப்புத்தானே?


2014-ன் முதல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி “என்னைப் பொறுத்தவரையில் எனக்குக் கொள்கை தான் முக்கியம், குழந்தை குட்டிகள் அல்ல.


நான் அரசியலுக்கு வந்து ஏறத்தாழ 70 ஆண்டுகள் கடந்து விட்டன.


இப்போது எனக்கு வயது 90 என்றால், இன்னும் எத்தனை ஆண்டு காலம் வாழப் போகிறேன் என்று எனக்குக் கவலை இல்லை. ஆனால் மிச்சம் இருக்கின்ற இந்த ஆண்டுகளில் தமிழர்களுக்கு நான் என்ன செய்தேன்? தமிழ் மக்களுக்கு நான் என்ன செய்தேன்? என்பது தான் முக்கியம். அதைச் செய்து விட்டுத் தான் நான் கண் மூடுவேன். அதுவரையிலே காரியம் ஆற்றுவேன்.”


என்று பேசினார். குழந்தை குட்டிகள் கருணாநிதிக்கு முக்கியம் இல்லையாம். இதை யாராவது நம்புவார்களா?  அப்படியா நடந்து கொண்டிருக்கிறார்?  திமுகவில் எத்தனையோ முன்னணித்  தலைவர்கள் இருந்தும், இன்று தலைவர் பொறுப்புக்கு வந்துள்ளவர் ஸ்டாலின்தானே.   காங்கிரஸின் கையிலும் காலிலும் விழுந்து, திருச்சி சிவாவையா எம்.பியாக்கினார்?  கனிமொழியைத்தானே   ஆக்கினார்?  மகன், மகள், பேரன், பேத்தி, மருமகன் என்று திமுகவையும், ஆட்சி வந்தால் அதிகாரத்திலும் இருப்பது கருணாநிதியின் குடும்பத்தினர்தானே…?


திராவிடம், இனம், மொழி, பார்ப்பன எதிர்ப்பு என்ற புளித்துப் போன வார்த்தைகளால், தமிழகத்தைக் கொள்ளையடித்ததைத் தவிர கருணாநிதி கும்பல் செய்தது வேறு எதுவுமே அல்ல.


ஸ்டாலின் மாற்றத்தைக் கொண்டு வருவார் என்று திமுகவில் சிலர் வாதாடக் கூடும்.  சொந்த தங்கையின் வளர்ச்சியைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் அவருக்கு எதிராக அரசியல் செய்து அவரை ஒழித்துக் கட்ட முயற்சிப்பவர்தான் ஸ்டாலின்.  2ஜி ஊழலில் வந்த பணத்தில் பெரிய பங்கை பெற்றவர் ஸ்டாலின்தான்.  ஆனால், அந்த ஊழல் குறித்து எதுவுமே தெரியாதது போல இன்று நடந்து கொள்கிறார்.  இந்தத் தேர்தலில் ஸ்டாலின் தேர்ந்தெடுத்த 35 திமுக வேட்பாளர்களில் ஓரிருவரைத் தவிர மீதம் உள்ள எல்லோரிடமும் பணத்தைப் பெற்றுக் கொண்டே இடத்தை ஒதுக்கியிருக்கிறார் ஸ்டாலின். இதிலிருந்தே அவர் எப்படிப்பட்ட கடைந்தெடுத்த ஊழல் பேர்வழி என்பதை உணர்த்து கொள்ளலாம்.  கட்சியில் மூத்தவர்களுக்கோ, கட்சிக்காக உழைத்தவர்களுக்கோ இடமில்லை. பணமிருப்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என்பதை அப்பட்டமாக உணர்த்தியுள்ளார் ஸ்டாலின். இவரும் கருணாநிதியின் வழித்தோன்றல்தானே…?


இன அழிப்புப் போர் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தபோது, அந்தப் போரை பின்னின்று நடத்திய காங்கிரஸ் கட்சிக்கு முட்டுக் கொடுத்து தாங்கிப் பிடித்த கருணாநிதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் என்ன பேசினார் ?


“காங்கிரஸ் கட்சி இன்றைக்கு அதல பாதாளத்திலே விழுந்து கிடக்கிறது என்றால் அதற்கு என்ன காரணம்? ஒரு மனிதனுக்கு அவன் நல்லமுறையிலே வாழ வேண்டுமேயானால் நன்றியுணர்வு இருக்க வேண்டும். அந்த நன்றி உணர்வு இல்லாமல் கடந்த காலத்திலே தங்களை கைதூக்கி விட்டவர்கள் யார் என்பதையெல்லாம் எண்ணி பார்க்காமல் திராவிட முன்னேற்றக் கழகத்தையும், திராவிட முன்னேற்றக்  கழகத்தின் தோழர்களையும் செயல்வீரர்களையும் அவர்கள் படுத்தியபாட்டுக்கு அனுபவிக்கிறார்கள்.


என்னதான் அனுபவித்தாலும் அவர்களுக்கு ஒன்று சொல்லுவேன்,  இன்னமும் சொல்லுவேன், நம்பிக்கையோடு சொல்லுவேன், இதே காங்கிரஸ் காரர்கள் நாளைக்கு மனம் வருந்தி நாங்கள் இந்த மதச்சார்பற்ற நிலைக்கு மீண்டும் திரும்புவோம், நாங்கள் மத வெறியர்களை ஆதரிக்க மாட்டோம் என்று சொல்வார்களேயானால்; என்று முன் வருவார்களேயானால்; அவர்களுக்கு போனால் போகிறது என்று திராவிட முன்னேற்றக் கழகம் அவர்களை ஆதரிக்கும்.


எதற்கு? ஆதரித்து ஓட்டு போட அல்ல. அவர்களுக்கு வந்த தீங்குகளை மாற்றி அமைக்க; அவர்களுக்கு வந்த தீமைகளை உடைத்து நொறுக்க; அவர்களை மன்னித்து, அவர்களை பொறுத்துக்கொண்டு இதுவரையிலே அவர்கள் செய்த காரியங்களையெல்லாம் எண்ணிப்பாராமல்; அவர்களுக்கு பொது மன்னிப்பு தருவது என்ற முறையிலே”


காங்கிரஸ் கட்சிக்கு நன்றி இல்லையாம்!!! ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாயை கொள்ளையடித்தவர்களை கைது செய்ததைத்தான் நன்றி கெட்ட செயல் என்கிறார் கருணாநிதி.  அப்போதும் நான் காங்கிரஸ் கட்சியோடு சேர மாட்டேன் என்று சொல்லவில்லை?  காங்கிரஸ் கட்சி தனது மதவாதப் போக்கை விட்டால், ஆதரவு கொடுப்பது பற்றி பரிசீலிப்பாராம்.  “அம்பாள் என்றைக்கடா பேசினாள் ?”   என்ற கருணாநிதியின் வசனம்தான் நினைவுக்கு வருகிறது.  காங்கிரஸ் என்று தங்களை மதவாதக் கட்சி என்று அழைத்துக் கொண்டார்கள் ?


பொய் புரட்டு,பசப்பு,அயோக்கியத்தனம்,மோசடி என்று தமிழில் உள்ள அத்தனை வார்த்தைகளும் கருணாநிதிக்கு முழுமையாக பொருந்தும்.


அறிஞர் அண்ணா சொன்ன கடமை… கண்ணியம்… கட்டுப்பாடு… ஆகியவை மறந்து போய், இன்று திமுக கடைபிடிக்கும் ஒரே கொள்கை கயமை… கயவாளித்தனம்… கபளீகரம்… மட்டுமே.


இவர்களையா மீண்டும் தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்துக்கு அனுப்பப் போகிறீர்கள்?


 

No comments:

Post a Comment