Thursday, 6 May 2021

THALAVAI VEERAN VELUTHAMBI LOST HIS LIFE ,AGAINST BRITISH EAST INDIA COMPANY 1765 MAY 6 - 1809 MARCH 29

 THALAVAI VEERAN VELUTHAMBI LOST 

HIS LIFE ,AGAINST BRITISH EAST INDIA 

COMPANY 1765 MAY 6 - 1809 MARCH 29




வேலாயுதன் செண்பகராமன் தம்பி (1765–1809) திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மகராஜா பலராம வர்மா குலசேகரப் பெருமாள் மன்னராக வீற்றிருந்த காலத்தில் தளவாய் மற்றும் படை தளபதியாக இருந்தவர். வேலுத்தம்பி என அறியப்பட்ட இவர் நாஞ்சில் நாட்டு களரி வீரன் ஆவார். பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தை எதிர்த்துப் போரிட்டவர்



ஆரம்ப கால வாழ்க்கை

வேலாயுதன் செண்பகராமன் தம்பி (வேலுத்தம்பி) கி.பி.1765-ம் ஆண்டு மே மாதம் 6-ம் நாள் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நாஞ்சில் நாட்டில் (இன்றைய தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுக்காவிற்கு உட்பட்ட) இரணியல் தேசத்து தலக்குளம் என்ற கிராமத்தில் வலியவீட்டில் பிறந்தார். இவரது பெற்றோர்கள் திரு.குஞ்சு மயிற்றி பிள்ளை, திருமதி.வள்ளியம்மை பிள்ளை தங்கச்சி





திருவிதாங்கூர் மாமன்னர் மார்த்தாண்ட வர்மா ஆட்சி காலத்தில் "செண்பகராமன்" பட்டம் பெற்ற உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர் வேலுத்தம்பி. இவரது குடும்ப பெயர் "இடப்பிரபு குலோத்துங்க கதிர்குலத்து முளப்படை அரசனான இறையாண்ட தலக்குளத்து வலிய வீட்டில் தம்பி செண்பகராமன் வேலாயுதன்" என்பதாகும். தலக்குளத்து வேலுத்தம்பி என பரவலாக அறியப்பட்டார். இவருடைய சகோதரன் பத்மநாபன் தம்பி ஆவார். வேலுத்தம்பி நாயர் சமூகத்தை சேர்ந்தவர். மலையாளத்தை தாய்மொழியாக கொண்டவர். இது தவிர தமிழ், உருது ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். யாருக்கும் அஞ்சாத வீரம், எந்த ஒரு செயலையும் துணிந்து செய்யும் தைரியம், இளம்வயதிலேயே களரி கலை திறமை கொண்டு சுற்றுவட்டார பகுதிகளில் எவரும் வெல்ல முடியாத தலக்குளம் மண்ணின் வீரனாக காணப்பட்டார்.


காரியக்கார் (தாசில்தார்)

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், திருவிதாங்கூரில் மாமன்னர் மார்த்தாண்ட வர்மா ஆட்சி காலம் முடிந்து மன்னர் தர்மராஜா கார்த்திகை திருநாள் ராமவர்மா (கி.பி.1758 - 1798) ஆட்சி புரிந்து வந்தார். இவரது ஆட்சி காலம் திருவிதாங்கூரின் பொற்காலம் என போற்றப்படுகிறது. ஒருமுறை மன்னரின் இராமேஸ்வர பயணத்தில் அவருடைய உடைமைகள் களவு செய்யப்பட்டது. அரசவை வீரர்கள் முயன்று கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், களவு பொருட்களை கண்டுபிடிக்கும் பொறுப்பு இருபது வயது களரி வீரனாக இருந்த தலக்குளத்து வேலுத்தம்பியிடம் ஒப்படைக்கப்பட்டது. தன்னுடைய நாஞ்சில் படையுடன் புறப்பட்ட வேலுத்தம்பி, மூன்று நாட்களில் களவு போன பொருட்களுடன் மன்னர் முன் வந்து நின்றார். வேலுத்தம்பியின் திறமையை கண்டு வியந்த மன்னர் தர்மராஜா கி.பி.1784-ம் ஆண்டு வேலுத்தம்பியை மாவேலிக்கர எனும் இடத்தில் வரி வசூலிக்கும் அரசு காரியக்காராய் (தாசில்தார்) நியமித்தார்.







ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி

கி.பி.1789-ல் மைசூர் மன்னர் திப்பு சுல்தான் திருவிதாங்கூரின் மீது படையெடுத்தபோது மன்னர் தர்மராஜா ஆங்கிலேயரிடம் உதவி நாடினார். ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி திருவிதாங்கூரின் உதவிக்கு வந்தது. கி.பி.1790-ல் கம்பெனி திப்பு சுல்தான் மீது போர் தொடுத்து அவரை தோற்கடித்தது. திருவிதாங்கூர் திப்பு சுல்தானிடமிருந்து காப்பாற்றப்பட்டது. ஆனால், போர் செலவுக்காக திருவிதாங்கூர் அரசு கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ஒரு பெருந்தொகை கொடுக்க வேண்டியதிருந்தது. பின்னர் அந்நியப் படையெடுப்பிலிருந்து திருவிதாங்கூரை பாதுகாத்துக் கொள்வதற்காக கிழக்கிந்தியக் கம்பெனியோடு ஒரு நிரந்தர உடன்படிக்கை செய்ய தீர்மானிக்கப்பட்டது. கி.பி.1795-ல் செய்யப்பட்ட உடன்படிக்கையின்படி திருவிதாங்கூர் அரசு ஆண்டுதோறும் கம்பெனிக்கு ஒரு பெருந்தொகையை கப்பமாகக் கொடுக்க ஒப்புக் கொண்டது. இந்த உடன்படிக்கை மூலம் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் திருவிதாங்கூருக்கும் அரசியல் தொடர்பு ஏற்பட்டது.


முளகு மடிசீல காரியக்கார் (நிதி அமைச்சர்)

திருவிதாங்கூரின் மன்னராக கி.பி.1798-ம் ஆண்டு மகாராஜா அவிட்டம் திருநாள் பலராம வர்மா குலசேகரப் பெருமாள் அரியணை ஏறிய போது, நாடு அமைதியின்மை மற்றும் பல்வேறு உள் மற்றும் வெளி அரசியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டது. பதினாறு வயது சிறுவனாக இருந்த மன்னர் பலராம வர்மா, தளவாய் ஜெயந்தன் சங்கரன் நம்பூதிரி என்பவரின் செல்வாக்கின் கீழ் இருந்தார். சர்வாதிகார ஆட்சி புரிந்த சங்கரன் நம்பூதிரி நாணயமற்றவர், இதற்கு முன் இருந்த சிறந்த நிர்வாகியான தளவாய் இராஜா கேசவதாசன் மரணத்திற்கு குற்றம் சாட்டப்பட்டவர். நம்பூதிரியும் அவரது ஆதரவு அமைச்சர்களான தக்கலை சங்கரநாரயணன் செட்டி மற்றும் தச்சில் மாத்தூதரகன் ஆகியோர் அரசுக்கு ஏதிராக செயல்பட்டனர். அதிக வரி வசூலித்து மக்களை கொடுமைப்படுத்தினர். ஆங்கில அரசுக்கு முழு ஆதரவாக செயல்பட்டனர். இவர்களது ஊழல்களால் திருவிதாங்கூரில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டு கருவூலம் காலியானது.






தளவாய் சங்கரன் நம்பூதிரி திருவிதாங்கூர் அரசின் கஜானாவை நிரப்புவதற்காக அனைத்து தாசில்தாரர்களையும் அழைத்து மூன்றாயிரம் ரூபாய் அரசுக்கு நிதி கட்டுமாறு கட்டளையிட்டார். ஆனால், மாவேலிக்கர தாசில்தாரான வேலுத்தம்பி மறுத்தார். நான் நாஞ்சில் நாடு சென்று நிதி திரட்டிக் கொண்டு வருகிறேன் என்று மூன்று நாட்கள் அவகாசம் கேட்டு மாவேலிக்கரையில் இருந்து தலக்குளம் வந்து சேர்ந்தார். தளவாய் சங்கரன் நம்பூதிரி மற்றும் அவரது இணை அமைச்சர்கள் சேர்ந்து நடத்தும் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்ட எண்ணினார். நிதி கட்டாமல் கால தாமதம் செய்த வேலுத்தம்பியை கைது செய்ய அரசு ஆணை பிறப்பித்தார் தளவாய் சங்கரன் நம்பூதிரி. இதனால் கோபம் கொண்ட வேலுத்தம்பி 1799-ம் ஆண்டு மே மாதம் தலக்குளம் மற்றும் இரணியல் பகுதிகளில் இருந்து ஆயுதம் தாங்கிய ஒரு பெரும் படையைத் திரட்டி திருவனந்தபுரம் கோட்டையை முற்றுகையிட்டு மன்னருக்கு எதிராக கலகம் செய்தார். மக்களுக்கு கொடுக்கப்பட்ட வரியை குறைக்க வேண்டும் என்றும், கொடுங்கோல் ஆட்சி புரியும் சங்கரன் நம்பூதிரியை தளவாய் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், ஊழல் அமைச்சர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று மன்னருக்கு கோரிக்கை விடுத்தார்.


வேலுத்தம்பியின் எதிர்ப்பில் உண்மை இருப்பதை அறிந்த மன்னர், சங்கரன் நம்பூதிரியை தளவாய் பதவியில் இருந்து நீக்க உத்தரவிட்டார். ஊழல் அமைச்சர்களான சங்கரநாரயணன் செட்டி மற்றும் மாத்தூதரகன் ஆகிய இருவருக்கும் பொதுமக்கள் முன்னிலையில் சவுக்கடி கொடுக்கப்பட்டு, காதுகள் அறுக்கப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். தளவாய் சங்கரன் நம்பூதிரி நாடு கடத்தப்பட்டார். அதன் பிறகு, மன்னர் பலராம வர்மா திருவிதாங்கூர் அரசின் புதிய தளவாய் ஆக ஐயப்பன் செண்பகராமன் பிள்ளை என்பவரை நியமித்தார். வேலுத்தம்பியை முளகு மடிசீல காரியக்காராய் (நிதி அமைச்சர்) நியமனம் செய்தார்.


ரெசிடெண்ட் மெக்காலே

கி.பி.1800-ம் ஆண்டு திருவிதாங்கூர் மற்றும் கொச்சி சமஸ்தானங்களுக்கு கர்னல் கொலின் மெக்காலே என்பவர் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரியாக (ரெசிடெண்ட்) நியமிக்கப்பட்டார். இவர் திருவிதாங்கூரிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு உதவியதோடு கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார். இவருடைய காலத்தில்தான் தென்திருவிதாங்கூரில் கிறிஸ்தவ மதம் வேரூன்றியது. இவர் கொச்சி போல்காட்டி கோட்டையில் தங்கி இருந்தார்.


தளவாய் (அ) திவான் (தலைமை அமைச்சர்)

திருவிதாங்கூர் மன்னர் பலராம வர்மா கி.பி.1802-ம் ஆண்டு வீரத்திலும் திறமையிலும் சிறந்து விளங்கிய நிதி அமைச்சராக இருந்த வேலுத்தம்பியை உயர்ந்த பதவியான தளவாய் ஆக நியமனம் செய்தார். வேலுத்தம்பி திருவிதாங்கூரின் தளவாய் (அ) திவான் பதவியை ஏற்ற பின்னர் நாட்டின் வருமானம் குறைய ஊழலே காரணம் என கண்டுபிடித்தார். கடுமையான சட்டங்களை கொண்டு வந்து ஊழலை முற்றிலுமாக ஒழித்தார். ஒரு வருடத்திற்குள் நாட்டில் அமைதியும் ஒழுங்கும் நிலைநாட்டப்பட்டது. மக்களுக்கு நியாயமான வரியை விதித்தார். ஆங்கில அரசுக்கு முறையான கப்பத்தொகையும் செலுத்தி வந்தார். ஆரல்வாய்மொழி, உதயகிரி, பத்மனாபபுரம் மற்றும் இரணியல் கோட்டைகளை பலப்படுத்தினார். கிராமங்களில் ஆயுத பயிற்சி மையங்களை நிறுவினார். பல ஆலயங்களை சீரமைத்தார். வேலுத்தம்பி பிரிட்டிஷ் அதிகாரியான கர்னல் மெக்காலேவிடம் சிறந்த நட்பைக் கொண்டிருந்தார். இதனால் கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகத்திடமும் வேலுத்தம்பிக்கு செல்வாக்கு ஏற்பட்டது.


தளவாய் வேலுத்தம்பியின் ஆட்சி நேர்மையாகவும் அதேநேரம் மிகவும் கடுமையாகவும், கடினமாகவும் இருந்தது. குற்றம் புரிபவர்களுக்கு கொடுமையான தண்டனைகளை வழங்கினார். அரசுக்கு எதிராக செயல்படுபவரின் வலது கையின் விரல்கள் துண்டிக்கப்பட்டது. களவு மற்றும் குற்றச் செயல்கள் செய்பவரின் காது மற்றும் மூக்கு அறுக்கப்பட்டது. மக்களை துன்புறுத்தினாலோ, பெண்களை மானபங்கப் படுத்தினாலோ பொதுமக்கள் முன்னிலையில் சவுக்கடி மற்றும் உயிரோடு மரத்தில் ஆணி அறைந்து தலை துண்டிக்கப்பட்டு கடலில் வீசப்பட்டது.


ஒருமுறை தன்னுடைய தலக்குளம் வலியவீட்டின் வரியைக் குறைத்த காரணத்தினால் அரசு ஊழியரின் வலது கையின் விரல்களை வெட்டினார். அதற்கு காரணமாக இருந்த தனது தாயையும் தண்டித்தார் என்பது வரலாறு. வேலுத்தம்பி தளவாய் என்ற பெயரைக் கேட்டாலே திருவிதாங்கூர் சமஸ்தானமே நடுங்கும் அளவிற்கு அவரது கடும் நடவடிக்கைகள் இருந்தது. வேலுத்தம்பியின் இந்த கடுமையான நடவடிக்கைகளைக் கண்டு சில ஆங்கில அதிகாரிகளே மிரண்டனர். ஆனால், வேலுத்தம்பியின் ஆட்சி திருவிதாங்கூர் மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. நாட்டில் களவும், குற்ற செயல்களும் குறைந்தன. மக்கள் தைரியமாக வெளியில் நடமாடத் தொடங்கினர். பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் இருந்தனர். வேலுத்தம்பியின் கடுமையான நடவடிக்கைகளை மற்ற அமைச்சரான குஞ்சுனிலம் பிள்ளை எதிர்த்தார். வேலுத்தம்பியைக் கவிழ்க்க சதி திட்டம் தீட்டினார். ஆனால், வேலுத்தம்பியால் இவரது திட்டம் முறியடிக்கப்பட்டது.


நாயர் படை கலகம்

திருவிதாங்கூரில் கி.பி.1804-ம் ஆண்டு நிதி நெருக்கடி ஏற்பட்டு அரசு கம்பெனிக்குக் கொடுக்க வேண்டிய கப்பத்தொகையில் நிலுவை ஏற்பட்டது. இதனை நிவர்த்திச் செய்ய திவான் வேலுத்தம்பி நாயர் படைகளுக்கு கொடுத்து வந்த ஊதியத்தைக் குறைக்க முடிவெடுத்தார். இதற்கு ஆங்கில அதிகாரி மெக்காலேயின் ஆதரவு இருந்தது. இதனை எதிர்த்து நாயர் படையைச் சேர்ந்த போர் வீரர்கள் வேலுத்தம்பிக்கு எதிராக கலவரம் செய்தனர். வேலுத்தம்பியை உடனடியாக பதவிமாற்றம் செய்ய வேண்டும் எனவும் ஆங்கிலக் கம்பெனியுடனான கூட்டணியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் மன்னருக்கு கோரிக்கை விடுத்தனர். வேலுத்தம்பி, கர்னல் மெக்காலேவிடம் உதவி நாடினார். கர்னல் மெக்காலே ஆங்கிலக் கம்பெனி படைகளை அனுப்பி கலவரத்தை அடக்கினார். கலவரத்திற்கு காரணமான தளபதிகள் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.


துணைப்படை ஒப்பந்தம்

ஆங்கில அதிகாரி கர்னல் மெக்காலே திருவிதாங்கூரின் உள்நாட்டுக் கலவரத்தை சாதகமாக பயன்படுத்தி நாட்டை கம்பெனி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர எண்ணினார். கி.பி.1805-ம் ஆண்டு திவான் வேலுத்தம்பியின் ஆதரவை பயன்படுத்தி 1795-ம் ஆண்டு உடன்படிக்கையை திருத்தி ஒரு புதிய உடன்படிக்கையை அறிவித்தார். அதன்படி திருவிதாங்கூரில் கலகம் செய்யும் நாயர் படைகளை கலைக்க வேண்டும் என்றும், திருவிதாங்கூரின் வெளி பாதுகாப்பு மட்டுமின்றி உள்நாட்டு கலவரங்களிலிருந்தும் பாதுகாக்க கிழக்கிந்தியக் கம்பெனிப் படைகளை நாட்டிற்குள் நிறுவ வேண்டும் என்றும், இதனுடைய மொத்த பராமரிப்பு செலவுகளுக்காக வருடத்திற்கு எட்டு லட்சம் ரூபாய் கப்பத்தொகை கட்ட வேண்டும் என்ற ஒப்பந்தத்தை அறிவித்தார். இதற்கு திவான் வேலுத்தம்பி ஆதரவு அளித்தார். ஆனால், ஆங்கில அரசு நேமம் எனும் இடம் வரை தங்களுடைய படையை அமைத்த பிறகு தான் இந்த உடன்படிக்கையை அறிவித்தது. வேறு வழியின்றி மன்னர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த உடன்படிக்கையால் கிழக்கிந்தியக் கம்பெனி, திருவிதாங்கூர் ஆட்சியில் தலையிடும் உரிமையை பெற்றது. பிரிட்டிஷ் கம்பெனி துணைப்படை நாட்டிற்குள் முகாமிட்டது. திருவிதாங்கூர் ஆங்கில ஆதிக்கத்தின் கீழ் வந்தது.


கப்பத்தொகை உயர்வு

திருவிதாங்கூரில் 1806-ம் ஆண்டு ரிங்கல்டூப் என்பவர் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்க்காக நாஞ்சில் நாடு வந்தார். கர்னல் மெக்காலே இவருக்கு ஆதரவு அளித்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார். ரிங்கல்டூப் மைலாடியில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் கட்ட அரசிடம் அனுமதி வாங்கித் தருமாறு மெக்காலேவிடம் வேண்டினார். ரிங்கல்டூப், கர்னல் மெக்காலே உதவியுடன் கொல்லம் சென்று தளவாய் வேலுத்தம்பியை சந்தித்து மைலாடியில் தேவாலயம் கட்ட அனுமதி கேட்டார். இதற்கு தளவாய் வேலுத்தம்பி எதிர்ப்பு தெரிவித்து அனுமதி வழங்க மறுத்து விட்டார். இது கர்னல் மெக்காலேவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.


இந்நிலையில் திருவிதாங்கூர் அதன் அனைத்து உள் அரசியல் குழப்பங்கள் காரணமாக கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டது. திருவிதாங்கூரில் ஏற்பட்ட நிதி நெருக்கடி குறித்து முழுமையாக அறிந்திருந்தும் கர்னல் மெக்காலே உடன்படிக்கை படி கப்பம் கட்ட வேலுத்தம்பிக்கு அழுத்தம் கொடுத்தார். நிதி நெருக்கடியால் அரசு கம்பெனிக்கு கொடுக்க வேண்டிய கப்பத்தொகையில் தொடர்ந்து நிலுவை ஏற்பட்டது. கப்பத்தொகையில் நிலுவை ஏற்பட்டதால் 1807-ம் ஆண்டு கப்பத்தொகையை மேலும் உயர்த்தினார் கர்னல் மெக்காலே. ஒரு கட்டத்தில் நாட்டின் வருமானத்தில் எண்பது சதவீதம் கப்பமாக வசூலிக்கப்பட்டது.


நிலைமை மோசமாக, ஒருமுறை மன்னரின் நகைகளை விற்று கப்பம் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மன்னர் பலராம வர்மா, மெக்காலேவை பணி இடமாற்றம் செய்ய மதராஸ் மகாணத்தின் ஆங்கில அரசின் தலைமை அதிகாரிக்கு கடிதம் எழுதினார். இந்த செய்தியால் அதிருப்தி அடைந்த மெக்காலே நிலுவையில் உள்ள மொத்த தொகையையும் உடனடியாக கட்டுமாறு திவான் வேலுத்தம்பிக்கு கட்டளையிட்டார். அதிகமான கப்பத்தொகை வேலுத்தம்பிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. நாட்டு மக்களிடம் அதிகமான வரி வசூலித்து, அதை ஆங்கில அரசுக்கு கப்பமாக கட்ட வேலுத்தம்பி கடுமையாக மறுத்தார். கப்பம் கட்டாமல் கால தாமதம் செய்தார். இதனால் மெக்காலேவிற்க்கும் வேலுத்தம்பிக்கும் இருந்த நட்பில் விரிசல் விழுந்தது. கப்பம் தொடர்ந்து உயர்த்தப்பட்டத்தை வேலுத்தம்பி எதிர்க்க பூசல்கள் வெடித்தன. வேலுத்தம்பி ஆங்கில மேலாதிக்கத்துக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார்.


வேலுத்தம்பி கம்பெனி நிர்வாகத்திற்கு எதிராக செயல்படுவதும், மயிலாடியில் தேவாலயம் கட்ட அனுமதி மறுப்பதும் மெக்காலேவிற்கு கடும் சினத்தை ஏற்படுத்தியது. கொச்சியில் இருந்து திருவனந்தபுரம் வந்து மன்னரை சந்தித்த கர்னல் மெக்காலே, கம்பெனிக்கு எதிராக செயல்படும் வேலுத்தம்பியை தளவாய் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்றும் அவர் சிறை சென்று ஐநூறு ரூபாய் ஓய்வூதியம் பெற்று வாழ வேண்டும் என மன்னருக்கு கோரிக்கை விடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வேலுத்தம்பி கம்பெனி நிர்வாகத்தால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். ஆரம்பத்தில் தன்னுடன் ஒத்துழைத்த ஆங்கில அதிகாரி மெக்காலே நாட்டை கைப்பற்ற நடத்திய சூழ்ச்சியை புரிந்து கொண்டார். அதிகமான கப்பத்தொகை மற்றும் நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடும் மெக்காலேவையும், கிழக்கிந்திய கம்பெனியையும் திருவிதாங்கூரில் இருந்து விரட்ட நினைத்தார். நாட்டையும், மக்களையும் காப்பாற்ற கம்பெனி நிர்வாகத்திற்கு எதிராக ஆயுத போர் தொடங்க முடிவு செய்தார்.


விடுதலைப் போர்

ஆங்கில கம்பெனி நிர்வாகத்திற்கு எதிராக கி.பி.1808-ம் ஆண்டு இறுதியில் வேலுத்தம்பியின் வெளிப்படையான கிளர்ச்சி வெடித்தது. இந்நிலையில் கொச்சி அரசிற்கும் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் இடையே மோதல் இருந்தது. கொச்சி அரசின் தளவாயாக இருந்தவர் பாலியத்அச்சன் கோவிந்தமேனன் என்பவர் ஆவார். இவரும் மெக்காலேவின் நடவடிக்ககைகளை எதிர்த்தார். ஆங்கில அரசின் மேலாதிக்கத்திற்கு முடிவு கட்ட வேலுத்தம்பியின் படைகளோடு கொச்சி தளவாய் பாலியத்அச்சன் படைகளும் இணைந்தன. படை பலம் அதிகரித்தது. கோட்டைகள் பலப்படுத்தப்பட்டன. ஆயுதங்களும், வெடி மருந்துகளும் அதிக அளவில் சேகரிக்கப்பட்டன. வேலுத்தம்பி திருவிதாங்கூரில் உள்ள பிரெஞ்சு மற்றும் அமெரிக்கா படைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். வேலுத்தம்பியின் திட்டம் கர்னல் மெக்காலேவை கொலை செய்து அவர் தங்கியிருக்கும் கொச்சி போல்காட்டி கோட்டையை கைப்பற்றுவது ஆகும். 1808-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் நாள் கொச்சி கோட்டையை தாக்குமாறு வேலுத்தம்பி ஆலப்புழையில் இருந்து படைகளுக்கு ஆணை பிறப்பித்தார். தளபதி வைக்கம் பத்மநாபப்பிள்ளை (செம்பில் அரையன்) தலைமையில் கொல்லத்தில் இருந்து கொச்சி நோக்கி மூடிய படகுகளில் விரைந்த படைகள் இரவோடு இரவாக மெக்காலே இருந்த கொச்சி கோட்டையை தாக்கியது. ஆங்கில படை வீரர்கள் பலர் வெட்டி கொல்லப்பட்டனர். கொச்சி கோட்டை சூறையாடப்பட்டது. கொச்சி மற்றும் கொல்லம் பகுதிகளில் கிளர்ச்சி வெடித்தது.


திடீரென நடந்த இந்த தாக்குதலை எதிர்பாராத மெக்காலே மற்றும் கொச்சி அரசின் அமைச்சரான குஞ்சு கிருஷ்னமேனன் ஆகியோர் கோட்டையின் நிலவறையில் மறைந்திருந்து தக்க சமயத்தில் அங்கிருந்த கப்பலில் ஏறி உயிர் தப்பினர். கொச்சி கோட்டையை கைப்பற்றி கொல்லம் நோக்கி திரும்பிய படைகள் வழியில் கண்ட ஒரு ஐரோப்பிய படையை கைது செய்து பள்ளுருத்தி ஆற்றில் வெட்டி வீழ்த்தியது. இந்நிலையில் வேலுத்தம்பி ஆலப்புழையில் இருந்து கொல்லம் திரும்பி அங்கிருந்த பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தினார். மரணத்திலிருந்து உயிர் தப்பிய மெக்காலே, கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த உடனடியாக கம்பெனிப் படைகளை கொல்லத்திற்கு அனுப்புமாறு மதராஸ் கவர்னருக்கு தகவல் அனுப்பினார். மைசூரிலிருந்தும், மதராஸிலிருந்தும் 12வது மற்றும் 17வது பிரிஷ்டிஷ் படை பிரிவுகள் திருவிதாங்கூரின் கொல்லம் மற்றும் கொச்சி நோக்கி படையெடுத்தது. மேஜர் ஹெவிட் மற்றும் கர்னல் ஜான் சால்மர்ஸ் தலைமையில் நடந்த போர்களில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தன.


குண்டறை விளம்பரம்

பீரங்கி பலம் வாய்ந்த ஆங்கில அரசை எதிர்க்க நாட்டு மக்களின் ஆதரவை பெற எண்ணிய தளவாய் வேலுத்தம்பி 1809-ம் ஆண்டு ஐனவரி மாதம் 11-ம் தேதி கொல்லம் அருகே குண்டறை எனும் இடத்தில் ஆங்கில அரசுக்கு எதிராக மக்கள் முன் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதில் ஆங்கில அரசை அவர் கடுமையாக விமர்சித்தார். நம் நாட்டிற்கு வந்த வெள்ளையர்கள் நாட்டை ஆள முயற்சிப்பதும், நமது ஆலயங்களை கொள்ளையடித்து கிறிஸ்தவ தேவாலயங்களாக மாற்ற முயற்சிப்பதும், நம்மை அடிமையாக்கி அதிக வரி வசூலித்து சித்ரவதை செய்வதையும் தடுக்க ஆங்கில கம்பெனிக்கு எதிராக ஆயுத போர் புரிய வருமாறு நாட்டு மக்கள் அனைவருக்கும் அறைகூவல் விடுத்தார். மக்கள் மனதில் இருந்த அடிமை உணர்வை தகர்த்தெறிந்த இந்த வீர உரை பிற்காலத்தில் "குண்டறை விளம்பரம்" என சரித்திர வரலாறு படைத்தது. குண்டறை விளம்பரம் மக்களின் ஆழ் மனதின் வீரத்தை தட்டி எழுப்பியது. அடிமை சங்கிலியை அறுத்தெறிய மக்கள் வெள்ளம் போருக்கு தயாராகியது. திருவிதாங்கூர் முழுவதும் மக்கள் புரட்சி வெடித்தது. முறுக்கேறிய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை மூன்றாயிரத்திற்கு மேற்பட்ட வீரர்கள் திவான் வேலுத்தம்பியின் தலைமையின் கீழ் அணி திரண்டனர். மீண்டும் படை பலம் அதிகரித்தது. ஆங்கில அரசுக்கு எதிராக பல வன்முறை செயல்கள் நடைபெற்றது. பல ஆங்கில வீரர்கள் வெட்டி கொல்லப்பட்டனர். ஆங்கில படை தளங்கள் பல சிதைக்கப்பட்டன. ஆங்கில அரசின் மேல் வேலுத்தம்பிக்கு இருந்த வெறித்தனத்தை ஆங்கில அதிகாரிகள் புரிந்து கொண்டனர்.


மன்னரின் அமைதி ஒப்பந்தம்


வேலுத்தம்பி தளவாய் அருங்காட்சியகம்

வேலுத்தம்பியின் மக்கள் படையால் அதிர்ந்த ஆங்கில அரசு திருநெல்வேலியில் இருந்த கொடூர அதிகாரியான கர்னல் செயின்ட் லோகர் என்பவரின் தலைமையில் மாபெரும் பிரிஷ்டிஷ் படையை திருவிதாங்கூரின் தெற்கு நோக்கி அனுப்பியது. துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகள் இதுவரை இல்லாத அளவு கொண்டுவரப்பட்டது. திருநெல்வேலியில் இருந்து புறப்பட்ட கர்னல் லோகரின் படைகள் திருவிதாங்கூரின் தெற்கு எல்லையான ஆரல்வாய்மொழியில் முகாமிட்டது. உறுதியான ஆரல்வாய்மொழி கோட்டையை தகர்த்த ஆங்கிலப் படைகள் நாஞ்சில் நாட்டிற்குள் சீறி பாய்ந்தது. சுசீந்திரம் பகுதியில் வேலுத்தம்பியின் படைகளோடு நடந்த போரில் கோட்டாறு, நாகர்கோவில் பகுதிகளை வென்று கம்பெனி படைகள் முன்னேறியது.


பின்னர், வேலுத்தம்பியின் கட்டுபாட்டில் இருந்த ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் சேமித்து வைத்திருந்த முக்கியமான கோட்டையான உதயகிரி கோட்டையையும் மற்றும் பத்மனாபபுரம் கோட்டையையும் கைப்பற்றிய ஆங்கிலப் படைகள் திருவனந்தபுரம் நோக்கி முன்னேறி பாப்பனாம்கோடு பகுதியில் முகாமிட்டது. அச்சத்தில் மன்னர் பலராம வர்மா பிரிட்டிஷ் கம்பெனியுடன் அமைதி ஒப்பந்தம் செய்து அடிபணிந்தார். மன்னரின் அமைதி ஒப்பந்தத்தின் படி 1809-ம் ஆண்டு மார்ச் 18-ம் நாள் திருவிதாங்கூரின் தளவாய் மற்றும் அனைத்து சர்வ அதிகாரப் பிரிவுகளிலும் இருந்து வேலுத்தம்பி நீக்கப்பட்ட இராஜசாசனம் வந்தது. உம்மிணி தம்பி புதிய தளவாய் ஆனார்.


வேலுத்தம்பியின் மரணம்

ஆங்கில அரசுடன் கைகோர்த்த மன்னர் பலராம வர்மா, வேலுத்தம்பியை கைது செய்ய ஆணை பிறப்பித்தார். ஆங்கில அரசு வேலுத்தம்பியை உயிருடன் பிடித்து தருபவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் பரிசு அறிவித்தது. ஒருபுறம் மன்னரின் படைகளும் மறுபுறம் பிரிட்டிஷ் கம்பெனி படைகளும் வேலுத்தம்பியை கைது செய்ய நான்கு திசைகளிலும் தேடுதல் வேட்டையை தொடங்கியது. இதனை அறிந்த வேலுத்தம்பி தனது சகோதரனுடன் புறப்பட்டு கிளிமானூர் கோட்டையில் தஞ்சம் புகுந்தார். பிரிட்டிஷ் கம்பெனிக்கு எதிரான தன்னுடைய போராட்டத்தை பின்னர் வரும் தலைமுறைகள் அறிய வேண்டும் என்பதற்காக தன்னுடைய வாளை கிளிமானூர் அரச குடும்பத்தில் ஒப்படைத்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட வேலுத்தம்பி இறுதியாக மண்ணடி பகவதி ஆலயத்தில் வந்து சேர்ந்தார். வேலுத்தம்பி மறைந்திருந்த இடத்தை கயவர்கள் ஆங்கில அரசிடம் அறிவித்தனர்.


வேலுத்தம்பி மறைந்திருந்த இடத்தை நோக்கி நெருங்கி வந்த ஆங்கிலப் கம்பெனி படைகள் மண்ணடி பகவதி ஆலயத்தை சுற்றி முற்றுகையிட்டது. ஆங்கிலப் படைகளின் கைகளில் அகப்பட வேலுத்தம்பியின் மானம் தடுத்தது. இதற்கு மேல் போராட முடியாது ஆங்கிலேயரிடம் கைதாக நேரும் என்று உணர்ந்த வேலுத்தம்பி சகோதரனிடம் தன்னைக் கொல்ல வேண்டினார். அவர் மறுக்கவே தன்னுடைய குத்துவாளை எடுத்து நெஞ்சில் குத்தி இறக்கினார். ஆனால், உயிர் பிரியவில்லை. ஆலயத்தின் வெளியே நின்ற ஆங்கிலப் படைகள் ஆலய வாசலை இடித்து உள்ளே வந்தது. உடனே, சகோதரன் பத்மநாபன் தன்னுடைய வாளை எடுத்து வேலுத்தம்பியின் தலையை வெட்டி வீழ்த்தினான். மக்களின் விடுதலைக்காக ஆங்கில அரசிடம் அடங்காமல் போராடிய மாவீரன் வேலுத்தம்பியின் உடல் சகோதரன் பத்மநாப தம்பியின் பாதங்களில் பணிந்தது.


வேலுத்தம்பியின் இறந்த உடலை கைப்பற்றிய பிரிட்டிஷ் படைகள் திருவனந்தபுரம் அருகே கன்னம்மூல (தளவாக்குன்னு) என்ற இடத்தில் உள்ள மலை உச்சியின் மேல் கழுவில் ஏற்றினர். தலக்குளத்தில் வேலுத்தம்பியின் வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது, மரங்கள் சாய்க்கப்பட்டன. வேலுத்தம்பியின் உறவினர்கள் பலர் தேடிப்பிடித்துக் கொல்லப்பட்டனர். சிலரை அந்தமானுக்கு நாடுகடத்த கொண்டுச் செல்லப்பட்டனர், வழியில் தூத்துக்குடியில் இறக்கி வெட்டிக் கொல்லப்பட்டனர். வேலுத்தம்பியின் சகோதரன் பத்மநாபன் தம்பி, முக்கிய படை தளபதியான வைக்கம் பத்மநாப பிள்ளை உள்பட பலர் கைது செய்யப்பட்டு கொல்லம், புறக்காடு மற்றும் பள்ளுருத்தி ஆகிய இடங்களில் தூக்கிலிடப்பட்டனர். கொச்சி அரசின் தளவாய் பாலியத்அச்சன் கைது செய்யப்பட்டு 12 ஆண்டுகள் மதராஸ் சிறையிலும் பின்னர் 13 ஆண்டுகள் மும்பை சிறையிலும் அடைக்கப்பட்டு உயிர்துறந்தார். வேலுத்தம்பியின் மரணத்திற்குப் பின் போர் முடிவுக்கு வந்தது. மயிலாடியில் கிறிஸ்தவ தேவாலயம் கட்டப்பட்டது.


நினைவு இல்லம்

ஆங்கிலப் படைகளால் வேலுத்தம்பியின் வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. ஒரு தலைமுறைக்கு பின்னர் மக்களின் கோரிக்கையை ஏற்று அப்போதைய திருவிதாங்கூர் மன்னரால் தலக்குளத்தில் மீண்டும் அதை போன்ற அரண்மனை எழுப்பப்பட்டது. அழகிய மர சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய எட்டுக்கட்டு இல்லம் ஆகும். இங்கிருந்து பத்மனாபபுரம் அரண்மனைக்கு சுரங்கப்பாதை உள்ளதாக தகவல்கள் உள்ளது. பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்பட்ட தலக்குளம் வலியவீடு 2008-ம் ஆண்டு சித்ரகலா மண்டலம் என்ற அமைப்பின் முயற்சியால் பராமரிக்கப்பட்டு வேலுத்தம்பியின் திருஉருவ சிலையை நிறுவி சுற்றுலாத்தலமாக மாற்றியுள்ளது.


சிலை மற்றும் போர்வாள்

கேரள அரசு மாவீரன் வேலுத்தம்பி தளவாயின் வீரத்தை போற்றும் வகையில் கேரள அரசின் தலைமை செயலகத்தில் அவரது சிலையை நிறுவி உள்ளது. அவர் இறந்த இடமான கொல்லம் மண்ணடியில் மணிமண்டபம் கட்டி அரசு அருங்காட்சியகம் அமைத்துள்ளது மேலும் வேலுத்தம்பி நினைவாக அவர் பிறந்த இடமான குமரி மாவட்டம் தலக்குளம் முதல் இறந்த இடமான கேரளத்தின் மண்ணடி வரை கேரள அரசின் அரசு பேருந்தை இயக்கி வருகிறது. (தற்போது தலக்குளம் முதல் கோட்டையம் வரை)


ஆங்கில படை வீரர்களின் பல தலைகளை துண்டித்த மாவீரன் வேலுத்தம்பி தளவாய் பயன்படுத்திய வாள் சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக கிளிமானூர் அரச குடும்பத்தில் பாதுகாக்கப்பட்டது. பின்னர் 1957-ம் ஆண்டு  திரு.இராஜேந்திர பிரசாத் அவர்கள் இந்திய ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் 50 ஆண்டுகளாக புதுடில்லி ராஷ்டிரபதி பவன் தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டது. 2010-ம் ஆண்டு கேரள அரசின் முயற்சியால் கேரளத்திற்கு கொண்டுவரப்பட்டு அரசு மரியாதை செலுத்தி திருவனந்தபுரம் நேப்பியர் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு வேலுத்தம்பி தளவாயின் பெருமையை போற்றும் வகையில் 2010-ம் ஆண்டு அவரது நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.


திரைப்படம்

வேலுத்தம்பி தளவாயின் வாழ்க்கை வரலாறு 1962-ம் ஆண்டு கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர் நடிப்பில் மலையாளத்தில் திரைப்படமாக வெளிவந்துள்ளது.


உதவிநூல்

சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்; வி.வி.வி.ஆனந்தம்; கங்கை புத்தகநிலையம்; பக்கம் 80, 81






வேலுத்தம்பி தளவாய் - மௌனசாட்சிகள்

சுற்றுலா போறதுன்னா எல்லோருக்கும் மகிழ்ச்சி கூடவே மறக்க முடியாத அனுபவங்களை கொடுக்கும்.  அதிலும் நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் இடங்களுக்கு போகும்போது நாமே அந்த காலகட்டத்துக்குள்ளே இருக்குற  மாதிரி ஒரு அனுபவத்தை கொடுக்கும். அப்படிப்பட்ட இடங்களைதான் மௌனசாட்சிகள் பகுதில பார்த்துட்டு வரோம். 


அந்த வரிசையில இன்னிக்கு நாம பார்க்க போறது, 17 ம் நூற்றாண்டு காலத்திய இடம். அதன் வரலாற்று பின்னணிகளும், பெருமைகளும் நமக்கு மட்டும் இல்லாது வருங்கால சந்ததியினருக்கும் இதுப்போன்ற இடங்கள் பற்றி தெரியனும்.  மாயாஜால், கிஷ்கிந்தா, ஸ்பென்சர், வொண்டர்லான்னு பிள்ளைகளை கூட்டி போகும் அதே நேரத்தில் இது போன்ற இடங்களுக்கும் வருடம் ஒரு முறையேனும் கூட்டி போகனும். அப்பதான், நம்ம முன்னோர்களின் காதல், வீரம், ராஜதந்திரம், வியாபாரம், கட்டிடகலை, கலை, கலாச்சாரமும், பண்பாடும் பிள்ளைகளுக்கு தெரிய வந்து இனியாவது அவைகள் கட்டி காக்கப்படும். 


இன்னிக்கு நாம பார்க்க போறது, கன்னியாக்குமரி மாவட்டத்தில் ”திருவநந்தபுரம் ” சாயலை கொண்ட ”திங்கள்சந்தை” பக்கம் உள்ள ”தலக்குளம்”ன்ற ஊருல இருக்குற ”வேலுத்தம்பி தளவாய் கோட்டை ” நாகர்கோயில்ல இருந்து நேரடியாகவும் போகலாம் ..இல்லாட்டி ”திங்கள்சந்தை” ன்ற இடத்துக்கு போய் அங்கிருந்தும் போகலாம்.  ஒருவழியா கிழக்கிந்திய கம்பெனிக்காரர்களை எதிர்த்து போரிட்ட வீரன் ”வேலுத்தம்பி தளவாயின் நினைவிடத்”திற்கு வந்தாச்சு. 


பதிவர்கள்லாம் வர்றாங்களே! நம்மளை ஃபோட்டோ எடுத்து பதிவுல போட்டு உலகம் முழுக்க காட்டுவாங்கன்னு அழகா, கம்பீரமா ஜம்முன்னு நின்னு ஃபோஸ் கொடுத்து நம்மை வரவேற்பது “வேலுத்தம்பி தளவாய் நினைவு இல்லம் தோரண நுழைவாயில்”.


அதை தாண்டி போனா, (அக்கோவ், அம்மாம்பெரிய நுழைவாயில தாண்டலாம் முடியாதுன்னு கிண்டலடிக்குற ஆசாமிகள்லாம் நுழைஞ்சு வாங்கப்பா!!) கேரளா பாரம்பரிய பாணியில் கட்டப்பட்ட நுழைவாயில் .  உள்ளூர் நகராட்சி அங்குள்ள தரை பகுதியை சீரமைத்து கொடுத்திருக்கு. அது, திறந்த நிலையில் காணப்படுது. அதனுள்ளே சென்றால் கம்பீரமா காட்சி தருகிறார் ”திவான் வேலுத்தம்பி தளவாய்”.


(அவருடைய சிலை மற்றும் பக்கத்தில் ஒரு சிறிய கோவில் )


அந்த வீட்டில் ஆயுதங்கள் வைத்திருந்த அறையில்,  அக்கால டச்சு ஓவியர் ஒருவரால் வரையப்பட்ட படத்தின் மாதிரிதான் இப்பவும் அவருடைய படமா அங்கு வைக்கப்பட்டிருக்கு.




வேலாயுதன் செண்பகராமன் தம்பி (1765 - 1809) 


தளவாய் என்பது திருவிதாங்கூர் திவானுக்குரிய பட்டம்.  அந்த காலத்துல,  பேரு.  திருவிதாங்கூரில் தலைமைத்தளபதி, அமைச்சர் இந்த ரெண்டு பதவியையும் ஒருத்தரேதான் பார்த்துக்குவாங்க. வேலுத்தம்பி தளவாயினுடைய முழுப்பெயர் ”இடபபிரபு குலோத்துங்க கதிர்குலத்து முளப்படை அரசரான இறையாண்ட தளாக்குளத்து வலிய வீட்டில் தம்பி செண்பகராமன் வேலாயுதன்” ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சோடா ப்ளீஸ்.




 (வீட்டின் முன் பகுதி பக்கவாட்டு தோற்றம்)


இவர் 1765 ம் ஆண்டு வாயிலயும், மனசுலயும் நுழையாத ஒரு மலையாள மாசத்துல 16 ம் தேதில, அன்றைய திருவனந்தபுரம் நாட்டிலுள்ள (இப்ப  அந்த இடம் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டிருக்கு) நாகர்கோயிலுக்கு அருகே உள்ள ”தாழைகுளம்”ன்ற ஊரில் இப்ப மருவி ”தலைக்குளம்” ன்னு அழைக்கப்படுற ஊருல பிறந்தவர். இவரது பெற்றோர்கள் திரு.குஞ்சு மயிற்றி, திருமதி.வள்ளியம்மை தங்கச்சி.




(வீட்டின் முன்பக்க தோற்றம்)

சின்ன வயசிலேயே அவரும், அவரது தம்பியும் பெரிய வீரர்களா புகழ்பெற்று, நாயர் படைகளுக்கு தலைமை தாங்க ஆரம்பிச்சாங்க. படைத்தலைவர்களில் ஒருத்தரா இருந்த வேலுத்தம்பி தொடர்ச்சியான ஒரு மக்கள்புரட்சி மூலம் தளவாயா ஆனவர்.


”பாலராமவர்ம குலசேகரன்”ன்ற மன்னர் 1798ல் தன் பதினாறு வயசுல மன்னரானபோது வளமிக்க நாடா இருந்த திருவிதாங்கூர் பலவகையான சீரழிவுகளை சந்திக்க நேர்ந்தது. கோழிக்கோட்டு ”சாமூதிரி மன்னரின்” ஆளான ”ஜெயந்தன் நம்பூதிரி”ன்ற வைதீகர் மன்னரை தன் பிடியில் வைத்திருந்தார். இவர் வைத்ததே சட்டம்ன்ற நிலை. இதற்கு எதிரா உள்ளூர் நிலக்கிழார்கள் கோபம் கொண்டிருந்தாங்க. அக்கோபத்தை வேலுத்தம்பி பிரதிநிதித்துவம் செஞ்சு வந்திருக்கார்.




(வீட்டின் முன்பக்க வாசல் அதில் வேலைபாடுகளுடன் கூடிய கட்டில்  )


அப்ப திருவிதாங்கூர் திவானா இருந்தவர் “ராஜா கேசவதாசன்”. நாகர்கோவில் அருகே ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த இவர் தன் தனித்திறமையால் திவானாகி கேரள வரலாற்றில் அழியாத இடம் பெற்ற மாமனிதர். திருவிதாங்கூர் மீது பெரும்படையெடுத்து வந்த திப்புசுல்தானை பாலக்காட்டுக் கோட்டையில் தோற்கடித்த வெற்றி வீரர் அவர். 



இன்றைய கேரளத்தின் பல முக்கிய நிர்வாக , தொழில் அமைப்புகளை உருவாக்கியவர் இவரே! சதுப்பு நிலத்தில் ”ஆலப்புழா”ன்ற ஊரை அமைத்து அதை துறைமுகமா வளர்த்தார். கயிறுத்தொழிலை அங்கே வளரச் செய்தார். திருவனந்தபுரம் துறைமுகம், பல முக்கிய சாலைகள் , அணைகள் போன்றவை இவரால் அமைக்கப்பட்டவைதான். கடல்நீரை அணைகட்டி நிறுத்தி அச்சதுப்பில் நெல் விவசாயம் செய்யும் குட்டநாட்டு விவசாய முறையை உருவாக்கியவரும் இவரே!


”ஜெயந்தன் நம்பூதிரி” என்பவர், திவான் ”ராஜா கேசவதாசனை ” மன்னரிடமிருந்து அன்னியப்படுத்தினார். ஜெயந்தன் நம்பூதிரி மன்னரின் பல்லக்கில் ஏறி ஊர்வலம் வந்தது, தன் உறவினரான சங்கரன் நம்பூதிரி என்பவருக்கு காயம்குளம்பகுதியை அளித்தது போன்றவற்றை கேசவதாசன் கண்டித்தார். எனவே மன்னரை கரைத்து திவானை கைது செய்வித்த ஜெயந்தன் நம்பூதிரி பின் அவரை விஷம்வைத்துக் கொன்றுவிட்டார். அதன் பிறகு ஜெயந்தன் நம்பூதிரி திவான் ஆனார். அவரது அடிப்பொடிகள் பல்வேறு பதவிகளில் அமர்த்தப்பட்டனர். திருவிதாங்கூர் அவர்களால் சூறையாடப்பட்டது.




(21 கைகள் ஒன்று சேரும் நுழைவாயில் உத்திரம் அமைப்பு )


அக்காலக்கட்டத்தில் திருவிதாங்கூர் வெள்ளை அரசுக்கு பெருந்தொகை கப்பமா கட்டவேண்டியிருதுச்சு. அத்தொகை மூலம் செல்வ வளம் மிகுந்த இந்நாடு நிதிப்பற்றாக்குறையால் அவதிப்பட்டது. அதைப்போக்க கடும் வரிவிதிப்பும், கட்டாய உழைப்பும் சாதாரணமா இருந்துச்சு. ஜெயந்தன் நம்பூதிரி நிதிவசூலில் தன் பங்கையும் எடுத்துக் கொண்டார். ஆகவே நிலக்கிழார்களை வரவழைத்து ஒவ்வொருவருக்கும் ஒரு பெருந்தொகை கட்டணமாக விதித்து அதை அளிக்காதவர்களை கொடூரமாக தண்டித்திருக்கிறார்.



(வீட்டின் உள்பக்கம் முதல் நிலை )


அப்படி அழைக்கப்பட்டவர்தான் வேலுத்தம்பி. அவருக்கு கட்டணம் ரூ 3000 விதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுது. அப்பணத்தை திரட்டி வருவதாக சொல்லி மீண்ட வேலுத்தம்பி பல்வேறு நிலக்கிழார்களை திரட்டி ஒரு சேனையை உருவாக்கி, அதை நடத்திக் கொண்டு திருவனந்தபுரம் வந்தார்.



(உள்பக்க மரத்தாலான சுவர் மற்றும் கதவு வேலைப்பாடுடன் கூடிய உத்திரம் )




அதேப்போல வடக்கே சிறையின் கீழில் இருந்து ”அய்யப்பன் செம்பகராமன் பிள்ளை” என்பவரது தலைமையில் ஒரு கலகப்படை திருவனந்தபுரம் வந்தது. அவர்கள் அரண்மனையை சுற்றிவளைத்தாலும் ராஜபக்தி காரணமாக எல்லைமீறி உள்ளே நுழையவில்லை. வேறுவழி இல்லாத மன்னர் சரணடைந்தார். கலகக்காரர்களிடம் ஜெயந்தன் நம்பூதிரியும் பிறரும் ஒப்படைக்கப்பட்டனர். பிராமணர்களை கொல்வது இல்லை என்பதனால் அதிகபட்சத் தண்டனையாக அவரை நாடு கடத்தினார்கள்(ஆனால் ஒரு தமிழ் பிராமணனை கூடவே அனுப்பி நம்பூதிரி திருவிதாங்கூர் எல்லையைத் தாண்டியதுமே அவரை வெட்டி வீழ்த்த வேலுத்தம்பி ஏற்பாடு செய்திருந்தார்). மற்றவர்கள் கடுமையா தண்டிக்கப்பட்டனர். தொடர்ந்து அய்யப்பன் செம்பகராமன் திவான் ஆனார். ஆனா, முதியவரான அவர் ஒரு வருடத்திலேயே மரணமடைய வேலுத்தம்பி திவானாக ஆனார்.



(பூஜை அறை )


வேலுத்தம்பியை மிக குரூரமான அதே நேரத்துல மிக மிக நேர்மையான ஒருவராக சரித்திரம் காட்டுது. குட்டிகுட்டித் தலைவர்களை அவர் குரூரமாக ஒடுக்கினார். திருவிதாங்கூரின் வரிவருமானம் குறைய முக்கியக்காரணம் ஊழலே என்று கண்டு அவர் கடுமையான நடவடிக்கைகள் மூலம் ஊழலை கிட்டத்தட்ட முற்றாக ஒழித்தார். அதுவே நாட்டின் வருமானத்தை பலமடங்கு அதிகரிக்கச் செய்ததாக .ஒரு கதை சொல்லப்படுது.


வேலுத்தம்பியின் அன்னைக்கு சொந்தமான தென்னந்தோப்புகள் ”கீழ்க்குளம் ”ன்ற ஊரில் இருந்தன. அவற்றுக்கு வரி நிர்ணயித்த அதிகாரி அவை தளவாயின் அன்னைக்கு உரியவை என்பதனால் மிக குறைவாக அதை நிர்ணயித்தார். அதை அறிந்த தளவாய் கோபம் கொண்டு அவ்வதிகாரியின் கட்டைவிரலை வெட்டினார். தன் தாயையும் தண்டித்தார்(ம்ம்ம்ம்ம்ம் இந்த காலத்துல இப்படி ஒருத்தர் பொறந்து வந்தா நல்லாதான் இருக்கும்).




இந்நடவடிக்கைகள் மக்களிடையே ஆதரவு பெற்றாலும், அதிகாரிகளிடையே அதிருப்தியை உருவாக்கின. ஆரம்பத்தில் வெள்ளையர் வேலுத்தம்பியை ஆதரித்தார்கள், காரணம் கப்பம் முறையாக கிடைத்தது. ஆனால் அப்போது ரெசிடண்ட் ஜெனரலாக இருந்த ”கர்னல் மெக்காலே ” என்பவர் மன்னரை உதாசீனம் செய்து தானே ஆட்சியாளர் என்ற முறையில் சில நடவடிக்கைகளை எடுத்தது வேலுத்தம்பிக்கு பிடிக்கவில்லை. 


சில கிறித்தவ பாதிரியார்கள் தளவாயை அவமானப்படுத்தியதாகவும் அதற்கு கேனலின் ஆதரவு இருந்ததாகவும் சொல்லப்படுது. மேலும் கப்பமாக போகும் பெரும் செல்வம் வேறு தளவாயை கோபம் கொள்ளச் செய்தது. மெல்ல ஆங்கில மேலாதிக்கத்துக்கு எதிராக வேலுத்தம்பி செயல்பட ஆரம்பித்தார்



கப்பம் தொடர்ந்து உயர்த்தப்பட்டத்தை வேலுத்தம்பி எதிர்க்க பூசல்கள் வெடித்தன. ஒரு கட்டத்தில் நாட்டின் வருடாந்தர வரிவசூலில் எண்பது சதவீதம் கப்பமாக வசூலிக்கப்பட்டது.





”கர்னல் மெக்காலே” வரிவசூல் தொகையின் கணிசமான பகுதியை தனக்காக எடுத்துக் கொண்டது பிரச்சினையாயிற்று. தொடர்ந்து வரியை உயர்த்திய மெக்காலே வரியை உயர்த்தும்படி திவானை வறுபுறுத்தினார். அதற்கு திவான் ஒப்பவில்லை. ஒருகட்டத்தில் மன்னரின் நகைகளைக்கூட விற்று கப்பம்கட்ட நேர்ந்தது. அது மன்னருக்கும் அதிருப்தியை உருவாக்கியது. ஆரம்பத்தில் வேலுத்தம்பிக்கு உதவுவது போல் வந்த ”கர்னல் மெக்காலே” வின் நாடகம்தான் இவ்வளவும்.


கப்பம் கட்டாவிட்டால் மன்னரையும் தளவாய் வேலுத்தம்பியையும் சிறைபிடிக்கப் போவதாக அச்சுறுத்தினான். தானே மன்னராக மெக்காலே நடக்க ஆரம்பித்துவிட்டான் மெக்காலே திவானை பதவி நீக்கம் செய்யவைத்தார். அவரை சிறைப்பிடிக்க உத்தரவு வந்தது. ஊருக்கு தன் தம்பியுடன் தப்பி ஓடிய வேலுத்தம்பி இங்கு வந்து1809 ல் குண்டறை என்ற ஊரில் வைத்து ஒரு அறிக்கையை விடுத்தார். ஆங்கில சுரண்டல் அரசுக்கு எதிராக ஒன்றுபடும்படி மக்களை அறைக்கூவினார். இது குண்டறை விளம்பரம் என்று அழைக்கப்படுது.


 கப்பம் கட்டச் சொன்ன ஆங்கிலேயனை ‘‘முடியாது’’ என்று எதிர்த்தான் தளவாய் வேலுத்தம்பி. அவனை அழிக்க படையெடுத்து வந்தனர் பரங்கியர். எதிர்த்தான். போரிட்டான். எதிரிகளை ஓட ஓட விரட்டினான். அந்த வீரம் கண்டு அஞ்சினர் வெள்ளையர்...


அதை எதிர்த்து, கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக ஆயுதப் புரட்சிக்குத் தயாரானார் வேலுத்தம்பி. அவரது புரட்சியைக் கண்டு அண்டை நாட்டு மன்னர்களும் ஜமீன்தார்களும்கூட அஞ்சினர்.


வெள்ளையர் படை திருவிதாங்கூர் மீது படையெடுத்து வந்தது.அவர்கள் நோக்கம் வேலுத்தம்பியைக் கொல்வது. இதை அறிந்த தளவாய் கொச்சியில் உள்ள பிரிட்டிஷ் கட்டடத்தை ஆக்கிரமித்துக் கைப்பற்றினார்.



அரண்மனையில் மெக்காலேயைக் கொல்ல நெருங்கினார். அங்குள்ள அரண்மனை கழிவறைக்குள் ஒளிந்து, தப்பினான் மெக்காலே. இதனால் மெக்காலேவுக்கு வேலுத்தம்பி மேல் கோபம் அதிகமானது.அவரை உடனே கொல்ல உத்தரவிட்டான்.வேலுத்தம்பியைப் பிடித்துத் தருபவர்களுக்குப் பரிசும்,பதவியும் தருவதாக தண்டோரா போட்டான்.


கலகம் ஏறத்தாழ் ஒருவருடம் நடந்துச்சு. மைசூரில் இருந்தும் சென்னையில் இருந்தும் உபரி படைகளை வரவழைத்து பீரங்கிகளும் துப்பாக்கிகளும் இதுவரை இல்லாத அளவு உபயோகப்படுத்தப்பட்டன. கர்னல் லோகர் உதயகிரி கோட்டையைக் கைப்பற்றி போரில் வெற்றி பெற்றதாக அறிவித்தான். ஆங்கில கம்பெனி போரிட்டதனால் கலகம் சீக்கிரமே அடங்கியது.தலைமறைவாக இருந்த வேலுத்தம்பி மண்ணடி என்ற ஊரில் சுற்றிவளைக்கப்பட்டார்.எதிர்த்துப் போரிட துணிவின்றி,சதிவலை விரித்தனர்.


காட்டிக் கொடுப்பவர்களுக்கு பரிசுகளை அறிவித்தார்கள். மண்ணடி என்ற ஊரிலுள்ள பகவதி அம்மன் கோயிலில் பதுங்கியிருந்த வேலுத்தம்பியை எதிரிகள் நெருங்கிவிட்டனர். கருங்காலிகள் காட்டிக் கொடுத்தனர்.ஆங்கிலேயரிடம் பிடிபட அவர் மனம் இடம் கொடுக்கவில்லை. எதிரியின் கையில் சாவதைவிட,தன் சகோதரனின் கையில் சாவதை வீரமாக நினைத்தார்.தன் தம்பியிடம் தன் வாளைக் கொடுத்து தன் கழுத்தை வெட்டச் சொன்னார். சகோதரன் மறுத்துவிட்டான். 


வேறு வழி இல்லாமல் தன் கழுத்தைத்தானே வாளால் வெட்டி வீர மரணம் எய்தினார்.அப்போது அவருக்கு வயது 44.வீரமரணமடைந்த வேலுத்தம்பியின் உடலைத் தூக்கிப்போய் கழுவில் ஏற்றி, தங்கள் வெறியை தணித்துக்கொண்டனர் வெள்ளையர்.அதனால் ஒரு மாவீரனின் சரித்திரம்,துன்பியல் சரித்திரமாகிப்போனது. பத்மநாபன் தம்பி கைதுசெய்யப்பட்டு தூக்கிலேற்றப்பட்டார்.


வேலுத்தம்பியின் அரண்மனை இடிக்கப்பட்டு அங்கே ஆமணக்கு விதைக்கப்பட்டதா சொல்லப்படுது. அவரது குடும்பத்தினர் வேட்டையாடப்பட்டனர். பலர் அந்தமானுக்கு நாடுகடத்தப்பட்டனர். அரசசேவையிலிருந்து நாயர்கள் முற்றாக விலக்கப்பட்டார்கள். நாயர்படை இருநூறுபேருக்குமேல் போகக் கூடாது என்று பிரிட்டிஷ் அரசு வரையறைசெய்தது. கிராமங்களில் நடந்துவந்த ஆயுதப்பயிற்சிசாலைகள் நிறுத்தப்பட்டன



வேலைபாடுகளுடன் கூடிய உள்பக்கதில் காணப்படும் மரக்கட்டில்


ஒரு தலைமுறைக்குப் பிறகு திருவிதாங்கூர் மகாராஜா ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று வேலுத்தம்பியின் வம்சத்தில் எஞ்சிய ஒரு பெண்ணுக்கு மணம் செய்வித்து அவளுக்கு கட்டித்தந்த சிறுஅரண்மனை தான் இது. 


 மரத்தாலான கட்டுமானம். பூமுகம், பத்தாயப்புரை , அங்கணம் உள்ளடுக்கு எல்லாம் கொண்ட நாலுகட்டு வீடு அது. அதில் முப்பது வருடம் முன்புவரை தளவாயின் வாரிசுகள் வாழ்ந்திருக்கிறார்கள். இப்போது அவர்கள் பெரும்பாலும் கேரளத்துக்கு சென்றுவிட, இப்போ தளவாயின் வாரிசுகளில் ஒருவர் கைவசம் இக்கோட்டை இருக்கு.


கட்டிலின் பல்வேறு வேலை பாடுகள்



ஆனால் பெரிய கட்டிடம் பழுதுபார்க்கப்படாம அழிஞ்சிக்கிட்டே வருது. ஓடுகள் பல இடங்களில் உடைந்து, ஒழுகி மரம் அழிய ஆரம்பித்துவிட்டது. பழுது பார்க்க லட்சகணக்கா ரூபாய் செலவாகும் . அதற்கு இன்றைய வாரிசுகளிடம் பணவசதி இல்லை. வாரிசுகள் பலர் அரசிடம் அரண்மனையை எடுத்துக் கொள்ளச் சொல்லி பலவருடங்களா கேட்டும். தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லையாம்,என்று அங்குள்ள வயதான ஒருவர். குறைப்பட்டுக்கொண்டார் 


வேலுத்தம்பி வழிபட்ட கோவில், அவர் பயன்படுத்திய ஆயுதங்கள்,கலைப் பொருட்கள் இன்றைக்கும் அவரது வீரத்தை சொல்லிக்கிட்டு இருக்கு.ஆனா, அதை தமிழகஅரசு கண்டுகொள்ளாததால அந்தவீடு பொலிவிழந்து கொண்டே வருது.



(உள்பக்கம் இருக்கும் கோவில் )

வீரமரணமெய்திய வேலுத்தம்பியின் நாட்டுப் பற்றைப் பறைசாற்ற உள்ள ஒரே சாட்சி இந்த வீடுதான்.அதை தற்போது வேலுப்பிள்ளை தளவாய் குடும்பதினர் சிதரகலாமண்டலம் என்னும் அமைப்பிடம் கொடுத்து உள்ளனர்.  அவர்கள் அதை மியூசியமாககும் வேலையில் ஈடுபட்டிருக்குறதால இப்போ நீங்க போனாலும் பார்ப்பது கடினம். 


இரண்டு பதிவா போட்டா வேலுத்தம்பியின் கதை புரிப்படாம போக வாய்ப்பிருக்குறதால, இந்த பதிவு கொஞ்சம் நீண்டுடுச்சு! அதனால, சிரமத்துக்கு மன்னிச்சு.



No comments:

Post a Comment