Monday, 31 May 2021

SUJATHA TOLD ABOUT LYRICS KANNADASAN

 


SUJATHA TOLD ABOUT LYRICS KANNADASAN 



கவிஞர் கண்ணதாசனைப் பற்றி சுஜாதா சொல்கிறார்:
(Narayanan Krishnan)
1978 -ல், ‘நினைத்தாலே இனிக்கும்’ பாடல் பதிவின் போது அவரை நேரில் சந்தித்துக் கொஞ்சநேரம் பேசும் மறக்க முடியாத வாய்ப்பு கிடைத்தது.
அதற்கு முன், ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த விழா மேடையில், ஆசிரியர் மணியன் என்னைக் கவியரசுக்கு மாலை அணிவிக்கச் சொன்னார்.
அந்த விழாவில், கண்ணதாசனின் தெளிவான பேச்சைக் கேட்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
'நினைத்தாலே இனிக்கும்’ படத்துக்கு நான் வசனம் எழுதினேன்.
சங்கீதக் கச்சேரி செய்ய சிங்கப்பூர் செல்லும் இரண்டு இளைஞர்களின் ஆர்க்கெஸ்ட்ரா ட்ரூப்பைப் பற்றிய கதை.
கே.பாலசந்தர் இயக்கிய அந்தப் படத்தில் கமல், ரஜினி இருவரும் நடித்தனர்.எம். எஸ்.விஸ்வநாதன் இசைக்கு கண்ணதாசன் பாடல்கள் எழுதினார்.
முதல் பாட்டின் கம்போசிங் சென்னை, ப்ரெசிடென்ட் ஹோட்டல் அறையில் நடைபெற்றது.
“நீங்களும் வாருங்கள். கண்ணதாசனும் விஸ்வநாதனும் சேர்ந்து பணிபுரிவதைப் பார்ப்பதே ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும்” என்றார் பாலசந்தர்.
சென்றேன்.முதலில் ஆர்மோனியப் பெட்டி வந்தது. பின் எம்.எஸ்.வி வந்தார். பட்டனை அழுத்தி, டிபன் வந்தது.
அதன்பின், கசங்கல் இல்லாத தூய வெள்ளை உடையில் வந்தார் கண்ணதாசன்.
அகலமான நெற்றியில் குங்குமப்பொட்டு. மெலிதான, அழுந்த வாரிய தலைமுடி. தாராளமான புன்னகை.
‘பெனடிக்ட் சொல்யூஷன்’ (Benedict Solution) வைத்து சர்க்கரை இருக்கிறதா என்று பார்த்துவிட்டுத்தான், காபிக்கு சர்க்கரை போடச் சொன்னார்.
எம்.எஸ்.வீயும், கவிஞரும் அன்யோன்யமாகப் பழகிக்கொண்டார்கள்.
“விசு, என்ன ட்யூன் ?”
“அண்ணே! சங்கீதத்தைப் பற்றிய உற்சாகமான ட்யூன்!”
“வாசி! ”
விஸ்வநாதனின் விரல்கள் ஆர்மோனியத்தில் உலவ, அவருக்கே உரிய வசீகரமான குரலில், “தன் னானே தன்னானே தன்னானே தன்னானே” என்று பாடினார். உடனேயே கவிஞர், “எங்கேயும் எப்போதும் சங்கீதம், சந்தோஷம் ” என்றார்.
“பாடிப் பாரு !”
“கச்சிதமாக இருக்கு, கவிஞரே !”
”அடுத்த அடி. ?””தானனன்னே தானனன்னே தானனன்னே தானனன்னே…!””தன்னானேக்கு பதில் தான னன்னேயா ?
சரி கொஞ்சம் தத்துவம் பேசலாமா ?” என்று டைரக்டரைப் பார்த்தார், கவிஞர்.
பாலசந்தர், “தாராளமா! உங்களுக்குச் சொல்லணுமா கவிஞரே ! ”
“ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…!” “சரியா ?”
“Perfect !”
விஸ்வநாதன் பாடப் பாட, கண்ணதாசன் அத்தனை சரணங்களையும் (“காலை ஜப்பானில் காபி…. மாலை நியூயார்க்கில் காபரே… அவங்க ஊரூரா போறாங்கல்ல ? “)
உடனுக்குடன் உதிர்த்ததை பஞ்சு அருணாசலம் அழகான கையெழுத்தில் எழுதித்தர, சில மணி நேரங்களில் முழுப் பாட்டும் எழுதப்பட்டது.
இடையிடையே, கண்ணதாசனுடன் பேச்சுக் கொடுத்தேன். “எப்படி இவ்வளவு சரளமா வார்த்தைகள் வருது ? ”
“தமிழ்ல ஆதார சந்தத்தைப் பிடிச்சுட்டாப் போதும்! பாருங்க, சீதைக்கு எத்தனை பெயர்கள் ?
சீதா — நேர் நேர்;
ஜானகி — நேர்நிரை;
மைதிலி — நிரைநேர்;
வைதேகி — நேர் நேர் நேர்
(இது புரிவதற்கு தமிழ் இலக்கணம் கொஞ்சமாவது தெரிய வேண்டும்.
தமிழில் பேசவே / தமிழ் தெரிந்து கொள்ளவே விரும்பாத இன்றைய ஆண்டிராய்ட் தலைமுறையினருக்குப் புரிய வாய்ப்பில்லை)
இப்படி எந்தச் சந்தம் வேணுமோ அந்தச் சந்தத்துக்கு வார்த்தைகள் போட்டுக்கலாம். என்ன, எல்லா வார்த்தையும் தெரியணும்… அவ்வளவு தான்.
கம்ப இராமாயணத்தில் ஒவ்வொரு படலத்திலும், பாடலிலும் ஒரு புது வார்த்தை கிடைக்கும் !”
மறுநாள் ரிக்கார்டிங்குங்கு கண்ணதாசன் வந்து தலையைக் காட்டிவிட்டுப் போனார். அவர் வேலை முதல் நாளே முடிந்துவிட்டது .
அதன்பின் கண்ணதாசனை நான் சந்திக்கவில்லை.
அவர் உடல்நலம் குன்றி, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதும், தாய் நாட்டுக்குத் திரும்பிய நிலையும், இளம் வயதில் மறைந்ததும் என் மனத்தை உருக்கிய நிகழ்ச்சிகள்.
ஏறத்தாழ 40 ஆண்டுகளாகியும் அந்தப் பாடல் இன்றும்கூட எல்லா மெல்லிசை நிகழ்ச்சிகளிலும் கட்டியம் கூறும் பாடலாகப் பாடப்படுகிறது.
கண்ணதாசன் அதைத்தான் செய்தார்… எங்கேயும் எப்போதும் சங்கீதத்தையும், சந்தோஷத்தையும் பரப்பினார்.
உலகில் தமிழர்கள் வாழும் ஏதாவது ஒரு மூலையில் பயணிக்கும் கார்களிலும், இல்லங்களிலும் அவரது ஏதாவது ஒரு வரி ஒலிக்காத நேரமே இல்லை.
May be a black-and-white image of 1 person and sitting
Solaiappan Sundaram and 257 others
12 Comments
53 Shares

No comments:

Post a Comment