Sunday, 4 April 2021

VIJAYAKUMARI , IN POLICEKARAN MAGAL

 



VIJAYAKUMARI , IN POLICEKARAN MAGAL

#சுவையானஅனுபவம்


👇👇👇👇👇👇👇👇

#விஜயகுமாரி நடித்த சிறந்த படங்களில் ஒன்று "போலீஸ்காரன் மகள்.'' இது எஸ்.வி.சகஸ்ரநாமம் நடத்தி வந்த நாடகம். அது, ஸ்ரீதர் டைரக்ஷனில் திரைப்படமாகியது. ஸ்ரீதர் டைரக்ஷனில் விஜயகுமாரி நடித்த இரண்டாவது படம் இது.

போலீஸ்காரராக எஸ்.வி.சகஸ்ரநாமமும், அவர் மகளாக விஜயகுமாரியும் நடித்தனர். விஜயகுமாரியை ஏமாற்றி விடும் இளைஞனாக பாலாஜி நடித்தார்.

இந்தப் படத்தில் ஒரு கட்டத்தில் சகஸ்ரநாமம் தன் இடுப்பிலிருந்த `பெல்ட்'டைக் கழற்றி, விஜயகுமாரியை அடித்து விளாசுவார். பார்த்தவர்கள் திகைத்து உறைந்துபோய் விடும் அளவுக்கு, அக்காட்சி தத்ரூபமாக அமைந்திருந்தது.

இதில் இடம் பெற்ற "கண்ணிலே நீர் எதற்கு? காலம் எல்லாம் அழுவதற்கு!'' என்ற பாடல் பெரிய ஹிட் ஆகியது.

ஸ்ரீதர் டைரக்ஷனில் "கொடி மலர்'' என்ற படத்திலும் விஜயகுமாரி நடித்தார். இதில் அவருக்கு ஊமைப்பெண் வேடம். அவருக்கு ஜோடி முத்துராமன். மற்றும் ஏவி.எம்.ராஜன், புஷ்பலதா, நாகேஷ் ஆகியோரும் நடித்தனர்.

இந்த படத்தில் நடிக்கும் போது, 

தனக்கு ஏற்பட்ட #ஒரு #சுவையான #அனுபவம் பற்றி #விஜயகுமாரி சொன்னார்:

"கொடிமலர்'' படப்பிடிப்பின்போது ஸ்ரீதர் அவர்கள் என்னிடம், "நான் புதுமுகங்களைப் போட்டு ஒரு படம் எடுக்கலாம் என்று இருக்கிறேன். அதற்காக 2 பெண்களை மேக்கப் டெஸ்ட் எடுத்து இருக்கிறேன். இந்த 2 பேரில் ஒரு பெண்ணை போடலாம் என்று நாங்கள் நினைத்து இருக்கிறோம். நீ அந்தப் பெண்களின் படத்தைப் பார்த்து, உன் அபிப்பிராயத்தை சொல்'' என்று கூறினார்.



மேக்கப் டெஸ்ட் எடுத்த 2 படங்களையும் போட்டு காட்டினார்கள். அதில் ஒரு பெண் மிகவும் ஒல்லியாக இருந்தார். கைகள் நீளமாக, குச்சி குச்சியாக இருந்தன.

மற்றொரு பெண் அளவான உடம்போடு இருந்தார். முகம் பார்க்க அழகாக இருந்தது.

நான் இரண்டாவதாக நினைத்தப் பெண்ணை குறிப்பிட்டு, "இந்தப் பெண் நன்றாக இருக்கிறாள்'' என்று சொன்னேன்.

"நாங்களும் அந்தப் பெண்ணைத்தான் தேர்வு செய்து வைத்திருக்கிறோம்'' என்று டைரக்டர் ஸ்ரீதர் கூறி, "இந்தப் பெண் யார் தெரியுமா? சந்தியா அம்மா அவர்களுடைய பெண்'' என்று சொன்னார். ஆம்; ஜெயலலிதாதான் அவர்.

மற்றொரு பெண் ஒல்லியாக குச்சிபோல் இருந்தார் என்று சொன்னேன் அல்லவா? பிற்காலத்தில் வடநாட்டில் கனவு கன்னியாக கொடிகட்டிப் பறந்த ஹேமமாலினிதான் அவர்!

ஸ்ரீதரின் "வெண்ணிறஆடை'' படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான ஜெயலலிதா குறுகிய காலத்தில் நிறைய படங்களில் கதாநாயகியாக நடித்தார். பிற மொழிப் படங்களிலும் அவரே வசனம் பேசி நடித்தார். நானும் பல படங்களில் அவருடன் நடித்திருக்கிறேன்.

முக்தா பிலிம்சின் "சூரியகாந்தி'' படம் ஜெயலலிதாவின் 100-வது படம். அந்தப் படத்தின் விழா கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்தது. அந்த விழாவிற்கு சந்தியா அம்மா என் வீட்டிற்கு வந்து, என்னை அழைத்திருந்தார். நானும் அந்த விழாவிற்கு போனேன். விழாவில் என்னை ஜெயலலிதா அவர்களுக்கு மலர் கிரீடம் வைத்து வாழ்த்தி பேசச் சொன்னார்.

நான் பேசினேன். "ஜெயலலிதா சினிமா துறைக்கு வருவதற்கு முன்பே நான் அவரைப் பார்த்து இருக்கிறேன். அமைதியாக இருப்பார். அப்படிப்பட்டவர் இன்று 100 படங்கள் நடித்து கலைஞர் தலைமையில் விழா நடந்து கொண்டிருக்கிறது. அவர் இந்த 100 படங்களில் மட்டுமல்லாமல் இன்னும் பல 100 படங்களில் நடித்து விழா காணவேண்டும். அது மட்டும் இல்லை. 

வரும் காலத்தில் இவர் ஒரு இந்திரா காந்தி மாதிரி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை'' என்று பேசினேன். 

நான் பேசும்போது அரசியலுக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதற்காக, நான் பேசியதால்தான் அவர் அரசியலுக்கு வந்தார் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம்!

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் சொந்தப்படம் "தெய்வத்தின் தெய்வம்.'' இந்தப் படத்தின் கதை - வசனம் - டைரக்ஷன் எல்லாம் அவர்தான். 

இந்தப் படத்தில் நான் எஸ்.எஸ்.ஆருக்கு ஜோடி. சந்தியாம்மா, மணிமாலா, ரங்காராவ், எஸ்.வி.ராஜம்மா எல்லோரும் நடித்தோம்.

இந்தப் படத்தின் கதை, காமெடி கலந்த குடும்பப்பாங்கான கதை. உண்மையிலேயே நாங்கள் எல்லோரும் ரசித்து ரசித்து நடித்தோம். இந்தப்படம் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.

பி.எஸ்.வி. பிக்சர்ஸ் "ஆலயமணி'' டைரக்டர் கே.சங்கர் டைரக்ஷனில் உருவான படம். சிவாஜிகணேசன் - சரோஜாதேவி ஆகியோருடன் எஸ்.எஸ்.ஆர், நான், நாகையா, எம்.ஆர்.ராதா, புஷ்பலதா, எம்.வி.ராஜம்மா எல்லோரும் நடித்தோம்.

இந்தப் படத்தில் வரும் பாட்டுக்கள் எல்லாமே நன்றாக இருந்தன. இந்தப் படத்தில் நடிக்க பி.எஸ்.வீரப்பா என்னிடம் கேட்டபோது, "இந்த வேடத்தில் நடிக்க எனக்கு பிடிக்கவே இல்லை'' என்று சொன்னேன். அப்படி விருப்பமில்லாமலே நடித்த அந்தப்படம் 100 நாட்களைத் தாண்டி ஓடியது.

அந்தப் படத்தில் வரும், "தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே'' என்ற பாடல் அந்த சமயத்தில் எல்லோராலும் நேசிக்கப்பட்ட பாட்டு.

மேகலா பிக்சர்ஸ் படம் "#காஞ்சித் #தலைவன்.'' கதை - வசனம் கலைஞர். டைரக்ஷன் காசிலிங்கம்.

இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர், பானுமதி, எஸ்.எஸ்.ஆர், நான், எம்.ஆர்.ராதா எல்லோரும் நடித்தோம்.

இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு நான் தங்கையாக நடித்தேன். அவரோடு நான் நடித்த முதல் படம் இதுதான்.

இந்தப் படத்தில் பானுமதி அம்மாவும், நானும் சேர்ந்து வருவது போல் ஒரு சீன்கூட இல்லை! இதனால், படப்பிடிப்பின்போது, ஒருநாள்கூட பானுமதி அம்மாவை பார்க்க முடியவில்லை. ஆகவே, அவரைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.

அந்தச் சமயத்தில் "சாரதா'' படப்பிடிப்பு நிலையத்தில் எனக்கு "படித்த மனைவி'' படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருந்தது. பக்கத்து செட்டில் "காஞ்சித் தலைவன்'' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அன்று என் கணவர் எஸ்.எஸ்.ஆரும், பானுமதி அம்மாவும் பங்கு கொள்ளும் காட்சியை படமாக்கிக் கொண்டு இருந்தார்கள்.

அன்று பலத்த மழை கொட்டிக் கொண்டிருந்தது. நான் ஒரு குடையைப் பிடித்துக்கொண்டு அவர்கள் இருவரும் இருக்கும் இடத்திற்குப் போனேன். அங்கு என்னை பானுமதி அம்மாவிற்கு எஸ்.எஸ்.ஆர். அறிமுகப்படுத்தி வைத்தார். 

என் தலையில் கையை வைத்து "நல்லா இரும்மா'' என்று #பானுமதியம்மா வாழ்த்தினார். பிறகு, "நீ நடித்த படம் ஒன்றைப் பார்க்க வேண்டுமே'' என்றார்.

நான் நடித்த "சாரதா'' படத்தை அவர்களுக்குப் போட்டுக் காட்டினேன். படத்தைப்பார்த்த பானுமதி அம்மா, "நீ ரொம்ப நல்லா நடித்திருக்கிறாய்'' என்று என்னை பாராட்டினார்.

அதன் பிறகு வரலட்சுமி நோன்பு அன்று பானுமதி அம்மா  என் வீட்டிற்கு வந்து, எனக்கு காதில் போடும் ஒரு நகையை பரிசாகக் கொடுத்தார். அதை நான் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.'' - இவ்வாறு சொன்னார் #விஜயகுமாரி....!

💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

No comments:

Post a Comment