SERVER SUNDARAM 1964 TAMIL MOVIE REVIEW
சர்வர் சுந்தரம் (1964)
கடிவாளம் கட்டிய குதிரையாக ஓடிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவைத் திசை திருப்பிய திரைப்படங்களைத்தான் ‘டிரெண்ட்செட்டிங் பிலிம்ஸ்’ என்று கொண்டாடி வந்திருக்கிறோம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் 11- 12- 1964-ல் வெளியாகித் தமிழ் சினிமா ரசனைக்குப் புது ரத்தம் பாய்ச்சிய படமே ‘சர்வர் சுந்தரம், திரையுலகைக் கதைக் களமாக்கிய முதல் தமிழ்த் திரைப்படம்.
சினிமா ஸ்டுடியோக்களில் எப்படிப் படப்பிடிப்பு நடக்கிறது, பாடல் எப்படிப் பதிவு செய்யப்படுகிறது என்ற ரகசியத்தை உடைத்துக் காட்டியது. இந்தப் படத்திற்குக் கிடைத்த வெற்றியும், விருதுகளும், இதே போன்ற கதையம்சத்துடன் கூடிய பல படங்கள் வெளியாகக் காரணமாக அமைந்தன. அவற்றில் சிவாஜி நடித்த ‘ராமன் எத்தனை ராமனடி’, சிவகுமார் நடித்த ‘ஏணிப்படிகள்’ ஆகிய படங்கள் பெரிய வெற்றியை அடைந்தன.
அன்று முன்னணி நகைச்சுவை நடிகராகக் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார் நாகேஷ். எம்.ஜி.ஆர். – சிவாஜி இருவருமே தங்களது படங்களில் நாகேஷ் இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். இதனால் நாகேஷ் கதைகளில் நுழைக்கப்பட்டார். இரண்டு பேரின் படங்களுக்கும் சிக்கல் வராதவாறு தனது கால்ஷீட்டைக் கவனமாகப் பிரித்துக் கொடுத்து நடித்துவந்தார். என்றாலும் அதிகப் படப்பிடிப்புகள் காரணமாக எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இரண்டு பேரின் படப்பிடிப்புகளுக்குப் பல சமயங்களில் தாமதமாகப் போவார் நாகேஷ். ஆனால் அவர்கள் கோபித்துக்கொண்டதில்லை.
இவ்விரு சூப்பர் ஸ்டார்களின் படங்களில் நடித்துவந்த அதேவேளை தன் மனதுக்குப் பிடித்தமான குணச்சித்திர வேடங்கள் கிடைத்தால், அவற்றுக்குச் சம்பளத்தைக் குறைத்துக்கொண்டு நடித்தார். அது போன்ற வேடங்களில் கதாபாத்திரமாக வாழ ஆரம்பித்தார். ஏ.வி.எம். செட்டியாரின் பார்வையில் நாகேஷ் சிறந்த நகைச்சுவை நடிகர் என்பதைவிட, சிறந்த குணச்சித்திர நடிகராகத் தெரிந்தார். அப்போது தமிழ் நாடக மேடைக்கு சமகாலக் கதைகளை நாடகங்களாக எழுதிப் பெயர்பெற்று வந்தார் கே.பாலச்சந்தர். ‘சர்வர் சுந்தரம்’ கே. பாலச்சந்தர் எழுதிய நாடகம்தான். அந்த நாடகத்தைப் பார்த்த செட்டியார், அதை வாங்கித் திரைப்படமாகத் தயாரிக்க முடிவு செய்தார்.
‘ஆயிரத்தில் ஒருவன்’ முதல் கட்டப் படப்பிடிப்பு கேரளாவில் நடந்து கொண்டிருந்தது. அதில் நடித்துக் கொண்டிருந்த நாகேஷிடம் டிரங்க் காலில் பேசினார் செட்டியார். அத்தனை பெரிய பட அதிபர் நம்மிடம் பேசுவதா என்று நெகிழ்ந்த நாகேஷ், படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியதும் செட்டியாரைச் சென்று சந்தித்தார்.
“சர்வர் சுந்தரம் நாடகத்தோட ரைட்ஸ் வாங்கிவிட்டேன்” என்றார் செட்டியார். “நீங்க ஒரு முடிவு எடுத்துட்டா அது சரியா இருக்கும். ஆனால், நல்ல மார்க்கெட் உள்ள ஹீரோவா போடுங்க” என்றார் நாகேஷ். “இந்தக் கதையில நீதான் நடிக்கணும். அதுதான் சரியா இருக்கும்” என்றார் செட்டியார். “நீங்க முடிவு எடுத்துட்டா அதை மாத்த முடியுமா?” என்றார் நாகேஷ். செட்டியார் சிரித்துவிட்டார். கதை, திரைக்கதை, வசனத்தைக் கே. பாலச்சந்தர் எழுத, சமூகப் படங்களை வரிசையாக இயக்கிப் புகழ்பெற்றிருந்த கிருஷ்ணன்-பஞ்சு படத்தை இயக்க, நாகேஷ் கதையின் நாயகனாக நடித்தார்.
சினிமாவில் பெரிய நடிகனாகப் புகழ்பெற வேண்டும் என்ற ஆசையோடு சென்னைக்கு வருகிறார் நாகேஷ். எனினும் தனது தோற்றம் பற்றிய தாழ்வு மனப்பான்மையால் தவிக்கிறார். வாய்ப்புகளைத் தேடிச் செல்லும் முன் வயிற்றைக் காயவிடக் கூடாது அல்லவா? அதற்காக உணவு விடுதி ஒன்றில் சர்வராக வேலை செய்கிறார். நாகேஷின் உணவு பறிமாறும் குறும்புகளைப் பல வாடிக்கையாளர்கள் ரசிக்கிறார்கள்.
சிலர் சிடுசிடுக்கிறார்கள். அந்த உணவு விடுதியின் உரிமையாளர் மேஜர் சுந்தரராஜன். அவரது மகள் கே.ஆர். விஜயா அங்கே அடிக்கடி வருகிறார். நாகேஷைப் பாராட்டுகிறார். தனது முதலாளியின் மகள் என்பதை அறியாத நாகேஷ், கே.ஆர்.விஜயாவின் ஊக்குவிப்பால் உந்தப்பட்டு அவர்பால் ஈர்க்கப்படுகிறார். பிறகு அவரைக் காதலிக்கத் தொடங்குகிறார். கே.ஆர்.விஜயாவோ தனது கல்லூரி நண்பரான முத்துராமனைக் காதலிக்கிறார். முத்துராமன், நாகேஷின் உயிர் நண்பன்.
ஒருநாள் முத்துராமனிடம் சென்று கே.ஆர். விஜயாவைக் காதலிப்பதாகச் சொல்கிறார் நாகேஷ். அதைக் கேட்டு காதலனாகிய முத்துராமன் துடிக்கிறார். அதைக் காதலியிடம் சொல்ல, அவரும் துடிக்கிறார். நட்பாகப் பழகியது தப்பாகிவிட்டதே என கே.ஆர். விஜயா தவிக்கிறார். இதற்கிடையில் நாகேஷின் திரையுலகத் தேடல் தீவிரமாகிறது. ஒரு கட்டத்தில் நாகேஷின் திறமை கண்டறியப்பட்டு நாடு போற்றும் நடிகனாகிவிடுகிறார். பணம், புகழ், அந்தஸ்து எல்லாமே கிடைக்க, சர்வர் சுந்தரம் இப்போது ஆக்டர் சுந்தரம்.
வாழ்க்கையில் எண்ணியதெல்லாம் கிடைத்த பிறகு அடுத்து என்ன? தனது காதலைத் தெரிவிக்கக் கையில் பூங்கொத்தை ஏந்தியபடி கே.ஆர்.விஜயாவைத் தேடி வருகிறார். அப்போது காதலனும் உடன் இருக்க, நாகேஷ் தன் காதலைச் சொல்ல, அந்த நொடியில் ஆரம்பிக்கும் உணர்ச்சிப் போராட்டம் படத்தின் முடிவாக அமைந்தது. காதல் ஒரு மனிதனை உயர்த்தும். அதேநேரம் அதுவே தோல்வியில் முடிந்தால் அந்த மனிதனின் மனதை உடைப்பதற்குப் பதிலாகப் பண்படுத்தும் என்ற கருத்தைத் தூக்கிப்பிடித்தது பாலச்சந்தரின் தேர்ந்த திரை எழுத்து.
காதல் தோல்விக்குப் பிறகு தாயின் இறப்பை எதிர்கொள்ளும் சர்வர் சுந்தரம், ஒரு எளிய மனிதனாக சர்வர் வேலைசெய்தபோது கிடைத்த நிம்மதி, நடிகனாக உயர்ந்தபோது இல்லை என்பதைப் புரியவைப்பதோடு படம் முடியும். வில்லன் இல்லாத படம்.
ஐம்பதாண்டுகள் மேலாக இன்றும் கொண்டாடப்படும் ‘சர்வர் சுந்தரம்’ படத்தை இன்றைய தலைமுறை ரசிகர்கள் பார்த்தால் அதன் திரைக்கதை நேர்த்தியை, கதாபாத்திரங்களின் கட்டமைப்பைப் பாராட்டித் தள்ளுவார்கள். சிவந்த நிறமும், எடுப்பான தோற்றமும் இருந்தால் மட்டுமே சினிமாவில் நாயகனாக உருவாக முடியும் என்ற மூடநம்பிக்கையைச் சர்வர் சுந்தரம்தான் முதன்முதலாக உடைத்தெறிந்தது.
இந்தப் படத்தில் சர்வர் சுந்தரமாக வாழ்ந்த நாகேஷின் நடிப்புத் திறமை எல்லாப் பரிமாணங்களிலும் சிறப்பாக வெளிப்பட்டு நின்றது. அவரது திரைவாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. படத்தில் வரும் ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ என்ற பாடலில் தனது நடனத் திறமையையும் சிறப்பாக வெளிப்படுத்தியதால் ‘அழகிய மனம்’ கொண்ட கதாபாத்திரமாக நாகேஷை ரசிகர்களுக்கு மேலும் நெருக்கமாக்கியது.
இந்தப் படத்தின் வழியாகப் பிரபலமாகி ஒரு நட்சத்திர எழுத்தாளராகவும், இயக்குநராகவும் உயர்ந்தார் இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர். இப்படம் தேசிய விருதைப் பெற்றதோடு, இந்தி உட்பட பல மொழிகளில் மறுஆக்கம் செய்யப்பட்டு வெற்றிகளைக் குவித்தது.
No comments:
Post a Comment