Saturday, 20 March 2021

STYLE SIVAKAMASUNDARI -STORY BY MUTHULINGAM

 


ஸ்டைல் சிவகாமசுந்தரி

அ முத்துலிங்கம் 



யாழ்ப்பாணம் டவுனுக்குப் போவதற்கு பஸ் டிக்கட் 10 சதம்தான். கொக்குவில் என்றால் 50 சதம். வவுனியாவுக்கு 4 ரூபா; கொழும்புக்கு 12 ரூபா. கொழும்புத்துறைக்கு ஒன்றுமே கொடுக்கத் தேவையில்லை. ஏனென்றால் அவள்வீடு அங்கேதான் இருந்தது. பெயர் சிவகாமசுந்தரி. வயது 15. படித்த பள்ளிக்கூடம் வேம்படி. வருடம் 1965. 

தினமும் அவளுடைய அப்பா அவருடைய காரில் அவளை கொண்டுபோய் பள்ளிக்கூடத்தில் விடுவார். மாலையில் மறுபடியும் அழைத்துவருவார். கொழும்புத்துறையில் அவர் ஒருவரிடம்தான் கார் இருந்தது. ஏ30 கார். அது தூரத்தே வரும்போதே சனங்கள் சொல்லிவிடுவார்கள் சந்திரசேகரம் புறப்பட்டுவிட்டார் என்று. அவருடைய கார் அளவுக்கு அவரும் பிரபலமானவர். அவரிடம் இரண்டு லொறிகள் இருந்தன. அவற்றில் சாமான்கள் கொழும்புக்கு போகும், பின்னர் அதே லொறிகளில் வேறு சாமான்கள் திரும்பும். காலையில் அவர் வீட்டு வாசலில் ஒருகூட்டம் சனம் சாமான்களை வாங்க நிற்கும். ‘ஒரு காலத்தில் கொழும்பில் இருந்து நாவாய்களில் சாமான்கள் வந்து இங்கேதான் இறங்கின. அதுதான் கொழும்புத்துறை என்று பெயர். என்னுடைய பாட்டனுக்கு பாட்டன் செய்ததைத்தான் நான் செய்கிறேன்’ என்று பெருமையாகச் சொல்வார்.

கொழும்பு ஸ்டைலை கொழும்புத்துறைக்கு முதலில் கொண்டு வந்தது சிவகாமசுந்தரிதான். பால் கலக்காத தேநீர் நிறத்தில் இருப்பாள். சுற்றிலும் நிலத்தில் புறாக்கூட்டம் நிற்பதுபோல அவதானமாகத்தான் கால்களை எடுத்து வைப்பாள். ஆனால் கண்களில் கர்வம் இருக்கும். அப்பாவின் செல்லம். அவள் என்ன கேட்டாலும் அதை கொழும்பிலிருந்து தருவித்துக் கொடுத்துவிடுவார்.  2 உதட்டுச் சாயம், 4 நகப்பூச்சு, மூன்று அஞ்சனக் குப்பி, இருபது ரிப்பன்கள், ஒரு யார்ட்லி பவுடர் என ஒப்பனை பொருட்கள் அவளிடம் இருந்தன. ரப்பர் வளையப் பந்துகளை தலையில் முதலில் அணிந்து யாழ்ப்பாணத்துக்கு அறிமுகம் செய்தது அவள்தான்.

பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் முகத்தை கழுவுவாள். தலைவாரி இழுத்து பவுடர் பூசி பொட்டு வைத்து பச்சை பாவாடை அணிந்து பச்சைக்கரை வைத்த பிளவுஸ் தரித்து பச்சை தாவணியை உடுத்தி பச்சை குடையை தலைக்குமேல் பிடித்தபடி கேட்டைத் திறந்து வெளியே வந்தவள் நின்று யோசிப்பாள். சட்டென்று உள்ளே திரும்பி பச்சை கைலேஞ்சியை எடுத்து இடுப்பிலே செருகிக்கொண்டு நடக்கத் தொடங்குவாள். உடனேயே செய்தி பறக்கும். அந்த வீதியில் உள்ள இளம் பெண்கள் வாசலில் நிற்பார்கள். சிவகாமசுந்தரி ஸ்டைலாக நடந்து வீதியின் எல்லை மட்டும் போவாள். பின்னர் திரும்புவாள். கொழும்புக் குடை கையிலே இருப்பது பெரிய அனுகூலம். யாராவது அவளைப் பார்ப்பது பிடிக்கவில்லை என்றால் குடையால் மறைத்துவிடுவாள். கைப்பிடியில் இருக்கும் சின்ன பொத்தானை அழுத்தியதும் குடை தானாக அரை அடி உயரும். பின்னர் படக்கென்று இரண்டு கட்டமாக விரியும். அந்தக் குடை யாழ்ப்பாணத்தில் ஒருவரிடமும் இல்லை. அவளிடம் நாலு குடைகள் நாலு கலர்களில் இருந்தன.


எத்தனை ஸ்டைல் என்றாலும் சிவகாமசுந்தரிக்கு ஏதோ ஒன்று குறைந்தது. அரசியாக எங்கோ பிறக்க வேண்டியவள் இந்தக் குக்கிராமத்தில் பிறந்ததால் அவள் ஸ்டைல் எல்லாம் வீணாகிக்கொண்டிருந்தது. சௌபாக்கியவதி படத்தில் சாவித்திரி பழைய காலத்து ராஜகுமாரிபோல சேடிப்பெண்களுடன் போவாள். தோழிகள் இருந்தால்தான் மதிப்பு.  அழகிலும் ஸ்டைலிலும் குறைந்த நாலு பெண்களைத் தோழியராக சேர்த்துக்கொண்டு. வீதிவீதியாக அலைந்தாள். கரம்பன்வீதியை கடக்கும்போது சிவகாமசுந்தரி மூக்கைப் பொத்துவாள். மற்றவர்களும் பொத்துவார்கள். தேங்காய் மட்டைகளை கடற்கரையில் நனையவைத்து அங்கே கயிறு திரிப்பார்கள். அந்த மணம் வீதி முழுக்க நிரம்பியிருக்கும். சில பையன்கள் தொடருவார்கள். இன்னும் சிலர் அப்போது பிரபலமாயிருக்கும் சினிமா பாடல் வரி ஒன்றைப் பாடுவார்கள். தோழிகள் கிலுகிலுவென்று சிரிக்க இவள் மட்டும் தோரணையாக ஒரு பார்வை பார்ப்பாள். அவர்கள் அடங்கி சுருண்டு விழுவார்கள். .

தாயாருக்கு இவளுடைய ஸ்டைல் பிடிக்காது. அடிக்கடி திட்டுவாள். ஒருநாள் அவர் பயந்தது போலவே நடந்தது. சென்ட்ரல் கல்லூரி கார்னிவலுக்கு பலநாள் திட்டமிட்டு ஐந்து பெண்களும் புறப்பட்டார்கள். அன்று சிவகாமசுந்தரி முன்னெப்பொழுதும் செய்திராதமாதிரி தன்னை அலங்கரித்திருந்தாள். ஒற்றை விரலால் கொழும்பு கிரீமை முகத்திலே தடவினாள். கட்டம்போட்ட அரைத்தாவணி அணிந்து, தலையை வாரி இழுத்து சுருட்டி அலங்கரித்து முடியில் இரண்டு ரப்பர் பந்துகளை மாட்டியிருந்தாள். தோளிலே தொடும் தொங்கட்டான். கொஞ்சம் குதி உயர்ந்த கொழும்பு செருப்பில் உயரமாகத் தெரிந்தாள். சிவப்பும் மஞ்சளும் கலந்த காப்புகளை அணிந்து மஞ்சள் கைப்பையை தோளிலே மாட்டி மஞ்சள் கைக்குட்டையை இடுப்பிலே செருகினாள்.

கண்ணாடியில் பார்த்தபோது அவள் வடிவில் அவளே சொக்கினாள்.  கார்னிவல்லில் லைட்டுகள் மாயவேலைகள் செய்தன. சில ஓடின, சில சுழன்றன. சில பத்தி பத்தி நூர்ந்தன. சுழல் ராட்டினத்தில் சுழன்றார்கள். ராட்சத சில்லில் மேலும் கீழுமாக ஏறி இறங்கினார்கள். முழங்கைகளில் வழியவழிய ஐஸ்கிரீம் சாப்பிட்டார்கள். பாதாளக்கிணற்றில் மோட்டார்சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சியின்போது நாலு சீட் தள்ளி அழகான இளந்தாரி ஒருத்தன்  உட்கார்ந்திருந்தான். கறுப்புக் கண்ணாடி அணிந்தபடி இவளையே பார்த்தான். பக்கத்தில் இருந்த சிநேகிதி தோளை இடித்து ’அவன் உன்னைப் பார்க்கிறான்’ என்றாள். இவளுக்கு நெஞ்சு படபடப்பு ஆரம்பித்தது. எத்தனை ஆண்கள் அவளை பார்த்திருக்கிறார்கள். அவள் சட்டை செய்ததே கிடையாது. இந்த உணர்வே வேறு. இவளால் கண்களை விலக்க முடியவில்லை. ஒருவித குதூகலம் நெஞ்சை நிறைத்தது.


வீட்டினுள் நுழைந்ததும் எரிச்சல் எரிச்சலாக வந்தது. அம்மாவைப் பார்த்ததும் அது கூடியது. கைப்பையை வீசினாள். கொழும்பு செருப்பை காலிலே இருந்து உதறினாள். தகப்பன் வந்து தலையை தடவி ’என்ன அம்மா?’ என்றார். ஏதாவது தேவையென்றால் அவள் பேசுவதை நிறுத்திவிடுவாள். தகப்பனை கெஞ்ச வைத்தபின் ’சன்கிளாஸ்’ என்றாள். அவருக்கு புரியவில்லை. ’கறுப்புக் கண்ணாடி, அப்பா. அதுதான் இப்ப ஸ்டைல்.’. அடுத்த நாளே கொழும்பிலிருந்து கறுப்புக் கண்ணாடி ஒன்று வந்தது. முன்னுக்கு நிற்பவருடைய முகம் அதில் தெரியும் அதை மாட்டி  நடக்கும்போது அவன் பார்க்க வேண்டும் என நினைத்தாள். ஆனால் அவனை எங்கே தேடுவது?

கணக்குப் பாடம் ஓடாததால் இரண்டு வீதி தள்ளி கணக்கு மிஸ்ஸிடம் தனியாக ட்யூசனுக்கு போய்வரத் துடங்கினாள். கறுப்புக் கண்ணாடி அணிந்து வீதியிலே அவள் போனபோது ஒருநாள் சைக்கிளில் ஒரு வாலிபன் உட்கார்ந்து அவளையே உற்றுப் பார்த்தான். அதே கறுப்பு கண்ணாடி அணிந்தவன்தான். இவள் நெஞ்சு பதைபதைக்கத் தொடங்கியது. எங்கே பார்ப்பது என்று தெரியவில்லை. எங்கே தலையை திருப்பினாலும் கண்கள் அவன் பக்கமே பார்த்தன. துணிச்சலாக அவன் சிரித்தான். அவளுக்கு என்ன நடந்தது?. வேகமாக அந்த இடத்தைவிட்டு ஓடவேண்டும் அல்லவா? சிரித்துவிட்டாள். ஏன் அப்படிச் சிரித்தோம் என்று தன்னையே கேட்டபடி வீட்டுக்கு வந்தாள். அவளால் அவனை மறக்க முடியவில்லை. தினமும் அதே இடத்தில் நின்று சிரித்தான். .  ட்யூசன் செல்லும் மாலைகளை ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்தாள்.

சனி, ஞாயிறு  ட்யூசன் இல்லாத்தால் வீட்டில் இருப்பது நரக வேதனையாக இருந்தது. திங்கள் ட்யூசனுக்கு போனபோது அவனைக் காணவில்லை. அந்த இடத்தில் சிறிது நின்றுகூடப் பார்த்தாள். கோபம் கோபமாக வந்தது. செவ்வாய்க்கிழமையும் அவன் வரவில்லை. இப்பொழுது பயம் பிடித்தது. கோபம், பயம், எரிச்சல் என்று பல உணர்ச்சிகள். இவன் யார்? பெயர்கூடத் தெரியாதே.? பாவாடையை கிழிக்கத் தோன்றியது. தலைமயிரை இழுத்து பிய்த்துப் போட நினைத்தாள். புதன்கிழமை அதே இடத்தில் நின்று ஒன்றுமே நடக்காததுபோல சிரித்தான். அவள் பட்ட வேதனை ஓர் இழவும் அவனுக்கு தெரியவில்லை. அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அவனைப் பார்த்து ’நேற்று ஏன் வரவில்லை?’ என்று கேட்டாள். ஒரு காதலனைப் பார்த்து அவள் பேசிய முதல் வார்த்தைகள். அவனில் ஒரு மாற்றமும் இல்லை. ஒரு கால் நிலத்தில் ஊன்றியிருக்க மற்றக் காலை பெடலில் வைத்து அவளைப் பார்த்து சொன்னான். ‘நேற்று என்ன கிழமை? செவ்வாய்க்கிழமை. ஓ, சியாமளாவைப் பார்க்க போய்விட்டேன்’ என்றான். பின்னர் இருவரும் ஒரே நேரத்தில் சிரித்தார்கள். அவன் சிரித்தபோது கழுத்து நரம்புகள் துடித்ததை பெரும் அதிசயத்தோடு பார்த்தாள். அப்படித்தான் அவர்கள் காதல் ஆரம்பித்தது.

மூன்றாம் நாள்தான் அவன் பெயர் தெரிந்தது. சாமுவேல் என்றான். ’ஓ யேசுதான் உங்கள் கடவுளா?’ அவன் தலையாட்டினான். ஒரு சின்னத் தலையாட்டல்கூட எத்தனை அழகாயிருக்கிறது. அவள் சிரித்தாள். ’ஏன் சிரிக்கிறீர்?’ ’அப்பாவிடம் உங்கள் பெயர் சாமிவேல் என்று சொல்லிவிடுவேன். ஒரு பிரச்சினையும் இராது.’ இப்பொழுது இருவரும் சிரித்தார்கள். ட்யூசன் நேரத்தை அரைவாசியாகக் குறைத்தாள். சிலநாட்கள் ட்யூசனுக்கே போவதில்லை. தினமும் கடிதம் பரிமாறிக் கொண்டார்கள். சனி ஞாயிறு நாட்களில் சந்திக்க முடியாமல் விரக தாபத்தில் துடித்தார்கள். இந்தக் காதல் விவகாரம் ஒரு வருடம் தொடர்ந்தது. ஊருக்கெல்லாம் கதை பரவிய . பின்னர் அவள் அம்மாவுக்கு தெரிந்தது. கடைசி கடைசியாக அப்பாவுக்கும் செய்தி எட்டியது. அப்பா அவளை நேருக்கு நேர் கேட்டார். அந்த முகத்தை அவளால் மறக்க முடியாது. இருபது பேர் குத்தியதுபோல அவர் முகம் சிவந்து ரத்தம் கண்டிப்போய் கிடந்தது. முகத்தில் கண்ணீரா வியர்வையா என்று தெரியாதபடி திரவம் ஓடியது. ‘உண்மையா?’ என்றார். அவள் ’ஓம் அப்பா’ என்றாள்.

அதற்கு முதல் நாள் நல்லூர் ஏழுமுகத் திருவிழாவுக்கு போயிருந்தார்கள். அப்பா அதிசந்தோசமாக  இருந்த கடைசி நாள் அது. அம்மா கேட்ட அத்தனை வெண்கலப் பாத்திரங்களையும் வாங்கிக் கொடுத்தார். சிவகாமசுந்தரி வளையல் கடையின் முன்னால் ஒரு மணிநேரம் நின்று கறுப்பு, மஞ்சள், ஊதா. நீலம், பச்சை, சிவப்பு மென்சிவப்பு என்று சகல நிறங்களிலும் ஐந்து ஐந்து சோடிகள் வாங்கினாள். சனக்கூட்டம் ஒருவரை ஒருவர் இடித்தபடி வெளியேறிக் கொண்டிருந்தது. நீண்ட தூரம் நடந்து கோயிலுக்கு வெளியே வந்து காரைக் கண்டுபிடித்து ஏறினார்கள். கார் வேகம் பிடிக்க ஆரம்பித்தபோது ‘அப்பா’ என்றாள் ’என்ன மகளே?’ சட்டென்று காரை நிறுத்தினார். ’அப்பா, வெள்ளைக் காப்பு வாங்க மறந்துபோனேன்.’. அவர் ஒன்றுமே பேசாமல் காரை விட்டு இறங்கி மகளிடம் அளவு காப்பு வாங்கிக்கொண்டு எதிர் திசையில் ஓடினார். இருபது நிமிடம் காத்திருந்தார்கள். களைத்து விழுந்து திரும்பிய அவர் கையை நீட்டியபடியே ஓடி வந்தார். அதில் ஐந்து சோடி வெள்ளை வளையல்கள் இருந்தன. ’செல்ல அப்பா. என்ரை அப்பா’ என்று காப்புகளை வாங்கினாள். சற்று திரும்பி பார்த்திருந்தால் தாயார் முகத்தில் நெருப்பு எரிவது தெரிந்திருக்கும்.

’மகள், இது சரிவராது. பையனைப் பற்றி விசாரித்தனான். அவன் படிக்கவில்லை. பஸ் கம்பனியில மிகச் சாதாரண வேலை செய்கிறான். அவன் சம்பளத்தில் உனக்கு ஒரு நல்ல சேலைகூட வாங்கித் தரமுடியாது. அவர்கள் வேதக்காரர்கள்.  நீ என்ரை செல்ல மகள் அல்லவா? நான் வெளியிலே தலை காட்ட முடியாது, மகளே’ என்று கெஞ்சினார். அவள் சாமுவேல் சொல்லித் தந்ததை மனதிலே நினைத்தாள். ’உன்பக்கம் நியாயம் இருந்தால் உன் வலிமை நாலு மடங்காக கூடிவிடும்.’ திரும்பத் திரும்ப அதையே சொன்னாள். அழவில்லை. நிதானமாகவே பேசினாள். ’அப்பா அவர் நல்லவர். என்னை நல்லாய் வைத்திருப்பார்.’ 

தினம் தினம் அறிவுரைபோல ஆரம்பிக்கும் பேச்சு பின்னர் குரல் உயர்ந்து சண்டையாக மாறும். அவள் சாப்பிடாமல் படுக்கப் போய்விடுவாள். ஒருநாள் சந்திரசேகரம் கோபம் தலைக்கேறி கன்னத்தில் அடித்துவிட்டார். அவளால் நம்ப முடியவில்லை. அவராலும் நம்ப முடியவில்லை. இந்த 16 வருடத்தில் ஒருநாள்கூட அவர் அவளை அடித்தது கிடையாது. அவள் ஓடிப்போய் கிணற்றிலே குதித்து விட்டாள். அவரும் குதித்தார். இருவரையும் ஆஸ்பத்திரிக்கு தூக்கி ஓடினார்கள். அவருக்கு கால் முறிந்துவிட்டது. அவள் ஒருநாளில் வீட்டுக்கு திரும்பிவிட்டாள். அவருக்கு மூன்று மாதம் எடுத்தது. அந்த மூன்று மாதமும் அவள் சாமுவேலை ரகஸ்யமாகச் சந்தித்துக்கொண்டே இருந்தாள்.

சந்திரசேகரம் இந்தப் பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல் குழம்பிப்போய் இருந்தார். அவர் என்ன குறை வைத்தார்? அன்பைத் தவிர அவர் வேறு ஒன்றையும் அவளுக்குத் தரவில்லையே! எப்படி அவளால் விலகி விலகிப் போகமுடிந்தது.  பள்ளிக்கூடத்துக்கு போவதை ஒரு வருடமாக நிறுத்திவிட்டார்கள். . கொழும்பிலே நல்ல உத்தியோகத்தில் இருக்கும் ஒருவனின் சாதகம் பொருந்தியிருந்தது. சிவகாமசுந்தரியின் படத்தை பார்த்து அவன் சம்மதம் சொன்னதால். திருமணத்துக்கு நாளும் குறித்து விட்டார்கள். அவளுக்கு முன்னுக்கும் பின்னுக்கும் காவல். கிணற்றுப் பக்கம் அவள் போகவே முடியாது. அன்றிரவு தண்ணீர் குடிக்க வைத்திருந்த கிளாஸை உடைத்து தூள் தூளாக்கி எப்படியோ உட்கொண்டு விட்டாள்.

ஆஸ்பத்திரிக்கு மறுபடியும் கொண்டு ஓடினார்கள். நாலு நாட்களாக ரத்தம் ரத்தமாக வாயாலும், வயிற்றாலும் போனது. கிளாஸ் துகள்கள் குடல் முழுக்க ஒட்டிக்கொண்டதால் மருத்துவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ரொட்டித் துண்டை இரண்டாக வெட்டி நடுவிலே பஞ்சு அடைத்து சாண்ட்விச் போல செய்து சாப்பிட வைத்தார்கள். அப்படி நாலு சாண்ட்விச் உள்ளே போனது.  இன்னொரு பக்கத்தில் ட்ரிப் ஏறியது. கொஞ்சம் கொஞ்சமாக ரத்தப்போக்கு நின்று முற்றிலும் குணமானாள்.

பத்து நாட்களும் கட்டிலுக்கு பக்கத்தில் அப்பா இருந்தார். ‘ஏன் மகளே இப்படிச் செய்தாய். நீ செத்தபிறகு நாங்கள் உயிருடன் இருப்போமா?’ என்று சொல்லி அழ ஆரம்பித்தார். இத்தனை பாசம் கொண்ட அப்பாவை பிரிந்து என்ன வாழ்க்கை வேண்டியிருக்கு என்ற எண்ணம் அவளுக்கு எழுந்தது. ’அப்பா உங்கள் விருப்பம் போலவே செய்யுங்கள். நான் மாறமாட்டேன். இது சத்தியம்’ என்றாள். அவள் அப்பா முகம் சிரிப்பதை பல மாதங்களுக்கு பிறகு கண்டாள். அடுத்தநாள் காலை அவர் அவளை வீட்டுக்கு அழைத்துப்போக வந்தார். அவளைக் கட்டிலில் காணவில்லை. அவள் சாமுவேலுடன் ஓடிவிட்டாள்.

சந்திரசேகரம் வீட்டில் நிறைய ஆட்கள் சேர்ந்துவிட்டார்கள். ஒரு செத்த வீடு எப்படியிருக்குமோ அப்படியே ஆகிவிட்டது. அவள் சத்தியம் செய்து கொடுத்ததையே திரும்ப திரும்ப எண்ணினார். மனைவி முடியை விரித்து தலையில் அடித்து ’முற்றத்து வெய்யில் முதுகில் படாமல் வளர்த்தேனே’ என்று ஒப்பாரி வைத்தார். சிலர் இப்பொழுதே போய் அவளை இழுத்து வருவோம் என்றார்கள். வேறு. சிலர் பொலீஸில் சொல்லலாம் என்று அறிவுரை கூறினார்கள். சந்திரசேகரம் யோசித்துப் பார்த்தார். இரண்டு தரம் தற்கொலை முயற்சியில் இறங்கியிருக்கிறாள். சத்தியம் செய்து கொடுத்துவிட்டு அதை மீறிப் போயிருக்கிறாள். அவள் காதலில் எத்தனை தீவிரமாக இருக்கிறாள். ‘வேண்டாம் 17 வருடங்கள் மட்டுமே எனக்கு ஒரு மகள் இருந்தாள். அவளைப் பிடித்து இழுத்து வந்து என்ன பிரயோசனம்? மறுபடியும் ஓடத்தானே போகிறாள்’ என்றார்.

அன்றிலிருந்து அவருக்கு தகவல் சொல்லும் ஆட்கள் பெருகிவிட்டார்கள். ஒருவர் சொன்னார் அவளுடைய பெயர் இப்போ ’மட்டில்லா.’ இன்னொருவர்  மாதாகோயிலில் திருமணம் நடந்து முடிந்துவிட்டதாக தகவல் தந்தார்.  ‘முன்பெல்லாம் என்ன ஸ்டைலாக இருப்பாள். பூவெல்லாம் சாயம்போன பழைய சேலையில் சந்தைக்கு வந்திருந்தாள். தலை வாரவில்லை; பொட்டும் இல்லை’ என்றார்கள். அவருக்கு குடலையே அறுத்து வீசியதுபோல வேதனை ஏற்பட்டது. ’மட்டில்லா’ என்று பெயராம். ’அவளுக்கு மட்டில்லா மகிழ்ச்சியா? அல்லது எங்களுக்கு மட்டில்லா வேதனையா?’ வயிற்றைப் பிடித்தபடி அவர் புலம்பினார்.

முதல் பிள்ளை பிறந்தபோது அவர்கள் வரக்கூடும் என்று நினைத்தார். வரவில்லை. மூன்று வருடம் ஓடியது. இரண்டாவது பிள்ளையும் பிறந்தது. அவர்களை இனிமேல் பார்ப்போம் என்ற நம்பிக்கை போய்விட்டது. வெளியிடங்களுக்கு போகும்போது அவர் கண்கள் அவளைத் தேடித்தேடி ஏங்கின. ஒருநாள் செய்தி வந்தது. அவள் ஆஸ்துமாவால் தினம் வேதனை அனுபவிக்கிறாள்  என்று. சிறு வயதாயிருந்தபோது ஒரேயொரு முறை அவளுக்கு ஆஸ்துமா தாக்கி அவர் அவளைத் தோளிலே தூக்கிப் போட்டுக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடியது நினைவுக்கு வந்தது.

சிலநாட்களாக அவருக்கு சீவியம் வெறுத்துவிட்டது. மகள் நினைவாகவே இருந்தது. மெலிந்து போயிருக்கிறாள் என்று சொன்னார்கள். மாமியாருக்கு வேறு உடல்நலம் இல்லையாம். புருசன் காலையில் போனால் இரவுதான் திரும்புவான். இரண்டு குழந்தைகளையும் மாமியாரையும் எப்படி சமாளிக்கிறாள்? சிறுவயதில் இரவிலே ரகஸ்யமாக வந்து அவர் முதுகிலே கன்னத்தை வைத்துக்கொண்டு தூங்குவாள். வீட்டிலே உளுத்தம் களி கிண்டினால் அதைச் சாப்பிட முன்னர் ஒரு கரண்டி கொண்டுவந்து அவர் வாய்க்கு கிட்ட நீட்டுவாள்.

அவரால் அவதி தாங்க முடியவில்லை. காரை எடுத்துப்போய் கரம்பன் வீதி நுனியிலே நிறுத்திவிட்டு 18ம் நம்பர் வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தார். ஓர் அறை மட்டுமே உள்ள சின்ன வீடு அது. மறுபடியும் மாலைபோய் அரை மணி நேரம் காத்திருந்தார். அவருடைய காரை எல்லோருக்கும் தெரியுமாதலால் நீண்ட நேரம் தரிக்க முடியாது. இது பல நாள் தொடர்ந்தது.  ஒருநாள் காலை ஒன்பது மணிபோல. அவரிடம் கொஞ்சம் தைரியம் மிச்சமிருந்தது. ’எதற்குப் பயம்? மகள் வீடுதானே, உள்ளே போகலாம்’ என்று நினைத்தபோது ஓர் உருவம் வீட்டை விட்டு வெளியே வந்து எதையோ வீதியில் கொட்டிவிட்டு நின்று அவர் பக்கம் உற்றுப் பார்த்தது. சந்திரசேகரம் காரை விட்டு இறங்கி மகளை நோக்கி ஓடத் தொடங்கினார். அவள் தன் வாழ்நாளில் பலமுறை பின்னர் நினைத்துப் பார்த்த அவளுடைய ஓட்டம் தொடங்கியது. விமானம் ஒன்று மேலே பறக்கும் சத்தம் கேட்டது. ஈரக் கயிறு மணம் வீசும் காற்றை உள்ளே இழுத்தாள்; அவள் நிழல் அவளை முந்திக்கொண்டு பாய்ந்து பாய்ந்து நகர்ந்தது. கட்டிப்பிடித்து ’அப்பா’ என்று அலறினாள். அவள் அழுவதே இல்லை. முதல்முறையாக அவள் அழுவதை பார்த்தார். ’அழாதே அம்மா நான் வந்திட்டன், அழாதே’ என்று கண்ணீரைத் துடைத்தார். 20 வருடக் கண்ணீர் அங்கே கொட்டியது.

’இத்தனை தூரம் வந்த உங்களுக்கு வீட்டினுள்ளே வரமுடியவில்லையா, அப்பா?’ அப்பொழுதுதான் ’ஸ்டைல் சிவகாமசுந்தரி’ என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட அவருடைய மகளை. கவனித்தார். கண்கள் உள்ளுக்குப் போய், உதடுகள் வெடித்துக் கிடந்தன. ஒரு கிழமைக்கு முன்னர் தோய்த்திருக்கக்கூடிய நீளமான வீட்டு உடையை அணிந்திருந்தாள். தினம் நகப்பூச்சு பூசிய நகங்கள் உள்பக்கம் தேய்ந்து கறுத்துப்போய் காணப்பட்டன. மூச்சு வாங்கியது. அது ஓடிவந்த களைப்பு அல்ல, மூச்சுத் திணறல். நிமிர்ந்து மூச்சை உள்ளே இழுத்தாள் ஆனால் அவளால் சுவாசப்பையை பாதிகூட நிரப்ப முடியவில்லை. பார்க்கவே பரிதாபமாகவிருந்தது. ‘இப்பவே நான் உன்னை மருத்துவரிடம் அழைத்துப் போகிறேன். அவரை எனக்கு தெரியும். காரில் ஏறு’ என்றார். அவள் இறகு போல அவருக்குப் பின்னால் வந்தாள். காருக்குள் ஏறியதும் ‘உன்னை ‘மட்டில்லா’ என்றா நான் அழைக்கவேண்டும்?’ என்றார். ‘அப்பா, உங்களுக்கு நான் எப்பவும் சிவகாமசுந்தரிதான்.’   ’இது என்ன கோலம், அம்மா?’ என்று மறுபடியும் விம்மினார். ’பேசாமல் ஓட்டுங்கோ’ என்றாள் பழைய கட்டளையிடும் தொனியில். அதைக் கேட்க அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ’உன்னைத் தேடுவார்களே. வீட்டுக்கு போய் மாமியாரிடம் சொல்லிவிட்டு வா’ என்றார்.

‘அப்பா, காரை எடுங்கோ.’ அதிகாரம் குறையவில்லை. ’நான் உங்களிடம் சொல்லாமல்தானே ஓடினேன்.’






No comments:

Post a Comment