Wednesday, 10 March 2021

PANCHU ARUNACHALAM , INTRODUCED ILAIYARAJA

 


PANCHU ARUNACHALAM ,

INTRODUCED ILAIYARAJA


பஞ்சு அருணாசலம் அவர்களுடனான அறிமுகம் பற்றி இசைஞானி இளையராஜா அவர்கள் விளக்கியுள்ள சுவையான சம்பவங்களின் நினைவலைகள்.
நாங்கள் சினிமாவில் இசையமைக்க முயற்சி செய்துகொண்டிருக்கும் வேளையில் அண்ணன் பாஸ்கர் எனக்காக நிறைய நடந்திருக்கிறார். யாராவது புதிதாக ஒரு கம்பெனியை தொடங்கியிருந்தால் அங்கு போய் வாய்ப்புக் கேட்டு நிற்பார் பாஸ்கர். அது போலியான கம்பெனியாகக் கூட இருக்கலாம்.
'சார் என் தம்பி நல்லா மியூசிக் பண்ணுவான். அவனுக்கு ஒருசான்ஸ் கொடுங்க' என்று போய்க் கேட்பார். நான் எந்த கம்பெனிக்கும் போய் வாய்ப்புக் கேட்டதில்லை. அப்போது நாங்கள் இசைக்குழு வைத்து மெல்லிசைக் கச்சேரி நடத்திக் கொண்டிருந்தோம். அப்போது நிறைய புதுமுக இயக்குநர்கள் வந்துகொண்டிருந்தார்கள். வி.சி.குகநாதன், எஸ்.பி.முத்துராமன், தேவராஜ் மோகன் போன்றவர்கள் வந்தநேரம் அது.
இவர்களையெல்லாம் ஒரு கல்யாண மண்டபத்துக்கு வரவழைத்து நான் கம்போஸ் செய்த பாடல்களைப் பாடிக்காட்டி வாய்ப்புக் கேட்டோம். வந்தவர்கள் எல்லோரும் சரி பார்க்கலாம், பாட்டு நல்லாருக்கு, என்று சொல்லிவிட்டுச் சென்றார்களே தவிர, அந்த இயக்குநர்கள் யாருக்கும் இந்த இளையராஜாவைத் தெரியவில்லை.
அதுவும் நான் இந்தந்த பாட்டு பண்ணியிருக்கேன். லட்டு பண்ணியிருக்கேன், பூந்தி பண்ணியிருக்கேன், காரம் பண்ணியிருக்கேன்னு காட்டின பின்னாடி கூட இது நன்றாக இருக்கிறதென்று தெரியவில்லை.
ஆனால் என் நண்பன் ஆர்.செல்வராஜ், பஞ்சு அருணாசலத்திடம் ‘என் நண்பன் ஒருத்தன் ஜி.கே. வெங்கடேஷ்கிட்ட உதவியாளரா இருக்கான். நல்லா மியூசிக் பண்ணுவான். நீங்க ஒரு வாய்ப்பு தர வேண்டும்’ என்று கேட்டிருக்கிறான். அவர் அப்போது சின்ன படங்களுக்கு எழுதிக் கொண்டிருந்தார்.
சரி வரச்சொல்லு பார்க்கலாம் என்று அவர் சொல்லியிருக்கிறார். மாம்பலத்தில் ஒரு சிறிய அறையில் லுங்கியும் பனியனும் மட்டும் அணிந்து உட்கார்ந்திருந்தார் பஞ்சு சார். ரொம்பவும் சின்ன அறையில் ஒரே ஒரு டேபிள் மட்டும் இருந்தது. லேசான மது வாடையும் சிகரெட் வாடையும் அறையில் மிதந்தன.
‘அண்ணே நான் உங்களைப் பாத்திருக்கேன். சபதம் படத்துக்குப் பாட்டெழுத கவிஞர் கண்ணதாசன் வந்தபோது நீங்களும் வந்தீங்க’ என்று நான் சொல்லவும் ‘ஆமாம் நானும் உன்னைப் பாத்திருக்கேன். ஆமா, நீ தனியா மியூசிக் பண்றியா’ என்று கேட்டார். ‘ஆமாம்’ என்றேன். ‘எங்கே பாடிக் காட்டு’ என்றார்.
அங்கிருந்த டேபிளில் நான் கம்போஸ் பண்ணியிருந்த பாடல்களை அவருக்கு தாளம் போட்டு வாசித்துக்காட்டினேன். அவர், ‘நான் காமெடி படங்களுக்குத்தான் எழுதிகிட்டிருக்கேன். நீ வாசிச்ச பாடல்களுக்கென்று படம் எடுத்தால்தான் பாட்டெல்லாம் நல்லாயிருக்கும்’ என்றார். செல்வராஜ் மருத்துவச்சி என்ற கதையை எழுதினான். அந்த கதையே அன்னக்கிளி என்ற பெயர்வைத்துத் தயாரித்தார்.
பின்னணிப் பாடகர்களைப் பாடவைத்து ஆர்க்கெஸ்ட்ராவை வைத்துப் பாடிக்காட்டியும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத இயக்குநர்கள் மத்தியில் வெறும் டேபிளில் தாளம்போட்டுக் காட்டிய உடனே இவன் வருவான் என்று ஒரு நம்பிக்கையில் வாய்ப்புக் கொடுத்தார் பஞ்சு அருணாசலம்.
பின்னால் நான் பெயர் பெற்றபோது அவரிடம் எப்படி நீங்கள் இளையராஜாவை அடையாளம் கண்டுபிடித்தீர்கள்? என்று கேட்டார்கள். ‘நான் என்ன அவனை அடையாளம் கண்டுபிடிப்பது? அவன் எங்கிருந்தாலும் வந்திருப்பான்’ என்று சொன்னார். இதை நான் மறக்க முடியுமா?

No comments:

Post a Comment