Monday, 15 March 2021

FIRST TEST CRICKET MATCH HELD ON 1877 MARCH 15 IN AUSTRALIA

 

FIRST TEST CRICKET MATCH HELD ON 

1877 MARCH 15 IN AUSTRALIA



தேர்வுத் துடுப்பாட்டம் (Test cricket) என்பது துடுப்பாட்டப் போட்டி வகைகளில் உயர்தரம் கொண்டதும் நீண்ட நேரம் ஆடப்படுவதும் ஆகும். இது ஒரு அணியின் முழு வலிமையைப் பரிசோதிக்கும் தேர்வாகக் கருதப்படுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. பொதுவாக இது 5 நாட்கள் நடைபெறும்.


தேர்வுத் துடுப்பாட்டம் ஐசிசியால் தகுதி வழங்கப்பட்ட 12 நாடுகளைச் சேர்ந்த அணிகளுக்கு இடையே மட்டும் நடைபெறுகிறது. ஆத்திரேலியா, அயர்லாந்து, ஆப்கானித்தான், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, சிம்பாவே, வங்காளதேசம் ஆகியன தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஈடுபடும் தகுதி பெற்ற அணிகளாகும்.



அங்கீகரிக்கப்பட்ட முதல் தேர்வுத் துடுப்பாட்டம் மார்ச் 15, 1877 முதல் மார்ச் 19, 1877வரை நடைபெற்றது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. பிறகு தேர்வுத் துடுப்பாட்டத்தின் 100 ஆவது ஆண்டைக் கொண்டாடும் விதமாக 1977ஆம் ஆண்டு இந்த இரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் போட்டி போலவே 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.


நடைபெறும் முறை

நேரம்

ஒரு தேர்வுப் போட்டி என்பது 5 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். எனினும் சில நேரங்களில் 3 அல்லது 4 நாட்களிலேயே முடிந்துவிடும். ஒரு நாள் என்பது 1 ஆட்ட வேளைக்கு (session) 2 மணிநேரங்கள் என்ற அளவில் 3 வேளைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். உணவு இடைவேளைக்கு 40 நிமிடங்களும் தேநீர் இடைவேளைக்கு 20 நிமிடங்களும் வழங்கப்படும். எனினும் சில நேரங்களில் மோசமான வானிலை அல்லது ஆட்டப்பகுதி முடியும் சூழ்நிலை போன்ற காரணங்களால் இந்த நேர அளவுகள் மாற்றியமைக்கப்படலாம். ஒருவேளை மோசமான வானிலையால் விளையாட இயலாமல் போன நேரத்தை ஈடுகட்டும் வகையில் கூடுதல் நேரம் ஒதுக்கப்படும். ஒருவேளை ஆட்டத்தின் முடிவு எட்டப்படும் முன்பே ஆட்ட வேளை அல்லது ஆட்ட நேரம் முடியும் போது, கூடுதல் நேரம் வழங்குவதால் ஆட்டத்தின் வெற்றி/தோல்வியை தீர்மானிக்க இயலும் என்று நடுவர்கள் கருதினால் ஆட்டம் 30 நிமிடங்கள் வரை நீட்டிக்கப்படும்.





ஆட்டம்

பொதுவாக ஒரு போட்டியில் 4 ஆட்டப்பகுதிகள் (Innings) நடைபெறும். மட்டையாடும் அணி ஆட்டமிழக்கும் வரை அதன் எதிரணி ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 90 நிறைவுகள் (Overs) வரை பந்துவீச வேண்டும். நாணயச்சுழற்சியில் வெல்லும் அணி முதலில் மட்டையாட்டத்தையோ பந்துவீச்சையோ தேர்வு செய்யும். 4 ஆட்டப்பகுதிகளில் ஒவ்வொரு அணியும் தலா இரண்டு முறை மட்டைபிடிக்கவும் பந்துவீசவும் இயலும்.


ஒருவேளை அ என்ற அணி மட்டையாடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவர்களது முதல் ஆட்டப்பகுதி முடிந்த பிறகு ஆ அணி தனது முதல் ஆட்டப்பகுதியை விளையாடும். பிறகு அ அணி தன் இரண்டாவது ஆட்டப்பகுதியை விளையாடும். இறுதியாக ஆ அணி இரண்டாவது ஆட்டப்பகுதியை ஆடும். முடிவில் இரண்டு ஆட்டப்பகுதிகளையும் சேர்த்து அதிக ஓட்டங்கள் எடுத்த அணி வெற்றி பெறும்.


ஒரு அணியின் ஆட்டப் பகுதி முடிவுக்கு (End) வரும் சூழ்நிலைகள்:


அனைவரும் வெளியேறுதல் (All-Out) - மட்டைபிடிக்கும் அணியின் பத்து வீரர்களும் ஆட்டமிழந்து வெளியேறும்போது அந்த அணியின் ஆட்டப்பகுதி முடிவுக்கு வரும்

அறிவித்தல் (Declare)- மட்டைபிடிக்கும் அணியின் தலைவர் தங்கள் அணியின் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தால் அதன் ஆட்டப் பகுதி முடிவுக்கு வரும்- பொதுவாக அவர் தங்கள் அணி இந்த ஆட்டப் பகுதியில் எடுத்துள்ள ஓட்டங்கள் போதுமானது என்று எண்ணினால் இவ்வாறு அறிவிப்பார்.

இலக்கை எட்டுதல் (Chased the Target)- நான்காவது ஆட்டப்பகுதியில் மட்டைபிடிக்கும் அணி தன் இலக்கை எட்டும் போது வெற்றி பெறும்.

ஆட்ட நேரம் முடிதல் (Time-Up)- ஆட்டப்பகுதி முடிவடையும் முன்பே ஆட்ட நேரம் முடிந்துவிட்டால் ஆட்டம் வெற்றி/தோல்வி இன்றி நிறைவடையும்

ஒருவேளை ஆ அணியின் முதல் ஆட்டப்பகுதியின் முடிவில் அதன் மொத்த ஓட்டங்கள் அ அணியின் ஓட்டங்களை விட 200 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்ட எண்ணிக்கையால் குறைவாக இருந்தால் அதன் இரண்டாவது ஆட்டப் பகுதியையும் தொடருமாறு அ அணியின் தலைவர் கட்டளையிடலாம். பின்தொடர்தல் (follow-on) என்று அழைக்கப்படுகிறது. 4 நாள் தேர்வுப்போட்டிகளில் 150 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்ட எண்ணிக்கையால் குறைவாக இருந்தாலே பின்தொடருமாறு பணிக்கப்படலாம்.


ஒரு தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஏற்படும் ஏழு விதமான முடிவுகள் (Results):


இலக்கை எட்டாமல் வீழ்தல்- நான்காவதாக ஆடும் அணி இலக்கை எட்டும் முன்பே தனது 10 வீரர்களையும் இழந்து விட்டால் அதன் எதிரணி ஓட்டங்களால் வெற்றி பெறும்.

இலக்கை எட்டி வெல்தல்- நான்காவதாக ஆடும் அணி எதிரணியின் இலக்கை எட்டி இழப்புகளால் வெற்றி பெறும்.

இருமுறை ஆடியும் பின்தங்கிய நிலையில் அனைத்தையும் இழத்தல்- தனது 2-வது ஆட்டப்பகுதியில் ஒரு அணி எடுத்த ஓட்டங்களானது அதன் எதிரணியால் முதல் ஆட்டப்பகுதியில் எடுக்கப்பட்ட ஓட்டங்களை விட பின்தங்கி இருக்கும் நிலையில் அனைத்து வீரர்களையும் இழந்துவிட்டால் எதிரணி தனது 2-வது ஆட்டப்பகுதியை விளையாடாமலேயே வெற்றி பெறும். இது ஆட்டப்பகுதி மற்றும் ஓட்டங்களால் வெற்றி என்று அழைக்கப்படுகிறது (எ-டு: "ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 54 ஓட்டங்களால் ஆ அணி வெற்றி")

முடிவு எட்டப்படும் முன்பே ஆட்ட நேரம் முடிதல்- பொதுவாக மழை குறுக்கிடும்போதும் சில நேரங்களில் மிகக் கடினமான வெற்றி இலக்கை எட்ட முடியாத நிலையில் உள்ள அணி தோல்வியைத் தவிர்க்க இழப்பைக் காக்கும் முனைப்பில் விளையாடும்போதும் இவ்வாறு நிகழ்கிறது. இதனால் ஆட்டம் வெற்றி/தோல்வி இன்றி (Draw) நிறைவடையும்.

சமனில் முடிதல்- இரு அணிகளின் ஓட்டங்களும் சமமாக இருக்கும்போது போட்டி சமனில் (Tie) நிறைவடையும்

ஆட்டம் கைவிடப்படுதல்- ஆட்ட மைதானம் விளையாட தகுதியற்றது என நடுவர் அறிவித்தால் போட்டி கைவிடப்படும்- இதனால் ஆட்டம் வெற்றி/தோல்வி இன்றி நிறைவடையும்

விட்டுக்கொடுத்தல் (Forefeiture)- ஒருவேளை நான்காவது ஆட்டப்பகுதியில் பந்துவீச வேண்டிய அணி போட்டியில் இருந்து விலகிக் கொண்டால் அதன் எதிரணி வெற்றி பெற்றதாக நடுவர் அறிவிப்பார்

உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை

இதுவரை தேர்வுத் துடுப்பாட்டத்தில் வாகைப் போட்டி (Championship) எதுவும் நடந்ததில்லை. தற்போது 2019 முதல் 2021 வரை முதலாவது ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. இதில் மொத்தம் 9 அணிகள் பங்குபெறுகின்றன. ஒவ்வொரு போட்டியிலும் முடிவுகளைப் பொறுத்து புள்ளிகள் வழங்கப்படும். இறுதியாக புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் லண்டன் நகரின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் மோதும்.

2012ஆம் ஆண்டு தேர்வு துடுப்பாட்டத்தில் பகல்-இரவு போட்டிகள் நடத்த ஐசிசி வழிவகுத்தது.


சான்றுகள்


No comments:

Post a Comment