Wednesday, 3 March 2021

CHAPPAL STORY

 




செருப்பு (சிறுகதை) - 

திக்குவல்லை கமால்



இந்தப் பதினொரு வருடகாலமாக அவனுடைய கால்களுக்கும் நிலமகளுக்கும் இடையில் நிலவிவந்த தொடர்பு தற்பொழுது ஒருமணி நேரத்துக்கு முன்பிருந்து அறுந்துவிட்டது.

கழுத்தை வளைத்து, கீழே கால்களை ஒருமுறை பார்த்துக்கொண்டான். அழகான செருப்புக்கள்.. பளீரென்று வெள்ளை நிற அடித்தட்டு... அதிலே கறுப்புநிறப் பட்டிகள்...!

மாறுதலான சுவாத்தியம், சூழ்நிலைகளைச் சமாளிக்கத்தக்க புதுரக ஆடைகளை அணிந்த வண்ணம் விண்வெளி வீரர்கள் விண்வெளியிலே மிதப்பதுபோல கால்களே நிலத்தில் படாத வண்ணம் அந்த றப்பர் செருப்பின் மென்மைச் சுகானுபவத்தில் நடந்து கொண்டிருந்தான் அவன்.

பள்ளிவாசலை நெருங்கியதும் அவனது கண்கள் அகலித்து விரிந்து நின்றன. இன்று அங்கு வருடாந்தக் கந்தூரி அல்லவா?

அந்தப் பள்ளிவாசல் மின்விளக்கலங்காரத்தால் ஒளிப் பிரவாகம் பெற்றுக் காட்சியளித்ததுபோல அவனது உள்ளமும் வாழ்க்கையிலேயே முதன்முறையாகச் செருப்பெனும் விளக்கு ஏற்றப்பட்டதால் பிரகாசித்துக் கொண்டிருந்தது.


அநேகமாகக் கல்யாண விழாக்களுக்குச் செல்வதற்காகத்தான் பலரும் புத்தாடை, புதுக் காலணிகள் அணிந்துகொள்வது வழக்கம். அவனுக்கோ, அதிலும் ஒருபடி மேலாக இறைவனின் இல்லத்துக்கு முதன்முதல் புதுச் செருப்பு அணிந்துகொண்டுவர வாய்த்து விட்டதேயென்ற அலாதியானதொரு பெருமிதம்!

பள்ளிவாசல் முன்விராந்தையை அடைந்ததும் அங்கே கண்கொள்ளாக் காட்சி... எத்தனை ரகமான, எத்தனை விதமான, எத்தனை நிறமான செருப்பு, சப்பாத்துகள்! அவையெல்லாவற்றிலும் தனது செருப்புத்தான் ரகத்திலும் விதத்திலும், நிறத்திலும் நிறைவானது என்ற எண்ணம் அவனுக்கு!

உள்ளேயிருந்து ஓதல் ஒலிகளும், 'கந்தூரி மணமும்' பரவிக்கொண்டிருந்தது. தானும் உள்ளேபோய் அமர்ந்துகொள்ள வேண்டுமே என்பதால் செருப்பை எங்கே வைத்துவிட்டுப் போவதென்பதே அவனுக்கெழுந்த பிரச்சினை!

இங்கேயே வைத்துவிட்டுச் சென்றால் இத்தனைக்குள்ளும் மாறிப்போய்விடாதோ? அல்லது உள்ளேயுள்ள அத்தனை பேரும் ஒரேயடியாக வரும்போது எங்காவது வீசுப்பட்டுப் போய்விடாதோ?'

அவனுக்குத் தனது செருப்புகளைப் பாதுகாப்பாக வைக்கப் பிரத்தியேகமானதொரு இடம் தேவைப்பட்டது. அதற்காக அவனது கண்கள் நாற்புறமும் சுழன்றுகொண்டிருந்தன. முன் விறாந்தைக்கும் ஹவுலு (நீர்த்தொட்டி) க்கும் இடைச்சுவர்.. அந்தச் சுவரின் கீழ்பகுதியில் வரிசையாகச் சதுர அமைப்பில் வெட்டப்பட்டுள்ள இடைவெளிகள்... அந்த இடைவெளிகளில் ஆகக்கடைசி இடைவெளி அவன் கண்களில் நல்லதொரு பாதுகாப்பான இடமாகத் தெரிந்தது.


அடுத்த கணம் இரண்டு செருப்புகளையும் காலிலிருந்து கழற்றியெடுத்து அடிப்பக்கங்களை ஒன்றின்மேலொன்றாக இணைத்து அந்த இடைவெளிக்குள் வைத்துவிட்டு, இரண்டு மூன்றடி பின்னேவந்து இலேசாக அப்பக்கமாகப் பார்த்தால் கொஞ்சம்கூட அவனுக்கே தெரியவில்லை; பிறகு வேறு யருக்குத்தான் தெரியப்போகிறது!

அந்தத் திருப்தியில் கால்களைக் கழுவி, தலையில் 'லேஞ்சி' (கைக்குட்டை) யைக் கட்டிக்கொண்டு பள்ளிவாசலுக்குள்ளே போய் ஆளோடு ஆளாக அமர்ந்துகொண்டான்.

ஓதல்கள், பிரசங்கம் எல்லாம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தன. அதில் ஈடுபாடு கொண்டிருந்தனர் அநேகர். சிலர் ஆங்காங்கே மெதுமெதுவாகக் கதையளந்து 'சாப்பாட்டை' எதிர்பார்த்தவண்ணமிருந்தனர்.

அவனுடைய நினைவும் இன்னொரு பக்கமாகச் சுரந்தோடியது.

அவனுக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. சென்ற நோன்புப் பெருநாளன்று வாப்பா வாங்கி வந்திருந்த கட்டைக் களிசானையும் சேட்டையும் அணிந்துகொண்டு மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்தபடி மற்றச் சிறார்களை எதிர்பார்த்து வெளியே வந்தபோது, வந்த மகிழ்ச்சி சில நொடிகளில் ஓடிமறைந்து போய்விட்டது.

காரணம்.. அவனது கால்கள் மாத்திரம்தான் வெறுமையாக இருந்தன. அந்த வெறுமை அவன் அறிந்தது முதல் இருந்து வந்தபோதிலும் அன்று மாத்திரம் அவனுக்கு அழுகை வந்ததேனென்றால்.. இதுவரை அவனைப்போன்றே வெறுமையாக அலைந்து கொண்டிருந்த அவனுடைய நண்பர்கள் பலர் அன்றைக்கென்றே செருப்புகள் போட்டுக்கொண்டு வந்திருந்ததுதான்.

'எனா மகன் நல்ல நாளேல கண் கலங்கிக்கொண்டு நிக்கிய?' வாப்பாதான் இப்படி அவனிடம் கேட்டார்.

இந்த வினயமான வினவல் அவனுக்கு இன்னும் கொஞ்சக் ஆத்திரத்தை வரவழைத்து விட்டது.

'வாப்பா.. எனக்கு.. செருப்புவாங்கித் தாங்கொ'

'அழவான மகன்.. இந்தப் பைனம் வாங்கித்தர வசதியில்லாமல் பெய்த்து.. இதுபாருங்க எனக்கு ஒரு சாரம் மட்டுந்தான் வாங்கின.. உம்மாக்கு ஒண்டுமே வாங்கல்ல'

மற்றவர்களைப் போல் தானும் இருக்கவேண்டுமென்று நினைக்கும் அந்தப் பருவத்தில் இந்தச் சமாதானங்களெல்லாம் எடுபடுமா?

'வாப்பா..! அப்ப எனக்கு எப்பவன் வாங்கித் தார'  இந்தக் கேள்வியில் ஒருவித கம்பீரம்.

'உம்மயா பள்ளிக் கந்திரிக்கி வாங்கித்தாரன் புள்ள' வாப்பாவின் வாக்குறுதி இது.

அந்த உறுதி அவரின் வாயிலிருந்து வெளிவந்தது முதல் 'பள்ளிக் கந்திரி, பள்ளிக் கந்திரி' என்ற நினைவில், அது சீக்கிரமே வந்துவிடவேண்டும் என்ற பிரார்த்தனையிலும்தான் அவனது நாளும் நொடியும் நகர்ந்துகொண்டிருந்தது.

நேற்று...

ஸாரத்தை உயர்த்திக் கட்டியபடி, மூட்டை சுமந்ததால் மேலெல்ல்லாம் படிந்திருந்த தூசி துணிக்கைகளுடன் ஐக்கியமாகிக் கசிந்துகொண்டிருந்த வியர்வையைத் துடைத்தபடி வந்து கொண்டிருந்த வாப்பாவை ஓடிப்போய்

என்றுமில்லாதபடி கட்டியணைத்துக் கொண்டான் அவன்.

'வாப்பா... வாப்பா.. நாளக்கி பள்ளிக் கந்திரி.. செருப்பு வாங்கித் தாங்கொ'

அவருக்கு 'திக்'கென்றது. அன்று கொடுத்த வாக்குறுதி நினைவில் பளிச்சிட, இனி என்ன செய்வதென்ற சிந்தனை...!

அவரது கையில் அன்றைய தேவைக்கே பற்றாக் குறையாகத்தான் காசிருக்கும்போது.. அந்த நிலைமைய உணர்ந்து கொள்ளூம் அளவுக்குச் சிந்தனை வளராத மகனை எப்படிச் சமாளிப்பதென்றே தெரியவில்லை.

'மகன்.. நான் வாங்கிகொண்டு வரப்பாத்த.. பொறகு நாளைக்கி ஒங்களேம் கூட்டிக்கொண்டுபோனா.. ஒங்களுக்கே புரியமானத்தால பாத்து வாங்கித்தரேலுமெண்டுதான் வந்திட்டன்' அதைத் தவிர வேறு பொருத்தமான பொய்கள் அவருக்குப் படவில்லைப்போலும்!

அவனுக்கோ இன்னும் ஒருபடி மகிழ்ச்சி! அவனுக்கு ஏற்றதை அவனாகவே போய் வாங்குவதென்றால் மகிழ்ச்சி இருக்காதா?

மஜீதின் செருப்பைப்போல் வாங்கிறதா? மஹ்ரூபின் செருப்பைப்போல் வாங்கிறதா? வெள்ளை நிறத்தில் வாங்கிறதா? பச்சை நிறத்தில் வாங்கிறதா? இரவு கண்ணிமைகள் ஒன்றையொன்று தழுவிக் கொள்ளும் இறுதிப் பொழுதுவரையும் இதே பிரச்னைதான் அவனுக்கு!

இன்று...

வேலைமுடிந்துவந்து வாப்பா அவனையும் அழைத்துக்கொண்டு சென்றபோது அவனது நிலையை இனி எப்படிச் சொல்வது...

கடைக்குள் பிரவேசித்தால் மடித்து வைத்திருந்த கதிரையொன்றை விரித்து.. அதில் அவனை இருக்கச்செய்து, ஒவ்வொரு வகையான செருப்பை விற்பனையாளர் எடுத்துக்காட்ட எல்லாமே வாங்கிவிடமென்ற எண்ணமும் எதைத்தான் தெரிவுசெய்வதென்ற சிக்கலுமே அவனை ஆக்கிரமித்தன.

இறுதியில் எப்படியோ ஒன்றைத் தெரிவுசெய்துகொண்டான். அந்த மனிதன் ஐந்துரூபா அம்பது சதத்தை எங்கிருந்துதான் கடன்வாங்கி வந்தாரோ தெரியாது; அவனுடைய நீண்டகால ஆவல் நிறைவேறிவிட்டது.

கடையிலிருந்து கால்களில் மாட்டிக்கொண்டுவரத் தயாரானவனை 'இல்ல மகன்.. ஊட்டுக்குப் பெய்த்து காலக் கழுவிப்போட்டுக்கோங்கோ' என்று ஒருவாறு அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்.

'ஆ... சோறுவெக்கப்போற.. சரியா இருங்கோ' பரிசாரகர் ஒருவரின் இக்குரல் அவனது சிந்தனையைத் தடுத்தது.

ஆறாறு பேராக வட்டமாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபோதிலும் அவனுக்கோ தனது செருப்பைப் பற்றிய நினைவு! அது வைத்த இடத்தில் இருக்கிறதோ இல்லையோ என்று.

சாப்பிட்டு முடித்தாகி எல்லோரும் முட்டியடித்துக்கொண்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அவனும் எலிக்குஞ்சுபோல் வளைந்து நெளிந்து வெளியே வந்துவிட்டான்.

அங்கே.. செருப்புக்களெல்லாம் வீசப்பட்டு அங்குமிங்குமாக இருந்தன. பலர் செருப்புகளைத் தேடுவதிலும், இன்னும் சிலற் தங்கள் செருப்புகளைக் காணவில்லையே என்றும் தவித்துக்கொண்டிருந்தார்கள்.

'ஐயோ. ஏண்ட செருப்பு' பிரார்த்தனைகள் சகிதம், அந்த நடுச்சுவரின் மூலைப்பக்க சதுர இடைவெளியை அண்மி எட்டிப்பார்த்தபோது.. செருப்பு இருந்தது!

எடுத்து மாட்டிக்கொண்டு பின்புற 'கேற்'றால் வெளிக்கிடச் செல்கையில், தண்ணீர் நிறைந்திருந்த 'ஹவுலை'க் கண்டதும், குனிந்து கைகளால் தண்ணீர் அள்ளிக் கால்களைக் கழுவிக்கொண்டு வெளியேறினான்.

பலமுறை அவன், மற்றவர்கள் ஈரக் காலுடன் றப்பர் செருப்பணிந்துகொண்டு செல்கையில் எழும்பு 'ச்சிலிக்... ச்சிலிக்' என்ற ஒலையைக் கேட்டு ரசித்துள்ளான். இன்று - அவனுடைய கால்களும், செருப்பும் சேர்ந்தெழும்பும் அதே ஒலியைக் கேட்டு ரசித்துக்கொண்டே நடந்தான்.

பள்ளிவாசலைச் சுற்றிவர ஆண்களும் பெண்களூமாக நிறைந்திருந்ததோடு ஆங்காங்கே பல நிகழ்ச்சிகளும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. பாவாக்களின் பாட்டு, சீனடி சிலம்படி, இத்தியாதி!

இவற்றையெல்லாம் கவனித்தபடி அவன் சுற்றிக்கொண்டிருந்தபோதிலும் இடைக்கிடையே தனது செருப்பைப் பற்றிய எண்ணங்கள்.. ஒவ்வொரு நாளும் கழுகவேண்டும். கிழமைக்கொருமுறையாவது சவர்க்காரம் போட்டுக் கழுக வேண்டும் என்று!

'சாப்பாடு திண்டியாடா?' முதுகைத் தொட்டுக் கேட்டான் நண்பனொருவன்.

'ஓ.. இப்பதான் திண்ட'

'ஹ... எப்படா செருப்பு வாங்கின..' வாயைப் பிளந்து அதிசயமாகக் கேட்டான்.

'இண்டக்கித் தாண்டா.. வாங்கின'

'கொஞ்சம் நில்லுடா தூக்கம் வருது. மொகத்தக் கொஞ்சக் கழுகிக்கொண்டு வாரன்' என்றபடி பள்ளி 'ஹவுலை' நோக்கி நடந்தான் அவன்.

'டேய்..! நில்லுடா' கோபாவேசத்துடன் எழுந்தது அக்குரல்! திரும்பிப் பார்த்தான் வாசற்படியில் மத்திச்சம் (பரிபாலகர்) நின்று கொண்டிருந்தார். அவரது கையைப் பிடித்தபைட் அவரது இளைய மகன்!

'வாப்பா.. வாப்பா.. அதுதான் ஏண்ட செருப்பு' அந்தச் சிறுவன் சொன்னான்.

அவன் அதிர்ந்துபோய் நின்றான்.

'இல்லை... இல்லை.. இது ஏண்ட' அவன் நடுநடுங்கியபடி சொன்னான்.

'பொய் வாப்பா.. நான் இவடத்திலதான் வெச்சிட்டுப் பள்ளிக்குள்ள போன.. அத இவன் எடுத்தீக்கி' எவ்வித சலனமுமின்றி அது தன்னுடையதுதான் என்று மெய்ப்பித்தான் அச்சிறுவன்.

'அடேய்.. கழட்டிக் குடுடா புள்ளேட செருப்ப..' இடியெனக் குமுறிய அவரது முகம் கருமேகம்போல் காட்சி தந்தது.

'சத்தியமா இது ஏண்ட' அரைகுறையாக வார்த்தைகள் வெளிவந்ததோடு அவனது கண்களும் பனித்தன.

'பொத்துடா வாய.. நீ எப்பசரி செருப்புப் போட்டவனாடா..?'

'இந்தா பாருங்க.. நான் பிளேட்டால 'எம்' வெட்டீக்கி' என்று செருப்பைத் தூக்கி, மாறிப்போனாலும் தேடிக்கொள்ளத்தக்கதாக அவன் பொறித்த குறியைக் காட்டினான்.

'அடே கள்ளனுக்கு கள்ளப் புத்தி தெரியாமலீக்குமா.. எடுத்துக்கொண்டுபோய் வெட்டிக்கொண்டு வந்திருப்பாய்.. கணக்குக்கு மிச்சம் பேசாத... செருப்ப கழட்டிக் கன்னங்கன்னமெண்டு அடிப்பன்'

இனியும் கதைத்தால் அடிதான் இடைக்குமென்று அவனுக்குப் புரிந்துவிட்டது. செருப்புகளைக் கழற்றிக் கொடுத்துவிட்டு வந்த நோக்கத்தையும் மறந்து மெதுவாக நடந்தான்.

இனி அவன் எப்படித்தான் வீட்டுக்குப் போவான்..? அங்கு செருப்பைப் பற்றிக் கேட்டால் என்னபதில் சொல்வான்?

நிலமகள், மூன்று மணிநேர இடைவெளிக்குப்பின்பு மீண்டும் அவனுடைய கால்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டாள்.

No comments:

Post a Comment