Monday, 23 November 2020

BSNL- MTNL வீழ்த்தப்பட்டது எப்படி ?

 

BSNL- MTNL வீழ்த்தப்பட்டது எப்படி ?



பி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி ?

"தொழில்துறை போட்டியில், தனியார் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் அதே நேரத்தில், தன்னுடைய சொந்த அமைப்புகள் வீழ்வதற்கும் அரசாங்கம் துணைபோகிறது"



ஒரு ஆண்டிற்கு முன்னதாக அமிஷ் குப்தாவுடைய எம்.டி.எம்.எல் (Mahanagar Telephone Nigam Limited) தொலைபேசி இணைப்பு வேலை செய்யாமல் போனது. 2005-ல் இணைப்பு வாங்கிய பிறகு தொடர்ச்சியான சிக்கலாக இருந்தாலும் கைப்பேசி இருந்ததால் சமாளித்துக் கொண்டார். எனினும், மே மாதம் மீண்டும் வேலை செய்யாமல் போனவுடன் அதுக்குறித்து அந்நிறுவனத்தின் கிளையில் புகாரளிக்க முடிவு செய்தார்.


”ஒரு பத்து பதினைந்து தடவையாவது புகாரளித்தேன். ஆனால் என்னுடைய இணைப்பை சரிபார்க்க ஒருவரும் வரவில்லை” என்கிறார் 64 வயது பயண ஆலோசகரான குப்தா. பின்னர் வடாலாவிலிருக்கும்(Wadala) கிளை அலுவலகத்திற்கு நேரில் சென்றாலும், “அந்த வேலையை செய்வதற்கு ஊழியர்கள் யாரும் இல்லையென்பதால் அலைக்கழிக்கப்பட்டேன்” என்கிறார். கொரோனா பெருந்தொற்று ஊரடங்கிற்குப் பிறகு வீட்டிலிருந்து வேலை செய்ய குறைபாடான இணைப்புடன் மல்லுக்கட்டுவது முடியாதென்பதால் வேறுவழியில்லாமல் எம்.டி.எம்.எல் இணைப்பை திருப்பியளிக்க விண்ணப்பம் கொடுத்தார்.


”என்னுடைய இணைப்பை திருப்பிக்கொடுக்கும் நடவடிக்கையானது 2 மாதங்களுக்கு மேலாக நீண்டு செல்கிறது. நான் அம்பானியின் இரசிகனெல்லாம் கிடையாது, எம்.டி.எம்.எல் போன்ற அரசு நிறுவனங்களை ஆதரிப்பவன் . ஆனால் வேறு வழியில்லாமல் ஜியோ 4-ஜி இணைப்பை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன்” என்று குப்தா கூறுகிறார். ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி 2016 ல் குறைந்த விலை 4-ஜி சேவையை தொடங்கி இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறையை ஆட்டங்காணச் செய்துள்ளார்.


மும்பை, தாதரில் உள்ள ஒரு எம்.டி.என்.எல் தொழிலாளர் சங்க அலுவலகத்தில் ஜியோ பெயரை சொல்வதே தொழிற்சங்க உறுப்பினர்கள் வெறுப்படைய போதுமானதாக இருக்கிறது. “ஜியோவிற்காக தான் எம்.டி.என்.எல். மற்றும் பி.எஸ்.என்.எல். ஆகியவற்றை அரசாங்கம் சாகடிக்கிறது – அவர்கள் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்க விரும்புகிறார்கள்” என்று எம்.டி.என்.எல் முன்னாள் துணை மேலாளர் 58 வயதான சூர்யகாந்த் முத்ராஸ் கூறுகிறார்.


விருப்பில்லாத பணி ஓய்வு:


கைப்பேசியின் பயன்பாடு இந்தியாவில் அதிகரிக்க அதிகரிக்க தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. சான்றாக, மும்பை மற்றும் டெல்லியில் 2010-ல் 60 இலட்சமாக இருந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தற்போது 27 இலட்சமாக குறைந்துவிட்டது. மொத்தமாக, இந்தியா முழுவதும் 2016-ல் 2.4 கோடியாக இருந்த எண்ணிக்கை 2020 ஜூலையில் 1.9 கோடியாக குறைந்து விட்டது. அதே நேரத்தில், கைப்பேசியின் வரவு மட்டுமே தொலைபேசி இணைப்புகளை காலி செய்துவிட்டதா? இல்லை. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் சேவைகள் சரியில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.



ஹரியானா, ஃபரிதாபாத்தில் ஆசிரியராக பணியாற்றும் மஞ்சுளா கோஸ்வாமி 2009-ல் பி.எஸ்.என்.எல் சேவையை நிறுத்திக்கொண்டார். “எங்களது கருவி சரியாக வேலை செய்யவில்லை என்று புகாரளித்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. மேலும், போதுமான ஊழியர்களும் அங்கில்லை. கடைசியாக வேறு வழியில்லாமல் சேவையை நிறுத்திவிட்டோம்” என்று கூறுகிறார். இந்த சிக்கல்களையெல்லாம் எம்.டி.என்.எல் மற்றும் பி.எஸ்.என்.எல் தொழிலாளார்கள் ஏற்றுக்கொள்ளவே செய்கின்றனர். 2000-வது ஆண்டிலிருந்து தொடரும் ஊழியர்கள் பற்றாக்குறையை பகுதியளவு காரணமாக கூறுகிறார்கள்.




ஊழியர்கள் பணி ஓய்வு ஒருபுறம் இருந்தாலும் அதே எண்ணிக்கையில் புதிய ஊழியர்களை தொடர்ந்து எம்.டி.என்.எல் எடுக்கவில்லை என்று மும்பை எம்.டி.என்.எல்-ன் ஊழியரும் எம்.டி.என்.எல் கம்கார் சங் தொழிற்சங்க (MTNL Kamgar Sangh union) உறுப்பினருமான சந்தேஷ் ஷிர்கே கூறுகிறார். ஒவ்வொரு 500 இணைப்புகளுக்கும் ஒரு ஊழியர் தேவைப்படுகிறார். ஆனால் தற்போது 2000 இணைப்புகளுக்கு ஒரு ஊழியரே இருப்பதாக தேசிய தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு (Federation of National Telecom Operators union) தலைவர் தாமஸ் ஜான் கூறுகிறார்.


சென்ற ஆண்டில் மைய தகவல் தொழில்நுட்பத் துறையின் புதிய விருப்ப ஓய்வுத்திட்ட அறிவிப்புக்கு பின்னர் ஊழியர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் மறுநிர்மானத்திற்காக ஒதுக்கப்பட்ட 70,000 கோடி ரூபாயில் 30,000 கோடி ரூபாய் விருப்ப ஓய்வு திட்டத்திற்கே ஒதுக்கப்பட்டது. மொத்தமாக, 50-60 வயதான 92,300 ஊழியர்கள் அதே நாளில் பணி ஓய்வை அறிவித்தார்கள். விளைவு, ஊழியர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்தது. இத்திட்டமானது, ஏற்கனவே பத்தாண்டுகளாக நட்டத்தை சந்தித்து வந்த இரு நிறுவனங்களின் செலவை குறைப்பதற்காக கொண்டு வரப்பட்டது. சான்றாக, 2019-ல் பி.எஸ்.என்.எல் 13,804 கோடி ரூபாயும், எம்.டி.என்.எல் 3,693 கோடி ரூபாயும் நட்டத்தை காட்டின.


ஆயினும் ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களிடையே இது ஏராளமான போராட்டங்களை தோற்றுவித்தது. “நான் விருப்ப ஓய்வை எடுத்துக்கொண்டாலும் பெரும்பாலோனோருக்கு இது விருப்ப ஓய்வாக இல்லை. அந்த நிலைக்கு எங்களை நிறுவனம் தள்ளியது” என்று 30 ஆண்டுகள் பணிபுரிந்த சிவ சேனாவின் தொழிற்சங்க உறுப்பினரான முட்ராஸ் கூறுகிறார்.


அவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளாகவே சம்பளம் சரியான நேரத்தில் வரவில்லை. ஜனவரி 31-க்குள் விருப்ப ஓய்வு எண்ணிக்கை எட்டப்படவில்லையெனில், பணி ஓய்வு வயதை 60-லிருந்து 58-ஆக குறைக்கப் போவதாக மும்பை எம்.டி.என்.எல் கூறியது. குடும்பம் முத்ராஸை மட்டுமே நம்பியிருந்ததால் தான் அச்சமடைந்ததாக அவர் குற்றஞ்சாட்டினார்.


கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல்:


“விருப்ப ஓய்வு திட்டம் நடைமுறைப்படுத்தியதிலிருந்தும், கொரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு அமலுக்கு வந்ததிலிருந்தும் தொலைபேசி இணைப்புகளை வாடிக்கையாளர்கள் திரும்பக் கொடுப்பது அதிகரித்து வருகிறது” என்று ஷிர்கே கூறுகிறார். கடந்த 9 மாதங்களாக வாடிக்கையாளர்களின் புகார் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததை தான் அவதானித்ததாகவும், வாடிக்கையாளர்களிடம் நல்ல நட்புறவு இருந்ததால் பணி ஓய்வு பெற்ற பின்னரும் கூட குப்தா போன்றவர்கள் ஏதேனும் சிக்கல் என்றால் தொடர்ந்து அவருக்கு நேரடியாக கைப்பேசியில் அழைத்து புகார் தெரிவிப்பதாகவும் அவர் கூறுகிறார்.


ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து விட்டதால், ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்து பணிப்புரியும் வாடிக்கையாளார்களுக்கு முழுமையான சேவைகளை வழங்க முடியாமல் போகிறது என்று தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. தொழிற்சங்க தலைவர்களது குற்றச்சாட்டுகளுக்கும், விருப்ப ஓய்வு குறித்தும் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியிடம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.


பழமையான தொழில்நுட்பம் :


ஊழியர்களின் பற்றாக்குறை மட்டுமே அரசு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் திணறுவதற்கு ஒரே காரணம் அல்ல என்று அவற்றின் ஊழியர்கள் கூறுகின்றனர். “பழைய தரைவழி செப்பு கம்பிகளை ஃபைபர் கம்பிகளாக மேம்படுத்த வேண்டும் என்பது நீண்ட நாட்களாகவே எங்களுக்கு தெரியும். ஆனால் எங்களுக்கு முறையான நிதியாதாரம் வழங்கப்படவில்லை” என்று ஷிர்கே கூறுகிறார்.


இன்னமும் 3ஜி தொழில்நுட்பத்தையே வைத்திருப்பது தான் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களின் மிகப்பெரிய சிக்கல். வாடிக்கையாளார்கள் 2016-ஆம் ஆண்டிலிருந்தே 4ஜி சேவைக்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள். “தனியார் துறையை சேர்ந்தப் போட்டியாளர்கள் அனைவரும் 4ஜி சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் நிலையில் எங்களுக்கு 4ஜி உரிமத்தை அரசாங்கம் அனுமதிக்கவில்லை. எனவே, நாங்கள் இயல்பாகவே வாடிக்கையாளர்களை இழக்கிறோம் – சிறந்த மற்றும் வேகமான சேவைகளை அவர்கள் நாடுவதை நாங்கள் குறை கூற முடியாது” என்று ஜான் கூறிகிறார்.


மேலும் “பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களுக்கு புத்துயிர் கொடுப்பதற்காக ஒதுக்கப்பட்ட 70,000 கோடி ரூபாயில் 24,000 கோடி ரூபாய் 4ஜி அலைக்கற்றை பெறுவதற்காக இந்நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டது. சீன நிறுவனங்களான ஹுவாய் மற்றும் ZTE-யிடம் தேவையான கருவிகளை பெருவதற்கு அனுமதி பெறப்பட்டது. ஆனால், 2020 ஜூன் மாதம் சீன இராணுவத்துடனான சண்டையில் 20 இந்திய போர் வீரர்கள் பலியானதையடுத்து பொதுத்துறை நிறுவனங்கள் சீன நிறுவனங்களுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தகளை ஜூலை மாதம் இந்திய அரசாங்கம் நிறுத்திவிட்டது. ஆனால் தனியார் நிறுவனங்கள் அத்தகைய ஒப்பந்தங்களிலிருந்து தடுக்கப்படவில்லை. இது எப்படி நியாயமாகும்?” என்று ஜான் கேட்கிறார்.


4ஜி-க்கான புதிய ஏலம் முடிவடையும் நேரத்தில், தனியார் நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்பத்திற்கு சென்று விடுவார்கள் என்று தொழிற்சங்கங்கள் அஞ்சுகின்றன. காலாவதியான தொழில்நுட்பங்கள் மற்றும் குறைவான ஊழியர்கள் வழங்கும் சேவையானது வாடிக்கையாளர் எண்ணைக்கையின் வீழ்ச்சியையும் பெரிய வருவாய் இழப்புகளையும் ஏற்படுத்தும் என்று தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. “தொழில்துறை போட்டியில், தனியார் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் அதே நேரத்தில், தன்னுடைய சொந்த அமைப்புகள் வீழ்வதற்கும் அரசாங்கம் துணைபோகிறது” என்று பி.எஸ்.என்.எல் தொழிலாளர்கள் தேசிய ஒன்றியத்தின் (National Union of BSNL Workers) உதவி பொதுச் செயலாளர் தினேஷ் மிஸ்திரி கூறுகினார்.


இதுக்குறித்து, தகவல் தொழில்நுட்பத்துறையின் மூத்த அதிகாரிகளிடம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை பதிலில்லை. “அரசாங்கம் எடுத்திருக்கும் ஒவ்வொரு முடிவும் எம்.டி.என்.எல்-பி.எஸ்.என்.எல் நலன்களுக்கு எதிரானது. அவர்கள் பி.எஸ்.என்.எல் நிறுவனம் மூடப்படுவதை விரும்புகிறார்கள்” என்று எம்.டி.என்.எல் கம்கர் சங்கத்தின் (MTNL Kamgar Sangh) தலைவரும், சிவசேனாவின் நாடாளுமன்ற உறுப்பினருமான அரவிந்த் சாவந்த் கூறினார்.


தமிழாக்கம் : ஆறுமுகம்

செய்தி ஆதாரம் : Scroll

No comments:

Post a Comment