Saturday, 21 November 2020

துளசி கல்யாணம்.

 

துளசி கல்யாணம்.



துளசி கல்யாணம்.
துளசி தேவிக்கும் ஸ்ரீகிருஷ்ணனுக்கும் திருமணம் இன்று.
விஷ்ணு பூஜை துளசி இல்லாவிட்டால் வீண்.
எந்த நைவேத்யமும் துளசி தளம், ஜலம் ப்ரோக்ஷணம் இன்றி பூர்த்தியாகாது. துளசி சர்வ பாபங்கள், ஏன் வியாதிகளையும் போக்கக்கூடிய அரு மருந்து. துளசியின் வேரிலிருந்து கிளை, இலை,அனைத்திலும் எல்லா தேவதைகளும் இருக்கிறார்கள்.
தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது துளசி லக்ஷ்மியின் தங்கையாக தோன்றுகிறாள். விஷ்ணுவையே அவளும் மணக்க விரும்புகிறாள். லக்ஷ்மி அவளை துளசி செடியாக மாற்றுகிறாள். விஷ்ணு அவள் விருப்பத்தை நிறைவேற்ற நான் சாலக்ராமமாக இருக்கும்போதெல்லாம் துளசி என்னோடு இருப்பாள் என்கிறார்.
விஷ்ணு ஆலயங்களில், மாத்வர்கள் வீட்டில் எல்லாம் துளசி பிரதானமானவள்.
துளசி மாடம் இல்லாத ஹிந்து வீடுகள் இல்லை. அவளை வணங்காமல் பூஜை இல்லை, விஷ்ணுவுக்கு நைவேத்யம் இல்லை. காலையிலும் மாலையிலும் துளசிக்கும் தான் தீபம் நமஸ்காரம். ப்ரார்த்தனை .
லக்ஷ்மி விஷ்ணு மார்பில், துளசி அவர் கழுத்தில், உடலில், காலடியில் எங்குமே.
பத்ம புராணத்தில், பாதாள காண்டத்தில்
சிவபெருமான்: ”நாரதா, துளசியின் பெருமையைப் பற்றி சொல்கிறேன் கேள்’
எவன் ஒருவன் துளசி தேவியைப் பற்றி அறிகிறானோ, அவனது சகல ஜன்ம பாபங்களும் விடுபட்டு, ஸ்ரீ ராதா கிருஷ்ணனை அடைகிறான்.
எவனது உடல் துளசி கட்டையோடு தகனம் செய்யப்படுகிறதோ அவனுக்கு உடலோடு அவன் பாபங்களும் எரிந்துவிடும்.
எவன் அந்திம காலத்தில் விஷ்ணுவின் நாமத்தை சொல்கிறானோ, துளசி கட்டையை தொடுகிறானோ , அவன் மோக்ஷம் எய்துவான். கிருஷ்ணனே அவனை எதிர் கொண்டு அவன் கையைப் பிடித்து தன்னோடு அழைத்து செல்வார் .
எவன் துளசி கட்டையை, சமித்துகளோடு சேர்த்து வைத்துக் கொள்கிறானோ, அவன் ஹோமத்தில் இடும் ஒவ்வொரு தானியத்திற்கும் ஓர் அக்னிஹோத்ர பலன் அடைவான்.
துளசி கட்டையை உபயோகித்து கிருஷ்ணனுக்கு செய்யும் தூப ஆராதனை, 100 அக்னி ஹோத்ர பலனையும், 100 கோ தான பலனும் கொடுக்கும்.
கிருஷ்ணனுக்கு நைவேத்யம் பண்ணும் உணவு, துளசி கட்டை கலந்த அக்னியில் தயாரிக்கப் பட்டிருந்தால் மேருமலை அளவு தானியங்களை தானம் செய்த பலன் தரும்.
ஒரு சிறு துளசி குச்சியால் ஏற்றிய தீபம், பல லக்ஷம் தீபங்களை கிருஷ்ணனுக்கு ஏற்றிய பலன் தரும். இப்படி விளக்கேற்றியவனைப் போல கிருஷ்ணனுக்கு பிடித்தவன் வேறு யாருமில்லை.
துளசிக்கட்டையை அரைத்து சந்தனம் போல் கிருஷ்ணனுக்கு சாற்றியவன் ஈடில்லாத கிருஷ்ண பக்தன்.
துளசிச்செடி அடியில் உள்ள மண்ணை கொஞ்சம் குழைத்து தனது உடலில் சாற்றிக்கொண்டவன் 100 கிருஷ்ண பூஜைகளை அன்று செய்த பலன் பெறுவான்.
துளசியை ஆராதித்து கிருஷ்ணனுக்கு அர்ச்சிப்பவன், எல்லா புஷ்பங்களை அர்ச்சிப்பதன் பலன் பெறுவான். இறந்தபிறகு கிருஷ்ணனையே அடைகிறான்.
இன்னொன்று சொல்லட்டுமா. எவன் வழியிலே எங்காவது ஒரு துளசி தோட்டம், நந்தவனத்தை கடந்து வணங்கி போகிறானோ, அவன் சர்வ பாப, தோஷங்கள் நீங்கப் பெறுவான்.
துளசி செடி எந்த வீட்டில் இருக்கிறதோ, அந்த வீட்டில் வசிப்பவர்களில் கிருஷ்ணனும் ஒருவன்.
காற்றில் எங்கிருந்தாவது துளசி வாசனை வந்து அதை நுகர்வதாலும் கூட ஒருவன் பரிசுத்தமாகிறான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
(துளசி கட்டை வேண்டும் என்பதற்காக துளசி செடியின் கிளையை ஓடிக்கவோ, வெட்டவோ வேண்டாம். காய்ந்த துளசி செடியிலிருந்து அதை சேகரிக்கலாம்)
பத்மபுராணத்தில் இன்னொரு காட்சி.
முருகன்; ”அப்பா, எந்த தாவரத்திலிருந்து தெய்வ பக்தி பெருகுகிறது?
சிவன் : ”என் அன்புச் செல்வா ,ஆறுமுகா, துளசி ஒன்று தானடா அந்த தெய்வீகம் கொண்டது. கிருஷ்ணனுடன் நெருங்கியதல்லவா அது.
உலகில் வெகு காலம் முன்பு, கிருஷ்ணன் பிருந்தா தேவியை பூலோகத்தில் பித்ருக்களுக்கான திருப்திகர சேவைக்காக துளசியாக அறிமுகப் படுத்தினார். எதை அளித்தாலும் சிறிது துளசி இல்லாவிட்டால், கிருஷ்ணன் அதை ஏற்பதில்லை.
தினமும் துளசி தளத்தால் கிருஷ்ணனை அர்ச்சிப்பவன் வேறு எந்த புண்யமும் தேடாமலே கிடைத்தவன்.
கங்கை எப்படி அந்த நதியில் ஸ்நானம் செய்தவர்களை பரிசுத்தப் படுத்துகிறாளோ அதுபோல், துளசி மூன்று உலகங்களையும் பரிசுத்தமாக்குபவள். துளசி செடி அருகே அமர்ந்து தியானிப்பவன் கிருஷ்ணனை எளிதில் அடைகிறான்.
துளசி செடி வளரும் வீட்டிலோ அருகிலோ கூட தீய சக்திகள் நெருங்குவதில்லை.
தினமும் கிருஷ்ணனை அர்ச்சித்த ஒரு துண்டு துளசி தளத்தை புசிப்பவன் நோயற்றவன், தீர்க்காயுள் கொண்டவன். பாபம் விலகியவன்.
துளசி ஒரு தளத்தையாவது கிருஷ்ணனுக்கு அர்ச்சித்தவன் வைஷ்ணவன் ஆகிறான்.
துளசியை நமஸ்கரித்து கிருஷ்ணனை ஆராதிப்பவன் மீண்டும் தாய்ப்பால் குடிக்க நேரிடாதவன்.
துளசியால் கிருஷ்ணனுக்கு பூஜை செய்தவனின் முன்னோர்களும் கூட பாபத்திலிருந்து விடுதலை பெறுவார்கள். மீண்டும் ஜனன மரணம் இல்லாதவர்கள்
Muthu Kumar, Ravikumar Pachamuthu and 2 others
1 Share
Share

No comments:

Post a Comment