BABY SAROJA ,CHILD ACTRESS BORN
1931 JANUARY 28 - 2019 OCTOBER 14
.சரோஜா ராமாமிருதம் (பிறப்பு: 28 ஜனவரி 1931 - இறப்பு: 14 அக்டோபர் 2019[1]) என்பவர் பேபி சரோஜா என்னும் பெயரில் 1930களில் தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை வேடங்களில் நடித்தவர். இவர் பாலயோகினி (1937), தியாகபூமி (1939), காமதேனு (1941) ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2
வாழ்க்கைச் சுருக்கம்
பிரபல திரைப்பட இயக்குனர் கே. சுப்பிரமணியத்தின் சகோதரர் கே. விசுவநாதன், மற்றும் வத்சலா ஆகியோருக்குப் பிறந்தவர் சரோஜா. தந்தை விசுவநாதன் சென்னையில் சித்திரா டாக்கீசு என்ற பெயரில் திரையரங்கு ஒன்றை நடத்தி வந்தார். பேபி சரோஜா நடித்த மூன்று திரைப்படங்களையும் கே. சுப்பிரமணியமே தயாரித்திருந்தார். காமதேனு திரைப்படத்தில் சரோஜாவின் தந்தையும் (கே. பி. வத்சல்), தாயும் கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர்.[3] அக்காலகட்டத்தில் கலிபோர்னியா மாநிலம் சாந்தா மொனிக்காவைச் சேர்ந்த ஷெர்லி டெம்பிள் என்ற குழந்தை நட்சத்திரம், பிரமாதமான நடிப்பால் உலகப் புகழ் பெற்றிருந்தார். அதே சமயம் இந்தியாவில் சரோஜா அவர்கள் தன் நடிப்புத் திரமையைக் கொண்டு எல்லோராலும் பாராட்டப் பட்டு இந்தியாவின் ஷிர்லி டெம்பிள் என்று மக்களால் போற்றப்பட்டார். மேலும் அப்போது தமிழ்நாட்டில் பிறந்த சில பெண் குழந்தைகளுக்குப் ”சரோஜ” என்று பெயர் சூட்டினார்கள்.[4]
இறப்பு
பேபி சரோஜா மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் 2019 அக்டோபர் 14 ஆம் நாள் காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 88.[5][1]
மக்களின் பார்வையில் அதிகம் படாமல் கடந்து போன ஒரு செய்தி இந்தியாவின் முதல் குழந்தை நட்சத்திரம் சரோஜா காலமானார் என்பதாகும். அவரை பற்றிய ஒரு சின்ன பிளாஷ்பேக்.
தமிழ் சினிமாவின் முதல் குழந்தைகளுக்கான திரைப்படமாக 1937ல் வெளியானது பாலயோகினி. இப்படத்தின் மூலம் 5 வயது குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் பேபி சரோஜா. 1931ல் சென்னையில் மிகப்பெரிய தேசபக்தி மிக்க, கலைக்குடும்பத்தில் பிறந்தவர் பேபி சரோஜா. பக்திப் படங்கள், புராணப் படங்கள், சமூகப் படங்கள் வரும் காலகட்டத்தில் முதலில் வந்த குழந்தைகள் படம் இது. இதனை கே.சுப்ரமணியம் இயக்கினார். இப்படத்தில் சரோஜாவின் நடிப்பு, சொந்த குரலில் பாடிய பாடல்கள் அவரை ஒரே படத்தில் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
அன்றைய ஹாலிவுட் பட உலகின் உலகப்புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரமாக விளங்கியவர் ஷர்லி டெம்பிள். பேபி சரோஜாவை இந்தியாவின் ஷர்லி டெம்பிள் என்று அழைத்தனர். பாலயோகினி படம் வெளியான பின்பு பிறந்த பல பெண் குழந்தைகளுக்கு சரோஜா என்றே பெயர் வைத்தனர். சரோஜா மை, சரோஜா பவுடர், சரோஜா சாந்து, சரோஜா வளையல் என்று அப்போது சரோஜா பெயரில் அழகு சாதன பொருட்கள் விற்கப்பட்டன.
பாலயோகினியை தொடர்ந்து கல்கி எழுதிய தியாக பூமி படத்தை இயக்கினார் கே.சுப்ரமணியம். தேசபக்தி மிக்க இப்படம் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டது. கே.டி.மகாதேவன், எஸ்.டி.சுப்புலட்சுமி இணைந்து நடித்த இப்படத்தில் பேபி சரோஜாவையும் நடிக்க வைத்தார் .
இந்த படத்திற்கு பிறகு பேபி சரோஜாவின் புகழ் மேலும் உயர்ந்தது. துணிப்பைகள், நோட்டுப் புத்தகங்கள் என எல்லாவற்றிலும் பேபி சரோஜாவின் படம் அச்சிடப்பட்டது. பிரபல இசையமைப்பாளர் எஸ்.ராஜேஸ்வர்ராவ் இசையில், நந்தில் ஜஸ்வந்லால் இயக்கியப் படம் 1941 ல் வெளியான காமதேனு பேபி சரோஜா நடித்த மூன்றாவது படம். அவர் நடித்த கடைசி படமும் இதுதான்.
மூன்றே படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரிட்டிஷ் இந்தியாவின் புகழ்பெற்ற முதல் குழந்தை நட்சத்திரம் என்ற பெயர் பெற்றவர் பேபி சரோஜா. 88 வயது வரை சென்னையில் வசித்து வந்த அவர் கடந்த மாதம் 14ந் தேதி காலமானார்.
சாதாரண ரோஜா அல்ல, சரோஜா!
சென்ற திங்கட்கிழமை, ‘தமிழ் சினிமாவின் முதல் குழந்தை நட்சத்திரம்’ என்று பறைசாற்றப்பட்ட பேபி சரோஜா மறைந்து விட்டார்.
‘இந்தியாவின் ஷர்லி டெம்பிள்’ என்று பிரபல ஹாலிவுட் குழந்தை நட்சத்திரத்திற்கு நிகராகத் தென்னாட்டில் பேசப்பட்ட பேபி சரோஜா, தமிழ் சினிமாவின் ஆரம்ப பதிற்றாண்டுகளில் மூன்றே படங்களில் நடித்தாலும், அவருக்குக் கிடைத்த வரவேற்பால் தமிழ் சினிமா சரித்திரத்தின் பக்கங்களில் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கிறார்.
பேபி சரோஜா, திருமணமானபின் சரோஜா ராமாமிருதமாகி, தானே மூன்று பேபிகள் (ஒரு பெண், இரண்டு ஆண்கள்) பெற்றெடுத்து, 88 வயது தாண்டிய நிலையில் காலமாகியிருக்கிறார். சின்ன வயதிலேயே பெரிய புகழ் பெற்றுவிட்டாலும், பெரியவள் ஆனவுடன், சினிமா புகழ் பெறவேண்டும் என்று அவருக்குத் தோன்றவே இல்லையாம்.
இன்றைய தலைமுறையினருக்கு அவரைக் குறித்துத் தெரியாது. அதனால் தான் ஒரு பிரபல நாளிதழில் அவருடைய படத்திற்குப் பதிலாக இன்னொரு குழந்தை நடிகையின் படத்தைப் போட்டுக் ‘காமெடி’ செய்துவிட்டார்கள்!
சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன் வந்த ‘பாலயோகினி’ என்ற படத்தில் சிறுமியாக அறிமுகமான பேபி சரோஜா சக்கை போடு போட்டதால்தான், தமிழ்நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் குழந்தைகளுக்கு ‘சரோஜா, சரோஜா’ என்று பெயர் வைத்தார்கள் என்பது சினிமா சரித்திர ஐதீகம்.
இதற்கு ஏதாவது அத்தாட்சி உண்டா என்று கேட்கிறீர்களா? ‘நாற்பது வருட தமிழ் சினிமா’ என்ற தலைப்பில் ‘இல்லஸ்டிரேடெட் வீக்லி’ என்ற பிரபல ஆங்கில பத்திரிகையில் ஏப்ரல் 20, 1962ல் எழுதிய நிருபர் கோபாலகிருஷ்ணன், ‘‘தங்கள் மகள் ‘பாலயோகினி’ என்ற படத்தில் வந்த பேபி சரோஜாவைப்போல் சுட்டியாக இருக்கவேண்டும் என்று நினைக்காத தமிழ்நாட்டுப் பெற்றோர் இருந்திருக்கமாட்டார்கள்’’ என்று எழுதியது ஒரு சின்ன சான்று.
இந்த எதிர்பார்ப்புடன் பெயர் சூட்டப்பட்டுத்தானோ என்னவோ, ஒரு (ஈ.வி.) சரோஜா திரைப்படங்களில் ‘ஆடோ ஆடு’ என்று ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் ஆடினார். இன்னொரு (எம்) சரோஜா, தங்கவேலுவுடன் கைகோர்த்துக்கொண்டு, ‘மன்னார் அண்ட் கோவி’ன் வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றினார்! இவர்கள் இருவரும் முன்பே மறைந்து விட்டார்கள்...
எப்பவோ ஒரு சில படங்களில் நடித்த ஒரு ‘குழந்தை’ நடிகையின் மறைவு அவ்வளவு பெரிய சங்கதியா, செய்தியா என்று கேட்கலாம். கேப்பதில் தப்பில்லை. ஏனென்றால் பேபி சரோஜா அதையெல்லாம் தாங்குவாள். அவ்வளவு திறமை உடையவள். அவள் முகத்தில் உணர்ச்சிகள் காட்சிக்குக் காட்சி மாறும். நன்றாக நடிப்பதோடு சிறப்பாக பாடவும் செய்வாள். நல்ல திறமைசாலி. அதனால்தான் ஒரு சிறந்த இயக்குநரால் நல்ல படங்களில் நடிக்கவைக்கப்பட்ட போது அவள் வைரம் போல் மின்னினாள். இதையெல்லாம் இன்றும் கூட யார் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். ஒரு காலத்தில் புனேவில் உள்ள திரைப்பட ஆவண காப்பகத்தில் மட்டும் இருந்த, பேபி சரோஜா முக்கிய வேடத்தில் நடித்த ‘தியாக பூமி’ இப்போது யூ டியூபில் கூட இருக்கிறது. என்ன, பிரதி சில இடங்களில் மங்கலாக இருக்கும். ஆனால் இருளில்தானே நட்சத்திரம் தெரியும்!
பேபி சரோஜா தமிழ் சினிமாவுக்கு வருவதற்குக் காரணமாக இருந்தவர், அவளுடைய பெரியப்பாவான பிரபல திரை இயக்குநர் கே. சுப்பிரமணியம்.
மவுனப்படங்களுக்கு கதைகள் எழுதிக் கொண்டிருந்த கிரிமினல் லாயரான சுப்பிரமணியம், தன்னுடைய முதல் பேசும் படமான ‘பவளக்கொடி’யில் தியாகராஜ பாகவதரையும் எஸ்.டி.சுப்புலட்சுமியையும் அறிமுகப்படுத்தியவர். தான் இயக்கிய கதாநாயகியை பாகஸ்தராகக்கொண்டு அவர் அமைத்த மதராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷன் என்ற தயாரிப்பு ஸ்தாபனத்தின் வாயிலாக அவர் எடுத்த முதல் படம், ‘பாலயோகினி’ . இந்தப் படத்தில்தான் அவர் தன்னுடைய தம்பி மகளான ஏழு வயது சரோஜாவை அதே பெயரில் அறிமுகப்படுத்தினார். ‘‘லட்ச ரூபாய் செலவில் அவர் எடுத்த படத்திற்கு நூறு ரூபாய் பரிசு ஏற்படுத்தி, பொது ஜனங்களிடமிருந்து தம் கதைக்கு சரியான முடிவை தெரிந்து கொண்டார்,’’ என்ற ஒரு அரிய செய்தி, 1951ல் வந்த ஒரு ‘குண்டூசி’ இதழில் ஒளிந்துகொண்டிருக்கிறது.
பிராமண விதவைகள் அனுபவிக்கும் துன்பங்கள், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் நிலவிய வேலையில்லா திண்டாட்டம், ஆங்கிலேயரின் கைக்கூலியான ஒரு உதவி கலெக்டரின் மனிதாபிமானமற்ற, ஒழுக்கமற்ற செயல்பாடுகள், போலீசாரின் கொடுமையான போக்கு, ஜாதிய கொடுமைகள் என்று அன்றைய சமூகத்தில் நிலவிய பல தீமைகளை உணர்ச்சிகரமான சிறந்த திரைக்கதையின் வாயிலாக நன்றாக முன்வைத்தார் இயக்குநர் சுப்பிரமணியம். படத்தில் பல சிறுமிகளை அவர் அறிமுகப்படுத்தினார்.
இவர்களில் பேபி ருக்மணி (பின்னாளில் குமாரி ருக்மணியாக ‘ஸ்ரீவள்ளி’யில் அசத்தியவர், நடிகை லட்சுமியின் தாய்), பிருகதாம்பாள், பாலசரஸ்வதி (சில படங்களில் நடித்தபின், ஐம்பதுகளில் பின்னணிப் பாடகியாக தடம் பதித்தவர்), பேபி சரோஜா முதலியோர்
இடம்பெற்றார்கள்.
பிராமண விதவைகள் மொட்டை அடித்துக் கொண்டு ஒதுங்கி வாழவேண்டும் என்ற சமூகக்கட்டுப்பாடு இருந்த காலத்தில், சீதாலட்சுமி என்ற விதவையைத் அதே பாத்திரத்தில் சுப்பிரமணியம் நடிக்க வைத்தது அவர் மீது வம்பு வழக்குகளுக்கு வகை செய்தது. ஆனால் இருதயமற்ற சம்பிரதாயங்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதில் சுப்பிரமணியம் உறுதியாக இருந்தார்.
கடைசியில், சமூகத்தின் பிரச்னைகளுக்கு ‘பாலயோகினி’யில் தீர்வாக ஒலிக்கிறது, பேபி சரோஜாவின் குழந்தைத்தன்மை கலந்த குரல். உச்சக்கட்டத்தில் சிறுமி சரோஜாவுக்கு கொடுத்த ஸ்தானமும், அவள் படத்தில் அழகாகப் பாடிய, ‘கண்ணே பாப்பா, மிட்டாய் வாங்கித் தருகிறேனே நான்’ என்ற பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்றன. ‘ஜாவோ ஜாவோ ஏ மேரே சாதோ’ என்று ‘பூரண் பக்த்’ என்ற இந்தி படத்தில் கே.சி.டே பாடிய பாடலின் மெட்டிற்கு எழுதப்பட்ட தமிழ்ப் பாடலை நன்றாகக் கற்று, தன்னுடைய மழைலை மாறாத குரலில் பாடியிருந்தாள் பேபி சரோஜா.
‘பாலயோகினி’ என்ற ஒரே படத்தில் சரோஜாவின் புகழ் உச்சத்திற்குப் போனது. அவள் தோற்றமும், நடிப்பும், பாட்டும் அப்படி. சரோஜாவின் அழகையும் சாமர்த்தியத்தையும் கண்டு பிரமித்த தமிழர்கள், தாங்கள் பெற்ற ரோஜாக்களுக்கும் ‘சரோஜா’ என்று பெயர் வைக்கத் தொடங்கினார்கள். பின்னாளில், அந்த வகையில்தானோ என்னவோ கே. சுப்பிரமணியம் கன்னடத்தில் எடுத்த ‘கச்சதேவயானி’ படத்தின் வாயிலாக ஒரு ‘கன்னடத்துப் பைங்கிளி’, சரோஜாதேவி என்ற பெயரில் தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்தது!
பெரும் சங்கீத நட்சத்திரமான தியாகராஜ பாகவதரின் ‘சிந்தாமணி’யும், ‘அம்பிகாபதி’யும் ரசிகர்களைக் கொள்ளைக் கொண்ட 1937ல், சென்னை பிலிம் லீக் நடத்திய சினிமா தேர்தலில், பேபி சரோஜா ஓங்கி நின்ற ‘பாலயோகினி’யும் முன்னணியில் நின்றது!
‘பாலயோகினி’ வாயிலாக பேபி சரோஜா அடைந்த புகழுக்கு ஒரு வழக்கும் சான்றாக இருக்கிறது. காதர் இஸ்மாயில் கம்பெனி என்ற இறக்குமதி நிறுவனம் ஜப்பானிலிருந்து சந்தன சோப்பை இறக்குமதி செய்து, அதை ‘சரோஜா சாண்டல் சோப்’ என்ற பெயரில் விற்பனை செய்து வந்தது. சுதேசிப் பொருட்களை மட்டும் பயன்படுத்தவேண்டும் என்ற கொள்கை உடைய இயக்குநர் சுப்பிரமணியம், சரோஜாவின் பெயர் ஜப்பான் சோப்பை விற்கப் பயன்படுவதற்கு எதிராக வழக்குப் போட்டு அதை நிறுத்தினார்! இந்த செய்தி, என்னுடைய முன்னாள் கணிதப் பேராசிரியர் எம்.ஆர். ரங்கராஜன் எழுதிய கே.சுப்பிரமணியத்தின் வாழ்க்கை சரிதத்தில் உள்ளது.
பேபி சரோஜா முக்கிய பாத்திரத்தில் நடித்த அடுத்த படம், ‘தியாக பூமி’. கல்கியின் தொடர் நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்தப் படம், இருபது வாரங்கள் ஓடிய பிறகு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் தடை செய்யப்பட்டது.
‘தியாக பூமி’யில் பேபி சரோஜா நடித்த சாரு என்ற பாத்திரம் இடம்பெற்ற ஒரு காட்சியைக் கல்கி இப்படி விவரித்தார்:
‘‘அன்று சாயங்காலம்... சாரு சாவடிக்குப்பத்திற்குத் திரும்பிய போது, குதித்துக்கொண்டு வீட்டிற்குள் போனாள்.
‘தாத்தா, தாத்தா, இன்னிக்கு ஒரு சமாச்சாரம் நடந்தது. உனக்கு அதைச் சொல்லவே மாட்டேன்,’ என்றாள்!
‘நீ சொல்லாம போனா நானும் கேட்கவே மாட்டேன்’, என்றார் சாஸ்திரி!
‘நீ கேக்காம போனா நான் அழுவேன்’, என்றாள் சாரு!
அவருடைய மடியில் உட்கார்ந்துகொண்டு, ‘தாத்தா, இன்னிக்கு ஒரு மாமியைப் பாத்தோம். ரொம்ப ரொம்ப நல்ல மாமி’, என்று சொல்லிவிட்டு, சற்று மெதுவான குரலில், ‘அந்த மாமி என்னைக் கட்டிண்டு முத்தமிட்டா, தாத்தா’, என்றாள்’’.
கல்கி இப்படி வர்ணிக்கும் காட்சியில், குழந்தை சாருவை முத்தமிட்ட மாமி, வேறு யாரும் இல்லை. சாருவை பெற்றெடுத்த தாய்தான்! ஆனால் இந்த சங்கதி அந்த நல்ல மாமிக்கோ, அவளால் முத்தமிடப்பட்ட சாருவுகோ தெரியாது! அந்த ‘ரொம்ப நல்ல மாமி’யின் நிஜமான தந்தை, தன்னை சாருவின் வளர்ப்பு தாத்தாவாகக் கருதிக்கொண்டிருக்கும் சம்பு சாஸ்திரிதான் !
பாட்டு, நடிப்பு, நாட்டியம் என்று பலவித உருக்கமான காட்சிகளில் பேபி சரோஜா ‘தியாக பூமி’யில் அற்புதமாக நடித்தாள். கே. சுப்பிரமணியத்தின் திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவான ‘தியாக பூமி’யின் கதையில் சில ஓட்டைகள் இருந்தாலும், தரமான நடிப்பு, அளவான சங்கீதம், நல்ல வசனங்கள், வித்தியாசமான கிளைமேக்ஸ், தேசிய போராட்டத்தின் எழுச்சி, அடுக்கு மொழி வசனங்கள் இல்லாத சீர்த்திருத்தம் என்று பல சிறந்த அம்சங்கள் இருந்தன. இவற்றின் நடுநாயகமாக சாருவாக நடித்த பேபி சரோஜாவின் கவர்ந்திழுக்கும் வசீகர பிம்பம் ஜொலித்தது. இந்துஸ்தானி மெட்டில் அவள் பாடிய, ‘சொல்லு காந்தி தாத்தாவுக்கு ஜே ஜே ஜே’ என்ற பாடலும் வெற்றி அடைந்தது.
கடைசியாக, ‘காமதேனு’ (1941) என்ற படத்தில் பேபி சரோஜா நடித்தாள். இதை இயக்கியவர், இந்தி சினிமாவில் தலையாய இயக்குநர்களில் ஒருவராக கருத்தப்பட்ட நந்த்லால் ஜஸ்வந்த்லால். ஆனால் படம் நல்ல வரவேற்பை பெற்றதாகத் தெரியவில்லை.
‘காமதேனு’விற்குப் பிறகு, இரண்டாம் உலகப் போரின் பீதி சென்னையில் பரவியதால், குடும்பத்தாருடன் பாபநாசம் சென்றாள் பேபி சரோஜா. அங்கே கர்நாடக இசை, வீணை வாசிப்பு, சமஸ்கிருத மொழி பயிற்சி ஆகியவற்றில் ஈடுபட்டாள். பிறகு ெபங்களூரு வாசம், மத்திய சங்கீத கல்லூரியில் இசை மற்றும் ஓவியப் பாடம், 1955ல் திருமணம், 35 வருடங்கள் மும்பை வாசத்திற்குப் பிறகு மீண்டும் சென்னை என்று வாழ்க்கை வட்டம் நிறைவடைந்திருக்கிறது. பேபி சரோஜாவின் மரணத்தால் உறங்கிக்கொண்டிருந்த அந்தக் காலத்து நினைவுகள் மீண்டும் வலம் வருவதற்கான வாய்ப்பும் வந்திருக்கிறது. சுட்டியான குட்டீஸ் வருவார்கள், போவார்கள். ஆனால் வெகுஜன ஊடகமான சினிமாவின் முதல் சுட்டியான குட்டி, பேபி சரோஜாதான் என்ற சரித்திரம் அப்படியே இருக்கும்.
No comments:
Post a Comment