Saturday, 26 September 2020

VEL PAARI

 


VEL PAARI 

 வேள் பாரி இல் இருந்து...



[8:59 pm, 26/09/2020] whatsup Nagaraj: "பறம்புக்குடி மக்களிடம் இயற்கையாக அமைந்து இருந்த செம்மையும் நாணமும்

பிறரிடத்தில் இயற்கையாக அமைந்திருப்பதில்லை"

"திருக்குறள்"

குறள் பால் - பொருட்பால்

குறள் இயல் – குடியியல்

அதிகாரம் – குடிமை

( குறள் எண் : 951 )

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்

செப்பமும் நாணும் ஒருங்கு.

பறம்பின் விளக்கம்:

நா மூ: பறம்புக்குடி மக்களிடம் இயற்கையாக அமைந்து இருந்த செம்மையும் நாணமும் பிறரிடத்தில் அவரது இயற்கையாக அமைந்திருப்பதில்லை.

கடுவனின் நடுகல் எப்போதும் இதற்கு உதாரணமாக இருக்கும் , உணவு பஞ்சம் சமதளத்தில் இருந்து வந்த மனிதன் ஒருவன் அவனுக்கு உதவமுற்படுகிறான், அது மட்டும் போதாது என்று தானும் முயற்சி செயகிறான் அவனின் முயற்சி தோல்வியடைகிறது , உதவி எதிர்பார்த்த அந்த மனிதன் தவறாக நினைக்கிறான் பறம்பின் குடியை நாண செய்யும் வார்த்தையை உபயோகிக்கிறான். இதை தாங்க முடியா கடுவன் செய்த செயல் கண்டு அந்த மனிதன் கண்ணீர்விட்டு கதறி அழுகிறான். இயற்கையாகவே பறம்பின் குடிகளுக்கு செம்மையும் நாணமும் இருப்பது போல் ஏனோ பிறமக்களுக்கு அது இயற்கையாக வருவது இல்லை.

பறம்பின் உதாரணம்:

அது ஒரு கொடும் கோடைக்காலம். மழையின்றி விளைச்சல் பாதித்ததால் சமவெளியில் இருந்த மனிதர்களின் சேமிப்புகள் எல்லாம் தீர்ந்தன. உண்ண உணவு ஏதும் இல்லாமல், மனிதர்கள், உணவு தேடி எங்கும் அலைந்துகொண்டிருந்தனர்.

எவ்வளவு கொடும்பஞ்சம் வந்தாலும் மலைவாழ் மக்களைக் கிழங்குகள் கைவிடாது. ஏழு வகைக் கிழங்குகள் மலையில் விளைகின்றன. நீரின்றிச் செடிகொடிகள் எல்லாம் செத்து மடிந்தாலும் மண்ணுக்குள் கிடக்கும் இந்தக் கிழங்குகள் மனிதனின் உணவுக்காக என்றென்றும் காத்திருப்பவை.

சித்திரவள்ளிக்கிழங்கும் காட்டுவள்ளிக் கிழங்கும் இதர கொடிகளும் மனிதர்கள் உண்ண எப்போதும் கிடைக்கக்கூடியவை. அவைகூட விளையாத கொடும்பஞ்சகாலம் என்றால் இருக்கவே இருக்கிறது நூரை, சவலன், நெடுவன், தீச்சி, நாச்சி, சம்பை, நூழி எனும் ஏழு வகையான கிழங்குகள். ஒவ்வொன்றும் வெவ்வேறு ஆழத்தில் விளைந்துகிடப்பவை. நிலம் அறிந்த மனிதர்கள் அந்தக் கிழங்குகள் இருக்கும் இடத்தை எளிதில் அடையாளம் கண்டு தோண்டி எடுப்பர்.

சமவெளியில் உண்ண வழியில்லாத நிலையில், பலரும் கிழங்குகளைத் தேடி மலைகளில் ஏறினர். போதன் என்பவன், பட்டினிகிடக்கும் தன் குடும்பத்தைக் காப்பாற்ற, கிழங்கு தேடிப் பச்சைமலையில் ஏறியுள்ளான். காலையிலிருந்து உச்சிப்பொழுது வரை தேடி அலைந்துள்ளான். மிகச்சிறிய அளவிலான இரு கிழங்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. ஆனாலும் விடாமல் தேடி அலையும்போது பாறை ஒன்றில் அமர்ந்திருந்த இளைஞனைப் பார்த்துள்ளான். இளைஞனின் காலில் ஏதோ காயம்பட்டுக் குருதி வழிந்து ஓடியது. பச்சிலைகளைப் பறித்து, காயத்தின்மீது தேய்த்தபடி உட்கார்ந்திருக்கிறான் அந்த இளைஞன். அவன் மலைமகன் என்பதை, பார்த்ததும் போதன் புரிந்துகொண்டான். `இவனிடம் கேட்டால் நமக்கு வழி பிறக்கும்!’ என நினைத்து, ``எத்திசை போனால் கிழங்கு கிடைக்கும்?” எனக் கேட்டான்.

அவன் பதில் ஏதும் சொல்லாமல் போதன் கையில் வைத்திருந்த இரு கிழங்குகளையே உற்றுப்பார்த்தான். ``கேள்விக்கு விடை சொல்லாமல், கைகளில் இருக்கும் கிழங்குகளையே பார்த்துக்கொண்டிருக்கிறாய்?” எனக் கேட்டான் போதன்.

அதற்கு அந்த இளைஞன், ``நீ கையில் வைத்திருப்பது நூழிக்கிழங்கின் வகை. புதிதாகச் சாப்பிடுகிறவர்களுக்கு இது ஒவ்வாது. இதில் உள்ள கருவிதைகள் செரிமானம் ஆகாது” என்றான்.

``வீட்டில் கொடும்பட்டினியில் கிடக்கிறார்கள். அவர்களின் பசிக்கு எதுவும் உணவுதான். புதிதாகக் கிழங்குகள் கிடைக்க வழியிருந்தால் சொல்” எனக் கேட்க, இளைஞனோ அருவி விழும் பாறையைக் காட்டி, “அந்தத் திசையில் போய்ப்பாருங்கள், சித்திரவள்ளிக்கிழங்கு கிடைக்கும்” என்றான்.

``சரி” என்று கூறிப் புறப்படும்போது போதன் கேட்டான், ``நீ பறம்பைச் சேர்ந்தவனா?”

``ஆம். எனது பெயர் கடுவன்.”

“அப்படியென்றால் உன்னை நம்பலாம்” எனச் சொல்லி, கையில் வைத்திருந்த நீர்க்குடுவையையும் கிழங்குகளையும் அவனிடம் கொடுத்துவிட்டு. “இதைப் பார்த்துக்கொள். நான் அந்த இடம் சென்று கிழங்கைத் தோண்டிவந்ததும் வாங்கிக்கொள்கிறேன்” என்றான்.

அலைந்து தவித்து, மிகவும் சோர்வுற்று இருக்கும் ஒருவன் சொல்கிறானே என்று கடுவனும் அதை வாங்கிக்கொண்டு அவனை அனுப்பிவைத்தான்.

போதன் சென்ற பிறகு காயங்களில் வழியும் குருதி நின்றுவிட்டதா எனப் பார்த்தபடி கடுவன் உட்கார்ந்திருந்தான். அவன் அருகில் போதன் வைத்துவிட்டுப் போன இரு கிழங்குகளும் நீர்க்குடுவையும் இருந்தன. சிறிது நேரத்தில் பெருமுயல் ஒன்று கடுவன் உட்கார்ந்திருந்த பாறையின் வலப்புறமாகத் தவ்விப் புதருக்குள் ஓடியது.

பார்த்தவுடன் கடுவனுக்கு போதனின் உயிரற்ற குரல் நினைவுக்கு வந்தது. கொடும்பட்டினியில் குடும்பம் கிடப்பதால் நூழிக்கிழங்கை எடுத்துப் போகிறான். `இது புதியவருக்குச் சேராதே!’ என நினைத்தவன், `இந்த முயலைப் பிடித்துக்கொடுத்தால் அவன் குடும்பத்துக்கு உணவாகும்’ எனச் சிந்தித்தபடி கையில் இருந்த மூங்கில்குச்சியை எடுத்துக்கொண்டு சட்டெனப் புதரை நோக்கித் தாவினான்.

அந்தப் புதர் முழுவதும் கிண்டிப் பார்த்தான், முயல் தென்படவில்லை. எந்தத் திசையில் போயிருக்கும் எனக் கால்தடம் பார்த்தான். எதுவும் தென்படவில்லை. மழைக்காலத்தில் எளிதில் தடம் அறியலாம், கோடையில் தடம் அறிவது கடினம். எங்கே போயிருக்கும் எனக் கணித்துக் கீழ்திசை நோக்கி, புதர்களைக் கிளறியபடி போனான். நீண்ட தொலைவு கீழிறங்கிச் சென்றான். முயல் அவனது கண்ணில் படவே இல்லை. மிகவும் சோர்வடைந்து பாறை நோக்கி நடந்தான்.

புதர்களுக்குள் நுழைந்து இங்குமங்கும் தேடியதில் குச்சிகள் கிழித்து, காயத்திலிருந்து மீண்டும் குருதி வழிந்தது. `பச்சிலையைத் தேய்ப்போம்!’ என எண்ணியபடி பாறையின் மீது ஏறி அமர்ந்தான். காய்ந்த குச்சிகளின் கீறல் அளவற்றதாக இருந்தன. `எப்படியாவது பிடிக்க வேண்டுமே என்ற பதற்றத்தில், நிதானமின்றிப் புதருக்குள் ஓடியுள்ளோம்’ என நினைத்தபடி பச்சிலையை எடுத்துத் தேய்த்தான்.

காயத்தில் எரிச்சல் அதிகமாக இருக்கிறதே என்று பற்களைக் கடித்துக்கொண்டே பாறையைப் பார்த்தான். வைத்துவிட்டுப் போன இடத்தில் அந்த இரு கிழங்குகளும் இல்லை. நீர்க்குடுவை மட்டும் ஓரத்தில் உருண்டுகிடந்தது. சற்றே பதற்றமடைந்து இங்குமங்குமாகத் தேடினான். எங்கும் இல்லை. ஏதோ விலங்கு வந்து அதைத் தின்றுவிட்டுப் போய்விட்டது என்பது தெரிந்தது.

போதன் வந்து கேட்டால் என்ன செய்வது என்ற பதற்றத்தில், பாறையைச் சுற்றி எங்காவது விழுந்துகிடக்கிறதா எனத் தேடினான். எதுவும் கண்களில் படவில்லை. நேரமாகிக்கொண்டிருந்தது. `அடுத்து என்ன செய்யலாம்?’ எனச் சிந்தித்தான். எங்கிருந்தாவது வேறு கிழங்குகளைத் தோண்டி எடுத்துவந்துவிடலாமா என எண்ணிக்கொண்டிருந்தபோது தொலைவில் போதன் வருவது தெரிந்தது.

கடுவன், பதற்றத்தோடு அவனது வரவைப் பார்த்துக்கொண்டிருந்தான். போதனின் கையில் சித்திரவள்ளிக்கிழங்குகள் சில இருந்தன. சற்று மகிழ்வோடுதான் அவன் வந்தான். “நீ சரியான இடத்தைச் சொன்னாய், உனக்கு நன்றி” என்று சொல்லியபடியே பாறையின் மீதிருந்த நீர்க்குடுவையை எடுத்துக்கொண்டு கிழங்குகளைத் தேடினான். அவற்றைக் காணவில்லை. அப்பக்கம் இருக்குமோ என நினைத்து கடுவனின் பின்திசையில் பார்த்தான். அங்கும் இல்லை. தேடியபடியே, “எங்கே கிழங்குகள்?” என்றான்.

கடுவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தயக்கத்தில் சொற்கள் வரவில்லை.

போதனின் கண்கள் தேடியபடியே “கிழங்குகள் எங்கே?” என மீண்டும் கேட்டான்.

தயக்கத்தோடு கடுவன் சொன்னான், ``அவற்றை ஏதோ விலங்கு தின்றுவிட்டது.”

அதிர்ச்சியானான் போதன். தலையை மறுத்து ஆட்டி “என்ன சொல்கிறாய்..?” எனக் கேட்டான்.

“முயலொன்று பார்வையில் பட்டது, உங்களுக்குக் கொடுக்கலாமே என அதைப் பிடிக்க ஓடினேன். அந்த நேரத்தில் ஏதோ ஒரு விலங்கு, கிழங்குகளைத் தின்றுவிட்டது” என்றான் மிகுந்த கவலையோடு.

அதிர்ச்சியிலிருந்து மீளாத போதன், “முயல் எங்கே?” என்றான்.

``பிடிக்க முடியவில்லை. தப்பிச்சென்று விட்டது.”

``என்னை ஏமாற்றப்பார்க்கிறாய். கிழங்குகளைத் தின்றுவிட்டு, என்னிடம் மறைக்க, பொய் சொல்கிறாய்” என்றான்.

கடுவன் மிகுந்த பதற்றத்துக்குள்ளானான், “நான் பொய் சொல்லவில்லை. உங்களுக்குக் கொடுக்கத்தான் முயலைப் பிடிக்கப் போனேன், அவசரத்தில் கிழங்கை எடுத்துக்கொண்டு போகாமல் இங்கேயே வைத்துவிட்டுப் போய்விட்டேன். அதுதான் நான் செய்த தவறு. என்னை மன்னியுங்கள்” என்றான்.

போதனோ, “நீ பறம்பைச் சேர்ந்தவன் என்பதால்தான் நம்பினேன், என்னை நீ ஏமாற்றிவிட்டாய்” என்றான்.

சொற்கள் கடுவனை நிலைகுலையச்செய்தன. அவன் மீண்டும் மீண்டும் தனது நிலையை விளக்கிச் சொல்ல முயன்றான். போதன் அவனது சொல்லை நம்பவில்லை. “கிழங்கை நீ உட்கொண்டுவிட்டு விலங்கின் மீது பழிபோடுகிறாய்” என்று உறுதியாகச் சொன்னான்.

“சரி, தின்று முடித்துவிட்டாய். இனி நான் புலம்பி என்ன ஆகப்போகிறது, கொடும்பஞ்சம் பறம்பு மக்களையும் மாற்றிவிட்டது” என்று துயருற்றுப் புலம்பியபடியே புறப்பட்டான் போதன்.

சிறு பாறையின் மீது நின்றுகொண்டிருந்த கடுவன் இடுப்பில் இருந்த குறுங்கத்தியை எடுத்தபடி, ``ஒரு கணம் நில்லுங்கள்” என்றான்.

நடக்கத் தொடங்கிய போதன் நின்று அவனைத் திரும்பிப் பார்த்தான்.

பாறையின் மீது இருந்த கடுவன், குறுங்கத்தியை அடிவயிற்றின் இடப்புறம் அழுத்தி உள்நுழைத்தான்.

போதனுக்கு அவன் என்ன செய்கிறான் என்பது புரியவில்லை.

அடிவயிற்றின் இடப்புறம் உள்நுழைத்த கத்தியை வலப்புற முனைவரை கண்ணிமைக்கும் நேரத்தில் இழுத்தான்.

அப்போதுதான் போதனுக்கு அவனது செயல் புரிந்தது.

கத்தியை இழுத்துக்கொண்டிருக்கும்போதே கடுவன் சொன்னான், “எனது வயிற்றில் கிழங்கேதும் இருக்கிறதா எனப் பாருங்கள். செரிமானம் ஆகாத கருவிதைகள் ஒன்றேனும் இருக்கிறதா எனவும் பாருங்கள்” என்று சொல்லியபடி வேலையை முடித்தான்.

பதறிய போதன் அவனை நோக்கி ஓடும்போது பாறையிலிருந்து சரிந்துகொண்டிருந்தான் கடுவன். “என்னை மன்னித்துக்கொள்” என போதன்

கதறியபடி அவனது தலையை ஏந்திப்பிடித்தபோது கடுவன் சொன்னான், “பறம்பின் மக்கள், நம்பிக்கைக்கு துரோகம் இழைக்க மாட்டார்கள்.”

பறம்பின் குரல் ஒலிக்கும்

என் சிந்தனையின் சிதறல்கள்

.

No comments:

Post a Comment