Saturday, 22 August 2020

DEVIKA ,A LEGEND




DEVIKA ,A LEGEND

#அமைதியான_நதியினிலே... #தேவிகா
==

ஒரு பெண்ணை எப்படி பார்க்கிறோமோ, அதை வைத்துதான் அவர் மதிக்கப்படுகிறார்.. அப்படித்தான் பிரமிளா என்கிற தேவிகாவும் இறுதிவரை மதிக்கப்பட்டார்.. விரும்பப்பட்டார்!

முடிவில்லாத ஆர்வமும், இயல்பான நடிப்பும், இடைவிடாத முயற்சியும், கடினமான உழைப்பும், இருந்தால் விரைவில் உச்சத்தை தொடலாம் என்பதற்கு பிள்ளையார் சுழி போட்டவர்களில் ஒருவர் தேவிகா!

ஒரு பெண்மையின் அத்தனை பண்புகளும் தேவிகாவுக்கு இருப்பதாக டைரக்டர்கள் உணர்ந்துதான் ரகரகமான கேரக்டர்களை தந்திருக்கிறார்கள் போலும்.. அவரது முகம், உடலைவிட, அந்த ஆகாய விழிகளே அனைத்தையும் பேசியது.. உணர்த்தியது.. கரைத்தது!

முன்னணி ஜாம்பவான்கள் என்றில்லாமல், 2-ம் கட்ட ஹீரோக்களுடனும் இமேஜ் பார்க்காமல் நடித்து ஏற்றத்தாழ்வுகளை நொறுக்கியவர் தேவிகா. மென்மையான முகம், சாந்தமான தோற்றம், தேவிகாவுக்கு இயற்கையிலேயே அமைந்ததால், அவரது கேரக்டர்கள் உயிரோட்டத்துடன் இருக்கின்றன.. குறிப்பாக "நெஞ்சில் ஓர் ஆலயம்" சீதா போலவே அப்பழுக்கற்ற மனைவி தங்களுக்கு வேண்டும் என அக்கால ஆண்கள் ஒவ்வொருவரையும் விரும்ப செய்தார்.

"ஆண்டவன் கட்டளை"யில் "அழகே வா" என்ற பாடலில் ஆதாம்-ஏவாளின் அடிப்படை சமாச்சாரத்தை சுற்றி வளைத்து நாசூக்காக வெளிப்படுத்தியிருந்தார் கண்ணதாசன்.. அப்படிப்பட்ட உணர்ச்சி பிழம்பின் போராட்ட பாடலையும், வெறும் கண்களாலேயே புரிய வைத்து, காதலனையும் அழைத்த பாங்குதான் நிஜ கவர்ச்சியின் வெளிப்பாடு! அதுவே #விரசத்தின்_நாகரீக_எல்லை!!

சிவாஜி-பத்மினி ஜோடிக்கு பிறகு சிவாஜி - தேவிகா ஜோடி ஃபேமஸ் ஆனது.. கடைசிவரை சிவாஜியை "சார்" என்றே அழைத்து குரு ஸ்தானத்தை தந்திருந்தார்.. "#தேன்மொழி_தேவிகா" என்றுதான் சிலோன் ரேடியோவில் அப்போது ஸ்பெஷலாக அறிவிப்பு வெளியாகும்.

பத்மினி, சாவித்திரிக்கு அடுத்தபடியான இடத்தை எளிதாக பிடித்தாலும், ஈகோ போட்டி என்னவோ சரோஜாதேவிக்கும் இவருக்கும்தான் நடந்திருக்கிறது.. ஒன்றாகவே சேர்ந்து நடிக்கும் படங்கள் என்றாலும் சரோஜாதேவியின் பெயரே டைட்டிலில் முன்னால் வந்து கொண்டிருந்தது... ஒருவரிடம் மற்றொருவர் பேசிக்கொள்வதில்லை என்றாலும், ஒருவரின் நலனை பற்றி இன்னொருவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் பரந்த மனசு இருவரிடமுமே நிறைந்திருந்தது... உள்நோக்கமில்லாத இருவரின் ஊடல் அது!! தேவிகா இறந்ததுமே, முதல் ஆளாக கிளம்பி வந்து கனகாவுக்கு ஆறுதல் சொன்னது கன்னடத்து பைங்கிளிதான்!

எதையுமே தேங்காய் உடைத்தது போல பேசும் கவிஞர் கண்ணதாசனுக்கு, தேவிகா மீது அப்படி ஒரு பிரியம்.. அவர் ஒரு காட்ஃபாதர் மாதிரியே இருந்திருக்கிறார்.. அதனால்தான் தேவிகாவுக்கு எழுதும் பாட்டுக்களே கொஞ்சம் ஸ்பெஷலாக இருக்கும்.. அவை அத்தனையும் சாகாவரம் பெற்று முணுமுணுக்க வைத்து கொண்டிருக்கின்றன.. தேவிகாவை பற்றி யாராவது ஒரு வார்த்தை தப்பாக பேசினாலும் அவர்களை உண்டு, இல்லை என்று ஆக்கி விடுவார் கவிஞர்.

"எனக்கு எந்த பெண்ணை பார்த்தாலும் "என்னடி"ங்கிற வார்த்தை வந்துடும்... நானும் எத்தனையோ முறை பார்க்குறேன். உன்கிட்ட பேசறப்போ மட்டும் "என்னம்மா"ன்னு மட்டுமே வருதுன்னு என்பாராம் கண்ணதாசன்.... நம்பகமான அதே சமயம் மதிப்பிற்குரிய தோழியாகவே உலா வந்ததாலோ என்னவோ, தனது வாழ்க்கை சரிதத்தில் குறிப்பிட்ட 3 நடிகைகளுள் தேவிகாவும் ஒருவராக இடம்பெற்றார்!!

எத்தனையோ நடிகைகள் பண விஷயத்தில் கறார் காட்டியபோது, தயாரிப்பாளர்களுக்கு கை கொடுத்தவர் தேவிகா.. பணம் தந்தால்தான் நடிப்பேன் என்ற பிடிவாதம் இவரிடம் இருந்தது இல்லை.. ஒரு சீன் நன்றாக வரவில்லை என்று டைரக்டர் திட்டினாலும் முகம் கோணாத நடிகை... அலுக்காமலும் சலிக்காமலும் ரிகர்சல் பார்த்து கொள்வதில் ஏகப்பட்ட அக்கறை காட்டியவர்!!

இளகிய மனம் இவருக்கு உடன்பிறந்த ஒன்று.. ஒவ்வொரு படமும் முடிந்தபிறகும், யூனிட்டில் வேலை செய்த தொழிலாளர்கள் எல்லாருக்குமே தன் கையில் உள்ள பணத்தை பகிர்ந்து அளிக்கும் குணம் உடையவராக இருந்திருக்கிறார்.. ஒவ்வொரு நாளும் வாழ்நாளில் வந்த சோதனைகளையும், பிரச்சனைகளையும் தன் குடும்பத்துக்காக தாங்கி பிடித்து கொண்ட "சுமைதாங்கி"!

ஆனால், ஆயிரம் திறமைகள் இருந்தாலும் , புத்திசாலித்தனம் இருந்தாலும் பலருக்கு எங்கோ ஒரு இடத்தில் சறுக்கிவிடுமே அப்படித்தான் தேவிகாவுக்கும் காதல் வாழ்க்கை அமைந்தது.. ஆசை ஆசையாக வலிய சென்று காதலித்து.. ஒற்றை காலில் நின்று கல்யாணமும் செய்து.. அமைதியையும் இழந்து தவித்தது இந்த "#வானம்பாடி".. கடைசியில் 60 வயதுக்கு முன்பேயே இந்த பேரழகி நம்மை விட்டு சென்றுவிட்டார்.

பெண் என்பவர் மென்மையும் அழகும் கொண்ட வெறும் பதுமை இல்லை, பல்லாயிரம் உணர்ச்சிகளுடனும், சோதனைகளுடன் கொழுந்து விட்டெரியும் இயல்பான மனுஷி என்பதை உணர வைத்தவர் தேவிகா.. மனசறிந்து மட்டுமல்ல, தெரியாமல்கூட யாருக்கும் தீங்கு நினைக்காத தேவிகாவைதான் நம்மால் "#மறக்க_முடியுமா"?!

- ஹேம வந்தனா

Hemavandhana

No comments:

Post a Comment