Wednesday, 29 July 2020

S.V.VENKATRAMAN ,MUSIC DIRECTOR BORN 1911 APRIL 25 -1998 APRIL 7


S.V.VENKATRAMAN ,MUSIC DIRECTOR 
BORN 1911 APRIL 25 -1998 APRIL 7




சோழவந்தான் வரதராஜன் வெங்கடராமன் என்கிற எஸ்.வி.வெங்கடராமன் 1911 april 25 ஆம் ஆண்டில் திருச்சி மாவட்டம் அப்பயம்பாளையத்தில் பிறந்தார்.

அக்காள் வீட்டுக்குப் போகும் வழியில் பிரசவ வலி ஏற்பட, சிவன் கோயில் வாசலிலேயே கொட்டகைபோட, வெங்கடராமனைப் பெற்றெடுத்தார் லட்சுமி அம்மாள். வெங்கடராமனுக்கு இரண்டு வயதானபோது அப்பா காலமாகிவிட்டார். மானாமதுரையில், சித்தப்பா வீட்டில் வெங்கடராமன் வளர்ந்தார்.

மூன்று வயதிலேயே அவருக்கு பாட்டு ஞானம் வந்துவிட்டது. யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் சென்னைக்கு வந்து கிருஷ்ணசாமி பாவலரின் நாடகக் கம்பெனியில் சேர்ந்தார். பத்து வயதுப் பையனாக இருந்த அவரைப்பார்த்த உறவினர், ஊருக்கு அழைத்துப்போனார். நாடகத்தில் சேர்வதற்கு தாய் லட்சுமி அம்மாள் அனுமதி தந்தார்.


பிறகு, ஜகந்நாத அய்யர் நாடகக் கம்பெனியில் வெங்கடராமனுக்கு இடம் கிடைத்தது. பூசிய முதல் அரிதாரத்துக்கே 25 ரூபாய் பரிசு கிடைத்தது.அவர் நடித்த இரண்டாவது நாடகம் ‘பட்டினத்தார்’ . பட்டினத்தாராக நடித்ததுடன் விருத்தங்களுக்கு டியூன்போட்டுப் பாடி, பாராட்டுகளை அள்ளினார்.

மேடைநாடகங்கள் படமாகிக்கொண்டிருந்த நேரம் அது. பாடும் நட்சத்திரம் வெங்கடராமன் நளனாக நடிக்க, ‘நளதமயந்தி’ உருவானது. பிறகு, வெங்கடராமன் நடித்த படம் ‘சந்திரமோகன் அல்லது சமூகத் தொண்டு’.

அந்தப் படத்தில் வில்லனாக நடித்தபோது, வாள் சண்டைக் காட்சியில் இடதுகை அடிபட்டு, செயலிழந்தது. அதன்பிறகு சினிமா வாழ்க்கை தடைபட்டது. 1937ல் ஏவி.எம்மில் ‘நந்தகுமார்’ படம் உருவானது. மெய்யப்பச் செட்டியாரின் ஆசியுடன் இசையமைப்பாளராக அறிமுகமானார் வெங்கடராமன்.




ஏ.டி.கிருஷ்ணசுவாமி எழுதிய ‘யுகதர்ம முறையே...’ பாடலைப் பாடியபடி தமிழ் சினிமாவில் அறிமுகமானார் 13 வயது டி.ஆர். மகாலிங்கம்,‘வாயாடி’, ‘போலி பாஞ்சாலி’,’ஹரிச்சந்திரா’, ‘பூகைலாஸ்’ படங்களில் பணியாற்றிய பிறகு, கருத்து வேறுபாட்டால் ஏவி.எம்மிலிருந்து விலகினார் வெங்கடராமன்.

அதன்பிறகு கண்ணாம்பாவின் கணவர் மூலமாக ‘தல்லி பிரேமா’ தெலுங்குப் படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு வந்தது. அந்தப்படத்தின் பாடல்களைக் கேட்டு ரசித்த ஜூபிடர் அதிபர் சோமு, ‘கண்ணகி’ படத்தில் இசைவாய்ப்புத் தந்தார்.

அந்தப்படத்தில் ‘சந்திரோதயம் இதிலே...’ என்ற பாடலை காதலும் கம்பீரமும் கலந்து பாடி, வெற்ரிப் பாடலாக்கினார் பி.யு.சின்னப்பா. ‘அன்பில் விளைந்த அமுதமே’, ‘தேவமகள் இவள் யார்’, ‘மானமெல்லாம் போனபின்னே’, ‘பத்தினியே உன் போல்....’ என அத்தனை பாடல்களிலும் தனது முத்திரையைப் பதித்தார் வெங்கடராமன்.

மனைவி எம்.எஸ். சுப்புலட்சுமியை மீராவாக நடிக்கவைத்து, ‘கல்கி’ சதாசிவம் தயாரித்த ‘மீரா’ படத்துக்கு இசை அமைத்தார் வெங்கடராமன். ‘காற்றினிலே வரும் கீதம்’ பாடலை ‘லூட் கயி’ என்ற பாட்டின் மெட்டில் ஒலிப்பதிவு செய்திருந்தார்கள். அதில் சில மாற்றங்களைச் செய்து மெருகேற்றி மெட்டுக்கட்டினார். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தேன் குரலில் அந்தப்பாடல் இப்போதும் இனிக்கிறது.

‘ஞானசெளந்தரி’ படத்தில் இடம்பெற்ற ‘அருள் தாரும் தேவ மாதாவே, ஆதியே இன்ப ஜோதியே’ பாடல் வெங்கடராமனின் இசைத்திறனுக்கு இன்றும் சாட்சியாக இருக்கிறது. எம்.எம். தண்டபாணி தேசிகர் பாடி, நடித்த கடைசிப் படம், ‘திருமழிசை ஆழ்வார்’. பாபனாசம் சிவனின் பக்தி மணக்கும் வரிகளுக்கு இனிய மெட்டுகள் போட்டு இசையமைத்தார் வெங்கடராமன்.

‘இன்றே பிறந்த பயன் அடைந்தேன்’, ‘வாராமல் இருப்பாரோ’, ‘தந்தையும் நீ, என் தாயும் நீ’, ‘சாந்தம் தவழும் சிறைச்சாலையில்.... ஏகாந்தம்’ என அந்தப்படத்தின் பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்தன.திருவிதாங்கூர் சகோதரிகள் லலிதா, பத்மினி, ராகினி நடித்த படம் ‘சிங்காரி.’ 14 பாடல்கள் இடம்பெற்ற படத்தில், ஒன்பது பாடல்களுக்கு வெங்கடராமன் இசை அமைத்தார். தஞ்சை ராமையாதாஸ் எழுதிய ‘ஒரு சாண் வயிறே இல்லாட்டா, இந்த உலகினில் ஏது கலாட்டா!’ பாடல் இன்றைக்கும் பொருந்தும் வாழ்வியல் தத்துவமாக ஒலிக்கிறது.

சிவாஜியின் ‘கண்கள்’ படத்தில் வெங்கடராமன் இசையில் சந்திரபாபு பாடிய ‘ஆளு கனம் ஆனா மூளை காலி’ பாடல் வரவேற்பைப் பெற்றது. அந்தப்படத்தில் வெங்கடராமன் குரலில் ஒலித்த இஸ்லாமியப் பாடல் : ‘பிஸ்மில்லா ரஹ்மான்’.கலைஞரின் வசனம், சிவாஜியின் நடிப்பு, எல்.வி.பிரசாத்தின் இயக்கத்தில் வெற்றிபெற்ற ‘மனோகரா’ படத்தில் வெங்கடராமன் இசையில் ஜிக்கி குழுவினர் பாடிய ‘இன்ப நாளிதே’, ‘சிங்காரப் பைங்கிளியே பேசு’ என்று ஏ.எம்.ராஜா- ஆர். ஜெயலட்சுமி குரலில் ஒலித்த பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.

‘இரும்புத்திரை’ படத்தில் டி.எம். செளந்தரராஜனும், பி. லீலாவும் பாடிய , ‘நெஞ்சில் குடியிருக்கும்’ பாடல் வெங்கடராமனுக்குப் புகழ்வாங்கித் தந்தது.
‘ அறிவாளி’ படத்தில் ‘அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே’ என்று செளந்தரராஜன் பாடிய பாடலிலும் வெங்கடராமனின் இசைத்துவம் புலப்பட்டது.

டி.கே. ராமச்சந்திரன், மேஜர் சுந்தரராஜன், மனோரமா, தங்கவேலு நடித்த ‘பெரிய மனிதன்’ படத்துக்கு வெங்கடராமன் இசையமைத்தார். படம் ஓடவில்லை என்றதும், அவருக்கான வாய்ப்பு நின்றது.

கடைசிக்காலத்தில் கடந்தொல்லையால் கோபால புரத்து வீட்டை விற்று, பாலவாக்கத்தில் வசித்துவந்த வெங்கடராமன் 1998ல் தனது 86ஆம் வயதில் மரணமடைந்தார்.



.

.
.

No comments:

Post a Comment