Wednesday, 22 July 2020

SRIDHAR ,DIRECTOR BORN 1933 JULY 22 - 2008 OCTOBER 20



SRIDHAR ,DIRECTOR  BORN 
1933 JULY 22 - 2008 OCTOBER 20


இயக்குனர் ஸ்ரீதர் 1933–ம் ஆண்டில் ஜூலை மாதம் 22–ம் நாள்ம துராந்தகத்துக்கு அருகில் உள்ள சித்தாமூர் என்ற கிராமம் . பிறந்தார்

1960களில் ஆரம்பித்து எண்பதுகள் வரை தனது அபார படைப்புகளால் தமிழ் திரையுலகத்தை கட்டிப் போட்டவர்.

கல்யாணப்பரிசு.. நெஞ்சில்ஓர்ஆலயம்..! நெஞ்சம்மறப்பதில்லை..காதலிக்க நேரமில்லை..என வரிசையாக வெள்ளி விழாப் படங்கள் கொடுத்த மகா கலைஞன்.

இவரின் படத்தைப் பார்க்க ரசிகர் ரகளை செய்வது போலவே தமிழ் திரை ஜாம்பவான்கள் எம்ஜிஆர்..சிவாஜி…ஜெமினி என அத்தனை நடிகர், நடிகைகளும் தவம் கிடப்பார்கள்.

சிவாஜி பெரிதும் விரும்பிய இயக்குனர் ஸ்ரீதர்…! ஜெயலலிதா..வெண்ணிற ஆடை நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்தி, ஸ்ரீகாந்த்..ரவிச்சந்திரன், கல்யாண்குமார்..என இவர் அறிமுகப்படுத்திய ஹீரோ, ஹீரோயின்கள் அதிகம் பேர் சூப்பர் ஸ்டார்கள் ஆனார்கள்.

ஸ்ரீதர் படத்தில் ஒரு காட்சியில் நடிக்க முடியாதா என்று ஏங்கியவர்கள் ஏராளம். எம்ஜிஆர் படத்தை இயக்க வேண்டும் என்று ஆயிரம் இயக்குனர்கள் தவம் கிடக்க..எம்ஜிஆர் ஆசைப் பட்ட ஒரே இயக்குனர் ஸ்ரீதர்.

அப்போது எம்ஜிஆர் என்பவர் கடவுளின் அவதாரம்…!அவர் முன்பு நிற்க கூட முடியாது. அவர் நடிக்கும் ஸ்டூடியோவில் யாரும் புகைப் பிடிக்க முடியாது. எம்ஜிஆர், ஸ்ரீதர் படத்தில் நடிக்க ஆசைப் பட்டபோது..

தயங்கினார் ஸ்ரீதர்.. “எனக்கு சூட்டிங் ஸ்பாட்டில் புகைப் பிடிக்கும் பழக்கம் இருக்கிறது..என்று கூறினார்.

எம்ஜிஆர் சற்றும் தயங்காமல் அதுக்கென்ன தாராளமாகப் பிடியுங்கள் என்று கூற..திரையுலகமே ஆடிப் போனது.

எம்ஜிஆர் நடித்து ஸ்ரீதர் இயக்கிய இரண்டு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்..!உரிமைக்குரல், மீனவ நண்பன்.

அதே போல ரஜினி,கமலஹாசன் நடித்த இளமை ஊஞ்சல் ஆடுகிறது’ படம் வெள்ளிவிழாப் படம்…! காலங்கள் ஓடியது..வயதாகி விட்டது இயக்குனர் ஸ்ரீதருக்கு..!

ரஜினி சூப்பர்ஸ்டார் ஆனார். சொந்தப் படம் எடுத்த ரஜினி நலிந்த பழம் பெரும் கலைஞர்களுக்கு உதவும் நோக்கத்தில் பங்குதாரர்கள் ஆக்கி ஒரு தொகை கொடுத்து வந்தார்.

அருணாச்சலம் படம் ஆரம்பித்த ரஜினி..பக்கவாதம் வந்து படுத்த படுகையாக இருந்த இயக்குனர் ஸ்ரீதரைப் போய் பார்த்தார்..!

எனது அருணாச்சலம் படத்தில் நீங்களும் ஒரு பங்குதாரர் என்று கூற.. படார் என்று கோபம் வந்து விட்டது ஸ்ரீதருக்கு.

எனக்கு பிச்சை போடாதே ரஜினி…வேண்டுமானால் உன் கால்ஷீட் கொடு நான் படத்தை இயக்குகிறேன்” என்று கூற ஆடிப் போனார் ரஜினி.

மன்னிப்பு கேட்டு விட்டு வீடு வந்து சேர்ந்தார் சூப்பர்ஸ்டார்..! அப்படி ஒரு இயக்குனர் சிங்கம் போல வாழ்ந்தார் என்றால் அது இயக்குனர் ஸ்ரீதர் தான்..!

நெஞ்சம் மறப்பதில்லை…!

தமிழ் சினிமாவில் புதுமைகளைப் புகுத்தி திருப்புமுனை ஏற்படுத்தியவர், ஸ்ரீதர். விரல் விட்டு எண்ணத்தக்க மிகச்சிறந்த சாதனையாளர்கள் பட்டியலில், ஸ்ரீதர் பெயரும் இடம்பெறும். மதுராந்தகத்துக்கு அருகில் உள்ள சித்தாமூர் என்ற கிராமம் தான் ஸ்ரீதரின் சொந்த ஊர். 1933–ம் ஆண்டில் ஜூலை மாதம் 22–ம் நாள் பிறந்தார். பள்ளியில் படிக்கும்போதே, கதைகள் எழுதுவார். பள்ளி நாடகங்களில் நடிப்பார்.
ஏப்ரல் 30, 2016, 11:30 AM
தமிழ் சினிமாவில் புதுமைகளைப் புகுத்தி திருப்புமுனை ஏற்படுத்தியவர், ஸ்ரீதர்.

விரல் விட்டு எண்ணத்தக்க மிகச்சிறந்த சாதனையாளர்கள் பட்டியலில், ஸ்ரீதர் பெயரும் இடம்பெறும்.

மதுராந்தகத்துக்கு அருகில் உள்ள சித்தாமூர் என்ற கிராமம் தான் ஸ்ரீதரின் சொந்த ஊர். 1933–ம் ஆண்டில் ஜூலை மாதம் 22–ம் நாள் பிறந்தார். பள்ளியில் படிக்கும்போதே, கதைகள் எழுதுவார். பள்ளி நாடகங்களில் நடிப்பார்.

பள்ளிப்படிப்பு முடிந்ததும் எப்படியும் சினிமாவில் நுழைந்து விட வேண்டும் என்று முயற்சி செய்தார். வெற்றி கிடைக்கவில்லை.

டி.கே.சண்முகம்

நாடக உலகில் முடிசூடா மன்னரான டி.கே.சண்முகத்தை ஸ்ரீதர் சந்தித்தார். தான் கொண்டுபோயிருந்த கதைச் சுருக்கத்தை கொடுத்தார்.

கதையை இப்படித் தொடங்கினார் ஸ்ரீதர்:

‘‘ஒரு மனிதன் பிறக்கும் போதே அயோக்கியனாக பிறப்பதில்லை. அவன் வளரும் சூழ்நிலை, பழகும் நண்பர்கள், அவனுடைய வாழ்க்கை முறை இவற்றால்தான் அயோக்கியனாக மாறுகிறான்’’.

இந்த வரிகள், டி.கே.சண்முகத்தைக் கவர்ந்தன. முழுக்கதையையும் கொண்டு வரச்சொன்னார். ஸ்ரீதர், மதுராந்தகத்துக்கு போய் முழுக்கதையையும் கொண்டு வந்தார். அதைப் பார்த்த சண்முகத்துக்கு வியப்பு ஏற்பட்டது.

‘‘கதையை எழுதியது இந்த பையனா? அல்லது வேறு யாராவது எழுதிக் கொடுத்திருக்கிறார்களா?’’ என்று சந்தேகப்பட்டார்.

கதையில் உணர்ச்சிமயமான இரண்டு கட்டங்களை தேர்வு செய்து, அதற்கு அங்கேயே உட்கார்ந்து வசனம் எழுதும்படி சொன்னார். ஸ்ரீதரும் கிடுகிடுவென சிறப்பாக வசனம் எழுதிக்காட்டினார்.

ரத்தபாசம்

மகிழ்ச்சி அடைந்த டி.கே.சண்முகம், ஸ்ரீதரின் கதையை நாடகமாக்க முடிவு செய்தார்.

ஸ்ரீதர் தன் கதைக்கு ‘‘லட்சியவாதி’’ என்று பெயர் சூட்டி இருந்தார். அதை டி.கே.சண்முகம் ‘‘ரத்தபாசம்’’ என்று மாற்றி, 1951–ம் ஆண்டு நவம்பர் 11–ம் நாள் சென்னை ரசிகரஞ்சனி சபாவில் நாடகமாக அரங்கேற்றினார். நாடகம் பெரும் வரவேற்பு பெற்றது.

அதை சினிமாவாக தயாரிக்க ஜூபிடர் பிக்சர்ஸ் அதிபர் சோமு விரும்பினார். இதுபற்றி நடந்த பேச்சுவார்த்தையில், டி.கே.சண்முகமும், ஜூபிடர் சோமுவும் கூட்டாக (அவ்வை – ஜூபிடர் புரெடக்ஷன்ஸ் என்ற பேனரில்) ரத்தபாசம் படத்தை தயாரிப்பது என்று முடிவானது.

ஸ்ரீதர் சிறுபையனாக இருந்ததால், பிரபலமான வசனகர்த்தா யாரையாவது வைத்து வசனம் எழுதலாம் என்று ஜூபிடர் சோமு சொன்னார். அதை முற்றிலுமாக நிராகரித்த சண்முகம், ‘‘ஸ்ரீதர் வயதில் குறைந்தவராக இருந்தாலும், வசனம் எழுதுவதில் மிகத்திறமைசாலி. அவர்தான் படத்துக்கு வசனம் எழுதவேண்டும். இல்லாவிட்டால் படத்தயாரிப்புக்கே நாங்கள் வரவில்லை’’ என்று கூறிவிட்டார். இதனால் ரத்தபாசம் படத்திற்கு ஸ்ரீதரே வசனம் எழுதினார். படத்தின் இயக்குனர் ஆர்.எஸ்.மணி.

‘ரத்த பாசம்’ படத்தில் டி.கே.சண்முகம், டி.கே.பகவதி ஆகியோருடன் கதாநாயகியாக அஞ்சலி தேவி நடித்தார். படம் 1954–ம் ஆண்டு வெளியாகி, சக்கைபோடு போட்டது. ‘ரத்த பாசம்’ கதை–வசனத்துக்காக, ஸ்ரீதருக்கு 500 ரூபாய் கொடுத்தார், சண்முகம். அக்காலத்தில் அது பெரிய தொகை.

எதிர்பாராதது

இதன்பின், சரவணபவா – யூனிட்டி கம்பெனியார், சிவாஜியை வைத்து படம் தயாரிக்க முடிவு செய்து, கதைக்காக அலைந்து கொண்டிருந்தார்கள். அவர் களுக்கு ஸ்ரீதர் கொடுத்த கதை ‘‘எதிர்பாராதது’’.

கதை அவர்களுக்குப் பிடித்திருந்தது. சிவாஜியிடமும் கதையை சொல்லி ஒப்புதல் வாங்கி விட்டார்கள். கதையை ஏற்றுக்கொண்ட சிவாஜி, ஒரு பிரபல வசனகர்த்தாவை வைத்து வசனம் எழுதலாம் என்று கூறினார்.

இதை ஸ்ரீதரிடம் பட அதிபர்கள் கூறினார்கள். ஸ்ரீதர் திடுக்கிட்டார். பிறகு, ‘‘எனக்கு மூன்று நாள் அவகாசம் கொடுங்கள். முழுவசனத்தையும் எழுதிக் கொடுக்கிறேன். அதை சிவாஜிக்குப் படித்துக் காட்டுகிறேன். சிவாஜிக்குப் பிடித்திருந்தால், என் வசனத்தை வைத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் கதையையும் வசனத்தையும் என்னிடம் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். கதையை மட்டும் தர எனக்கு விருப்பம் இல்லை’’ என்றார்.

சொன்னபடியே மூன்று நாட்களில் முழு வசனத்தையும் எழுதி முடித்தார். அதை சிவாஜியிடம் கொண்டு போய் வாசித்துக்காட்டினார். சிவாஜிக்கு ரொம்பவும் மகிழ்ச்சி.

‘‘வசனங்கள் பிரமாதம்! இந்தத் தம்பியே நம்ம படத்துக்கு வசனம் எழுதட்டும்’’ என்று கூறிவிட்டார்.

‘எதிர்பாராதது’ புதுமையான கதை அமைப்பைக் கொண்டது. சிவாஜிக்கு ஜோடி பத்மினி. இருவரும் போட்டிபோட்டு நடித்தனர். படம் மகத்தான வெற்றி பெற்றது. ஸ்ரீதர் புகழ் மழையில் நனையலானார்.

பிறகு ஸ்ரீதர் வசனம் எழுதியபடம் ‘மகேஸ்வரி’. இது மார்டன் தியேட்டர்ஸ் தயாரிப்பு.

டப்பிங் படம்

‘எதிர்பாராதது’ படத்தயாரிப்பாளர்களில் ஒருவரான கிருஷ்ணமூர்த்தியும், ஸ்ரீதரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

கிருஷ்ணமூர்த்தி, சரவணபவா – யூனிட்டி கம்பெனியில் இருந்து வெளிவந்தார். இருவரும் சேர்ந்து படத்தயாரிப்பில் இறங்குவது என்றும், அதற்கு முன்னோட்டமாக ஒரு தெலுங்குப் படத்தின் உரிமையை வாங்கி தமிழில் ‘டப்’ செய்யலாம் என்றும் ஸ்ரீதரும் கிருஷ்ணமூர்த்தியும் முடிவு செய்தார்கள்.

என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், சாவித்திரி ஆகியோர் நடித்த ஒரு தெலுங்குப் படத்தை பார்த்தார்கள். டி.பிரகாஷ்ராவ் இயக்கியிருந்த அந்தப்படம் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் உரிமையை வாங்கினார்கள். அக்காலத்தில் ‘டப்பிங்’ வசனம் எழுதுவதற்கென்றே சிலர் இருந்தார்கள். ‘டப்பிங்’ வசனம் எழுத விரும்பாத ஸ்ரீதர், அந்த எழுத்தாளர்களைக் கொண்டு வசனம் எழுதச் செய்யலாம் என்று விரும்பினார்.

ஆனால், ‘நீங்களே வசனத்தை எழுதுங்கள்’ என்று கிருஷ்ணமூர்த்தி வற்புறுத்தியதால், ஸ்ரீதர் எழுதினார்.

ஸ்ரீதர் வசனம் எழுத, அதை டப்பிங் பேசுகிறவர்களுக்கு பயிற்சி அளிக்க ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் வேறு யாருமில்லை. பிற்காலத்தில் கதை – வசன ஆசிரியராகவும், டைரக்டராகவும், ஸ்டூடியோ அதிபராகவும் உயர்ந்த கே.எஸ்.கோபால கிருஷ்ணன் தான்.

‘லட்சாதிபதி’ என்ற பெயரில் வெளிவந்த அந்தப்படம் வெற்றிகரமாக ஓடியது.

பிறகு என்.எஸ்.கிருஷ்ணனின் சகோதரர் திரவியம் தயாரித்த ‘புனர் ஜென்மம்’ படத்துக்கு ஸ்ரீதர் வசனம் எழுதினார். படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் நடுத்தரமாக ஓடியது.

பிறகு நாகேஸ்வரராவ் தயாரித்த ‘எங்கள் வீட்டு மகாலட்சுமி’, ‘மஞ்சள் மகிமை’ ஆகிய இருபடங் களுக்கு வசனம் எழுதினார். எங்கள் வீட்டு மகாலட்சுமிக்கு ஒன்பதாயிரமும், மஞ்சள் மகிமைக்கு பதினைந்தாயிரமும் சம்பளமாக கொடுத்தார்கள்.

இதற்கு அடுத்தபடி நாகேஸ்வரராவ் தயாரித்த படத்தின் பெயர் ‘தூய உள்ளம்’. அந்தப்படத்திற்கு ஸ்ரீதருக்கு இருபத்தைந்தாயிரம் கொடுத்தார்கள். துரதிஷ்டவசமாகப் படம் ஓடவில்லை.

இதன்பிறகு, தமிழில் படம் தயாரிப்பதை நாகேஸ்வரராவ் நிறுத்திக் கொண்டார். தெலுங்கில் மட்டும் எடுக்கலானார்.

சொந்தப்படம்

இதன்பின் ஸ்ரீதர், அவருடைய நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜன் மூவரும் சேர்ந்து, சொந்தமாகப் படம் எடுக்க தீர்மானித்தார்கள். ‘வீனஸ் பிக்சர்ஸ்’ உதயமாயிற்று.

ஸ்ரீதர் கற்பனை செய்து வைத்திருந்த ‘அமரதீபம்’ கதையைச் சொன்னார். மற்ற இருவருக்கும் அது பிடித்திருந்தது.

கதாநாயகனாக சிவாஜி கணேசனையும், இரு கதாநாயகிகளாக பத்மினி, சாவித்திரி ஆகியோரையும் நடிக்க வைப்பது என்றும், இயக்குனராக பிரகாஷ்ராவ், இசையமைப்பாளராக சலபதிராவ் ஆகியோரை ஒப்பந்தம் செய்யலாம் என்றும் தீர்மானித்தனர்.

ஆனால் படம் தயாரிக்க போதிய பணம் இல்லை. சிவாஜியிடம் ஸ்ரீதர் சென்று அமரதீபம் கதையைச் சொன்னார். கதை அவருக்கு பிடித்துவிட்டது. ‘கதை பிரமாதம்’ என்று ஸ்ரீதர் கையைப் பிடித்து குலுக்கினார்.

உடனே ஸ்ரீதர், ‘‘அண்ணே! உங்களுக்கு அட்வான்ஸ் கொடுக்க இப்போது எங்களிடம் பணம் இல்லை. உங்கள் பெயரைப் போட்டு விளம்பரம் செய்ய அனுமதி கொடுங்கள். விளம்பரத்தைப் பார்த்தால், விநியோகஸ்தர்களும் பைனான்சியர்களும் பணம் கொடுப்பார்கள். அப்போது உங்களுக்கு அட்வான்ஸ் தருகிறோம்’’ என்றார்.

சிவாஜி ஒரு புன்னகையுடன் சம்மதம் தெரிவித்தார்.

பத்மினி, சாவித்திரி ஆகியோரும் ஸ்ரீதரின் கோரிக்கையை ஏற்றனர்.

நாளிதழ்களில் ‘அமரதீபம்’ பற்றி முழுப்பக்க விளம்பரங்கள் வெளிவந்தன. அதைப் பார்த்த பைனான்சியர்கள், முதலீடு செய்ய போட்டி போட்டுக் கொண்டு முன்வந்தனர். படவேலைகள் வேகமாகத் தொடங்கியது.

கல்யாணப் பரிசு

உத்தமபுத்திரன் படத்திற்கு அடுத்தபடி என்ன படம் தயாரிக்கலாம் என்று ஸ்ரீதரும், வீனஸ் பிக்சர்ஸ் பங்குதாரர்களும் ஆலோசித்தார்கள்.

ஸ்ரீதர் மனதில் அப்போது ‘கல்யாணப்பரிசு’ கதை உருவாகியிருந்தது. அதை சொன்னார். கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜன் இருவருக்கும் கதைபிடிக்கவில்லை. ‘‘நீ எழுதிய அமரதீபம் கதையில் ஒரு இளைஞனை இரண்டு பெண்கள் காதலிக்கிறார்கள். இந்தக் கதையும் அது மாதிரியே இருக்கிறது. இது வேண்டாம். வேறு கதை யோசி’’ என்றார் கிருஷ்ணமூர்த்தி.

பிறகு ஒருநாள் கடற்கரையில் ஸ்ரீதர், ‘சித்ராலயா’ கோபு, ஒளிப்பதிவாளர் வின்சென்ட், உதவி ஒளிப்பதிவாளர் சுந்தரம், ‘ஸ்டில்’ திருச்சி அருணாசலம் ஆகியோர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். நண்பர்களிடம் ‘கல்யாணப்பரிசு’ கதையைச் சொன்னார், ஸ்ரீதர்.

கதையை கேட்டவர்கள், ‘‘ஆஹா! பிரமாதம்!’’ என்று புகழ்ந்தார்கள். ‘‘இந்த கதையையா கிருஷ்ணமூர்த்தி நிராகரித்தார்!’’ என்று வியப்பு தெரிவித்தனர்.

ஸ்ரீதருக்கு மகிழ்ச்சியும், நம்பிக்கையும் ஏற்பட்டன. கதைக்கு மேலும் மெருகேற்றி, மீண்டும் கிருஷ்ணமூர்த்தியிடம் சொன்னார். அப்படியும் அவர் திருப்தி அடையவில்லை. ‘‘சரி, வேறுவழி இல்லை என்றால் இக்கதையை எடுப்போம்’’ என்று அரை மனதுடன் சொன்னார்.

படத்தை யார் இயக்குவது என்ற கேள்வி எழுந்தது.

‘‘ஸ்ரீதர் இந்தக்கதையை அணுஅணுவாக ரசித்து உருவாக்கி இருக்கிறார். அவரே இயக்கினால் நன்றாக இருக்கும்’’ என்று சித்ராலயா கோபு, வின்சென்ட், திருச்சி அருணாசலம் ஆகியோர் சொன்னார்கள்.

அதற்கும் கிருஷ்ணமூர்த்தி அரை மனதுடன் சம்மதித்தார்.

இயக்குனர் ஆக வேண்டும் என்ற எண்ணம் ஏற்கனவே ஸ்ரீதருக்கு இருந்தது. எனவே, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்தார்.

அதே சமயம், முன் ஜாக்கிரதையுடன், ‘‘முதல் பகுதியை நான் இயக்குகிறேன். அதை போட்டுப்பார்ப்போம். படம் நன்றாக இருந்தால் தொடர்ந்து இயக்குகிறேன். திருப்தி இல்லை என்றால், வேறு யாராவது இயக்கட்டும்’’ என்று கூறினார்.

இதற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்தனர்.

சரோஜா தேவி

‘கல்யாணப்பரிசு’ படத்தின் ஹீரோவாக, ஜெமினி கணேசன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

பி.ஆர்.பந்தலு தயாரித்த ‘தங்கமலை ரகசியம்’ படத்தில் நடனக்காட்சி ஒன்றில் சரோஜாதேவி இடம் பெற்றிருந்தார். அவர் தோற்றமும், முகபாவங்களை வெளிப்படுத்திய விதமும் சிறப்பாக இருந்ததால், கதாநாயகி வேடத்திற்கு அவர் தேர்வு செய்யப்பட்டார்.

அவருடைய அக்காவாக நடிக்க விஜயகுமாரி ஒப்பந்தம் ஆனார். படப்பிடிப்பு தொடங்கியது. ஒரு பகுதி தயாரானதும், படத்தைப் போட்டுப் பார்த்தார்கள். படத்தில் புதுமையும் இளமையும் கைகோர்த்திருந்ததை எல்லோரும் உணர்ந்து ‘ஓகே’ சொன்னார்கள்.

படம் வேகமாக வளர்ந்தது. முதல் பிரதி தயாரானதும் போட்டுப்பார்த்தார்கள்.

கிருஷ்ணமூர்த்திக்கு கிளைமாக்ஸ் பிடிக்கவில்லை, ‘மாற்றிவிடலாம்’ என்றார்.

படம் பார்த்தவர்களில் சிலர் ஸ்ரீதருக்கு ஆதரவாக இருந்தார்கள். வேறு சிலர், கிருஷ்ணமூர்த்தியின் கருத்தை ஆதரித்தார்கள்.

ஸ்ரீதர் ஒரு சமரச யோசனையைத் தெரிவித்தார். ‘‘சில பிரிண்டுகள் இந்த கிளைமாக்சுடன் இப்படியே போகட்டும். வேறு சில பிரிண்டுகளில் கிளைமாக்சை மாற்றி ரிலீஸ் செய்வோம். மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு, பிறகு ஒரே மாதிரி கிளைமாக்ஸ் வைப்போம்’’ என்று கூறினார்.

கிருஷ்ணமூர்த்தி சிறிது யோசித்தார். பிறகு, ‘‘அதெல்லாம் வேண்டாம்பா. உன் இஷ்டப்படியே கிளைமாக்ஸ் இருக்கட்டும்’’ என்று சொல்லிவிட்டார்.

நிம்மதி அடைந்த ஸ்ரீதர், கிருஷ்ணமூர்த்திக்கு நன்றி தெரிவித்தார்.

1959, ஏப்ரல் 9–ந்தேதி கல்யாணப்பரிசு வெளியானது. ரசிகர்களின் தீர்ப்பை அறிவதற்கு, நண்பர்களுடன் காசினோ தியேட்டருக்குச் சென்றார், ஸ்ரீதர். பால்கனியில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தார்.

படத்தில் முக்கியமான கட்டம். தன் சகோதரிக்காக தன் காதலை தியாகம் செய்ய முடிவு செய்யும் கதாநாயகி, அது பற்றி தன் காதலனிடம் கேவிக்கேவி வசனம் பேசுகிறாள்.

‘‘அத்தான் (கேவல்)... நீங்கள் (கேவல்).... என்னுடைய (கேவல்)... இப்படி கேவலுடன் கதாநாயகி பேசியபோது தியேட்டரில் நூற்றுக்கணக்கான ‘கேவல்’கள் ஒலித்தன. அதாவது அந்த உருக்கமான கட்டத்தில் அதிகமான கேவல்கள் வந்ததால் ரசிகர்கள் கேலி செய்கிறார்கள் என்பதை ஸ்ரீதர் புரிந்து கொண்டார். ‘‘வார்த்தைக்கு வார்த்தை கேவல் ஒலி கொடுக்கச் சொல்லி, தவறு செய்து விட்டோமே’’ என்று தன்னைத்தானே நொந்து கொண்டார், ஸ்ரீதர்.

‘‘படம் அடிவாங்கி விட்டது. கிளம்புங்கள், போகலாம்’’ என்று நண்பர்களிடம் கூறிவிட்டு, வெளியே சென்றார், ஸ்ரீதர்.

அவருடைய மனநிலையை புரிந்து கொண்டார், தியேட்டர் மானேஜர். ‘‘பாதிப்படத்தில் போகாதீர்கள் சார். கொஞ்ச நேரம் ஆபீஸ் ரூமில் இருங்கள். படம் முடியும் போது தான் ரசிகர்களின் சரியான ரியாக்ஷன் தெரியவரும்’’ என்றார்.

வேறுவழியின்றி அதற்கு ஸ்ரீதர் சம்மதித்தார்.

படம் முடிந்தது. வெளியே வந்த ரசிகர்கள், ‘‘படம் பிரமாதம்’’ என்றும் ‘‘கிளைமாக்ஸ் அற்புதம்; ஸ்ரீதர் டைரக்ஷன் அபாரம்’’ என்றும் கூறிக்கொண்டு போனது ஸ்ரீதர் காதில் விழுந்தது. மகிழ்ச்சியால் திளைத்தார். கதாநாயகி மீண்டும் மீண்டும் கேவிய அந்த ஒரு கட்டம் தவிர, மற்றபடி படம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டார்.

படம் வெற்றி பெற்றுவிட்டது. என்பதை வீனஸ் யூனிட் தெரிந்து கொண்டது. என்றாலும், அந்த வெற்றி மிகவும் பிரமாண்டமானதாக – வரலாற்றுச் சிறப்பு கொண்டதாக இருக்கும் என்று நினைக்கவில்லை.

திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் 100 நாட்கள் வெள்ளிவிழா என்று ஓடி சாதனை படைத்தது, ‘கல்யாணப்பரிசு’.

இயக்குனர்களில் நட்சத்திர அந்தஸ்து பெற்றார், ஸ்ரீதர்.

இந்தியில் கல்யாணப்பரிசு

‘கல்யாணப்பரிசு’ பிறகு இந்தியில் ‘நஸ்ரானா’ என்ற பெயரில் படமாக்கப்பட்டது. கதாநாயகனாக ராஜ்கபூரும், கதாநாயகியாக வைஜெயந்தி மாலாவும் நடித்தார்கள் டைரக்ஷன் ஸ்ரீதர்.

இந்திப்படமும் பெரிய வெற்றி பெற்றது.

‘மீண்ட சொர்க்கம்’, (ஜெமினி கணேசன், பத்மினி), ‘விடிவெள்ளி’ (சிவாஜி கணேசன், சரோஜாதேவி) ஆகிய படங்களும் ஸ்ரீதருக்கு புகழ் சேர்த்தன.

வெளிப்படங்களையும் ஸ்ரீதர் இயக்குவது குறித்து, வீனஸ் பிக்சர்ஸ் பங்குதாரர்களிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது. இதனால் வீனஸை விட்டு விலகிய ஸ்ரீதர், ‘சித்ராலயா’ பட நிறுவனத்தை தொடங்கினார்.

இதன் முதல் தயாரிப்பு: ‘தேன் நிலவு’. அப்படத்தில் ஜெமினி கணேசனும், வைஜெயந்தி மாலாவும் இணைந்து நடித்தனர். ஸ்ரீதரின் சாதனைகள் தொடர்ந்தன.

திருமணம்

இதற்கிடையே, 1963–ம் ஆண்டு அக்டோபர் 28–ந் தேதி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஆபஸ்ட்டரி மாளிகையில் ஸ்ரீதரின் திருமணம் நடந்தது. மணமகள் பெயர் தேவசேனா. அப்போது அவர் ராணிமேரி கல்லூரி மாணவி. திருமணத்திற்குப் பிறகும் அவர் படிப்பைத் தொடர்ந்தார்.

திருமணத்திற்கு பிறகு ஸ்ரீதர் உருவாக்கிய படம் ‘‘காதலிக்க நேரமில்லை’’. முழு நீள நகைச்சுவை படம். அதுவும் வண்ணப்படம்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்குப் படிக்க வந்த ரவிச்சந்திரன் கதாநாயகன் ஆனார். விமானத்தில் ‘ஏர் ஹோஸ்ட்டஸ்’ பணியில் இருந்தது வசுந்தரா. அவர் ‘காஞ்சனா’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு கதாநாயகி ஆனார். முத்துராமன், டி.எஸ்.பாலையா, ராஜஸ்ரீ, நாகேஷ் ஆகியோரும் நடித்தனர். படம் பெரிய வெற்றி பெற்றது.

ஜெயலலிதா அறிமுகம்

‘‘காதலிக்க நேரமில்லை’’ படத்திற்கு பிறகு ஸ்ரீதர் எடுத்தபடம் ‘வெண்ணிற ஆடை’. இந்தப்படத்தில் தான் இன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிமுகம் ஆனார்.

கதாநாயகன் வேடத்துக்கு ஸ்ரீகாந்த் ஒப்பந்தம் ஆனார். மற்றும் மூர்த்தி, நிர்மலா ஆகிய புதுமுகங்களும் நடித்தனர். (இவர்கள் பிறகு ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி, என்றும் ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா என்றும் அழைக்கப்பட்டனர்)

14–4–1965 அன்று ‘வெண்ணிற ஆடை’ ரிலீஸ் ஆகியது. முற்றிலும் புதுமுகங்கள் நடித்த காரணத்தால், ஆரம்பத்தில் வரவேற்பு சுமாராக இருந்தபோதிலும், போகப்போக கூட்டம் அதிகரித்து, படம் 100 நாட்கள் ஓடியது.

ஸ்ரீதரின் வெற்றிப்பயணம் தொடர்ந்தது. ஒருபடத்தை வெளிநாடுகளுக்குச் சென்று பிரமாண்டமாகத் தயாரிக்க எண்ணிய ஸ்ரீதர், சிவாஜி கணேசனையும், காஞ்சனாவையும் நடிக்க வைத்து, ‘சிவந்த மண்’ படத்தை எடுத்தார்.

படம் வெற்றிகரமாக ஓடியது. பிற்காலத்தில் சில இந்திப்படங்கள் சரியாக ஓடவில்லை. தமிழிலும் ‘ஓ மஞ்சு’, ‘அலைகள்’ தோல்வி அடைந்தன. அதனால் சித்ராலயா நிறுவனம் நஷ்டம் அடைந்தது.

நிலைமையை சமாளிக்க, எம்.ஜி.ஆரை ஸ்ரீதர் சந்தித்துப் பேசினார்.ஸ்ரீதர் இயக்கத்தில் ‘உரிமைக்குரல்’ படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர். சம்மதித்தார். இந்தப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக லதா நடித்தார்.படம் பெரும் வெற்றி பெற்றது. ‘சித்ராலயா’வின் பொருளாதாரம் சீரடைந்தது.

இதற்கிடையே, ஸ்ரீதரை பக்கவாத நோய் தாக்கியது. அதனால் அவரால் மேலும் சினிமா இயக்க முடியவில்லை. சக்கர நாற்காலியில் தான் நடமாடினார்.

தமிழ்த்திரை உலகில் சரித்திர சாதனைகள் நிகழ்த்திய ஸ்ரீதர் 20–10–2008 அன்று காலமானார்.
Image may contain: 1 person, meme and text

No comments:

Post a Comment