Thursday, 30 July 2020

PATTUKOTTAI PRABHAKAR WRITER BORN 1958 JULY 30



PATTUKOTTAI  PRABHAKAR WRITER BORN 1958 JULY 30

பட்டுக்கோட்டை பிரபாகர்

பட்டுக்கோட்டை பிரபாகர் (Pattukkottai Prabakar) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாகவும், தனிஇதழ்களாகவும் வெளிவந்துள்ளன.இவரது புதினங்கள் பெரும்பாலும் துப்பறியும் கதைகளையுடையவையாகும். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 30-7-1958 அன்று இராதாகிருஷ்ணன் & சந்திரா தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஸ்வர்னரம்யா, ஸ்வர்னபிரியா ஆகிய இருமகள்கள் உள்ளனர்.


பட்டுக்கோட்டை பிரபாகர், மற்ற எழுத்தாளர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு இளமை மிகுந்த தோற்றத்துக்கு சொந்தக்காரர். அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை, அவரது எழுத்துக்களிலும் நீடித்திருப்பதே பட்டுக்கோட்டைப் பிரபாகரின் வெற்றிக்குக் காரணம். 1980களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் தலையாரி தெரு, பட்டுக்கோட்டை என்ற முகவரி வாசகர்களுக்கு மனப்பாடம். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த அவருடைய "தொட்டால் தொடரும்" ," கனவுகள் இலவசம்" ஆகிய கதைகள் இன்றும் வாசகர்களால் விரும்பிப் படிக்கப் படுபவை. அன்றிலிருந்து இன்று வரையிலும் தனது துள்ளலான நடை மற்றும் வசீகரமான கதை சொல்லும் முறையால் அடுத்தடுத்த தலைமுறை வாசகர்களையும் வென்று நூற்றுக் கணக்கான சிறுகதைகள் , நாவல்கள்,தொடர் கதைகள் ,தொலைக் காட்சித் தொடர்கள் , திரைப்படங்கள் என்று எழுத்தின் அத்தனை தளங்களிலும் தனது முத்திரயேத் தொடர்ந்து பதித்துவரும் பட்டுக் கோட்டை பிரபாகரின் புகழ் பெற்ற நாவல்களின் தொகுப்பு பிருந்தாவனமும் நொந்த குமாரனும். காதல், குடும்பம், கிரைம் பின்னணியில் கதை பின்னுவது பட்டுக்கோட்டையாரின் கோட்டையாக இருந்தாலும், சிரிக்க வைக்கும் பணி சீரிய பணி என்பதை நன்கு உணர்ந்தவர். கல்லூரியில் மேடை நாடகங்கள் எழுதிய காலம் தொட்டு தன்னைக் கவர்ந்த கலை, இலக்கிய நாடகத்துறை விற்பன்னர்களின் நகைச்சுவை உணர்வால் உந்தப்பட்டு நாவல்கள் எழுதி வருகிறார்.

`வானப்பிரஸ்த நிலை' நோக்கிப் பயணிப்பவன் நான்" - பட்டுக்கோட்டை பிரபாகர்! #WhatSpiritualityMeansToMe

தமிழ் எழுத்துலகில் தேனீயைப் போல் இயங்கி வருபவர் பட்டுக்கோட்டை பிரபாகர். பல நூறு சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள்  எழுதிக் குவித்தவர். திரைப்படங்களுக்கும் கதை வசனம் எழுதி வருகிறார். அவ்வளவு ஏன் இந்த வாரம் வெளியான இமைக்கா நொடிகள் படத்துக்குக்கூட இவர் தான் வசனம்  பட்டுக்கோட்டைபிரபாகரின் ஆன்மிகம் எப்படியானது. அவரது பார்வையில் வழிபாடென்பது என்ன?
அவரைச் சந்தித்துப் பேசினேன்.  

``ஆன்மிகத்துல எனக்குப் பெரிய ஈடுபாடு கிடையாது. அதுக்காக நான் நாத்திகவாதியும் கிடையாது. கேள்விகளுடன் இருக்கும் ஒரு மனிதன்... அவ்வளவுதான். என்னிடம் நிறைய கேள்விகள் இருக்கு. ஆன்மிகத்துல நிறைய கலப்படம் வந்துடுச்சுங்கிறது உண்மை.  பியூரான ஆன்மிகங்கிறது இப்போ இல்ல. பார்வை இல்லாதவன் யானையைப் பார்த்த மாதிரி, ஆன்மிகத்துல ஆள் ஆளுக்குக் கருத்துகளை அள்ளிப்போட்டு அதை வேறுமாதிரியான புரிதலுக்குக் கொண்டு போய்விட்டுட்டாங்க. இன்றைய ஆன்மிகங்கிறது அவரவர் புரிதல்ங்கிற மாதிரிதான் இருக்கு. பொதுவான புரிதலுக்கு வந்த மாதிரி எந்த ஆன்மிகமும் இல்ல.

எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. எல்லா மகான்களும் அன்பைத்தான் போதிக்கிறாங்க. அன்பு மட்டுமே அல்டிமேட்டா இருக்கிறபட்சத்துல, `என் ஆன்மிகம் சிறந்தது, உன் ஆன்மிகம்தான் சிறந்தது'ன்னு சண்டை போட்டுக்கிறதுல எந்தவித அர்த்தமும் இல்ல. போக வேண்டிய இடம் எல்லாருக்கும் ஒண்ணுதான். ஒருத்தன், பஸ்சுல போறான். ஒருத்தன் நடந்து போறான். ஒருத்தன் ஃப்ளைட்ல போறான். ஒருத்தன் உருண்டு புரண்டு போறான். அவ்வளவுதானேயொழிய, வேற எதுவும் இல்ல. ஆனா, இந்த ஆன்மிகத்தைக் கடைப்பிடிப்பதற்கு ஒவ்வொரு மதமும் சொல்ற சடங்குகள் சம்பிரதாயங்கள்ல எனக்குக் கேள்விகள் இருக்கு. 

அதனால, ஆன்மிகத்துல கேள்விகளுடன் நிற்கிற மனுஷனாத்தான் நான் இருக்கேன். ஆனா, அதுக்காக, அதன் மேல எந்தவித விமர்சனங்களையும் நான் வைக்கமாட்டேன். ஆன்மிகத்துல இருக்கறவங்களை முட்டாள்னு நான் சொல்லமாட்டேன்.திருமண பந்தத்தைப் பொறுத்தவரை, சீர்த்திருத்த திருமணத்தில் எனக்கு நம்பிக்கையுண்டு. ஆனா, என் குடும்பத்தினருக்கோ சடங்கு சம்பிரதாயத்துடன் நடக்கும் திருமணத்தில்தான் நம்பிக்கை. 

என்னுடைய ரெண்டு மகள்களுக்கும் வைதீக முறையிலதான் திருமணம் நடந்துச்சு. அது, காம்ப்ரமைஸ். அவங்களோட எண்ணங்களையும்  உணர்வுகளையும் மதிக்கணுமில்லையா, அதுக்காக. அதுக்கு நான் தடையா இருக்கமாட்டேன். ஆனா, என் விருப்பத்துக்காக, தலைவர்கள், பிரபலங்களையெல்லாம் அழைச்சு அவங்க வாழ்த்துரைகளையும் சேர்த்துவச்சு, திருமணத்தை நடத்துனேன். என்னுடைய திருமணமும் அப்படித்தான் நடந்துச்சு. 
கோயிலுக்கு மனைவி, பிள்ளைகள், நண்பர்கள், உறவினர்கள் கூப்பிட்டாங்கன்னா கண்டிப்பாப் போவேன். அங்கே போயிட்டு, `நீங்க போய் சாமி கும்பிட்டு வாங்க'னு சொல்லிட்டு வெளியில இருக்க மாட்டேன். அவங்ககூடவே போய் சாமி கும்பிடுவேன். ஆனா, நானாக தனியா ஒருமுறைகூட கோயிலுக்குப் போனதில்ல.   

இந்த மாதிரி, `டிட்டாச்சுடு வித் அட்டாச்மென்ட்டா'தான் நான் இருக்க விரும்புறேன். இதை, `வானப்பிரஸ்த நிலை'னு சொல்வாங்க. எப்பேர்பட்ட மனுஷனும் ஒண்ணு பணத்துல விழுந்துடுவான். இல்ல பாசத்துல விழுந்துடுவான். அந்த இடத்துக்கு நான் இன்னும் வரலை. அதை நோக்கித்தான் நான் பயணம் பண்ணுறேன். இதை வாழ்க்கையிலும் கடைப்பிடிக்கிறேன். அது பலவிதத்துல வெற்றி தோல்விகளைச் சமமா எடுத்துக்கிறதுக்கு உதவியா இருக்கு. ஆனா, அந்த இடத்துக்கு அவ்வளவு ஈஸியா நம்மால போயிட முடியாது. கடவுள், ஆன்மிகம் குறித்த தேடல் எல்லா மனிதர்களிடமும் நிச்சயம் இருக்கும். நானும் 1996-ல ஈஷா யோக மையத்துல தியானம், யோகா  பயிற்சிகளை எடுத்துக்கிட்டேன். அது என்னை நான் உணர்றதுக்குப் பெரிய அளவுல உதவியா இருந்துச்சு.

சென்னை அடையாறுல இருக்கிற அனந்த பத்மநாபன் கோயிலுக்கு நானும் மனைவியும் வாரா வாரம் போவோம். அப்புறம் சீரடி சாய்பாபா மேல ஈடுபாடு வந்துச்சு. ரொம்ப எளிமையா வாழ்ந்துகாட்டி நிறைய அற்புதங்களை நிகழ்த்திக்கிட்டு இருக்கார். உண்மையா ஒரு ஞானி எப்படி இருக்கணும்ங்கிறதுக்கு சீரடி சாய்பாபாவோட வாழ்க்கை உதாரணமா இருக்கு. சீரடிக்கு நானும் ஒருமுறை போயிட்டு வந்திருக்கேன்'' 

சிலிர்ப்பாகச் சொல்லி முடிக்கிறார் பட்டுக்கோட்டை பிரபாகர்!  

பட்டுக்கோட்டை குமாரவேல், பட்டுக்கோட்டை அழகிரி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என பட்டுக்கோட்டைக்குச் சிறப்புச் சேர்த்த பெரியவர்கள் பலருண்டு என்றாலும், பட்டுக்கோட்டை என்றதுமே எனக்குச் சட்டென்று நினைவுக்கு வருகிற பெயர் பட்டுக்கோட்டை பிரபாகர்.

சாவியில் நான் பணியில் சேர்ந்து, வெறுமே புரூஃப் பார்ப்பதோடு நிற்காமல், இதழுக்குப் பொறுப்பேற்று பத்திரிகைத் தயாரிப்புப் பணியிலும் ஈடுபட்டபோது, நான் என் விருப்பத்துக்கேற்ப ஒரு வி.ஐ.பி. எழுத்தாளரிடம் தொடர்கதை கேட்டு வாங்கிப் பிரசுரித்தேன் என்றால், அது பட்டுக்கோட்டை பிரபாகரிடம்தான். (அதற்கு முன்பு மோனா மாதமிருமுறை இதழுக்குப் பொறுப்பேற்றிருந்தபோது, நான் முதன்முதல் என் விருப்பத்துக்கேற்ப நாவல் வாங்கி வெளியிட்டது எழுத்தாளர் ராஜேஷ்குமாரிடம். அது பற்றி முன்பு ஒருமுறை பதிவு எழுதியிருக்கிறேன்.)

பத்திரிகைத் துறைக்கு வருவதற்கு முன் நான் அதிகம் படித்தது மௌனி, லா.ச.ரா., புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன்... இவர்கள் யாருடைய கதைகளையும் அல்ல. ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் இவர்கள் இருவருடைய சிறுகதைகளையும், மாத நாவல்களையும் மட்டுமே நான் அதிகம் படித்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன்.

ராஜேஷ்குமாரின் நாவல் எடுத்த எடுப்பில் யமஹா பைக் மாதிரி குபுக்கென்று வேகமெடுத்துக் கிளம்பும். வர்ணனைகளைவிட கதையின் பரபரப்புக்கும் திடுக் திருப்பங்களுக்கும் அவர் கதைகளில் அதிக முக்கியத்துவம் இருக்கும். படிக்கத் தொடங்கிவிட்டால், முடிக்கும் வரை கீழே வைக்கமுடியாது. அத்தனை விறுவிறுப்பாக இருக்கும்.

பட்டுக்கோட்டை பிரபாகர் கதை வேறு ரகம். மாத நாவல்களைப் பொறுத்தவரையில் முதல் அத்தியாயம் ஓர் இனிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிற விதமாக, ரசனையாகச் செல்லும். இரண்டாம் அத்தியாயத்தில்தான் முக்கிய கதைக்குள் நுழைவார். சில வர்ணனைகளைப் படித்தபின், புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, அந்த வர்ணனைகளை மீண்டும் மனசுக்குள் காட்சியாக்கி ஓட்டிப் பார்த்து, அந்த ரசனையில் திளைப்பது எனக்கு மிகவும் விருப்பம். இதனால், அவரது நாவலைப் படித்து முடிக்க ரொம்ப நேரமாகிவிடும். ஒரே மூச்சில் படிக்க வேண்டுமென்று தோன்றாது. அனுபவித்து அனுபவித்துப் படிப்பேன்.

ராஜேஷ்குமாரின் கதை சூடும் சுவையும் உள்ள உயர்தரமான காபி என்றால், பட்டுக்கோட்டை பிரபாகரின் கதை நிதானமாகப் பருகவேண்டிய பழரசம். திரையுலகில் எம்.ஜி.ஆர்., சிவாஜி - ரஜினி, கமல் என்கிற மாதிரி ராஜேஷ்குமார் - பட்டுக்கோட்டை பிரபாகர் இருவரும் நாவல் உலகில் இரு பெரும் தூண்கள் என்பது என் கருத்து.

எண்பதுகளில், திருச்சியில் உள்ள என் உறவினர் ஒருவரின் வீட்டுக்குப் போயிருந்தபோது, அங்கே அவர்கள் சாவி பத்திரிகையைத் தொடர்ந்து வாங்கிப் படிப்பது தெரிந்தது. ஆரம்ப இதழ் முதல் அனைத்தையும் பைண்டு செய்து வைத்திருந்தார்கள். சாவி என்றொரு பத்திரிகையை முதன்முதல் அங்கேதான் பார்த்தேன். அதில் ஒரு நெடுங்கதையைப் படித்தேன். தலைப்பு ஞாபகம் இல்லை.

நாலைந்து நண்பர்கள். அவர்களில் ஒருவன், துப்பறியும் சிங்கமாக வேண்டும் என்று ஆர்வம் கொண்டு, எப்போதும் அது பற்றியே பேசிக்கொண்டு இருப்பான். ஒருமுறை, அவன் துப்பறியும் வேட்கைக்குத் தீனி போடுவதாக ஒரு சம்பவம் நிகழும். ரிமோட் ஏரியாவில் உள்ள ஒரு வீட்டில், ஜன்னல் வழியே எட்டிப் பார்க்க, ஹாலில் ஒரு பெண் கொலையுண்டு கிடப்பது தெரியும். போலீசுக்கு போன் செய்து வரவழைத்து, அதிரடியாக அந்த வீட்டின் கதவைத் தட்டி உள்ளே போனால், யாரும் கொலையுண்டதற்கான தடயமே இருக்காது. தான் கண்ணால் பார்த்ததாகச் சொல்வான். ‘மாடியில் என் மகள் படித்துக்கொண்டு இருக்கிறாள். அவளைத் தவிர, வேறு பெண்கள் கிடையாது’ என்று சொல்லி, அவளைக் கீழே கூப்பிடுவார் அந்த வீட்டின் ஓனர். அவள் கீழே இறங்கி வர, ‘இவள்... இவள்தான் இறந்துகிடந்தாள்’ என்று அலறுவான்.

இப்படியாக, மிக மர்மமாகச் செல்லும் கதை கடைசியில், அவனது துப்பறியும் வேட்கைக்குத் தீனி போடுவதற்காக நண்பர்களாகச் செய்த செட்டப் அது என்று முடியும். ரொம்பவும் ரசித்துப் படித்தேன். லயித்துப் படித்தேன். யார் எழுதிய கதை இது என்று பெயரைப் பார்த்தேன். பட்டுக்கோட்டை பிரபாகர் என்ற பெயர் எனக்குப் பரிச்சயமானது அப்போதுதான்.

அதன்பின்பு, பட்டுக்கோட்டை பிரபாகரின் தொடர்கதை (அது அவரின் முதல் தொடர்கதை) ஒன்று சாவி இதழில் வெளியானது. மன்னிக்கவும், அதன் தலைப்பும் மறந்துவிட்டது. (வயசாகிறது அல்லவா!) யார் எழுதுகிறார் என்று கதாசிரியர் பெயரே இல்லாமல் வெளியான தொடர்கதை அது. கதையின் விறுவிறுப்பிலும் சுவாரசியத்திலும், அதை எழுதுவது யார் என்று தெரிந்துகொள்ள சாவி வாசகர்கள் பெரிதும் ஆர்வப்பட்டார்கள். நானும்! பட்டுக்கோட்டை பிரபாகர் என்று கடைசி அத்தியாயத்தில் பெயரை வெளியிட்டார்கள். பட்டுக்கோட்டை பிரபாகர் என்ற பெயர் என் மனதில் பதிந்தது அப்போதுதான்!

எழுத்தாளரின் பெயரை வாசகர்களின் மனதில் நிலை நிறுத்த சாவி சார் கையாண்ட உத்தி அது. அவரே ஆனந்தவிகடனில் ‘வாஷிங்டனில் திருமணம்’ எழுதியபோது, தன் பெயரையே போட்டுக் கொள்ளாமல், கடைசி அத்தியாயத்தில்தானே பெயரை வெளியிட்டார்! அவருக்குப் பின் அதே பாணியில் கடைசி அத்தியாயத்தில் தன் பெயரை வெளிப்படுத்திக்கொண்டவர் எனக்குத் தெரிந்து பட்டுக்கோட்டை பிரபாகர் மட்டும்தான். சாவி ‘ஆப்பிள் பசி’ என்று நாவல் எழுதினார். அந்தத் தலைப்பை மிகவும் ரசித்து, அதே பாணியில் ‘விஸ்கி தாகம்’ என்று தலைப்பிட்டு ஒரு நாவல் எழுதினார் பட்டுக்கோட்டை பிரபாகர்.

வர்ணனைகளே இல்லாமல் வெறுமே டயலாக்குகளிலேயே ஒரு நாவல் எழுதியுள்ளார் பிரபாகர். (தலைப்பு ‘தொடரும்’ என நினைக்கிறேன்). முழுக்க முழுக்க நகைச்சுவையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஒரு நாவல் எழுதினார் (இதன் தலைப்பு ‘பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்’ என நினைக்கிறேன்). இப்படி அவரது பல நாவல்களை நான் ரசித்துப் படித்திருக்கிறேன். ‘ஆகாயத்தில் ஆரம்பம்’ என்று ஒரு மாத நாவல். விமானத்தில் ஒரு விஞ்ஞானியைக் கடத்துவார்கள். விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத கதை அது.

பிரபாகரின் நாவலில்தான் முதன்முறையாக வில்லன்கள் கொடூரமாகப் பேசாமல், காமெடியாகப் பேசி நான் படித்திருக்கிறேன்.

சாவியில் பொறுப்பேற்றபோது, தொடர்கதை கேட்டு பட்டுக்கோட்டை பிரபாகருக்கு ஒரு கடிதம் எழுதினேன். ‘அடுத்த வாரம் விளம்பரத்தில் அறிவிக்க ஒரு தலைப்பு கொடுங்கள்’ என்று என் கடிதத்தில் கேட்டிருந்தேன். ‘சாவியிலிருந்து கதை கேட்டுக் கொடுக்காமல் இருப்பேனா’ என நெகிழ்ச்சியோடு, உடனே பதில் போட்டிருந்தார். கதைத் தலைப்பு: திண்ணை வைத்த வீடு. அந்த இதழிலேயே விரைவில் பட்டுக்கோட்டை பிரபாகரின் புதிய தொடர்கதை ‘திண்ணை வைத்த வீடு’ ஆரம்பிக்கவிருப்பதாக சாவியில் அறிவிப்பு வெளியிட்டுவிட்டேன். சொன்னது போலவே உடனடியாக முதல் அத்தியாயத்தை எழுதி, உடனே அனுப்பி விட்டார். ஆழ்ந்து அனுபவித்துப் படித்து ரசிக்க வேண்டிய தொடர்கதை அது.

பின்னர் நான் விகடனில் சேரும் வரைக்கும்... ஏன், சேர்ந்து பல வருடங்களுக்குப் பிறகும்கூட பட்டுக்கோட்டை பிரபாகரை நேரில் சந்தித்ததில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு, தன் மகள் திருமணப் பத்திரிகை கொடுப்பதற்காக விகடன் அலுவலகம் வந்திருந்தார். அப்போது சந்தித்ததுதான்! அதற்கு முன்பு வரை வெறும் தொலைபேசித் தொடர்புதான்.

திருமணப் பத்திரிகையையும் புதுமையான முறையில் வெளியிட்டிருந்தார். ஒரு சி.டி. தயார் செய்து, அதில் இன்விடேஷன், மணமகன், மணமகள் புகைப்பட ஆல்பம் மட்டுமின்றி, சார்லி சாப்ளின், லாரல்-ஹார்டி காமெடிக் காட்சிகளையும் பதிந்து தந்திருந்தார். ரசனை மனம் உள்ளவர்களால் மட்டுமே இப்படியெல்லாம் யோசிக்க முடியும்.

அவரின் மகள் திருமணம் சென்னை, விஜயா மஹாலில் (பழைய நாகேஷ் தியேட்டர்) நடந்தது. அதற்குச் சென்றிருந்தேன். அங்கேதான் முதன்முறையாக ராஜேஷ்குமாரையும் சந்தித்தேன்.

ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் தன் நண்பர்களுக்கெல்லாம் புத்தாண்டு வாழ்த்து அனுப்பி வைத்துவிடுவார் பட்டுக்கோட்டை பிரபாகர். ஒவ்வொரு முறையும் ஒரு ‘தீம்’ எடுத்துக்கொண்டு, விசேஷ கவனத்தோடு அந்த வாழ்த்து தயாரிக்கப்பட்டிருக்கும். அறிஞர்களின் பொன்மொழிகள், நாம் கடைப்பிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்கள், குட்டிக் குட்டிப் புதுக் கவிதைகள் என வருஷா வருஷம் புத்தாண்டு வாழ்த்து வேறுபடும். இத்தனை வேலைகளுக்கிடையில் எப்படித்தான் இவருக்கு இதற்கெல்லாம் நேரம் கிடைக்கிறதோ என்று பிரமிப்பாக இருக்கும்.

நானெல்லாம் சுத்த சோம்பேறி. புத்தாண்டு வாழ்த்துகளை எஸ்.எம்.எஸ்ஸில் அனுப்புவதற்குக்கூட எனக்குக் கை வராது. ஒரு சில ஆண்டுகள், ரொம்பப் பிரயத்தனப்பட்டு கிரீட்டிங் கார்டுகள் வாங்கிச் சிலருக்கு அனுப்பினேன். புத்தாண்டு தொடங்கி நாலைந்து நாட்களுக்குப் பிறகு கூட நிதானமாக அனுப்பியிருக்கிறேன். வந்த வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்துப் பதில் எழுதுவதற்குக்கூடச் சோம்பேறித்தனம். புத்தாண்டு என்றில்லை; தீபாவளி, பொங்கல் என எந்த விசேஷத்துக்குமே நான் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாழ்த்து அனுப்புவதை ஒரு கடமையாக நினைக்கவில்லை. அதற்காக நான் நண்பர்களை மதிக்கவில்லை என்றோ, மறந்துவிட்டேன் என்றோ அர்த்தமில்லை. தெரியவில்லை; ஏனோ, வாழ்த்துக்கள் அனுப்பத் தோன்றவில்லை.இந்த ஆண்டும் பிரபாகரிடமிருந்து எனக்குப் புத்தாண்டு வாழ்த்து வந்தது. என் புகைப்படத்துடன் கூடிய வாழ்த்து அது. அதைப் பார்த்ததுமே சட்டென்று என் இதயம் நெகிழ்ச்சியில் கரைந்தது. இன்றைக்கு இருக்கும் டெக்னாலஜி முன்னேற்றத்தில் போட்டோவுடன் கூடிய பிரத்யேகமான வாழ்த்து தயார் செய்வது ஒன்றும் கடினமில்லைதான்! ஆனாலும், ஒவ்வொரு நண்பருக்கும் அவருடைய புகைப்படத்துடன் கூடிய வாழ்த்து அனுப்புவோம் என்கிற அந்த எண்ணம்... நட்புக்குக் கொடுக்கும் முக்கியத்துவம், மெனக்கிடல், அந்த அக்கறை, அன்பு... அதற்கு ஈடாக எதையுமே என்னால் சொல்ல முடியவில்லை.

பிரபாகர் - தி கிரேட்!

எனக்கெல்லாம் அவரின் பக்குவம் சுட்டுப் போட்டாலும் வராது. பாருங்களேன்... தொலைபேசியிலோ, எஸ்.எம்.எஸ். மூலமாகவோ, ஈ-மெயிலிலோ அவருக்கு இன்னும் நன்றிகூடத் தெரிவிக்காமல் வலைப்பதிவு எழுதிக்கொண்டு இருக்கிறேன் நான்!

***
அந்நியரை நேசியுங்கள். ஒவ்வொரு சிறந்த நண்பரும் ஒரு சமயம் அந்நியராக இருந்தவர்தான்!


பரிசல்காரன் said...
உங்கள் ஜூனியரில் அவரது நாவலைப் பாராட்டி நான் எழுதிய கடிதத்திற்கு பதில் போடும்போது அவர் எழுதிய ‘நல்ல நடை.. நீங்களும் எழுதலாமே’ என்ற வரிகள்தான் என்னையும் எழுதத் தூண்டியது. பிறகு உ.ஜூ-வின் வாசகர் சிறப்பிதழைத் தயாரிக்க சென்னை சென்றபோது என்னைத் தனியே அழைத்து என் கடிதங்களின் நேர்த்தியையும், எழுத்து நடையையும் பாராட்டினார்.

எழுத்துக்காக எப்போதும் அவருக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருப்பேன்.

பிருந்தாவனமும் நொந்தகுமாரனும், மோனாவில் வெளிவந்த ஒரு நாவல் (செங்கல்வராயன் - ஹீரோ!) என நகைச்சுவையிலும் கொடிகட்டிப் பறந்ந்தவர்! பரத் சுசீலாவை விடுங்கள். தயாளன், அலெக்ஸ் கூட்டணி என்று எழுத்துலகில் அவர் செய்த அதகளம் கொஞ்சமா நஞ்சமா!!

நீங்களாவது ஒரு விஐபி. நான் அவர் வாசகன். எனக்கும் சென்ற ஆண்டுவரை புத்தாண்டு வாழ்த்து அட்டை (நீங்கள் குறிப்பிட்ட ஸ்வர்ணரம்யாவின் திருமண அழைப்பும்கூட) வந்துகொண்டுதான் இருந்தது.



பழைய நாட்களை நினைவுபடுத்திய பதிவு!
.
.






.

No comments:

Post a Comment