Wednesday, 22 July 2020

MAGIC RADHIKA , BIOGRAPHY



MAGIC RADHIKA , BIOGRAPHY




”மாஜிக்” ராதிகா – இவரது பெற்றோரது பூர்வீகம் கேரள மாநிலம் கோட்டயம். இவரது சகோதரியர் கோட்டயத்தில் பிறந்திருந்தாலும் ராதிகா பிறந்தது சென்னையில். சென்னையிலுள்ள குட்ஷெப்பர்டு கான்வெண்டில்தான் இவர் படித்தார். இவருக்கு மலையாளத்தைவிட தமிழே நன்கு தெரியும். ஹீராலால், கோபி கிருஷ்ணா, லக்ஷ்மி நாராயணன் போன்றோரிடம் முறையாக நாட்டியம் கற்றுக் கொண்டார்.  அப்போது இவருக்கு எப்படியேனும் திரைப்படங்களில் நடிக்கவேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டது. இவர் கிளாசிக்கல் டான்ஸ் பலவற்றை நடத்திக் கொண்டிருந்தார். அதைக் காண பல திரைப்படத்துறையைச் சார்ந்தவர்கள் செல்வதுண்டு. அவ்வாறு ஒரு முறை இயக்குநர்


கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இவரது நாட்டியத்தைப் பார்த்துவிட்டு பலவித பயிற்சிகள் கொடுத்து பரிசோதனைகளையெல்லாம் முடித்து ஜெமினிகணேசன், கே.ஆர்.விஜயா ஆகியோரிடம் அபிப்பிராயம் கேட்டு இவரது தந்தையிடம் தெரிவித்து அனுமதி பெற்று முதன்முதலாக தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார். அப்படம் தான் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய 1966-இல் வெளிவந்த‘சின்னஞ்சிறு உலகம்’. இப்படத்தில் காதல் மன்னன் ஜெமினி கணேசனின் காதலியாக நடித்தார். இப்படத்தில் இவர் மட்டுமே புதுமுகம். வி.கே.ராமசாமியின் மகளாக இவர் கதாபாத்திரம். இப்படம் பெரும் வெற்றி பெற்று இவரை நிலைக்கச் செய்தது. தொடர்ந்து தமிழில் மட்டும் 75 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு,கன்னடம், இந்தி, மலையாளத் திரைப்படங்களில் கதாநாயகியாகவும், நடன தாரகையாகவும், வில்லியாகவும் நடித்தவர். வெகுளிப்பெண், சின்னஞ்சிறு உலகம், ஆதிபராசக்தி, நான் யார் தெரியுமா, புத்திசாலிகள், இருளும் ஒளியும், நல்ல நேரம், மகராசி வாழ்க போன்ற தமிழில் பல படங்களில் நடித்தார். இதற்கிடையே இயக்குநர் ஸ்ரீதர் இவரை  சிவந்த மண்  படத்தில் சோலோ டான்ஸ் ஒன்று இருப்பதாகவும் அது நல்ல பெயரை சம்பாதித்துத் தருமென்றும் கூறி அப்படத்தில் நடிக்க ராதிகாவை அழைத்தார். அப்போது தான் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பதால் அதனை ஏற்க இயலாது என தெரிவித்தபோதும் ஸ்ரீதர் இல்லை ராதிகா இப்படம் தமிழ், இந்தி இரண்டிலும் வருகிறது. இரண்டிலுமே நீதான் அந்த நடனத்தை ஆடவேண்டுமென்றும் இதற்குப்பின் உனது பெயரே ‘சிவந்த மண்’ ராதிகா என்று மாறிவிடும் என்று வற்புறுத்தியதால் அப்படத்தில் ராதிகா அந்த சோலோ டான்ஸை ஆடினார். இந்த டான்ஸ் இவருக்கு பெரும் பெயரை ஏற்படுத்திக் கொடுத்ததோடு அதன் பின் இவர் ‘சிவந்த மண்’ ராதிகா என்றே பல வருடங்கள் அழைக்கப்பட்டார்.



மலையாளத்தில் ‘பட்டுத் துவாலா’ என்ற படமே இவரது முதல் படமாகும். இயக்குநர் குஞ்சாகோ மலையாளத்தில் இவருக்குப் பல படங்களில் வாய்ப்பளித்தார். மாஜிக் மாஜிக் என்ற படத்தில் சில வருடங்களுக்கு முன் இவர் குஞ்சாகோவின் இயக்கத்தில் நடித்தார். மலையாளத்தில் லவ் இன் கேரளாவில் பிரேம் நஷீர்-ஷீலாவுடன், நீல பொன் மான் கே.பி.உம்மருடன், யக்ஷியில் சத்யனுடன் நடித்தார். திரைப்படங்களில் புகழுடனிருக்கும் போதே இவர் மாஜிக் துறையில் ஈடுபட்டார். தெலுங்கில் ‘அர்த்த ராத்திரி’ படத்தில் இவரது தந்தையாக நடித்தார் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ரமணா ரெட்டி. இவர் ஒரு பெரிய மாஜிக் நிபுணர். அப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது ரமணா ரெட்டி யிடம் தனது விருப்பத்தைத் தெரித்தார். இவரிடமே ராதிகா மாஜிக் கற்றுக்கொண்டார். மாஜிக்கில் இவரது குருவாக ரமணா ரெட்டியைத்தான் ஏற்றுக்கொண்டார். அதன்பின் இலண்டன் சென்று மேலும் மாஜிக் வித்தைகள் பலவற்றைக் கற்றுத் தேர்ந்தார்.

இவர் ஹிட்டரிஸ்ட்  விஜயகுமார் என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார். அவர் ஒரு பிராமணன். இவரோ கிருத்தவர். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை நீண்ட நாள் நிலைத்திருக்கவில்லை. எனவே விவாகரத்துச் செய்துகொண்டனர். இவரது ஒரே மகன் கிராஃபிக்ஸில் உள்ளார். பல பெரிய திரைப்படங்களுக்கு கிராஃபிக்ஸ் செய்து வருகிறார். அவரது ஆதரவிலேயே ராதிகாவுள்ளார். இப்போதும் மாஜிக் தொழிலில் ஈடுபட்டுள்ளார். ஆதிபராசக்தி படத்தில் அமரர் சுருளிராஜனுடன் இணைந்து மீன் விற்கும் குப்பத்துப்பெண்ணாக நடித்தார். இப்படத்தில் “ஆத்தாடி மாரியம்மா சோறு ஆக்கி வச்சேன் வாடியம்மா” என்ற பாடலில் இவ்விருவரும் ஆடிய ஆட்டம்  ரசிகர்களால் எக்காலத்திலும் மறக்க இயலாதது. பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானது

No comments:

Post a Comment