Saturday, 4 July 2020

Israeli commandos raid Entebbe airport in Uganda,






 Entebbe airport in Uganda



 

Dan Shomron,
Leader of Entebbe
Airport Rescue, Is Dead at 70


என்டபே நடவடிக்கை இசுரேலிய பாதுகாப்புப் படைகளின் அதிர்ச்சித் தாக்குதல் படையினரால் உகண்டாவின் என்டபே விமான நிலையத்தில் வைத்து 4 சூலை 1976 அன்று நடத்தப்பட்ட ஒரு பயங்கரவாத எதிர்ப்பு பணயக் கைதிகள் மீட்பு நடவடிக்கையாகும்.[3] ஒரு வாரத்துக்கு முன், 27 சூன் அன்று பிரான்சிய விமானசேவை நிறுவனத்தின் (Air France) வான் விமானம் 248 பயணிகளுடன் பலஸ்தீன விடுதலைக்கான மக்களாதரவு முன்னனி மற்றும் செருமனி விடுதலைக் குழுக்களினால் கடத்தப்பட்டு உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவிற்கு அருகிலுள்ள என்டபேக்கு கொண்டு செல்லப்பட்டது. கடத்தல்காரர்கள் இசுரேலியர்களையும் யூதர்களையும் பெரிய குழுவிலிருந்து வேறுபடுத்தி வேறு ஒரு அறையில் பலவந்தப்படுத்தி அடைத்தனர்.[4][5][6] அன்று பின்னேரம், 47 யூதரற்ற, இசுரேலியரற்றோர் விடுதலை செய்யப்பட்டனர்.[4][6][7] அடுத்த நாள், மேலும் 101 யூதரற்ற பணயக் கைதிகள் பிரான்சிய விமானசேவை நிறுவனத்தின் வான் விமானத்தினுள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். நூற்றுக்கு மேற்பட்ட யூத, இசுரேலிய பயணிகளுடன் யூதரல்லாத விமான மைக்கல் பாகோஸ் பணயக் கைதிகளாக கொலை அச்சுறுத்தலுக்குள்ளாயினர்.[8][9]

'ஒப்பரேஷன் என்டபே'...

உகண்டாவின் என்டபே விமான நிலையத்தில் வெறும் 53 நிமிடங்கள் மாத்திரமே நடைபெற்ற மிகவும் வெற்றிகரமான ஒரு மீட்பு நடவடிக்கை.

உலக ராணுவ வல்லுனர்களின் ஆச்சரியக் கண்களை அகலவிரித்திருந்த ஒப்பற்ற ஒரு படை நடவடிக்கை.

போரியல் வரலாற்றில் அதுவரை நடைபெறாதும், இனிமேலும் நடைபெற முடியாதது என்று போரியல் நோக்கர்களால் விமர்சிக்கப்படுகின்ற ஒரு அதிரடி நடவடிக்கை.

உலக ராணுவங்கள் அனைத்தையும் மிகுந்த ஆச்சரியத்துடனும், சற்று அச்சத்துடனும் திரும்பிப் பார்க்வைத்த ஒப்பரேஷன் என்டபே என்ற அந்த வரலாற்றுச் சாதனை படை நடவடிக்கையைப் பற்றிப் பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:





அத்தியாயம் 1
எயார் பிரான்ஸ் விமானம் கடத்தல்
ஜூன் மாதம் 27ம் திகதி 1976ம் ஆண்டு. பாரிஸ் விமான நிலையம். சர்வதேசப் புறப்பாடுகள் பகுதி.
எயார் பிரான்ஸின் செக்இன் கவுண்டர்களில் வரிசைவரிசையாக பயணிகள் நின்றிருந்தார்கள். இஸ்ரேலின் டெல்-அவிவ் நகருக்குச் செல்லும் விமானத்துக்கான பயணிகளை செக்இன் செய்துகொண்டிருந்தார்கள் எயார் பிரான்ஸின் விமான நிலைய ஊழியர்கள்.
வழமையாக எந்தவொரு விமானமும் எந்த நாட்டுக்குப் போகின்றது என்பதைப் பொறுத்து அந்த நாட்டவர்கள்தான் பயணிகளின் எண்ணிக்கையில் பெரிய சதவிகிதம் இருப்பார்கள்.
அது போலவே இந்த விமானத்தில் பயணிக்க வந்திருந்த பயணிகளில் மிகப்பெரிய சதவிகிதமானவர்கள் இஸ்ரேலியர்கள். அதற்கு அடுத்தபடியாக கிரேக்க நாட்டவர்களும், பிரென்சுக்காரர்களும் இருந்தார்கள். இவர்களைத் தவிர மிக சொற்ப எண்ணிக்கையில் வேறு நாட்டவர்கள்.
எயார் பிரான்ஸ் விமானப் பிரான்ஸில் இருந்து கிளம்புவதால் அதில் பிரென்ச்காரர்கள் இருப்பது சரி. ஆனால் கிரேக்க நாட்டவர்கள் பிரான்சிலிருந்து இஸ்ரேலுக்குச் செல்லவுள்ள இந்த விமானத்தில் ஏன் அதிகமாக தென்படுகிறார்கள்?
விமானம் முதலில் தரையிறங்கப்போவது ஏதென்ஸ்!

அந்த நாளைய பாரிஸ் விமான நிலையம் இதுதான். தற்போது இதன் தோற்றமே தலைகீழாக மாறிவிட்டது!
காரணம், எயார் பிரான்ஸின் அந்த குறிப்பிட்ட விமானம் பாரிஸிலிருந்து நேரே இஸ்ரேல் செல்லும் விமானமல்ல. பாரிஸிலிருந்து முதலில் கிரேக்க நகரான ஏதன்ஸ் சென்று, அங்கு ஒரு மணிநேரம் நின்று பயணிகளை இறக்கி ஏற்றிக் கொண்டுதான் டெல் அவிவ் செல்லும் ரூட் அது. அதனால்தான் அதில் கிரேக்க நாட்டவர்களும் அதிகளவில் பயணிக்க வந்திருந்தனர்.
இந்த விமான ரூட்டிலுள்ள விசித்திரமான அம்சம் என்ன தெரியுமா?
விமானம் புறப்படும் பாரிஸ் விமான நிலையமும் பாதுகாப்புக் கெடுபிடி அதிகமுள்ள விமான நிலையம். விமானம் போய்ச் சேரும் இஸ்ரேலின் டெல்அவிவ் விமான நிலையத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். உலகிலேயே மிக அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் இருக்கும் விமான நிலையம் அது. இந்த இரண்டுக்கும் இடையே விமானம் இயங்கி ஏறப்போகும் ஏதன்ஸ் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மகா மோசம்!
இப்படி ஏதென்ஸ் வழியாகச் செல்வதால் அன்றைய தினம் குறிப்பிட்ட அந்த விமானத்தைக் கடத்துவதற்கு கடத்தல்கார்கள் குறிவைத்திருந்தார்கள்.
எதையும் கடத்திக்கொண்டு போக அட்டகாசமான விமான நிலையம்!

டிப்பாச்சர் லவுன்சில் பயணிகள் விமானத்துக்குள் ஏறுமுன்...
அந்த நாட்களில் ஐரோப்பிய விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் மோசமாக இருந்த விமானநிலையங்களின் முக்கியமானது, ஏதென்ஸ் விமான நிலையம். (இன்றுகூட நிலைமை அதுதான்) பாதுகாப்புச் சோதனைகளுக்குள் சிக்காமல் எந்தவொரு பொருளையும் விமானம்வரை கடத்திச் செல்லக்கூடிய அளவில் இருந்தது அங்கு நிலைமை.
இந்த எயார் பிரான்ஸ் விமானத்தைக் கடத்தத் திட்டமிட்டவர்கள் பாரிஸிலிருந்து விமானம் கிளம்பியபோதே பயணிகளாக அதற்குள் ஏறிவிட்டிருந்தார்கள். ஆனால் ஆயுதங்கள் எதுவுமில்லை. பாரிஸ் விமான நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தாண்டி ஆயுதங்களை ரிஸ்க் எடுத்து கொண்டுசெல்ல அவர்கள் விரும்பியிருக்கவில்லை.
பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் பாரிஸ் விமான நிலையத்திலிருந்து கிளம்பியது. எயார் பிரான்சின் அந்த விமானம் எயார்பஸ் A300 ரக விமானம். ரெஜிஸ்ட்ரேஷன் F-BVGG. ரூட் இலக்கம் 139.

விமானம் முதலாவதாகத் தரையிறங்கிய ஏதென்ஸ் விமான நிலையம். இங்கு கிரேக்க தேசிய விமான நிறுவனம் ஒலிம்பிக் எயார்லைன்ஸின் விமானங்கள் அதிகம் நிற்பதைக் காணலாம்.
அதன் முதலாவது லான்டிங்காக ஏதென்ஸ் விமான நிலையத்திலும் இறங்கியது. ஏதென்ஸ் வரை பயணம் செய்த பயணிகள் விமானத்திலிருந்து இறங்கிக் கொண்டனர். டெல்அவிவ் செல்லும் பயணிகள் விமானத்துக்கு உள்ளேயே இருந்தனர்.
ஏதென்ஸ் விமான நிலையத்தில் நின்றிருந்த விமானத்தில் புதிய பயணிகள் ஏற்றப்படுவதற்கு முன்னர், துப்பரவுப் பணியாளர்கள் மூன்றுபேர் விமானத்துக்குள் ஏறி துப்பரவு செய்தார்கள்.
அந்த மூன்று பேரில் ஒரு ஆள் கடத்தற்காரர்களின் ஆள்.
அவர் துப்பரவு செய்துவிட்டு இறங்குமுன்னர் தன்னிடம் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை விமானத்தில் டாய்லட் ஒன்றில் மறைத்து வைத்துவிட்டு இறங்கினார். துப்பரவுப் பணியாளர்கள் இறங்கிய உடனேயே விமானத்தில் பின்பகுதியில் அமர்ந்திருந்த ஒருவர் டாய்லட்டுக்குச் சென்றார்.
அவர் திரும்பவும் தனது சீட்டுக்கு வந்தபோது ஆயுதங்கள் அவருடன் வந்து விட்டன.
துப்பாக்கியுடன் கடத்தல்காரர் எழுந்தார்!

ஏதென்ஸ் விமான நிலையத்தில் பயணிகள். இங்குதான் ஆயுதங்கள் எயார் பிரான்ஸ் விமானத்துக்குள் போய்ச் சேர்ந்தன!
ஏதென்ஸ் விமான நிலையத்திலிருந்து விமானம் கிளம்பியபோதே கடத்தல்காரர்களின் கைகளில் ஆயுதங்கள் வந்துவிட்டன. ஏதென்ஸிலிருந்து விமானம் கிளம்பி சுமார் அரைமணி நேரத்தின்பின், முதலாவது கடத்தல்காரர் கையில் துப்பாக்கியுடன் தனது சீட்டிலிருந்து எழுந்தார்.
அந்த நிமிடத்தில் விமானத்தின் கட்டுப்பாடு கடத்தல்காரர்களின் கைகளுக்குப் போனது. விமானம் கடத்தப்படுகிறது என்ற தகவலை துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டிருந்த விமானி தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்குத் தெரிவித்தார். கடத்தல்காரர்கள் வாடி ஹாடாட் என்ற தீவிர இஸ்லாமிய விடுதலை அமைப்பினர்.
விமானத்தைக் கடத்தியவர்கள் விஷயம் தெரியாத ஆட்களல்ல. அவர்களுக்கு விமான நகர்வுகள் பற்றி நன்றாகவே தெரிந்திருந்தது. அவர்கள் போய்ச்சேர வேண்டிய இடத்துக்கு (ஆபிரிக்கா) செல்வதற்கு விமானத்தில் எரிபொருள் போதுமானதாக இருக்காது என்பதை அறிந்து வைத்திருந்தார்கள்.
ஏதென்சில் இருந்து டெல்-அவிவ் இருக்கும் தூரத்தின் அளவிலான தூரத்திலிருக்கும் மற்றுமோர் விமான நிலையத்திற்கு விமானத்தைச் செலுத்தச் செய்வதாக திட்டம் வைத்திருந்தார்கள்.
கடத்திய விமானத்தை முதலில் தரையிறக்க…
அப்படி, அவர்கள் மனதில் வைத்திருந்த நாடு லிபியா. (காரணம் லிபியா இந்தத் தீவிரவாத அமைப்பினர்மீது ஓரளவு பரிவு வைத்திருந்த நாடுகளில் ஒன்று)
கடத்தல்காரர்கள் சொல்லிக்கொடுத்தபடி, ஏயார் பிரான்சின் விமானி தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தைக் தொடர்பு கொண்டு விமானத்தைக் கடத்தற்காரர்களின் உத்தரவுப்படி லிபியாவை நோக்கித் திருப்புவதாகத் தெரிவித்தார். சிறிது நேரத்தில் லிபியாவின் பென்காசி விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறங்க அனுமதி கொடுக்கப்பட்டது.
அங்கே இவர்கள் கேட்டுக் கொண்டபடி விமானத்துக்கு முழுமையாக எரிபொருள் நிரப்பப்ப லிபிய அரசு சம்மதித்தது.
இதற்கிடையே எயார் பிரான்சின் விமானம் கடத்தப்பட்ட விபரம் வெளியே தெரியவந்துவிட ஊடகவியலாளர்கள் பலர் பென்காசி விமான நிலையத்துக்கு வந்துவிட்டார்கள். ஆனால் அவர்களில் யாரையும் விமானத்துக்கு அருகே செல்லவே லிபியப் பாதுகாப்புப் படையினர் அனுமதிக்கவில்லை.
விமானத்துக்கு எரிபொருள் நிரப்பும் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த லிபியாவிலிருந்த பிரென்ச் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களுடன் பேசமுடியாது என்று கடத்தல்காரர்கள் கூறிவிட்டார்கள்.

பென்காசி விமான நிலையம் உண்மையில் ஒரு விமான நிலையமாகக் கட்டப்பட்டதல்ல. இது ஒரு முன்னாள் அமெரிக்க ராணுவத் தளம். விமான நிலையத்திலுள்ள போஸ்ட் ஆபீஸைப் பார்த்தாலேதெரியும்.
இந்தக் கட்டத்தில் விமானத்துக்குள் ஒரு சுவாரசியமான நாடகம் நடைபெற்றது. கடத்தப்பட்ட பயணிகளில் இளம் பெண் ஒருவர் தான் கர்ப்பமுற்று இருப்பதாகத் தெரிவித்து, தனக்கு இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை என்று கூறினார். அதையடுத்து மயக்கமாகி சீட்டில் சரிந்தார்.
கடத்தல்காரர்கள் தமக்குள் ஆலோசனை செய்தபின் அந்த இளம்பெண்ணை மாத்திரம் பென்காசியில் வைத்து விடுவிக்கச் சம்மதித்தனர். இப்படியாக பணயக் கைதிகளில் முதலாவதாக இந்த இளம்பெண் விடுவிக்கப்பட்டார்.
சரி.  “விமானத்துக்கு உள்ளே ஒரு நாடகம் நடைபெற்றது” என்று இந்தச் சம்பவத்தை ஏன் குறிப்பிட்டோம் என்று யோசிக்கிறீர்களா? காரணம் இருக்கிறது. விடுவிக்கப்பட்ட அந்த இளம் பெண் உண்மையில் கர்ப்பிணி அல்ல. சும்மா பொய் சொல்லித் தப்பித்துக் கொண்டார்!
கடத்தல்காரர்களுக்கு முதல் பிரச்சினை
எரிபொருள் நிரப்பப்பட்ட விமானம் பென்காசி விமானநிலையத்திலிருந்து கிளம்பியபோதுதான் கடத்தியவர்கள் முதலாவது பிரச்சனையைச் சந்தித்தார்கள்.
கடத்தற்காரர்களின் திட்டம் என்னவென்றால் ஏதென்ஸ் விமான நிலையத்தைவிட்டுக் கிளம்பியவுடன் விமானம் கடத்தப்படவேண்டும். அங்கிருந்து பென்காசி சென்று எரிபொருள் நிரப்பவேண்டும். அதன்பின்னர் சூடான் நாட்டின் கார்ட்டூம் விமான நிலையத்துக்கு விமானத்தைச் சொலுத்திச் சென்று அங்கே தரையிறங்கவேண்டும்.
இந்தக் கடைசிப் பகுதியில்தான் சிக்கல்.

கடத்தப்பட்ட F-BVGG ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் விமானம் இதுதான். கடத்தல் முடிவுக்கு வந்தபின் இந்த விமானம் உகண்டாவிலிருந்து பிரான்சுக்கு வந்து சேர்ந்தது. அதன்பின் இந்த விமானத்தை எயார் பிரான்ஸ் விற்றுவிட்டது. அதை வாங்கிய நிறுவனம் வியட்நாம் எயார்லைன்ஸ். தற்போது இந்த விமானம் TC-MNA என்ற ரெஜிஸ்ட்ரேஷனுடன் கார்கோ விமானமாக மாற்றப்பட்டுள்ளது.
விமானம் கிளம்பியபோது விமானியிடம் கார்ட்டூம் விமான நிலையம் நோக்கிச் செல்லும்படி கடத்தியவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள். விமானமும் அந்தத் திசையில் செலுத்தப்பட்டது. ஆனால் சூடான் நாட்டு அதிகாரிகள் இந்த விமானத்தைத் தமது நாட்டு விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதிக்க முடியாது என்று மறுத்து விட்டார்கள்.
சூடான் நாடும் தங்கள்மீது அனுதாபம் வைத்திருக்கும். எனவே அங்கே விமானத்தைத் தரையிறக்கிவிட்டு பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் என்று இந்த விடுதலை அமைப்பினர் வைத்திருந்த திட்டம் குழம்பிப்போனது.
எங்கே போவது என்று தெரியாமல் பறந்த விமானம்

இந்த விமானம்தான் கடத்தப்பட்ட எயார்பிரான்ஸ் விமானத்தின் இன்றைய தோற்றம். 3 தடவைகள் கைமாறி, தற்போது எம்.என்.ஜி. என்ற கார்கோ நிறுவனத்துக்குச் சொந்தமாக இருக்கிறது.
விமானம் சிறிது நேரம் எங்கே போகின்றது என்ற இலக்கு இல்லாமல் சூடான் இருந்த திசையில் பறந்து கொண்டிருந்தது. அதற்குள் கடத்தியவர்கள் தங்களுக்குள் கூடி ஆலோசித்தார்கள். ஆபிரிக்கக் கண்டத்திலுள்ள ஏதாவது ஒரு நாட்டில்தான் விமானத்தை இறக்குவது பாதுகாப்பானது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். சூடான் தரையிறங்க அனுமதிக்க மறுத்தபின் வேறு எங்கே செல்வது.
இரண்டாவது தேர்வாக அவர்கள் தேர்ந்தெடுத்த நாடு உகண்டா.
விமானத்தை உகண்டாவை நோக்கித் திருப்பும்படி விமானியிடம் கூறினார்கள். உகண்டா நாட்டின் தலைநகர் கம்பாலாவின் சர்வதேச விமான நிலையம் பூகோள ரீதியில் இவர்கள் முதலில் செல்லத் திட்டமிட்டிருந்த கார்ட்டும் விமான நிலையத்திலிருந்து குறைந்த பாகை வித்தியாசத்திலேயே இருக்கிறது.
எனவே சூடான் நோக்கிச் சென்ற விமானத்தை இலகுவில் உகண்டாவை நோக்கித் திசைதிருப்பிவிடலாம். கார்ட்டூம் நகருக்கும் கம்பாலா நகருக்கும் இடையிலுள்ள தூரம் வெறும் 1053 மைல்கள்தான் என்பதால் கடத்தப்பட்ட விமானத்திலுள்ள எரிபொருளும் போதுமானதாக இருக்கும்.
இப்போது விமானி தரைக் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்டு உகண்டாவில் தலையிறங்க அனுமதி வேண்டுமென்று கேட்டார்.

கடத்தப்பட்ட A300 ரக விமானத்திக் காக்பிட்.
இடி அமீனே நேரில் வழங்கிய அனுமதி
ஆச்சரியகரமாக உடனே அனுமதி கிடைத்தது. அதுவும் உகண்டாவின் அன்றைய தலைவர் இடி அமீன் தானே நேரடியாக அனுமதி வழங்கி ஆச்சரியப்படுத்தினார். அனுமதி கிடைத்தவுடன், எயார் பிரான்ஸ் விமானம் உகண்டாவின் தலைநகர் கம்பாலாவிலிருந்து 30 கி.மீ. தொலைவில் இருந்த என்டபே விமான நிலையத்தில் தரையிறங்கியது.
தரையிறங்கிய விமானத்தில் இருந்த பயணிகளில் இஸ்ரேலியர்களைத் தவிர மற்றய நாட்டுக்காரர்கள் அனைவரையும் கடத்தல்காரர்கள் உடனே விடுதலை செய்துவிட்டார்கள்.
அந்த எயார் பிரான்ஸ் விமானத்தின் காப்டனாகப் பணியாற்றியவர் Michel Bacos. பிரென்ச்காரரான இவரையும் கடத்தல்காரர்கள் விடுவித்தபோதும் அவர் வெளியேற மறுத்துவிட்டார். விமானத்தின் காப்டனான தனது பொறுப்பிலேயே அனைத்து விமானிகளும் இருப்பதால் அதில் ஒருபகுதியினரை விட்டுவிட்டுத் தன்னால் விடுதலையாகிச் செல்ல முடியாது என்று கூறிவிட்டார் இவர்.
இவரைப் பின்பற்றி எயார் பிரான்சின் மற்றய விமானப் பணியாளர்களும் விடுதலையாக மறுத்து, பணயக் கைதிகளுடனே தங்கிக் கொண்டனர்.

இடி அமீன் - ஆச்சரியகரமாக விமானம் தரையிறங்க அனுமதி கொடுத்தார்!
விடுதலையாக மறுத்த மற்றொருவர் அந்த விமானத்தில் பயணித்த பிரென்ச் கன்னியாஸ்திரி. துறவியான தனக்குப் பதிலாக பணயக் கைதிகளில் ஒருவரை விடுவிக்குமாறு இவர் கடத்தல்காரர்களைக் கேட்டுக்கொண்டார். ஆனால் அவரைப் பணயக் கைதியாக வைத்திருக்க கடத்தல்காரர்கள் சம்மதிக்கவில்லை.
இறுதியில் என்ன நடந்தது? அவரை வைத்திருந்தால் இது மத ரீதியான விவகாரமாகத் திரும்பிவிடும் என்று, உகண்டாவின் பாதுகாப்புப் படையினர் இந்தக் கன்னியாஸ்திரியைப் பலவந்தமாக அங்கிருந்து அப்புறப் படுத்தினர்.
இப்போது பணயக் கைதிகளாக இருந்த 105 பேரில் 85 பேர் இஸ்ரேலிய, மற்றும் இஸ்ரேலியப் பிரஜைகளில்லாத யூதர்கள். மிகுதி 20 பேரும் எயார் பிரான்ஸ் விமானச்
சிப்பந்திகள். இவர்கள் அனைவரையும் ஆயுத முனையில் வைத்துக்கொண்டு தமது கோரிக்கைகளை வெளியிட்டார்கள் கடத்தல்காரர்கள்.

எயார் பிரான்சின் விமானச் சிப்பந்திகள் (புதிய யூனிபோர்ம்)
மொத்தம் மூன்று கோரிக்கைகள். முதலாவது, இஸ்ரேலியச் சிறைகளில் இருக்கும் நாற்பது பாலஸ்தீனியர்களை விடுதலை செய்யவேண்டும். இரண்டாவது, ஐரோப்பிய நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 பாலஸ்தீனியர்களை விடுதலை செய்யவேண்டும்.
மூன்றாவது, கென்யா நாட்டில் நைரோபி விமான நிலையத்திலிருந்து எல்-அல் இஸ்ரேலி ஏயார்லைன்ஸின் விமானம் ஒன்று கிளம்பும்போது அதை சாம்-7 ரொக்கட்டால் அடித்து வீழ்த்த முயன்ற இரு ஜேர்மன்காரர்கள் கைது செய்யப்பட்டு கென்யாவின் சிறையில் இருக்கிறார்கள். அந்த இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
இந்த மூன்று கோரிக்கைகளையும் நிறைவேற்றத் தவறினால் பணயக் கைதிகள் அனைவரும் கொல்லப்படுவார்கள். இதற்கு கொடுக்கப்பட்ட காலக்கெடு ஜூன் மாதம் 30ம் திகதி.
பிரதமர் வைத்திருந்த ரகசியத் திட்டம்!
இஸ்ரேலில் அவசர அவசரமாக மந்திரிசபை கூடியது. பிரதமர் ரேபின் இஸ்ரேலியச் சிறைகளில் இருக்கும் பாலஸ்தீனியர்கள் 40 பேரை விடுதலை செய்யச் சம்மதிப்பதுபோலக் காட்டிக் கொண்டார். ஆனால், அதற்கு இஸ்ரேலிய உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்பதால் அதற்கு சில நாட்கள் அவகாசம் எடுக்கும் என்றும் கூறிக்கொண்டார்.

அந்த நாளைய எயார் பிரான்ஸ் விமானத்தின் இன்டீரியர். தற்போது இது புதிதாக வடிவமைக்கப்பட்டுவிட்டது. விமானச் சிப்பந்தியின் பழைய யூனிபோர்மைப் பாருங்கள்.
ஆனால், உள்ளே வேறு ஒரு திட்டம் இருந்தது.
இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத் அதிரடியாக ரகசிய ஒப்பரேஷன் ஒன்றைச் செய்து பணயக் கைதிகளை விடுவிப்பதுதான் உள்ளேயிருந்த நிஜத்திட்டம்.
இது நடந்தபோது மொசாத்தில் தலைவராக இருந்தவர் யிட்சாக் ஹோபி. அவர் பிரதமருடன் ரகசியமாக ஆலோசனைக்கு அழைக்கப்பட்டார். அப்போதுதான் இஸ்ரேல் வெளிப்படையாகக் கூறாமல் ரகசிய அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு பணயக் கைதிகளை விடுவிக்கும் யோசனை ஒன்று தம்மிடம் இருக்கிறது எனத் தெரிவித்தார் பிரதமர்.
இந்த ஒப்பரேஷன் மிகத் துல்லியமாகத் திட்டமிடப்படவேண்டும். துரிதமாகவும் முடியவேண்டும். ஏதாவது தவறு நடந்தால் இஸ்ரேலியப் பணயக் கைதிகளின் உயிர்கள் எடுக்கப்பட்டுவிடும் என்பது மொசாத்தின் தலைவருக்கு கூறப்பட்டு அப்படியான முறையில் ஒரு ஒப்பரேஷனை நடாத்த முடியுமா என ஆலோசனை கேட்கப்பட்டது.
“இது உங்களால் முடியுமா?”
“இது உங்களால் (மொசாத்தால்) முடியுமா? அல்லது பேசாமல் கடத்தல்காரர்களின் கோரிக்கைக்கு இணங்கி எமது சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்வதைத் தவிர வேறு வழியே இல்லையா” என்று கேட்டார் பிரதமர்.
“நாங்கள் முயற்சி செய்யலாம். ஆனால் அதற்குச் சில முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கும். மொசாத்தின் நடவடிக்கைகளில் அரசியல் குறுக்கிடாமல் எங்களை எங்களது போக்கில் விட்டால் அதிரடியாக ஒரு ஒப்பரேஷனை நிச்சயம் செய்ய முடியும்” என்று கூறிவிட்டு அலுவலகம் திரும்பினார் மொசாத்தின் தலைவர்.
அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் கேட்டிருந்த அனுமதி வந்து சேர்ந்தது.



அத்தியாயம் 2
மொசாத் திட்டமிடத் தொடங்குகிறது!
“மொசாத்தின் நடவடிக்கைகளில் அரசியல் குறுக்கிடாமல் எங்களை எங்களது போக்கில் விடுங்கள். மொசாத்தால், அதிரடியாக ஒரு ஒப்பரேஷனை நிச்சயம் செய்ய முடியும். கடத்தப்பட்ட விமானத்திலிருந்த பணயக் கைதிகளையும் மீட்க முடியும்.” மொசாத்தின் தலைவர் இவ்வாறு கூறிவிட, இறுதியில் இஸ்ரேலியப் பிரதமர் அந்த உறுதிமொழியைக் கொடுத்தார்.
“இந்த அதிரடி நடவடிக்கையில் எந்த அரசியல் தலையீடும் இருக்காது. மொசாத் சுதந்திரமாகச் செயற்படலாம்”
மொசாத் களத்தில் இறங்கியது!
இதில் மொசாத்துக்கு இருந்த மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், கடத்தப்பட்ட விமானம் தரையிறங்கியிருக்கும் இடம்!
அது உகண்டா.
அதில் என்ன சிக்கல்? 1972ம் ஆண்டே உகண்டா அரசு இஸ்ரேலுடன் இருந்த ராஜாங்க உறவுகளைத் துண்டித்து விட்டிருந்தது. அப்போதே உகண்டாவிலிருந்த இயங்கிக் கொண்டிருந்த இஸ்ரேலியத் தூதரகம் மூடப்பட்டு, அங்கிருந்த அனைவரும் உகண்டாவை விட்டு வெளியே அனுப்பப்பட்டிருந்தார்கள்.
அதற்குப் பின்னர் எந்தவொரு இஸ்ரேலியரும் உகண்டாவுக்குள் நுழைவது என்பது நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத காரியமாகப் போயிருந்தது.
எனவே இந்த விமானம் உகண்டாவின் என்டபே விமான நிலையத்தில் இறக்கப்பட்டபோது, உகண்டா நாட்டிலேயே மொசாத்தின் ஏஜன்ட்கள் யாரும் இருக்கவில்லை. நிலைமை கொஞ்சம் கஷ்டமானதுதான் என்பது மொசாத்தின் தலைவருக்குப் புரிந்தது.
இது ஒரு கடினமான, அதே நேரத்தில் பல உயிர்களுடன் சம்மந்தப்பட்ட ஒப்பரேஷன். இதைச் சரியாகவும் துல்லியமாகவும் நடத்த வேண்டுமானால், அதற்கு இந்த ஒப்பரேஷனை மொசாத்தில் பணிபுரியும் மிகத் திறமைசாலியான ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மொசாத்தின் தலைவர் யோசித்தபோது, அவரது நினைவில் முதலில் தோன்றிய பெயர் டேவிட் கிம்சே!
மொசாத்தின் தலைவர் டேவிட் கிம்சேயை உடனடியாக அழைத்து இந்த ஒப்பரேஷன் பொறுப்பைக் கொடுத்தார். இந்த ஒப்பரேஷனை டேவிட் விரும்பிய வகையில் மேற்கொள்ளப் பூரண சுதந்திரமும் அவருக்குக் கொடுக்கப்பட்டது.
டேவிட் யோசித்தார்.
ஒப்பரேஷனுக்காக மொசாத்தின் உளவாளிகளை உகண்டாவுக்கு உள்ளே அனுப்ப முடியாது. உகண்டாவுக்கு அருகில் உள்ள ஏதாவது நாடு ஒன்றில் வைத்துத்தான் இந்த ஒப்பரேஷன் செயற்பட வேண்டும். அதற்கு அந்த நாடு அல்லது அந்த நாட்டின் உளவுத்துறை சம்மதிக்க வேண்டும். மொசாத்துடன் ஒத்துழைக்க வேண்டும்.
அருகில் உள்ள எந்த நாடு கைகொடுக்கும்?
உகண்டாவுக்கு அருகில் உள்ள ஒவ்வொரு நாடு பற்றியும் டேவிட்டால் அலசப்பட்டது. ஒவ்வொரு நாட்டிலும் சாதகமான அம்சங்கள் என்ன? பாதகமான அம்சங்கள் என்ன? அந்த நாட்டிலிருந்து உகண்டா எவ்வளவு தூரம்? அந்த நாட்டிலிருந்து உகண்டாவுக்குள் நுழைவதென்றால் எப்படி நுழையலாம் என்று பல விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டன.
இறுதியில் டேவிட் தேர்ந்தெடுத்த நாடு கென்யா.
இந்தத் தகவல் மொசாத்தின் தலைவருக்குத் தெரிவிக்கப்பட்டது. மேல்மட்ட அரசியல் தொடர்புகள் மூலம் கென்யாவின் உளவுத்துறையினரின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொடுக்குமாறு அவரைக் கோரினார் டேவிட்.
மொசாத்தின் தலைவருக்கு கென்யாவின் உளவுத்துறைத் தலைமையுடன் நேரடிப் பரிச்சயம் இருந்தது. மொசாத்தின் தலைமை உடனடியாக கென்யா நாட்டு உளவுத்துறையின் தலைவரைத் தொடர்பு கொள்ள, கென்ய நாட்டு உளவுத்துறை மொசாத்துக்கு உதவுவதற்கு சம்மதித்தது.
அடுத்த கட்டமாக, மொசாத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட திறமைசாலிகளான ஆறு உளவாளிகள், கென்யத் தலைநகரான நைரோபியில் போய் இறங்கினார்கள்.
விமானத்தில் தீவிரவாத அமைப்பினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளை விடுவிக்கும் அதிரடி ஒப்பரேஷன் ஒன்றை நடாத்த மொசாத் தனது திறமைசாலிகளான 6 உளவாளிகளை அனுப்பி வைக்கிறது என்ற விபரம் கென்யாவின் உளவுத்துறைக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அவர்களுக்கு கென்யாவில் தேவையானவற்றைச் செய்து கொடுக்குமாறு ஒரு கோரிக்கையும் இஸ்ரேலில் இருந்து கென்யாவுக்கு ராஜதந்திர மட்டத்தில் போய்ச் சேர்ந்தது.
உளவாளிகள் தங்கவைக்கப்பட்ட வீடு
ஆறு மொசாத் உளவாளிகளும் கென்யாவின் நைரோபி நகரை அடைந்தவுடன் அவர்களை சேஃப் ஹவுஸ் என உளவு வட்டாரங்களில் குறிப்பிடப்படும் பாதுகாப்பான வீடுகளில் ஒன்றில் தங்கவைத்தார்கள் கென்ய நாட்டு உளவுத்துறை அதிகாரிகள்.
பொதுவாகவே எல்லா நாட்டு உளவுத்துறைகளும் இப்படியான சேஃப் ஹவுஸ்களை வைத்து இயக்குவது வழக்கம். வெளிப்படையாக மக்கள் குடியிருப்புகள் போலவே தோற்றமளிக்கும் இந்த வீடுகள் உளவுத்துறையினரின் பிரத்தியேக பாவனைகளுக்கானவை.

மொசாத்தின் ஸ்பை மாஸ்டர் என்று அழைக்கப்பட்ட டேவிட் கிம்சே. மொசாத்தின் சாதனை படைத்த பல ஒப்பரேஷன்களின் திட்டமிடல் இவருடையதுதான்!
நைரோபியில் இப்படியான சுமார் 20 வீடுகளை கென்யாவின் உளவுத்துறை வைத்திருந்தது. மக்கள் குடியிருப்புக்களில் கலந்திருந்த இந்த வீடுகள் தகவல் தொடர்புக்கான பாதுகாப்பான தொலைபேசி இணைப்புக்ளைக் கொண்ட வீடுகள். ஆனால், அந்த தொலைபேசி இணைப்புக்கள் கென்யாவின் தொலைத் தொடர்பு இலாகாவினால் நிர்வகிக்கப்படும் இணைப்புக்கள்.
சுருக்கமாகச் சொன்னால், அங்கிருந்து மேற்கொள்ளப்படும் எந்தத் தொலைத் தொடர்பும் கென்ய உளவுத்துறை அறியாமல் வெளியே செல்ல முடியாது!
முதலில் அனுப்பப்பட்ட ஆறு மொசாத் உளவாளிகளில் இரண்டுபேர் உளவாளிகள் மாத்திரமல்ல, அவர்கள் டெக்னீஷின்கள்கூட. அவர்கள் இதுபோன்ற ரகசிய ஒப்பரேஷன்கள் வெளிநாடுகளில் மொசாத்தால் நடாத்தப்படும்போது வெளிநாடு ஒன்றில் பாதுகாப்பான தொலைத்தொடர்பு சனல் ஒன்றை அமைப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.
அவர்கள் மூலமாக, நைரோபியில் இருந்த வீட்டுக்கும், இஸ்ரேலின் டெல்அவிவ் நகரத்துக்கும் நேரடியாக சட்டலைட் தொலைத் தொடர்பு இணைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
இந்த இணைப்பு கென்யாவின் தொலைத்தொடர்பு இலாகாவுக்கு ஊடாகச் செல்லாத இணைப்பு என்பதலால், இவர்களது உரையாடல்களை கென்யாவில் யாருமே கேட்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. அதன்பின் இந்தப் பாதுகாப்பான வீட்டிலிருந்த உளவாளிகளுக்கு உத்தரவுகள் மொசாத்தின் தலைமையகத்தில் இருந்து வரத்தொடங்கின.
அதிரடி ஒப்பரேஷனுக்காக இப்படி உகண்டாவுக்கு வெளியே கென்யாவில் முன்னேற்பாடுகள் ஒருபுறமாக நடைபெற்றுக் கொண்டிருக்க, மறுபுறத்தில் உகண்டாவில் என்ன நடந்துகொண்டிருந்தது?
என்டபே விமான நிலையத்தில்…
எயார் பிரான்ஸ் விமானத்தில் பயணம் செய்து கடத்தப்பட்ட இஸ்ரேலியப் பயணிகள், கடத்தல்காரர்களால் உகண்டாவின் என்டபே விமான நிலையத்தில் கடும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு இருபத்து நான்கு மணிநேரமும் காவல் இருந்தது.
அதிரடித் தாக்குதல் நடாத்தப்படத் திட்டமிடப்படும் இந்த என்டபே விமான நிலையம் உகண்டாவின் தலைநகரில் இருந்தாலும், அளவில் சிறியது. அதனூடாக நடைபெறும் விமானப் போக்குவரத்தும் மிக மிகக் குறைவு. எனவே பயணிகள் நடமாட்டம் அந்த விமான நிலையக் கட்டடத்தில் பெரிதாக இருப்பதில்லை.
இதனால் விமான நிலையத்தின் ஒரு பகுதியை முழுமையாகவே கடத்தல்காரர்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்து, பணயக்கைதிகளை அங்கே வைத்திருந்தார்கள்.
உகண்டா நாட்டின் அன்றைய தலைவர் இடி அமீன் அரசியல் ரீதியாக இஸ்ரேலுக்கு எதிரான நிலை எடுத்திருந்த காலப்பகுதி அது. இதனால், கடத்தல்காரர்களுக்கு என்டபே விமான நிலையத்தில் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தன.
வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பு ஒன்று மற்றொரு நாட்டு விமானத்தைப் பயணிகளுடன் கடத்திக் கொண்டு வந்து மூன்றாவது நாடு ஒன்றில் வைத்திருக்கின்றது. இப்படியான நிலையில் விமானம் இறக்கப்பட்டிருக்கும் மூன்றாவது நாடு வழமையாகக் கடத்தல்காரர்கள்மீது ஒரு கண் வைத்திருக்கும். அவர்கள்மீது தாக்குதல் நடாத்த முடியுமா? பணயக்கைதிகளைக் காப்பாற்ற முடியுமா? என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்கும்.
ஆனால் உகண்டாவில் இது தலைககீழாக இருந்தது.
கடத்தல்காரர்களும், உகண்டாவின் பாதுகாப்புப் படை அதிகாரிகளும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக நடந்து கொண்டார்கள். அதற்கு ஒருபடி மேலேபோய், கடத்தல்காரர்கள் ஓய்வு எடுக்கும்போது உகண்டாவின் பாதுகாப்புப்படை அதிகாரிகளால் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்ட லோக்கல் ஆட்களே பணயக் கைதிகளை காவல்காத்தார்கள்.
உகண்டா அரசே கிட்டத்தட்ட கடத்தல்காரர்களின் பக்கத்தில் இருந்து செயற்படுவது போன்ற தோற்றம் ஏற்பட்டிருந்தது.
அங்கிருந்த யாருக்கும், பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியப் பணயக்கைதிகள் உட்பட, இவர்களை விடுவிக்க மொசாத் அதிரடி நடவடிக்கை ஒன்றைத் திட்டமிடுகின்றது என்ற விஷயம் தெரியாது! இதுதான் அங்கிருந்த நிலை.
உகண்டாவில் நிலைமை அப்படியிருக்க இஸ்ரேலில் மொசாத்தின் தலைமைச் செயலகத்தில் என்ன நடைபெற்றுக்கொண்டிருந்தது?
மொசாத்தின் திட்டம்
மொசாத்தின் அதிரடி மீட்பு நடவடிக்கையை திட்டமிட்டுக் கொண்டிருந்த டேவிட் கிம்சே ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தார். என்னதான் கென்யா நாட்டின் முழுமையான ஒத்துழைப்பு இந்த விஷயத்தில் கிடைத்திருந்தாலும், அதிரடி மீட்பு நடவடிக்கைகளை முற்று முழுதாக கென்யா நாட்டிலிருந்து நடத்துவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.
இதற்கும் ஒரு காரணம் இருந்தது.
இரு நாடுகளுக்கிடையிலான ராஜாங்க உறவு என்ற ரீதியில் கென்யா இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பு கொடுத்தாலும், உள்மனதில் அவர்களுக்கும் இஸ்ரேல்மீது கோபம் இருக்கலாம். அதுவும் தங்களுக்கு அருகிலுள்ள நாடு (உகண்டா) ஒன்றில் இஸ்ரேலிய உளவுத்துறை அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளப் போகின்றது என்பதை கென்யா எந்தளவுக்கு விரும்பும் என்று ஊகிப்பது கஷ்டம்.
யார் கண்டது, சில வேளைகளில் கவிழ்த்து விட்டாலும் விடலாம்.
இது பணயக் கைதிகளாக இருக்கும் இஸ்ரேலியர்களின் உயிர் சம்மந்தப்பட்ட விஷயம் என்பது மாத்திரமல்ல. இப்படியொரு ஒப்பரேஷன் தோல்வியில் முடிந்தால் அது இஸ்ரேலுக்கு ஏற்படக்கூடிய கடும் அவமானமாகவும் இருக்கும்.
இதனால் இந்த அதிரடித் தாக்குதல் மீட்பு எப்படி நடைபெறப்போகின்றது என்ற விபரங்கள் யாருக்கும் தெரியாமல் – (கென்யா உட்பட) – இருக்கவேண்டியது அவசியம் என்று டேவிட் கிம்சீ முடிவு செய்திருந்தார்.
கொமாண்டோக்களை அனுப்ப வேண்டும்!
ஆனால் சிக்கல் என்னவென்றால், பணயக் கைதிகள் வைக்கப்பட்டிருக்கும் இடம் இருப்பது ஆபிரிக்காக் கண்டத்தில். இந்த அதிரடித் தாக்குதலுக்காகக் கொமாண்டோக்களை இஸ்ரேலில் இருந்து விமானம் மூலமாகக் கொண்டுபோய் ஆபிரிக்காவில் இறக்க வேண்டும்.
இஸ்ரேலில் இருந்து அதிரடித் தாக்குதல் ஒன்றை நடாத்த கொமாண்டோக்களை விமானமூலம் கொண்டு சென்றாலும், உகண்டாவுக்கு அருகிலுள்ள ஏதாவது ஒரு நாட்டு விமான நிலையம் ஒன்றில் வைத்து எரிபொருள் நிரப்பப்படவேண்டும்.
அந்த நாட்களில் இஸ்ரேலில் இருந்து ஆபிரிக்கா சென்று, மீண்டும் இஸ்ரேலுக்கு திரும்பிவருமளவுக்கு எரிபொருளைக் கொண்டு செல்லக்கூடிய எந்தவொரு விமானமும் இஸ்ரேலிடம் இருந்ததில்லை. தற்போது இருப்பதுபோல விமானத்துக்கு வானில் வைத்து எரிபொருள் நிரப்பும் வசதிகளும் அப்போது இருக்கவில்லை.
இஸ்ரேலுக்கு ஆபிரிக்கக் கண்டத்தில் அந்த நாட்களில் இருந்த அரசியல் உறவுகள் காரணமாக இஸ்ரேலுக்கு அந்தப் பிராந்தியத்தில் உதவக்கூடிய நாடுகள் அதிகமில்லை.
வேறு வழியில்லாமல் இதற்கும் கென்யாவிடம்தான் போகவேண்டும் என்ற நிலை.
இஸ்ரேலிய தந்திரம்
இந்த இடத்தில் இஸ்ரேல் ஒரு சிறிய தந்திரம் செய்ய முயன்றது. ஏற்கனவே உளவுத்துறையான மொசாத் மூலமாக கென்யாவில் இந்த அதிரடி நடவடிக்கைக்காக சில முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, அதற்கும் இதற்கும் சம்மந்தமில்லை… இது வெறும் சிவில் விமான விவகாரம் என்று காட்டி கென்யாவிடம் அனுமதி வாங்க முயன்றது இஸ்ரேல்.
இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு மூலம் கென்யாவின் வெளிவிவகார அலுவலகத்தில் தமது விமானம் ஒன்றுக்கு நைரோபி விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று கேட்பதாக முடிவு செய்யப்பட்டது. சும்மா விமானம் ஒன்றுக்கு எரிபொருள் நிரப்பவேண்டும் என்பதைத்தவிர, வேறு எந்த விபரமும் சொல்வதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இப்படியான கோரிக்கை கென்யா நாட்டு வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் வைக்கப்பட்டபோது, அவர்கள் எரிபொருள் நிரப்பப்படவேண்டிய குறிப்பிட்ட இந்த விமானம் பற்றிய மேலதிக விபரங்களை கேட்கத் தொடங்கினார்கள்.
என்ன வகை விமானம் அது? விமானத்தில் என்ன இருக்கிறது? விமானம் கென்யாவில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு எங்கே செல்லப் போகின்றது? இப்படியான பல கேள்விகள் வந்து விழுந்தன.
இதற்கெல்லாம் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சிடம் பதில் இல்லை.
“இந்த விபரங்களைக் கூறினால்தான் எரிபொருள் நிரப்ப அனுமதிக்கமுடியும்” என்று கென்ய வெளிவிவகார அமைச்சுக் கூறிவிட, இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு மொசாத்தைத் தொடர்பு கொண்டு, அடுத்து என்ன செய்வது என்று கேட்டது.
விஷயம் என்னவென்றால், தீவிரவாதிகள் விமானக் கடத்தல் ஒன்றின்மூலம் இஸ்ரேலியப் பணயக்கைதிகளை உகண்டாவில் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள் என்ற செய்திதான் அப்போது உலகெங்கும் பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருந்தது. இது கென்யாவுக்கும் நன்றாகவே தெரியும்.
அத்துடன் இஸ்ரேலிய உளவுத்துறை அதற்குள் அதிரடியாக ஏதோ செய்யப்போகின்றது என்ற விபரமும், கென்யாவுக்கு மேலதிகமாகத் தெரியும்.
அப்படியான சூழ்நிலையில் இஸ்ரேலிய விமானம் ஒன்று கென்யாவில் எரிபொருள் நிரப்ப அனுமதி கேட்கின்றதென்றால், அது நிச்சயம் இந்தப் பணயக் கைதிகளுடன் சம்மந்தமாக ஏதோ ரகசியக் ஒரு காரியம் என்பதை கென்யா ஊகித்திருந்தது. இதனால் என்ன விஷயம் என்று சரியாகத் தெரியாமல் தமது நாட்டு விமான நிலையத்தை இதற்கு உபயோகிப்பதற்கு விட கென்யா விரும்பவில்லை.
டேவிட் கிம்சீ மொசாத்தின் தலைவருடன் கலந்து ஆலோசித்தார்.
முடிவில் மொசாத்தின் மற்றொரு திட்டம் உருவாகியது.


அத்தியாயம் 3
விமான நிலையத்தை உளவு பார்த்தல்!
தீவிரவாதிகள் விமானக் கடத்தல் மூலம் இஸ்ரேலியப் பணயக் கைதிகளை உகண்டாவில் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள் என்ற செய்தி, அப்போது உலகெங்கும் பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருந்தது.
இந்த விவகாரம், கென்யாவுக்கும் நன்றாகவே தெரியும். அத்துடன் இஸ்ரேலிய உளவுத்துறை பணயக் கைதிகளை மீட்க அதிரடியாக ஏதோ செய்யப்போகின்றது என்ற விபரமும், கென்யாவுக்கு மேலதிகமாகத் தெரியும்.
அப்படியான சூழ்நிலையில் இஸ்ரேலிய விமானம் ஒன்று கென்யாவில் எரிபொருள் நிரப்ப அனுமதி கேட்கின்றது!
ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பதுபோல,மிகத் தெளிவாகபுரியக்கூடிய விடயம் இது. இஸ்ரேலிய விமானம் வருவது, பணயக் கைதிகளை மீட்கும் ரகசிய ஆபரேஷன் என்பதை கென்யா ஊகித்திருந்தது.
ஆனால் என்ன விஷயம் என்று சரியாகத் தெரியாமல், தமது நாட்டு விமான நிலையத்தை இதற்கு உபயோகிப்பதற்கு விட கென்யா விரும்பவில்லை. அதனால்தான் துருவித் துருவி விபரங்களைக் கேட்டது கென்யா.
டேவிட் கிம்சீ, மொசாத்தின் தலைவருடன் கலந்து ஆலோசித்தார்.
இஸ்ரேல் சொன்ன பொய்
“இந்த விமானத்துக்கும் பணயக் கைதிகளுக்கும் சம்மந்தமே இல்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலை கூடாது. அது கென்யாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலுள்ள ராஜாங்க உறவுகளைக் கெடுத்துவிடும்” என்பதை டேவிட் ஒப்புக்கொண்டார்.
அதே நேரத்தில், பணயக் கைதிகளை மீட்க அதிரடித் திட்டம் ஒன்றுக்காகத்தான் இந்த விமானம் என்று கூறவும் அவர் விரும்பவில்லை.
எனவே, இப்படியும் இல்லாமல், அப்படியும் இல்லாமல் புதிதாக, அதே நேரத்தில்  நம்பும்படியாக ஒரு கதை கூறுவது என மொசாத் முடிவெடுத்தது. அந்தக் கதைதான் கென்யாவுக்கும் இஸ்ரேலினால் சொல்லப்பட்டது.
அந்தக் கதை என்ன?
“விமானக் கடத்தல்காரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, பணயக் கைதிகளை மீட்கவே இஸ்ரேல் முடிவெடுத்திருக்கிறது. ஆனால், கடத்தற்காரர்களின் கோரிக்கையை இஸ்ரேல் நிறைவேற்றிய பின்னரும், பணயக் கைதிகளை நோக்கித் தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டால் என்ன செய்வது? ஒருவேளை அப்படி நடந்தால், உடனடி மருத்துவ உதவிகளைச் செய்யவே இந்த விமானம்!
இது ஒரு பறக்கும் வைத்தியசாலை போல அமைக்கப்பட்டிருக்கின்றது. இதில் டாக்டர்கள் இருப்பார்கள். விமானத்துக்கு உள்ளேயே சகல மருத்துவ உபகரணங்களுடன் ஆபரேஷன் தியேட்டர் உண்டு. அப்படியான ஒரு விமானத்துக்கு எரிபொருள் நிரப்பவே அனுமதி கேட்கிறோம்” என கென்யாவின் வெளிவிவகார அமைச்சிடம் கூறப்பட்டது.
விமானத்துக்கும் மொசாத்துக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை என்பது போலவே ஒரு தோற்றம் காண்பிக்கப்பட்டது.
மருத்துவ உதவி என்ற இந்தக் கோரிக்கையுடன் சென்றபோது கென்யாவால் அதை மறுக்க முடியவில்லை. சில மணி நேரங்களிலேயே இஸ்ரேலிய விமானம் நைரோபி விமான நிலையத்தில் இறங்கி எரிபொருள் நிரப்புவதற்கான அனுமதியை கென்யா அரசு கொடுத்தது. மனிதாபிமான ரீதியிலான அனுமதி என்று கென்யாவின் நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது.
அந்த ஏற்பாடும் சரி. இனி அடுத்த பிரச்சினை.
உளவாளிகள் உகண்டாவுக்குள் எப்படி நுழைவது?
மொசாத் ஏற்கனவே கென்யாவுக்குள் தனது உளவாளிகள் ஆறு பேரை அனுப்பிவிட்டது. மேலதிக உளவாளிகளையும் அங்கே அனுப்பலாம்.
ஆனால், கென்யாவிலிருந்து உகண்டா நாட்டுக்குள் இஸ்ரேலிய உளவாளிகள் நுழைவது எப்படி என்பதுதான் இன்னமும் குழப்பமாக இருந்தது.
கொமாண்டோக்களை ஏற்றிச் செல்லும் விமானம் உகண்டாவின் என்டபே விமான நிலையத்தில் போய் அதிரடியாக இறங்கி, பணயக் கைதிகளை மீட்பது என்பதுதான் மொசாத்தின் திட்டம். அப்படிச் செய்வதற்கு முன்னர் மொசாத்தின் உளவாளிகள் அந்த விமான நிலையம் இருக்கும் ஏரியாவுக்குள் ஊடுருவிச் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
முக்கியமாக அந்த விமான நிலையம் பற்றிய உளவுத் தகவல்கள் வேண்டும்.
விமான நிலையத்தில் இப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படிச் செய்யப் பட்டிருக்கின்றன என்பது தெரிய வேண்டும். எந்த நேரத்தில் குறைவான பாதுகாப்பு இருக்கின்றது என்பதை அறிய வேண்டும். இவை எல்லாவற்றையும்விட முக்கியமாக, அந்த விமான நிலையத்தின் முழுமையான வரைபடம் வேண்டும்.
இந்தக் காரணங்களுக்காக முதலில் உளவாளிகள் உகண்டாவுக்குள் நுழைய வேண்டும்.
இஸ்ரேலியர்களை உத்தியோகபூர்வமாக உள்ளே நுழைய இடி அமீன் அனுமதிக்க மாட்டார் என்பது இஸ்ரேலுக்கு நன்றாகவே தெரியும். எனவே யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாகத்தான உள்ளே நுழையவேண்டும்.
அடுத்த சிக்கல், P.L.O.!
மொசாத் இப்படி உகண்டாவுக்குள் நுழைவதற்கு மற்றுமோர் பெரிய தடையும் இருந்தது. அது பி.எல்.ஓ. எனப்படும் பாலஸ்தீன விடுதலை இயக்கம்.
அந்த நாட்களில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை வெளிநாடுகள் பலவற்றில் தொடர்ச்சியாகச் செய்துகொண்டிருந்தது. அதற்காக பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் போராளிகள் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டுமல்லவா?
அப்படியான பயணங்களுக்கு பாலஸ்தீன விடுதலை இயக்கம் அந்த நாட்களில் நுழைவாயிலாகப் பயன்படுத்திய விமான நிலையம் எது தெரியுமா?
இதே என்டபே விமான நிலையம்தான்!
என்டபே விமான நிலையத்தினூடாக உள்ளே நுழையவும், அதனூடாக மற்றய ஆபிரிக்க நாடுகளுக்குச் செல்லவும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினருக்கு இடி அமீன் முழுமையான அனுமதி வழங்கியிருந்தார். அதைவிட உகண்டாவுக்கு உள்ளே பாலஸ்ததீன விடுதலை இயக்கத்துக்கு ஒரு ரகசியத் தலைமை அலுவலகம் அமைக்கவும் இடி அமீனால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
யாருடைய வீடு அது தெரியுமா?
உகண்டாவுக்குள் அமைக்கப்பட்டிருந்த இந்த ரகசியத் தலைமை அலுவலகம் பற்றியும் அனேகருக்குத் தெரியாத ஒரு சுவாரசியமான தகவல் உண்டு.
1972ல் இடி அமீன் இஸ்ரேலுடன் உகண்டாவுக்கு இருந்த ராஜாங்கத் தொடர்புகளையெல்லாம் துண்டித்துக் கொண்டார்.  இஸ்ரேலியத் தூதரகத்தையும் உகண்டாவிலிருந்து வெளியேற்றினார். அப்போது இஸ்ரேலியத் தூதுவர் உகண்டாவில் தங்கியிருந்த வீட்டையும் தம்வசம் எடுத்துக் கொண்டார் இடி அமீன்!
அந்த வீட்டைத்தான் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ரகசியத் தலைமையகமாக உபயோகிக்கக் கொடுத்திருந்தார்.
அந்த வீட்டில் இருந்துதான் அவர்கள், இஸ்ரேவுக்கு எதிராக  மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கான உத்தரவுகள் போய்க்கொண்டிருந்தன.
இந்த விபரம் அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. மூலமாகவே மொசாத்துக்குத் தெரிய வந்திருந்தது.
இப்படியாக பாலஸ்தீன் ஆட்கள் அங்கிருப்பது, மொசாத்துக்கு அடுத்த சிக்கலாக இருந்தது.
மொசாத் உகண்டாவுக்குள், அதுவும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் வந்துபோகும் என்டபே விமான நிலையத்தில், அதிரடி ஆபரேஷன் ஒன்றை திட்டமிடுகிறது! சூழ்நிலை கொஞ்சம் தந்திரமானதுதான்.
தாக்குதலைத் திட்டமிடுவதற்கு முன், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் இன்னமும் அந்த வீட்டிலிருந்து இயங்குகிறார்களா என்பது பற்றிய உளவுத் தகவல் டேவிட் கிம்சேயுக்கு முதலில் தேவைப்பட்டது.
ஏனென்றால் அந்த வீடு என்டபே விமான நிலையத்துக்கு அருகில் இருந்தது!
விமானத்தில் கொண்டுவந்து இறக்கப்படும் இஸ்ரேலியக் கொமாண்டோக்கள், என்டபே விமான நிலையத்தில் அதிரடித் தாக்குதல் ஒன்றை நடாத்துவதே திட்டம். அப்போது, பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினரும் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள அந்த வீட்டில் இருந்தால் என்னாகும்?
அவர்களிடம் இருந்து ஆயுத ரீதியான எதிர்ப்புக் கிளம்பலாம். அதற்கு ஏற்ற ஒழுங்குகளையும் செய்துகொள்ள செய்யவேண்டும்.
இந்த விபரங்களை அறிய ரிஸ்க் எடுத்தாவது மொசாத்தின் உளவாளிகளை உகண்டாவுக்குள் அனுப்பியே ஆகவேண்டும்.
இரு உளவாளிகள் ஊடுருவுகின்றனர்
டேவிட் கிம்சே இதற்காக இரண்டு மொசாத் உளவாளிகள் உகண்டாவுக்குள் நுழைவதற்குத் தயார் செய்தார். அவர்கள் இஸ்ரேலில் இருந்து முதலில் கென்யாவுக்கு அனுப்பப்பட்டார்கள்.
கென்யா சென்றடைந்த அவ்விரு உளவாளிகளும் அங்கிருந்து உகண்டாவுக்குள் ஏரி ஒன்றின் ஊடாகவே ஊடுருவுவது என்று திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி கென்யாவிலிருந்து  திருட்டுத்தனமாக படகு ஒன்றின் மூலம் லேக் விக்டோரியா ஏரியில் பயணம் செய்து உகண்டாவுக்குள் நுழைந்தார்கள்.
இதிலுள்ள மற்றொரு முக்கியமான விஷயம்,  இரு உளவாளிகளின் இந்த ஊடுருவல் கென்யாவின் உளவுத் துறைக்குத் தெரிந்தே நடைபெற்றது.
உண்மையில் படகு மூலமாக உகண்டாவுக்குள் நுழையும் ஐடியாவை இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்துக்குக் கொடுத்ததே கென்யாவின் உளவுத்துறைதான். அத்துடன் இரு மொசாத்தின் உளவாளிகளையும் அந்தப் பாதையூடாக உகண்டாவுக்குள் அழைத்துச் செல்ல கென்யாவின் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவரையும் கூடவே அனுப்பி வைத்திருந்தது கென்ய உளவுத்துறை.
என்டபே பகுதிக்குள் இந்த மூன்றுபேரும் ஊடுருவி, பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று பார்த்தால், வீடு காலி!
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர், உகண்டாவில் இருந்து தங்களது நடவடிக்கைகளையெல்லாம் அங்கோலா நாட்டுக்கு நகர்த்திவிட்டார்கள் என்ற விபரம் அதன் பின்னரே மொசாத்துக்குத் தெரியவந்தது.
ஒரு தடை நீங்கியது. அதிரடி ஆப்பரேஷனின்போது விமான நிலையத்தில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் எதிர்ப்பை எதிர்கொள்ளத் தேவையில்லை.
இந்த இடத்தில், இவர்களுக்கு எதிர்பாராத அதிஷ்டம் ஒன்றும் அடித்தது.
பாதுகாப்பு அதிகாரியின் உறவினர்
இரண்டு மொசாத் உளவாளிகளுடன் கென்யாவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் சென்றிருந்தார் என்று சொன்னோமல்லவா… அந்தப் பாதுகாப்பு அதிகாரிக்கு உகண்டாவில் நல்ல தொடர்புகள் இருந்தன.
அந்தத் தொடர்புகள் மூலம் தகவல் சேகரித்ததில் அவரின் மனைவியின் உறவினர் ஒருவர் விமான நிலையத்தில் பணயக் கைதிகளை காவல் காக்கும் பணியில் இருப்பது தெரிய வந்தது.
குறிப்பிட்ட இந்த உறவினருடன் பேசிய கென்யப் பாதுகாப்பு அதிகாரி, தங்களை எப்படியாவது என்டபே விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.
ஆனால் அது ஆபத்தான விளையாட்டு என்று அந்த உறவினர் மறுத்துவிட்டார்.
காரணம், இரு இஸ்ரேலிய உளவாளிகளையும் அவர்களது உருவத் தோற்றத்தை வைத்தே கடத்தற்காரர்கள் சுலபமாக அடையாளம் கண்டு கொள்வார்கள்.
இப்போது ஒரு மாற்றுத் திட்டம் வகுக்கப்பட்டது.
இஸ்ரேலிய உளவாளிகள் இருவரையும் பாதுகாப்பான இடம் ஒன்றில் விட்டுவிட்டுத் தன்னை மாத்திரம் தனியே என்டபே விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டார் கென்யப் பாதுகாப்பு அதிகாரி.
இதில் சிக்கல் ஏதும் இருக்காது. காரணம் உகண்டா நாட்டவருக்கும் கென்ய நாட்டவருக்கும் உருவ அளவில் பெரிதாக வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது.
இதற்கு அவரது உறவினர் ஒப்புக்கொண்டார். அவருடன் இவரும் ஒரு காவல் காக்கும் சகா என்ற தோற்றத்தில் என்டபே விமான நிலையத்துக்குள் நுழைந்து விட்டார்.
அங்கே நோட்டமிட்டதில் பணயக் கைதிகள் அனைவரும் உயிருடன் இருப்பதை இவர் கண்களால் பார்த்தார். அத்துடன் என்டபே விமான நிலையத்தில் செய்யப்பட்டிருந்த காவல் ஏற்பாடுகளையும் இந்தப் பாதுகாப்பு அதிகாரி மனதில் பதிவு செய்துகொண்டார்.
மொத்தம் 15 பேர் பணயக் கைதிகளைக் காவல்காக்கும் வேலையைச் செய்து கொண்டிருந்தார்கள்.
அவர்களில் சிலர் இப்படியான வேலைகளுக்கே புதியவர்கள் என்பது நன்றாகவே தெரிந்தது. இந்தப் புதியவர்கள் துப்பாக்கியையே முன்பின் இயக்கிப் பழக்கமில்லாத ஆட்கள் என்பது அவர்கள் துப்பாக்கியை மிரட்சியுடன் பிடித்திருந்ததில் இருந்தே தெரிந்தது.
துப்பாக்கி பிடிக்கத் தெரிந்த மற்றயவர்களும் அனுபவசாலிகள் அல்ல. அவர்களும் நகத்தைக் கடித்தபடி பயத்துடனும் பதட்டத்துடனும் காணப்பட்டார்கள்.
இந்தத் தகவல்கள் ரேடியோ மூலம், இஸ்ரேலிலுள்ள மொசாத் தலைமையகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
இதே நேரத்தில் கென்யாவுக்கு முதன்முதலில் போய் இறங்கிய ஆறு மொசாத் உளவாளிகள் என்ன செய்தார்கள் என்பதைப் பார்க்கலாமா?


அத்தியாயம் 4
விமானத்துக்குள் மறைந்திருந்த கமாண்டோக்கள்!
இஸ்ரேலில் மொசாத் தலைமையகம் பணயக் கைதிகளை விடுவிக்கும் அதிரடித் திட்டத்தை உருவாக்கிக் கொண்டிருந்த அதே நேரத்தில், கென்யாவுக்குள் முதன்முதலில் போய் இறங்கிய ஆறு மொசாத் உளவாளிகளும் என்ன செய்தார்கள் என்பதைப் பார்க்கலாமா?
மொசாத்தின் திறமைசாலிகளான உளவாளிகள் எனத் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட இந்த ஆறு பேரில் இரண்டுபேர், விமானங்களையும் செலுத்தக் கூடியவர்கள்.இந்த இருவரும் களத்தில் இறங்கினார்கள்.
தாங்கள் இருவரும் இயற்கைக் காட்சிகளைப் புகைப்படம் எடுக்கும் புகைப்பட நிபுணர்கள் என வெளியாட்களிடம் கூறிக்கொண்டார்கள்.  தனியார் விமானங்களை வாடகைக்கு விடும் நிறுவனம் ஒன்றுக்குள், இவர்கள் நுழைந்தார்கள்.
கென்யாவில் சிறிய விமானங்களை வாடகைக்கு விடும் தனியார் நிறுவனங்கள் அதிகம் உண்டு. காரணம், காடுகளில் மிருகங்களைக் கண்டுகளிக்கும் சபாரி பயணங்களுக்காக வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் அதிகம் வரும் நாடு கென்யா. வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கு விமானங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்கள் அவை.
அப்படியொரு நிறுவனத்தில் சிறிய செஸ்னா ரக விமானத்தை, இந்த இருவரும் உல்லாசப் பயணிகள்போல வாடகைக்கு எடுத்தார்கள். அவர்கள் இந்த விமானத்தில் ஏறி முதலில் லேக் விக்டோரியா ஏரிக்கு மேலே பறந்து சில புகைப்படங்களை எடுத்தார்கள்.
அதன்பின், விமானத்திலிருந்த ரேடியோ சாதனம் மூலம் உகண்டாவின் விமானக் கட்டுப்பாட்டு டவரைத் தொடர்பு கொண்டார்கள்.
தாங்கள் உல்லாசப் பயணிகளுக்கான புத்தகம் ஒன்றைத் தயாரிக்கும் ஆட்கள் என அறிமுகம் செய்து கொண்டார்கள். அந்தப் புத்தகத்துக்காக ஏர்-வியூவில் புகைப்படங்கள் எடுப்பதாகவும், உகண்டாவின் வான் எல்லைகளுக்குள்ளேயும் பறந்து புகைப்படங்கள் எடுக்கவேண்டும் என்றும், உகண்டாவின் விமானக் கட்டுப்பாட்டு டவரில் அனுமதி கோரினார்கள்.
இவர்கள் மொசாத் உளவாளிகள் என்ற விஷயம் தெரியாமலேயே, விமானக் கட்டுப்பாட்டு டவரில் இருந்து அனுமதி கிடைத்தது.
இவர்கள் பறக்க அனுமதி கேட்டிருந்தது உகண்டாவின் எல்லைக்குள் ஓடும் விக்டோரியா ஏரிக்குமேல் பறந்து புகைப்படம் எடுப்பதற்கு! ஆனால் இவர்களது செஸ்னா விமானம், லேக் விக்டோரியா ஏரியைப் புகைப்படம் எடுத்ததுடன் நின்று விடவில்லை.
அதற்கு அருகிலுள்ள என்டபே விமான நிலையத்துக்கு மேலேயும் பறந்து புகைப்படங்களை எடுத்துத் தள்ளியது. அந்த விமான நிலையக் கட்டடத்துக்குள்தான் பணயக் கைதிகளும் இருந்தார்கள். தீவிரவாதிகளும் இருந்தார்கள்.
விமான நிலையத்தின் ரன்வே, அதற்கு அருகிலுள்ள கட்டடங்கள் என்று எல்லாமே புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, உடனே இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டது.
இந்தப் புகைப்படங்களை வைத்துக்கொண்டு, டேவிட் கிம்சே அதிரடித் தாக்குதல் திட்டத்தைப் போடத் தொடங்கினார். அதின் முக்கிய அம்சம் கடத்தல்காரர்களை தொழில்நுட்பத்தை வைத்து குழப்புவது என்பதாக இருந்தது.
மொசாத் ஒரு பக்கமாக அதிரடி மீட்பு நடவடிக்கை ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டிருக்க, மறுபக்கத்தில் அரசியல் ரீதியான சில வேலைகளையும் செய்து கொண்டிருந்தது இஸ்ரேலிய அரசுத் தலைமை.
இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர், நேரடியாகவே உகண்டாவின் தலைவர் இடி அமீனின் அரண்மனையைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “இடி அமீனுடன் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் பேசவேண்டும்” என்றார்.
இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சரின் கோரிக்கை இடி அமீனின் மாளிகை அதிகாரிகளால் (இடி அமீனின் உத்தரவுப்படி) நிராகரிக்கப்பட்டது.
அப்படித்தான் நடைபெறும் என்பதை அவரும் ஊகித்திருந்தார்.
இடி அமீன் பேசமாட்டார் என்பதை ஊகித்திருந்தும், அவர் இடி அமீனின் மாளிகையைத் தொடர்பு கொண்ட காரணமே வேறு. அங்கிருந்த முக்கிய அதிகாரிகளுடன், அவரால் பேச முடிந்தது. அதுதான் அவருக்குத் தேவை.
இடி அமீன் மாளிகையின் முக்கிய அதிகாரிகளுடன் பேசும்போது, “உங்களது நாட்டின் (உகண்டா) விமான நிலையத்தில் இஸ்ரேலியப் பணயக் கைதிகள் வைக்கப்பட்டிருப்பதால், இது ஒரு சம்பிரதாயமான தொலைபேசித் தொடர்பு” என்று தெரிவித்தார் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர். அத்துடன் அந்த பணயக் கைதிகளுக்கு உகண்டா அரசு உணவு வழங்க மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு, நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.
இதைச் சொல்வதற்கா போன் பண்ணினார்? இல்லை.
இந்தப் பேச்சுக்களின்போது, கதையோடு கதையாக, பணயக் கைதிகளை விடுவிப்பதற்காக கடத்தல்காரர்களின் சகல கோரிக்கைகைகளும் ஏற்பது என்ற நிலைப்பாட்டை இஸ்ரேலிய அரசு எடுத்திருப்பதாக (பொய்தான்!) மீண்டும், மீண்டும் கூறினார்.
இடி அமீனின் அரண்மனையிலுள்ள அதிகாரிகளுக்கு இதை ஏன் அவர் சொல்ல வேண்டும்? அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.
முதலாவது, இஸ்ரேல் கடத்தல்காரர்களுக்குப் பணிந்து போகப்போகின்றது என்ற நம்பிக்கை உகண்டா அரசுக்கு ஏற்பட்டால்தான் பாதுகாப்பு விஷயத்தில் உகண்டா அஜாக்கிரதையாக இருக்கும்.
அப்படியொரு நம்பிக்கை உகண்டா அரசுக்கு ஏன் ஏற்பட வேண்டும்?
தமது பரிவுக்குரிய தீவிரவாத அமைப்பின் கடத்தல்காரர்கள்மீது, தமது நெடுநாள் விரோதியான இஸ்ரேலினால், தமது நாட்டு விமான நிலையத்தில் வைத்தே தாக்குதல் ஒன்று நடைபெறப்போகின்றது என்ற விஷயத்தை உகண்டா ஊகித்து விட்டால் என்ன நடக்கும்?  உகண்டா தனது ராணுவத்தைக் கொண்டுவந்து அந்த விமான நிலையத்தைச் சுற்றி நிறுத்தி விட்டாலும் விடலாம்.
அப்படியான உஷார்படுத்தலைத் தடுத்து, உகண்டா அரசை அஜாக்கிரதையாக இருக்க வைப்பதே இந்தத் தொலைபேசி உரையாடலின் முதலாவது நோக்கம்.
இரண்டாவது நோக்கம், இடி அமீனின் மாளிகை அதிகாரிகளுக்குக் கூறப்பட்ட இந்த விஷயம் எப்படியும் கடத்தல்காரர்களுக்கு நிச்சயம் போய்ச்சேரும் என்பதை, இஸ்ரேல் ஊகித்திருந்தது. அப்போதுதான் அவர்களும் அலட்சியமாக இருப்பார்கள்.
ஒரு ராஜதந்திரியின் தொலைபேசி அழைப்பு உளவுத்துறை ஆபரேஷனுக்கே பாதை அமைத்துக் கொடுத்திருப்பதைப் பார்த்தீர்களா? இஸ்ரேலைப் பொறுத்தவரை இது மிகவும் சகஜமான ஒரு விளையாட்டுத்தான்!
இந்த ராஜதந்திர விளையாட்டைச் செய்ததுடன் நிறுத்திக் கொள்ளவில்லை இஸ்ரேல். ராஜதந்திர அளவில் மற்றுமோர் வேலையும் செய்தது. வெளிவிவகார அமைச்சின் மூலம் தமது நட்பு நாடுகளின் தூதரகங்களையும் தொடர்பு கொண்டது. அப்படித் தொடர்பு கொள்ளப்பட்ட தூதரகங்களிடமும், “கடத்தல்காரர்களிடம் பணிந்து போவதைத் தவிர, எமக்கு வேறு வழியில்லை” என்றே கூறப்பட்டது.
இப்படித் தொடர்பு கொள்ளப்பட்ட வெளிநாட்டுத் தூதரகங்களில் ஒன்று பிரிட்டிஷ் தூதரகம்.
“உகண்டாவிலிருந்த இஸ்ரேலியத் தூதரகம் மூடப்பட்டுவிட்டது. இதனால், உகண்டாவில் அப்போதும் இயங்கிக் கொண்டிருந்த உங்களது (பிரிட்டனின்) தூதரக உயரதிகாரியை எங்களது சார்பில் உகண்டாவில் பேச்சு வார்த்தைகளை நடத்த ஏற்பாடு செய்ய முடியுமா?” என இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டது.
பிரிட்டிஷ் அரசும் இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதித்தது.
இஸ்ரேலின் சார்பில் உகண்டா அரசுடன் பேசுவதற்கு அங்கிருந்த தூதரக உயரதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார். அந்த பிரிட்டிஷ் தூதரக உயரதிகாரியும், இஸ்ரேல் கடத்தல்காரர்கள் கேட்பதையெல்லாம் கொடுப்பதற்குத் தயாராக இருக்கின்றது என்றே உகண்டா அரசிடம் கூறிக்கொண்டிருந்தார்.
(இஸ்ரேலுக்காக உகண்டா அரசுடன் பேசிக்கொண்டிருந்த பிரிட்டிஷ் தூதரக அதிகாரி, கடத்தல்காரர்களின் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்பதாகக் கூறுவது டூப் என்பதை ஊகித்திருந்தாரா என்பது தெரியவில்லை)
ராஜதந்திர விளையாட்டுகள் இப்படியாக ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்க மறுபக்கமாக மொசாத்தின் அதிரடி நடவடிக்கையின் முதற் கட்டம் தொடங்கியது.
இஸ்ரேலுக்குச் சொந்தமான ஒரு போயிங் 707 விமானம் (ஆம். அந்த நாட்களில் 707தான் பாவனையிலிருந்த பிரபல விமானம்!) ஒன்று டெல்அவிவ் விமான நிலையத்திலிருந்து கிளம்பியது. கிட்டத்தட்ட 9 மணிநேரம் பறந்தபின், கென்யாவின் நைரோபி விமான நிலையத்தில் போய் தரையிறங்கியது அந்த விமானம்.
நைரோபி விமான நிலையத்தில் விமானம் இறங்கியதுத் கென்ய விமான நிலைய அதிகாரிகள் தமது வழமையாக செயற்பாடாக, விமானத்துக்குள் ஏறி செக் பண்ணினார்கள்.
மொசாத்தின் ஆலோசனைப்படி, அந்த விமானம் ஒரு பறக்கும் வைத்தியசாலை போலவே அமைக்கப்பட்டிருந்தது. உள்ளே மருந்துகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள் என்று நிறையவே இருந்தன. அத்துடன் இஸ்ரேலிய டாக்டர்கள் குழு ஒன்றும் அந்த விமானத்தில் இருந்தது.
உண்மையில் அந்தக் குழுவில் இருந்தவர்கள் டாக்டர்கள் அல்ல. அவர்கள் மொசாத்தின் ஏஜன்ட்கள்தான் என்ற விபரம், நைரோபி விமானநிலைய அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதைவிட முக்கிய விஷயம், இந்த விமானத்தின் கீழ்ப்பகுதி (கார்கோ ஏற்றுமிடம்) மாற்றியமைக்கப்பட்டு, அதனுள் கொமாண்டோக்கள் மறைந்திருந்தனர்.
இவர்கள் உபயோகித்த 707 விமானத்திற்கு வெளியே எந்த விதமான எழுத்தும் எழுதப்பட்டிருக்கவில்லை. வழமையாக எந்தவொரு விமானத்திலும் குறைந்த பட்சம் அது எந்த நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் என்றோ, எந்த நாட்டுக்குச் சொந்தமான விமானம் என்றோ எழுதப்பட்டிருக்கும். இதில் அப்படி எதுவுமே இல்லை.
அந்த விமானத்தைச் செலுத்திய இரு விமானிகளும், பயணிகள் விமானங்களைச் செலுத்தும் ஆட்களல்ல.  இஸ்ரேலிய விமானப்படையைச் சேர்ந்த விமானிகள்!
இஸ்ரேலின் போயிங் 707 விமானம் நைரோபி விமான நிலையத்தில் தரையிறங்கிய அதே நேரத்தில், தொடரின் முன்பகுதியில் நாங்கள் கூறிய லேக் விக்டோரியாப் பாதை வழியாக  6 மொசாத் ஏஜன்ட்களும் உகண்டா நாட்டுக்குள் யாருமறியாமல் நுழைந்துவிட்டிருந்தார்கள்.
இந்த ஆறுபோரிடம் சக்திவாய்ந்த தொலைத்தொடர்பு சாதனங்கள் இருந்தன.
மொசாத் தலைமையினால் அவர்களுக்கு இஸ்ரேலில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்த திட்டப்படி, அவர்கள் ஆறுபேரும் என்டபே விமான நிலையத்தின் வெளிப்புறமாக சூழ்ந்து கொண்டு மறைந்திருக்க வேண்டும். அங்கிருந்து தரையில் நடைபெறும் சம்பவங்களை நைரோபியிலுள்ள தொலைத் தொடர்புக் கட்டுப்பாட்டு மையத்துக்குத் தெரிவிக்கவேண்டும்.
அது மாத்திரமல்ல அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை. மற்றொரு முக்கிய வேலையும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அது, தம்மிடமுள்ள தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கடத்தல்காரர்களையும், உகண்டாவின் விமானநிலைய அதிகாரிகளையும் குழப்பியடிப்பது.
அதை எப்படிச் செய்யப்போகிறார்கள்?


அத்தியாயம் 5
இதுதான் அதிரடித் தாக்குதல் திட்டம்
லேக் விக்டோரியாப் பாதை வழியாக உகண்டா நாட்டுக்குள் யாருமறியாமல் நுழைந்து விட்டிருந்த 6 மொசாத் ஏஜன்ட்களும் என்டபே விமான நிலையத்தின் வெளிப்புறமாக சூழ்ந்து கொண்டு மறைந்து கொண்டார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த முக்கிய வேலைகளில் ஒன்று, உகண்டாவின் விமானநிலைய அதிகாரிகளையும் குழப்பியடிப்பது.
அதை எப்படிச் செய்தார்களென்றால், என்டபே விமான நிலையத்தின் விமான நிலையத்தின் கண்ட்ரோல் டவாரில் இருந்த ராடார்களை சிறிய கருவி ஒன்றிலுள்ள அலைவாரிசைகளால் ஜாம் பண்ணுவது. (இப்போது இதெல்லாம் சில்லறை விஷயம். ஆனால் அந்த நாட்களில் இது ஒரு பெரிய தொழில்நுட்பம்!)
அப்படிச் செய்யும்போது என்டபே விமான நிலையத்தின் கட்டப்பாட்டிலுள்ள வான் பரப்பிலுள்ள எந்தவொரு விமான அசைவையும் கன்ட்ரோல் டவரிலுள்ள ராடார்கள் காட்டாது.
இவர்கள், தமது கருவிகள் மூலம் என்டபே விமான நிலையத்தின் விமான நிலையத்தின் கண்ட்ரோல் டவாரில் இருந்த ராடார்களை ஜாம் பண்ணிவிட்டு, கமாண்டோக்களுடன் வரப்போகும் விமானத்துக்காக பொறுமையுடன் காத்திருந்தார்கள்.
அதே நேரத்தில், நைரோபி விமான நிலையத்தில் இஸ்ரேலிய விமானம் என்ன செய்துகொண்டிருந்தது?
விமானத்துக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது. அதன்பின் விமானம் விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. உகண்டாவில் கடத்தற்காரர்கள் பணயக் கைதிகளை விடுவித்த பின்னரே விமானம் அங்கிருந்து கிளம்பி உகண்டாவுக்குச் செல்லும் என்று நைரோபி விமான நிலைய அதிகாரிகளுக்கு விமானத்தின் விமானியால் கூறப்பட்டது.
இந்த நிலையில் நைரோபி விமான நிலைய அதிகாரிகள், விமானத்திலிருந்த விமானிகளும் வைத்தியர் குழுவும் (!) விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையத்துக்கு அருகிலுள்ள ஹோட்டலில் ஓய்வெடுக்கலாம் என்று கூறினார்கள்.
ஆனால், போயிங் 707 விமானத்தில் வந்த விமானிகளும், வைத்தியர் குழுவும், மறுத்து விட்டார்கள்.  தாங்கள் விமானத்துக்கு உள்ளேயே தங்கிவிடப் போவதாகவும், எந்த நிமிடத்திலும் விமானம் கிளம்புவதற்கான உத்தரவு வரலாம் என்றும் கூறியிருந்தார்கள்.
அந்த நாட்களில் நைரோபி விமான நிலையம் மிகச் சிறியது. இரவில் விமானங்கள் எதுவும் வருவதில்லை. இதனால் விமான நிலையமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடிப் போய்க் காணப்படும். விமான நிலையத்தில் காவலும் மிகச் சொற்பம். அவர்களும் வெளியே வருவதில்லை.
நள்ளிரவு தாண்டிய நேரத்தில் அந்த விமானத்திலிருந்து 50 கொமாண்டோ வீரர்கள் ஓசைப்படாமல் ஆயுதங்களுடன் வெளியே வந்தார்கள்.
அவர்களின் கைகளில் ஆயுதங்களைத் தவிர வேறு சில பொதிகளும் இருந்தன. இந்த 50 கொமாண்டோக்களும் லேக் விக்டோரியா ஏரியின் கரையை நோக்கி ஓசைப்படாமல் சென்றார்கள்.
இவர்களின் கைகளில் இருந்த பொதிகளில் காற்று அடிக்கக்கூடிய ரப்பர் படகுகள் இருந்தன.
லேக் விக்டோரியாவின் கரையில் அந்த ரப்பர் படகுகளுக்கு காற்று அடிக்கப்பட்டது. அவற்றின் மூலமாக லேக் விக்டோரியாவைக் கடந்து உகண்டாவுக்கு உள்ளே நுழைந்தார்கள் அந்த 50 கொமாண்டோக்களும்.
அந்த அதிகாலை நேரத்தில் என்டபே விமான நிலையத்தின் சுற்றுப்புறங்களில் இந்த 50 பேரும் சூழ்ந்து மறைந்து கொண்டார்கள். அவர்கள் மறைந்திருந்த இடத்திலிருந்து விமான நிலைய டேர்மினலும், ரன்வேயும் மிகத் தெளிவாகத் தெரிந்தன.
அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த உத்தரவு, அங்கே காத்திருக்க வேண்டும் என்பதே.ஆக்ஷன் ஏதும் கிடையாது.
என்டபே விமான நிலையத்திலுள்ள பணயக் கைதிகளை மீட்டும்போது இவர்களது உதவி தேவைப்பட்டால் மாத்திரமே இவர்கள் தமது மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டு உள்ளே நுழைய வேண்டும் என்பதே உத்தரவு.
உண்மையான அதிரடி மீட்பு நடவடிக்கையை வேறு ஒரு கமாண்டோப் பிரிவுதான் செய்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இவர்கள் ஸ்டான்ட்பையாக அனுப்பி வைக்கப்பட்ட குழு.
இந்த 50 பேரும் என்டபே விமான நிலையத்தைச் சூழ தத்தமது பொசிஷன்களை எடுத்துத் தயாராக இருந்த அதே நேரத்தில்-
பணயக் கைதிகளை மீட்கவேண்டிய கொமாண்டோக்கள் எங்கிருந்தார்கள்?
அந்த நேரத்தில் இஸ்ரேலிய விமானப்படைக்குச் சொந்தமான மூன்று சீ-130 ஹேர்குலஸ் ரக போக்குவரத்து விமானங்களில் அந்தக் கமாண்டோக்கள் இஸ்ரேலில் இருந்து பயணித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத்தான் அதிரடித் தாக்குதலின் திட்டம் முழுமையாகக் கூறப்பட்டிருந்தது.
திட்டம் என்ன?
இவர்களது விமானம் என்டபே விமான நிலையத்தில் கன்ட்ரோல் டவரிடம் அனுமதி பெறாமல் தரையிறங்க வேண்டும். ராடார்கள் ஜாம் பண்ணப் பட்டிருக்கும் என்பதால், இவர்களது விமானங்கள் எண்டபேயை நோக்கிக் கீழே பதியும்வரை என்டபே விமானநிலைய அதிகாரிகளுக்கு அப்படி மூன்று விமானங்கள் தரையிறங்கப் போவதே தெரியாமலிருக்கும்.
இந்த மூன்று விமானங்களும் தரையிறங்கிய உடனே, என்டபே விமான நிலைய அதிகாரிகளிடையே குழப்பம் ஏற்படும். அவர்கள் தரையிறங்கிய விமானங்களுடன் முதலில் ரேடியோ தொடர்புகளை ஏற்படுத்தி அந்த விமானங்கள் எதற்காக வந்திருக்கின்றன என்று அறிய முயல்வார்களே தவிர, உடனடியாக அந்த விமானங்களைச் சுட மாட்டார்கள்.
கிடைக்கும் இந்தக் குறுகிய நேர அவகாசத்தைப் பயன்படுத்தி, அதன் விமானிகள் விமானங்களை விமான நிலையக் கட்டடங்களுக்கு அருகே கொண்டு சென்றுவிட வேண்டும்.
என்டபே விமான நிலையத்தின் வரைபடமும், அதில் பணயக் கைதிகள் வைக்கப்பட்டிருந்த லொக்கேஷனும், விமானத்தில் வந்திறங்கும் கமாண்டோக்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. விமானங்கள் விமான நிலையக் கட்டிடத்தை நெருங்கியதும் அதிலிருந்து கமாண்டோக்கள் குதித்து அதிரடியாக அந்தக் கட்டடத்துக்குள் நுழைந்து, எதிர்ப்பவர்களைச் சுட்டுவிட்டு பணயக் கைதிகளை மீட்கவேண்டும் என்பதே திட்டம்.
என்டபே விமான நிலையம் பற்றி மொசாத் உளவாளிகள் சேகரித்து அனுப்பியிருந்த தகவல்களின்படி இந்த விமான நிலையத்தில் உகண்டா ராணுவத்தின் ஒரு மிகச்சிறிய அவுட்போஸ்ட் மாத்திரமே இருக்கின்றது. அதில் அதிகபட்சம் ஏழிலிருந்து பத்து ராணுவத்தினர் மாத்திரமே இருப்பார்கள். அவர்களைச் சமாளிப்பது சுலபம்.
இந்த 10 ராணுவத்தினரும் தகவல் அனுப்பி, மேலதிக ராணுவத்தினரும், விமான எதிர்ப்புப் பீரங்கிகளும் விமான நிலையத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலுள்ள மற்றொரு ராணுவ முகாமில் இருந்துதான் வந்துசேர வேண்டும். அவர்கள் அங்கிருந்து வருவதற்குள் அதிரடி மீட்பு நடவடிக்கை முழுமையாக முடிந்து, பணயக் கைதிகள் விமானத்தில ஏற்றப்பட்டு விமானம் கிளம்பிவிட வேண்டும்.
இதுதான் கமான்டோக்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த திட்டம்.
திட்டத்தில் மேலதிகமாகக் கூறப்பட்டிருந்த அறிவுறுத்தலின்படி, விமானம் என்டபே விமான நிலையத்தில் நின்ற விநாடியிலிருந்து சரியாக ஏழு நிமிடங்களுக்குள் அனைத்தையும் முடித்துவிட வேண்டும்.
ஒரு வேளை ஏதாவது தடைகள் ஏற்பட்டு இந்த ஒப்பரேஷன் 7 நிமிடங்களைவிட அதிக நேரம் எடுக்குமென்றால், ரேடியோ மூலம் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் உதவி கோரலாம். அந்த அலைவரிசையில் உதவி கோரப்பட்டால், என்னபே விமான நிலையத்தைச் சூழ மறைந்திருக்கும் 50 கொமாண்டோக்களும் உதவிக்கு வருவார்கள்.
அவர்களிடம் உதவி கோரும் பட்சத்தில், அவர்களையும் விமானத்தில் ஏற்றிக்கொண்டுதான் கிளம்பவேண்டும். அவர்களைத் தரையில் விட்டுவிட்டு செல்லக்கூடாது.
திட்டப்படி எல்லாமே ஏழு நிமிடங்களுக்குள் முடிந்துவிட்டால், மறைந்திருக்கும் ஐம்பது கொமாண்டோக்களை அழைக்கத் தேவையில்லை. அதேபோல அவர்களை விமானத்தில் ஏற்றிக்கொண்டு செல்லத் தேவையும் இல்லை. அவர்களே தங்கள் வழியைப் பார்த்துக் கொள்வார்கள்.
மிகத் தெளிவான திட்டம். ஆனால் ஆபத்தான திட்டமும் கூட!

அத்தியாயம் 6
அதிரடித் தாக்குதலின் வெற்றி!
என்டபே விமான நிலையத்தில் செய்யப்பட்டிருந்த முன்னேற்பாடுகள் பற்றி கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம்.  இப்போது அதிரடி ஆபரேஷனுக்கு வரவேண்டிய கமாண்டோக்கள் எப்படி வந்து சேரப் போகிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.
கமாண்டோக்களுடன் இஸ்ரேலிய விமானப்படையின் சீ130 விமானங்கள் முதலில் நைரோபி விமான நிலையத்தில் வந்து தரையிறங்க வேண்டும். அங்கே அந்த விமானங்களுக்கும் எரிபொருள் நிரப்பப்பட்ட வேண்டும்.
எரிபொருள் நிரப்பும் அனுமதி ஏற்கனவே கென்ய அரசால் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் எத்தனை விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட வேண்டும் என்ற விஷயத்தை இஸ்ரேல் தமது எழுத்துபூர்வமான கோரிக்கையில் சாமர்த்தியமாக தவிர்த்து விட்டிருந்தது.
அவர்களது நல்ல காலம் கென்ய அதிகாரிகளும் இதைக் கவனித்து விசாரித்திருக்கவில்லை.
மூன்று விமானங்களுக்கும் எரிபொருள் நிரப்பப்பட்ட பின்னர் நைரோபி விமான நிலையத்திலிருந்து இந்த விமானங்கள் கிளம்பும்போது, முன்னரே அங்கு தரையிறங்கி நிறுத்தி வைக்கப்பட்டிக்கும் போயிங் -707 விமானமும் கூடவே கிளம்பிச் செல்லவேண்டும்.
கிளம்பும் அனைத்து விமானங்களும் எங்கே செல்கின்றன என்ற விபரத்தை கென்யா நாட்டு அதிகாரிகளுக்குச் சொல்லக் கூடாது.
இந்த முழுத் திட்டத்திலுள்ள மைனஸ் பாயின்டே இதுதான். ஒருவேளை கென்ய அதிகாரிகள், இவர்கள் செய்யப் போவதை ஊகித்து, சீ130 ரக விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப மறுக்கலாம். அல்லது இந்த விமானங்கள் அனைத்தும் கிளம்பியவுடன், உகண்டாவுக்கு தகவல் கொடுத்தாலும் கொடுக்கலாம். இவைதான் இந்தத் திட்டத்திலுள்ள மைனஸ் பாயின்ட்கள்.
ஆனால், மொசாத் வேறு வழியில்லாமல் அந்த ரிஸ்க்கை எடுக்கவேண்டியிருந்தது.
இஸ்ரேலில் இருந்து கிளம்பியிருந்த சீ-130 விமானங்களின் விமானிகளுக்கு அவர்கள் செல்ல வேண்டிய விமானப் பாதை பற்றிய பிளைட் பிளான் ஒன்று மொசாத்தாலேயே தயாரித்துக் கொடுக்கப்பட்டிருந்தது. பொதுவாக இந்தப் பாதையில் பயணிக்கும் எந்த விமானமும் இப்படியான ஒரு பிளைட் பிளானை உபயோகிக்காது என்ற வகையிலான, தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் பிளைட் பிளான் அது.
கொடுக்கப்பட்ட பிளைட் பிளானின்படி விமானப் பாதை ஆபிரிக்கக் கண்டத்தில் முடிந்தவரை எந்தவொரு நாட்டின் மேலாகவும் பறக்காமல், செங்கடலின் மேலாகப் பறந்து கடந்து பின்னர், தெற்கு நோக்கித் திரும்பி ஒரு சுற்றுப்பாதையூடாக கென்ய வான்பரப்புக்குள் பிரவேசிப்பதாக இருந்தது.
இதற்குக் காரணம் என்னவென்றால், எந்தவொரு நாட்டின் வான்பரப்புக்கு மேலால் எந்த விமானங்கள் பறந்தாலும் அந்த நாட்டின் ஏதோ ஒரு கன்ட்ரோல் டவரிடம் அனுமதி பெற வேண்டும். இஸ்ரேலிய விமானங்கள் அந்தப் பிராந்தியத்தில் எங்கோ செல்லும் விஷயம் வேறு எந்தவொரு ஆபிரிக்க நாட்டின் கன்ட்ரோல் டவருக்கும் தெரியக்கூடாது.
எல்லாமே மிகத் துல்லியமான திட்டம்தான். ஒரேயொரு ரிஸ்க், நாங்கள் முதலில் கூறியது போல கென்ய அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்படுவதுதான்.
ஆனால் இவர்களது அதிஷ்டம், அவர்கள் கடைசிவரை சந்தேகப்படவில்லை.
***
அனைத்து விமானங்களும் நைரோபி விமான நிலையத்தில் வைத்து எரிபொருள் நிரப்பிவிட்டு குறித்த நேரத்தில் மேலெழுந்தன. திட்டப்படி விமானங்கள்அனைத்தும் 36000 அடி உயரத்தில் பறந்தபடி உகண்டாவின் வான் எல்லைக்குள் பிரவேசித்தன.
திடீரென தாழப்பதிந்து, ஒவ்வொன்றாக என்டபே விமான நிலைய ரன்வேயில் தரையிறங்கின.
வழமையாக ஒரு விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள் சில உண்டு. ரன்வேயில் விமானம் ஓடி நிறுத்தப்படவேண்டிய தூரம், வேகக் கட்டுப்பாடு போன்ற இந்த நடைமுறைகள் எதையும் கடைப்பிடிக்காமல் லேன்டிங் செய்தார்கள்.
தரையிறங்கிய உடனே த்ரஸ்ட் ரிவேசர் மூலம் விமானத்தின் வேகம் சடுதியாக குறைக்கப்பட, விமானம் மிக மோசமாக குலுங்கிக் குலுங்கி ரன்வேயில் ஓடியது.
சகல விமானங்களும் ரன்வே முடியும் முன்னரே டாக்ஸிவேயில் திருப்பப்பட்டன. இந்த டாக்ஸிவே பணயக் கைதிகள் இருக்கும் கட்டிடத்துக்கு முன்னால் விமானத்தைக் கொண்டு போய் விடும்.
பணயக் கைதிகள் வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தின் முன் விமானம் போய் நிறுத்தப்படும் முன்னரே கமாண்டோக்கள் தரையில் குதித்து சுடத் தொடங்கினார்கள். இதை அங்கிருந்த யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.
இந்தக் குழப்பத்தில் கொமாண்டோக்கள் பணயக் கைதிகள் வைக்கப்பட்டிருந்த கட்டிடத்துக்குள் சடுதியாக நுழைந்தார்கள். காவலுக்கு இருந்தவர்கள் என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ளும் முன்னரே சுடப்பட்டார்கள்.
பணயக்கைதிகளை ஓடிப்போய் விமானங்களில் ஏறமாறு கொமான்டோக்கள் கத்தினார்கள். ஓடமுடியாத பணயக்கைதிகளை கொமாண்டோக்கள் சுமந்துகொண்டு ஓடினார்கள்.
எல்லாமே கடகடவென நடந்துவிட்டன.
முதலாவது கமாண்டோ தரையில் குதித்த வினாடியிலிருந்து, மீட்கப்பட்ட கடைசி பணயக்கைதி விமானத்துக்குள் ஏற்றப்பட்ட விநாடி வரையிலான நேரம் சரியாக 5 நிமிடங்கள். திட்டமிடப்பட்டிருந்த நேரத்துக்கு 2 நிமிடங்களுக்கு முன்னரே எல்லாம் முடிந்துபோய் பணயக் கைதிகளுடன் விமானங்கள் ரன்வேயில் ஓடத் தொடங்கின.
நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் கடத்தல்காரர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருந்தார்கள். அத்துடன் பணயக்கைதிகளை காவல்காப்பதற்காக லோக்கலில் ஒழுங்கு செய்யப்பட்ட 14 உகண்டா நாட்டுக் காவலர்களும் கொல்லப்பட்டனர். கூடவே, இரண்டு என்டவே விமானநிலைய ஊழியர்களும் கொல்லப்பட்டிருந்தார்கள்.
விமான நிலையத்தைச் சூழ மறைந்திருந்த 50 கொமாண்டோக்களின் உதவி கடைசிவரை கோரப்பட்டவில்லை.
அவர்கள் வந்த சுவடு தெரியாமல், மீண்டும் லேக் விக்டோரியா ஏரியைக் கடந்து கென்யா நாட்டுக்குள் சென்றுவிட்டனர். மறுநாளே  இஸ்ரேலிய விமானப்படையின் மற்றுமோர் விமானம் வந்து அவர்களை அழைத்துச் சென்றது.
இந்த அதிரடி நடவடிக்கையின்போது கடத்தற்காரர்கள் திருப்பிச் சுடவில்லையா? சுட்டார்கள். அப்படிச் சுட்டதில் இஸ்ரேலியக் கமாண்டோக்களில் ஒரேயொருவர் மாத்திரம் உயிரிழந்தார். அவரது பெயர் லெப். கேணல் யொனாதன் நெட்டான்யாகூ.
இவர் யார் என்பதிலும் ஒரு சுவாராசியமான தரவு உண்டு. இந்த ஒப்பரேஷன் நடைபெற்றுப் பல வருடங்களின் பின்னர் இஸ்ரேலில் பிரதமராகிய பென்யமின் நெட்டன்யாகுவின் மூத்த சகோதரர்தான், இந்த அதிரடி நடவடிக்கையில் இறந்துபோன ஒரேயொரு இஸ்ரேலியக் கொமாண்டோ.
அவர் கொல்லப்பட்டாலும், மொசாத் நடாத்திய இந்த அதிரடி நடவடிக்கை மிகப் பெரிய வெற்றி!
மொசாத்தின் இந்த அதிரடித் தாக்குதலுக்கு ஒருசில கண்டனங்கள் எழுந்தாலும், இதன் வெற்றி அனைத்தையும் மறைத்துவிட்டது. இன்றுகூட உலகிலுள்ள அநேக உளவுத்துறைகள்,  தமது உளவாளிகளுக்கான ஆரம்பப் பயிற்சியில் கூறும் வரலாற்றுச் சம்பவமாகி விட்டது இந்த அதிரடி நடவடிக்கை.
முற்றும்
.

No comments:

Post a Comment