Friday, 31 July 2020

A.S.IBRAHIM ROWTHER AND VIJAYKANTH FRIENDSHIP - DIED 2015 JULY 22




A.S.IBRAHIM ROWTHER AND VIJAYKANTH  FRIENDSHIP - DIED 2015 JULY 22



``விஜயகாந்த் சார் ஏன் அப்படி அழுதார்னா..!’’ - இப்ராஹிம் ராவுத்தரின் வாரிசு
சந்தோஷ் மாதேவன்
விஜயகாந்த் தன் திரை வாழ்க்கையில் தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த காலத்தில், ராவுத்தர் ஃபிலிம்ஸ் என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, 'பூந்தோட்டக் காவல்காரன்', 'புலன் விசாரணை', 'கேப்டன் பிரபாகரன்' என விஜயகாந்தின் திரைப்பாதையில் மைல்கற்களை நட்டவர் இப்ராஹிம் ராவுத்தர்.

இப்ராஹிம் ராவுத்தர்
அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த நட்பு நாடறிந்தது. பள்ளிப்பருவத்திலிருந்தே ஒன்றாய் இணைந்து அலைந்து, திரிந்து, விளையாடி, பிறகு பல கதைகள் பேசியபடியே நடந்து தீராத அவர்கள் இருவரின் செருப்பும் ஒரே போல மதுரையின் வீதிகளில் தேய்ந்தன. அந்தத் தீரா நடைப்பயணங்கள், இருவரும் சென்னை வந்த பின்னரும் தியாகராய நகர், சாலிகிராமம், வடபழனி எனத் தொடர்ந்தன. திரைத்துறையிலும் அவர்களின் வளர்ச்சி ஒரே விகிதத்தில் இருந்தது. ஒருவர் பாதையில் முட்கள் இருந்தால் மற்றொருவர் அதற்கு மெத்தை விரித்திட, ஒருவருக்கொருவர் படைக்கப்பெற்றவர்கள் எனும் அளவுக்கு அந்த நட்பு இருந்தது. இடையே சில காலம் அந்த நட்பில் ஏற்பட்ட ஒரு சிறிய சலனம்கூட அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருந்த அன்பில் கலந்துவிடவில்லை. இந்த இருவரில் ஒருவரான தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தரின் மரணத்தில் மற்றொருவரான நடிகர் விஜயகாந்த் வடித்த கண்ணீர்த் துளிகளே அந்த 40 ஆண்டுகளுக்கும் மேலான நட்பின் சாட்சி.

Vijayakanth with Abu at Rowther's demise
Vijayakanth with Abu at Rowther's demise
அவர் மறைவுக்குப் பின்னர் சிறிது காலம் முடங்கிக் கிடந்த ராவுத்தர் ஃபிலிம்ஸ் தற்போது மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கியுள்ளது. இது தெரிந்ததுமே ராவுத்தரின் தம்பி மகனான அபுவைச் சந்தித்தேன்.

"அவரு கல்யாணம் பண்ணிக்காத காரணத்தால நான் அவர் கிட்டதான் வளர்ந்தேன். சின்ன வயசுலயே மதுரையில இருந்து என் அப்பா இவர்கூட என்னை அனுப்பி வச்சுட்டார். இவர் பெரியப்பாதான். ஆனா நான் அப்பானுதான் கூப்பிடுவேன். இப்போ அவர் போனதுக்குப் பிறகு, கொஞ்ச நாள் எனக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியல. எனக்கோ 27 வயசுதான். ஆனா சினிமாவ ரொம்ப காதலிச்சாரு அப்பா. அதனால அவர் தொடங்குன இந்த நிறுவனத்த விட்டுடக் கூடாதுனு முடிவுபண்ணினேன். தயாராக கொஞ்ச நாளாச்சு. ஆனா இப்போ கத்துக்கிட்டு வந்துட்டேன்" என அறிமுகம் செய்துகொண்டார் அபு.

இப்ராஹிம் ராவுத்தர்
இப்ராஹிம் ராவுத்தர்
இன்று வெளியாகும் பல திரைப்படங்கள் கருத்து சார்ந்த சர்ச்சைகளில் சிக்கி அதனாலேயே மக்களிடம் சென்று சேர்கின்றன. அதில் சில படங்கள் குறித்த சர்ச்சைகளை, இலவச விளம்பரத்தை எதிர்ப்பார்த்து, அதன் தயாரிப்பு நிறுவனங்களே கிளப்பிவிடுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. ராவுத்தரின் பட நிறுவனம் பரபரப்புக்குப் பேர்போனது. அதுவும் விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'புலன் விசாரணை' எந்த அளவுக்கு சர்ச்சையில் சிக்கியது என்பது எல்லோரும் அறிந்ததே. இதைப் பற்றி அபுவிடம் கேட்டேன். "இப்போ வர நிறைய பிரச்னைகள் ரொம்ப சாதாரணம். அப்பா சந்திக்காத பிரச்னையே கிடையாது. ஆனா ரொம்ப துணிச்சலானவர், நேர்மையானவர். அதே துணிச்சலும் நேர்மையும் அவர் எடுத்த படத்துலையும் இருக்கும். எதுக்காகவும் வளைந்துகொடுக்காம படங்களை வெளியிட்டார்.

அப்பாவுக்கு ஒரு ட்ரீம் மூவி இருந்துச்சு. எப்படியாவது அதை எடுத்திடணும்னு நினைச்சார். அந்தக் கதைய எடுக்கவே அவ்வளவு துணிச்சல் வேணும். வாஞ்சி மணியாச்சி ரயிலடியில வச்சு ஆஷ் துரைய வாஞ்சிநாதன் சுட்டதுக்குப் பின்னணியில வரும் அந்தக் கதை. நம்ம சாதாரணமா கேட்குற கோணத்துல இல்லாம ஒரு மாற்றுக்கோணத்துல இருக்கும்..." என்றவரை இடைமறித்து, வாஞ்சிநாதன் சுட்டதுக்கு ஒரு சாதியப் பின்னணி இருக்குன்னு சொல்லுவாங்களே அந்தக் கதையா, அப்போ ஆஷ் துரைதான் ஹீரோவா என்றேன். "அதுதான் இல்ல. இந்தக் கதையில ஆஷ் துரையும் வில்லன், வாஞ்சிநாதனும் வில்லன். ரெண்டு பேரும் அவங்கவங்க அரசியல் லாபத்துக்காக மக்களை எப்படிப் பயன்படுத்திக்கிட்டாங்கன்னு அந்தக் கதை வரும்" என விளக்கம் தந்தார்.

அபு
அபு
"அந்தப் படத்தை எப்போ எடுக்கப்போறீங்க?" எனக் கேட்டதும், சிரித்தபடி, "நான் இப்போதாங்க சினிமா கத்துக்கிட்டு வர்றேன். அது பீரியட் மூவி. அதை எடுக்க பெரிய பட்ஜெட் வேணும். அதுக்கு நான் இன்னும் நிறைய கத்துக்கணும். ஆனா கண்டிப்பா ஒரு நாள் அந்தப் படம் எடுப்பேன். அப்பாவோட கனவு அது" என்றார்.

அதுமட்டுமல்லாது ரவுத்தரின் வேறு சில கனவுகளையும் பகிர்ந்துகொண்டார் அபு. "இப்போதாங்க இந்த அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ்லாம். ஆனா அப்பா அப்போவே சினிமாவ நேரடியா வீட்டுக்குக் கொண்டுவரணும்னு நினைச்சவர். திருட்டு வி.சி,டி பிரச்னை தலைவிரிச்சு ஆடுன சமயத்துல, ’அது ஏன் எவனோ ஒருவன் படத்தைத் திருடி ரிலீஸ் பண்ணணும். நம்மளே நேரடியா படத்தை எடுத்து ரிலீஸ் பண்ணலாமே’னு சொன்னார். ஆனா அதுக்கான நேரம் சரியா அமையல. அதுக்குப் பிறகு இயக்குநர் சேரன் சார் அது மாதிரி முயற்சிகூட பண்ணுனார்" எனக் கூறினார். "அப்படின்னா ராவுத்தர் ஃபிலிம்ஸும் இனி வெப் சீரீஸ் எல்லாம் தயாரிக்குமா?" எனக் கேட்டேன். "வெப் சீரீஸ் ஐடியா இப்போதைக்கு இல்லை. ஆனா இன்னும் ஐந்து அல்லது 10 வருடங்கள்ல கண்டிப்பா டிஜிட்டல் பிளாட்பாரங்கள்ல நேரடியா படம் வெளியிடுவோம்" என்றார்.

ராவுத்தரின் மரணத்தில் விஜயகாந்த்
ராவுத்தரின் மரணத்தில் விஜயகாந்த்
இப்படிப் பேசிக்கொண்டே போனவரிடம், கொஞ்சம் எமோஷனல் பக்கங்களைப் புரட்ட, "ராவுத்தர் மறைந்த சமயத்துல விஜயகாந்த அப்படி அழுதாரே..." என்றேன். "ஆமாங்க. 40 வருஷத்துக்கும் மேலான நட்பில்லையா. அவங்க ரெண்டு பேரும் சென்னைக்கு வந்த புதுசுல தி-நகர் ரோகிணி லாட்ஜுலதான் தங்கியிருந்தாங்க. அப்போ அவங்க சாப்பாடே ஒரு நார்மல் வெஜ் மீல்ஸ். ஒரேயொரு மீல்ஸ் வாங்கி அதுல தண்ணி ஊத்திவச்சு மூணு வேளைக்கு ரெண்டுபேரும் பகிர்ந்துகிட்டு சாப்பிடுவாங்க. அப்போ யாராவது அவங்கள சந்திக்க வந்தாதான் மாமிச உணவே சாப்பிடுவாங்க. அப்படிப்பட்ட காலத்துல இருந்து ஒண்ணா இருந்தவங்கல்ல, அப்போ அழத்தான செய்வார்?" என என்னிடம் கேட்டார்.

"அவங்க ரெண்டு பேருக்கும் இடையில ஒரு பிரிவு வந்ததுல? அதுக்கு என்ன காரணம்னு உங்களுக்குத் தெரியுமா?" எனத் தொடர்ந்து கேட்டபோது, "அது அவங்க தனிப்பட்ட விஷயம். அது என்னனு தெரிஞ்சுக்க நானே விரும்பல. அதைத் தெரிச்சுக்கவும் கூடாதுனு விட்டுட்டேன். ஆனா அவ்வளவு பிரிவுலையும் ரெண்டுபேருக்குமே ஒருவர் மேல ஒருவருக்கு இருந்த அன்பும் மரியாதையும் குறையவே இல்லன்னு தெரியும்" எனப் பதிலளித்தார்.

அபு
அபு
"ஒருவேளை அரசியல் காரணமா இருக்குமோ" என மீண்டும் கேள்விகேட்டேன். "அதுக்கு மட்டும் கண்டிப்பா வாய்ப்பே இல்ல. விஜயகாந்த் சார் அரசியலுக்கு வர முக்கியமான காரணங்கள்ல அப்பாவும் ஒருவர். எப்படியாவது அரசியலுக்கு வந்திடுன்னு அவருக்கு நிறைய ஊக்கம் கொடுத்திருக்கார். அதனால அந்தக் காரணம் இருக்க வாய்ப்பே இல்ல" என அடித்துக் கூறினார் அபு.

"அப்பா எனக்குக் கத்துக்கொடுத்த இன்னொரு பாடம், சினிமாவுல யாரையும் பகைச்சுக்கக் கூடாதுங்கிறதுதான். யாருகூட வேணும்னாலும் சண்ட போடலாம், ஆனா யாரையும் எதிரி ஆக்கிக்கக் கூடாது. சண்ட போட்டாலும், திட்டுனாலும் அந்த வாக்குவாதம் முடிஞ்சதும் அவங்கள கட்டி அணைச்சிடு. பிரச்னை அதோட அவ்வளவுதான்னு சொல்லிக்கொடுத்திருக்கார்" என மீண்டும் ராவுத்தரின் காலடிகளைத் தொடர்வதாகவே இருந்தது.

ஆக்‌ஷன் படங்கள் மட்டுமே எடுத்திக்கிட்டு வந்த ஒரு நிறுவனத்தில இப்போ என்ன ஏலியன் படம் எனக் கேட்டபோது, "ரொம்ப நாளா ஒரே மாதிரி ஆக்‌ஷன், காமெடி, காதல்னு படம் எடுத்தாச்சு. இப்போ சினிமாவும் பெருசா மாறிட்டு வருது. எனக்கு எந்த ஜானரா இருந்தாலும் சரி. படம் ஃப்ரெஷ்ஷா இருக்கணும். கிட்டத்தட்ட 50 ஸ்கிரிப்டுக்கு மேல கேட்டு கடைசியாத்தான் 'எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்' கதைய ஓ.கே பண்ணுனேன். ஆரி மாதிரி ஒரு யூத்ஃபுல்லான ஹீரோ, இயக்குநர் கவிராஜும் சரி, நானும் சரி... ரெண்டு பேருக்கும் இது முதல் படம். சீனியர் டெக்னீஷியன்ஸ் எங்கள வழிநடத்த ஒரு கூட்டு முயற்சியில படம் நல்லா வந்திருக்கு. கிட்டத்தட்ட எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சு. அப்பா பேரைக் காப்பாத்திருவேன். படம் கண்டிப்பா ஜெயிக்கும். இது ராவுத்தர் ஃபிலிம்ஸோட செகண்ட் இன்னிங்ஸ்," எனக் கூறிய அபுவின் வார்த்தைகளில் நம்பிக்கை தெரிந்தது.
Image may contain: 6 people, including அசோகன் பாரதி, people sitting

No comments:

Post a Comment