Wednesday, 20 May 2020

RAJINIKANTH , ELEPHANT RIDER SHOWING BANANA INFRONT OF ELEPHANT





RAJINIKANTH , ELEPHANT RIDER SHOWING BANANA INFRONT OF ELEPHANT 


முன் குறிப்பு- இங்கு சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை படித்துவிட்டு என்னை சீமான், ஸ்டாலின், எடப்பாடி, தினகரன், விஜய் மற்றும் யாரெல்லாம் மனசில் வருகிறார்களோ, அவர்களின் சொம்பு, கூஜா, டபரா என்று கூட சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால் எழுத வேண்டியது என் வேலை. ஏற்றுக் கொள்வதும், தூற்றித் தள்ளுவதும் அவரவர் தலையெழுத்து!

மன்னை சாதிக் என்ற மாங்கா மடையனை பற்றிக் கூட தன் பொன்னான பத்திகளில் சில எழுத்துக்களை ஒதுக்க வேண்டிய அளவுக்கு செய்தி பஞ்சத்தில் தத்தளித்து வருகின்றன ஊடகங்கள்! ஒரிஜனல் நிலைமை இப்படியிருக்க, நாடே விரும்புகிற ஒரு சூப்பர் நடிகரை பற்றி எழுதினால், பேசினால், காட்சியாக காட்டினால் தன் சாப்பாடு தூக்கத்தை கூட விட்டுவிட்டு கேட்பார்கள். இந்த ஒரு காரணத்திற்காகதான் பொருந்தாத சேற்றுக் குவியலை உருட்டி உருட்டி அரசியல் சட்டி செய்து கொண்டிருக்கிறது மீடியா.

இதை வைத்துக் கொண்டுதான் கடந்த 25 வருஷமாக அரசியல் வானத்திலும் மின்னலடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. மின்னலின் நேரம் சில நிமிஷங்கள்தான். ரஜினியும் அரசியலில் அவ்வளவுதான் தாக்குப் பிடிப்பார் என்பதை, அவரே தன் வாயால் தெள்ளந் தெளிவாக எடுத்து சொல்லிவிட்டார் கடந்த வாரம்.

2017 ல் 234 தொகுதியிலும் தனித்து நிற்பேன் என்றவர், கள நிலவரத்தை அலசி ஆராய்ந்த பின்புதான், போன வாரம் முழு தெளிவோடு மைக்கை பிடித்தார். தலைவர் அரசியலுக்கு வரப்போறார் என்று காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் தனிப்பட்ட முறையில் ஏமாற்றம்தான். திமுக- அதிமுக வுக்கு மாற்றாக ஒரு தலைமை வரவேண்டும் என்று அன்றாடம், முருகன் அல்லா ஏசுவிடம் வேண்டுகிற ஒரு ஏமாளி நான்.

அப்படியிருக்க, ரஜினியின் வரவை கொண்டாட வேண்டியதுதானே? அங்குதான் இடிக்குது எல்லாம். இந்த சமூகத்திற்காக ஒரு துரும்பை கூட கிள்ளி வைக்காத பெருமை தனக்குண்டு என்பது ரஜினிக்கு தெரிந்தளவுக்கு அவரது ரசிகர்களுக்கு தெரியாததுதான் இந்த நாடகத்தின் நீண்டகால சஸ்பென்ஸ். ரஜினியின் சம்பாத்தியத்திற்கு மட்டும் வாயிருந்தால், அதுவே சொல்லியிருக்கும். “ஒரு அநாதை இல்லம் கட்டுங்க. ஏழைகளுக்காக ஒரு ஸ்கூல் கட்டுங்க. எங்கேயாவது குக்கிராமத்துல ஒரு மருத்துவமனை கட்டுங்க” என்று. ஆனால் அதற்கும் வாய் இல்லை. ரஜினிக்கும் மனசு இல்லை. கட்டிய ஒரே ஒரு கல்யாண மண்டபத்திலும் ஏழைகளுக்கு இடமில்லை. அந்த மண்டபத்தின் வாடகையை கேட்டால் தலை கிர்ருன்னு சுத்தும். (சேவை விஷயத்தில் நேற்று முளைத்த சின்னப்பையன் சூர்யாவிடம் பாடம் கற்கலாம் ரஜினி)

சிஸ்டம் சரியில்ல… அதை சீர் செய்யாமல் ஓய மாட்டேன் என்று கிளம்பியிருக்கும் ரஜினி, நிஜமாகவே சிஸ்டம் மேக்கரா? ரஜினியின் நிர்வாக லட்சணத்திற்கு ஒரு உதாரணத்தை காட்டட்டுமா?

மகள் படமெடுத்தார். ஊரெல்லாம் கடன். கட்ட முடியாமல் ஊடகங்களில் சிரித்தது மானம். மனைவி பணக்கார மாணவர்களுக்காக ஒரு ஸ்கூல் நடத்தினார். வாடகை பாக்கி. மறுபடியும் மீடியாவில் சிரிப்பு சப்தம். போய் தொலையட்டும்… சொந்தமாக படமெடுத்தார். அதுதான் பாபா. பலத்த நஷ்டம். அதுவரை வெற்றியின் தோளில் இருந்த டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா, அதற்கப்புறம் கீழே விழுந்து எழவே இல்லை. இப்படி ஒரு சின்ன வட்டத்திற்குள்ளேயே ஒழுங்காக செயல்பட முடியாத ரஜினி, அகண்ட தமிழ்நாட்டை அகாசத்துக்கு உயர்த்துவாராம். ரசிகர்கள் நம்பலாம்… மீடியாவும் நம்புவதுதான் ஹய்யோ ஹய்யோ!

அட, தன்னை வாழ வைத்த மக்களுக்காகதான் ஒன்றும் செய்யவில்லை. தன்னை வாழ வைத்த சினிமாவுக்காகவாவது ஏதாவது செய்தாரா என்றால் அதுவும் இல்லை. தமிழ்சினிமாவில் ரவுடியிஸம் தொடங்கி, சிறு படங்களை முடக்கி அதன் ரத்தம் குடித்து உயிர் வாழும் பெரிய பட விநியோகஸ்தர்களும், தியேட்டர் மாஃபியாக்களும் ரஜினி போன்றவர்கள் சாட்டை வீசினால் தலைகால் தெறிக்க ஓடியிருப்பார்கள். பட் ரஜினி? தானுண்டு, தன் சம்பளம் உண்டு, தன் ஜிஎஸ்டி உண்டு என வாழ்பவராச்சே? நடிகர் சங்க கட்டிடம் கூட ரஜினி கமல் போன்ற ஆளுமைகளால் முன்னெடுக்கப்படவில்லை. சாதா நடிகன், சின்னப்பையன் விஷால் மூலம் முன்னெடுக்கப்பட்டது.

நாடு சீராக வேண்டும் என்று நினைப்பவர், எப்போதாவது தன் படத்திற்கு அநியாய டிக்கெட் விலை கூடாது என்று விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் சொல்லியிருக்கிறாரா? தன் ரசிகர்களிடம், அநியாய விலைக்கு டிக்கெட் விற்றால் வாங்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறாரா? ரஜினியின் சினிமா தூய்மை இப்படி! நாட்டின் மீதான தூய்மைக்கு வருவோம்…

‘நதிகளை இணைத்தால் ஒரு கோடி தருவேன்’ என்று சொன்ன ரஜினி, அந்த முயற்சிக்காக ஒரு இயக்கம் துவங்கி தானே புரட்சியை முன்னெடுத்திருக்கலாமே? அன்று அவர் சொன்ன ஒரு கோடி ரூபாயின் இன்றைய பண மதிப்பு சுமார் 100 கோடியாக உயர்ந்திருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் அது ஆயிரம் கோடியாக உயரும். அப்போதும் நதிகளை இணைக்க மாட்டார்கள் என்பது ரஜினிக்கு தெரியும்.

எப்படி நதிகளை இணைத்தால் ஒரு கோடி தருவதாக சொன்னாரோ, அப்படிதான் நாட்டில் புரட்சி வந்தால் அரசியலுக்கு வருகிறேன் என்கிறார். இரண்டுமே நடக்காது என்பது ரஜினிக்கு தெரியாதா என்ன?

‘ஒரு நல்ல மனுஷன், இந்த நாடு இப்படி இருக்கணும்னு ஆசைப்படுறாரு. தன்னை தேடி வரும் முதல்வர் பொறுப்பை கூட எனக்கு வேண்டாம் என்று இடது கையால் தட்டிவிடுகிற ஒரு ஆள் இந்த நாட்டில் இருக்கிறாரா, ரஜினியை தவிர?’ என்று ரசிகர்கள் ஆக்ரோஷமாக கேட்கிறார்கள். ஆட்சி தலைமை வேற, கட்சித் தலைமை வேறயா இருக்கணும்னு நினைக்கிறாரு. அது தப்பா? என்று அப்பாவியாக கேட்கிற ரசிகன் இருக்கிற வரைக்கும், ரஜினி புது புது ஸ்டன்ட்டுகளை அடித்துக் கொண்டே இருப்பார்.

‘நானே வீடு தேடிப்போய் நல்லவங்களை அரசியலுக்கு வாங்கன்னு கூப்பிடுவேன்’ என்கிறார் ரஜினி. சூப்பர்… கைதட்டுகள் ஷ்யூர். ஆனால் மறுநாளே நீங்கள் போய் நின்றிருக்க வேண்டிய இடம், சகாயம் ஐ.ஏ.எஸ் வீடாகதானே இருந்திருக்க வேண்டும்? வீட்டுக்கொரு குடி நோயாளியை உருவாக்கி வைத்திருக்கின்றன கழகங்கள். குவார்ட்டரே சொர்க்கம், குடியே கொள்கை என்று தமிழன், நாயை விடவும் கீழான விலங்காகி விட்டான். இந்த நாட்டில் புரட்சியாவது மண்ணாங்கட்டியாவது?

இருந்தாலும் ரஜினி சொன்னதை அடிமனதிலிருந்து நிஜமாகவே சொன்னதாக எடுத்துக் கொள்வோம். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி சுற்றுப்பயணம் செய்ததை போல மறுநாளே கிளம்பி தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணத் திட்டத்தை அறிவித்திருக்க வேண்டுமல்லவா?

சினிமாவில் அசந்த நேரம் டூப் போட்டுக்கொள்ளலாம். சுற்றுப்பயணம் என்றால், ரசிகனின் வியர்வை படும். வெயில் படும். நெற்றி வேர்வை நிலத்தில் படும். அவ்வளவு ஈஸியா அதெல்லாம்? அதற்குதான் எடுபிடிகள் இருக்கிறார்களே? தான் ஆசைப்பட்டதை ஊர் ஊராக கொண்டு சேருங்கள் என்று மாரிதாஸ்களையும், பரத்களையும், ரவீந்திரன் துரைசாமிகளையும், ரங்கராஜ் பாண்டேக்களையும் தேடி தேடி அழைக்கிறார் ரஜினி. பிரதி உபகாரம் ஒரு செல்பி. அது போதாதா இவர்களுக்கு?

‘இப்ப இல்லாவிட்டால் எப்பவும் இல்ல’! இதுதான் ரஜினி தன் ரசிகர் மன்றத்திடம் சொல்லி ஊர் ஊராக கொண்டு செல்ல பணித்திருக்கும் ஸ்லோகன்! இவ்வளவு வருடங்களாக ஏதோவொரு நம்பிக்கையில் ஆவிபோக உழைத்த ரசிகன், இப்போதும் தன் தொண்டை தண்ணி வறள்கிற அளவுக்கு ‘இப்ப இல்லாவிட்டால் எப்பவும் இல்ல’ மந்திரத்தை முழங்க ஆரம்பித்திருக்கிறான்.

இப்பவும் நமது ஆசை தி.மு.க- அ.தி.மு.க இல்லாத ஒரு மாற்று ஆட்சிதான். அதற்கு ரஜினி லாயக்கான தலைவர் இல்லை என்பதுதான் நிஜம். இது புரியாத ரசிகனுக்கு அந்த ஸ்லோகனின் நிஜ அர்த்தத்தை சொல்ல வேண்டியது நம் கடமையல்லவா?

வாலிப வயசில் விசிலடிக்கத் துவங்கி, ஆஸ்துமா துரத்துகிற இந்த வயசிலும் ரஜினிக்காக விசிலடிக்கும் அண்ணன்களே… அந்த ஸ்லோகனின் நிஜ அர்த்தத்தை இப்பவாவது புரிந்து கொள்ளுங்கள்.

அது, இப்பவும் இல்ல! இனி எப்பவும் இல்ல!

அதிமுக்கிய குறிப்பு- விஜய், அஜீத் உள்ளிட்ட சினிமாக்காரர்களுக்கும் முதல்வர் ஆசை வந்தால், முதல் ஆளாக கல் எறிவேன். ஏனெனில் நீங்கள் கோமாளிகள். நாங்கள் ஏமாளிகள் அல்ல!

-ஆர்.எஸ்.அந்தணன்

No comments:

Post a Comment