Sunday, 26 April 2020

RAGAS IN TAMIL SONGS





தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 13 ] : T.சௌந்தர்
11/01/2013 இனியொரு... 6 COMMENTS
உள்ளியல்பில் மிக இனிமையைக் கொண்டதும் வட இந்திய நாட்டுப்புற இசையின் வடிவங்களிலிருந்து கிளைத்து வளர்ந்த ராகங்களில் ஒன்று தேஷ்.

ravishankarவட இந்திய ராகம் என்று அறியப்படுகின்ற இந்த ராகம் தமிழ் செவ்வியல் அரங்குகளை அலங்கரிக்கின்ற ராகங்களில் ஒன்றாகும்.தமிழ் செவ்வியல் இசை அரங்குகளில் கச்சேரி முடிவில் சிறிய பாடல்கள் இந்த ராகத்தில் பாடப்படுகின்றன. எழில் நிறைந்த மலர்கள் போன்று மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்த ஏதுவான ராகம் இந்த தேஷ்.

ஹிந்துஸ்தானி இசையில் மிக விரிவாக இந்த ராகத்தை இசைப்பார்கள்.ரவிஷங்கர் , ஹரிபிரசாத் சௌராசையா போன்ற இசை மேதைகளின் விரிவான வாசிப்பு நம்மைப் பரவசத்தில் மிதக்க வைக்கும்.

இயற்கையோடிணைந்த வாழ்வில் தாம் அனுபவித்த ஒலிகளை மூங்கிலில் பிரதி செய்து பார்த்து மகிழ்ந்தவன் ஆதி மனிதன்.குழல் என்பது ஆதி மனிதன் முதலில் கண்டுபிடித்த இசைக்கருவி என்பர்.மூங்கிலை பழங்காலத் தமிழர்கள் காட்டுப்புல் என அழைத்தனர்.அதிலிருந்து உருவான குழலை புல்லாங்குழல் என அழைத்தனர்.

” புல் என்பது அக்காலத்தில் பனை மூங்கில் முதலியவற்றை குறிப்பதாக இருந்தது.புல்லுதல் என்றால் புணர்த்தல் ,சேர்த்தல் என்று பொருள்படும்.பனம்பேழ் எனப்படும் பனைமட்டையின் நாரைக் கொண்டும், மூங்கில் ,பிரம்பு ,நாணல் முதலியன் கொண்டும் பல்வேறு வகையான பயனுள்ள பொருட்களை இவர்கள் பிணைத்து உருவாக்க வல்லவர்கலாயிருந்தனர்.மண்பாண்டங்கள் செய்வதிலும் இவர்கள் தேர்ச்சி
பெற்றிருந்தனர்.

பாண் என்ற சொல்லுக்கும் பாண்டம் என்பதற்கும் நெருங்கிய நேரடித் தொடர்பு உண்டு.” – என்பார் பேராசிரியர் மருதமுத்து

முல்லை நில மக்கள் கண்டுபிடித்த ஆதி இசைக் கருவி புல்லாங்குழல்.புலையர் என்பதும் புல் என்பதிலிருந்து வந்ததென்பர்.அவர்கள் தான் ஆதிகால அந்தணர்கள் அதுமட்டுமல்ல புலையர் பண்பாட்டின் உயர் பிரதிநிதிகளே பாணர், பறையர் என்கிறார் பேராசிரியர் மருதமுத்து

சிலப்பதிகாரத்தில் பிரதேசவாரியாக தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளையும் ,அவர்கள் பின்பற்றி வந்த கலைகளையும் , வழிபாட்டு முறைகளையும் கதையின் போக்கில் விவரித்துச் செல்கிறார் இளங்கோவடிகள்.வெவ்வேறு நிலங்களுக்குரிய கலைவடிவங்க்ளாக அமைந்த கூத்து வகைகளை வேட்டுவரி , ஆச்சியர் குரவை , குன்றக்குரவை போன்ற பாடல்களில் விரிவாகப் பாடுகிறார்.

வேட்டுவரி என்பது பாலை நில மக்களது வழி பாட்டையும் ,ஆச்சியர்குரவை என்பது முல்லை நில மக்களது கலைகளையும் , வழிபாட்டையும் குறிக்கிறது.

bansuriமுல்லை நில மக்களான இடையர்கள் ஆடிய கூத்தை ஆச்சியர்குரவையில் பாடுகிறார். இடையர்கள் குறிஞ்சி நில மக்களை விட சற்று நாகரீகமானவர்கள் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.இடையர்களின் குலதெய்வம் கண்ணன், திருமால்.தமிழில் கண்ணன் பற்றிய பாடல்கள் இனிமைமிக்க இந்த தேஷ் ராகத்திலேயே பெரும்பாலும் பாடபட்டுவருகின்றன.

” மாடுகள் மேயத்திடும் கண்ணா ” – என்ற அருமையான பாடலை இந்த ராகத்தில் தனது இசை மேடைகளில் பாடிப் பிரபலப்படுத்தியவர் பெரும் கலைஞர் மதுரை சோமு அவர்கள்.

மக்களின் இதயங்களைக் கவரும் இந்த ராகம் மொழி எல்லைகளை எல்லாம் கடந்து இந்தியா எங்கிலும் ஒலிக்கும் ராகமாக விளங்குகின்றது.தேஷ் ராகம் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும் குறிப்பிடத் தகுந்த பங்கை ஆற்றியிருக்கிறது.

இனம், மதம் ,மொழி, சாதி ரீதியாகப் பிளவுண்டு கிடந்த இந்தியாவை அன்னியரிடமிருந்து மீட்கப் புறப்பட்ட தேசிய இயக்கத்த்தினர் தேசிய எழுச்சியை இந்து மத சார்பான எழுச்சியாக மாற்ற முனைந்து கொண்டிருந்தனர்.காங்கிரசு இயக்கத்தினர் பாரத தேசத்தை பாரதமாதவாக மாற்றினார்கள்.

சுதந்திர உணர்வு தளைத்த இந்தக் காலகட்டத்தில் பிறந்தவன் புதுமைக்கவி பாரதி.அதன் எதிரொலி பாரதியின் குரலாக ” வந்தேமாதரம் என்போம் ” என்று தமிழகத்தில் ஒலித்தது.அதுமட்டுமா ?

“வந்தே மாதரம் என்று வணங்கியபின்
மாயத்தை வணங்கு வாரோ?
வந்தே மாதரம் ஒன்றே தாரகம்”…

“வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
வேறொன்றும் கொள்வாரோ ..”

என்றும் பாரதி பாடினான்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய “ஆனந்தம் மடம்” [ 1882 ] நாவலில் ” வந்தே மாதரம் ” என்ற பாடல் தேடி எடுக்கப்பட்டு , புதிய இந்திய தேசிய கீதமாக இசையைக்கப்பட்டு இந்தியா எங்கணும் பரப்பபட்டது. “ஆனந்தம் மடம்” என்ற நாவல் முஸ்லீம் மக்களுக்கு எதிரான கருத்தைக் கொண்ட கதை என்பது குறிப்பிடத்தக்கது.வந்தே மாதரம் என்றால் தாய்க்கு
வணக்கம் என்பதாகும்.தாயை இந்துத்துவவாதிகள் ” காளி , துர்க்கை ” என அர்த்தம் கொண்டனர்.அதைக் கவர்ச்சிகரமாக பிரச்சாரமும் செய்தனர்.

இந்துத்துவவாதிகள் இந்தப் பாடலை தேசீய கீதம்மாக்க முயன்று தோற்றுப்போயினர்.ஆயினும் அப்படியான ஒரு சிந்தனையை தொடர்ந்தும் திட்டமிட்டுப் பரப்பினார்கள்.

இன்றும் நவீன வடிவங்களில் அது தொடர்கின்றது.”வண்டே மாதரம் ” ரகுமானின் டிஸ்கோ தேசிய கீதமாகவும் வந்ததை நினைவு கொள்ளலாம்.

இந்த தேஷ் ராகத்தை மக்கள் ஒரு தேசிய ராகமாக உணர வைத்தார்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றது தேஷ் ராகத்தின் இனிமை , இப்படியான ஒரு பொதுமைப்பண்பைத் தரக்கூடியது என்பதும் உண்மையாகும்.

இந்தியாவில் 1902 ம ஆண்டு முதல் இசைத் தட்டு வெளியானது.அது அடைந்த புகழைத் தொடர்ந்து பல இசைத்தட்டுக்கள் வெளியாகி புகழ் பெற்றன.1908 இல் வெளியான “Dancing Girl of the Calcutta ” என்கிற இசைத்தட்டில் இடம் பெற்ற , மிகவும் புகழ் பெற்ற பாடல் ஒன்று தேஷ் ராகத்தில் அமைந்தது.அந்த இசைத்தட்டில் பாடியிருந்தவர் Achchan Bai என்ற இளம் பாடகி.விற்ப்பனையிலும் சாதனை படைத்தது.தேஷ் ராகம் அன்றே மக்கள் மத்தியில்
செல்வாக்கு பெற்றிருந்ததை இதன் மூலம் நாம் அறியலாம்.

ravindranath-tagoreதாகூர் எழுதிய ஷ்யாமா [ Shayama ] என்ற நாடகத்தில் இந்த ராகத்தைப் பிரதானமான ராகமாகப் பயன்படுத்தியிருப்பார்.சித்தார் இசைமேதை ரவி ஷங்கருக்கு மிகவும் பிடித்தமான ராகங்களில் இதுவும் ஒன்று.

வட இந்திய ராகமான சோரத் [ Sorath ] என்ற ராகத்திலிருந்து பிறந்து இந்த தேஷ் என்பர்.

ரவிசங்கர் இசையமைத்த ஆங்கிலத் திரைப்படமான காந்தி [1982 ] படத்தில் ஒரு முக்கியமான காட்சிக்கு இந்த அழகான ராகத்தைப் பயன்படுத்தினார்.அந்தப் படத்தில் ஒரு காட்சி:

1915 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவிலிருந்து இந்திய வரும் காந்தி காங்கிரசில் இணைகிறார்.இந்தியாவின் பிற பிரதேசங்களை அறியாத காந்தி இந்தியாவின் பல பாகங்களுக்கும் பயணம் மேற்கொள்ள “அறிவுரை “வழங்கப்படுகிறது.
” இந்தியா எனக்கு ஒரு அந்நிய நாடு ” என்கிறார் காந்தி
” இனிமேல் நான் அமைதியாக சாவேன்.இந்தியாவின் பெருமையைக் காப்பாற்று ” என்று திலகர் அறிவுரை கூறுகின்றார்.

அந்தக் காட்சியிலிருந்து ,காந்தி ரயிலில் பயணமாகும் காட்சி தொடங்குகிறது.இந்தியாவின் பல்வேறு மாநிலங் களூடாக , கிராமங்கள் ,நகரங்கள், மற்றும் இந்தியாவின் பல்வேறு நிலக் காட்சிகளை ஊடறுத்து ரயில் ஒடுகிறது.

ரயில் ஓடம் அந்த நான்கு நிமிடக் காட்சியில் தேஷ் ராகத்தில் எளிமையும் , இனிமையும் , உருக்கமும் நிறைந்த அருமையான் பின்னணி இசையை ரவிசங்கர் அமைத்திருந்தார்.அதனூடே காந்தியின் கவலை தோய்ந்த மற்றும் பல்வேறு உணர்வுகளையும் துல்லியம்காகக் காண்பிக்கப்படுகிறது. அந்தக் காட்சிக்கு இந்திய வாத்தியங்களான சாரங்கி , சித்தார் , தபேலா போன்றவற்றை வைத்தே உள்ளக் கிளர்ச்சி
ஊட்டக் கூடிய இசையை அமைத்தது வியக்கத் தக்கது.

அந்த இசை மூலம் தேஷ் ராகம் தேசிய ஒருமைப்பாட்டிற்க்குரிய ராகம் என நம் இதயங்களில் ஓட்ட வைக்கின்றார்.

சத்யஜிரேயின் புகழ் பெற்ற ” பாதர் பாஞ்சாலி ” திரைப்படத்தில் சிறுமி துர்க்காவும் , அவள் தம்பி அப்புவும் கன மழையில் நனையும் அழகான காட்சியிலும் தேஷ் ராகம் பின்னணி இசையாக ரவிசங்கரால் அமைக்கப்பட்டது.காலங் காலமாக நமது உணர்வுகளின் வழியே வந்த இசைச் சிறப்புக்களை பயன் படுத்திக்கொண்டார் ரவிசங்கர் என்று சொல்லத் தோன்றுகிறது.

satyajit-rayதமிழ் செவ்வியல் இசையில் மிகப்பெரிய அளவில் இந்த ராகம் பயன்படுத்தப்படாவிட்டாலும் தமிழ் திரை இசையில் இந்த ராகம் பரவலாகப் பெரும்பான்மையான இசையமைப்பாளர்களாலும் பயன்படுத்தப்பட்டே வந்துளமை இந்த ராகத்தின் சிறப்பை உணர்த்தும்.தமிழ் படங்கள் மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மொழிப்படங்களிலும் இந்த ராகம் அதிகளவில் பயன்பட்டே வைத்துள்ளது.

தமிழ் திரையில் வெளிவந்த தேஷ் ராகப் பாடல்களை பார்ப்போம்.

01 பிரேமையில் யாவம் மறந்தோமே – படம்: சாவித்திரி 1940 – G .N . பாலசுப்ரமணியம் + M.S. சுப்புலட்சுமி – இசை:
கர்னாடக இசை உலகில் புகழ் பெற்ற இரு பெரும் கலைஞர்களான ஜி.என்.பாலசுப்பிரமணியம் , எம்.எஸ்.சுப்புலட்சுமி இணைந்து பாடிய காதல் பாடல்.ராகத்தின் உயிர் துடிப்பான மென்மையை அழகாக வெளிப்படுத்தும் பாடலானாலும் ,ஆங்காங்கே ரீங்காரமிடும் சங்கதிகளை வைத்து மென்மையாக அழகு படுத்திய விதம் இன்று ரசிக்கத் தகுந்த பாடலாகவே இருக்கின்றது.

02 நறுமண மிகு மலரே – படம்: கச்சதேவயானி 1941 – பாடியவர்:டி.ஆர்.ராஜகுமாரி
தேஷ் ராகத்தில் கிடைக்கின்ற மிகப் பழைய பாடல்களில் ஒன்று இந்தப் பாடல்.பாடி நடிக்கும் பரம்பரையில் வந்த நடிகை ராஜகுமாரி பாடிய பாடல். குறிப்பிட்ட காலப்பகுதியை பிரதிபலிக்கும் இசை.காலங்கள் பல கடந்தாலும் தேஷ் ராகத்தின் இனிமையை நுகரலாம்.

03 ஓம் நமச்சிவாய என – படம்:பூம்பாவை 1944 – பாடியவர்: கே.ஆர்.ராமசாமி – இசை: எஸ்.ராஜேஸ்வரராவ்
” நடிப்பிசைப்புலவர் ” என்று அழைக்கப்பட்ட , புகழ் பெற்ற பாடகரும் ,நடிகருமான கே.ஆர்.ராமசாமி தனித்தன்மையுட பாடிய பாடல்.தேஷ் ராகம் கன கச்சித மாகப் பாடப்படுள்ளது

04 லீலைகள் புரிவான் – படம்: மீரா 1945 – M.S. சுப்புலட்சுமி – இசை:

05 இந்த உலகில் இருக்கும் மனிதரில் எழில் உடையோன் தமிழன் – படம்: கஞ்சன் 1947 – M .M .மாரியப்பா – இசை :
தமிழரின் பெருமை சொல்லும் பாடல்.தேஷ் ராகத்தில் அருமையாக ஆரம்பிக்கும் பாடல் ராக மாலிகையாக முடிவடையும். அந்தக் காலத்த்தில் புகழ் பெற்ற பாடகராக விளங்கியவர எம்.எம்.மாரியப்பா. தமிழ் சினிமாவின் முதல் பின்னணி பாடகர் என்று பெயர் பெற்றவர்.இவரின் ஒன்றுவிட்ட சகோதரரே திருச்சி லோகநாதன்.எம்.ஜி.ஆர் நடித்த மருதநாட்டு இளவரசி படத்தில் இவரது பாடல்களை கேட்கலாம்.

06 திருவடி மலராலே – படம்:பிரபாவதி 1950 – பி.ஏ .பெரியநாயகி – இசை :
கிருஷ்ணனைப் பற்றிய பாடல்.1940, 50, களில் புகழ் பெற்று விளங்கிய P .A .பெரியநாயகி பாடிய மிகச் சிறிய பாடல்.உச்சஸ்தாயியிலும் பாடும் வல்லமமை பெற்றவர் அவர்.இந்த பாடலில் தேஷ் ராகத்தின் இனிமையை ரசிக்கலாம்.சங்கதிகளை அனாயாசமாகப் பாடக் கூடிய பாடகி பெரியநாயகி.

07 துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ – படம்: ஓர் இரவு 1951 – v . J .வர்மா + M .S . ராஜேஸ்வரி – இசை: R .சுதர்சனம் – எழுதியவர் பாரதிதாசன்
பாரதிதாசன் எழுதிய இந்தப் பாடலுக்கு அற்ப்புதமான இந்த மெட்டை அமைத்தவர் இசையறிஞர் எம்.எம்.தண்டபாணி தேசிகர்.அவர் தனது இசையரங்குகளில் பாடி புகழ் பெற வைத்த பாடல்.இந்தப்பாடலின் இனிமை மிக்க மெட்டமைப்பு திரையிலும் ஒலித்தது.
இந்த பாடலுக்குப் பொருத்தமான மெட்டை இரண்டு வருடங்களாக சிந்தித்து தெரிவு செய்ததாக தேசிகர் கூறியிருக்கின்றார்.இந்தப் பாடலின் உணர்வுக்கு தேஷ் ராகமே சிறப்பு என்பது அவரது கருத்தாகும்.பாரதிதாசன் பாடல்களில் மிகவும் புகழ் பெற்ற பாடல் இது என்ற கருத்து மிகையானதல்ல.ஆயினும் திரைப்படத்தில் பயன் படுத்தப்பட்டதால் R .சுதர்சனம் இசையமைத்த பாடல் என்றே பலரும்
எண்ணிக்கொண்டிருக்கின்றோம்.எது எப்படியோ நல்ல பாடல் ஒன்று மக்கள் மத்தியில் சென்றடைந்திருக்கின்றது.

08 மாயச் சிரிப்பினில் இனி மயங்குவேனோ – படம்: பாரிஜாதம் 1950 – T .V .ரத்தினம் – இசை: C .R . சுப்பராமன்
மெல்லிசையின் முன்னோடி என்று சொல்லப்படுகின்ற C.R.சுப்பராமன் , செவ்வியல் இசையின் அடிப்படையில் இசையமைப்பதிலும் கை தேர்ந்தவர் என பல பாடல்களில் நிரூபித்திருக்கின்றார்.தேஷ் ராகத்தில் சங்கதிகளை சுத்தமாக தந்தாலும் மெல்லிசையின் தன்மையையும் காட்டும் பாடல்.1950 களில் புகழ் பெற்ற T.V.ரத்தினம் அதனக்கே உரித்தான கம்பீரத்துடன் பாடிய பாடல்.

09 சுட்டும் விழி சுடர் தான் கண்ணம்மா – படம்:சௌதாமினி 1951 – பாடியவர்: M .L .வசந்தகுமாரி – இசை: S .V . வெங்கட்ராமன்
இசைக்குயில் எம்.எல் வசந்தகுமாரி பாடிய ஆரம்பகால பாடல்களில் ஒன்று.பாரதியின் புகழ் பெற்ற பாடலை மிக மென்மையாக தனக்கே உரிய முறையில் பாடிய பாடல்.இந்த பாடலை பல்வேறு ராகங்களிலும் பல பாடகர்கள் பாடினாலும் தேஷ் ராகத்திலும் இன்மையாக ஒலிக்கின்ற பாடல்.

10 என் மனம் கவர்ந்த – படம்:லாவண்யா 1951- பாடியவர்: பி.ஏ .பெரியநாயகி – இசை: S .V . வெங்கட்ராமன்

11 கொஞ்சு மொழி சொல்லும் பைங்கிளியே – படம்: பராசக்தி 1952 – A .P .கோமளா – இசை: R .சுதர்சனம்
R .சுதர்சனம் அவர்களின் இனிய இசையில் உருவான பராசக்தி திரைப்படத்தில் வெளிவந்த தேஷ் ராகத்தில் அமைந்த தாலாட்டுப்பாடல்.தங்கள் உறவுகளை போற்றுவதும் , குறிப்பாக தங்கள் சகோதரர்களை ,அவர்களின் பெருமைகளை தாலாட்டில் பாடுவது தமிழர்மரபு.சமூக நிலை சார்ந்தும் பாடல்கள் அமையும்.தாலாட்டு மரபில் நின்று சகோதரர்களின் பெருமையை தனது குழந்தைக்கு கூறும் பாடல் இது. உறவின்
நெகிழ்ச்சியை கிளர்ச்சி தரும் வகையில் தந்த பாடல்.

மாணிக்கப்பாலாடை – பச்சை
மாமணி தொட்டிலுடன்
வெள்ளை யானையும் வாகனமாய் – சின்ன
மாமன தருவார் சீதனமாய்

என்றும்

வெள்ளியிணினால் செய்த ஏட்டில் – நல்ல
வைர எழுத்தாணி கொண்டு
தெள்ளு தமிழ் பாடம் எழுத – உன்னை
பள்ளியில் சேர்த்திட வருவார் – மாமன்
அள்ளி அணைத்திட வருவார்.
கண்ணே கண் மணியே
கண் உறங்காயோ ..

தமிழ் செவ்வியல் இசையில் தாலாட்டுகென்று வகைப்படுத்தப்பட்ட ராகங்களிலிருந்து விலகி புதுமையாக் தேஷ் ராகத்தில் தந்து களிப்புற வைத்த பாடல்.

12 நிலவே நிலவே ஆட வா – படம்: சொர்க்கவாசல் 1954 – பாடியவர்: கே.ஆர்.ராமசாமி – இசை: C .R . சுப்பராமன் + விஸ்வநாதன் ராமமூர்த்தி
பொங்கிப் பெருகி வரும் இனிய மெட்டுக்களில் பாடல்களைத் தந்த சுப்பராமன் இசையமைத்து முடிக்காமல் விட்ட இந்த படத்தினை நிறைவு செய்தவர்கள் மெல்லிசைமன்னர்கள்.பாடல் அமைக்கப்பட்ட இயல்பான இனிமையில் நெஞ்சை பறிகொடுக்க வைக்கின்ற பாடல்.பாடகர்களும் மிக இனிமையாக தேஷ் ராகத்தின் இனிமையில் இரண்டறக் கலந்து பாடி உயிர் தந்திருகின்றனர்.நிலவு பற்றிய அழகான பாடல்.

13 அன்பே நம் தெய்வம் – நீதிபதி 1955 – பாடியவர்: டி வீ .ரத்தினம் – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
மெல்லிசைமன்னர்களின் ஆரம்பகாலப் பாடல் இது.தனித் தன்மையும் , ஆற்றலும் சிறப்பான குரல் வளமும் மிக்க பாடகி டி.வீ. ரத்தினம் பாடிய பாடல்.தடிப்பான பெண் குரல்களில் இனிமையும் தரவல்ல தனித் தன்மை காட்டக் கூடிய பல குரல்கள் 1950 களில் ஒலித்தன.சங்கதிகளைப் பாடுவதில் அசாத்திய திறமை கொண்ட பாடகிகளில் டி.வீ. ரத்தினம் முதன்மையானவர்.அழகான அதிர்வுகளை வழங்கும் குரலில்
இந்தப்பாடல் சிறப்பு பெற்று விளங்குகிறது.பாடல் தேஷ் ராகத்தில் ஆரம்பித்தாலும் சாரங்கா ராகத்தின் கலப்பாலும் இனிமை பெறுகிறது.

14 எந்தன் காதல் கனவு – படம்:கல்யாணம் செய்துக்கோ 1955 – ஜிக்கி – இசை:ரமணிகரன்
சோகப்பாடலாக அமைக்கப்பட்ட இந்தப் பாடலிலும் தேஷ் ராகத்தின் இனிமையை நாம் அனுபவிக்கலாம்.தேஷ் ராகத்தை உச்சாடனம் செய்வது போன்று இசைக்குப் பொருத்தமாக பாடல் வரிகளை அமைத்திருப்பதுவே இப்பாடலின் சிறப்பு.இந்த இசையமைப்பாளர் வேறு படங்களுக்கு இசையமைக்கவில்லை.

15 பொன்னே புது மலரே பொங்கி வரும் காவிரியே – படம்: நல்லதங்காள் – பாடியவர் :T.M. சௌந்தரராஜன் – இசை ஜி.ராமநாதன்.
காலச் சக்கரம் சுழன்று பின்னோக்கிய நினைவுகளை , வாழ்வின் வசந்தமாம் இளமை நினைவுகளை மீட்டும் பாடல்.காலச் சக்கரத்தில் உருண்டோடிப் போன உறவின் பிணைப்பை , பாசத்தின் பண்பை எழுச்சியாகவும் , அதே நேரம் உருக்கமாகவும் பின்னிப் பிணைத்து இசைமேதை ஜி.ராமநாதன் கட்டி எழுப்பிய இசைக் கோபுரத்தில் கொடி நாட்டப்பட்டது போல உச்சியில் பட்டொளி வீசி நிற்கின்ற
பாடல்.இளம்சௌந்தரராஜனின் குரலில் ரீங்காரமிடும் பாடல்.

என்னுடைய வயதிற்கு முந்தைய காலத்து ஜி.ராமனாதனின் பாடல்களில் “பைத்தியம்” பிடித்து திரிந்த காலங்களில் ரசித்த எத்தனையோ பாடல்களில் ஒன்று.

அந்த நாள் போனதம்மா
ஆனந்தம் போனதம்மா

என்று பாடல் உச்சிக்கு போகும் போது ஜி.ராம்னாதானா சௌந்தரராஜனா கேட்க வைக்கின்ற பாடல்.இந்த வரிகளைக் கேட்கும் போது உடலில் நீரின் அலை காவேரி வெள்ளம் போல் பொங்கி நிலை குலைய வைத்து விடும்.இசையமைத்த முறை அப்படி என்று தான் சொல்ல முடியும்.பாடல் என்றால் இப்படி இருக்க வேண்டும்.தேஷ் ராகத்தில் நம்மை நிலை குலைய வைக்கின்ற பாடல்.

16 ஆவி ததும்பும் – படம்:மறுமலர்ச்சி 1956 – பாடியவர்: பி.லீலா – இசை:

17 பொன் மேனி காட்டி என்னை – நானே ராஜா 1956 – பாடியவர்: ஜிக்கி – இசை: T.R .ராமநாதன்
துடிப்பான குரல் கொண்ட ஜிக்கி பாடிய துள்ளிசைப் பாடல் வகையைச் சேர்ந்தது இந்தப்பாடல்.தேஷ் ராகத்தின் ஆளுமையை இதமான தாளக் கட்டில் புது புனைவுக் கோலத்தில் வெளிப்படுத்தும் பாடல். ஒரு சில் படங்களுக்கு இசையமைத்தாலும் சிற்ப்பான பாடல்களை தந்த மற்றும் ஒரு ராமநாதன் தந்த இனிமையான பாடல்.

18 அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி – மதுரை வீரன் 1956 – பாடியவர்:P .பானுமதி – இசை:ஜி.ராமநாதன்
1950 களின் மத்தியில் வெளிவந்த சிறந்த பாடல்களில் ஒன்று இந்தப்பாடல்.உருக்கமான காட்சியில் ஒலிக்கும் இந்த பாடல் எல்லோரையும் ஈர்க்கும் சக்தி கொண்டது.ஜி.ராமநாதனின் இனிய இசை தேஷ் ராகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது என்று சொல்லலாம்.பானுமதி அருமையாகப் பாடிய பாடல்.

19 உனக்கும் எனக்கும் உறவு காட்டி உலகம் சொன்னது கதையா – படம்: – பாடியவர்:ஜிக்கி – இசை:ஜி.ராமநாதன்.
ஜி.ராமநாதன் தனது இசையில் வெற்றி பெற்ற சில இனிய பாடல்களை வேறு சில படத்திலும் பயன் படுத்தியிருக்கின்றார். அந்த வகையில் சொல்லக்கூடிய பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று.அதே மெட்டில் ஜி.ராமனாதனின் அபிமானப் பாடகியாக விளங்கிய ஜிக்கியும் மிக உருக்கமாகப் பாடிய பாடல்.

20 நிலை தன்னை அறியவே – படம்: வெற்றி வீரன் 1956 – பாடியவர்:S .C .கிருஷ்ணன் + P .சுசீலா இசை:
நகைச்சுவைப் பாடல்களையும் , கிராமியப் பாடல்களையும் அற்ப்புதமாகப் பாடக் கூடிய மேதகு ஞானம் கொண்ட எஸ்.சி. கிருஷ்ணன் பி.சுசீலாவுடன் இணைந்து பாடிய தேஷ் ராகப் பாடல்.இந்தப்பாடலும் அந்த வகைப் பாடலே.
எடுத்த எடுப்பிலேயே கிராமிய வாசத்தை தனது குரலில் காண்பிக்கும் ஆற்றல் பெற்ற பாடகர் கிருஷ்ணன் , பெரும்பாலும் நடிகர் தங்கவேலுக்கு ” அத்தானும் நான் தானே ” போன்ற சிறந்த நகைச்சுவைப் பாடல்களைப் பாடியவர் எஸ்.சி. கிருஷ்ணன்.இவரை அதிகம் பயன்படுத்தி வெற்றி கண்டவர் இசை மேதை ஜி.ராமநாதன்.

21 முரளி தர ஹரே மோகனம் கிருஷ்ணா – படம்: பிரேம பாசம் 1956 – பாடியவர்: பி.லீலா – இசை: S.ராஜேஸ்வரராவ்
பொதுவாக கண்ணன் , கிருஷ்ணன் பற்றிய பாடல்களுக்குப் பொருத்தமான ராகம் இந்த தேஷ் என்பது போல ஏராளமான பாடல்கள் இந்த ராகத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன.எப்படிப்பட்ட பாடல்கள் என்றாலும் சிறப்பாகப்பாடக் கூடிய பி.லீலா பாடிய கனிவான பாடல்.

22 வரவேணும் வரவேணும் – படம்:தங்கமலை ரகசியம் 1957 – பாடியவர்: ஏ.பி.கோமளா + ஜிக்கி குழுவினர் – இசை: T G .லிங்கப்பா
பொதுவாக மன்னனை வாழ்த்த மோகனராகத்தை பயன் படுத்துவது வழமையாக இருந்த சினிமாவில் , சற்று மாறுதலாக இனிமை நிறைந்த தேஷ் ராகத்தில் அமைத்து மன்னனை மகிழ்விக்கும் பொலிவு தரும் பாடல்.

23 இதயவானிலே உதயமானது – படம்: கற்ப்புக்கரசி 1957 – பாடியவர்கள்: சௌந்தர்ராஜன் + ஜிக்கி – இசை:ஜி.ராமநாதன்
மீண்டும் ஜி.ராமநாதன் தேஷ் ராகத்தில் அசத்திய பாடல்.சௌந்தர்ராஜன் , ஜிக்கி என்ற நிகரில்லாத ஜோடிக் குரலில் ஒலித்த இனிமையான பாடல்களில் ஒன்று.இருவரையும் வைத்து பல பாடல்களைப் பாட வைத்தவர்களில் ஜி.ராமநாதன் முதன்மையானவர்.
மீண்டும் “உச்சஸ்தாயியில் இனிமை படைத்தல் “என்ற தாரக மந்திரம் கொண்ட ராமநாதன் பாடல்.ராக பிரயோகங்களில் மயக்கும் மெட்டுக்களை போடுவதும் , ராகத்தின் இனிமை கெடாமல் துள்ளும் தாளத்தில் அவற்றை அமர்த்துவதும் ராமனாதனின் சிறப்பாகும்.குறிப்பாக அவருடைய பாடல்களில் தபேலா சிறப்பான இனிமை தரும்.

24 இல்லை இல்லை என்று சொல்லுவார் – படம்:காத்தவராயன் 1958 – பாடியவர்:பி.லீலா – இசை:ஜி.ராமநாதன்.
நாட்டுப்புற தாள அமைப்பில் இனிய ராகங்களை அள்ளி வீசிய ராமநாதனின் இனிய பாடல்.

25 ஆளப்பிறந்த என் கண்மணியே – படம் :உத்தமபுத்திரன் 1958 – பாடியவர்கள்:ஆர்.பாலசரஸ்வதி தேவி + ஏ.பி.கோமளா – இசை :ஜி.ராமநாதன்
தமிழ் ராகங்களின் உயிர்ப்பை கார்முகில் பொழியும் மழையாய் கொட்டி இசைக்கடலை தன ஞானத்தால் நிறைத்தவர் இசைமேதை ஜி.ராமநாதன்.அவர் தந்த ஈடு இணையற்ற பாடல் இந்தப் பாடல் என்று சொல்லுவேன்.

தாலாட்டில் தாய் தனது பிள்ளையின் பெருமையையும் , தனது குடும்பத்தின் பெருமையையும் பாடலாகப் பாடி மகிழ்வாள்.தங்கள் குடும்பத்தை, தங்கள் தொழிலை சிறப்பு செய்தும் பாடுவர்.

இந்தப்பாடலில் நாட்டின் அரசியும் , ஏழைப்பெண் ஒருவரும் ஒரே ராகத்தில் பாடுவதாக அமைக்கப்பட்ட பாடல்.தேஷ் ராகத்தின் இனிமையை முழுமையாக அனுபவிக்கும் விதத்தில் இசையமைப்பும், பாடிய விதமும் அமைந்திருக்கிறது.பாடிய ஆர்.பாலசரஸ்வதி தேவியின் தாய்மை நிறைந்த குரலும் , கோமளாவின் கம்பீரமான குரலும் பாடலுக்கு பொருத்தமாய் அமைந்துவிட்டது.தேஷ் ராகத்தின் இனிமையை இந்தப்
பாடலில் கேட்டு மகிழலாம்.ஒவ்வொரு இசை ரசிகனும் கேட்க வேண்டிய பாடல்.

25 சேவை செய்வதே ஆனந்தம் – படம்:மகாதேவி 1957 – பாடியவர்:T .M .சௌந்தரர்ராஜன் + T .M .ராஜேஸ்வரி – இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி
மெல்லிசைமன்னர்களின் மிக இனிமையான காதல் பாடல்.பாடலின் ஆரம்பமே இந்த ராகத்தின் எல்லையற்ற இனிமையை தருவதாய் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.கனிவும் இனிமையும் நிரம்பிய பாடல்.தேஷ் ராகத்தின் இனிய ஒலியலைகளில் ஆரம்பிக்கும் பாடல் , கானடா ராகத்தில் இன்பம் தந்து நிறைவுறுகிறது.T.M.சௌந்தரராஜன் + M.S.ராஜேஸ்வரி குரலில் வந்த அழகான பாடல்.தேஷ் ராகத்துடன் கானடா
ராகத்தை இணைத்த விதம் நெஞ்சை அள்ளும் விதமாய் அமைந்திருக்கும்.

26 தாரா அவர் வருவாரா – படம்:அரசிளங்குமரி 1960 – பாடியவர்:S .ஜானகி – இசை:ஜி.ராமநாதன்
ஜி.ராமநாதன் இசையில் அரிதாகப் பாடிய ஜானகி பாடிய பாடல்களில் ஒன்று.” கண்ணன் மன நிலையை தங்கமே தங்கம் ” என்ற பாடலைப் போல செவ்வியல் இசை சார்ந்ததாக் இல்லாமல் மெல்லிசைப் பாணியில் ராமநாதன் இசையமைத்த துள்ளிசைப் பாடல். குறிப்பாக பாடலில் பயன்படுத்தப்படுகின்ற தாளம் அவரது சிறப்பான ஸ்டைல். பாடலின் சங்கதிகளில் உயிர் நிலையங்களில் மின்னலை பாய்ச்சும் அதிர்வுகளை தந்து
மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்.”ரா ” என்ற எழுத்தை வைத்து அந்தக் காலத்து பாடலாசிரியர் விளையாடிய பாடல்.

27 மனித வாழ்விலே இனிமை சேர்க்கும் புனிதமான தெய்வம் – படம்: – பாடியவர்:ராஜா – இசை:
பெண்மையின் பெருமை பேசும் பாடலை இனிய வளம் படைத்த ராஜாவின் குரலில் கேட்க்கும் போது மென்மை தழுவி நிற்கும் தேஷ் ராகத்தின் சுகத்தை உணரலாம்.

28 நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ – படம்: பாவை விளக்கு 1960 – பாடியவர்: பி.சுசீலா – இசை: கே.வீ மகாதேவன்
விரகதாபத்தை வெளியிடும் அழகான பாடல்.Semi – Classical வகை என்று சொல்லக்கூடிய பாடல்.காதலை கவிநயத்துடன் இசைச் சிறப்பும் சேர்த்துத் தரும் பாடல்.கதாபாத்திரத்தின் உணர்வு நிலையை தேஷ் ராகத்தின் ஆளுமையை சுவையுடன் பயன்படுத்திய பாடல்.

29 குறும்பினிலும் ஒரு எழில் தோன்றும் – படம்: மனிதன் மாறவில்லை 1962 – பாடியவர்: பி.சுசீலா – இசை: கண்டசாலா
சிறந்த பாடகர் மட்டுமல்ல சிறந்த இசையமைப்பாளர் என்று தன்னை நிரூபித்தவர் கண்டசாலா.அவரது இசையில் தேஷ் ராகத்தின் இனிமையைஅனுபவிக்கலாம்.பெரும்பாலும் சோகமாக ஒலிக்கும் செனாய் என்ற வாத்தியத்தை மிக நுட்பமாக பயன்படுத்தி மண்டிக் கிடக்கும் இனிமையை எழுப்பி காட்டியிருகின்றார்.சுசீலா பற்றி சொல்ல தேவையில்லை.

30 சிந்து நதியின்மிசை நிலவினிலே – படம்: கை கொடுத்த தெய்வம் 1964 – T .M .சௌந்தரராஜன் – L.R. ஈஸ்வரி இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

இந்திய ஒற்றுமையையும் ,சுதந்திரத்தையும் கனவு கண்டவன் பாரதி.தேசிய உணர்வை இந்து மத உணர்வுடன் கலந்த காலத்தில் வாழ்ந்தவன் பாரதி. இந்திய விடுதலை பற்றிப் பாடிய பாரதி அந்த விடுதலைக்கு அடிப்படை இந்திய மக்களின் ஒற்றுமை எனக் கருதியவன்.இந்தியர்களின் நற்ப்பண்புகளையும் , மாநிலங்களின் சிறப்புக்களையும் உயர்த்தி பாரதி எழுதிய பாடல்களில் முக்கியமான பாடல் இது.

இந்திய தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி பாடப்பட்டு வந்த , மக்களிடம் பிரபலமான தேஷ் ராகத்தில் இந்தப்பாடலை மெல்லிசைமன்னர்கள் அமைத்தது தற்ச்செயலானதல்ல.

பாரதி பாடல் என்று தெரியாமலேயே மிக இளம் வயதில் எனக்கு மனப்பாடமான பாடல். எனது மூன்று வயதில் இந்தப் பாடலை ராகத்துடன் பாடியதாக எனது பெற்றோர்கள் கூறுவர். இன்றும் இந்த ராகத்தில் சொல்லமுடியாத ஈர்ப்பு உண்டு.

31 ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல – படம்: செல்வம் 1966- பாடியவர்கள்: T .M .சௌந்தரராஜன் – P. சுசீலா – இசை:K .V .மகாதேவன்
தேஷ் ராகத்தின் உன்னதத்தை , விரகதாபத்தை வெளியிடும் அழகான பாடல்.செனாய் வாத்திய இசை அலையில் தேஷ் அழகாக மிதந்து வரும் பாடல்.”நின்றால் நடந்தால் உன் நினைவு ” என்று tms உச்சஸ்தாயியில் பாடும் போது அருமையான தேஷ் இனிக்கும்.

32 அன்றொரு நாள் இதே நிலவில் – படம்: நாடோடி 1966 – பாடியவர்கள்: T .M .சௌந்தரராஜன் + P .சுசீலா இசை:M.S.விஸ்வநாதன்
தேஷ் ராகத்தில் மெல்லிசை வடிவமாக மாருதம் வீசும் தரும் அர்ப்புதங்களை செய்தவர் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன்.இந்தப் பாடலுக்கான சூழ்நிலை இரவு.

பழைய நினைவுகள் திரும்பிய கதாநாயகி சொல்கிறாள்

” மூளையில் புது தெளிவு ஏற்ப்பட்டது போல் இருக்கு எதனாலே..?
கதாநாயகன்:என்ன காரணம்? அமைதியான இரவு, குளிர்ச்சியான தென்றல், சங்கீதம் பாடும் நீரோடையின் சல சலப்பு இந்த அழகுக்கு எல்லாம் அடைக்கலம் தரும் முழு நிலவு.
இந்த அழகான சூழ்நிலைக்கு இந்த ராகத்தை விட வேறு ஒரு ராகத்தை நினைத்துப் பார்க்க முடியுமா என்று எண்ணும் வகையில் “என்னை விட வேறு யாராவது இப்படி ஒரு பாடல் தர முடியுமா ” என்று சொல்லும் வகையில் மெல்லிசைமன்னர் தந்த பாடலமுதம். இரண்டு விதமான பாடலாக மிக நேர்த்தியாக இசையமைக்கப்பட்ட பாடல்.

33 கோபியர் கொஞ்சும் ரமணா – படம்: திருமால் பெருமை 1968 – T .M .சௌந்தரராஜன் – இசை:K .V .மகாதேவன்
ராக இசையின் இயல்பான் ஓட்டத்தில் இனிமையான பாடல்களைத் தந்து சிறப்பித்தவர் கே.வீ.மகாதேவன். அவர் மிகப்பெரிய நாதஸ்வரப்பிரியர்.அவருடைய பாடல்களில் நாதஸ்வர இசையின் தன்மையை அவதானிக்கலாம் சம்பிரதாயம் தவறாத இசைப்பாங்கு அவருடையது.ராகங்கள் வெளிப்படையாகவே வீரியம் கொண்டு நிற்கும்.அப்படிப்பட்ட பாடலே இந்தப்பாடல்.தேஷ் ராகத்தின் வரம்பற்ற இனிமையை காட்டும் பாடல் இது.

34 மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன் – படம்: திருமணம் 1958 – பாடியவர்: சௌந்தரராஜன் – இசை: சுப்பைய்யாநாயுடு
பலவிதமான மெட்டுக்களில் பாரதியின் ” அழகுதெய்வம் ” என்ற இந்தப் பாடல் , பல படங்களில் வெளிவந்துள்ளன.சுபபைய்யாநாயுடுவின் இசையில் வெளிவந்த இந்தப்பாடல் தேஷ் ராகத்தில் கனகச்சிதமாகப் பொருந்தி நிற்கிறது.

” அங்கதனில் கண் விழித்தேன்
அடடா ஒ அடடா
அழகென்னும் தெய்வம் தான்
அது என்றே அறிந்தேன் “

என்ற வரிகளில் தேஷ் ராகம் உயிர் பெற்று நம் இதயங்களுக்கு உள்ளொளி தந்து நெஞ்சங்களைப் பிணிக்கிறது.பாடல் முழுவதும் தேஷ் ராகத்தில் அமையாவிட்டாலும் ” காலத்தின் விதி மதியை ” என்று ஆரம்பிக்கும் பகுதி சாருகேசி ராகத்தில் அமைக்கப்பட்டது.ராக இணைப்புக்கள் அருமை.

35 கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் – படம்: சுப்ரபாதம் 1978 – பாடியவர்கள்: ஜேசுதாஸ் + வாணி ஜெயராம் – இசை: விஸ்வநாதன்
ராகங்களின் இனிமையை திரட்டித் தருவதில் மெல்லிசைமன்னர் சிறப்பு வாய்ந்தவர்.தனது படைப்புத் திறத்திற்கு வேண்டிய ஆற்றலை ராகங்களிலிருந்து எடுத்தாண்டாலும் அதிலும் மெல்லிசையின் வன்மைகளை அகம் மகிழத் தந்தவர்.விரிந்து பரந்த அவரது இசையாற்றல் எல்லையற்றது என்பதை கஞ்சத்தனமில்லாத அவரது இசை நமக்கு உணர்த்தும்.

36 இது தான் முதல் ராத்திரி – படம்: ஊருக்கு உழைப்பவன் 1976 – ஜேசுதாஸ் + வாணி ஜெயராம் – இசை: விஸ்வநாதன்
நம்மை இசைக்கு அடிமையாகியத்தில் மெல்லிசைமன்னரின் பங்கு அதிகம்.செவ்வியல் இசையின் நறுமணம் மெல்லிசை என்ற தென்றலில் மிதந்து வரும் சுகம் தருபவை அவருடைய பாடல்கள்.இந்தப்பாடலும் அந்த வகையைச் சார்ந்தது.

37 முத் தமிழில் பாட வந்தேன் – படம்: மேல்நாட்டு மருமகள் 1976 – பாடியவர்: வாணி ஜெயராம் – இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
குன்னக்குடியின் விறுவிறுப்பான தேஷ் ராகப்பாடலில் இனிமையும் அதிகம் உண்டு.

38 கடலில் அலைகள பொங்கும் – படம்: மகரந்தம் 1981 – பாடியவர்:பாலசுப்பிரமணியம் – இசை: சங்கர் -கணேஷ்
ஹஸல் பாணியில் அமைக்கப்பட்ட அழகான பாடல். ஆங்காங்கே சில சிறந்த பாடல்களைத் தந்தவர்கள் இந்த இரட்டையர்கள்.

ilyaசினிமா இசைக்கு புது அர்த்தம் தந்தவர் என்ற ரீதியில் ,ராகங்களை மரபுடனும் ,நவீனத்துடனும் கையாண்டு வெற்றிகண்டவர் இளையராஜா.தமிழ் நாட்டுப்புற இசையும் , செவ்வியல் இசையும் , மேலைத்தேய செவ்வியல் இசையும் ஒட்டும் பாடல்களை எழுந்தமானமாகவும், அந்தரங்கசுத்தியுடனும் இணைத்துக் காட்டியது அவரது ஈடுஇணையற்ற சாதனை.

தேஷ் ராகத்தில் ஒரு சில பாடல்களையே தந்தாலும் அதிலும் தன் வீச்சைக் காட்டி வெவ்வேறுவிதமான பாடல்களைத் தந்திருக்கின்றார்.எளிதில் அடையாளம் கண்டு விடக் கூடிய தேஷ் ராகத்தில் நவீனமாக தரும் இளையராஜாவின் ஆற்றல் சொல்லி மாளாது.ஏற்க்கனவே மேலே நான் தந்துள்ள பாடல்களில் பெரும்பாலானவற்றின் இசையமைப்பாளர்களின் பெயர்களை மாற்றி விட்டால் யார் எந்தப் பாடலை
இசையமைத்தார்கள் என்று சொல்லி விட முடியாது.எளிதில் கண்டுபிடித்து விடக்கூடிய ராகமான தேஷ் ராகத்திலும் புதுமைக்குப் புதுமையாக அதே நேரம் இனிமைக்கு இனிமையாக ராஜாவின் இசையாற்றல் வெளிப்படுகிறது.

01 விழியில் புது கவிதை படித்தேன் – படம் : தீர்த்தக் கரையினிலே – பாடியவர்கள் : மனோ + சித்ரா – இளையராஜா

பொதுவாக பின்னணி இசையில் தனது அசாத்திய திறமையை காட்டிய இசைஞானி இந்தப்பாடலிலும் மனக்கடலில் பதுங்கியிருக்கும் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பும் செனாய் வாத்திய இசையின் வீச்சுடன் பாடலைத் தொடங்குகிறார்.பாடல் தொடங்கி 20 நொடிகளில் எத்தனை ,எத்தனை லாவண்யங்களை காட்டுகிறது.வாத்தியங்களிலும், பெண்கள் கோரஸ் இசையிலும் தேஷ் ராகத்தின் அழகுகளை அநாயாசமாகத்
திரட்டித்த்ருகின்றார்.தேஷ் ராகத்தின் மேன்மைக்கு சேவகம் செய்திருக்கின்றார்.

“அங்கிங்கெனாது என்றும் உன் எண்ணங்கள் என்னை விடாது ..” என்ற வரிகளைத் தொடரும் இசை தேஷ் ராகத்தின் உச்சங்களைத் தொட்டுச் செல்கிறது.
கண்ணே உன் கனவு வர

பெண்ணே உன் நினைவு வர என்ற வரிகளைப் பாடும் போதும் இனிமை நம்மைப் பரவசப்படுத்துகிறது.

02 தெய்வங்கள் கண் பார்த்தது – படம்: புதியராகம் – பாடியவர்கள் : மனோ + எஸ்.ஜானகி – இசை: இளையராஜா
தாலாட்டு பாடல்களாக முன்னோடி இசையமைப்பாளர்களான ஜி.ராமநாதன் , ஆர்.சுதர்சனம் போன்றோர் பயன்படுத்திய ராகத்தில் தாயாகப் போகும் பெண்மையை வாழ்த்தும் பாடல்.இடையிசையில் படக்காட்சியின் மனநிலையையும் இசை பிரதிபலிக்கிறது

03 உனக்கெனத் தானே இந்நேரமா – படம்: பொண்ணு ஊருக்கு புதிசு – பாடியவர்கள் : இளையராஜா + சரளா – இசை: இளையராஜா
எப்படி இசையமைத்தாலும் தன்னை துல்லியமாக வெளிக்காட்டி நிற்கும் தேஷ் ராகத்தில் ஒரு புதுமையாக அதன் சங்கதிகளை அதிகம் வைக்காமல் படத்தின் சூழ்நிலைக்கு கன கச்சிதமாக பொருந்தக் கூடிய வகையில் ஒரு கிராமியப் பாடலாகத் தந்து ஆச்சர்யமூட்டியுள்ளார் இசைஞானி.இது அவரது ஆர்மபகாலப் பாடல்களில் ஒன்று.

தேஷ் ராகத்திலும் ஒரு கிராமிய மணம் பொங்கும் பாடலா என வியக்க வைக்கும் பாடல்.

ராகத்தின் நளினங்களை பல்வேறு கோணங்களில் பார்க்கும் மேதமை எல்லை கடந்த அவரது இசை ஞானத்தை பறைசாற்றும்.

04 ஓரன்ஜாசாறு உசார் ஐயா உசாரு – படம்: காக்கைச் சிறகினிலே – பாடியவர் : S .P .பாலசுப்பிரமணியம் – இசை: இளையராஜா

இனிமை மிக்க புல்லாங்குழல் இசையுடன் ஆரம்பிக்கும் தேஷ் ராகத்தில் ஆச்சரியம் தரும் நகைச்சுவைப் பாடல்.ஆயினும் ஆங்காங்கே தேஷ் ராகம் தனது கைவரிசையைக் காட்டும் வண்ணம் இனிய பின்னணி இசையுடன் இசையமைக்கப்பட்ட பாடல்.

கனவே கலையாதே காதல் – படம்:கண் எதிரே தோன்றினாள் – பாடியவர்கள்; உன்னிகிருஷ்ணன் + சித்ரா – இசை: தேவா
ஒரு பூ எழுதும் கவிதை -படம்:பூவேலி – பாடியவர்கள்; உன்னிகிருஷ்ணன் + சித்ரா – இசை: பரத்வாஜ்

போன்ற இனிமையான பாடல்களையும் குறிப்பிடலாம்.

பக்திப்பாடல் வரிசையில் அநேகரும் அறிந்த பாடலான ” உன்னையும் மறப்பதுண்டோ ” என்ற சௌந்தரராஜன் பாடிய பாடலும் தேஷ் ராகத்தில் அமைந்ததே!

என் பால்ய வயதில் நான் பாடித்திரிந்த எனக்குப் பிடித்த, என்னால் மறக்க முடியாத

வாராயோ கண்ணா என்னை
பாராயோ மணிவண்ணா

என்ற பாடலும் என் நினைவில் வந்து போகின்றது.

இன்னுமொரு முக்கியமான மலையாலப் பாடலை ஒவ்வொரு இசை ரசிகனும் கேட்டு ரசிக்கவேண்டும் அந்தப் பாடல் இதோ:

பாடல்: சங்குப் புஷ்பம் கண் எழுதும் போல் – படம் :சகுந்தலா 1965 – பாடியவர்:கே.ஜே.யேசுதாஸ் – இசை:ஜி.தேவராஜன் – கவிஞர்:வயலார் ராமவர்மா

No comments:

Post a Comment