Tuesday, 7 April 2020

POLLACHI A.B.T HISTORY /NACHIMUTHU GOUNDAR



POLLACHI A.B.T HISTORY /NACHIMUTHU GOUNDAR





மூன்று தலைமுறைகளைக் கடந்து வெற்றிநடை போடும் A B T (ஏ.பி.டி) நிறுவனம் - ஓர் சிறப்பு பார்வை

கொங்கு மண்டலத்தில் தொழிற் துறை வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள் பலராக இருந்தாலும், அவர்களுக் கெல்லாம் தலைமகனாக விளங்கியவர் பொள்ளாச்சி நாச்சிமுத்து கவுண்டர். அன்றைக்கு அவர் ஆரம்பித்த ஏ.பி.டி. நிறுவனம் இன்று மூன்று தலைமுறைகளைக் கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது.

இன்றைக்கு இருப்பது மாதிரி இல்லாமல், நூறு ஆண்டுகளுக்கு முன்பு மிகச் சிறிய ஊராகவே இருந்தது பொள்ளாச்சி. இந்த ஊரில் பழனி கவுண்டருக்கும் செல்லம்மாளுக்கும் செல்லக் குழந்தையாக 1902-ல் பிறந்தார் நாச்சிமுத்து. பழனி கவுண்டர், சுந்தரராஜ அய்யங்காருடன் இணைந்து குதிரை வண்டிப் போக்குவரத்தை நடத்தி வந்தார். பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு, பொள்ளாச்சியிலிருந்து பழநிக்கு ஆட்களையும், பொருட்களையும் ஏற்றிச் செல்வது இந்த குதிரை வண்டிப் போக்குவரத்தின் முக்கிய வேலை. பஸ்களும், ரயில்களும் வராத அந்த காலத்தில் மக்கள் நம்பி இருந்தது இந்த குதிரை வண்டிப் போக்குவரத்தைதான். அரசாங்கம் நடத்திய தபால் துறையும் இந்த குதிரை வண்டிப் போக்குவரத்தையே நம்பி இருந்தது. இதனால் பழனி கவுண்டருக்கு ஓரளவுக்கு நல்ல வருமானம் கிடைத்தது.

பழனி கவுண்டரின் மகன் நாச்சிமுத்து பொள்ளாச்சியிலேயே பள்ளியில் படித்தார். படிப்பு அவருக்கு இயற்கையிலேயே நன்றாக வந்தது. ஆனாலும் பள்ளிப்படிப்பை அவரால் தொடர முடியவில்லை. காரணம், பழனி கவுண்டருக்கு சொந்தமாக இருந்த நிலத்தில் விவசாயம் செய்யும் வேலையை நாச்சிமுத்துவிடம் அவர் தந்தை பழனி கவுண்டர் ஒப்படைத்தார். பதினைந்து வயதுகூட நிரம்பாத நாச்சிமுத்துவை நம்பி, பத்து ஏக்கர் நிலத்தைத் தந்தார். தந்தையின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல், நல்லபடியாக விவசாயம் செய்து அள்ளித் தந்தார் நாச்சிமுத்து.

அப்போதுதான் வால்பாறை என்கிற மலைப் பிரதேசம் தேயிலை தோட்டங்களாக மாறி இருந்தது. வெள்ளைக்காரர்கள் நடத்திவந்த இந்த தேயிலைத் தோட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை பார்த்து வந்தனர். இந்த மக்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு முதல் அனைத்து உணவுப் பொருட்களும் பொள்ளாச்சியிலிருந்து சென்றாக வேண்டிய கட்டாயம்.

இப்போது இருக்கிற மாதிரி வால்பாறைக்கு அப்போது ஒழுங்காக சாலை வசதி இல்லை. கரடுமுரடான காட்டுப்பாதையில் மாட்டு வண்டிகள் மூலமாகத்தான் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்றார்கள். குதிரை வண்டிப் போக்குவரத்தை சிறு வயதிலிருந்து பார்த்துப் பழகிய நாச்சிமுத்துவுக்கு இந்த மாட்டு வண்டிப் போக்குவரத்தின் முக்கியத்துவம் புரியாமல் போகுமா என்ன?

தானும் மாட்டு வண்டிப் போக்குவரத்தை நடத்த முடிவு செய்தார் நாச்சிமுத்து. அவரிடம் ஏற்கெனவே பல மாடுகள் இருந்தன. விவசாயம் நடக்காத நேரத்தில் இந்த மாடுகளை பயன்படுத்திக்கொண்ட மாதிரியும் ஆச்சு. விவசாயத்தோடு இன்னொரு தொழிலும் செய்த மாதிரியும் ஆச்சு என்று வண்டிப் போக்குவரத்தை ஆரம்பித்தார். கடுமையான உழைப்பு, எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பதில் உறுதி, நேர்மையான அணுகுமுறை இந்த மூன்றும் நாச்சிமுத்துவுக்கு இருந்ததால் வண்டிப் போக்குவரத்தில் தனிப் பெயர் பெற்றார்.
1920-களின் ஆரம்பத்தில் கொங்கு மண்டலத்திற்கு அறிமுகமானது பஸ் போக்குவரத்து. வெள்ளைக்காரரான ஸ்டேன்ஸ் கொங்கு மண்டலத்திற்கு பஸ் போக்குவரத்தை அறிமுகம் செய்தார். அவரிடமிருந்து பஸ் வாங்கி, கோவையில் முதன் முதலில் பஸ் கம்பெனியைத் தொடங்கியவர் பிறவி விஞ்ஞானி என அழைக்கப்படும் ஜி.டி.நாயுடு. இவரைத் தொடர்ந்து எல்.ஆர்.கோவிந்தசாமி நாயுடு திருப்பூரிலும், கோவை - மேட்டுப்பாளையத்துக்கும் பஸ் போக்குவரத்தை நடத்திய காட்டேறிச் செட்டியாரின் கம்பெனியும், வீராசாமி செட்டியார் திருப்பூரில் தொடங்கிய கோபால்டு மோட்டார் சர்வீஸும் செயல்பட ஆரம்பித்தன.
குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டிப் போக்குவரத்தை வெற்றிகரமாக நடத்திய நாச்சிமுத்துவுக்கு இந்த பஸ் போக்குவரத்தின் முக்கியத்துவம் சட்டென புரிந்தது.

இனி பஸ் போக்குவரத்துக்குத்தான் எதிர்காலம் என்பதை உணர்ந்தார். 1926-ல் லாரி வாங்கி, அதன் மூலம் பொருட்களை ஏற்றிச் செல்ல ஆரம்பித்தார். 1927-ல் நான்கு பஸ்களை வாங்கி, பஸ் கம்பெனி ஒன்றை ஆரம்பித்தார் நாச்சிமுத்து. இப்படி மெள்ள மெள்ள வளர்ந்த பஸ் கம்பெனி, 1932-ல் ஆனைமலை பஸ் டிரான்ஸ்போர்ட் (சுருக்கமாக, ஏ.பி.டி.) என்கிற பெயரில் தனி நிறுவனமாக உதயமானது. பத்தொன்பதாயிரம் ரூபாய் முதலீட்டில் உருவான ஏ.பி.டி. நிறுவனத்தின் மொத்த பங்குதாரர்கள் 25 பேர்.

ஆட்டோமொபைல் துறை பற்றி அவருக்கு இருக்கும் அறிவு அபாரமானது. அவர் அமெரிக்காவில் தயாரான ஃபோர்டு கார் ஒன்றை வைத்திருந்தார். இந்த காரை பயன்படுத்திய நாச்சிமுத்து, இதில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகிறது, இந்த பிரச்னைகளுக்கு எப்படி தீர்வு காணலாம் என ஃபோர்டு நிறுவனத்தினருக்கு ஒரு கடிதம் எழுதினார். இந்த கடிதத்தைப் படித்துப் பார்த்த ஃபோர்டு நிறுவனத்தினர், நாச்சிமுத்துவின் தொழில்நுட்ப அறிவைப் பாராட்டி கடிதம் எழுதினார்கள்.

இப்படி வளர்ந்த ஏ.பி.டி. நிறுவனம் 1937-ல் உடுமலைப்பேட்டையில் நடந்துவந்த யு.பி.எஸ். பஸ் கம்பெனியை வாங்கி தன்னோடு இணைத்துக் கொண்டது. பஸ் பாடி பில்டிங், பெட்ரோல் பங்க், டயர்களை புதுப்பிப்பது என பஸ் போக்குவரத்துக்கு துணைபுரியும் தொழில்களிலும் கவனம் செலுத்தினார் நாச்சிமுத்து. கார் பேட்டரிகளுக்குத் தேவையான டிஸ்டில்டு வாட்டரையும் ஏ.பி.டி. நிறுவனத்திலேயே தயாரித்தார். 1927-ல் வெறும் நான்கு பஸ்களுடன் கம்பெனியை ஆரம்பித்த நாச்சிமுத்து கவுண்டரிடம் அடுத்த பதிமூன்று ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் இருந்தன.

தொழிற் துறையில் சாதனை படைத்ததோடு, அரசியலிலும் ஆர்வதோடு செயல்பட்டார் நாச்சிமுத்து கவுண்டர். சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாக கலந்துகொண்டு போராடினார். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான போராட்ட அறிக்கைகளை ஏ.பி.டி. பஸ்களில் ரகசியமாக கொண்டு சென்றார் நாச்சிமுத்து கவுண்டர். 1932- ஒத்துழையாமை இயக்கத்திலும் 1941, 42 ஆண்டுகளில் அரசுக்கு எதிரான பிரசுரங்களை வைத்திருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டார்.

அரசியலோடு மக்கள் நலன் காக்க அரசியலிலும் ஈடுபட்டார் நாச்சிமுத்து கவுண்டர். 1932-35 வரை பொள்ளாச்சி நகரசபைத் தலைவராக பதவி வகித்தார். பைகாரா மின் திட்டம் செயல்படத் தொடங்கியவுடன் பொள்ளாச்சி மக்களுக்கும் மின்சாரம் வேண்டும் என போராடி பெற்றுக் கொடுத்தார் அவர்.

நாச்சிமுத்துவின் ஒரே மகன், மகாலிங்கம். பொள்ளாச்சி மகாலிங்கம் என எல்லோராலும் அழைக்கப்படும் மகாலிங்கம், 1923-ல் பிறந்தார். சென்னையில் இன்ஜினீயரிங் படித்த இவர், 1946-ல் ஏ.பி.டி. நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அப்பாவின் கம்பெனி என்றாலும் எல்லா பணியாளர்களையும் போல அவரும் ஒரு சாதாரண ஊழியராக எல்லா வேலைகளையும் கற்றுக்கொண்டார். நாச்சிமுத்து கவுண்டரின் மறைவுக்குப் பிறகு ஏ.பி.டி. நிறுவனத்தைத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தினார்.

1961-ல் சக்தி சுகர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி, சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டார். இந்நிறுவனத்திற்கு தமிழகத்தில் மூன்று சர்க்கரை ஆலைகளும், ஒடிஷாவில் ஒரு சர்க்கரை ஆலையும் உள்ளது. சக்தி சுகர்ஸ் நிறுவனத்திலிருந்து சக்தி சோயா என்கிற நிறுவனமும் பிறந்தது.
இன்றைக்கு, பொள்ளாச்சி மகாலிங்கத்தின் மகன்களான மாணிக்கம், பாலசுப்பிரமணியம், சீனிவாசன் ஆகியோர் நாச்சிமுத்து கவுண்டர் உருவாக்கிய பிஸினஸ் சாம்ராஜ்ஜியத்தை மேன்மேலும் விரிவுபடுத்தி, வெற்றிநடை போட்டு வருகின்றனர். பொள்ளாச்சி மகாலிங்கத்தின் ஒரே மகள் கருணாம்பாள். இவரது கணவர் வானவராயர் டெக்ஸ்டைல் தொழிலில் சிறந்து விளங்குகிறார். இரண்டு பொறியியல் கல்லூரிகள், இரண்டு பாலிடெக்னிக்குகள், ஒரு கலைக் கல்லூரி என கல்விச் சேவையிலும் பெருஞ்சேவை புரிந்து வருகின்றனர் நாச்சிமுத்து - மகாலிங்கத்தின் வாரிசுகள்

No comments:

Post a Comment