Wednesday, 15 April 2020

POL POT DICTATOR OF COMBODIA BORN 1925 MAY 19 -1998 APRIL 15






POL POT DICTATOR OF COMBODIA 
BORN 1925 MAY 19 -1998 APRIL 15

கம்போடியாவில் ஹிட்லரின் ஒரு வாரிசு
August 3, 2010
By தஞ்சை வெ.கோபாலன்

tuol-sleng-survivor-vann-nath-paints-pictures-of-his-tortureஇரண்டாம் உலக யுத்தத்தில் ஜெர்மனியில் நாஜி ஹிட்லரின் உத்தரவின் பேரில் பல லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட வரலாறு உலகத்தாரை அதிர்ச்சியில் உறைய வைத்தது என்பதும் அந்த நாஜி, குற்றவாளிகளனைவருக்கும்- ஆல்ஃபிரட் ஈச்மன் உட்பட அனைவரும்- நியுரம்பர்க் விசாரணையில் மரண தண்டனை வழங்கப்பட்டதும் உலகமே அறியும். ஐரோப்பாவில் நிகழ்த்தப்பட்ட இதுபோன்ற படுகொலை சமீபகாலத்தில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் கம்போடியா என வழங்கப்படும் ஆசிய நாட்டிலும் நிறைவேறியது. அந்தப் படுகொலை ‘போல் பாட்’ (Pol Pat) எனும் சர்வாதிகாரியின் ஆட்சியில் கேமர் ரூஜ் (Khmer Rouge) எனும் இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்டது. ஒரு சிறைக்கூடத்தில் அந்தச் சிறையின் அதிகாரியாக இருந்த ஒருவன் விசாரணை என்ற பெயரில் அப்பாவி கம்போடியர்களைச் சித்திரவதை செய்து கொன்று குவித்திருக்கிறான். பெரியவர்கள் பட்டினியாலும், சித்திரவதையினாலும் மாண்டனர். மற்றவர்கள் கண்முன்னால் அவன் குழந்தைகளைக் கொன்ற விதம் இதயம் கொதிக்கச் செய்யும். குழந்தைகளின் கால்களை ஒன்றாகப் பிடித்துக் கொண்டு அவர்களை தரையில் துணி தோய்ப்பது போல அடித்துக் கொன்றிருக்கிறான். இதை நிகழ்த்திய கொடூரனின் பெயர் காம்ரேட் டுச் (Comrade Duch) என்பது. இவனைப் பற்றி பிறகு பார்ப்போம். இப்போது கம்போடியாவுக்குச் செல்வோம்.

comrade-duchகம்போடியா நாட்டின் எல்லைப் பகுதியிலுள்ள ஒரு சிற்றூர். அங்குள்ள கிராம சர்ச் ஒன்றில் பாஸ்டராக இருக்கும் கிரிஸ்டோஃபர் லாபெல் என்பவர் ஏசு ஊழியம் செய்து கொண்டிருந்தார். கம்போடியா பெரும்பாலும் புத்த மதம் சார்ந்த மக்கள் உள்ள நாடு. அதில் கிறிஸ்தவமும் கால் ஊன்றி வளரத் தொடங்கியது. 1996-ஆம் ஆண்டு அது. அப்போது ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு மனிதன் பாஸ்டர் கிறிஸ்டோஃபரை அணுகிப் பேசத் தொடங்கினான். அவன் குரல் மிகவும் மெல்லியதாகவும் கவனமாகக் கேட்டாலொழிய காதில் விழாத முறையிலும் அவன் பேசினான்.

அவன் தன்னை ஹாங் பின் (Hang Pin) என்றும், தான் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் என்றும் அறிமுகம் செய்து கொண்டான். அவன் தோற்றத்தில் மெலிந்த, குள்ளமான ஆளாக இருந்தான். அவன் பாஸ்டரிடம், அவனது மனைவியை யாரோ சிலர் வீட்டுக்குள் புகுந்த கோரமாகக் கொலை செய்து விட்டார்கள் என்றும், அவனையும் பின்புறம் துப்பாக்கி முனையால் குத்தித் துன்புறுத்தி கொலை செய்ய முயன்றதாகவும் பாஸ்டரிடம் சொன்னான். அவர்களிடமிருந்து தப்பி வந்திருக்கும் அவன் கடவுளின் துணை நாடி பாஸ்டரைத் தேடி வந்திருப்பதாகச் சொன்னான்.

மறுநாள் பாஸ்டர் கிறிஸ்டோஃபர் ஓர் ஆற்றின் நீரோடையின் மத்தியில் நின்றுகொண்டு அவனுக்கு ஞானஸ்நானம் செய்வித்து கிறிஸ்துவனாக மதமாற்றம் செய்தார். புத்த மதத்திலிருந்து அவன் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினான். மதம் மாறியபின் அவன் பைபிளை ஆழ்ந்து படிக்கத் தொடங்கினான். இவனது பைபிள் ஆர்வத்தைப் பார்த்து பாஸ்டரே ஆச்சரியப்பட்டார். இதுபோல் ஆர்வமுள்ள ஒரு கிறிஸ்தவனை தான் பார்த்ததேயில்லை என்பது அவரது எண்ணம். சில நாள்களுக்குப் பிறகு ஹாங் பின் பகுதி நேர மத போதகராக மாறி ஊழியம் செய்யத் தொடங்கினான்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பாஸ்டர் கிறிஸ்டோபர் லாபெல் ஓய்வு பெற்று, தனது சொந்த ஊரான லாஸ் ஏன்ஜலிஸ் நகரத்தில் வாழ்ந்து வந்தார். அப்போது அவருடன் தொலைபேசியில் ஒருவர் பேசினார். அவர் சொன்ன செய்தி– அவரிடம் ஞானஸ்நானம் பெற்ற ஹாங் பின் என்பவன் கம்போடிய நாட்டில் போல் பாட் ஆட்சியில் 17000-க்கும் மேல் மக்களைப் படுகொலை செய்த ஒரு போர்க் குற்றவாளியான காம்ரேட் டுச் என்பவன்.

இந்த காம்ரேட் டுச்-சின் இயற் பெயர் கெயிங் கியூக் ஈவ் (Kang Guek Eav) என்பது. இவன் போல் பாட் ஆட்சியில் கேமர் ரூஜ் இயக்கத்தினர் நடத்திய பயங்கரமான கொடுமைகளின் போது டுவால் ஸ்லெங் (Tuol Sleng)  சிறையின் வார்டனாக இருந்தவன். லாபெல் அசந்து போனார். வாடிய முகமும், இளைத்த உடலும், மெல்லிய குரலுமுடைய தன்னால் ஞான ஸ்நானம் செய்விக்கப்பட்ட அந்த மனிதன் ஒரு பயங்கரமான மனிதனா? ஆயிரக்கணக்கானோரைக் கொன்று குவித்த மகாபாவியா? அவருக்கு அதிர்ச்சி.

கம்போடியாவில் அப்படி என்னதான் நடந்தது, பார்ப்போமா?

tuol-sleng1கேமர் ரூஜ் ஆட்சியில் டுவால் ஸ்லெங் சிறையில் வார்டனாக இருந்த டுச் சுமார் 17,000 பேரின் மரணத்துக்குக் காரணமானவன். இவ்வளவு அதிகமான அப்பாவிப் பொதுமக்களை இந்தக் கொடூரன் கொல்ல என்ன காரணம் என்று வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் ஆராய்ந்து பார்த்தனர். அவர்கள் கணக்குப்படி மொத்தம் நடந்த பல லட்சம் கொலைகளில் இந்த டுச் மட்டும் 17000 கொலைகளுக்குப் பொறுப்பாகிறான். இவன் சிறையில் வார்டனாக இருந்து எப்படி இந்தக் கொலைகளைச் செய்தான்? இந்த வழக்கை விசாரித்த அதிகாரி, நிகழ்ச்சி நடந்த அந்த சிறைக்குச் சென்று அங்கு கிடைத்த எல்லாச் சாட்சியங்களையும் துல்லியமாக ஆராய்ந்தார். அங்கு சிறையில் அடைக்கப்பட்ட பொதுமக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை வெளிக் கொணர்ந்திருக்கிறார். சிறையில் மக்கள் துன்புறுத்தப்பட்டனர்; சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர். இவை எல்லாவற்றையும் இந்த டுச் கணக்கு வைத்திருக்கிறான்.

இவனுக்கு மிகவும் பிடித்த சித்திரவதை கைதியைத் தலை கீழாகத் தொங்கவிட்டு அவன் தலை முகம் இவை சிறுநீரால் நிரப்பப்பட்ட தொட்டியில் மூழ்கும்படி வைத்து அடித்துத் துன்புறுத்துவது.

tuol-sleng2குழந்தைகள் விஷயத்தில் இவன் காட்டுமிராண்டிகளைவிட கேவலமாக நடந்து கொண்டான். அந்த குழந்தைகளின் இரண்டு கால்களையும் சேர்த்துப் பிடித்துத் தூக்கி அவர்கள் தலை சிதறும்படி தரையில் அடிக்கச் செய்வான். மூளை சிதறி ரத்தமும் நிணமுமாகக் குழந்தைகள் தன் காலடியில் கிடப்பதைக் கண்டு அவன் மகிழ்ச்சியடைந்தான். தன்னை ஒரு பெரிய சாதனையாளனாக முன்னிருத்திக் கொள்ளவேண்டுமென்கிற வெறி அவனுக்கு. அவன் கொடுமை புரிந்த அந்தச் சிறைச் சாலைக்கு சில அமெரிக்க பத்திரிகையாளர்கள் சென்றார்கள். அங்கு சுவற்றிலெல்லாம் அங்கு நடந்த கொடுமையின் சின்னமாக ரத்தக்கறை படிந்து கிடப்பதைக் கண்டனர். மேலும் சுவர்களில் சில சித்திரங்கள். அவை அனைத்தும் அந்தச் சிறையில் பசியும் பட்டினியுமாகக் கிடந்த மக்களின் படங்கள். இதை வரைந்தது ஓர் ஓவியன். அங்கு கைதியாக அடைபட்டிருந்தவன். அவன் உயிரை இவர்கள் போக்காததற்குக் காரணம் அவனிடம் அடிக்கடி போல் பாட்டின் போட்டோ ஒன்றைக் கொடுத்து அதுபோல வரையச் சொல்லுவார்கள். அவனும் வரைந்து கொடுப்பான். அவன் ஒருவன்தான் கொலைக்கு ஆளாகாமல் வெளியே வந்த ஒரே சாட்சி. இன்று நீதிமன்றத்தில் தனது இயலாமையையும் பொருட்படுத்தாமல் டுச்-குக்கு எதிராகச் சாட்சியமளித்திருக்கிறார்.

டுச் சிறையில் உள்ளவர்களை ஒவ்வொருவராக விசாரணைக்கு உட்படுத்துவான். அவன் அவற்றை எழுதி அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனைகளையும் எழுதிக் கையெழுத்திடுவான். அந்த ஆவணங்களே இன்று அவனுக்கு எதிரான முக்கிய சாட்சியாக அமைந்துவிட்டன. இனி இதன் பின்னணியைப் பார்ப்போம்.

கம்போடியா என்றும் பின்னர் கம்பூச்சியா என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்தச் சிறிய நாடு கிழக்காசியக் கண்டத்தில் தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகள் சூழ்ந்த சின்னஞ்சிறிய நாடு. நம் கேரள மாநிலத்தின் அளவுதான் இருக்கும். இதன் தலைநகரம் நாம்பென் எனும் ஊர். மலேசிய தீபகர்பத்தின் வடக்கில் தாய்லாந்து வளைகுடாவின் கரையில் அமைந்தது. 93 லட்சம் ஜனத்தொகை கொண்டது. இந்த நாடு மன்னராட்சியின் கீழ் இருந்தது. நரோத்தம் சிகானோக் என்பது மன்னரின் பெயர். இங்கு 1975-ஆம் ஆண்டில் போல் பாட் எனும் ராணுவத் தளபதி தன்னுடைய கேமர் ரூஜ் எனும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை கம்போடியாவில் தொடங்கினான். நாட்டின் பெயரை கம்பூச்சியா என்று மாற்றினான்.


1975-இல் தொடங்கி இந்த போல் பாட்டின் ஆட்சியினர் சுமார் இருபது லட்சம் கம்போடிய மக்களைக் கொன்று குவித்தனர். கிட்டத்தட்ட ஜனத்தொகையின் நாலில் ஒரு பங்கு துடைத்தெறியப்பட்டது. இதெல்லாம் அரசியல் சார்ந்த படுகொலைகள் மூலமும் பட்டினி போட்டும் கட்டாயப் படுத்திய உடல் உழைப்பின் காரணமாகவும் கொன்று போட்டார்கள். குறுகிய காலத்தில் இருபது லட்சம் பேர் கொலை என்றால் அது சமுதாயக் கொலையாகக் (genocide) கருதப்பட வேண்டும். அந்த காலகட்டத்தில் அதாவது சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்தச் செய்திகளெல்லாம் கம்போடியன் பேரழிவு (Cambodian Holocaust) என்றும் கம்போடியன் மக்கள் படுகொலை (Cambodian Genbocide) என்றும் விரிவாகப் பேசப்பட்டது. இந்த படுகொலைகளெல்லாம் ஒரு முடிவுக்கு வரக் காரணமாக அமைந்தது அந்த நாட்டின் மீது அண்டை நாடான வியட்நாமின் படையெடுப்பு. அதன் பிறகு சுமார் பத்தாண்டுகள் அங்கு வியட்நாமியர் ஆட்சி நிலவியது.

pol-potபோல் பாட், கம்போடிய ஆட்சியைக் கைப்பற்றியவுடன் அடுத்த செய்த காரியம் நகரங்களை விட்டு மக்கள் கிராமங்களுக்குப் போக வேண்டும். அங்கு குடியிருந்து விவசாயத்தை மட்டும் அவர்கள் பார்க்க வேண்டும் என்பது. இது லெனின் உருவாக்கிய பத்து அம்சத் திட்டத்தின் முதல் பாடமாகும். அதை போல் பாட் மிகத் துல்லியமாகக் கடைபிடித்தான். முதலில் மக்களை நகரங்களை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொண்டான், பிறகு கட்டாயப்படுத்தி அவர்களை
வெளியேற்றினான். இருபத்தைந்து லட்சம் மக்கள் தொகை கொண்ட நாம்பென் நகரம் கிட்டத்தட்ட வெறிச்சோடிப் போயிற்று. தலைநகரம் மட்டுமின்றி மற்ற பல நகரங்களிலிருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டு கிராமங்களில் தஞ்சமடைந்தார்கள். அங்கு அவர்களுக்குப் போதிய குடியிருப்பு வசதியோ மற்ற எந்த வசதிகளுமில்லாமல் அவர்கள் அநாதைகளாக ஆக்கப்பட்டார்கள்.

நாம்பென் நகரத்து மருத்துவமனைகளிலிருந்து நோயாளிகள் விரட்டப்பட்டனர். மிகவும் முடியாதவர்களை வாகனங்களிலும் மற்றவர்களை கால்நடையாகவும் வெளியேறச் செய்தனர். அப்படி நகரங்களிலிருந்து வெளியேறும் மக்களுக்கு வழியில் உணவுக்கு வசதி இல்லை. மிகக் குறைந்த அளவே சேமித்து வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள்கள் மிகச் சிலருக்குக்கூடப் போதுமானதாக இல்லை. அப்படி நாம்பென் நகரத்திலிருந்து குடிபெயர்ந்து அநாதைகளான மக்களில் 2000 முதல் 3000 பேர் வரை வழியில் மாண்டுபோனார்கள். அங்கு வாழ்ந்த வெளிநாட்டவர் சுமார் 800 பேர் அங்கிருந்த பிரெஞ்சு தூதரகத்தில் தஞ்சம் புகுந்தனர். இரண்டாம் உலக யுத்தத்துக்கு முன்பு கம்போடியா, வியட்நாம் முதலான நாடுகள் பிரெஞ்சு காலனிகளாக இருந்தவை. வெளிநாட்டவர்கள் வாகனங்களின் மூலம் தாய்லாந்து எல்லைக்குக் கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டனர்.

வெளிநாட்டவரை மணந்து கொண்ட கம்போடியப் பெண்கள் தங்கள் கணவன்மார்களுடன் அவர் நாட்டுக்குச் செல்ல அனுமதித்தனர். ஆனால் வெளிநாட்டுப் பெண்களை மணந்துகொண்ட கம்போடிய ஆண்கள் தங்கள் அயல்நாட்டு மனைவியருடன் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த அராஜகத்தை அமெரிக்காவும் கண்டித்தது. தனது விமானப் படை, தாக்குதல் நடத்தும் என்று எச்சரித்தும் கேமர் ரூஜ் நிர்வாகம் அதற்குப் பயப்படவில்லை. நகரத்தில் வாழும் முப்பது லட்சம் மக்களுக்கு உணவுப் பொருள்களை கிராமங்களிலிருந்து கொண்டு சேர்க்க முடியாததால் நகரங்கள் காலி செய்யப்பட வேண்டுமென்பது அவர்களது வாதம். நகரத்திலிருந்து வெளியேறும் மக்கள் கிராமப் புறங்களில் தாங்களாகவே பயிரிட்டு அதில் விளந்த தானியங்களைத்தான் சாப்பிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். சேமிப்புக் கிடங்கில் தேவையான அளவு உணவுப் பொருள்கள் இருந்தாலும் அவை வெளியே எடுக்கப்படவில்லை.

அயல்நாட்டுப் பத்திரிகையாளர்கள் இந்த நிலைமைகளை ஆராய்ந்தபின் வெளியிட்ட கருத்து, இந்த கேமர் ரூஜ் இயக்கத்தாரின் அரசியல் கோட்பாடுகளின்படி இவர்கள் நகரவாசிகளை வெறுப்பவர்கள். நாட்டை முழுவதுமாக விவசாயம் சார்ந்த நாடாக ஆக்கவேண்டுமென்பது இந்த இயக்கத்தாரின் எண்ணம். ஊழலை ஒழிப்பதாகவும், கிராமத்தைச் சார்ந்து வாழும் நகரங்கள் ஒழிக்கப்படுமென்பதும் இவர்களது பிரகடனம். கேமர் ரூஜ் இயக்கத்தின் எதிரிகள் நகரத்தில்தான் பதுங்கிக் கிடக்கிறார்கள். அவர்களை முதலில் ஒழித்தாக வேண்டுமென்பது போல் பாட்டின் எண்ணம்.

கம்போடியாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியை நிறுவிய போல் பாட்டின் அட்டகாசத்தை ஒப்பிடும்போது ரஷ்யா, சீனா அல்லது வியட்நாமில் கூட இதுபோன்ற அக்கிரம முறைகளை அவர்கள் கையாளவில்லை என்பது தெரியும். கம்போடியாவில் போல் பாட்டின் ஆட்சிக்கு முன்பு அங்கு விவசாயிகள், தொழிலாளர்கள், முதலாளிகள், நிலவுடைமையாளர்கள் மற்றும் பிரபுக்கள் என்று பல பிரிவினர் இருந்தனர்; நம் நாட்டில் இருப்பது போல. போல் பாட்டின் ஆட்சி வந்த பிறகு 1976-இல் கம்பூச்சியன் குடியரசு ஆட்சியில் தொழிலாளர்கள், விவசாயிகள் என்று இரண்டே பிரிவுகள்தான் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டது. அனைத்து கம்போடிய மக்களும் உழைப்பாளிகள். இந்த மாற்றத்தை ஏற்படுத்த எந்தவித கால அவகாசமும் கொடுக்கப்படவில்லை. சீனாவில் கம்யூனிஸ்ட் புரட்சி ஏற்பட்ட பிறகு அங்கு அவர்களுக்குச் சாதகமாக இருந்த நிலப்பிரபுக்களும், முதலாளிகளும் வழக்கம் போல செயல்பட்டு புதிய சீனா அமைப்பதில் பங்கு வகிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கம்போடியாவில் அந்த நிலை இல்லை.

கம்போடிய மன்னர் 1975-இல் தெரிவித்த ஒரு செய்தி- கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் சிலருடன் மன்னர் சீனா சென்று சீனப் பிரதமர் சூஎன்லாயைச் சந்தித்தார். அவர் அப்போது உடல் நலம் குன்றி இருந்தார். சூஎன்லாய் அப்போது கம்போடிய கம்யூனிஸ்ட்டுகளைப் பார்த்து ஒரேயடியாக கம்யூனிசத்தைத் திணிக்க முயலாதீர்கள் என்று சொன்னார். இவர்கள் பதிலேதும் சொல்லாமல் புன்னகை புரிந்தார்கள். அதாவது அவரது புத்திமதியை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது அந்தப் புன்னகையின் பொருள்.

skulls-khmer-rouge

போல் பாட்டின் ஆட்சியில் நடந்த கொடூரங்களும் அக்கிரமங்களும் படுகொலைகளும் அவனது ஆட்சியில் வியட்நாமியப் படையெடுப்புக்குப் பிறகுதான் வெளிவந்தது. வியட்நாம் வெற்றி பெற்று கம்பூச்சியாவில் ஆட்சி நிறுவியபோது மேற்படிக் கொடுமைகளில் உயிரிழப்பும், நடந்த கொடுமைகளும் கணக்கிடப்பட்டது. அதில் சுமார் 33 லட்சம் பேர் இறந்து போனதாகத் தெரிவிக்கப்பட்டது. அதாவது கம்போடிய ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு அழிக்கப்பட்டுவிட்டது. இந்த புள்ளி விவரம் பல்வேறு மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்களாலும் கூட்டியும் குறைத்தும் சொல்லப்படுகிறது என்றாலும் படுகொலையில் பல லட்சம் பேர் உயிரிழந்தது உண்மை என்பது தோண்டப்பட்ட பல சவக்குழிகளில் கிடைக்கும் மண்டை ஓடுகள் எலும்புகளிலிருந்து வெளியாகியது.

1979-இல் கேமர் ரூஜ் ஆட்சி வியட்நாம் படையெடுப்புக்குப் பின் தூக்கி எறியப்பட்ட பிறகு டுச் தலை மறைவானான். எங்கோ ஒரு சிறு கிராமத்துக்குப் போய் தன் பெயரை ஹாங் பின் என்று மாற்றிக்கொண்டு, அங்கு ஒரு திருமணம் செய்துகொண்டு நான்கு குழந்தைகளுக்கும் தந்தை ஆனான். அங்கு ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகவும் மிகவும் நல்லவன் போல இருந்து வந்தான்.

1970-இல் ஸ்தாபிக்கப்பட்ட மன்னர் நரோத்தம் சிகானோக்கின் மன்னரின் கீழுள்ள ஜனநாயக ஆட்சி 1976-இல் கம்யூனிஸ்ட்டுகளால் நீக்கப்பட்டுவிட்டது. ஒரு சில மாதங்களில் மன்னர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். வியட்நாம் படையெடுப்புக்குப் பின்தான் மன்னர் விடுவிக்கப்பட்டார். போல் பாட் தனது வலது கரம் போல செயல்பட்ட சோன்சன் என்பவனை படுகொலை செய்தான். பிறகு 1998-இல் போல் பாட்டும் இறந்து போனான். அவன் இறப்புக்குப் பின் கேமர் ரூஜ் காலத்தில் நடந்த அராஜகங்கள், படுகொலைகளுக்காகச் சிலர் கைது செய்யப்பட்டனர். அதில் இந்த டுச் என்பவனும் ஒருவன். இவன் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி, எப்போதும் பைபிளும் கையுமாக இருந்து கொண்டு தனக்கு இடப்பட்ட கட்டளை நிறைவேற்றியதைத் தவிர தான் குற்றவாளி அல்ல என்று கூறி வருகிறான். ஆனால் விசாரணையின் தொடக்கத்தில் இவன் தன் செயல்களுக்கு வருந்தியும் குற்றங்களை ஒப்புக்கொண்டுமிருந்தான். இந்த வழக்கின் தீர்ப்பு 2010 ஜூலை மாதம் 26-ஆம் தேதி வெளிவந்தது.

duch-in-courtஇந்த டுச்-சின் பெயர் ‘கைங் கியுக் ஈவ்’ என்று முன்னமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவன் மீது விசாரணை 2009 மார்ச் மாதம் 30-ஆம் தேதி தொடங்கியது. ஜெர்மனியின் நியூரம்பெர்க் விசாரணையைப் போல இந்த யுத்த குற்றவாளிகள் மீதும் விசாரண நடந்தது. டுச் கைது செய்யப்பட்டு சிறையில் எட்டு ஆண்டுகள் இருந்த பின்னர்தான் விசாரணை தொடங்கியது. முதலில் இவன் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு தன்னால் பாதிக்கப்பட்ட அனைவரின் மன்னிப்பையும் வேண்டினான். இருந்த போதிலும் விசாரணை இறுதி கட்டத்தை அடைகின்ற போது அவன் தனது நிலையை மாற்றிக் கொண்டு தான் தனது உயர் அதிகாரிகளின் ஆணையைத்தான் செயல்படுத்தியதால் தன்னை விடுவிக்க வேண்டும் என்று கேட்கத் தொடங்கி விட்டான். இவன் மற்றொரு ஸ்டண்டும் அடித்தான். தனது பிரெஞ்சு வழக்கறிஞரை மாற்றி ஒரு சீன வக்கீலை அமர்த்திக் கொண்டான். சீனா கம்யூனிஸ்ட் நாடு என்பதால் சீன வக்கீலால், தான் ஆதாயம் அடைய முடியுமென்று இவன் நம்பினான். இவன் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு 45 ஆண்டுகள் தண்டனை கிடைக்கலாம். இப்போது 67 வயதாகும் இந்த குற்றவாளி, மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், யுத்தகால அராஜகங்கள், கொலை, சித்திரவதை செய்தது போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக விசாரிக்கப்பட்டான்.

இந்தக் கட்டுரையின் முற்பகுதியில் சொன்னபடி இவன் ஒரு சின்னஞ்சிறு கிராமத்துக்குச் சென்று தன்னை பள்ளி ஆசிரியர் என்று சொல்லி தன் மனைவி கொல்லப்பட்டுவிட்டதால் தான் கிறிஸ்தவனாக மாறவிரும்புவதாகச் சொல்லி மதமாற்றம் செய்து கொண்டான். எட்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அவன் என்ன செய்து கொண்டிருந்தான்? எப்போதும் பைபிளும் கையுமாக இருந்தான். அவனுடன் சிறையில் இருக்கும் மற்ற கைதிகளுக்கும் இயேசு கிறிஸ்துவின் பெருமையை விளக்கிக் கொண்டிருக்கிறான். கம்போடியாவிலுள்ள புத்த பிட்சுக்கள் இவன் கிறிஸ்தவனாக மாறியதே வழக்கிலிருந்து தப்பிக்கத்தான் என்கின்றனர். இவன் செய்த பாவம் இவன் எத்தனை பிறவி எடுத்தாலும் பின் தொடரும் இவன் ஓர் ஈனப் பிறவியாகத்தான் பிறப்பான் என்கின்றனர்.

comrade-duch-and-his-workஆனால் அமெரிக்காவிலுள்ள நியு ஆர்லியன்ஸில் உள்ள குட் ஷெப்பர்டு பாப்டிஸ்ட் சர்ச்சின் பாதிரியார் பாஸ்டர் கோன்ஸ்லாவ் ரோட்ரிக் என்பவர் குற்றம் செய்தவன் தன் குற்றங்களிலிருந்து மீட்டெடுக்க முடியும் என்று பைபிள் கூறுவதாகச் சொல்கிறார். கடவுளால் மன்னிக்க முடியாத குற்றம் எதுவும் கிடையாது என்கிறது பைபிள் என்கிறார் இந்த பாஸ்டர். நீ குற்றத்தை உணர்ந்து மன்னிப்பு கேட்டால் நாட்டின் சட்டங்கள் உன்னைத் தண்டித்தாலும் கடவுள் மன்னிப்பார் என்கிறார்.

சிறையில் இருந்து கொண்டு 26-7-2010-இல் தெரியவிருக்கும் தனது வழக்கின் தீர்ப்பு பற்றி டுச் சொல்வது, “நான் விசாரணைக்குத் தயார். நடந்தவைகளை நீதிமன்றத்தில் கூறுவேன். உண்மைகளை உள்ளபடி சொல்வேன். உண்மை என்னை சிறைக்கு வெளியே கொண்டு வரும்,” என்கிறான். 

ஜெர்மனியின் நாஜி போர்க்குற்றவாளிகளுக்கு, ஆல்பிரட் ஈச்மன் போன்றவர்களுக்குக் கிடைத்தது போல தண்டனை கிடைக்குமா, அல்லது அவன் நம்புவது போல அவனுக்கு விடுதலை கிடைத்து விடுமா என்று உலகமே தீர்ப்பை எதிர்பார்த்துக்கொண்டிருந்தது.

judgementஐக்கியநாடுகள் சபை மற்றும் பல இயக்கங்கள் சார்பில் கம்போடியாவில் நடைபெற்ற விசாரணையின் முடிவில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ப‌தினையாயிரத்துக்கு மேற்பட்ட மக்களை, இரக்கமின்றி கொடுமையாகக் கொன்ற காம்ரேட் டுச்-சுக்கு ஒருவழியாக கடந்த 27ம் தேதியன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றவாளிக்கு பத்தொன்பது ஆண்டுகள் சிறைவாச தண்டனை அளிக்கப் பட்டிருக்கிறது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பலரும் இந்தத் தண்டனை மிகவும் குறைவு என்றும், அவனுக்கு மரண தண்டனை அளிக்கப் பட்டிருக்க வேண்டுமென்றும் கூறினர். தீர்ப்பு வழங்கியபோது குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தான். அவன் தனக்கு இறைவனின் மன்னிப்புக் கிடைத்துவிடும் என்று உறுதியாக நம்பியிருந்தது தகர்ந்து விட்டது.

ஆனால் இது போதாது. இனி உலகில் இதுபோன்ற கொடுமையாளர்களுக்கு அச்சம் ஏற்படும் விதத்தில் தண்டனைகள் மிகக் கடுமையாக இருக்க வேண்டும்; அப்போதுதான் இதுபோன்ற மனித உரிமைகளுக்கு எதிரான வன்குற்றங்கள் கட்டுக்குள் இருக்கும்.

Tags: Comrade Duch, Hang Pin, Kang Guek Eav, Khmer Rouge, Tuol Sleng, அராஜகம், ஐக்கியநாடுகள் சபை, கம்பூச்சியா, கம்போடியன் பேரழிவு, கம்போடியா, கம்யூனிசத் திணிப்பு, காம்ரேட் டுச், கிறிஸ்தவம், கெயிங் கியூக் ஈவ், கேமர் ரூஜ், சமுதாயக் கொலை, சர்வாதிகாரி, சிறைதண்டனை, சூஎன்லாய், டுவால் ஸ்லெங் சிறை, தீர்ப்பு, நரோத்தம் சிகானோக், நாம்பென் நகரம், படுகொலை, படையெடுப்பு, பத்து அம்சத் திட்டம், பாவ மன்னிப்பு, பாஸ்டர் கிறிஸ்டோஃபர் லாபெல், பாஸ்டர் கோன்ஸ்லாவ் ரோட்ரிக், புத்த மதம், போல்பாட், மத போதகர், லெனின், விசாரணை, வியட்நாம், ஹாங் பின், ஹிட்லர்



.

No comments:

Post a Comment