Sunday, 12 April 2020

GEMINI GANESAN ,LEGEND OF TAMIL CINEMA


GEMINI GANESAN ,
LEGEND OF TAMIL CINEMA



..காற்று எப்போதும் ஒரே திசையில் வீசிக் கொண்டிருக்காது, திசை மாறும். உறவு முந்தி வந்தால், பிரிவு பின்னால் வரும்.
காதல் சிறகை காற்றினில் விரித்து, வான வீதியில் பறந்த, கணேசன் - புஷ்பவல்லி எனும் ஜோடி, திசை மாறின.
நடிகை, புஷ்பவல்லி, கணேசனை கண்டதும், காதல் கொண்டதும், அந்தக் காதல் கொடி எவ்வளவு வேகமாக மேல் நோக்கி படர்ந்ததோ, அதே வேகத்துடன் இறங்கியது.
நான்கு ஆண்டுகள் தொடர்ந்த அவர்களின் காதல் ராஜ்ஜியம், மூன்றாம் ஆண்டின் இறுதியில், முறிந்தே போனது.
அவர்கள் காதலின் நினைவாக, ரேகா, ராதா என, இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.

தெலுங்கிலும், தமிழிலும், கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார், புஷ்பவல்லி. கணேசனோ சிறு சிறு வேடங்களில் தோன்றி, வில்லன், இரண்டாம் நாயகன் என்று வளர்ந்து, 10வது படத்தில் தான், கதாநாயகன் ஆனார்.
'உங்களின் காதல் முறிவுக்கு பின்னால் இருப்பது யார்...' என, ஒரு பேட்டியில், ஜெமினி கணேசனிடம் கேட்ட போது, அவரது மனம் திறந்த பதில்:
புஷ்பவல்லி, என்னை அடைவதிலும், தன்வசப்படுத்திக் கொள்வதிலும் கொண்டிருந்த ஆர்வமும், அவசரமும், என்னை விட்டுப் பிரிவதிலும் இருந்தது. நான்கு ஆண்டு நட்பை, என்னைப் புரிந்து கொள்ளாமலேயே, காதலை முறித்துக் கொண்டார், என்றார்.
அடுத்து, ஜெமினி கணேசன் வாழ்வில், இன்னொரு சுந்தரத் தெலுங்கு அழகி நுழைந்தார்.
'ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை...' என்று, கண்ணதாசன் பாடியது போல, இன்னொரு பெண், தன் காதலன் வாழ்வில் வந்தால், பெண்கள் என்ன செய்வரோ, அதைத் தான் செய்தார், புஷ்பவல்லி. கணேசனின் புதிய காதலால் வருத்தமுற்று, ஒதுங்கிக் கொண்டார்.
ஜெமினி நிறுவனத்தில், நட்சத்திரங்களை தேர்வு செய்யும் பொறுப்பாளராக கணேசன் இருந்த சமயத்தில், 12 வயது நிரம்பிய, ஒரு அழகிய சிறுமியை அழைத்து வந்தார், ஆந்திரக்காரரான, கே.வி.சவுத்ரி.
'இவள், என் மகள், நடனமும், நடிப்பும் வரும். நடிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும்...' என, கேட்டார்.
அந்தப் பெண் கொஞ்சம் மாநிறத்தில் இருந்தாள். அவளுடைய குறுகுறுப்பான கண்களும், துறுதுறுவென்ற சுபாவமும், அவள் சரளமாக தமிழ் பேசிய அழகும், கணேசனை வெகுவாக ஈர்த்தன.
அவளாகவே சில வசனங்களை பேசி, நடித்துக் காட்டினாள். அவள் பேச்சில், சிரிப்பில், நடிப்பில் ஒரு நளினம், அழகு இருந்தது. குச்சுப்புடி நடனம் ஒன்றை, அழகாக ஆடிக் காட்டினாள்.
நடிப்பின் மேல் அவள் கொண்டிருந்த ஈடுபாடும், அதில் இருந்த நேர்த்தியையும், பார்த்த கணேசன், 'இவளுக்கு வாய்ப்பு கொடுத்தால், நல்ல நடிகையாக வருவதற்கான அறிகுறிகள் இருக்கின்றன. உதடுகள் பேசாமலேயே பேசுகின்றன. வருங்காலத்தில், இவள் ஒரு சிறந்த நடிகையாக வருவாள்...' என்று, அவளது விண்ணப்பத்தில் குறிப்பு எழுதி, அனுப்பி வைத்தார்.
அப்போது, ஜெமினி நிறுவனத்தில் தயாரான படங்களில் அந்தப் பெண்ணுக்கு எந்த வேடமும் கொடுக்க முடியவில்லை.
ஜெமினி ஸ்டூடியோவை விட்டு விலகிய நிலையில், பெண் என்ற படத்தில், ஜெமினி கணேசனை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்திருந்தார், ஏவி.எம்., செட்டியார்.
ஒரு நாள், ஏவி.எம்., ஸ்டூடியோவில், கணேசனை சந்தித்த, கே.வி.சவுத்ரி, 'என் மகளுக்கு, நீங்கள் தான் வாய்ப்பு கொடுக்கவில்லை. அவளை, தேவதாஸ் படத்தில், நாகேஸ்வர ராவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்.
ஏவி.எம்., செட்டியார் கூட, ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார்...' என்றார்.

'அப்படியா... ரொம்ப நல்ல விஷயம்...' என்ற கணேசன், அருகில், புன்னகை பூத்த முகத்துடன் நின்று கொண்டிருந்த அப்பெண்ணை பார்த்தார்.
மூன்றாண்டு இடைவெளி, அவளை மேலும் அழகியாக மாற்றியிருந்தது, இயற்கை. கண்களால் கவிதை பேசும் அந்த பேரழகி தான், சாவித்திரி. அவளை பார்த்ததும், கணேசனுக்குள் என்னமோ செய்தது. மீண்டும் ஒரு காதல் ஆரம்பம்.








மனம் போல் மாங்கல்யம் படப்பிடிப்பின் இடைவேளையில், ஜெமினிகணேசன் உட்காருவதற்காக, ஈசி சேர் போடப்பட்டிருந்தது. அந்த ஈசி சேரின், உருளையை உருவி எடுத்து விட்டு, துணியை மூடி வைத்து விட்டார், குறும்புக்கார பெண், சாவித்திரி.
இது தெரியாத, ஜெமினி, ஈசி சேரில், 'ஹாயாக' சாய்ந்தவர், 'டமால்' என்று விழுந்தார். முதுகில் நல்ல அடி.
'அய்யோ... என்ன இப்படி செய்திட்டே... கணேஷ் மண்டை உடைந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்...' என்று, சாவித்திரியை கண்டித்தார், இயக்குனர் புல்லையா.
தன் குறும்புத்தனத்தால், விபரீத விளைவு ஏற்பட்டதை கண்டு கலங்கினார், சாவித்திரி; அடிபட்ட ஜெமினியே, சமாதானம் செய்தார்.
கணேசனின் தலையை தடவிக் கொடுத்து, 'நான் விளையாட்டாக செய்தேன்; உங்களுக்கு பலமாக அடிபட்டு விட்டதா...' என்று, அப்பாவியாக மன்னிப்பு கேட்டார், சாவித்திரி.
கடந்த, 1953ல், தீபாவளி அன்று வெளிவந்த, மனம் போல் மாங்கல்யம் படம், மாபெரும் வெற்றி பெற்றது. அந்த வெற்றியோடு, தனக்கும், சாவித்திரிக்கும் இடையில் மலர்ந்த காதலையும் வெளிப்படுத்தினார்.
'மனம் போல் மாங்கல்யம் படத்தில், என் வேடம் மனதுக்கேற்றபடி அமைந்ததுடன், எனக்கு ஒரு மனைவியும் கிடைத்தாள்; சாவித்திரியை சந்தித்தேன்; பின்னாளில் வாழ்க்கையில் இணைந்தோம்...' என்று, அந்த மகிழ்ச்சியை பதிவு செய்திருந்தார், கணேசன்.
அடுத்து, பி.நாகிரெட்டி - சக்கரபாணி தயாரிப்பில், மிஸ்ஸியம்மா படத்தில், ஒப்பந்தமானார், ஜெமினி. இதில், முதலில், கதாநாயகியாக ஒப்பந்தமானவர், பானுமதி. சக்கரபாணிக்கும், அவருக்கும் ஏதோ பிரச்னை வர, பானுமதி விலகிக்கொள்ள, ஜெமினியின் ஜோடியானார், சாவித்திரி.
அப்போது, அவர்கள், நிஜ காதலர்களாகவே சினிமாவிலும் நடித்துக் கொண்டிருந்தனர்.

மிஸ்ஸியம்மா படத்தின் மாபெரும் வெற்றி, அந்த ஜோடியை, தொடர்ச்சியாக, 10 படங்களுக்கு மேல் ஒப்பந்தம் செய்தது. இவர்களின் காதல், மணம் வீச துவங்கியது.
புஷ்பவல்லி, கணேசனின் குழந்தைக்கு தாயான நேரத்தில், ஜெமினியும், சாவித்திரியும் ரகசிய திருமணம் செய்து, ரகசியமாகவே வாழத் துவங்கி விட்டனர். இதுகுறித்து, சாவித்திரி கூறுகையில்...
'நானும், அவரும் திருமணம் செய்து கொண்டோம். என் வீட்டில் யாருக்குமே தெரியாது. உலகிற்கும், எங்கள் உறவு புரியாத நேரம். நாங்கள் நடித்த, மனம் போல் மாங்கல்யம் படம், தீபாவளியன்று வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்றது.
'படம் பிரமாதமான வரவேற்பை பெற்று, எங்களது நடிப்பு, பாராட்டப் படவே, அவரே, என் வீட்டுக்கு இதை சொல்ல வந்தார். நான், அப்போது மாடியில் இருந்தேன். என் தந்தை கீழே இருந்தால், நான் வீட்டை விட்டு வெளியே போகவும் முடியாது, அவருடன் பேசவும் முடியாது.
'அன்றைய தினம் மட்டும், இந்த படத்தை ஒரு சாக்காக வைத்து, என்னை நேரில் சந்தித்து, இரண்டு வார்த்தை பேசி போகவே, நான்கு முறை வந்தார் என்பதை தெரிந்து கொண்டேன். ஆனாலும், ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை.
'அன்றிரவு தொலைபேசியில், 'இப்படி தான், உன் தீபாவளி இருக்கணும்ன்னு ஆண்டவன் எழுதி வைத்து விட்டான் போலிருக்கு...' என்று, அவர் சொன்னபோது, என்னால் துக்கத்தை அடக்க முடியவில்லை. 'அழாதே சாவித்திரி... எல்லாரும், தீபாவளியன்று, சிரித்து, சந்தோஷமாக இருக்காங்க... நீ அழுதுகிட்டு இருக்கலாமா... அடுத்த தீபாவளியை, நாம் பிரமாதமாக கொண்டாடுவோம்...' என்று, ஆறுதல் கூறினார்.
'என்னை பொறுத்தவரை, அவர் வாங்கிக் கொடுத்த புடவையை அன்று கட்டிக் கொண்டதில், சிறு திருப்தி கிடைத்தது. எனக்கு வெள்ளை புடவை என்றால் ரொம்ப பிடிக்கும் என்பதை அறிந்த அவர், 'பம்பாய் பார்டர்' போட்ட வெள்ளை புடவையை, தீபாவளிக்காக வாங்கிக் கொடுத்திருந்தார். இது, வீட்டில் யாருக்கும் தெரியாது. தீபாவளியன்று, ஸ்நானம் செய்ததும், அந்த புடவையை கட்டிக் கொண்டேன்.
'என் தாயார், தகப்பனார் உட்பட அனைவரும், 'தீபாவளியும், அதுவுமா இந்த வெள்ளை புடவை தானா உனக்கு கிடைத்தது...' என்று, கடிந்து கொண்டனர். அவர்களுக்கு தெரியுமா, அந்த புடவைக்கு பின்னால் இருக்கும் மதிப்பும், காதலும். 'படப்பிடிப்பு தான் இல்லையே... வீட்டில் இருப்பதற்கு இது போதாதா...' என்று மழுப்பி விட்டேன்.
'வெள்ளை புடவை அணிந்து, நான் மாடியில் நின்றதை, காலையில் அவர் வந்தபோது, பார்த்து விட்டார். ரொம்ப மகிழ்ச்சியடைந்து, பின்னர், போனில் பேசும்போது அதை குறிப்பிட்டார். 'சாவித்திரி... வெள்ளை புடவையில், நீ மாடியில் நின்றபோது, ஷேக்ஸ்பியர் வர்ணித்த ஜூலியட் மாதிரியே இருந்தாய்... அதில் வரும், 'ரோமியோ' எப்படி கீழே இருந்தானோ, அப்படி நான் இருந்துட்டேன். காதலர்கள் என்றால் இப்படித்தான் இருக்கணும்...' என்றபோது, எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை.
'கடைசியில் அவர், 'தீர்க்க சுமங்கலியாக இருக்கணும்...' என்று, தொலைபேசியில் வாழ்த்தியபோது, என் கைகள் இரண்டும் என்னை அறியாமலேயே, தொலைபேசியின் மறுபக்கத்தில் இருக்கும் கணவரை உருவகப்படுத்தி, அந்த ரிசீவருக்கு என் வணக்கத்தை தெரிவித்து கொண்டேன்...' என்று, சாவித்திரி சொல்லியிருக்கிறார்.
ஜெமினி கணேசன் - சாவித்திரி காதல் விஷயம் தெரிந்தபோது, சாவித்திரியின் பெரியப்பா கொதித்தெழுந்தார்.

No comments:

Post a Comment