Wednesday, 7 November 2018

MALCOM X - REVOLUTIONIST OF BLACK AMERICANS,KILLED BY NATION OF ISLAM






MALCOM  X - REVOLUTIONIST 
OF BLACK AMERICANS,KILLED BY NATION OF ISLAM



“கறுப்பின சமூகத்தின் மீது நடக்கும் கொடுமைகளை ஏற்றுக்கொண்டும், நாசுக்கோடும் நடந்து கொள்பவர்கள் மனிதகுலத்தில் கோழைத்தனத்திற்கான உதாரணங்களாக அவர்களின் பெயர்கள் வரலாற்றில் பதிவாகும்’’.

Malcom X மால்கம் எக்ஸின் வரிகள் இவை

அமெரிக்காவின் அதிகார மையத்தின் நாற்காலியை நடுநடுங்க வைத்த கறுப்பின போராளி மால்கம் எக்ஸ். இவரின் வரலாற்றை எழுத்தாளர் ரவிக்குமார் எளிய மொழிநடையில் எழுதியுள்ளார். மிகவும் நேர்த்தியாக காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

“பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கத் தடை, பூங்காக்களில் விளையாடத் தடை, பேருந்தில் ஒன்றாக பயணிக்கத் தடை, கறுப்பர்கள் பள்ளியில் படிக்கத் தடை’’ இவையனைத்தும் நம்நாட்டில் தலித்துகளுக்கு எதிராக நடைபெறும் கொடுமையாய் தெரியும். இது இங்கு மட்டுமல்ல அமெரிக்காவில் வாழும் கறுப்பர்களின் நிலையும் இதுவே.

இப்படியான சூழலில் மால்கம் எக்ஸ் செய்தது ஒன்றும் மிகப்பெரிய காரியம் அல்ல. வெள்ளையர்கள் மனிதர்கள்தான் என சொல்வதற்கு யாரும் தேவைப்படவில்லை. ஆனால் கறுப்பர்களும் மனிதர்கள்தான் என சொல்ல ஒருவர் தேவைப்பட்டது அவர்தான் மால்கம் எக்ஸ். கறுப்பர்களும் மனிதர்கள்தான் என உரக்க சொன்னார்.

மால்கம் எக்ஸின் தந்தை ஏர்ல் லிட்டில் தாய் லூயிஸ். இந்த தம்பதியினருக்கு நான்காவது குழந்தையாக மால்கம் எக்ஸ் பிறந்தார். ஏர்ல்லிட்டிலும் கறுப்பின மக்களின் சுதந்திரத்திற்காக போராடியவர். அவர் வாழ்ந்த காலத்தில் கறுப்பர்களின் நிலை மோசமாக இருந்தது. உதாரணமாக, “1919இல் அமெரிக்காவின் ஒமாஹா பகுதியில் வில்பிரவுன் என்ற கறுப்பர் ஒரு வெள்ளை இனப் பெண்மணியை தாக்கியதாக வந்த புகார் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி வெள்ளையர் கூட்டம் சிறையை சூழ்ந்து கொண்டது. தீ வைத்து வன்முறையை கட்டவிழ்த்தது. சமாதானம் பேச வந்த மேயர் சுடப்பட்டார். வெள்ளையர் கூட்டம் மேலும் மேலும் அதிகரிக்க பயந்த சிறை நிர்வாகம் அக்கூட்டத்தினரிடம் அக்கருப்பரை ஒப்படைத்தது. அந்த கறுப்பரை கம்பத்தில் கட்டி சுட்டுக்கொண்டே இருந்த வெள்ளைக்கும்பல் அவன் துடிதுடித்து இறந்தவுடன் இடத்தை காலி செய்து கிளம்பியது.

இந்த சூழலில்தான் ஏர்ல் லிட்டில் கறுப்பின மக்களுக்கு போராடுவதை முழு நேர பணியாக செய்தார். கறுப்பின மக்களின் சுதந்திரத்திற்காகவே போராடியவர் வெள்ளையின வெறியர்களால் கொல்லப்பட்டார்.

1945இல் இரண்டாம் உலகப்போர் முடிந்தபின்பு கறுப்பின மக்கள் வேலையில்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், சோபியா என்ற வெள்ளையினப் பெண் திருடுவதற்கான ஆலோசனை வழங்க, திருடி அகப்பட்டு மால்கம் எக்ஸ்க்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

இவ்வழக்கில் தொடர்புடைய வெள்ளையர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். சார்லஸ் டவுனில் உள்ள சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மசாஷ¨ட் சிறைக்கு மாற்றப்பட்டார். அந்த சிறையில் உள்ள நூலகம்தான் மால்கம் எக்ஸ் என்ற போராளி உருவாக முக்கிய காரணம். சிறையில் ஏராளமான புத்தகங்களை படித்த மால்கம் எக்ஸ், அனைத்து மதங்களைப் பற்றியும் ஆழமாக படித்தார். அவரை ஈர்த்தது இஸ்லாம் மதத்தின் கோட்பாடே. அப்பொழுது மால்கமின் சகோதரர் பில்பர்ட் அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் “கறுப்பினத்தவர்களுக்கான இயற்கையான மதம் ஒன்று உள்ளது எனவும், அதன் பெயர் நேஷன் ஆப் இஸ்லாம் என்றும், அதனை வழி நடத்துபவர் எலிஜா முகம்மது எனவும் குறிப்பிட்டு இருந்தார்’’.

எலிஜா முகம்மதுக்கு சிறையிலிருந்து ஒரு கடிதம் எழுதினார், அவரும் பதில் கடிதம் எழுதியிருந்தார். அதில் “வெள்ளையின சமூகமே கறுப்பர்களை ஒடுக்கி வைத்துள்ளது. நாம் செய்யும் சிறுசிறு குற்றங்களுக்கு தூண்டுதலே அவர்கள்தான். உண்மையான குற்றவாளிகள் வெள்ளையர்களே என குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதம் மால்கமை வெள்ளையினத்தவர்கள் செய்த கொடுமைகளை நினைக்க வைத்தது.

சிறையிலிருந்து 6 வருடத்திற்கு பின் வெளிவந்த மால்கம் எக்ஸ் நேஷன் ஆப் இஸ்லாத்தில் இணைந்து இஸ்லாத்தை பற்றியும், நேஷன் ஆப் இஸ்லாத்தைப் பற்றியும் பிரச்சாரம் செய்தார். அதே நேரத்தில் கறுப்பின மக்களின் அடிப்படை உரிமைக்காக கடுமையாக போராடினார்.

கறுப்பின மக்கள் படும் துயரங்களையும், கொடுமைகளையும் நேஷன் ஆப் இஸ்லாத்தின் மூலம் எல்லா இடத்திலும் பரவச் செய்தார். அவ்வமைப்பை மிகப்பெரிய ஸ்தாபனமாக உயர்த்தினார். கறுப்பின மக்களிடம் ஒப்பற்ற தலைவனாக மால்கம் எக்ஸ் உயர்ந்தார். பின்னர் ‘பெட்டி’யை திருமணம் செய்து கொண்டார். கறுப்பர்களின் சுதந்திர தாகத்தை தூண்டியதால் மால்கம் ‘இனவெறியன்’, ‘பிரிவினைவாதி’ போன்ற கடும் சொல்லால் பத்திரிகையில் எழுதப்பட்டார்.

அமெரிக்காவுக்குள் தனக்கொரு ஆதாரவாளனாக, ஒரு புரட்சியாளராக மால்கமைக் கண்டார் ஃபிடல் காஸ்ட்ரோ. இஸ்லாமின் கொள்கை மீது காஸ்ட்ரோவுக்கு எவ்வித நம்பிக்கையும் கிடையாது. ஆனால் அமெரிக்காவின் இனவெறிக் கொள்கையை கடுமையாக எதிர்க்கும் மால்கம் எக்ஸ், தனது அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைக்கு உதவும் என ஃபிடல் காஸ்ட்ரோ எண்ணினார்.

எலிஜா முகம்மது தனக்கு பிறகு தன்னுடைய வாரிசே நேஷன் ஆப் இஸ்லாத்தின் பொருப்பாளராக இருக்க வேண்டும் என எண்ணினார். அதே நேரத்தில் மால்கமின் உலகம் தழுவிய குறிப்பாக கறுப்பின மக்கள் இடத்தில் இருக்கும் செல்வாக்கு இவரை கலங்கடித்தது. சிறுசிறு மனஸ்தாபங்கள் பெரிய பள்ளமாய் உண்டாகி அவரை நேஷன் ஆப் இஸ்லாத்திலிருந்தே எலிஜா முகம்மது நீக்கினார். மேலும் மால்கம் எக்ஸை கொல்ல எலிஜா முகம்மதுவால் 5 பேர் கொண்ட குழுவும் உருவாக்கப்பட்டது.

கறுப்பின மக்கள் மால்கம் எக்ஸையே தங்களது பிரதிநிதியாக எண்ணினர். இதனால் தனி ஒரு அமைப்பை உருவாக்கினார். “முஸ்லீம் மசூதிகளின் கூட்டமைப்பு’’ என்ற அமைப்பு புதியதாக தொடங்கிய அதேநேரத்தில் “அமெரிக்க ஆப்பிரிக்க அமைப்பை’’ உருவாக்கினார். இதன்மூலம் அமெரிக்காவிலும், ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் கறுப்பினத்தவர்களின் மத்தியில் பாலமாக இவ்வமைப்பு விளங்கியது. தனது ஓயாத பயணத்திற்கு முட்டுக்கட்டை இட ஒருபுறம் எலிஜா முகம்மது குழுவும், மறுபுறம் அமெரிக்க உளவு நிறுவனமும் செயல்பட,
KILLER-எலிஜா முகம்மது

ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஒரு கூட்டத்தில் பேச்சைத் தொடங்கும் முன்பே மூச்சை முடித்துக் கொண்டார். பதினாறு குண்டுகள் பாய மேடையிலேயே அக்கறுப்பின மக்களின் தன்னிகரற்ற தலைவர் சாய்ந்தான்.

மால்கம் எக்ஸ் உலக புரட்சியாளர் வரலாற்றில் அழிக்கமுடியாத அத்தியாயம் ஆவார்.
“ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுபவர்கள், சிந்திப்பவர்கள் அனைவரும் புரட்சியாளர்கள்தான்” என்ற மால்கம் எக்ஸின் வாசகம் அனைத்து சமூக விடுதலை போராளிக்கும் பொருந்தும். அவரின் இவ்வரலாறு பல படிப்பினைகளை கற்பிக்கும்.
-------அ.கரீம்.

No comments:

Post a Comment