Wednesday, 17 October 2018

யார் மாமா இது, ஸ்மிதா பாட்டீல் மாரியே?’ உண்மை கதை











யார் மாமா இது, ஸ்மிதா பாட்டீல் மாரியே?’
சிறு கதை / உண்மை கதை
-வேணுவனம்

----------------------------------------------------------------------------------

கே.ஏ.அப்பாஸ்தான் அதுக்குக் காரணம். இன்னைக்கும் ராஜ்கபூர் படங்கள்லயே ‘மேரா நாம் ஜோக்கர’ அதானெ நம்மால மறக்க முடியல. அப்பாஸ லேசுப்பட்டவன்னு நெனச்சுராதெ. ‘ஆவாரா’வும் அவன் கததான்’. சஞ்சீவி மாமா இப்படித்தான் திடீரென பாதியிலிருந்து பேசத் துவங்குவார். அதற்கு முந்தைய நாளோ, முந்தைய சந்திப்பிலோ எங்களது உரையாடலின் தொடர்ச்சியாக, விட்ட இடத்திலிருந்து தொடங்கிப் பேசிக் கொண்டேபோவார். அவர் பேசப் பேசத்தான் எனக்கு முதல்நாள் என்ன பேசினோம் என்பது மெல்ல நினைவுக்கு வரும். சஞ்சீவி மாமா பேசுவது போலவே அவரைப் பற்றிய தகவலொன்றும் இப்படி திடீரென்று வந்தது.

ஒருவாரமாக திருநெல்வேலியிலேயே இருந்தவன், சஞ்சீவி மாமாவைப் போய்ப் பார்த்திருக்கலாம்தான். இன்னும் நான்கு நாட்கள்தான் இருக்கப் போகிறோமே, சென்னைக்குக் கிளம்புமுன் போய்ப் பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தது, எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை தொலைபேசியில் வந்த தகவல் உணர்த்திவிட்டது. இத்தனைக்கும் டவுணிலிருந்து ஒரு அழுத்து அழுத்தினால் பதினைந்து நிமிடங்களில் பாளையங்கோட்டை கோபால்சாமி கோயில் பக்கம் போய் விடலாம். அதற்குப் பக்கத்தில்தான் சஞ்சீவி மாமாவின் வீடு. பாளையங்கோட்டை சதக்கத்துல்லா கல்லூரியிலிருந்து பஸ்ஸில் திரும்பிக் கொண்டிருக்கும் போது, சமாதானபுரம் பஸ்ஸ்டாப் பக்கத்தில் ‘காதி வஸ்திராலயத்தில்’ சஞ்சீவி மாமாவின் தலை தெரிந்தால் உடனே இறங்கி விடுவேன். அருகில் போய் ‘மாமா’ என்றழைத்தாலும் உடனே ஏதும் பேசிவிட மாட்டார்.
ஒரு சின்ன சிரிப்பைக் கூட எதிர்பார்க்க முடியாது. சில நிமிடங்கள் கழித்து, அவராகப் பேசத் தொடங்குவார். முரட்டு கதரில் முழுக்கைச் சட்டையும், கதர் பேண்டுமே சஞ்சீவி மாமாவின் உடை. நடுமுதுகு வரைக்கும் புரளும் நீண்ட தலைமுடி. பின்னால் இருந்து பார்க்கிறவர்கள், திருநவேலி ஊருக்குள் பேண்ட் சட்டையில் ஒரு பெண் போகிறாள் என்று சந்தேகித்து முன்னால் வந்து பார்த்து, சஞ்சீவி மாமாவின் தொங்கு மீசையைப் பார்த்து முகம் கோணி, நாணி பின்வாங்குவதை பலமுறை பார்த்து சிரித்திருக்கிறேன். மாமாவுடன் அவரது ராஜ்தூத் பைக்கின் பின்னால் உட்கார்ந்து ஒருமுறை கிருஷ்ணாபுரம் சென்று கொண்டிருக்கும் போது, மற்றொரு பைக்கில் ஒரு இளைஞன் எங்களை ரொம்ப நேரமாகப் பின் தொடர்ந்து கொண்டேயிருந்தான். கூந்தல் பறக்க மாமா பைக் ஓட்டுவதைப் பின்னால் இருந்து பார்த்தவன், ஒரு முடிவோடு எங்களை முந்தாமல் வந்து கொண்டிருந்தான். இதை புரிந்து கொண்ட மாமா, வேண்டுமென்றே வேகத்தைக் குறைத்தார். ஆனாலும் அவன் அசரவில்லை. கிருஷ்ணாபுரம் வந்தவுடன் மாமா, ஓரமாக பைக்கை நிறுத்தியபிறகு, வேறு வழியில்லாமல் கடந்து சென்றபடி திரும்பிப் பார்த்தவன், தன்னை மறந்து ‘ச்சை’ என்றபடி ஆக்ஸிலேட்டரை முறுக்கி பறந்தான்.

அன்றைக்கு முழுவதும் கிருஷ்ணாபுரம் சிற்பங்களை சஞ்சீவி மாமா புகைப்படங்களாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார். கிருஷ்ணாபுரம் சிற்பங்கள் உலகப் புகழ்பெற்றவைதான். ஆனால் அவற்றை சஞ்சீவி மாமாவின் புகைப்படங்களில் அவரது கேமரா கோணங்களில் பார்க்கும் போது, அச்சிற்பங்கள் அனைத்தும் ஓர் இனம்புரியாத அழகும், உயிர்ப்பும் அடைந்து விடும். சிற்பங்கள் மட்டுமில்லை. மனிதர்களும்தான். மாமாவின் புகைப்படங்களில் சாலையோரத்தில் நுங்கு விற்பவர்கள், ரைஸ்மில்லிலிருந்து மரப்பொடி சுமந்து திரும்புபவர்கள், திருச்செந்தூர் கோயிலில் மொட்டை போட்டுவிட்டு சந்தனத் தலையோடு பேரூந்தின் ஜன்னலோரம் தூங்குபவர்கள், சின்ன டிரான்ஸிஸ்டரில் பாட்டு கேட்டபடியே மார்க்கெட் பூக்கடையில் பூ சுற்றிக் கொண்டிருக்கும் பெண்கள், வேண்டா வெறுப்பாக புத்தப்பை சுமந்து வாடிய முகத்துடன் தளர்ந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், மாலையில் பள்ளி முடிந்து குதூகலத்துடன் துள்ளலாக நடந்து வரும் அதே குழந்தைகள் என சஞ்சீவி மாமாவின் கேமராவில் சிக்கிய முகங்கள் ஏராளம்.

கேமரா மட்டுமல்ல. கிதார் என்னும் வாத்தியத்தை எனக்கு முறையாக அறிமுகப்படுத்தியவரும் சஞ்சீவி மாமாதான். அதற்கு முன்னால் கிதார் என்றால் எனக்கு ’மூடுபனி’ திரைப்படத்தின் ‘என் இனிய பொன்நிலாவே’ பாடலில் பிரதாப் போத்தன் கையிலும், இன்னும் வேறு சில ஹிந்தி திரைப்படங்களிலும் மட்டுமே பார்த்திருக்கிறேன். கிதாரில் எத்தனை வகைகள் உள்ளன, அவை என்னென்ன போன்றவற்றை சஞ்சீவி மாமாதான் விளக்கினார். மாமாவிடம் நான்கைந்து கிதார்கள் இருந்தன. ’இது அகௌஸ்டிக், இது எலக்ட்ரிக், இப்படி வாசிக்கறது லீட் கிதார், இப்படி வாசிச்சா பாஸ்’. இவை போக சின்ன கிதார் என்று நான் நினைத்துக் கொண்டிருந்த மாண்டலினும் மாமாவிடம் இருந்தது.

‘நம்ம ஊர்ல எல்லா பயலுவளும் பேஸ் கிதார்னு சொல்லுதானுவொ. பாஸ் கிதார்னுதான் சொல்லணும்’.

மாமா திருத்துவார். தேவ் ஆனந்தின் ‘Guide’ படப்பாடலான ‘தேரே மேரே சப்னே’ பாடலையெல்லாம் கிதாரில் வாசிக்க முடியும் என்பது, சஞ்சீவி மாமா வாசிக்கும்போதுதான் தெரிந்தது. நிறைய பழைய ஹிந்தி பாடல்களை கிதாரில் வாசித்து காண்பிப்பார். தமிழ்ப் பாடல்களும் வாசிப்பார்தான். அப்படி மாமா அடிக்கடி தன்னை மறந்து ஒரு பாடலை ரகசியக் குரலில் ‘என் கானம் இன்று அரங்கேறும்’ என்று பாடியவாறே ரசித்து வாசிப்பார். அதற்கு முன்னர் அந்தப் பாடலை நான் கேட்டதே இல்லை. ‘இந்தப் பாட்ட மட்டும் இல்ல மாப்ளெ . . இந்தப் படத்தயும் ஒரு பய பாக்கல. படம் பேரு ‘ஈரவிளிக்காவியங்கள்’. ஒவ்வொரு முறை அந்தப் பாடலை வாசித்து முடிக்கும் போதும் ’ராஸ்கல்’ என்று முணுமுணுக்க மாமா தவறுவதில்லை.

நான்கைந்து வீடுகள் உள்ள ஒரு காம்பவுண்டின் ஒரு மாடியறையில் மாமா தனியாகவே இருந்தார். மாமாவின் மனைவி எதிரே உள்ள பெரிய வீட்டில் தனது சகோதரர்களுடன் வசித்தார். சஞ்சீவி மாமாவுக்கும், அத்தைக்கும் பேச்சு வார்த்தை அறவே இல்லாமல் போனதற்கு அவர்களுக்கு குழந்தைப் பேறு இல்லாமல் போனதுதான் காரணம் என்று ஊருக்குள் பேசிக் கொண்டார்கள். ஒரே ஒருமுறை இது பற்றிப் பேசும் போது மாமா தனக்குத் தானே சொல்வது போல, ‘எல்லா டெஸ்ட்டும் எடுத்து பாத்தாச்சு. கம்ப்ளெயிண்ட் எண்ட்ட இல்லன்னு எல்லா டாக்டரும் சொல்லிட்டாங்க. அதுல ஒங்க அத்தைக்கு தாங்கல’ என்றார். அதற்கு ஏற்றாற் போலத்தான் அத்தையின் நடவடிக்கைகளும் இருந்தன. அத்தையின் தகப்பனார் சேர்த்து வைத்திருந்த சொத்துக்கள் போதுமான அளவுக்கு இருந்ததால், யாரையும் எதிர்பார்க்காமல், வீட்டு வாடகைகள், நிலபுலன்கள் மூலம் வரும் வருமானத்தை வைத்து தன் சகோதரர்களின் குடும்பங்களையும் கவனிக்கும் அளவுக்கு அத்தை செழிப்புடனே வாழ்ந்து வந்தார். மாமாவைப் பற்றிச் சொல்லும் போதெல்லாம் ‘அவன்’ என்று ஒருமையிலேயே சொல்லுவார். மாமாவை விட அத்தை ஒரு வயது மூப்பு என்றும் ஒரு தகவல் உண்டு. ‘என்ன சொல்லுதான் ஒன் மாமன்காரன்?’ ஆனால் என்னிடத்தில் பாசமாக இருப்பார். வாய் நிறைய ’மருமகனே’ என்றழைப்பார். ‘நீ பாட்டுக்கு மச்சுல இருந்து அரவமில்லாம எறங்கி அவன் கூட ஓட்டலுக்கு கீட்டலுக்கு போயிராதெ. சாப்ட்டுட்டு போ’ என்பார். ‘என்னய மட்டும் அத்தைக்கு எப்பிடி மாமா புடிச்சு போச்சு?’ வியப்புடன் மாமாவிடம் ஒருமுறை கேட்டேன். ‘நீ என்னய மாரி இல்லாம சாமி கும்பிடுதெல்லா? அதான்’ . சிரித்தபடி சொன்னார்.

சஞ்சீவி மாமாவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. வைணவ குடும்பத்தில் பிறந்தவரான மாமா, திருநெல்வேலி மாவட்டத்திலுல்ள ‘நவதிருப்பதி’ கோயில்கள் அனைத்துக்கும் என்னை அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் அங்கு வந்தாலும் அவரது கேமராவுக்குத்தான் வேலை. சிற்பங்கள், அக்ரஹாரத்து திண்ணைகள், ஆடுமாடுகள், மண் தெருக்கள், பழைய வீடுகள், டூரிங் தியேட்டர் போஸ்டர்கள் என எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பார். தென் திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் பெருமாள் கோயிலுக்கு ஒருமுறை மாமாவுடன் சென்றிருந்த போது மாமா கோயிலுக்குள் வரவேயில்லை. ‘நீ போயிட்டு வாடே’ என்று சொல்லிவிட்டு கேமராவுடன் வாசலிலேயே நின்று கொண்டார். இருட்டுக்குள் இருந்த பெருமாளைப் பார்த்து

‘ஓடும் புள்ளேறி சூடும் தன்துழாய்

நீடுநின்றவை ஆடும் அம்மானே

அம்மானாய் பின்னும் எம்மாண்பும் ஆனான்

வெம்மாவாய் கீண்ட செம்மா கண்ணனே’

என்று உருகி வணங்கி விட்டு வெளியே வந்தால், தயிர் விற்கும் ஒரு மூதாட்டியுடன் பேச்சு கொடுத்துக் கொண்டே அவளை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார், மாமா. ஒருசில தினங்களில் அவற்றை பிரிண்ட் போட்டு காண்பித்தபடி சொன்னார். ‘இந்த அம்மா மொகத்துல இருக்குற சுருக்கங்கள பாத்தியா? ஒவ்வொண்ணும் ஒவ்வொரு கத சொல்லுது, பாரு. அவ ஸ்கின் டோன கவனி’.

***************** ******************** *********************

வழக்கமாக மாமா தென்படும் ‘காதி வஸ்திராலயம், காளி மார்க் கேண்டீன், வ.உ.சி மைதானம்’ போன்ற எந்த இடத்திலும் மாமாவை சில நாட்கள் பார்க்க முடியாமல் போனது. எங்கெல்லாமோ தேடிப் பார்த்து விட்டு அத்தையிடமும் கேட்காமல் விட்டு விட்டேன். ஒரு இடைவெளிக்குப் பிறகு மாமாவின் வீட்டுக்குச் சென்ற போது, மாமாவின் வீட்டில் ராஜ்தூத் நின்று கொண்டிருந்தது. உடனே மாமாவைப் பார்க்க சென்றால் அத்தை ஏசுவார் என்பதால் சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு, மாடியறைக்குச் சென்றேன். குமார் கந்தர்வாவின் ஹிந்துஸ்தானி சங்கீதம் சன்னமாக ஒலித்துக் கொண்டிருந்தது. கமாஸ் போன்ற ஏதோ ஒரு வடநாட்டு ராகம். மாமா ஒரு புகைப்படத்தை எடுத்து என் முன்னால் இருந்த சிறிய மர மேஜையில் போட்டார். மாமாவால் எனக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மிதா பாட்டீலை நினைவுபடுத்துகிற ஒரு பெண்ணின் புகைப்படம். வியப்புடன் எடுத்துப் பார்த்தேன். ‘யார் மாமா இது, ஸ்மிதா பாட்டீல் மாரியே?’. இந்தக் கேள்விதான் என்னிடமிருந்து வரும் என்பதை ஏற்கனவே அறிந்திருந்தவராக, ‘அவளேதான்’ என்றார், மாமா. ‘அவளேதான்’ என்று அவர் சொன்னது ஸ்மிதா பாட்டீலை இல்லை. சுமி அக்காவை. சுமி அக்காவை சஞ்சீவி மாமா, ஸ்மிதா பாட்டீலாகவேதான் நினைத்தார்.

அருஞ்சுணை காத்த அய்யனார் கோயிலில் வைத்து சுமி அக்காவை முதன் முறையாக எனக்கு அறிமுகம் செய்து வைக்கும் போதும் ‘இது ஸ்மிதா’ என்றார். பார்த்த மாத்திரத்திலேயே ஆண்பிள்ளைகள் மாதிரி, என் கைகளைப் பற்றிக் குலுக்கியபடி சுமி அக்கா, ‘எப்டி இருக்கெ மக்கா?’ என்றாள். கழுத்தில், காதில் எதுவும் இல்லை. பளிச்சென்ற பவுடர் பூசிய முகம். நெற்றியில் கூர்ந்து கவனித்தால் தென்படுகிற ஒரு துளி சாந்துப் பொட்டு. ’நீங்க சோஃபியா பவுடர் போட்டிருக்கீங்க. கரெக்டா?’ என்றேன். சட்டென்று சிரித்தபடி ’அடப்பாவி’ என்றாள். சுமி அக்காவுக்கு என்னை ரொம்பவே பிடித்து போய்விட்டது. என்னைவிட நான்கு வயது அதிகமான அவளை ‘சுமி அக்கா’ என்று இயல்பாக என்னால் கூப்பிட முடிந்தது.

சுமி அக்காவுக்கு திருச்செந்தூர் பக்கம் என்றார் மாமா. தாய், தந்தை இல்லாத சுமி அக்கா முதுகலை பட்டப்படிப்பு முடித்திருந்தாள். ஆதரவற்றோர் விடுதி ஒன்றிற்கு மாமா சென்றிருந்த போது பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சுமி அக்காவின் வருகைக்குப் பிறகு சஞ்சீவி மாமாவைப் போய்ப் பார்ப்பது வெகுவாகக் குறைந்து விட்டது. மாமாவும் ‘என்னடே ஆளையே காணோம்?’ என்று சம்பிரதாயமாகக் கேட்பதோடு சரி. ஒருநாள் மாமா தன் கிதார் ஒன்றின் கம்பிகளை சரி பார்த்துக் கொண்டிருக்க, நான் அவரது புத்தக அலமாரியைக் குடைந்து கொண்டிருந்தேன். அதுவரைக்கும் மாமாவின் மாடியறைக்கு வந்தேயறியாத அத்தை, மூச்சு வாங்க மாடியேறி வந்து, அந்த அறையில் ஃபிரேம் போட்டு மாட்டப்பட்டிருந்த சுமி அக்காவின் கருப்பு வெள்ளை புகைப்படத்தை எடுத்து கீழே போட்டு சுக்குநூறாக உடைத்தார். வேறேதும் பேசாமல் கீழே இறங்கி சென்று விட்டார். சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு மாமா எழுந்து உடைந்த கண்ணாடித் துண்டுகளை எடுக்க குனிந்தார். ‘நான் எடுக்கென் மாமா’. மாமாவைத் தடுத்து விட்டு, ஒவ்வொரு கண்ணாடித் துண்டாகப் பொறுக்கி எடுத்தேன். ’பூமிகா’ திரைப்படத்தின் ஸ்மிதா பாட்டீலை நினைவுபடுத்தும் விதமாக கழுத்திலும், காதுகளிலும் நகையணிந்து சிரித்தபடி சுமி அக்கா இருக்கும் கிழிந்த, கசங்கிய புகைப்படத்தை மாமாவின் மேஜை டிராயரில் வைத்தேன். மாமா என் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்க்கும் விதமாக கிடார் கம்பிகளில் மும்முரமாக ஏதோ செய்யும் பாவனையில் இருந்தார். அதற்குப் பிறகு கொஞ்சம், கொஞ்சமாக எனக்கும் சஞ்சீவி மாமாவுக்குமான உறவு குறைந்து போனது. சென்னையிலிருந்து திருநெல்வேலிக்குப் போகும் போதெல்லாம் சஞ்சீவி மாமாவைப் பார்க்க வேண்டும் என்று நினைப்பேன். பிறகு ஏதேதோ காரணங்களால் தொடர்பே இல்லாமல் போய்விட்டது.

பதினைந்து வருடங்களுக்குப் பிறகு மாமாவின் வீட்டு காம்பவுண்ட் சுவரைத் தாண்டி உள்ளே நுழையும் போது ஏதோ ஒரு புதிய இடத்துக்கு வருவது போல தோன்றியது. அத்தை வீட்டு வாசலில் ஷாமியானா போட்டு நான்கைந்து பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டிருந்தன. வீட்டுக்கு உள்ளே அத்தை சோஃபாவில் சாய்ந்திருந்தார். முன்பை விட உடல் கனம் கூடியிருந்தது. உடன் ஏதேதோ புதிய மனிதர்கள். என்னைப் பார்த்ததும் உடனே அடையாளம் பிடிபடாமல், பிறகு சுதாரித்து, சிநேகப் பார்வை பார்த்து ‘வந்துட்டியா? ம்ம்ம், போ. அங்கனயேதான்’ என்று மாடியை காண்பித்தார்.

சுற்றிலும் கிதார்கள்,பழைய ரீடர்ஸ் டைஜஸ்ட், இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி உட்பட பழைய புத்தகங்களின் வாசனையுடன் கண்ணாடிப் பெட்டிக்குள் சஞ்சீவி மாமா தூங்குவது போல கண்மூடி படுத்திருந்தார். நெற்றியில் சூர்ணம் இடப்பட்டிருந்தது. அருகில் அத்தையின் சகோதரர் அமர்ந்திருந்தார். ‘வெயில் தாள எடுத்துரலான்னு இருக்கொம்’ என்றார். நான் பார்க்காத காலங்களில் மாமாவின் முகத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என ஆராயும் விதமாக மாமாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

‘நீங்கள்லாம் மெட்ராஸ்ல இருக்கணும் மாமா’. பலமுறை சொல்லுவேன்.

‘மெட்ராஸ்ல இருந்து?’ எதிர்க்கேள்வி கேட்பார்.

‘பெரிய ஆளா ஆயிரலாம்லா’. சிறுபிள்ளைத்தனமாகச் சொல்லியிருக்கிறேன்.

‘பெரிய ஆளுன்னா என்னதுடே?’. என்பார்.

அதற்குள் கீழே இருந்து சத்தம் கேட்டது. ‘நவநீதா சீக்கிரம் கீள வா. அந்த முண்ட வந்திருக்கா’.

அத்தையின் இன்னொரு சகோதரரின் குரலது. என்னருகில் இருந்தவர், ‘இந்தா வாரேன்’ என்று பாய்ந்து செல்லவும், நிலைமையை உணர்ந்து அவருக்குப் பின்னால் மாடிப்படிகளில் இறங்கி ஓடினேன். காம்பவுண்டுக்கு வெளியே அழுதபடி சுமி அக்கா நின்று கொண்டிருந்தார். உடன் பத்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன். சிறு வயது புகைப்படத்தில் சஞ்சீவி மாமா இருப்பது போலவே இருந்தான். அத்தையின் சகோதரர்கள் இருவரும் சுமி அக்காவை, ‘எங்கெட்டி வந்தெ?’ என்று சத்தம் போட்டபடியே நெருங்கினார்கள். அவர்கள் சுமி அக்காவை எதுவும் செய்துவிடக் கூடாதே என்கிற பதைபதைப்பில் நான் அவர்களைத் தாண்டிச் சென்றேன். என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்ட சுமி அக்கா, ‘மக்கா’ என்று என் கைகளைப் பிடித்து, என் மீது சாய்ந்த படி கதறி அழுதாள். சத்தம் கேட்டு வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து எட்டிப் பார்த்த அத்தை, முறைத்தபடி நிற்கும் தன் சகோதரர்களிடம், ‘எல, இங்கெ வாங்க’ என்று அதட்டி அழைத்தார். சுமி அக்காவுடன் நிற்கும் என்னைப் பார்த்து, ‘மருமகனே, அவள மச்சுக்குக் கூட்டிட்டு போ’ என்றார்.

No comments:

Post a Comment