Monday, 4 June 2018

TIANANMAN SQUARE STUDENT`S REVOLT JUNE 4,1989 -DIED 10,454 WOUNDED 40,000




TIANANMAN SQUARE STUDENT`S REVOLT
JUNE 4,1989 -DIED 10,454 WOUNDED 40,000


இந்தியாவில் இன்று ஜூன் 4
ஆனால் நாசகார சீனாவில் இன்று மே 35

சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் இடம்பெற்ற மாணவர் போராட்டம்

பலி - 10,454; காயம் - 40,000



உலக மனித உரிமைகள் தினம் - டிசம்பர் 10. மனித உரிமைகள் நினைவு தினம்....? மே 35. இது என்ன.... புது தேதியாக இருக்கிறது....? ஒரு நாட்டின் சர்வ வல்லமை பொருந்திய அரசாங்கம், தனது நாட்டு எல்லைக்குள், இணைய தளத்தில் ஜூன் 4 என்கிற தேதியையே தடை செய்து வைத்து இருக்கிறது.

அதற்காக.....? சுதந்திரப் பிரியர்கள் சும்மா இருக்க முடியுமா.....? மே மாத 31 நாட்களுடன் ஜூன் மாத 4 நாட்களை சேர்த்து, மே 35 ஆக்கி விட்டார்கள். இந்த ஆண்டு, மே 35-க்கும் தடை வந்து, காணாமல் போய் விட்டது என்கிறார்கள். ஆமாம்.... ஜூன் 4க்கு தடை விதித்த நாடு... மனித உரிமைகளை, மனித மாண்புகளை அடியோடு அழித்த நாடு சீனா!

மா சே துங்கின் சிவப்புப் படை

1960 - 70-களில் சீனாவின் அசைக்க முடியாத தலைவராக மா சே துங் இருந்தார். ‘கலாச்சாரப் புரட்சி’ என்று புதிதாக ஒரு கோட்பாட்டை 1966-ல் அறிமுகம் செய்தார். ‘அரசு நிர்வாகத்தில் சீர்திருத்தவாதிகள் நுழைந்து விட்டனர்; வர்க்க வன்முறையால் அவர்கள் எல்லாரும் நீக்கப்பட வேண்டும்; உண்மையான கம்யூனிசக் கோட்பாட்டைத் தக்க வைக்க வேண்டும்' என்று முழங்கிய மா சே துங், செயலிலும் இறங்கினார். ‘சிவப்பு காவல் படை’ உருவாக்கப்பட்டது. மக்கள் தொகையில் பெரும்பாலோர் நாட்டுக்குள்ளேயே இடம் பெயர நேரிட்டது. எல்லா மட்டங்களிலும் மக்களிடையே பிளவு தோன்றியது. ‘சந்தேகக்காரர்கள்’, சிவப்புப் படையால், கைது, சிறை, சித்திரவதை, சில சமயங்களில், மரண தண்டனைக்கு உள்ளானார்கள். வரலாற்று சின்னங்கள், கலாச்சார சமய நம்பிக்கை அடையாளங்கள் தகர்க்கப்பட்டன.

மா சே துங் கொண்டு வந்த மாற்றங்களால், சீனா பயன் அடையவில்லை; பாதிப்புக்கே உள்ளானது. சீன அரசியலை செயலிழக்கச் செய்தது. பொருளாதாரத்தை மோசமாக பாதித்தது. இதை யாரோ சொல்லவில்லை; 1981-ல், சீன கம்யூனிஸ்ட் கட்சியே அதிகாரப்பூர்வமாக இப்படிக் கூறியது. ‘கட்சியின், நாட்டு மக்களின் மோசமான பின்னடைவுக்கு, கலாச்சாரப் புரட்சியே காரணம்!’ 1976 செப்டம்பரில், மா சே துங் மறைந்தார்.

மாணவர் போராட்டம்

1986-ல், பேராசிரியர் ‘ஃபாங் லிஸி’ தலைமையில் மாணவர் போராட்டம் துளிர் விட்டது. சிறிது சிறிதாக மாணவர் இயக்கங்கள் வலுப் பெறத் தொடங்கின. தமது ஜனநாயக உரிமைகள், ஒவ்வொன்றாக பறிக்கப்படுவதை மக்கள் உணரத் தொடங்கினர்.

இந்த நிலையில்தான், மக்களின் பக்கம் நின்று நியாயம் பேசுபவராக, கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹூ யாபாங் பிரபலமாகி வந்தார். அரசின் செயல்பாடுகளில் இயன்றவரை, ஒரு வெளிப்படைத் தன்மை யைக் கொண்டு வர யாபாங் முயற்சித்தார். விளைவு...? மக்களிடையே ஆதரவு; கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தவர்கள் மத்தியில் கசப்புணர்வு. ஒரு கட்டத்தில் அதாவது 1987 ஜனவரியில் யாபாங் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து, கட்டாயப் பதவி விலகலுக்கு உள்ளாக்கப்பட்டார். இதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து 1989 ஏப்ரல் 15 அன்று 74 வயது ஹூ யாபாங் திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.


யாபாங் மறைவில் மர்மம் உள்ளதாக, மாணவர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது. ஆங்காங்கே யாபாங் நினைவு அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. ஒரு வாரம் கழித்து, ஏப்ரல் 22 அன்று - அரசு மரியாதையுடன், தியானன்மென் சதுக்கத்தில் ஹூ யாபாங் இறுதி சடங்கு நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக, முதல் நாள் மாலையிலேயே சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் திரண்டனர். ஆனால் இவர்கள் யாரும் சதுக்கத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. கண்ணீருடன் பல்லாயிரம் மாணவர்கள் வெளியில் நிற்க, இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் அவசர அவசரமாக நடத்தி முடிக்கப்பட்டன. இதன் பிறகுதான் மாணவர் போராட்டம் தீவிரம் அடைந்தது. நாள்தோறும் தியானன்மென் சதுக்கம் நோக்கி மாணவர்கள் வருகை புரிய ஆரம்பித்தனர். கூடவே பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்தனர்.

அதிபர் லீ பெங் அடக்குமுறை

உண்மையான ஜனநாயகம், பேச்சு சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், ஊழலற்ற கட்சி நிர்வாகம், மக்களுக்கு அரசு பதில் அளிக்கிற கடமை ஆகியவற்றை மாணவர்கள் வலியுறுத்தினர். உண்ணாவிரதம், உள்ளிருப்புப் போராட்டம் என்று போராட்டம் தீவிரம் அடைந்தது. சதுக்கத்தில் ஏராளமான மாணவர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். சுமார் 10 லட்சம் பேர் வரை திரண்டனர். மாணவர்களின் போரட்டம், சீனத் தலைநகருக்கு வெளியேயும், பல நகரங்களில் பரவியது.

புதிய பொதுச் செயலாளர் ஜாவோ ஜியாங் - மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தினார். ஆனால், அதிபர் லீ பெங் - தீவிர அடக்குமுறையே சரி என்று வாதிட்டார்.



ஒவ்வொரு நாளும் போராட்டம் வலுத்தது; கூடவே, அரசின் பிடிவாதமும். மே 20-ம் தேதி ‘அரசியல் அச்சுறுத்தல்’ காரணமாக, ‘ராணுவ சட்டம்’ அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2,50,000 படைகள், தலைநகர் பெய்ஜிங் விரைந்தன. அங்கிருந்த மாணவர்கள் படைகளை சூழ்ந்து கொண்டனர். திரும்பிச் செல்ல வலியுறுத்தினர். பல சுற்று பேச்சுவார்த்தைகளின் முடிவில் மே 24-ம் தேதி வேறு வழியின்றி, படைகள் திரும்பிச் சென்றன. இதற்கிடையே, பல்வேறு குழுக்களாக இருந்த மாணவர்கள் மத்தியில் ஒருங்கிணைப்பு குன்றி கருத்து வேறுபாடுகள் தோன்றத் தொடங்கின. ஜூன் 1-ம் தேதி பொலிட்பீரோ உறுப்பினர்களுக்கு, அதிபர் லீ பெங், ‘குழப்பத்தின் உண்மைத் தன்மை’ என்று ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். போராளிகள் மத்தியில் ‘அமெரிக்க ஆட்கள்’ புகுந்து விட்டதாக ராஜாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஓர் அறிக்கை தந்தது. ஜூன் 2-ம் தேதி ராணுவம் ஊருக்குள் நுழைந்து, 4 பேரைக் கொன்றதாய் தகவல் பரவியது. மாணவர்கள், ஊருக்குள் நுழைவதற்கான எல்லாத் தெருக்களிலும் தடைகளை ஏற்படுத்தினர். ஆனால் சாதாரண உடை அணிந்து, சாமான்யர்களைப் போல, ராணுவ வீரர்கள், ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்தனர்.

ராணுவ தாக்குதல்

ஜூன் 3 மாலை சுமார் 6 மணி. ‘எக்காரணம் கொண்டும், வீட்டை விட்டு யாரும் வெளியே வராதீர்கள்’ என்று தொலைக்காட்சி எச்சரித்தது. ‘அப்படி என்ன ஆகி விடப் போகிறது....? என்று எண்ணி, ஆயிரக்கணக்கில் பொது மக்கள், வீதிக்கு வந்தனர். அடுத்த சில நிமிடங்களில், எல்லா திசைகளில் இருந்தும் ராணுவம், தானியங்கி துப்பாக்கிகள், ‘டாங்கர்கள்’, புல்டோசர்கள் மற்றும் வாகனங்களுடன், தெருக்களில் வந்து குவிந்தன. கண்ட மேனிக்கு, குண்டுகளைப் பொழிந்தது.

32 வயது விண்வெளி தொழில்நுட்ப இளைஞன் சோங் ஜியோமிங், முதல் பலியாய் விழுந்தான். தியானன்மென் சதுக்கத்தின் உள்ளே இருந்தவர்கள் வெளியேறுவதற்கு, ஒரு மணி நேரம் அவகாசம் தரப்பட்டது. ஆனால்.....? அடுத்த ஐந்தே நிமிடங்களில் ராணுவத் தாக்குதல் தொடங்கியது. கொல்லப் பட்டவர்களின் சடலங்களை மிதித்துக் கொண்டு சென்றன படைகள்.

அதன் பிறகு புல்டோசர் வைத்து சேகரித்து கும்பலாய் எரித்தனர்; எஞ்சியவற்றை அள்ளிச் சென்று கழிவுநீர்க் கால்வாயில் எறிந்தனர். சதுக்கத்தை விட்டு வெளியேறியவர்களையும் விட்டு வைக்கவில்லை. பெய்ஜிங் இசை அரங்கம் அருகே அவர்கள், கொத்து கொத்தாகக் கொன்று வீழ்த்தப்பட்டார்கள்.

உயிருக்குக் கெஞ்சிய கல்லூரி மாணவிகள் 4 பேரை, துப்பாக்கியில் பொருத்தப்பட்ட கத்தியால் குத்திக் கொன்றனர். தனது மூன்று வயதுக் குழந்தையைக் காப்பற்றச் சென்ற தாயையும் சேர்த்து சுட்டனர். தாக்குதலுக்கு உள்ளானவர்களின், மருத்துவ உதவிக்கு வந்த சீன - ஜப்பானிய ஆம்புலன்ஸ் வண்டி தகர்க்கப்பட்டது. ஆணையை நிறைவேற்றத் தயங்கியதால், சுடுகிற பணியில் சுணக்கம் காட்டியதாக, ராணுவப் படை அதிகாரி ஒருவரே சுடப்பட்டார். ஜூன் 4-ம் தேதி வரை அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

தாக்குதல் நடத்திய வீரர்கள் யார்?


ஆமாம்..... படை வீரர்களால், தமது நாட்டு குடிமகன்கள் மீதே எப்படி இத்தனை குரூரமாகத் தாக்க முடிந்தது....? இதைச் செய்தது - ‘ஷாங்க்ஷி மாகாண 27-ஆவது படை’. இதில் இருந்த வீரர்கள் எழுத்தறிவில்லாத வர்கள். இவர்களை, ‘உங்களின் முகம், டி.வி.யில் வரும்’ என்று சொல்லி பணிக்கு எடுத்தார்களாம்.

வீட்டு மொட்டை மாடிகளில் இருந்தவர்கள், தெரு பெருக்கும் தொழிலாளர்கள் ஆகியோரை சுட்டுக் கொன்று, அவசர அவசரமாக இவர்களுக்கு ‘பயிற்சி’ தரப்பட்டதாம். முக்கியமான செய்தி. இப்படையின் தளபதி ‘யாங் ஜென்ஹுவா'. அப்போதைய அதிபர் ‘யாங் ஷங்குன்', இவரின் மாமா!

ஜூன் 4 ராணுவ நடவடிக்கையில் இறந்தவர்கள் எத்தனை பேர்...? 21 ஜூன் 1989 அன்று ‘நியூயார்க் டைம்ஸ்’ சொன்னது - பொதுமக்களில் 400 முதல் 800 பேரும், அரசுத் தரப்பில் 12 பேரும் பலி; இதுதவிர, 2600 மாணவர்களைக் ‘காணவில்லை’. 'ஜொங்னான்ஹாய்' அரசுத் தலைமை அலுவலக ஆவணத்தைக் குறிப்பிட்டு, வெள்ளை மாளிகை ஆவணங்களை ‘டி- கோட்’ செய்து, 2014-ல், வெளியான செய்தி சொன்னது - பலி - 10,454; காயம் - 40,000. சீனாவின் ஸ்டேட் கவுன்சில் உறுப்பினர் ஒருவரும் இதனையே உறுதிப்படுத்துகிறார்.

இன்று நினைவு தினம்


இதோ.... தியானன்மென் சதுக்கப் படுகொலை யின் 30-வது நினைவு நாள் இன்று. இப்போது என்ன நிலைமை....? கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆண்ட்ரூ ஜே நாதன் கூறுகிறார். “சீனாவில் பொருளாதார சீர்திருத்தங்கள் நடைபெறுகின்றன; ஆனால், அரசியல் தாராளமயம் உறைந்துபோய் விட்டது.”

இவர் இருக்கட்டும். இன்னொருவர் இருக்கிறார் - ‘டிங் ஜிலிங்’. தம் மகனை, சதுக்கத்தில் பறி கொடுத்தவர். ஜூன் 4 அன்று தமது பிள்ளைகளை இழந்த அன்னையர்களைக் கொண்டு, ‘தியானன்மென் அம்மாக்கள்’ என்று ஓர் அமைப்பு வைத்து இருக்கிறார். ‘இறந்தவர்களுக்காக வாதாடுபவர்’ என்று புகழப்படுகிறார். சுமார் 30 ஆண்டுகளாக, தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கிறார். இவர் வைக்கும் ‘பயங்கரமான’ கோரிக்கைகள் என்ன தெரியுமா...?

பொதுஇடத்தில் கூடி அஞ்சலி செலுத்த அனுமதி; மனிதாபிமான உதவிகள் பெற உரிமை; இனியேனும் அரசு வழக்குகள் கைவிடப்படல்; இன்னமும் சிறையில் உள்ள எல்லாரையும் விடுவித்தல்; 1989 ஜூன் 4 சம்பவம் மீது, நியாயமான முழு விசாரணை.

தியானன்மென் படுகொலையை அடுத்து, உலக நாடுகள் என்ன செய்தன...? அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் கண்டித்தன. கியூபா, அப்போதைய கிழக்கு ஜெர்மனி ஆதரித்தன. சீனாவைச் சுற்றி இருக்கிற ஆசிய நாடுகள், எந்த எதிர்வினையையும் வெளிக் காட்டவில்லை. ‘காந்தி தேசம்’ என்ன செய்தது....? அதிகாரப்பூர்வமற்ற, உறுதி செய்யப்படாத தகவல் கூறுகிறது - சீனாவுடன் ‘நல்லுறவு’ பாதிக்கப்படக் கூடாது என்று, இந்தச் செய்தியையே, அடக்கி ‘வாசிக்கச் சொல்லி’, ஊடகங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டதாம்.

No comments:

Post a Comment