Tuesday, 19 June 2018

SURATHA ,LYRICS,DIALOGUE WRITER BORN 1921 NOVEMBER 23 - 2006 JUNE 19





SURATHA ,LYRICS,DIALOGUE WRITER
BORN 1921 NOVEMBER 23 - 2006 JUNE 19


சுரதா (நவம்பர் 23, 1921 - ஜூன் 19, 2006) தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். தஞ்சை மாவட்டம் பழையனூர் (சிக்கல்) என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் திருவேங்கடம்-சண்பகம் அம்மையார் ஆவர். பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றார். சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார்.

பாரதிதாசனுடன் தொடர்பு[தொகு]
1941 சனவரி 14 இல் பாவேந்தர் பாரதிதாசனை முதன்முதல் கண்டு பழகிய சுரதா அவருடன் சிலகாலம் தங்கியிருந்து அவரது கவிதைப் பணிக்குத் துணை நின்றுள்ளார். பாவேந்தர் பாடல்களைப் படியெடுத்தல், அச்சுப் பணிகளைக் கவனித்தல், பாவேந்தரின் நூல் வெளியீட்டிற்குத் துணை நிற்றல் எனப் பல நிலைகளில் பாவேந்தருடன் சுரதாவுக்குத் தொடர்பு இருந்துள்ளது.

கவிதை இயற்றல்[தொகு]
சுரதாவின் சொல்லடா என்னும் தலைப்பில் அமைந்த கவிதையைப் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி என்னும் இதழ் 1947 ஏப்பிரல் திங்கள் இதழில் வெளியிட்டு இவரைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் செய்தது.

பாவேந்தரின் புரட்சிக்கவி நாடகம் தந்தை பெரியார், கலைவாணர் முன்னிலையில் நடைபெற்ற பொழுது அந்த நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்த பெருமைக்கு உரியவர் சுரதா. அரசவைக் கவிஞராக நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை இருந்தபொழுது அவரின் உதவியாளராக இருந்தார்.

நாராயணன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு புதுக்கோட்டை யிலிருந்து வெளிவந்த தலைவன் இதழின் துணை ஆசிரியராக பணியாற்றினார். அக்காலத்தில் பல சிறுகதைகளை எழுதினார். கவிஞர் திருலோகசீதாராமின் சிவாஜி இதழில் தொடக்கக் காலத்தில் சுரதாவின் கவிதைகள் வெளிவந்துள்ளன. திருச்சிராப்பள்ளி வானொலியில் சுரதாவின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன.

திரைப்படத் துறையில்[தொகு]
சுரதாவின் கலையுணர்வினைக் கண்ட கு.ச.கிருட்டிணமூர்த்தி என்பவர் இவரைத் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். 1944 ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதல் உரையாடல் எழுதினார். மிகக் குறைந்த அளவுக்கான பாடல்களையே அவர் எழுதியுள்ளார். சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் அவரது இரண்டு பாடல்கள், 'அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே எனக்கு', மற்றும் 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா' ஆகியவை. 100 இற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.

எழுத்துப்பணி[தொகு]

சுரதாவின் முதல் நூல் சாவின் முத்தம். இதனை வி.ஆர்.எம்.செட்டியார் என்பவர் 1946 மார்ச்சு மாதம் வெளியிட்டார். 1956 இல் பட்டத்தரசி என்ற சிறு காவிய நூலை வெளியிட்டார். 1954 இல் கலைஞர் கருணாநிதியின் முரசொலி இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தார்.

1955 இல் காவியம் என்ற வார இதழைத் தொடங்கினார். இவ்விதழைத் தொடர்ந்து இலக்கியம் (1958), ஊர்வலம் (1963), விண்மீன் (1964), சுரதா (1988) எனக் கவிதை வளர்ச்சிக்குப் பல இதழ்களை வெளியிட்டார்.

1971 ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் இதழில் சுரதா திரைப்பட நடிகைகளின் அகவாழ்க்கையைப் பற்றி எழுதிய கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பின்னாளில் இக்கவிதைகள் தொகுக்கப்பட்டு சுவரும் சுண்ணாம்பும் என்னும் பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது (1974).

பாரதிதாசனின் தலைமாணாக்கராகக் கருதத்தகும் கவிஞர் சுரதா, பல நூல்களாக இருந்த பாவேந்தர் கவிதைகளை ஒரே தொகுப்பாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுத் திருவாசகன், கல்லாடன் பெயரில் அந்த நூல் வெளிவரக் காரணமானார். உலகின் அரிய செய்திகளைப் பட்டியலிட்டுக் காட்டும் சுரதா இல்லத்தில் அரிய நூல்கள் கொண்ட நூலகத்தை உருவாக்கினார்.

தமிழ், கவிதை, புகழ் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட புரவலர்கள், ஆர்வலர்கள் ஆகியோரை இணைத்துச் சில வினோதக் கவியரங்கங்களை நடத்துபவராக இருந்தார் சுரதா. படகுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம் முதலியவை அவை. கவியரங்குகளைக் கொண்டாட்ட நிகழ்வாக மாற்றியதில் அவருக்கு மிகுந்த பங்குண்டு.

பாவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழ்க்கவிஞர் பெருமன்றத்திற்கு 1966 இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார்.

பெற்ற சிறப்புகள்[தொகு]

1969 இல் தேன்மழை என்ற சுரதாவின் கவிதை நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது.
1972 இல் தமிழக அரசு சுரதாவுக்குக் கலைமாமணி என்னும் விருது வழங்கிச் சிறப்பித்தது.
1978 இல் ம.கோ.இரா. தலைமையில் அமைந்த அரசு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கிச் சிறப்பித்தது.
தமிழக அரசு சுரதாவின் நூல்களை நாட்டுடைமையாக்கி அவர் குடும்பத்திற்குப் பத்து இலட்சம் உரூவா பரிவுத்தொகை வழங்கியுள்ளது(2007).
1982 இல் சுரதாவின் மணிவிழாவையொட்டி நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் நடந்த விழாவில் ரூபா அறுபதாயிரம் பரிசாகத் தரப்பெற்றது.
1982 இல் சுரதாவின் கவிதைப் பணிகளைப் பாராட்டிக் குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடந்த விழாவில் கவியரசர் பட்டம் வழங்கப்பட்டது.
1987 இல் மலேசியாவில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டிற்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பெற்றார்.
1990 இல் கலைஞர் அரசு பாரதிதாசன் விருதினைச் சுரதாவுக்கு வழங்கியது.
1990 இல் கேரளாவில் மகாகவி குமரன் ஆசான் விருது சுரதாவுக்குக் கிடைத்தது.
சுரதாவின் தேன்மழை நூலுக்குத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ரூபா ஒரு இலட்சம் இராசராசன் விருது வழங்கப்பட்டுள்ளது.
29.09.2008 இல் சென்னையில் சுரதாவுக்கு நினைவுச்சிலை நிறுவப்பட்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப் பெற்றுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இச்சிலை அமைக்கப்பட்டது.
சுரதாவின் கவிதைகள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. சுரதாவின் கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

தாய்மண்ணை வணங்குவதாக அனைவரும் கூறுவோம். ஆனால், உண்மையில் தாய்மண்ணைப் போற்றி வணங்கியவர் உண்டென்றால் அவர் உவமைக் கவிஞர் சுரதா ஒருவர்தான். தான் பிறந்த மண்ணையும் தமிழறிஞர்கள் பிறந்த ஊர் நிலத்தின் மண்ணையும் சேமித்து வணங்கியவர். தமிழறிஞர்கள் பிறந்த ஊர் தோறும் சென்று அங்குள்ள மண்ணை எடுத்து மண் கலயத்தில் சேர்த்து வந்தார். ‘’அவற்றைத் திரட்டி என்ன செய்யப் போகிறேன். என்பது ஒரு கனவு’’ எனக் கூறி வந்தவர், அதனை நிறைவேற்றாமலே மறைந்து விட்டார்.

சிறுகதை எழுத்தாளர் செகசிற்பியன் உவமைக்கவிஞர் பட்டத்தை இவருக்கு வழங்கியவர். சிலருக்கே பட்டங்கள் பொருந்தி வரும். ‘உவமைக் கவிஞர்’ என்பது சுரதாவிற்குப் பொருந்துவதுபோல் வேறு யாருக்கும் பொருந்தாது. விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதுபோல், அவரது முதல் கவிதையிலேயே அவரது உவமை வளம் புலப்பட்டது.

நடுவிரல் போல் தலைதூக்கு – நம்

நாட்டாரின் இன்னலைப் போக்கு

என்பதே அவரது முதல் கவிதையின் தொடக்கவரிகளாகும். இதன் மூலம் நாட்டுநலன்பற்றிய தன் ஆர்வத்தையும் வெளிப்படுத்திவிட்டார் அவர்.

மரபுக் கவிஞரான இவர், எளிய ஆனால் புதுப்புது உவமைகளை உருவாக்கிக் கையாண்டு புகழ் பெற்றார். மாநிறத்தைக் ‘கருப்பின் இளமை’ என்றும் பல்லியைப் ‘போலி உடும்பு’ என்றும் அழுகையைக் ‘கண்மீனின் பிரசவம்’ என்றும் நீர்க்குமிழிகளை ‘நரைத்த நுரையின் முட்டை’ என்றும் வெண்ணிலவைச் ‘சலவை நிலா’ என்றும் விண்ணுக்கு மேலாடை பருவமழை மேகம் என்றும், வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம் என்றும் பதினொன்று என்பதைப் பத்துக்கு மேலாடை என்றும் பாடல்கள் அனைத்திலும் உவமையை வாரி வழங்கிய உவமைக் கடல் இவர்.

‘முதன்முதலில்’ என்னும் பட்டியலில் பல முதன்முதலில் என்பதற்குச் சொந்தக்காரர் உவமைக் கவிஞர் சுரதா. 1944 இல் ‘மங்கையர்க்கரசி’ என்னும் திரைப்படத்திற்கு உரையாடல் எழுதினார். இதன் மூலம், குறைந்த அகவையில் முதலில் திரைப்பட உரையாடலை எழுதியவர் என்னும் பெருமை பெற்றார்.

பி.யூ.சின்னப்பாவைக் கதைநாயகனாக் கொண்டு வெளிவந்த இப்படத்தின் உரையாடல்கள் மிகவும் புகழ்பெற்றன. எனவே, இத் திரைப்பட உரையாடலை நூலாக வெளியிட்டார். திரைப்படத்தின் உரையாடல் நூல்வடிவில் வெளிவந்தது அதுவே முதன்முறையாகும்.

தமிழக அரசு ஏற்படுத்திய பாவேந்தர் விருது முதன்முதலில் (1987இல்) இவருக்கே வழங்கப்பட்டது. ‘வீட்டுக்குவீடு கவியரங்கம்’, ‘முழுநிலாக் கவியரங்கம்’, ‘படகுக் கவியரங்கம்’, ‘ஆற்றுக் கவியரங்கம்’ எனப் புதுமையான முறைகளில் கவியரங்கம் நடத்துவதில் இவரே முதலாமவர்.

கவிதைகளில் திரைப்படச் செய்திகளைத் தந்து இதழ் நடத்தியதிலும் இவரே முதலாமவர். தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் படைப்பிலக்கியப் பெரும்பரிசான இராசராசன் விருது (1897 இல் பிறந்த)சுத்தானந்த பாரதியாருக்கு முதலில் (1984 இல்) வழங்கப் பெற்றது. எனினும் இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களில் முதலில் (1995) இவ்விருது பெற்றவர் இவரே. சுரதாவின் தேன்மழை நூலுக்காக இவ்விருது வழங்கப்பெற்றது.

தமிழ்நாடு அரசு கலைமாமணி விருதும் வழங்கியது. கேரள அரசும் இவரது கவிப்புலமையை மதித்து, இவருக்கு மகாகவி குமரன் ஆசான் விருது வழங்கியது. மூவாயிரம் கவியரங்கங்களில் பங்கேற்று மிகுதியான கவியரங்கங்களில் பங்கேற்ற கவிஞர் என்பதில் முதலிடத்தைப் பிடித்தார். இப்படி இவரது சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

திருவேங்கடம்-செண்பகம் இணையருக்கு 23.11.1921இல் பிறந்த இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் இராசகோபால் என்பதுதான். பாரதியின் தாசனாக மாறிக் கவிஞர் சுப்புரத்தினம் தம் பெயரைப் பாரதிதாசன் எனச் சூட்டிக் கொண்டார். இவரின் தாசனாக விளங்கி – சுப்புரத்தினம் தாசன் என்பதன் சுருக்கமாக – சுரதா எனப் பெயரை மாற்றிக் கொண்டார்.

பாவேந்தர் பாரதிதாசன் என்ற கவிஞர் பரம்பரை உருவானதுபோல்,அப்பரம்பரை வரிசையில், சுரதா பரம்பரை என்று சொல்வதுபோல் – நீலமணி, பொன்னிவளவன், பனப்பாக்கம் சிதா, நன்னியூர் நாவரசன், முருகுசுந்தரம் என – ஓர் அணி உருவானது. இந்த அணியில் சுரதாவின் மகன் கல்லாடனுக்கும் மருமகள் இராசேசுவரி கல்லாடனுக்கும் இடம் உண்டு.

சாவின் முத்தம், சுவரும் சுண்ணாம்பும், துறைமுகம், சிரிப்பின் நிழல்(பாடல் தொகுப்பு), அமுதும் தேனும் , தேன்மழை (கவிதைத் தொகுப்பு), பாரதிதாசன் பரம்பரை, வினாக்களும் சுரதாவின் விடைகளும், உதட்டில் உதடு, எச்சில் இரவு, எப்போதும் இருப்பவர்கள், கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர், சிறந்த சொற்பொழிவுகள், சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு), சொன்னார்கள், தமிழ்ச் சொல்லாக்கம், தொடாத வாலிபம், நெஞ்சில் நிறுத்துங்கள், பட்டத்தரசி, பாவேந்தரின் காளமேகம், புகழ்மாலை, மங்கையர்க்கரசி, முன்னும் பின்னும், வார்த்தை வாசல், வெட்ட வெளிச்சம் ஆகியவை உவமைக் கவிஞர் சுரதாவின் படைப்புகளாகும்.

சுரதாவின் ‘சொல்லடா’ என்னும் தலைப்பில் அமைந்த கவிதையைப் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த ‘பொன்னி’ என்னும் இதழ் 1947 ஏப்பிரல் திங்கள் இதழில் வெளியிட்டு இவரைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் செய்தது. கவிஞர் திருலோகசீதாராமின் ‘சிவாசி’ இதழில் தொடக்கக் காலத்தில் சுரதாவின் கவிதைகள் வெளிவந்துள்ளன. 1954 முதல் ‘முரசொலி’ இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தார். இவ்வாறு இதழ்களில் கவிதைகளும் கதைகளும் எழுதி வந்த சுரதா, இதழ்ப்பணியில் நேரடியாக ஈடுபட்டார். நாராயணன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த ‘தலைவன்’ இதழின் துணை ஆசிரியராக இருந்து பணியாற்றினார். 1955 இல் காவியம் என்ற வார இதழைத் தொடங்கினார். இவ்விதழைத் தொடர்ந்து இலக்கியம்(1958), ஊர்வலம்(1963), விண்மீன்(1964), சுரதா(1988) எனக் கவிதை வளர்ச்சிக்குப் பல இதழ்களை வெளியிட்டார்.

ஏறத்தாழ 100 திரைப்படப்பாடல்கள் எழுதியுள்ளார். அவற்றுள் ‘அமுதும் தேனும் எதற்கு?’, ‘அமுதைப் பொழியும் நிலவே’, ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’, ‘மண்ணுக்கு மரம் பாரமா?’, முதலானவை இன்றைக்கும் யாராலும் மறக்கமுடியாதவை.

‘உவமைக்கவிஞர்’ சுரதா அவர்களின் காலத்தால் அழியாத அற்புத‌ படைப்புகள்
சுவரும் சுண்ணாம்பும் (பாடல் தொகுப்பு, 1974)
துறைமுகம் (பாடல் தொகுப்பு, 1976)
அமுதும் தேனும், 1983
தேன்மழை (கவிதைத் தொகுப்பு, 1986)
பாரதிதாசன் பரம்பரை (தொ.ஆ), 1991
சிரிப்பின் நிழல் (பாடல் தொகுப்பு)
வினாக்களும் சுரதாவின் விடைகளும்
உதட்டில் உதடு
எச்சில் இரவு
எப்போதும் இருப்பவர்கள்
கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்
சாவின் முத்தம்
சிறந்த சொற்பொழிவுகள்
சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு)
சுவரும் சுண்ணாம்பும்
சொன்னார்கள்
தமிழ்ச் சொல்லாக்கம்
தொடாத வாலிபம்
நெஞ்சில் நிறுத்துங்கள்
பட்டத்தரசி
பாவேந்தரின் காளமேகம்
புகழ்மாலை
மங்கையர்க்கரசி
முன்னும் பின்னும்
வார்த்தை வாசல்
வினாக்களும் சுரதாவின் விடைகளும்
வெட்ட வெளிச்சம்
மறைவு[தொகு]
இவர் தன்னுடைய 84ம் வயதில் 19.06.2006 அன்று சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார்

No comments:

Post a Comment