Thursday, 21 June 2018

MADURAI MEENAKSHI AMMAN WAS INTRODUCED BY VARAKUNA PANDIAN 817-835









MADURAI MEENAKSHI AMMAN  WAS INTRODUCED BY VARAKUNA PANDIAN 817-835






வரகுண பாண்டியன் மீனாட்சி அம்மனை பிரதிஷ்டை செய்தான் 817-835

மதுரை:மதுரையில், கி.பி., 14ம் நுாற்றாண்டில் ஆட்சி புரிந்த மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்து செப்பேடு நகல் கண்டுபிடிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள சக்கம்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் தன் வீட்டில் மூதாதையர் பாதுகாத்து வந்த, இரு செப்பேடுகளில் எழுதப்பட்டுள்ள விபரங்களை அறிவதற்காக, மதுரை அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் பெரியசாமியை அணுகினார். தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி உதவியுடன் ஆய்வு செய்ததில், அச்செப்பேடு, 14ம் நுாற்றாண்டில் நடந்த சில சம்பவங்கள் தொடர்பானது என தெரியவந்தது.

நமது நிருபரிடம் காப்பாட்சியர் பெரியசாமி கூறியதாவது:

இச்செப்பேடு, கலியுக ஆண்டு, 4443ல் அதாவது கி.பி., 1342 ம் ஆண்டு, ஆவணி மாதம், 21ம் நாள் பொறிக்கப்பட்டுள்ளது. குலசேகர பாண்டியனின், 28வது ஆட்சியாண்டில் அந்த மன்னனின் மந்திரியும், மீனாட்சி அம்மன் கோயில் தம்பிரானுமாகிய பொன்னின் தம்பிரான் என்பவர் மூலம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சில ஊர் பொதுமக்களால் இச்செப்பேடு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், மதுரையை முஸ்லிம் மன்னர்கள் கைப்பற்றி ஆண்ட போது குலசேகர பாண்டியன் மதுரையை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. அவருடன் மந்திரியும் வெளியேறி, காடு, மலைகளில் அலைந்து செல்லும் இடங்களில், சிவன் கோயில்களை எழுப்பினர். ஊர்தோறும் குளங்கள், வாய்க்கால்களை அமைத்தனர். இதற்காக சிற்ப சாஸ்திரம் அறிந்த செல்வாச்சாரி என்பவரையும் உடன் அழைத்துச்சென்றனர்.
சிவன் கோயில் அமைக்கும்போது ,ஒரு புலியையும், குட்டியையும் கொன்று தலைவாசலில் புதைத்து அந்த இடத்திற்கு, 'புகலுார்' என பெயரிட்டனர்.

அச்சமயத்தில் பாம்பாடும் பாறை, சட்டப்பாறை, மயிலாடும்பாறை, கிளிக்கூட்டு மலை, பன்றி மலை, பெரியூர், பாச்சலுார், பிய்யாத்துமலை, சூதுக்கல், சூதாடுகல், கோட்டக்குடி, குதிரையாறு, மன்னவனுார், கிளாவரை ஆகிய ஊர்களை சேர்ந்த மன்னாடியார் இன மக்கள், ஒருவர் மீது ஒருவர் கோபம் கொண்டு பிரிந்து வாழ்ந்தனர்.

அவர்களை ஒற்றுமையாக இருக்க செய்த தம்பிரான், அவர்களுக்கான பிரச்னையை விசாரிக்க செல்வாச்சாரியையும், அவருக்கு துணையாக புல்லவநக்கன் என்பவரையும் நியமித்தார். 
இதற்கு, 'அரச வரியாக ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பழநி மலை, முருகன் சன்னிதானத்திற்கு சேவற்கொடி பிரதிஷ்டையும் தம்பிரான் செய்துள்ளார். இச்செப்பேடு, சில வரலாற்று செய்திகளையும் தருகிறது. முகமது பின் துக்ளக்கின் தளபதி ஐலாலுதீன் அசன்ஸா, மதுரை யை கைப்பற்றிய காரணத்தால் குலசேகர பாண்டியன் மதுரையை விட்டு வெளியேற நேர்ந்தது.கூன் பாண்டியன், வரகுண பாண்டியன் வழித்தோன்றல் தான் குலசேகர பாண்டியன் என தெரியவருகிறது.

அத்துடன்,' வரகுண பாண்டியன் மீனாட்சி அம்மனை பிரதிஷ்டை செய்தான்' என்ற செய்தியையும் குறிப்பிடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தகவல் தெரிவிக்கலாம்

பெரியசாமி கூறுகையில், ''பல வீடுகளில் மூதாதையர் பாதுகாத்த செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், சின்னங்கள் போன்றவை இருக்கும். அதன் சிறப்புகள் அறியப்படாமல் இருக்கும்.

அதுபோன்று இருந்தால், 98427 32741ல் தகவல் தெரிவித்தால் வரலாற்று செய்திகளை அறிய உதவியாக இருக்கும்,'' என்றார்.
-

No comments:

Post a Comment